சில ஆண்டுகளாக பெங்களூரில் வீடு வாங்க முயன்று கொண்டிருந்தேன்.அநேகமாக
அடுத்த வருடத் தொடக்கத்தில் வீடு பதிவாகிவிடும் என்று நினைக்கிறேன். பெங்களூரில் வீட்டு
வாடகை வருடா வருடம் எகிறிக் கொண்டே போகிறது. நாற்பதாயிரம் , ஐம்பதாயிரம் எல்லாம் எளிதாகிவிட்டது.
இதற்கு பதிலாக வீட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணம் சில வருடங்களாக இருந்து வந்தது. என்
பட்ஜெட்டுக்குள் கோரமங்களாவில் வீட்டைத் தேடிப் பிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.இறுதியில்
எப்படியோ ஓர் இல்லத்தை கண்டுபிடித்தேன்.இந்த அடுக்கக இல்லத்திற்கான வங்கிக் கடன் வாங்க
அலைந்த போது தனிச்சொத்து பற்றி ஓரளவு புரிந்தது.வருங்காலத்தில் இதை வைத்தே நாவல் கூட
எழுதலாம்.
இந்த வருடம் அதிகம் எழுதவும் இல்லை , வாசிக்கவும்
இல்லை.இரண்டு மூன்று கட்டுரைகள் , ஒரு சிறுகதை எழுதினேன். வேலைப் பளூ அதிக அளவில் இருந்தது.இன்னும்
நான்கு கதைகள் எழுதி முடித்தால் அடுத்த சிறுகதைத் தொகுப்பை கொண்டு வரலாம்.தஸ்தாயெவ்ஸ்கி
பற்றி இன்னும் மூன்று கட்டுரைகள் எழுத வேண்டும்.வரும் வருடத்தில் எப்படியும் ஒன்று
அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதிவிடுவேன்.மனித உரிமைகள் , சாதி அமைப்பு ஆகியவற்றைப்
பற்றி எழுதிய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக கொண்டு வர சாத்தியமுள்ளது.
வாசிப்பு,அதைச் சார்ந்த சிந்தனை, எழுத்து என்று மட்டும்
வாழக் கூடிய ஜீவிதம் அமைந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இப்போதைக்கு அத்தகைய
வாழ்க்கைக்கான சாத்தியம் இல்லை.இன்று வளர்ந்து வரும் செயற்கை அறிவுத்திறன் மென்பொருள்
துறையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று பலரும் ஆருடம் கூறுகிறார்கள்.எனக்குத்
தெரியவில்லை. ஆனால் நிரல்மொழிகள் எழுதுவது இனி மிகவும் எளிது.மிகவும் சிரமப்பட தேவையில்லை.அடுத்த
ஓரிரு வருடங்களில் அதன் தாக்கம் வெகுவாக புலப்படும்.
இன்று குழந்தைகளுக்கு விளையாட நல்ல வெளிகள் இல்லை.நண்பர்கள்
இல்லை.சுற்றம் இல்லை.அதனால் முடிந்த வரை என் குழந்தைகளுக்கு விடுமுறை கிடைக்கும் போதெல்லாம்
அவர்களை என் மனைவியின் கிராமத்திற்கு அனுப்பிவிடுகிறேன்.திருமணம் நடந்து பத்து வருடங்கள்
கடந்துவிட்டன. நிலையற்று எப்போதும் மிகுந்த பதற்றத்துடனும் , குழப்பத்துடனும் மட்டுமே
இருக்கும் எனக்கு என் மனைவியின் கனிவும் பொறுமையும் இளைப்பாறுதலாக அமைந்திருக்கிறது.என்
எல்லா கேள்விகளையும் அவரிடம் கொட்டிவிடுவேன்.அவர் சோர்ந்துவிடுவார்.நான் உற்சாகமாகிவிடுவேன்.
மூன்று வாரம் அலுவலகப் பணிநிமித்தமாக ஆஸ்திரேலியா
சென்று வந்தேன்.முதல் வெளிநாட்டுப் பயணம்.அங்கு கடைகள் மாலை ஐந்தாறு மணிக்கே மூடிவிடுகிறார்கள்
என்பது மிகுந்த வியப்பை அளித்தது.மதுரையில் முரளி நடத்திய இருத்தலிய வகுப்புகளுக்கு
சென்றேன்.எனக்கு அந்தப் பயிலரங்குகள் பயனுள்ளதாக அமைந்தன.பூக்கோவை வாசித்து வருகிறேன்.அதிகாரத்தை
அவர் எதிர்மறையாக பார்க்கவில்லை.அது எனக்கு நல்ல கோணமாக தெரிந்தது.கே.பாலகோபாலின் எண்ணங்களை
இந்த வருடத்தில் மேலும் நன்கு புரிந்து கொண்டேன்.காஸாவில் போர் இப்போதைக்கு முடிவுக்கு
வந்திருக்கிறது.இது மேலும் நிலை பெற்று அந்த மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வு அமைய
வேண்டும்.மேற்குக் கரையும் , காஸாவும் இணைந்த பாலஸ்தீனத் தனி நாடு அனைவராலும் அங்கீகரிக்கப்பட
வேண்டும்.இஸ்ரேலின் மீறல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் சமத்துவமும் சகோதரத்துவமும் சுதந்திரமும்
தூலம் பெற வேண்டும்.அதற்கு சிவில் சமூகம் போராட வேண்டும்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
புகைப்படம் - Tanya Nikan on Unsplash

No comments:
Post a Comment