மழை பெய்யத்தொடங்கியது
நான் என் அறையில் என்னோடு தனியாக இருந்தேன்
நான் மழையை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்
கூரையின் ஓட்டை வழி வெள்ளை பிங்கான் கிண்ணத்தில்
‘கிளிங்’ என்ற ஒலி எழும்பியது.
ஆதியில் ஒரு சொல் இருந்தது
சொற்களின் பெருவெளியில் நிரம்பி வழிந்தது கிண்ணம்.
கறுப்பு அன்னம்
தன் அலகால் என் சதை கிழித்து
கிண்ணத்தில் போட்டது.
கிண்ணம் முழுதும் குருதி.
குருதி முழுதும் சொற்கள்.
சொற்கள் முழுதும் மழையின் இரைச்சல்.
குருதியை அருந்திய அன்னம்
சொற்களை திருப்பியது மெளனத்திற்கு.
கிண்ணத்தில் ‘கிளிங்’ என்ற ஒலி எழும்பியது.
ஒலியை தன் அலகால் அள்ளித் தந்தது அன்னம்.
நான் மறுபடியும் மழையை கேட்கத் துவங்கினேன்.
No comments:
Post a Comment