சலனம்




ஒரு கலைஞனாகவோ , விஞ்ஞானியாகவோ , மெய்ஞானியாகவோ, அரசியல்வாதியாகவோ , அதிகாரம் செய்பவர்களாகவோ இருக்க வேண்டும் என்று இன்று அநேகமாக எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.உண்மையில் ஒரு கலைஞனாகவோ ஒரு விஞ்ஞானியாகவோ உருவாகுவது சாதனையா ? பெரிய விஷயமா? விஞ்ஞானம் ,கலை ஏன் அதிகாரம் எல்லாமே மொழியோடு சம்பந்தப்பட்டவை.அதிகாரத்தை நோக்கி விழைபவன் ஒரு சமூக மொழியை அறிந்தவனாக இருக்கிறான். அவனுக்கு மக்களை ஒரு திரளை ஆளத்தெரிந்திரிக்கிறது.மக்களின் கூட்டு மொழி தெரிந்ததால் அவன் அதிகாரத்தை நோக்கி செல்கிறான். ஒரு விஞ்ஞானியோ கலைஞனோ அவர் அவர்களுக்கான மொழியை புரிந்துகொள்வதற்கான மன அமைப்பை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.அந்த மொழியிலேயே அவர் சிந்திக்கிறார்கள்.பிறகு அதில் தங்களை ஒருமுகப்படுத்திக்கொள்பவர்கள் சில புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திகிறார்கள்.அதற்கு அப்பால் அவர்கள் எளிமையானவர்கள்தான்.சாதாரணமானவர்கள் தான். இவர்களில் ஒருவனாக இருப்பது உண்மையில் பெரிய விஷயம் அல்ல.உண்மையில் பெரிய விஷயம் வேறு.அது சாமனியர்களின் வாழ்க்கை.ஒரு பெண் காலையில் எழுந்து இருபது தோசைகள் சுடுகிறார், மதியம் சோறு வைத்து சாம்பார் , ரசம் மற்றும் ஏதோ ஒரு பொரியல் செய்கிறார்.மாலை வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பும் போது அவர்களுக்கு காபி தருகிறார். இரவு இட்லி ,சப்பாத்தி தருகிறார்.இதற்கிடையில் வீட்டை சுத்தம் செய்கிறார், ஒட்டடை அடிக்கிறார் ,துணி துவைக்கிறார் , பாத்திரங்கள் கழுவுகிறார், வீட்டில் உள்ளவர்களை பராமறிக்கிறார்.மறுநாள் மறுபடியும் இதையே செய்கிறார். இதையே முப்பது நாற்பது வருடங்கள் செய்கிறார்.இவர்களுக்கு விடுமுறைகள் இல்லை.வேறொருவரை எடுத்து கொள்வோம். இவர் வீடு அம்பத்தூரில் இருக்கலாம்.அம்பத்தூரிலிருந்து பயணித்து சென்ட்ரல் வந்து அங்கிருந்து ஜோலார்பேட்டை வண்டியை அதிகாலை ஆறுமணிக்கு பிடித்து அரக்கோணத்திற்கு வேலைக்கு செல்லலாம்.மறுபடியும் சாய்ந்திரம் அதே வண்டியில் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பலாம்.ஒரு எழுத்தாளராக இருப்பதை விட ஒரு கலைஞனாக இருப்பதை விட விஞ்ஞானியாக இருப்பதை விட இந்த வாழ்க்கை மிக மிக கடினமானது.இதை வாழ்வதற்கு ஒருவருக்கு தேவைபடுவதெல்லாம் சின்ன சின்ன ஆசைகள் , எளிய கனவுகள் , சிறு கடவுள்கள், அவ்வளவுதான்.இதை வைத்துக்கொண்டு அவர்கள் முப்பது நாற்பது வருடங்களின் ஒரே போன்ற நாட்களை மாதங்களை வருடங்களை எளிமையாக கடந்துவிடுகிறார்கள்.எவரேஸ்ட் சிகரத்தை தொடுவதை விடுவும் இது தான் சிரமமான காரியம்.ஏனேனில் இதில் தொடுவதற்கு சிகரங்கள் இல்லை.இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு போதும் மேடை ஏறுவது இல்லை.அப்படி ஏறினால் ஒரு வேலை அது அவர்களின் வேலையின் கடைசி நாளாக இருக்கலாம்.

இன்றைய உலகமயமாதல் சூழலின்,பெருநகரமயமாதலின் சூழலின் மிக முக்கிய பிரச்சனை இந்த எளிய மனிதர்கள் வாழ்வில் உருவாகியிருக்கும் சலனங்கள்.இவர்கள் மேடைகளில் ஏற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.இவர்களின் குழந்தைகளை பாடகர்களாக , நடனக்கலைஞர்களாக , விஞ்ஞானிகளாக(நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளாக) , அதிகாரத்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.வேறு எப்போதையும் விட தங்கள் உடல் குறித்து மிகுந்த மன உளைச்சல் கொள்கிறார்கள்.இன்று ஒருவர் மன உளைச்சல் அடைவதற்கு அவருக்கு சுமாராக தொந்தி இருந்தால் போதும்.அவர் ஒவ்வொரு நாளும் தன் நேரத்தின் எந்தப்பகுதியை நடைப்பயணம் மேற்கொள்வதற்கான நேரமாக மாற்றலாம் என்று யோசித்தபடியே இருக்கிறார்.ஒவ்வொரு நாளும் அது முடியாமல் போவதால் அவதிக்குள்ளாகிறார்.உடற்பயிற்சி கூடங்களும் ,யோகாசன மையங்களும் நிரம்பியபடியே இருக்கின்றன.தாங்கள் உட்கொள்ளும் உணவு குறித்த குற்றவுணர்வு அடைகிறார்கள்.எளிய மகிழ்ச்சிகளும் நிகழ்வுகள் இல்லாமல் ஆகுகின்றன.திரையில் பார்க்கும் கட்டுக்கோப்பான நாயகனின் உடல் பிம்பம் அவர்களை நிம்மதி இழக்க செய்கிறது.மிகப்பெரிய அளவில் வேறு எப்போதையும் விட நாம் உடல் ரீதியிலான வன்முறைக்கு உள்ளாகியிருக்கிறோம்.குழந்தைகளின் இயல்பான பால்ய காலம் நிராகரிக்கப்பட்டு அவர்கள் தங்களை ஒரு அறிவுஜீவிகளாகவோ கலைஞர்களாகவோ நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தை அடைகிறார்கள்.மனிதர்கள் சாதாரணமாக வாழ்வது கடினமாகிகொண்டிருக்கிறது.அவர்களின் சாதாரணத்தனம் கேலி செய்யப்படுகிறது.அவர்கள் மீது மிகப்பெரிய அளவில் வன்முறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.அப்போது அவர்கள் தேடும் வடிகால்கள் பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.இது ஒரு முக்கியமான சமூகவியல் , உளவியல் பிரச்சனை.கோடிக்கணக்கான சாமானியர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.அவர்கள் நிம்மதியிண்மையிலிருப்பதும் அவதி கொள்வதும் ஒரு சமூகத்திற்கு நல்லதல்ல.இன்று அவர்களுடைய சின்ன சின்ன ஆசைகள் பெரிய பெரிய ஆசைகளாகவும் சிறிய கனவுகள் பெரிய கனவுகளாகவும் சிறு கடவுள்கள் பெரிய கடவுள்களாகவும் மாறிவிட்டனர்.ஒரு கலைஞன் உருவாவதற்கு மிக முக்கியமான காரணம் அவனுக்கு சாதாரணமாக வாழத்தெரியவில்லை என்பது தான்.சாதாரணமாக வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை என்பதே தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களின் நாம் பெறும் தரிசனம்.வரும் ஆண்டு அந்த உண்மையை நோக்கிய ஒரு சிறு நகர்தலையாவது செய்யட்டும்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



No comments: