ஃபிரண்ட்லைன் இதழில் கோணங்கியின் கதை ஒன்றின் மொழியாக்கம் வந்திருக்கிறது.திலீப்குமார் தொகுத்த 88 கதைகளில் ஒன்று.தீக்குச்சை பற்ற வைக்கும் போது எழும்பும் ஒலி,இருள் நிறைந்த வீட்டில் அடுப்பிலிருந்து வரும் வெளிச்சத்தால் உருவாகும் நிழல் உருவங்கள் , உடைந்த சிம்னியை ஒட்டவைத்து ஒளியெற்றும் சிறுவர்களின் குட்டி உலகம் , சட்டென்று ஊரை விட்டு செல்லும் போது சிம்னியை மறந்து விட்டு செல்வது என்று குழுந்தைகளின் உலகம் அற்புதமாக வந்திருக்கிறது.தார்கோவ்ஸ்கி தன் நேர்காணல் ஒன்றில் எத்தனை துயரங்கள் நிரம்பியதாக இருந்தாலும் குழந்தை பருவம் சிறப்பானது என்பார்.குழந்தைகளின் உலகம் விசித்தரமானது.சின்னச்சின்ன பிரச்சனைகள் , அதற்கு அவர்கள் கண்டுபிடிக்கும் தீர்வுகள் ,அவர்களின் பொய்கள்,கோபங்கள்,துரோகங்கள்,களங்கமற்ற தருணங்கள் என அது ஒர் உலகம்.உண்மையில் நமது குழுந்தைகள் பெரியவர்களின் உலகில் வாழ்கிறார்கள்.பெரியவர்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள்.அவர்களை போல மிமிக்ரி செய்கிறார்கள்.உடை உடுத்தி கொள்கிறார்கள்.நாம் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதில்லை.நம் சமூகத்தின் மிகப்பெரிய வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிறது.
இயல்பான ஆரோக்கியமான வளர்ச்சி தடுக்கப்படுகிறது.எதற்காக இத்தனை நர்சரி பள்ளிகள், பிரிகேஜி பள்ளிகள்.மூன்றரை வயதில் எல்கேஜி.பதினேழு வயதில் புதுமுக பள்ளி இறுதியாண்டு.இருபதுகளில் ஒரு பட்டம்.இருபத்தியைந்தில் ஒரு வேலை.முப்பதுகளுக்குள் ஒரு திருமணம்.பின்னர் குழந்தை.இருபத்தியைந்து வயதிற்குள் இரண்டு அல்லது மூன்றாண்டுகளாவது ஒருவன் சும்மா இருக்க வேண்டும்.வெறுமன காலையில் எழுந்தால் செய்வதற்கு ஒன்றுமே இல்லாத நிலை.தனக்கென்று ஏதேனும் பாதை வகுத்துக் கொண்டவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு பருவத்தில் சும்மா இருந்தவர்கள்தான்.சும்மா ஊர் சுற்றுவது,சும்மா தெருக்களில் அலைவது,சும்மா வேடிக்கை பார்ப்பது,சும்மா வீட்டில் முடங்கி கிடப்பது,சும்மா ஒரு வேலைக்கு செல்வது,சும்மா எதையாவது படிப்பது,சும்மா இருப்பது ஒருவனுக்கு சமூகத்தை வாழ்வை தனக்கான பயணத்தை புரியவைக்கிறது.
ஆனால் சும்மா இருப்பது ஏழைகளிலிருந்து பணக்காரர்கள் வரை நம் சமூகத்தில் யாருக்கும் சாத்தியப்படுவதில்லை.அப்படி இருக்கலாம் என்று எண்ணுவதே பாவம்.ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.நாம் நமது குழந்தைகளை சும்மா இருக்க விட வேண்டும்.டிவி ஷோக்களில் வரும் குழந்தைகளின் உடல் மொழியை பார்க்கும் போது இவர்கள் குழந்தைகளே இல்லை என்று தோன்றுகிறது.தேங்கஸ் சொல்கிறார்கள்,சாரி சொல்கிறார்கள்,தோற்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்தி நிற்கிறார்கள், நாகரீமாக கை குலுக்குகிறார்கள்.இவர்களின் தொலைந்து போன பால்ய காலத்தை என்ன விலை கொடுத்து அவர்களுக்கு அவர்களின் பெற்றோரும் சமூகமும் திருப்பி அளிக்க போகிறது.உண்மையில் இந்த வாழ்க்கையில் நீங்கள் ஒடி ஒடி என்ன செய்யப்போகிறீர்கள்.ஒன்றுமில்லை.நாய் ஒன்று சிவப்பு விளக்கின் வெளிச்சத்தை பார்த்து ஓடுவது போல நாம் பணத்தின் பின் வெறுமன ஓடுவதற்காக ஓடுகிறோம்.இதில் அந்த குழந்தை பருவத்தையாவது விட்டுவைக்கலாமே.
கோணங்கியின் குழந்தைகள் இப்போதும் இருக்கிறார்கள்.நாம் தான் அவர்கள் எப்படி அப்படி இருக்கலாம் என்று அவர்களின் சிம்னி விளக்குகளை அவர்களின் நினைவுகளிலிருந்து வெளியேற்றிக் கொண்டே இருக்கிறோம்.
No comments:
Post a Comment