எழுத்தாளன் எழுதலாம் என்றார் நீதிபதி
பிழைகள் அதிகம் என்றார் பிழைதிருத்துநர்
தலைப்பு சரியில்லை என்றார் பதிப்பாளர்
அட்டைக்கு ஏற்ற கதையில்லை என்றார் அட்டை வடிவமைப்பாளர்
ஃபோட்டோவுக்கான முகமில்லை என்றார் புகைப்படக்காரர்
சாதி பிரச்சனை வரலாம் என்றார் போலீஸ்காரர்
உங்கள் தரப்பில் வலுவில்லை என்றார் வழக்கறிஞர்
தீயிட்டு கொளுத்துவோம் என்றார் சாதி கட்சி தலைவர்
வேலையில் கவனம் தேவை என்றார் முதலாளி
சமூக பொறுப்பு வேண்டும் என்றார் பத்திரிக்கையாளர்
எழுத்து என்பது மனுவல் மட்டுமே என்றார் சினிமாக்காரர் சிங்காரவேலர்
காலாவதியான கதை என்றார் கோட்பாட்டாளர்
கள ஆய்வு போதாது என்றார் சமூகவியலாளர்
சரியான பிரதிநித்துவம் இல்லை என்றார் புள்ளியியலாளர்
உன் பெயரை பத்திரிக்கையில் பார்த்தேன் என்றாள் முன்னாள் காதலி
சினிமாவில் வாய்ப்பு தேடு என்றாள் கள்ளக்காதலி
உனக்கெல்லாம் எதற்கு திருமணம் என்றான் மகன்
பைசாவுக்கு பிரயோஜனமில்லை என்றனர் பெற்றோர்
புத்தகத்தை பிடுங்கி முடிவைத்து விளக்கணைத்தாள் மனைவி
கதை எழுதுவியாமே என்றனர் சுற்றோர்
எவ்வளவு கிடைக்கும் என்று கேட்டான் நண்பன்
எழுத்து உனது சுயம் அல்ல என்றார் சாமியார்
மனசோர்வு எதிர்வு மாத்திரைகள் அளித்தார் மருத்துவர்
இனி நான் அழிவேன் என்றான்
உன்னை அழிக்க யாருண்டு
எழுத்தில் வாழ்பவன் அன்றோ நீ என்றேன்
ஆனால் இவர்களின் பார்வையில் நான் என்றான்
இவர்கள் பார்வையில் நீ தினம் தினம்
பட்டுத் தெறிக்க வேண்டும்
என்ற அவசியம் என்றேன்.
புகையை இழுத்துவிட்டு
சர்தான் என்றான்.
No comments:
Post a Comment