ஆப்பிளுக்கு முன்

 

சி.சரவணகார்த்திகேயனின் முதல் நாவல் ஆப்பிளுக்கு முன்.2017யில் எழுதியிருக்கிறார்.அதற்கு முன் 2016யில் பிரசுரமான இறுதி இரவு என்ற சிறுகதைத் தொகுப்பு அவரது முதல் புனைவு நூல்.ஆப்பிளுக்கு முன் நாவல் மிகப்பெரிய கேன்வாஸை எடுத்துக்கொள்கிறது.கஸ்தூரிபாவின் மரணம், நவகாளி பயணம், காந்தியின் பரிசோதனைகள்,வங்காளப் பயணம், தேசப் பிரிவினை,மதக் கலவரங்கள், பிர்லா இல்லத்தில் காந்தியின் தங்கல், அங்கே நிகழ்ந்த மரணம்,காந்தியின் மரணத்திற்கு பிறகு மநு நிராதரவாக நிற்கும் நிலை என்று வரலாற்றின் முக்கியத் தருணங்களை பின்புலமாக கொண்டுள்ளது இந்த நாவல்.

இத்தகைய பின்புலமே நாவலுக்கான களத்தை தந்து விடுகிறது.பெரும்பாலும் நல்ல களம் அமைந்து விட்டால் நல்ல கதைகளை எழுதிவிடலாம்.களங்களும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும் அவர்கள் செய்யும் பணிகளுமே ஒரு கதையின் முக்கியத் தளமாக இருக்கிறது.கதை அல்ல!இவற்றை ஒரு ஆசிரியர் சரியாக அமைத்துவிட்டால் அதற்கு மேல் அவரது மொழி வளமும் கற்பனையும் அவரது நோக்கும் கதையை தீர்மானிக்கின்றன.

ஆப்பிளுக்கு முன் நாவல் மிகப்பெரிய களத்தை கொண்டிருந்தாலும் விரித்து எழுதுவதை விட சுருக்கி எழுதும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது.பொதுவாக இத்தகைய பண்புகளை சிறுகதைகளே கொண்டிருக்கும்.அவற்றில் தான் நாம் கோடிட்டு காட்டி விட்டு அடுத்த பகுதிக்கு சென்று விடுவோம்.இந்த நாவலில் அத்தகைய முறைதான் பின்பற்றப்பட்டுள்ளது.

நாவல் ஆகா கான் அரண்மனையில் காந்தி சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்திலிருந்து அவரது மரணம் வரையான காலம் வரை  பயணிக்கிறது.காந்திக்கும் மநுக்கும் இடையிலான பரிசோதனைகளும் அதை முன்னிட்டு அவர்கள் கொள்ளும் உரையாடல்களும் பிறர் அவர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல்களுமே நாவலின் முன்தளத்தில் அமைந்திருக்கின்றன.மற்றவை அனைத்தும் பின்னணியில் நிகழ்கின்றன.பின்னணியில் நிகழ்பவை மீது எந்த இடத்திலும் கவனம் குவியவில்லை.இந்தப் பரிசோதனைகள் குறித்து நாவல் எந்த விதமான பார்வையையும் முன்வைக்க விரும்பவில்லை.அதை சரி என்ற திசைக்கும் நாவல் எடுத்துச்செல்லவில்லை.தவறு என்றும் சொல்லவில்லை.ஒரு வகையில் அதை பதிவு மட்டுமே செய்கிறது.அந்தப் பரிசோதனைகள் மநுவையும் காந்தியையும் பாதிக்கிறது.இவற்றால் மநு உளநிலை வெகுவாக பாதிப்புக்குள்ளாகிறது.அவள் காந்தி சொல்வதை முழுமையாக ஏற்கிறாள்.கிட்டத்தட்ட நிஷ்களங்கமான ஒரு குழந்தையின் இடத்திற்கு அவள் செல்கிறாள்.ஆனால் அதே நேரத்தில் அவளை சுற்றி உள்ளோரின் கேள்விகளாலும் அழுத்தங்களாலும் அவள் குழப்பம் கொள்கிறாள்.தக்கர் பாபா தன் உரையாடல் வழி மநுவிடம் வெற்றி பெறுகிறார்.ஆனால் அது தற்காலிகமான வெற்றியாக அமைகிறது.

காந்தி எப்போதும் பிறரின் கோணத்தை பொருட்படுத்தாமல் தான் வாழ்ந்திருக்கிறார்.அவர் மநுவிடம் தன் பரிசோதனைகள் பாதியிலேயே நின்றுவிட்டதால்தான் நவகாளியில் தன்னால் அமைதியை கொண்டு வர இயலவில்லை என்று சொல்கிறார்.அவர் எப்போதும் தனிமனிதனின் தூய்மை புறத்தை பாதிக்கிறது என்ற கொள்கையை கொண்டிருந்தார்.சிறு விஷயங்களில் மட்டுமல்ல மிகப்பெரிய கொள்கை முடிவுகளில் கூட அதையே பின்பற்றினார்.சாதிய வேறுபாடுகள் , தீண்டாமை , நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றில் அவர் உயர் குடிகளின் தூய்மையைத்தான் வலியுறுத்தினார்.ஒடுக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொள்வதை தவிர வேறு பணிகள் எதுவும் காந்தியின் செயல்திட்டத்தில் இல்லை.காந்தியை பின்பற்றி வினோபா பாவே பல நிலச்சுவான்தார்களிடமிருந்து நிலத்தை தானமாக பெற்றார்.ஆனால் பூதான்  இயக்கம் தோல்வி என்றே நாம் அறிகிறோம்.

காந்தி தன்னை ஒரு அன்னையாக மாற்றிக்கொள்ள விரும்பினார் என்ற பார்வை நாவலில் உரையாடல்களில் மநுவின் எண்ணங்களில் தொடர்ந்து வருகிறது.காந்திக்கும் மநுவுக்குமான உறவு பிறரால் புரிந்து கொள்ள இயலாத ஆன்மிகமான தளத்தில் அமைந்திருப்பதான கோணத்தை நாவல் முன்வைக்க விரும்பி உள்ள அதே நேரத்தில் அப்படியான ஒரு கோணத்தை முழுமையாக பதிவு செய்யவும் விரும்பவில்லை.காந்தியும் மநுவும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள்.அவர்களுக்குள் ஆழமான பற்று இருக்கிறது.இது நாவலில் நன்கு வெளிப்பட்டுள்ளது.அதே நேரத்தில் அந்த உறவில் உள்ள நோய்மையும் மநுவின் சோர்வின் வழி புலனாகிறது.

எப்போதும் உறவுகளில் நாம் மிகப்பெரிய உரையாடல்களை விளக்கங்களை நமக்கோ பிறருக்கோ அளிக்காமல் இருக்க முடிந்தால் அந்த உறவு இயல்பானதாக இருப்பதாக உணரலாம்.காந்திக்கும் மநுவுக்குமான உறவு இயல்பானதாக இல்லை என்பதை அவர்களுக்குள்ளான உரையாடலும் பிறருடன் அவர்கள் கொள்ளும் வாதங்களும் உணர்த்துகின்றன.தக்கர் பாபாவுக்கும் காந்திக்கும், தக்கர் பாபாவுக்கு மநுவுக்குமான விவாதங்கள் நாவலின் மையமாக அமைந்திருக்கிறது.இந்த வாதங்களை கூர்மையானதாக முன்வைக்க நாவலாசிரியர் விரும்பியிருக்கிறார்.ஆனால் அந்த வாதங்கள் தோய்ந்து போன தோள்கள் போல அமைந்திருக்கின்றன.அந்த வாதங்கள் மிக எளிமையாக நிகழ்கின்றன.அவை எந்த உக்கிரமும் கோபமும் நாடகத்தனமும் பாவனைகளும் இல்லாமல் இருக்கின்றன. ஒப்புநோக்க சுஷீலாவுக்கும் மநுவுக்குமான பேச்சு நன்றாக அமைந்திருந்தன.

இந்த நாவலின் முடிவில் மநு பாவு என் அன்னை என்று எண்ணுகிறாள்.நாவல் இந்தப் பார்வையைத்தான் முன்வைக்க விரும்புகிறதா என்பது தெரியவில்லை.ஆனால் நாவலின் பயணம் இதற்கு மாறாக மநுவின் கையறு நிலையைத்தான் பதிவு செய்கிறது.இது காந்தியின் பரிசோதனைகள் என்பது பற்றிய நாவல் என்பதை விட மநுவின் கைவிடப்பட்ட நிலை பற்றிய நாவல் என்றே கொள்ள முடியும்.மிகப்பெரிய ஆளுமையின் முன் நாம் நம்மை முழுமையாக கரைத்துக்கொள்கிறோம்.அந்த ஆகிருதியின் நிழல் நமது நிழலை இல்லாமல் ஆக்குகிறது.நிழல் என்பது நமது அகங்காரம்.அந்த அகங்காரம் இல்லாத போது அந்த பேராளுமையின் பகுதியாக நாம் மாறுகிறோம்.பேராளுமையின் பகுதியாக இருக்கும் போது மகிழ்ச்சி இருக்கலாம்.குழப்பம் இருக்கலாம்.ஆனால் அந்தக் காலத்திற்கு பின்னர் அவை மிகுந்த மனச்சோர்வை மட்டுமே அளிக்கும்.நாம் பல ஆன்மிக மடங்களில் நிகழ்பவற்றை பற்றி படிக்கிறோம்.அவர்கள் எப்படி முழுமையாக மூளைச் சலவைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதை படித்து ஆச்சரியம் கொள்கிறோம்.அவை பெரும்பாலும் நமது விருப்பத்தாலேயே நிகழ்கிறது.நாம் நம்மை கரைத்துக்கொள்ள விரும்புகையிலேயே அத்தகைய சாத்தியங்கள் அரங்கேறுகின்றன.ஆனால் அவை குழப்பங்கள் ஊடேத்தான் நடக்கின்றன.

மநுவுக்கும் காந்திக்கும்  , காந்திக்கும் பிறருக்குமான பரிசோதனைகள் ஒரு வகை பாவனைகள்.அவை பாவனைகளாக இருப்பதாலேயே மனச்சோர்வு ஏற்படுகிறது.அவை இந்த நாவலில் பதிவாகி இருக்கிறது.மநுவின் வலியை பதிவு செய்த நாவலாக இதை பார்க்கத் தோன்றுகிறது.ஆப்பிளுக்கு முன் என்பது மனிதனுக்கு ஒரு போதும் சாத்தியம் ஆகாத இறந்தகாலம்.இந்த நாவலின் வெற்றி அதன் களம்.அதே நேரத்தில் நாவல் ஏதேனும் ஒரு கோணத்தை விரித்து எழுதியிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

சி.சரவணகார்த்திகேயன் - ஆப்பிளுக்கு முன் - உயிர்மை வெளியீடு.

புகைப்படம் - https://www.bbc.com/news/world-asia-india-49848645

No comments: