பி.வி.காரந்த் |
பூனே திரைப்படக்கல்லூரி மாணவரான ராமச்சந்திரா என்பவரால் எடுக்கப்பட்ட பி.வி.காரந்த் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.மேங்களூர் அருகே ஒரு கிராமத்தில் பிறந்த வெங்கடரமண காரந்த் நாடகத்துறையில் , இசையில் , திரைத்துறையில் எப்படி ஒரு முக்கியமான ஆளுமையாக மாறினார் என்ற சித்திரத்தை மிக அற்புதமாக இந்த ஆவணப்படம் பதிவுசெய்திருக்கிறது.பள்ளியில் சில நாடகங்களில் நடிக்கிறார் காரந்த்.எட்டாம் வகுப்புக்கு பிறகு தந்தையார் இனி படிக்க வைக்க பணம் இல்லை என்று சொல்லி பக்கத்து ஊரில் ஒரு வீட்டில் தங்கி அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு பாடம் சொல்லத்தர அனுப்புகிறார்.சிவராம காரந்த் போல தானும் எழுத வேண்டும் என்ற உந்துதலுடன் காரந்த் பல புத்தகங்களை வாங்கி படிக்கிறார்.சமயங்களில் புத்தகங்கள் வாங்க காசுக்காக திருடவும் செய்கிறார்.அப்படி ஒரு முறை திருடிய பின் அவர் தான் திருடினார் என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள்.அவரை வீட்டிலிருந்து நூறோ இருநூறோ தந்து வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பிவிடுகிறார்கள்.
மறுபடியும் வீட்டுக்கு செல்வதை அவமானமாக கருதும் காரந்த் மைசூர் செல்கிறார்.அங்கே ஒரு நாடகக் கம்பெனியின் போஸ்டரை பார்த்து அங்கே சென்று சேருகிறார்.முதலில் பலராமன் , கிருஷ்ணன் வேஷம் போடும் சிறுவன் ஒடிவிடவே கிருஷ்ணன் வேஷம், பின்னர் ஸ்திரிபார்ட் வேஷங்களில் நடிக்கிறார்.ஒரு கட்டத்தில் குரல் உடைகிறது.குரல் உடையும் போது சிறுவர்கள் நாடகக் கம்பெனியிலிருந்து ஒடிவிடுவார்கள்.அப்போது 1944 யில் வினோபாவே எல்லோரும் நமது தேசிய பாஷையான இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்ன செய்தியை படிக்கிறார்.இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் காசிக்கு செல்ல வேண்டும் என்று யாரோ சொன்னதை நினைத்துக்கொள்கிறார்.காசிக்கு சென்று பள்ளியில் சேர்கிறார்.பின்பு கல்லூரி.அங்கே இருக்கும் போது தென் இந்திய மாணவர்களோடு பழகுவதை விட அந்த பகுதி மக்களோடு பழகுவதையே அவர் பெரிதும் விரும்புகிறார்.ஏனேனில் அவரின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று இந்தியை முழுமையாக கற்பது.மாலை நேர வகுப்பில் இசையையும் கற்கிறார்.தனது ஆய்வு பாடமாக இசையை தேர்வு செய்ய இருக்கும் நேரத்தில் அவரின் ஒரு நாடகத்தை பார்க்கும் அவரது ஆசிரியர் அவரை நாடகத்தில் ஆய்வை செய்ய சொல்கிறார்.காரந்த் நாடகத்தில் ஆய்வை மேற்கொள்கிறார்.பிரேமா என்ற பெண்னை திருமணம் செய்து கொள்கிறார்.நீங்கள் தாடி இல்லாத ஒரு புகைப்படத்தை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று பெண் பார்க்கும் படலத்தின் போது பிரேமா சொல்வதற்கு என் படிப்பு முடிந்ததும் அப்படி செய்கிறேன் என்று சொல்கிறார்.பின்னர் 1958யில் திருமணம்.டில்லியில் கமலாதேவி சட்டோபத்யாயா தேசிய நாடகப்பள்ளியை துவங்குகிறார்.அதில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று காரந்த் முடிவு செய்கிறார்.அவருக்கு தெரியாமல் பிரேமா டில்லியில் ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்து அது அவருக்கு கிடைக்கவும் செய்கிறது.ஆக காசி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.இப்போது அவர் ஹிந்தி பேசும் போது அவரை யாரும் கன்னடிகர் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரமாதமாக பேசுகிறார்.
டில்லி பயணம்.தேசிய நாடகப்பள்ளி.இரண்டு ஆண்டுகளின் முடிவில் இப்ராஹிம் அல்காஸி அங்கே வருவதை அறிந்த காரந்த் இன்னும் ஒரு வருடம் நீட்டித்து கொள்கிறார்.இப்ராஹிம் அல்காஸி மூலமாக நாடகம் குறித்த கலைச்சொற்களை முதல் முறையாக அறிகிறார்.பின்னர் ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை.அங்கே நாடகங்களையும் அரங்கேற்றுகிறார்.சங்கீத நாடக அகாதமி மூலமாக இந்தியா முழுவதும் பல நாடகப்பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்.வம்சவிருக்ஷா என்ற எஸ்.எல்.பைரப்பா எழுதிய நாவலை கிரிஷ் கர்ணாடுடன் இனைந்து திரைப்படமாக இயக்குகிறார்.விஷ்ணுவர்தன் இந்தப் படத்தில் தான் சின்ன கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்திருப்பார்.மறுபடியும் தேசிய நாடகப்பள்ளி.இந்த முறை இயக்குநராக.தேசிய நாடக பள்ளியை டில்லியிலிருந்து இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் நீட்டிக்கிறார்.ஒரு முறை நடிகர் பாலா சிங்கை சந்தித்திருக்கிறேன்.அப்போது ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது தேசிய நாடகப்பள்ளியில் படித்தேன் என்று சொன்னார்.அவரே தொடர்ந்து டில்லி சென்று அல்ல மதுரையில் நடத்திய பயிற்சி வகுப்புகள் மூலம் என்று விளக்கினார்.இப்போது தான் புரிந்து கொள்கிறேன்.அது பி.வி.காரந்தின் முயற்சியால் என்று.இதனால் தான் இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் காரந்தின் சுயசரிதை நூலின் சில முக்கிய வரிகளை இந்தியாவின் பல்வேறு நாடக நடிகர்கள் வாசிப்பதாக இந்த ஆவணப்படத்தை அமைத்திருக்கிறார்.அதன் மூலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காரந்த் எப்படி நாடகங்களை கொண்டு சேர்த்தார் என்பதும் அதன் மூலமாக உருவான எல்லோரும் காரந்த்தின் வடிவங்களே என்பதை சொல்ல இதை பயன்படுத்தியதாக இயக்குநர் பின்னர் உரையாடலின் போது சொன்னார். யக்ஷகானா என்ற கர்நாடக நிகழ்த்துக்கலை வடிவமும் நவீன நாடகத்தின் வடிவமும் முயங்கிய வகையிலேயே அவரின் நாடகங்கள் வெளிப்பட்டிருக்கிறது..ஷேகஸ்பியரின் நாடகங்களுக்கு அவர் அப்படிப்பட்ட வடிவத்தை தான் கொடுக்கிறார்.ஒரு அம்மையார் படத்தில் சொல்கிறார்.அவர் சிறுவயதிலேயே தன் கிராமத்தை விட்டு சென்றுவிட்டார்.ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர் தன் வீட்டை சுமந்துகொண்டுதான் எல்லா இடங்களுக்கும் சென்றார்.மிக நல்ல வரி.காரந்த்தின் ஆளுமையை இந்த வரி மிக அழகாக விவரிக்கிறது. அவர் நவீன நாடக வடிவங்களை கற்றாலும் சாரம்சாத்தில் அவர் கர்நாடக நாடக வடிவத்தை மெறுகேற்றினார் என்று கிரிஷ் கர்னாட் சொல்கிறார்.தன் நாடகங்களுக்கு அவரே இசை அமைத்திருக்கிறார்.அவர் தேசிய நாடகப்பள்ளியில் சேர்வதற்கு முன்பே நாடகம் குறித்த பல்வேறு விஷயங்களை ஆழமாக அறிந்திருந்தார்.இருந்தும் அவர் மேலும் மேலும் கற்க விரும்பினார் என்கிறார் தேசிய நாடக பள்ளியில் அவருடன் படித்தவரும் செம்மீன் திரைப்பட நாயகனுமான மாதவன் நாயர்.அவர் டில்லியில் தேசிய நாடகப்பள்ளியில் சேரும் போது அவருக்கு வயது 31.டில்லியில் இயக்குநராக இருந்த போது கிரிஷ் காஸரவள்ளியின் திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.ஒரு முறை ஒரு படத்திற்காக பணம் வாங்கும் போது மாணவர் ஒருவர் இந்த நேரத்தை எங்களுக்காக நீங்கள் செலவு செய்தால் நாங்கள் பயண் பெறுவோம் என்று சொல்கிறார்.அது காரந்த்தை மிக அதிக அளவில் பாதிக்கிறது.டில்லியில் தனக்கு வேலை பளூ அதிகமானதாலும் தான் விரும்புவது போல மாற்றங்களை செய்ய முடியாததாலும் வேலையை ராஜினாமா செய்கிறார்.
மத்திய பிரதேச தலைநகர் போபால் செல்கிறார்.அங்கே பாரத் பவனில் ரங்கமண்டல் ரேப்பர்டோரி ஆரம்பிக்கிறார்.அங்கே காரந்த் நாடகங்களிலும் நடிக்கவும் செய்கிறார்.அங்கே உள்ள வட்டார வழக்கை மிகவும் ரசித்து கற்றுக்கொள்கிறார்.காலம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கையில் ஒரு சம்பவம் அவர் வாழ்வில் நிகழ்கிறது.அந்த நாடகப்பள்ளியின் பெண் ஆசிரியை வீட்டிற்கு காலை பதினோரு வாக்கில் செல்கிறார்.அன்று கிங் லியர் நாடகம் அரங்கேற்றப்பட இருக்கிறது.அந்த ஆசிரியை திடீரென்று தனக்கு சரியாக சம்பளம் தரப்படுவதில்லை என்று கத்துகிறார்.சமையலறை சென்று உடலில் மண்ணென்னையை ஊற்றி தீமூட்டி கொள்கிறார்.தீயை அணைக்க முயலும் காரந்தின் கைகளிலும் தீக்காயம் ஏற்படுகிறது.காவலர்கள் மறுபடி மறுபடி அவரை கேள்விகளால் துளைத்தெடுக்க நான் தான் கொலை செய்ய மண்ணென்னை ஊற்றி தீமூட்டினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.ஆனால் அந்த ஆசிரியை அவர் மீது எந்த தவறும் இல்லை என்று வாக்குமூலம் அளிக்கிறார்.இரண்டு மாதம் சிறை.அங்கே ஒரு நாடகத்தை நடத்துகிறார்.வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்கிறார்.வெளியே வரும் காரந்த்திற்கு அதே மத்திய பிரதேச அரசு காளிதாஸ் சம்மான் விருது வழங்குகிறது.
ஆனால் அதன்பிறகு அவர் போபாலில்இருக்க விரும்பாமல் மைசூர் செல்கிறார்.அங்கே ரங்காயணா ரேப்பர்டோரி ஆரம்பிக்கிறார்.அது எப்படி வளர வேண்டும் என்று வரைவை உருவாக்குகிறார்.ஆனால் மூன்று ஆண்டுகளில் அங்கே பயிலும் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்கின்றனர்.ஒரு முறை ஏதோ சொல்ல வரும்போது ஒரு மாணவர் 'Please keep quiet , sir' என்கிறார்.தன் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று உணர்கிறார்.வேலை ராஜினாமா செய்கிறார்.தன்னை மிக சுதந்திரமாக உணர்கிறார்.ஆனால் காரந்த் மதுவுக்கு மிகவும் அடிமையானவராக மாறுகிறார்.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார்.ஒரளவு குணம் அடைந்து வரும் நிலையில் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்படுகிறது.இரண்டாயிரத்து இரண்டில் மரணம் அடைகிறார்.
படத்தில் அவரை பற்றி சில சுவாரசியமான சம்பங்கள் இருக்கின்றன.ஒரு முறை எங்கோ நாடகத்திற்கு சென்ற போது சாலையில் ஒருவன் அவர்களிடமிருந்து பணத்தை திருடிக்கொண்டு ஒடுகிறான்.காரந்துடன் இருந்தவர்கள் அவன் பணத்தை எடுத்து கொண்டு ஒடுகிறான் என்று கத்தும் போது அவர் அவன் எப்படி ஒடுகிறான் பாருங்கள் என்று சொல்கிறார்.மைசூரில் இருந்த போது அவர் மாணவர்களுக்கு சொல்லும் முக்கிய அறிவரை மக்கள் கூடும் சந்தை பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்கு சென்று அங்கே கேட்டும் விதவிதமான ஒசைகளை அவதானிக்க வேண்டும்.பின்னர் பட்டறையில் அந்த ஒசைகளை பயிற்சி செய்ய வேண்டும் என்பது தான்.அவர் எப்போதும் மக்களோடு வாழ்ந்திருக்கிறார்.இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறார்.தேசிய நாடக பள்ளியில் இயக்குநராக இருந்த போது காலை ஐந்து மணிக்கெல்லாம் வளாகத்தில் மாணவர்களின் பயிற்சிகளை பார்வையிடுகிறார்.அந்த காலகட்டத்தில் தான் அவரை பாபா என்ற பெயரால் மாணவர்கள் அழைக்க ஆரம்பிக்கிறார்கள்.ஒரு முறை தான் ஏன் இப்ராஹிம் அல்காஸியை போன்று இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.காந்தியை போல இந்தியா முழுவதும் பயணித்தவர் காரந்த் என்கிறார் பிரசண்ணா என்ற நாடக இயக்குநர்.இறுதியில் காரந்த் ஒரு உருவகம் , உருவகங்கள் அழிவதில்லை என்று முடிக்கிறார் பிரசண்ணா .மைசூரில் ஆரம்பித்த அவரின் நாடக வாழ்க்கை மைசூரில் முடிகிறது.அவரின் பல்வேறு முயற்சிகள் மூலமாக நாடகங்களுக்கு வந்த பல நூறு மாணவர்கள் வழியாக காரந்த் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பார்.
நான் அறிந்த வரை தமிழில் இந்த ஆவணப்படத்தில் வரும் பல நாடக ஆளுமைகளை நேரடியாக அறிந்தவரும் நட்பு பாராட்டியவரும் பாரதி மணி மட்டும் தான்.பாரதி மணியும் இப்ராஹிம் அல்காஸியின் மாணவர்.பாரதி மணி அவர்கள் தன் டில்லி நாடக வாழ்க்கையை பற்றியும் இந்த ஆளுமைகளை பற்றியும் நிச்சயம் எழுத வேண்டும்.
பெங்களூரில் சுசித்ரா திரைப்பட அமைப்பில் தான் இந்த ஆவணப்படத்தை பார்த்தேன்.இந்த திரைப்பட அமைப்பு இருக்கும் சாலையின் பெயர் பி.வி.காரந்த் சாலை.இந்த திரைப்பட அமைப்பின் முக்கிய சிறப்பு இது சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது.இது போல சென்னையில் ஒரு திரைப்பட அமைப்பு தன் சொந்த கட்டிடத்தில் இயங்குமென்றால் அது மிக நிச்சயமாக ஆவணப்பட குறும்பட மாற்று திரைப்பட ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.ஆனால் அப்படி ஒரு கட்டிடத்தை இனி யாராலும் சென்னையில் உருவாக்க முடியாது.அது சாத்தியமில்லை.சென்னையில் இருக்கும் ஏதேனும் ஒரு பெரிய பங்களாவுக்கு சொந்தக்காரர் இதுபோன்ற விஷயங்களில் ஆர்வமுள்ளவராகவும் இருந்து அவருக்கு வாரிசுகள் இல்லாமல் இருந்தால் சென்னையில் ஒரு மாற்று திரைப்படங்களுக்கான கட்டிடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது!
No comments:
Post a Comment