![]() |
| தாரீக் பே தாரீக் என்று சன்னி தியோல் சொல்லும் திரைப்படக் காட்சி |
பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டு பிணையில்
வந்தப்பின்னர் ஒரு நிகழ்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் பத்ரி சேஷாத்ரியும் பங்குப்
பெற்றனர்.அதில் பேசிய ஜி.ஆர்.சுவாமிநாதன் பத்ரி கைது செய்யப்பட்டது முதல் தவறு என்றால்
அவரை சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டின் நடவடிக்கை மிகப் பெரிய பிழை என்றார்.மேலும்
அவருக்கு சிஆர்பிசியை(குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை) கற்றுத் தர வேண்டும் என்று சொல்லியிருந்தார்.நீதிபதி
ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புகள் மீது அதிருப்தியும் கவலையும் கொண்ட எதிர்க்கட்சி
பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை மக்களவை சபாநாயகரிடம்
அளித்திருக்கிறார்கள்.
சுவாமிநாதன் விமர்சித்த மாஜிஸ்திரேட் மாவட்ட நீதிமன்றதங்களில்
கீழ் வரும் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி.சுவாமிநாதன் உயர்நீதி மன்றத்தின் நீதிபதி.இருவரும்
நீதிபதிகள் தான் என்றாலும் இருவருக்குமான அதிகாரத்தின் வேறுபாடுகள் பாரதூரமானவை.நீதிபதி
சுவாமிநாதனை யாராலும் பதவியில் இருந்து நீக்க முடியாது.அதிகப்பட்சம் மக்களவையில் தீர்மானம்
கொண்டுவரலாம். ஆனால் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பேர் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.அப்போது
தான் அது நிறைவேறும்.இதுவரை அப்படி பதவியிலிருந்து நீக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளும்
யாருமில்லை உச்சநீதிமன்ற நீதிபதிகளும் யாருமில்லை.
உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிடம் மாற்றி உத்தரவிடலாம்.உச்சநீதிமன்றத்தின்
கொலீஜியம் பரிந்துரை செய்து ஒன்றிய அரசும் அதை ஏற்றால் அது நிகழும்.அதுதான் அதிகப்பட்சம்
செய்யக்கூடியது.ஆனால் குற்றவியல் நீதிமன்றத்தின் நடுவரை மிக எளிதில் பதவியிலிருந்து
நீக்கலாம்.அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதி நினைத்தால் அதை எளிதில் செய்ய முடியும்.
மாவட்ட நீதிமன்றங்களை நிர்வகிக்கும் முழு பொறுப்பையும்
உயர் நீதிமன்றங்களுக்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 235 அளித்துள்ளது. மாவட்ட
அளவில் இரண்டு வகையான நீதிமன்றங்கள் இருக்கின்றன. ஒன்று குற்றவியல் நீதிமன்றங்கள்.மற்றது
குடிமையியல் நீதிமன்றங்கள்.அதற்கு மேல் மாவட்ட நீதிமன்றங்களும் செசனஸ் நீதிமன்றங்களும்
வருகின்றன.
மாவட்ட நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதிகளிலிருந்து வாயில்காப்பாளர்
வரை அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.ஆனால் நிர்வாகம் உயர்நீதி
மன்றத்தின் கையில் இருக்கிறது.பிரதீப் ரெட்டியும் சித்ராக்ஷி ஜெயினும் இணைந்து எழுதியுள்ள
புத்தகமான “தாரீக் பே ஜஸ்டிஸ்” மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேவையான மறுசீரமைப்பை பற்றி
விரிவாக பேசுகிறது.
நாம் தினசரி நாளிதழ்களில் உயர்நீதிமன்றங்கள் குறித்தும்
உச்சநீதிமன்றங்கள் குறித்தும் படிக்கிறோம்.ஆனால் ஒரு எளிய குடிமகனுக்கு முக்கியமானவை
மாவட்ட நீதிமன்றங்கள் தான். ஒருவருக்கு பிணை கிடைக்க தன் சொத்தை பாதுகாக்க என்று அனைத்திற்கும்
முதலில் செல்லும் இடங்கள் குற்றவியல் நீதிமன்றங்களும் குடிமையியல் நீதிமன்றங்களும்
தான்.அங்கு நீதி கிடைக்க வேண்டும்.இங்கு அனைத்தும் காலவரைவுக்குள் நிகழ வேண்டும்.உடனடி
நிவாரணங்கள் சாத்தியப்பட வேண்டும்.நீதிபதிகள் அச்சமின்றி தங்கள் கடமைகளை செய்ய வேண்டும்.அதற்கு
அவர்களுக்கு அரசியலமைப்பு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அதற்கு என்ன தடை இருக்கிறது என்ற
தீவிர விசாரணையை மேற்கொள்கிறது இந்தப் புத்தகம்.
உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
தன் உரை ஒன்றில் மாவட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உணவு பரிமாறுவதை குறித்து
பேசியிருப்பார்.ஏன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள்
மீது இந்தளவு அச்சமும் மரியாதையும் வைத்திருக்கின்றனர்.ஏனேனில் அவர்களின் பதவி உயர்வு
, சம்பள உயர்வு , பணி நீட்டிப்பு என அனைத்தும் அவர்களின் அதிகார பிடியில் இருக்கிறது.திரைப்படத்தில்
நாம் ஸ்டெஜிங்கை முக்கியமான ஒன்றாக பாவிக்கிறோம்.ஒரே காட்சியில் வீட்டில் யார் அதிகாரம்
மிக்கவர் என்பதை காண்பிக்க வேண்டும் என்று சொல்கிறது திரைக்கதை.அந்த வீட்டில் பெண்
தான் அதிகாரம் கொண்டவர் என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்று இயக்குனர் எண்ணுகிறார்.பெண்
உணவு மேஜையில் அமர்ந்திருக்கும் நிலையில் அந்தக் கணவர் நின்ற நிலையில் உணவு பரிமாறிக்கொண்டு
இருப்பது போல ஸ்டெஜ் செய்தால் பார்வையாளர்களுக்கு எளிதில் புரிந்து விடும்.டி.ஒய்.சந்திரசூட்
சொன்னதை கேட்ட போது மாவட்ட நீதிபதிகளின் துயர நிலை அப்படியான ஒரு காட்சியாக எனக்குத்
தோன்றியது.
உயர் நீதி மன்றத்தின் நீதிபதிகளும் உச்ச நீதி மன்றத்தின்
நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பில் ஏதேனும் தவறிழைத்தால் அதன் பொருட்டு அவர்களை தண்டிக்க
முடியாது.அதை மேல் முறையீட்டில் சுட்டிக்காட்ட முடியும்.அவ்வளவுதான்.அவரிடம் ஏன் இப்படியான
தீர்ப்பை எழுதினீர்கள் என்று கூப்பிட்டு கேள்வி கேட்க முடியாது.அது மிகப் பெரிய பிழையே
என்றாலும் அதனால் நான்கு உயிர்கள் பலியானாலும் ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் அப்படியான
தீர்ப்புகளால் மாவட்ட நீதிபதிகளின் பதவிகள் பறி போகலாம்.அது பிழையான தீர்ப்பாகக் கூட
இருக்கத் தேவையில்லை.அதில் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு மாற்றுக் கருத்து இருந்தால்
போதும்.உயர்நீதிமன்றத்தில் இருக்கும் ரிஜெஸ்டார்கள்(விஜிலன்ஸ்) தான் ரகசிய ஆண்டு அறிக்கையை
(Annual Confidential Report) தயாரிக்கிறார்கள்.அதில் ஒவ்வோரு மாவட்ட நீதிபதி பற்றியும் அறிக்கை பதிவு
செய்யப்படும்.அதன் பெயரில் உள்ளது போலவே இது ரகசியமானது.ஆர்டிஐ மூலம் கூட அதில் உள்ளதை
அறிய முடியாது.அதில் நீதிபதிகளின் பணி மதிப்பீடு செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.அந்த
மதிப்பீட்டின் அடிப்படையில்தான் அவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அனைத்தும்.
இது மட்டுமில்லாமல் மாவட்ட நீதிபதி தவறான பிணை வழங்கியதாக
உயர் நீதி மன்றம் கருதினால் அதன் பொருட்டு கூட அவர் மீது விசாரணை நடத்தி அவர் பதவி
நீக்கம் செய்யப்படலாம்.அதாவது அவர் லஞ்சம் வாங்கினார் என்பது போன்ற குற்றச்சாட்டுகள்
கூடத் தேவையில்லை.அவரது தீர்ப்புகள் ஒரு தலைபட்சமானது என்ற புகார் தெரிவிக்கப்பட்டால்
அதை உயர்நீதி மன்ற நீதிபதி ஏற்றால் போதும்.அனைத்து உயர்நீதி மன்ற நீதிபதிகளும் பதவி
நீக்கத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தாலும் இது சொல்லப்படும் வகையிலேயே
தீவிரமாக பின்பற்றப்படுவதில்லை.மேல் முறையீடும் அதே உயர்நீதி மன்றத்தில் தான் நடக்கும்.அதில்
ஏதாவது செயல்முறை பிழைகள் இருந்தால் அவர் தப்பிக்கலாம்.இல்லையென்றால் பெரும்பாலும்
அந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ மாற்றுவதில்லை.
உச்சநீதிமன்றத்திற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் தேர்வாகும்
நீதிபதிகள் வழக்கறிஞர்களாக பத்தாண்டுகளாவது பணியாற்றி இருக்க வேண்டும்.யதார்த்தத்தில்
இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி மூத்த வழக்கறிஞர் என்ற தகுதியைப் பெற்றவர்கள்
தான் இந்த இரண்டு நீதிமன்றங்களுக்கும் தேர்வாகின்றனர்.அவர்களை தேர்வு செய்வது உச்சநீதிமன்றத்தின்
கொலீஜியம்.
ஆனால் மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேர்வு அப்படி இருப்பதில்லை.பரீட்சை
நடத்தி நேர்முகம் செய்து தேர்தெடுக்கப்படுவார்கள்.இவர்கள் சட்டக்கல்லூரியில் படித்து
முடித்து உடனடியாக தேர்வு எழுதி மாஜிஸ்திரேட் ஆக முடியும்.சமீபத்தில் உச்சநீதிமன்றம்
மாவட்ட நீதிமன்றங்களுக்கு நீதிபதியாக முன்றாண்டுகளாவது வழக்கறிஞராக பணியாற்றி இருக்க
வேண்டும் என்ற தகுதியை கொண்டு வந்திருக்கிறது.மறுபடியும் அது விவாதமாகியிருக்கிறது.
இதைக் குறித்து பேசும் ஆசிரியர்கள் வழக்கறிஞராக பணியாற்றி
நடைமுறை அனுபவம் பெற்று பின்னர் அவர்களை மாவட்ட நீதிபதிகளாக பணி அமர்த்துவது தான் சரியாக
இருக்கும் என்கிறார்கள்.பொது அறிவுக்கு உட்படுத்தி பார்த்தால் இது நியாயம் என்று தான்
தோன்றுகிறது.பல்வேறு மக்களின் வாழ்க்கை பாதிக்கும் மிகப்பெரிய அதிகாரம் மாஜிஸ்திரேட்
என்ற பொறுப்பு.இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதி அடிப்படை உரிமைகளை அளித்தாலும்
அதை நிறைவேற்றிய வேண்டிய அதிகாரம் நீதிமன்றங்களுக்குத்தான் அதிகம் இருக்கின்றது.ஆனால்
வயதில் மூத்தவர்கள் அனைவரும் துணிச்சலானவர்களாக இருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை.ஆனால்
இதில் முக்கிய செய்தி அனுபவம்.சட்ட அறிவும் நடைமுறையும் ஒரு சிக்கலின் உண்மையான தீவிரத்தை
அறிய அனுபவம் கற்றுத்தரும்.அந்த வகையில் ஆசிரியர்கள் சொல்வதன் பக்கம் அதிகச் சாய்வு
உள்ளது.
ஒருவரை காவல் நிலையத்தில் அடித்து குற்றத்தை ஒப்புக்
கொள்ளச் சொல்லி வற்புறுத்தி நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது குற்றம் சுமத்தப்பட்டவரிடம்
முறையான கேள்விகளை கேட்காமல் இயந்திர கதியில் காவலுக்கு அனுப்புவது நடைமுறையில் இருக்கிறது.இது
எத்தனை பெரிய பிழை.இதை எளிதில் சரி செய்ய முடியும்.மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளவர்கள்
அனுபவம் மிக்கவர்களாகவும் அச்சமின்றி பணியாற்றக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.அதைத்
தான் இந்த நூல் மறுபடி மறுபடி வலியுறுத்துகிறது.
நேர்முகம் செய்து தேர்வு செய்யப்படும் நீதிபதிகள்
இரண்டு வருடங்கள் பயிற்சி நீதிபதிகளாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு வருடம் கழித்து
அவர்களின் சர்வீஸ் மீது உயர் நீதி மன்றத்திற்கு நல்ல எண்ணம் உருவாகவில்லை என்றால் அவர்களை
நீக்கிவிட முடியும்.அவர்களால் முறையிட கூட முடியாது.ஆனால் அவர்கள் இரண்டு வருடங்கள்
அளித்த தீர்ப்புகள் செல்லும்.இது எத்தனை வேடிக்கையானது என்று கேள்வி கேட்கின்றனர் ஆசிரியர்கள்.ஒருவர்
இந்த வேலைக்கு தகுதியானவர் தானா என்பதை அறிந்து அவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.தேர்வு
செய்யப்பட்ட பின்னர் அவர் தகுதியானவரா என்று அறிய முற்படக்கூடாது.
பல துறைகளில் பயிற்சிக் காலம் முடிந்தப் பின்னர் நிரந்தரம்
செய்யப்படுவது நடைமுறையில் இருக்கிறது தான்.ஆனால் நீதித்துறை என்பது அப்படியல்ல.அங்கு
ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு பெளதீக மனிதனை நேரடியாக பாதிக்கிறது.அரூப மனிதனை அல்ல.அப்படிப்பட்ட
இடங்களில் சோதனை போல ஒருவரை நியமித்து பின்னர் அவரைப் பதவியிலிருந்து நீக்குவது அந்த
நீதிமன்றத்திற்கு வரும் மனிதர்களை அவமதிக்கும் செயல்.அதே போல ஐம்பது வயதை கடந்த மாவட்ட
நீதிபதிகளுக்கு அவர்கள் பணியில் தொடரலாமா அல்லது கட்டாய ஓய்வை அளிக்கலாமா என்பதையும்
உயர்நீதிமன்றங்கள் பரிசீலிக்கின்றன.
ஒரு பக்கம் இளவயதில் இருப்பவர்களுக்கு பணியில் நிரந்தரம்
பெறுவதற்கு நெருக்கடி இருக்கிறது.மறுபக்கம் அனுபவம் பெற்ற நீதிபதிகள் தங்களுக்கு கட்டாயப்
பணி ஓய்வு அளிக்கப்படக்கூடாது என்று அஞ்சுகின்றனர்.இதற்கு மத்தியில் ஏசிஆர் எனப்படும்
ரகசிய ஆண்டு அறிக்கையிலும் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும்.இவை மட்டும் அன்றி
அவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.ஒரு வழக்கை
முழுமையாக தொடக்கத்திலிருந்து இறுதிவரை நடத்தி முடிக்க ஒரு நீதிபதிக்கு அவகாசம் இருப்பதில்லை.அதற்குள்
அவரது பணியிடம் மாற்றப்படுகின்றது.புதிதாக வருபவரால் அந்த வழக்கு மேலும் தாமதமாகிறது.
இப்படியான தொடர் அழுத்தத்திலும் பதற்றத்திலும் இருக்கும்
மாவட்ட நீதிமன்றங்கள் எப்படி துணிச்சலான தீர்ப்புகளை அளிக்க இயலும்.எப்போது வேண்டுமானாலும்
அவர்கள் நாற்காலியிலிருந்து எழுப்பப்படலாம்.இதனால் என்ன நிகழ்கிறது என்றால் மாவட்ட
நீதிமன்றங்களில் பணிபுரிவோர் சிக்கலற்ற வழக்குகளை மட்டுமே எடுக்கின்றனர்.மற்றவற்றை
தள்ளிப் போடுகின்றனர்.பிணைகள் மறுக்கப்படுகின்றன.இதனால் பிணைகளைப் பெற குற்றம் சுமத்தப்பட்டோர்
உயர்நீதிமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டியிருக்கிறது.இதனால் வழக்குகளின்
எண்ணிக்கை கூடுகிறது.
பல வழக்குகள் விசாரணைக்கு வரவே பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.அப்படியே
வந்தாலும் அவற்றை ஒத்திப்போடுவதை மாவட்ட நீதிமன்றங்கள் வழக்கமாக வைத்திருக்கின்றன.சமீபத்தில்
கருப்பு என்ற தமிழ்த் திரைப்படம் மாவட்ட நீதிமன்றங்களில் இருக்கும் ஊழல் தான் வழக்குகளின்
தேக்கநிலைக்கான காரணம் என்று சொன்னது.மேலும் அதைச் சரி செய்ய வட்டாரக் கடவுள் வேறு
வருகிறார்.வையத்துக் கடவுளை ஏன் கொண்டுவரவில்லை என்று தெரியவில்லை.ஆனால் இந்த நூலின்
ஆசிரியர்கள் ஊழல் , குறைவான நீதிமன்றங்கள்,கட்டமைப்பு பிரச்சனை போன்ற வழக்கமான வெகுஜன
காரணங்களை தவிர்த்து உண்மையான சிக்கல்களை குறித்து பேசுகிறார்கள்.
என் தந்தை நெய்வேலியில் வழக்கறிஞராக பணிபுரிந்தார்.நான்
அந்த நீதிமன்றத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன்.மந்தாரக்குப்பம் பேருந்து நிலையத்திற்கு
அருகே ஜெயி கோர்ட்டர்ஸ் என்ற என்எல்சியின் இடத்தில் ஒரு பெரிய வீட்டை நீதிமன்றமாக மாற்றியிருந்தார்கள்.விரிந்த
வளாகம்.நாவல் மரம் இருக்கும்.இப்போது நீதிமன்றம் நெய்வேலி டவுன்ஷிப்பிற்கு மாறிவிட்டது.அதே
போல திருப்பத்தூரில் (வாணியம்படி அருகே இருக்கும் திருப்பத்தூர்) இருந்த நீதிமன்றத்தில்
எனக்குத் தெரிந்த ஒருவர் லோக் அதலாத்தில் பணிபுரிந்து வந்தார்.அவரைப் பார்க்க சென்றிருந்தேன்.அப்போது
அந்த நீதிமன்றம் ஏதோ ஒரு பெரிய ஹாலில் தடுப்புகள் அமைத்து தற்காலிகமாக நடந்து கொண்டிருந்தது.இது
இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்.
ஆனால் இன்று எல்லா மாவட்ட நீதிமன்றங்களுக்கும் நிரந்தர
இடங்களும் முறையான கட்டிடங்களும் கட்டித்தரப்படுகின்றன.இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும்
தாலூக்காவிலும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்களை பார்க்க முடிகிறது.மாநில அரசுகளும்
மத்திய அரசுகளும் தொடர்ந்து நீதித்துறைக்கு நிதியை அளித்துக் கொண்டுதான் இருக்கின்றன.ஆனால்
நீதித்துறையில் வழக்குகளின் தேக்கம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.அதற்கான சான்றுகளை
ஆசிரியர்கள் நூலில் அளித்தருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
தன் உரை ஒன்றில் இந்தியாவிற்கு இன்னும் ஏழுபதாயிரம் நீதிபதிகள் தேவைப்படுகின்றனர் என்று
கூறி கண்ணீர் மல்கியிருக்கிறார்.ஆனால் இந்த ஏழுபதாயிரம் என்ற எண்ணிக்கைக்கு எப்படி
அவர் வந்தார் என்ற கேள்வியை ஆசிரியர்கள் எழுப்புகின்றனர்.
மக்கள் தொகையின் அடிப்படையிலான இந்த எண்ணிக்கை தவறானது.மாறாக
ஒவ்வொரு வழக்குப் பிரிவுக்கும் அது தொடங்கப்பட்ட இடத்திலிருந்து அது முடியும் வரை எத்தனை
காலமாகிறது என்பதை பதிவு செய்து அதன் அடிப்படையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மாணிக்க
வேண்டும்.ஆனால் பிரச்சனை என்னவென்றால் அப்படியான புள்ளி விபரங்களை யாராலும் பெற முடியாது
என்பது தான்.உதாரணமாக ஒரு திருட்டு வழக்கும் செக் மோசடி வழக்கும் குற்றவியல் வழக்குகள்
தான்.ஆனால் இரண்டுக்கும் தேவைப்படும் காலம் வேறு, செயல்முறையும் வேறு.அப்படி ஒவ்வொரு
வழக்குப் பிரிவு சார்ந்தும் புள்ளி விபரங்கள் இருந்தால் மட்டுமே நாம் குறைவான நீதிமன்றங்களை
கொண்டிருக்கிறோமா என்ற முடிவுக்கு வர முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
உச்சநீதிமன்றம் 2002யில் இ-கோர்ட்ஸ்(e-courts) என்ற புதிய திட்டத்தை உருவாக்கி அனைத்து
மாவட்ட நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை இணையத்தில் பதிவேற்ற முயன்றது.எவரும் வழக்கை
பற்றி முழு விபரத்தை அறிந்து கொள்ளும் வகையில் இது தொடங்கப்பட்டது.அதே போல தேசிய நீதித்துறை
தரவு மையம்(National Judicial Data Grid) என்ற திட்டத்தையும்
உருவாக்கியது.ஆனால் இவை இரண்டின் வழி நம்மால் முழுமையான புள்ளிவிபரங்களை அடைய முடியவில்லை
என்று சொல்கிறார்கள் ஆசிரியர்கள்.மேலும் என்ஜெடிஜியில் ஒரே வழக்கை பலமுறை வெவ்வேறு
காரணங்களுக்காக பதிவு செய்வதால் உண்மையான எண்ணிக்கையை விட அவை பலமடங்கு அதிகரித்து
காண்பிக்கின்றன.என்சிஆர்பி(NCRB) உடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது என்ஜெடிஜி அத்தனை நல்ல பலன்களை அளிக்கவில்லை.மேலும்
அவர்கள் வழங்கும் புள்ளிவிபரங்களுக்கு அவர்களே பொறுப்புத்துறப்பையும் தந்து விடுகின்றனர்.கோடிக்கணக்கில்
மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் இது போன்ற திட்டங்களுக்கு உண்மையில் யார் தான்
பொறுப்பேற்பது என்பது ஆசிரியர்களின் கேள்வி.
இந்த இ-கோர்ட்ஸ் என்பது மாவட்ட நீதிமன்றங்களுக்கானது.மாவட்ட
நீதிமன்றங்கள் உயர்நீதிமன்றங்களின் பொறுப்பில் வருபவை.அப்படித்தான் அரசியலமைப்பு கூறுகின்றது.அதனால்
இது அந்தந்த உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உயர்நீதிமன்றம் இதற்கென தனி அமைப்பை உருவாக்கி அதை
நிர்வகிக்க வேண்டும்.இவை உயர்நீதி மன்றத்தின் பொறுப்பில் ஆனால் நீதிபதிகள் அற்ற ஓர்
அமைப்பால் நிர்விக்கப்பட வேண்டும்.ஆசிரியர்கள் நீதிமன்றங்கள் மீது வைக்கும் முக்கிய
புகார் நீதித்துறையின் நிர்வாகத்தில் வெளிப்படத்தன்மை இல்லை என்பதைத் தான்.ஒரு குறிப்பிட்ட
தொகையை மாநில அரசிடமிருந்து மத்திய அரசிடமிருந்து ஒரு திட்டத்திற்காக பெற்றால் அதைப்
பற்றிய ஆண்டு அறிக்கையை அவர்கள் வெளியிட வேண்டும்.அப்படி ஏதுவும் நிகழ்வதில்லை.நீதிமன்றங்கள்
தங்கள் செலவீனங்களை முறையாக சமர்பிக்க வேண்டிய வகையில் பாராளுமன்றம் நடைமுறைகளை கொண்டு
வர வேண்டும் என்று ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் இயன்ற வரை நிர்வாகத் தளத்திலிருந்து
விடுவிக்கப்பட்டு மாவட்ட நீதிமன்றங்களை நிர்விக்க தனியான ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும்..மாவட்ட
நீதிமன்றங்கள் உயர்நீதிமன்றங்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதற்கு காரணம்
நீதித்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்.ஆனால் நடைமுறையில்
மாவட்ட நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பதே ஆசிரியர்களின் ஆதங்கமாக
இந்த நூலில் வெளிப்படுகிறது.
நீதித்துறை,சட்டமன்றம்,நிர்வாகம் மூன்றும் தனித்தனியாக
சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பது தான் இந்திய அரசியலமைப்பின் நோக்கம்.ஒன்றின் கீழ்
மற்றொன்று என்று இல்லாமல் மூன்றும் சமமான தளத்தில் இருக்க வேண்டும் என்பதே அதன் குறிக்கோள்.சட்டமன்றங்கள்
சட்டங்களை இயற்றுபவை.நிர்வாகத்துறை அதைச் செயல்படுத்தும்.நீதித்துறை அந்தச் சட்டங்கள்
அரசியலமைப்பின் வரைவுக்குள் பொருந்துகிறதா என்பதை ஆராயும் அதிகாரத்தை கொண்டிருக்கிறது.
இந்த அவசியத்தால்தான் அரசியலமைப்பில் பிரிவு 235 கொண்டுவரப்பட்டது.மத்திய
அரசோ மாநில அரசோ நீதித்துறையின் எந்த நிர்வாகத் தளத்திலும் தலையீடக்கூடாது என்கிற நோக்கம்
இதற்குப் பின் இருந்தது.உயர்நீதிமன்றத்து நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்து நீதிபதிகளும்
அச்சமின்றி சுதந்திரமாக செயல்படுவதற்கு அரசியலமைப்பு அவர்களுக்கு நிறைய பாதுகாப்பு
அரண்களை அளித்திருக்கிறது. ஒரு நீதிமன்றத்தீர்ப்பை குறித்து பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ
விவாதிக்க முடியாது.அரசியலமைப்பு அதை அனுமதிக்கவில்லை.
இந்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய அதே சமயத்தில்
மாவட்ட நீதிமன்றங்கள் கீழமை நீதிமன்றங்கள் என்ற படிநிலையிலிருந்து வெளியேறி சுயாதீனமாக
உயர்நீதிமன்றங்களுக்கு அஞ்சாமல் செயல்பட வேண்டும்.அதற்கு நிர்வாகம் உயர்நீதிமன்றத்திடமிருந்து
பிரிக்கப்பட வேண்டும்.அதே நேரத்தில் அது மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கும் போய்விடக்கூடாது.இதை
நடைமுறைப்படுத்துவது கடினம்தான் என்றாலும் செயல்படுத்த இயலும் தான்.
உண்மையில் நீதிபதிகள் தங்கள் அதிகாரங்களை கொண்டு மிகப்பெரிய
மாற்றங்களை கூட கொண்டு வர முடியும்.கிருஷ்ண ஐயர்,ஓ.சின்னப்ப ரெட்டி போன்றவர்கள் அதை
முயன்றிருக்கிறார்கள்.ஆனால் நீதிபதிகள் செயல்பாட்டாளர்கள் போல மாறுவது குறித்த மாற்றுக்
கருத்து ஆசிரியர்களுக்கு இருக்கிறது.குற்றவியல் நடைமுறைச் சட்டம், குடிமையியல் நடைமுறைச்
சட்டம் , இந்தியச் சாட்சியச் சட்டம் ஆகியவை ஒரு வழக்கை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான
செயல்முறையை அளிப்பவை.இந்த செயல்முறை பின்பற்றப்பட வேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
மத்திய அரசு பல்வேறு தீர்ப்பாயங்களை உருவாக்கியிருக்கிறது.இந்தத்
தீர்ப்பாயங்கள் இத்தகைய நடைமுறைகளை பின்பற்றாமல்தான் இயங்குகின்றன.செயல்முறைகளை பின்பற்றுவது
தாமதத்திற்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.ஆனால் நுகர்வோர் தீர்ப்பாயங்களிலும்
வழக்குகள் தேங்கித்தான் கிடக்கின்றன.ஒரு முறைமை இல்லாமல் தன்னிச்சையான முறையில் வழக்குகள்
நடத்தப்படுவது மேலும் குழப்பத்திற்கே ஈட்டுச்செல்லும் என்ற வாதத்தை ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள்.இது
ஏற்றக்கொள்ளக்கூடிய ஒன்று தான்.
ஜூரிகள் முறை மறுபடியும் இந்திய நீதிமன்றங்களில் அனுமதிக்கப்
பட வேண்டும் என்ற அவர்களின் தர்க்கம் எனக்குப் பிடித்திருக்கிறது.குற்றவியல் நடைமுறைச்
சட்டம் 1973யில் திருத்தப்பட்ட போது ஜூரிகள் முறையும் ஒழிக்கப்பட்டது.நாம் தேர்தலில்
வாக்கை செலுத்துகிறோம்.அதன் வழி நாம் ஓர் அரசை தேர்வு செய்கிறோம் என்ற எண்ணத்தை அடைகிறோம்.இன்று
மேற்கு வங்கத்தில் பல லட்சம் மக்கள் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.தேர்தலில்
பாரதிய ஜனதாவின் வெற்றியில் அதுவும் பெரும் பங்காற்றியிருக்கிறது என்று புள்ளிவிபரங்கள்
கூறுகின்றன.தங்கள் வாக்கை இழந்தவர்கள் அல்லது பறிக்கப்பட்டவர்கள் தங்களுக்கும் இந்த
அரசுக்குமான பாலம் என்ன தொடர்பு என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.ஆட்டத்தில் தோற்கலாம்
வெல்லலாம்.ஆனால் பங்குப் பெற வேண்டும்.அது போல இந்தியாவின் பொது மனிதன் தன்னாலும் நீதிமன்றத்தில்
வழக்கில் சாட்சியாகவோ, குற்றம் சுமத்தப்பட்டவனாகவோ,குற்றம் சுமத்துபவனாகவோ இல்லாமல்
வழக்கில் பங்கெடுக்க முடியும் என்ற சமிக்ஞையை அளிப்பது நல்ல ஜனநாயக நடைமுறையாக இருக்கும்.அதாவது
முதல் மனிதனாக இல்லாமல் மூன்றாவது மனிதனாக வழக்கை பார்க்க முடியும்.இது மக்களுக்கு
நீதிமன்றங்கள் மீது நாட்டத்தை உருவாக்கும்.நீதிபதிகளின் தனி ராஜாங்கம் என்பதான ஒரு
துறையாக மட்டும் இல்லாமல் பொது மக்களும் பங்கு பெறும் அமைப்பாக பெஞ்ச் மாறும்.
இந்தியா என்பது படிநிலைகள் மிகத் தீவிரமாக மனதில்
பதிந்து போன சமூகம்.படிநிலை அடுக்கக சமூகம் நம்முடையது.மேற்குலகில் தன்னை விட வயதில்
குறைந்தவரிடம் பணியாற்றுவதில் ஒருவருக்கு பெரிய தயக்கங்கள் இருப்பதில்லை.ஒரு பணியை
பணியாக மட்டும் பார்க்கும் தன்மை நமக்கில்லை.அதில் சமூக அந்தஸ்து வந்து விடுகிறது.இந்தியாவில்
எல்லாமும் ஜாதியாகிவிடுகிறது.அதே அடுக்கக படிநிலை மனநிலை தான்.அது தான் மேலாதிக்கத்தை
பல வகையிலும் கொண்டு வந்துவிடுகிறது.பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள், வேலையிடங்களில்
மேலதிகாரி பணியாள் என்று ஏற்கனவே அந்த அமைப்பிற்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வை நமது சாதிய
அடுக்கக படிநிலை மன அமைப்பு மேலும் பெரிதாக்கிவிடுகிறது.இதில் அடுக்கக என்ற வார்த்தை
முக்கியமானது.நமக்கு கீழ் இருப்பவர்களை அடக்கும் அதே வேளையில் நமக்கு மேல் இருப்பவர்களிடம்
பணியவும் செய்கிறோம்.
மாவட்ட நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்பட வேறு யாரும்
தேவையில்லை.நீதிபதிகளே அதைச் செய்ய முடியும்.ஆனால் அது அத்தனை எளிதாக நடக்காது.சிறிய
அதிகாரத்தை கூட விட்டுத்தர யாரும் விரும்புவதில்லை.அதனால் இதற்கு பாராளுமன்றம் வலுவான
மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.ஆனால் அத்தகைய மாற்றங்கள் வழி பாராளுமன்றம் நீதித்துறையை
கட்டுப்படுத்தவும் முயலக் கூடும்.அதனால் இது இருபக்கமும் கூர்மையான கத்திதான்.நேருவின்
காலத்தில் இருந்தவர்களைப் போன்ற பேருருவங்கள் ஒரு வேளை மறுபடியும் வந்தால் இது போன்ற
திட்டங்களை புறவயமாக அணுகி நடைமுறைப் படுத்துவார்கள்.அப்படி இல்லாத சூழலில் ஜனநாயகத்தின்
மீது நம்பிக்கை கொண்ட இது போன்ற ஆர்வலர்கள் தங்களின் எண்ணங்களைத் தொகுத்து புத்தகமாக
வெளியீடுகிறார்கள்.இவை மக்களின் எண்ணமாக மாறி பருண்மை வடிவத்தை அடையும் போது நடைமுறைக்கு
வரும்.
உண்மையில் மாவட்ட நீதிமன்றங்களின் சீரமைப்பு நம் ஜனநாயகம்
மூச்சு விடுவதற்கு அவசியமானது.சமூகத்தில் எங்காவது ஓரிடத்தில் நீதி கிடைக்கும் என்ற
நம்பிக்கை பொது மனிதனுக்கு இருக்க வேண்டும்.அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அவனைப் பார்த்து
பல்லிளித்தால் அவன் காஃப்கா போல கதை எழுதக் கூடியவனாக மாறிவிடுவான்.நம்மிடம் நிறைய
கதைகள் இருக்கின்றன.ஆனால் நமக்கு தேவைப்படுவது மாற்றம்.நாம் எல்லோரும் ஒரு சமூக ஒப்பந்தத்தின்
அடிப்படையில் வாழ்கிறோம்.அந்தச் சமூக ஒப்பந்தம் உயிர்போடு இருப்பதை உறுதி செய்யும்
முதன்மை அமைப்பு நீதிமன்றம்.ஐதராபாத்தில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.அந்தக் குற்றத்தை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நான்கு
பேரை அடுத்த நாளே காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.அதை மக்கள் கொண்டாடினர்.முறையான
விசாரணை வழி நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லாததுதான் இந்தக் களிப்புக்கு
காரணம் என்பது ஆசிரியர்களின் கூற்று.சமூகம் அவர்களைக் கொலைச் செய்வதன் வழி தங்களை தூய்மைப்படுத்திக்
கொள்வதாகவும் தங்களின் மற்றமையை கொல்வதாகவும் எண்ணிக் கொள்கிறது என்பதும் உண்மைதான்.
நீதிமன்றத்தின் செலவீனங்களை குறைக்க நீதிமன்றங்களுக்கு
தேவைப்படும் ஆனால் அதன் மைய வேலைகளில் பங்கெடுக்காத வாயில்காப்பாளர் , தோட்டக்காரர்
போன்ற வேலைகளை புறமூலங்களுக்கு(outsourcing) கொடுத்துவிடலாம்
என்கிறார்கள் ஆசிரியர்கள். இந்தப் புத்தகத்தில் எனக்கு அத்தனை உவப்பை அளிக்காத கருத்து
இதுதான்.ஏற்கனவே அனைத்து துறைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகின்றது.ஒரு பணி மையத்தில் அதன் அனைத்து உறுப்பினர்களும் ஒரே கருமூலத்திலிருந்துதான்
தங்களது வருவாயைப் பெற வேண்டும்.அது தான் அவர்களுக்கு தாங்களும் அந்த விகுதியின் பகுதியினர்
என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.மேலும் அவர்களுக்கு ஜீவிதத்திற்கான உத்தரவாதத்தை அவை அளிக்கும்.இது
மிக மிக இன்றியமையாதது.
இந்த நூலை எழுத மிகுந்த பிரயத்தனம் தேவைப்பட்டிருக்கும்
என்பது இதைப் படிக்கும் போது அறிய முடிகிறது.ஏனேனில் அவர்களுக்கு தங்கள் வாதங்களை வலுவாக
முன்வைக்க ஆதாரங்களும் புள்ளிவிபரங்களும் தேவைப்பட்டிருக்கும்.அவற்றை நீதிமன்றங்கள்
அதிகம் அளிப்பதில்லை.(சில நீதிமன்றங்கள் கொடுத்திருக்கின்றன).அதனால் அவற்றை பெற்று
தொகுப்பதிலேயே ஆசிரியர்களுக்கு காலம் செலவாகியிருக்கும்.
தேசியக் சட்டக் கல்லூரிகளில் படித்திருக்கிறார்கள்.இருவரும்
வழக்கறிஞர்களாக பணியாற்றவில்லை.ஆனால் சட்டத்துறை சார்ந்த பணிகளில் இருக்கிறார்கள்.மிகுந்த
ஈடுபாட்டுடன் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.இது வெறும் அகாடமிக் பயிற்சி போல
இல்லாமல் உண்மையான மாற்றம் நிகழ வேண்டும் என்ற ஆர்வம் ஆசிரியர்களுக்கு இருப்பது மிகுந்த
மகிழ்ச்சியை அளித்தது.தாரீக் பே தாரீக் என்று சன்னி தியோல் ஒரு திரைப்படத்தில் சொல்லும்
வசனத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் புத்தகத்தின் தலைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.முன்னுரையில்
அதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்.அதைத்தான் “தாரீக் பே ஜஸ்டிஸ்” என்று மாற்றியிருக்கிறார்கள்.தாரீக்
என்றால் தேதி.தேதிக்கு மேல் தேதி என்ற நடைமுறை குறித்த தேதியில் நீதி என்பதாக மாற வேண்டும்
என்பதன் அவா தான் இந்தத் தலைப்பு.நீதியின் மீது பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.அவர்கள்
திருப்தியடைவார்கள் என்கிறது வேதாகமம்.நாம் திருப்தி அடையும் காலம் ஒன்று வரும்.அதற்கு
தொடர்ந்து சிவீல் சமூகம் குரல் எழுப்பிக்கொண்டு இருக்க வேண்டும்.அப்படியான ஒரு முயற்சி
தான் இந்தப் புத்தகம்.
புத்தகத்தின் பெயர் - தாரீக் பே ஜஸ்டிஸ் – இந்திய
மாவட்ட நீதிமன்றங்களுக்கான சீர்திருத்தங்கள் – (
Tareekh Pe Justice – Reforms for India’s District Courts)
ஆசிரியர்கள் - பிரசாந்த் ரெட்டி டி & சித்ராக்ஷி
ஜெயின் (Prashant Reddy T & Chitrakshi Jain)
பதிப்பகம் – சைமன்
& ஸ்கஸ்டர் (Simon &
Schuster)
- அகழ் இணைய இதழில் பிரசுரமான கட்டுரை

No comments:
Post a Comment