அன்றைய முகம்

அன்று உனது குழந்தைகள் பசியில் துடிக்க
ஓடிச்சென்றவனில்லையா நீ
அன்று உனது மனைவி குழந்தைகளைத்
தூக்கிக்கொண்டு அலைய காரணமாக இருந்தவனில்லையா நீ
அன்று உனது வங்கியில் பணத்தை
களவாடியவனில்லையா நீ
அன்று ஒரு பெண்னை காதலிப்பதாக 

நடித்து ஏமாற்றியவனில்லையா நீ
அன்று ஒரு ஏழைச்சிறுவனிடம் இருந்த 

இருபது ரூபாயை பிடுங்கிக் கொண்டவனில்லையா நீ
அன்று உனது பெற்றோரின் இறுதிச்சடங்கில்
சண்டையிட்டு மலம் கழித்தவனில்லையா நீ
அன்று உனது குழந்தையை 

அழ வைத்து ரசித்தவனில்லையா நீ
அன்று உனது நண்பனை காட்டிக்
கொடுத்தவனில்லையா நீ
அன்று உனது கேவலங்களை சகித்து 

அண்ணமிட்ட தோழியை சுரண்டியவனில்லையா நீ
அன்று உனக்கு அடைக்கலம் தந்த அந்த வயோதிகரின் 

சொற்ப பணத்தை திருடியவனில்லையா நீ
அன்று உனது அனைத்து துரோகங்களையும் மறந்து வீட்டிற்கு அழைத்த
சகோதரனையே கொன்றவனில்லையா நீ
அன்று அவற்றை செய்த உன்னை
இன்று எதன் பொருட்டு நம்புவது.
அது அன்று என்பதால் என்றேன்.
நான் உன் முகத்தில் காறி உமிழ்கிறேன்.
நானும் எனது முகத்தில் காறி உமிழ்கிறேன்.
ஆனால் அது உனது முகம் தானே.
ஆம் அது எனது முகம் தான்.
அன்றைய முகம்.


No comments: