இந்தியாவில் உற்பத்தித் துறை

 

பொருளாதார நிபுணர் ஹா-ஜூன் சாங்கின் (Haa-Joon Chang) நேர்காணல் சமீபத்திய பிரண்ட்லைன் இதழில் வந்திருக்கிறது. இது போன்ற உரையாடல்களில் பேட்டி எடுப்பவருக்கு தன் கேள்விகளை சரியாக தொகுத்துக் கொள்ளத் தெரிந்திருந்தால் , அதிலிருந்து விலகாமல் இருக்க முடிந்தால் நேர்காணல்களே கட்டுரை போல திரண்டு வரும். ரோஹித் இனானி என்பவர் பேட்டி கண்டிருக்கிறார். நல்ல கேள்விகள்.சிறந்த பதில்கள்.

நேர்காணலின் முக்கிய நோக்கம் இந்தியாவின் உற்பத்தித் துறை பற்றியது. ஹா-ஜூன் சாங் தென் கொரியாவுடன் ஒப்பிட்டு இந்தியா தொழிற்துறையில் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்று கூறுகிறார். இந்தியாவில் தொழில் மயமே நிகழவில்லை என்கிறார். ஏன் இந்திய மக்களுக்கு தேவையான ஷூக்கள், ஜீன்ஸூகள் போன்ற அடிப்படை பண்டங்களை உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டக்கூடாது என்று கேள்வி கேட்கிறார்.ஒரு துறை வளர வேண்டும் என்றால் அந்தத் துறையில் அந்நிய முதலீட்டை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.தென் கொரியாவில் ஹூண்டாய் நிறுவனம் வளர்ந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சமமாக மாறும் வரை அங்கே அந்த அரசு அதை பாதுகாத்தது என்று சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவில் சேவைத்துறை தான் வளர்ந்திருக்கிறது. ஆனால் அதில் கூட மெக்கென்சி போன்ற ஒன்று உருவாகவில்லை என்று சொல்கிறார். உற்பத்தித் துறையின் வளர்ச்சியே தொழில்மயம் என்பது அவரது வாதம்.இந்தியாவின் மொத்த ஜிடிபியில் பன்னிரெண்டிலிருந்து பதிமூன்று சதவிகிதம் தான் உற்பத்தித் துறையின் பங்கு என்கிறார்.

இதற்கான முக்கிய காரணம் இந்தயாவின் பணக்கார சிண்டிகேட்டுகள் தான் என்பது அவரது எண்ணம்.உற்பத்தித் துறை உடனே வளராது. அதற்கு பல பத்தாண்டுகள் தேவைப்படும். இவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை.உடனடியாக பங்குச் சந்தையில் லாபம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உற்பத்தித் துறை வளர முதலீடும் பொறுமையும் தேவைப்படுகிறது. அது இங்கே நிகழவில்லை என்கிறார். இப்போதும் தாமதம் இல்லை , தொடங்கலாம் என்று சொல்கிறார்.

நல்ல நேர்காணல்.


Bad Girl


சரவணகார்த்திகேயன் Bad Girl திரைப்படம் பற்றி எழுதியிருப்பதை படித்த போது இதைக் குறித்து என் எண்ணங்களை பகிரலாம் என்று தோன்றியது. ஒரு பதின் வயது ஆண் பள்ளியில் ஒரு பெண்ணை விரும்பி , பின்னர் கல்லூரியில் காதலில் ஆழ்ந்து , புத்தி பேதலித்து , கோமாளியாகி , பின்னர் அதிலிருந்து மீண்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து அதுவும் தோற்றுப் போய் முப்பதுகளின் முற்பகுதியில் தலை வழுக்கையாகி தொந்தி பெருத்து உடல் சீரழிந்து கிடக்கலாம் என்றால் அதைத் திரைப்படமாக உருவாக்கலாம் என்றால் ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக்கி அதே போன்ற கதையை சொல்லலாம்.

இருத்தலியம் என்பது சுதந்திர விருப்புறுதியை குறித்து பேசும் கோட்பாடு.நாம் ஒன்றை தேர்வதற்கான சுதந்திரம். நீங்கள் வேலையில் தொடர்வதற்கு , திருமணம் செய்து கொள்வதற்கு , ஓட்டு செலுத்துவதற்கு, தோசை சாப்பிடுவதற்கு நீங்கள் தான் பொறுப்பு. அமைப்பு அல்ல. ஒன்றை செய்வதற்கும் செய்யயாமல் இருப்பதற்கும் முழு சுதந்திரம் ஒருவருக்கு உண்டு. பின்னர் அதைச் சுமக்கும் எடையும் அவருடையது தான். விதி, ஊழ், சட்டம், குடும்பம், மரபு, அப்பா, அம்மா , என் தங்கை கல்யாணி என்றெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. எல்லா சூழ்நிலைகளிலும் எத்தனை கையறு நிலையிலும் நமக்கு ஒரு தேர்வு இருக்கிறது. அந்தத் தேர்வின் விளைவுகளும் நமதே. சாராம்சம் என்று எதுவும் இல்லை. இருத்தல் அனைத்து சாராம்சங்களுக்கும் முந்தையது. இதுதான் இருத்தலியம்.

Bad Girl திரைப்படத்தில் அந்தப் பெண் பதின் வயதில் ஒருவன் மீது ஆர்வம் கொள்கிறாள். பின்னர் கல்லூரியில் ஒருவனை தீவிரமாக காதலித்து ஏமாற்றப்படுகிறாள்.அல்லது ஏமாற்றப்படுவதாக உணர்கிறாள்.அதிலிருந்து மீண்டு வேறொரு உறவில் சில காலம் இருந்து அதிலும் கசப்புற்று தனித்து வாழ்கிறாள். இதை ஐம்பதுகளின் பெண் செய்திருக்க முடியாது. இத்தகைய வாழ்வை நிகழ்த்த அவளுக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. சுதந்திரம் என்பது சாதிப்பதற்கு மட்டுமானது அல்ல, சிதைவதற்கும் தான். அது பெண்ணுக்கும் உண்டு.ஆண் ஒருவன் பெண்ணை நம்பி ஏமாந்து தேவதாஸாக இருக்க முடியும் என்றால் அது குறித்து நமக்கு பச்சாதாபம் ஏற்படலாம் என்றால் காலம் தோறும் அதைக் குறித்து கதைகளும் , கட்டுரைகளும் , நாவல்களும் படைக்கலாம் என்றால் பெண் பாத்திரம் மீது அத்தகைய கதைகளை உருவாக்கலாம்.

தி.ஜானகிராமனின் மரப்பசு அம்மணி என்ற பெண்ணைப் பற்றியது. அதில் அம்மணி கோபாலி என்ற பாடகரை சுரண்டி வாழ்வாள். பின்னர் அதுவும் சலித்துப் போய் தன் சொல்லுக்கு கட்டுப்படும் ஒருவனை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து சேர்வாள். இந்தத் திரைப்படத்தில் வரும் பெண் யாரையும் சுரண்டுவதில்லை. குழப்பத்துடன் தன் வாழ்வை எதிர்கொள்கிறாள். அதற்கான சுதந்திரம் அவளுக்கு சாத்தியமாகியிருக்கிறது. Bildungsroman வகையிலான கதை. நல்ல திரைப்படம்.மரப்பசுவை விட நல்ல ஆக்கம்.

 


இலக்கியமும் லெளகீகமும்


பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுத்தாளர்கள் நல்ல வேலையிலிருந்து கொண்டு தங்கள் எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்று தன் பதிவு ஒன்றில் கூறியிருக்கிறார். அவர் இதை நல்ல நோக்கத்தோடு தான் சொல்லியிருக்கிறார்.ஆனால் இலக்கியம் என்பது அடிப்படையில் ஒரு முரணிலிருந்து தோன்றவது.சமூக , பொருளாதார, அரசியல் , உயிரியல் முரண்கள் தான் ஒருவனை எழுத வைக்கும். The Strange case of Billy Biswas என்ற நாவல் அருண் ஜோஷி என்பவரால் எழுதப்பட்டது. அது சிறந்த இலக்கிய ஆக்கம்.அதை எழுதியவர் ஒரு நிறுவனத்தை நிர்வகித்தவர்.செல்வந்தர்.அந்த நாவலே நீதிபதிகள், அரசு உயரதிகாரிகளின் உலகிலிருந்து பிறழ்ந்து போகும் பில்லி பிஸ்வாஸை பற்றியது தான். அவரில் உள்ள முரண் தான் அந்தக் கதையை எழுத வைக்கிறது. அந்த அக சமநிலையின்மை தான் தத்துவமாகவும் , இலக்கியமாகவும் பரிணமிக்கிறது.

ஓர் இலக்கிய ஆக்கத்தை உருவாக்குபவனின் அக உலகமும் அவனது அன்றாட உலகமும் வெவ்வேறு தளங்களில் இருக்கின்றன.அவன் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஓரே நாளில் சென்று வருவது ஒரு உடலை கோட்ஸ்டாண்டில் மாட்டிவிட்டு மற்றொன்றை சூட்டிக்கொள்வது போலத்தான்.அது கடினம்.அந்தக் கடினமான காரியத்தை செய்து தான் பலரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.கார்ல் யுங் ஒரு கலைஞனின் அகப் போராட்டங்கள் பற்றிய நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறார். அவன் ஒரு சமூக மனிதனாக இருக்கும் அதே நேரத்தில் ஓர் எழுத்தாளனாகவும் இருப்பதின் உள்ளார்ந்த தவிப்பை, பகுதிகளாக துண்டாடப்படுதலை அவர் அதில் சொல்லியிருப்பார். 

ஜி.நாகராஜனுக்கு இருந்த திறன்களுக்கு அவர் பெரும் அரசியல் தலைவர், பத்திரிக்கையாளர் , கல்லூரித் தாளாளர் என்று பல்வேறு தளங்களுக்கு சென்றிருக்க முடியும்.ஆனால் அது சாத்தியமாகவில்லை.ஓர் எழுத்தாளன் தன் சதைத் துண்டின் துணைக்கொண்டு தான் எழுத முடியும். தீமையை தரிசிக்காத எவனும் எழுத்தாளனாக முடியாது.

அதே நேரத்தில் கலைகள் மனிதனை உய்விக்கும் , மெய்விக்கும் என்று எல்லாம் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை.அதை மக்கள் கொண்டாட  வேண்டும் , போற்ற வேண்டும் என்றெல்லாம் எண்ண இயலாது. வரலாற்றில் கலைஞர்கள் எப்போதும் வணிகர்கள் போல செல்வந்தராக இருக்கவில்லை.அவர்களுக்கு புரவலர்கள் இருந்திருக்கலாம்.இன்று இல்லை.இரண்டாம் உலகப் போரின் போது போலந்தின் ஆளுநராக இருந்தவர் ஹான்ஸ் ப்ராங்க்.அப்போது அங்கே அவர் தலைமையில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர் இசை மீது பித்து கொண்டிருந்தார். அவரே இசைக் கருவிகளை வாசிக்ககூடியவராகவும் இருந்தார். சிறந்த ஓவியங்களை சேகரித்திருக்கிறார்.அதனால் மனிதாபிமானத்திற்கும் கலைக்கும் தொடர்பில்லை. 

இலக்கியம் மதிப்பீடுகளை , விழுமியங்களை உருவாக்கும் சித்தாந்த ஏடு அல்ல.அது அடிப்படையில் ஓர் ஆவணம்.ஆனால் செய்தித்தாள் ஆவணம் அல்ல.ஒரு செயலின் மீது மக்களிடமிருக்கும் தாக்கத்தை குறைக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்று தான்.அதை புள்ளி விபரங்களாக மாற்ற வேண்டும்.கடந்த பத்து வருடங்களில் ஐம்பது ரயில் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டாயிரம் மக்கள் இறந்திருக்கிறாரகள் என்ற புள்ளிவிபரம் எந்த விளைவையும் உருவாக்காது. அதிகாரிகளுக்கு திட்டங்கள் தீட்ட இவை உதவியாக இருக்கும். ஆனால் வாசிப்பவர் இதை அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மறந்து போய்விடுவார். 

இலக்கியம் அந்த புள்ளியியலின் மறு பக்கத்தில் நிகழ்வது.கொரோனா காலத்தில் நிகழ்நத எத்தனையோ இன்னல்களை அவலங்களை செய்திக் கட்டுரைகள் முன்னரே பேசியிருக்கின்றன.ஆனால் Homebound திரைப்படம் அதை நிகழ்த்துகிறது. அந்த நிகழ்த்துதல் ஓர் அக சமநிலையின்மையை பார்வையாளரிடம் ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் தன் வாழ்வின் சாயலிலிருந்த சந்தன் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பதை சொல்லியிருக்கிறார்.எந்த நல்ல ஆக்கத்திலும் அந்தக் கலைஞனின் குருதி படிந்தே இருக்கும்.முழு நேர எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்பது முழுமையாக அந்த சிருஷ்டியில் திளைத்திருப்பதற்கான அவா.அது சாத்தியமில்லாத போது புலம்பலாம்.தவறில்லை.