என்ற பிரமளின் கவிதையில் மழை பெய்து நீண்ட நாட்களாகி மண் வெடித்து வரண்டு கிடக்கும் நிலத்தில் ஒரு நாலு முழ வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு தலையில் முண்டாசுடன் ஏதையோ சிந்தித்தபடி சென்றுகொண்டிருக்கும் விவசாயி சட்டென்று நெற்றியில் கைவைத்து வானத்தை பார்க்கும் போது கண்டுகொள்கிறார் வானம் எத்தனை எல்லையில்லாதது என்று.மிகப்பெரிய தரிசனம் போல கிடைக்கும் மனவிரிவு.மிகச் சிறந்த கவிதை.இந்த கவிதையை ஒரு இந்திய மனதால் தான் எழுத முடியும் என்று தோன்றுகிறது.காக்கை குருவி எங்கள் ஜாதி , நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதி வரியின் தொடர்ச்சிதான் பிரமளின் இந்த கவிதையும்.ஒரு அத்வைத வாழ்க்கை நோக்கு.வானம் எவ்வளவு பெரியது.எவ்வளவு மனிதர்கள் , எவ்வளவு ஜீவராசிகள்.புறக்கண்ணால் வாழ்க்கையை அணுகி அதன் மூலம் அடையும் மிகப்பெரிய அகவிரிவு இந்த வாழ்க்கை நோக்கு.
நகுலனின் புகழ்பெற்ற ஒரு கவிதை.
ராமச்சந்திரனா என்று கேட்டேன்.
ராமச்சந்திரன் என்றார்.
எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை.
அவர் சொல்லவுமில்லை.
பிரமிள் |
வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்ட
வானம் எல்லையில்லாதது.
நகுலன் |
நகுலனின் புகழ்பெற்ற ஒரு கவிதை.
ராமச்சந்திரனா என்று கேட்டேன்.
ராமச்சந்திரன் என்றார்.
எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை.
அவர் சொல்லவுமில்லை.
இந்த கவிதையை முதலில் படித்த போது ஒன்றும் புரியவில்லை.சில வருடங்கள் கழித்து இப்போது அந்த கவிதைக்கு நான் என் மனதில் சில வரிகளை சேர்த்து வாசிக்கிறேன்.ஏன் அவர் கேட்கவில்லை , ஏனேனில் அது அத்தனை முக்கியமில்லை, ஏன் அவர் சொல்லவில்லை, ஏனேனில் அதுவும் முக்கியமில்லை, ஏன் முக்கியமில்லை என்றால் சாராம்சத்தில் நாம் எந்த ராமச்சந்திரனாக இருந்தாலும் அது ஒன்றுமில்லை என்பது தான் அந்த வரிகள்.ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவலில் மேலாளர் மெர்சால்டை அழைத்து பாரீஸில் வேலை இருக்கிறது , செல்ல விருப்பமா என்று கேட்பார்.அதற்கு மெர்சால்ட் சொல்வான் எல்லா வாழ்க்கை நிலைகளும் மதிக்கத்தக்கதே.அங்கே செல்வது நல்லதுதான் , இங்கே இருப்பதும் நல்லது தான்,நான் இங்கேயே இருக்கிறேன் என்பான்.ஆல்பெர் காம்யூ இருத்தலிய துயர் பற்றியோ அவதி பற்றியோ பேசுவதில்லை.அவர் இருத்தலிய அபத்தத்தை பற்றி பேசுகிறார்.விஞ்ஞானத்தாலோ, சமயத்தாலோ நம் வாழ்க்கை குறித்தோ நம் இருப்பு குறித்தோ எந்த வித அர்த்தத்தையோ ஒரு காரணத்தையோ தர முடியவில்லை.அப்படி விளக்கப்பட்டாலும் நம் மனதின் அந்தரங்கம் அதை ஏற்பதில்லை.அதனால் ஆல்பெர் காம்யூ சொல்கிறார் இந்த வாழ்க்கை அபத்தமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எந்த விளக்கமும் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாது.எதையும் பற்றிக்கொள்ள தேவையில்லை.நம்மை காப்பாற்றவோ , கரையேற்றவோ எந்த கரமும் வரப்போவதில்லை.இந்த பிரக்ஞையோடு வாழ்க்கையை அணுகவேண்டும்.இதன் ஒரு கருத்துருவகமே மெர்சால்ட்.ஆனால் நகுலன் ஆல்பெர் காம்யூவை தான்டி செல்கிறார்.நகுலன் முன்வைப்பது இருத்தலிய அபத்தத்தின் ஆன்மிக உச்சம்.இந்த மேலே சொன்ன நகுலன் கவிதைக்கு ஒரு தொடர்ச்சி உண்டு.புறநானூற்று பாடலான பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே என்பதன் தொடர்ச்சிதான் நகுலனின் ராமச்சந்திரன் கவிதை.சமயங்களில் முக்கியமானதாக பேசப்படும் நகுலனின் "யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எல்லாம்" என்ற கவிதையை நாம் நகுலன் மூலமாக மட்டுமல்ல நவீன இயற்பியல் மூலமாக கூட சென்றடையலாம்.ஆனால் ராமச்சந்திரன் கவிதை அப்படியல்ல.அது ஒரு ஆன்மிக எல்லையை தொடுகிறது.பிரமளின் கவிதையும் ஒரு ஆன்மிக கவிதைதான்.ஆனால் அது முன்னர் சொன்னது போல புறக்கண் கொண்டு பார்பதால் உருவாகும் அகமனவிரிவு.ஆனால் நகுலன் சொல்வது அகத்தில் மீக நீண்ட தூரம் செல்லும் போது ஏற்படும் அபத்த நிலையின் உச்சம்.இரு வேறு உலகங்கள்.இரு வேறு நோக்கு.இரண்டிற்கும் இந்திய தத்துவத்தின் தொடர்ச்சி உண்டு.விஷ்ணுபுரம் நாவலில் முதல் அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரங்கள் மூன்றாவது அத்தியாயத்தில் ஐதிகங்களாக மாறிவிடுவார்கள்.நமது முன்னோர்களின் ஆசைகள், கனவுகள்,கண்ணீர், மகிழ்ச்சி எல்லாம் என்னவானது?நமது முன்னோரின் பெயர்கள் என்ன?நம்முடைய கனவுகள் , ஆசைகள் ,கண்ணீர் , மகிழ்ச்சி எல்லாம் என்னவாக போகிறது.ஒன்றுமில்லை.ஆம்.நான் ஒரு ஒன்றுமில்லை.இதை படிக்கும் நீங்கள் கூட ஒரு ஒன்றுமில்லை தான்.நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்.இது ஒரு உண்மை.இதை நவீன தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்தவர் நகுலன்.
No comments:
Post a Comment