எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல் ஒளரங்கசீப்பின் இறுதிக்காலத்திலிருந்து அவரது மரணத்திற்கு பின்னான காலம் வரையான காலமாற்றத்தை பற்றிய வரைவை அளிக்கிறது.நாவலில் தூமகேது என்ற ஒடுக்கப்பட்டவர் செய்யாத தவறுக்காக தண்டனை அளிக்கப்படுகிறார்.காலா என்ற சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்.அவரின் தொழில் ஆட்டுத் தோலை பதப்படுத்துவது.சாமர் என்ற இனத்தை சேர்ந்தவர்.யாரோ ஒருவரின் ஆட்டைத் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.நிகிலி என்ற ஊரில் அவரின் மூதாதையர்கள் ஊரை துப்புரவு செய்வதற்காக அழைத்து வரப்படுகிறார்கள்.அவர்கள் சத்கர் என்ற நாட்டில் வாழ்கிறார்கள்.அந்த நாட்டின் அரசன் பிஷாடன் ஒரு மூடன்.நாவலின் இறுதியில் பிஷாடன் கண்கள் பிடுங்கப்பட்டு கைகால்கள் துண்டிக்கப்பட்டு இறக்க அனுமதிக்கப்படுகிறான்.சத்கரை தற்காலிகமாக ஆளும் ரெமியஸ் என்ற வணிகனை கிழக்கிந்திய கம்பெனி தூக்கிலிடுகிறது.சத்கரின் பஜார் விக்டோரியா பஜார் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.ஒளரங்கசீப்பின் மரணத்தின் பின்னர் டெல்லியில் நிலையான அரசு உருவாகவில்லை.முதலில் அவரது மூன்றாவது மகன் ஆட்சி பொறுப்பேற்கிறார்.பின்னர் பகதூர் ஷா ஆட்சிக்கு வருகிறார்.ஒளரங்கசீப்பின் மரணத்திற்கு பிறகு அவரது பணிப்பெண்ணாக இருந்த அஜ்யா என்ற திருநங்கை சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.அவர் ஒளரங்கசீப் கொடுத்த புதையலின் ஆட்டுத் தோல் வரைப்படத்தை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறார்.ஆனால் ஒளரங்கசீப் தான் கையால் தைத்த ஒரு குல்லாவையும் சிறிது தங்க நாணயங்களையும் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.அந்த வேண்டுகோளை நிறைவேற்ற விரும்புகிறார் அஜ்யா.ஆனால் அந்த தங்கநாணயங்களை அஜ்யா நியமித்த பெண்ணிடமிருந்து ஒரு திருடன் பறித்து விடுகிறான்.அவர் புதையலுக்கான வரைப்படத்தை மறைத்து வைத்திருக்கிறார் என்று எண்ணுகிற அரசாங்கம் அவரை சிறையில் அடைத்து மரண தண்டனை அளிக்கிறது.நாவலில் மற்றொரு துணைக்கதையாக ஒரு படகோட்டியின் கதை வருகிறது.அவனுக்கு புதையல் கிடைக்கிறது.அவன் அதை வைத்து செல்வந்தனாக ஆகிறான்.ஆனால் அவன் இறுதியில் கடல் பயணத்தின் போது இறந்து போகிறான்.
இந்த நாவல் நீதி மறுக்கப்படுவதன் அவலத்தை பேசும் நாவல்.தூமகேது தன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து அனுபவித்த இன்னல்களை பதிவு செய்கிறது.ஆனால் நாவலின் முக்கியமான குறையாக நான் கருதுவது நாவலில் அனைவரும் வாழ்வின் பிரதான கேள்விகளான நீதி , மரணம் போன்றவற்றை பற்றி தொடர்ந்து பேசுவது தான்.அந்த பெயர்வு சட்டென்று நிகழ்கிறது.அது உரையாடல் வழி யதார்த்த தளத்திலிருந்து தத்துவத் தளத்திற்கு தர்க்க தளத்திற்கு மீபொருண்மை தளத்திற்கு செல்ல வேண்டும்.அது நாவலில் நிகழவில்லை.எந்தக் கதாபாத்திரமும் எதையும் பேசலாம் என்பது உண்மைதான்.ஆனால் அதற்கான சாத்தியங்களை அவர்களின் உரையாடல் தளம் உருவாக்க வேண்டும்.அது யதார்த்த தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு நகர்ந்து அங்கு அத்தகைய தத்துவ உரையாடல்கள் நிகழ வேண்டும்.
எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களில் யாமம்,நெடுங்குருதி,இடக்கை ஆகியவை முகலாய அரசின் இறுதிக் காலங்களிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னான காலம் வரையான காலகட்டத்தை பற்றியும் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எளிய மனிதர்களின் வாழ்வை பேசும் நாவல்களாகவும் இருக்கின்றன.அவரின் நாவல்கள் எளிய மனிதர்களின் வாழ்க்கையை தனித்த ஒன்றாக பேசுவதில்லை.அவர்களை அமைப்பின் மனிதர்களாகவே முன்வைக்கிறது.அவர்களின் வாழ்வில் நடப்பவை தற்செயலால் நிகழ்பவை அல்ல.அது அமைப்பின் சிக்கல்களால் நடக்கின்றன.உதாரணமாக தூமகேது ஆட்டைத் திருடிவிட்டான் என்று குற்றம் சாட்டப்படுகிறான்.குற்றம் சாட்டப்படுவது பிழையில்லை.ஆனால் அந்த அமைப்பில் அவன் குற்றமற்றவன் என்று நிரூபித்து வெளியேறுவதற்கான சாளரங்களே இல்லை.அது பிழை.பிஷாடன் என்ற மூடனுக்கு அது குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லை.அதனால் தான் தூமகேது அவதிப்படுகிறான்.இந்த அமைப்பை பிரதிநித்துவப் படுத்துபவனாகத்தான் தூமகேது வருகிறான்.ஓர் ஒடுக்கப்பட்டவனை பிரிதிநித்துவப் படுத்தி அதன் வழி அந்தக் காலகட்டத்தின் நீதியை அரசாங்கத்தை மக்களின் வாழ்க்கை நிலைமைகளை பேசும் நாவலாக இடக்கை அமைகிறது.அதை போலவே அவரின் மற்ற நாவல்களையும் நாம் பார்க்க முடியும்.அவை தனிமனிதர்களின் வாதைகளை பேசும் நாவல்கள் அல்ல.அவை அமைப்பின் மனிதர்களை பிரதிநித்துவப்படுத்தும் நாவல்கள்.
நெடுங்குருதியில் வரும் குற்றப் பரம்பரையினர், யாமம் நாவலில் வரும் சென்னை நகரவாசிகள்,இடக்கையில் வரும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள்,உறுபதி நாவலில் வரும் சம்பத் அனைவரும் உதிரி மனிதர்கள் என்று தோற்றம் உருவாக்கப்படுகிறது.ஆனால் அவர்கள் யாரும் தனிமனிதர்கள் அல்ல, உதிரி மனிதர்களும் அல்ல.நெடுங்குருதியில் வேம்பலை மறுபடி மறுபடி அந்த மனிதர்களை தன் மாயக் கரங்களால் தன் வசம் இழுத்துக்கொள்கிறது.அவர்களால் அந்த அமைப்பிலிருந்து வெளியேற முடியவில்லை.எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் தனிமனிதர்களை விதத்தோதவோ அவர்களின் வீழ்ச்சியை கழிவிரக்கத்துடன் முன்வைக்கவோ முயற்சிப்பதில்லை.அவர் எந்த சிக்கலையும் தொன்மத்துடன் இணைப்பதில்லை.எந்த தனிமனிதனும் தன் உளவியல் சிக்கலுக்கான யதார்த்த வாழ்வின் சிக்கலுக்கான விடையை தொன்மத்தில் கண்டடைவதில்லை.அவரது நாவல்கள் அந்த நாவல் முன்வைக்கும் அமைப்பில் நிகழ சாத்தியமானவற்றை கதாபாத்திரங்கள் வழி பிரதிநித்துவப் படுத்துகிறது.அதன் வழி அந்த அமைப்பை ஆராய்கிறது.தீவிரமாக விமர்சிக்கிறது.அதுவே எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களின் தளமாக அமைகிறது.
No comments:
Post a Comment