2025



 
சில ஆண்டுகளாக பெங்களூரில் வீடு வாங்க முயன்று கொண்டிருந்தேன்.அநேகமாக அடுத்த வருடத் தொடக்கத்தில் வீடு பதிவாகிவிடும் என்று நினைக்கிறேன். பெங்களூரில் வீட்டு வாடகை வருடா வருடம் எகிறிக் கொண்டே போகிறது. நாற்பதாயிரம் , ஐம்பதாயிரம் எல்லாம் எளிதாகிவிட்டது. இதற்கு பதிலாக வீட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணம் சில வருடங்களாக இருந்து வந்தது. என் பட்ஜெட்டுக்குள் கோரமங்களாவில் வீட்டைத் தேடிப் பிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.இறுதியில் எப்படியோ ஓர் இல்லத்தை கண்டுபிடித்தேன்.இந்த அடுக்கக இல்லத்திற்கான வங்கிக் கடன் வாங்க அலைந்த போது தனிச்சொத்து பற்றி ஓரளவு புரிந்தது.வருங்காலத்தில் இதை வைத்தே நாவல் கூட எழுதலாம்.

இந்த வருடம் அதிகம் எழுதவும் இல்லை , வாசிக்கவும் இல்லை.இரண்டு மூன்று கட்டுரைகள் , ஒரு சிறுகதை எழுதினேன். வேலைப் பளூ அதிக அளவில் இருந்தது.இன்னும் நான்கு கதைகள் எழுதி முடித்தால் அடுத்த சிறுகதைத் தொகுப்பை கொண்டு வரலாம்.தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இன்னும் மூன்று கட்டுரைகள் எழுத வேண்டும்.வரும் வருடத்தில் எப்படியும் ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதிவிடுவேன்.மனித உரிமைகள் , சாதி அமைப்பு ஆகியவற்றைப் பற்றி எழுதிய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக கொண்டு வர சாத்தியமுள்ளது.

வாசிப்பு,அதைச் சார்ந்த சிந்தனை, எழுத்து என்று மட்டும் வாழக் கூடிய ஜீவிதம் அமைந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இப்போதைக்கு அத்தகைய வாழ்க்கைக்கான சாத்தியம் இல்லை.இன்று வளர்ந்து வரும் செயற்கை அறிவுத்திறன் மென்பொருள் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று பலரும் ஆருடம் கூறுகிறார்கள்.எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிரல்மொழிகள் எழுதுவது இனி மிகவும் எளிது.மிகவும் சிரமப்பட தேவையில்லை.அடுத்த ஓரிரு வருடங்களில் அதன் தாக்கம் வெகுவாக புலப்படும்.

இன்று குழந்தைகளுக்கு விளையாட நல்ல வெளிகள் இல்லை.நண்பர்கள் இல்லை.சுற்றம் இல்லை.அதனால் முடிந்த வரை என் குழந்தைகளுக்கு விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் அவர்களை என் மனைவியின் கிராமத்திற்கு அனுப்பிவிடுகிறேன்.திருமணம் நடந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. நிலையற்று எப்போதும் மிகுந்த பதற்றத்துடனும் , குழப்பத்துடனும் மட்டுமே இருக்கும் எனக்கு என் மனைவியின் கனிவும் பொறுமையும் இளைப்பாறுதலாக அமைந்திருக்கிறது.என் எல்லா கேள்விகளையும் அவரிடம் கொட்டிவிடுவேன்.அவர் சோர்ந்துவிடுவார்.நான் உற்சாகமாகிவிடுவேன்.

மூன்று வாரம் அலுவலகப் பணிநிமித்தமாக ஆஸ்திரேலியா சென்று வந்தேன்.முதல் வெளிநாட்டுப் பயணம்.அங்கு கடைகள் மாலை ஐந்தாறு மணிக்கே மூடிவிடுகிறார்கள் என்பது மிகுந்த வியப்பை அளித்தது.மதுரையில் முரளி நடத்திய இருத்தலிய வகுப்புகளுக்கு சென்றேன்.எனக்கு அந்தப் பயிலரங்குகள் பயனுள்ளதாக அமைந்தன.பூக்கோவை வாசித்து வருகிறேன்.அதிகாரத்தை அவர் எதிர்மறையாக பார்க்கவில்லை.அது எனக்கு நல்ல கோணமாக தெரிந்தது.கே.பாலகோபாலின் எண்ணங்களை இந்த வருடத்தில் மேலும் நன்கு புரிந்து கொண்டேன்.காஸாவில் போர் இப்போதைக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.இது மேலும் நிலை பெற்று அந்த மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வு அமைய வேண்டும்.மேற்குக் கரையும் , காஸாவும் இணைந்த பாலஸ்தீனத் தனி நாடு அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.இஸ்ரேலின் மீறல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் சமத்துவமும் சகோதரத்துவமும் சுதந்திரமும் தூலம் பெற வேண்டும்.அதற்கு சிவில் சமூகம் போராட வேண்டும்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

புகைப்படம் - Tanya Nikan on Unsplash


கே.பாலகோபால்

 

கே.பாலகோபால்


  

2009 ஆம் ஆண்டு நான் ஒரு குறும்படம் எடுக்க முயன்று கொண்டிருந்தேன். அப்போது அருண்மொழி இன்று மாலை எல்எல்ஏ பில்டிங்கில் நடக்கும் கூட்டத்திற்கு வந்துவிடுங்கள் , அங்கே சந்தித்து பேசலாம் என்றார். மனித உரிமை ஆர்வலர் கே.பாலகோபாலுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி கூட்டம் அது.அப்போது தான் பாலகோபால் எனக்கு அறிமுகமானார்.அவரது இரண்டு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து அ.மார்கஸ் வெளியிட்டிருந்தார்.அந்தக் காலக்கட்டத்தில் இருந்த வேலையை விட்டுவிட்டு சட்டம் படிக்கலாம் என்ற எண்ணம் எனக்கு வலுவாக இருந்தது.சில கல்லூரிகளுக்கு விண்ணபித்து நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் கூட வந்திருந்தது.அப்போது படித்த பாலகோபால் கட்டுரைகளில் நீதிபதிகள் எந்த வர்க்கத்தை பிரதிபலிக்கிறாரகள் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.உண்மையான சமூக மாற்றங்கள் அமைப்புகளால் மக்கள் இயக்கங்களின் போராட்டங்களின் வழியே நிகழ முடியும் என்று எழுதியிருந்தார்.

அப்போது வீட்டிலும் என் அம்மா சட்டம் படிக்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்து சண்டை போட்டார்.ஒரு குழப்பமான மனநிலையில் அந்த எண்ணத்தை கைவிட்டேன்.அதன் பின் அடிக்கடி பாலகோபால் எழுதிய எதாவது கிடைத்தால் படிப்பேன்.அவரின் வலைத்தளத்தில்1 சில கட்டுரைகளை படித்ததுண்டு.அவர் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் பேசிய காணொளிகளை பார்த்ததுண்டு.அவரைப் பற்றி நல்ல ஆவணப்படம் ஒன்று இருக்கிறது2.ஜோதி கத்தம் என்பவர் இயக்கியிருக்கிறார்.ஆனால் புத்தகமாக அவர் எழுத்துகளை வாசித்ததில்லை.சமீபத்தில் Understanding Fascism : Writings on Caste , Class & The State என்று பாலகோபால் எழுதிய புத்தகத்தை வாசித்தேன்.வ.கீதா தொகுத்து அறிமுகம் செய்திருக்கிறார்.பெரும்பாலும் அவர் இ.பி.டபுள்யூவில் எழுதிய கட்டுரைகள்.

கே.பாலகோபால் தெலுங்கு பிராமணர்.திருப்பதியில் இளங்கலை கணிதம் கற்று பின்னர் வாரங்கல்லில் மண்டல பொறியியல் கல்லூரியில் முதுகலையும் முனைவர் பட்டமும் பெற்றார்.அதையடுத்து இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் முதுமுனைவ ஆய்வாளாராக சேர்ந்தார்.ஒன்றரை வருடம் கழித்து வாராங்கல்லுக்கே திரும்பினார்.அங்கே அவர் படித்த கல்லூரியிலேயே கணித ஆசிரியராக சேர்ந்தார்.மார்க்ஸியத்தின் அறிமுகம் கிடைத்தப் பின்னர் தன்னை மனித உரிமைகள் அமைப்புடன் இணைத்துக் கொண்டார்.அவர் களப்பணியாளராக இருந்த அதே நேரத்தில் தன் சிந்தனைகளைத் தொகுத்து தொடர்ந்து தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் எழுதக் கூடியவராகவும் இருந்திருக்கிறார்.அப்படி அவர் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

இந்தக் கட்டுரைகளின் காலம் எண்பதுகளிலிருந்து இரண்டாயிரம் வரை.இருபது வருடங்கள்.இந்தக் காலத்தில் என்டிஆர் ஆந்திரத்தின் முதலமைச்சர் ஆகிறார்.இந்தியாவில் தாராளமயமாக்கல் அறிமுகமாகிறது.வலதுசாரிகள் மேலெழுகிறார்கள்.அவர் தன் கட்டுரைகளில் நேருவின் காலத்திலிருந்து வலதுசாரிகள் எழுச்சி பெறுவதற்கான காரணங்களை தொகுத்துக் கொண்டே வருகிறார்.

இந்தியா அடிப்படையில் நிலப்பிரபுத்துவ நாடாகவே அப்போதும் இப்போதும் இருந்திருக்கிறது. 1935யில் கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டம் தான் இந்திய அரசியலமைப்பாக மாற்றம் பெற்றது என்று சிலர் சொல்வதுண்டு.ஆனால் இவை இரண்டுக்குமான முக்கிய வேறுபாடு இந்திய அரசியலைப்பில் உள்ள பகுதி மூன்றும் நான்கும். பகுதி மூன்று அடிப்படை மனித உரிமைகள் பற்றியும் பகுதி நான்கு அரசுக் கொள்கைகளைக் நெறிப்படுத்தும் காரணிகள் பற்றியதுமாக உருவாகின.

இவை இரண்டும் வானத்திலிருந்து அருளப்பட்டவை அல்ல.அவை சுதந்திரம்,சகோதரத்துவம்,நீதி,ஜனநாயகம்,சமத்துவம்,பன்மைத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.இந்த விழுமியங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து கிடைத்தன.இந்தியா அடிப்படையில் அடுக்குகளாக பகுக்கப்பட்ட படிநிலை சமூகம்.இங்கே யார் யாருக்கு மேலே யாருக்கு கீழே என்பது நன்கு உணரப்பட்ட நிலையில் தான் இருக்கிறோம்.நமக்கு சாத்தியமான புது விழுமியங்கள் இந்தப் படிநிலைகளுக்கு எதிரானவை.

நேருவின் காலத்தில் தான் இந்தியச் சமூகம் இந்தப் புதிய விழுமியங்களை ஏற்றது.அப்போதும் இங்கே நிலப்பிரபுத்துவம் அப்படியே தான் இருந்தது.அணைகள், நீர்பாசனம், பல்கலைக்கழகங்கள், பொது கட்டமைப்பு ஆகியவை இந்தியாவில் அடுத்த பதினைந்து வருடங்களில் உருவாக்கப்பட்டன. இதை இந்தியாவின் சோஷியலிச அரசு  நிகழ்த்தியது.இந்தியாவிற்கு மேற்குலக நாடுகள் உதவின.ரூபாயின் மதிப்பு குறையவில்லை.அதுவே நேருவின் காலகட்டம்.பெரிய கொந்தளிப்புகள் இல்லாத காலமாக இது அமைந்தது.

லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு இந்திரா காந்தி பொறுப்பேற்றார்.அறுபதுகளில் தான் இந்தியாவில் பசுமை புரட்சி அறிமுகமானது. ஊரகங்களுக்கான மின் இணைப்புகள், சாலை கட்டமைப்பு உருவாகி வந்தன.நிலப்பிரபுக்கள் மேலும் செல்வந்தர்களாக மாறினார்கள்.நிலச்சீர்திருத்தங்கள் பொய்த்து போயின.நிலச்சுவான்தார்கள் மக்களை மேலும் ஒடுக்கினர்.இந்திய பணக்காரர்கள் யாரும் தாங்கள் ஈட்டிய செல்வத்தை கொண்டு தொழில் தொடங்க செல்லவில்லை.இந்தியாவில் பல காலமாக அம்பாஸிடர் தான் உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.சூசுகி என்ற ஜப்பான் நிறுவனம் தான் இங்கே அடுத்த தலைமுறை கார்களை கொண்டு வர வேண்டியிருந்தது.

ஒடுக்கப்படும் மக்கள் தங்களுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை என்று வன்மம் கொண்டனர். அது நக்ஸல்பாரி இயக்கமாக உருக்கொண்டது. ஒடுக்கிய சமூகம் இந்தியா முழுமைக்கும் தனக்கான பிரதிநித்துவத்தை ஏழுபதுகளிலிருந்து தேடிக் கொண்டே இருந்தது. அது இறுதியில் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் தாராளமயமாக்கல் , உலகமயமாக்கல் வழி தன்னை விஸ்தரித்துக் கொண்டது.

இன்று மகாந்தமா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மாற்றப்பட்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.இந்தப் புதிய திட்டத்தில் மாநில அரசுகள் வருடத்தின் எந்த அறுபது நாட்களில் இந்தப் பணியை செயல்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கலாம் என்ற பிரிவு இருக்கிறது.இந்தியாவின் உயர் சாதியினர் தான் நிலப்பிரபுக்களாகவும் இருக்கின்றனர்.இவர்கள் தங்கள் நிலங்களுக்கு குறைந்த ஊதியத்தில் வேலைக்கு ஆட்கள் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.நூறு நாள் வேலைப் பணிகள் இந்த அறுவடை , நடப்பு போன்ற நாட்களில் நடந்தால் பணியாளர்களுக்கு அதை விட அதிக ஊதியத்தை தர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.இதனால் இந்த நாட்களில் இந்தப் பணிகளைத் தடை செய்தால் அது நிலப்பிரபுகளுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் அரசாங்கம் அதற்கான சட்டத்தை அமல்படுத்துகிறது.

இந்தியாவில் நிலப்பிரபுத்துவ சாதிகள் வர்க்கமாக திரண்டு அவையே பின்னர் அரசுகளாக பரிணமித்தன.இவை தான் ஊரகங்களில் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீது வன்முறையை ஏவுகின்றன. தமிழகத்தில் கீழ்வெண்மணி, ஆந்திரத்தில் கரம்சேடு என்று அது எங்கும் ஒன்று போலவே அரங்கேறின.வி.பி.சிங் காலத்தில் மண்டல் கமிஷனின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்ட போது ஊரக மேல் வர்க்கத்தினரும் அதுவரை சுதந்திரம், சமத்துவம் என்று பேசிக் கொண்டிருந்த பெருநகர மேட்டுக்குடியினரும் ஒன்றாக இணைந்து அதை எதிர்த்தனர்.

உண்மையில் இட ஒதுக்கிட்டால் என்ன தான் நிகழ்ந்து விடுகிறது.கல்வியிலும் , அரசு வேலை வாய்ப்பிலும் சிறிய சலுகை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கிறது.அவ்வளவுதான்.அரசு வேலைகள் உண்மையில் எத்தனை பேருக்கு பணிகளைத் ஏற்படுத்தித் தருகின்றன.அதுவும் குரூப் ஏ போன்ற வேலைகளில் இட ஒதுக்கீட்டின் பலன் மிகவும் குறைவு.இன்று உயர்த்தப்பட்ட சாதியில் பிறப்பதாலேயே ஒருவருக்கு சொத்து கிடைக்கிறது, அதிகார வர்க்கத்தின் தொடர்புகள் கிடைக்கின்றன, நல்ல கல்வி அமைகிறது. இவையும் ஒருவகையில் இட ஒதுக்கீடு தானே என்ற கேள்வியை எழுப்புகிறார் பாலகோபால்.வாழையடி வாழையாக அதை உண்டு செரித்து வாழும் சமூகம் இட ஒதுக்கீடு அடுத்தடுத்த தலைமுறையினருக்கே வழங்கப்படக்கூடாது என்கிறது.எத்தகைய முரணாக இவை இருக்கின்றன.ஆனால் நமக்கு இந்த முரண்கள் தெரிவதில்லை.

இதன் பின்னணியில் இருப்பது சாதியப் படிநிலையை பாதுகாத்துக் கொள்ள விரும்பும் வர்க்கத்தின் ஆர்வம் மட்டுமே.தொண்ணூறுகளுக்கு பிறகு தாராளாமயமாக்கல் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம் போன்ற விழுமியங்களும் அதை முன்னெடுக்கும் நிறுவனங்களும் மேலும் ஒடுக்கப்பட்டன.ஜாதிகள் வர்க்கமாகி வர்க்கங்கள் அரசுகளை அதன் கொள்கைகளை தீர்மானிக்கின்றன.மேலும் மேலும் மூலதனம் உயர்த்தப்பட்ட வர்க்கத்தினரிடம் மட்டும் பல்கிப் பெருகுகிறது.அவர்கள் அதைக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமூகங்களை முன்னுக்கு கொண்டு வர முனைவதில்லை.இந்தியாவில் நிலப்பிரபுக்கள் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதில்லை.கிராமங்களில் இருக்கும் முதலாளிகள் பணத்தை பைனான்ஸ் நிறுவனங்களில் போட்டு வட்டியை பெற்றுக்கொள்கிறார்கள்.நிதி நிறுவனங்களின் அநியாய வட்டியை கட்ட இயலாமல் வறியவன் மேலும் சிரமத்திற்கு உள்ளாகுகிறான்.

இன்று அரசும் வேலைகளை உருவாக்குவதில்லை.இந்தியாவின் நிலப்பிரபுக்களும் பெருநகரத்தின் மேட்டுக்குடிகளும் தொழில்களையோ , கல்வி நிறுவனங்களையோ உருவாக்குவதில்லை என்பதை நாம் கவனிக்கலாம்.ஊரகத்தில் பைனான்ஸ் நிறுவனங்கள் என்றால் பெரு நகரத்தில் இருக்கும் செல்வந்தன் பங்குச் சந்தையிலும் சேவைத் துறையிலும் முதலீடு செய்து மேலும் பணக்காரனாகிறான்.இவர்களை பிரதிநித்துவப்படுத்தும் அரசாக இந்திய அரசு இருக்கிறது.

இதில் தொண்ணூறுகளில் வலதுசாரி அரசியல் முன்னிலைக்கு வந்தது.ஏற்கனவே சமத்துவம், நீதி , சுதந்திரம், ஜனநாயகம், பன்மைத்துவம் என்ற புரியாத விழுமியங்களை சுமந்து நின்ற சமூகத்திற்கு வலதுசாரிகளின் வருகை வாகை சூடியது.இந்தியப் படிநிலை சமூகத்தை மேலும் காக்க மேலும் வலுக்க வைக்க வந்தது நான் வலதுசாரி அரசியல்.வனங்களுக்கு சென்று நக்ஸல்களை கொல்லும் அரசால் அதற்கு எந்தத் தடையும் விதிக்காத நீதித்துறையால் அயோத்தியாவில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதை தடுக்க முடியவில்லை.

பெருகும் மூலதனக் குவிப்பு மத்திய தர வர்க்கத்தினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. ஏனேனில் இங்கு மேலும் மேலும் சமத்துவமின்மை அதிகரிக்கிறது.அரசு இன்னும் இன்னும் ஆயுதங்களை குவிக்கிறது.இந்தப் பாதுகாப்பின்மையை அறுவடை செய்ய சிறந்த வழியாக மத அடிப்படைவாதம் பயன்பட்டது.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த எவருக்கும் அடிப்படையில் படிநிலை எண்ணம் இருக்கவே செய்யும். ஏனேனில் சமூகமே அப்படித்தான் இருக்கிறது. அலுவலகத்தில் , அடுக்ககத்தில், பேருந்தில் , ரயிலில் நடைபாதையில், ஷாப்பிங் மால்களில் என்று எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மா நமது அடுக்குகளாக பகுக்கப்பட்ட படிநிலை.இதனால் இந்திய மனம் எளிதில் மற்றமையை உருவாக்கிக் கொள்கிறது. நாம் பிறர் என்ற வேறுபாட்டை உருவாக்குவது இங்கு கடினமல்ல. குஜராத் கலவரத்திற்கு பிறகு அங்கு சென்று திரும்பிய பாலகோபால் அங்கு டாக்ஸி டிரைவர் , கல்லூரி மாணவி, குடும்பத் தலைவி, குமாஸ்தா என்று எல்லோர் மனதிலும் வெறுப்பு உமிழ்வதை பார்த்து துயரற்று போகிறார்.

இந்தக் காழ்ப்பு எதனால் உருவாகுகிறது. அதற்கான அடிப்படை என்ன. ஒன்றுமில்லை.அவர்களின் உடை , பழக்கங்கள், உணவு , கடவுள் வேறாக இருக்கின்றன. இது வெறுப்புக்கு போதுமானதாக இருக்கிறது. இந்தக் காழ்ப்பை கொள்முதல் செய்வதில் வெற்றி கண்டது வலதுசாரி அரசியல்.இன்று அவர்களுக்கு எந்த வித எதிர்ப்பும் இல்லை. நீதித்துறை எதையும் கண்டு கொள்வதில்லை.அவர்களும் மேட்டுக்குடி வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவே தீர்ப்புகளை எழுதுகின்றனர்.இத்தனை ஒடுக்குதல்களை எதிர்த்து ஏதேனும் குழு முழுக்கமிட்டால் அதை அரசு ஜனநாயகம் என்ற திரைக்கு பின்னே வைத்திருக்கும் துப்பாக்கி கொண்டு சுட்டுக் கொல்கிறது.

இந்தியாவில் நக்ஸல்பாரி என்ற ஊரில் தொடங்கிய போராட்டம் ஆந்திரா , பிஹார் என்று பல்வேறு மாநிலங்களுக்கு பரவியது.பொதுவாக இவர்கள் எம்எல் என்று அடையாளப்படுத்தப்பட்டனர்.இதில் சில பிரிவுகள் இன்று ஜனநாயக பாதைக்கு வந்து விட்டன.இன்னும் ஆயுத போராட்டத்தை தொடரும் மாவோயிஸ்டுகள் காடுகளில் கொல்லப்படுகின்றனர்.கிட்டத்தட்ட அந்த இயக்கம் முடிவுக்கு வரும் நிலையில் தான் இருக்கிறது.ஆனால் கொல்லப்படும் அனைவரும் இந்தியக் குடிமகன்கள் தான் என்பதும் உண்மைதான்.ஏன் நக்ஸல்பாரி இயக்கங்கள் உருவாகின , அந்தக் காரணங்கள் தீர்க்கப்பட்டனவா என்பது குறித்து இந்தியச் சமூகத்திற்கு எந்தக் கேள்வியும் இல்லை.

ஒரு புறம் மக்களின் பாதுகாப்பின்மையை வலுவான அரசு என்ற பிம்பம் கொண்டு மாயம் செய்யும் அரசு மறுபுறம் அந்தப் பாதுகாப்பின்மைக்கு செறித்துக் கொள்ளும் வகையில் மற்றமைகளை உருவாக்கி தருகின்றது.அதைக் கொண்டு அவர்கள் தங்கள் நாளை செவ்வனே கழிக்கிறார்கள்.அரசுகள் நிலப்பிரபுக்களுக்கும் , உயர் வர்க்கத்தினருக்கும் தேவையான திட்டங்களை தீட்டி அவர்களை மகிழ்விக்கின்றன.அதன் மூலம் தன் அரசை காத்துக்கொள்கின்றன.

இறுதியில் இந்தியாவின் படிநிலை காக்கப்படுகின்றது.இது வலதுசாரி சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை.அடுக்ககப் படிநிலை சீர்குலைக்கப்படுவது தான் இந்தியாவில் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்று வலதுசாரிகள் வாதாடுகிறார்கள்.அது நிலைநிறுத்தப்படுவதும் அதற்கான சூழலை உருவாக்குவதும் தான் அரசின் வேலை. இதில் வேடிக்கை என்னவென்றால் தான் சுரண்டப்பட்டாலும் மத்தியத் தர இந்தியக் குடிமகனும் ஒடுக்கப்பட்ட இந்தியக் குடிமகனும் தனக்குக் கீழே ஒருவன் இன்னும் இருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் உறங்குகிறார்கள்.இந்தியாவில் மூலதனக் குவிப்பு உயர் வர்க்கத்தினரிலிருந்து அடுத்தடுத்த வர்க்கத்தினருக்கு சென்றிருக்க வேண்டும்.அவை பகிரும் வகையிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிர் திசையில் அனைத்தும் பயனப்படுகின்றன.

விழுமியங்களை நிறுவனங்கள் தான் பிரதிபலிக்கின்றன.நீதி என்ற விழுமியம் நீதிமன்றங்களின் வழி பருண்மை வடிவத்தை அடைகின்றன என்று நாம் எண்ணுகிறோம்.சமத்துவம்,சுதந்திரம்,சகோதரத்துவம் அனைத்தும் நிறுவனங்கள் வழியே தினமும் உணரப்பட வேண்டியவை. ஆனால் அவை இல்லாமல் போவது கவலைக்குரியது என்கிறார் பாலகோபால்.ஏனேனில் ஒன்று இல்லாத போது அது பழக்கமாகி பின்னர் அதை எதிர்பார்க்கும் சுரணை குறைகிறது என்கிறார்.

ஒரு ஜனநாயக சமூகம் மாற்றுக் கருத்தை , முரண்படுதலை அங்கீகரிக்க வேண்டும்.ஏனேனில் அது தான் ஜனநாயகம்.இந்திய அரசியலமைப்பின் பத்தொன்பதாவது பிரிவு அடிப்படையில் அரசியல் சுதந்திரத்தை தான் பேசுகிறது.எனக்கு என் எண்ணத்தை சொல்ல வெளிப்படுத்த உரிமை இருக்க வேண்டும் என்பது தான் அந்தப் பிரிவின் சாரம்.

இன்று நமது அரசை எதிரத்து எதுவும் பேச முடியாது.எழுத முடியாது.அது மேலும் மேலும் வலுக் கொண்டதாக தன் பிம்பத்தை பெருத்து வைத்திருக்கிறது.வெறுமன சின்னத் துணுக்குகள் கூட மிகப்பெரிய எதிர்வினைகளை உருவாக்குகின்றன.முற்றதிகாரம் மிகத் தீவிர நிலையில் அமலில் உள்ள சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.இந்த அரசுகள் மிசா, தடா , உபா என்ற தடுப்புச் சட்டங்களை உருவாக்கி முரண்படுவர்களை சிறையில் பல காலம் இருக்க வைக்கிறது. மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்படுகின்றனர்.பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட பலர் பிணையில் வர பல ஆண்டுகளாகின.அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை.விசாரணைகளும் தொடங்கவில்லை.

இவை அனைத்திற்கும் அடிப்படை நமது சாதிய மனநிலை.அதிலிருந்து படிநிலை உருவாகுகிறது. படிநிலையில் மேல்தளத்தில் இருப்பவர்கள் வர்க்கமாக அணிதிரள்கிறார்கள்.அவர்கள் அரசுகளை உருவாக்குகிறார்கள்.அதன் வழி தங்களை காத்துக் கொள்கிறார்கள்.இதற்கு எதிரான வலுவானத் தரப்பு உருவாகாத வரை இங்கு மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை.நமது பெருந்தலைவர்கள் உருவாக்கிக் கொடுத்த உயர் விழுமியங்கள் காணாமல் போவதை பார்த்துக் கொண்டிருக்க போகிறோம்.

பாலகோபால் தன் கட்டுரைகளின் வழி தன் சிந்தனைகளை மிகக் கோர்வையாக தொகுத்தளிக்கிறார்.அவர் எண்பதுகளில் சொன்ன பல பார்வைகள் இன்று மேலும் தூலம் பெற்றிருக்கின்றன.அவர் முதலில் ஏபிசிஎல்சி (APCLC) என்ற அமைப்பில் இருந்தார்.வாராங்கல்லில் மருத்துவர் ராமனாதன் கொல்லப்பட்ட பின்னர் அங்கிருப்பது பாதுகாப்பல்ல என்று அவரை ஐதராபாத் அழைத்து வந்தனர்.தொடர்ந்து சில காலம் கண்ணபிரானுடன் இணைந்து பணியாற்றிவர் பின்னர் அதில் கருத்து வேறுபாடு உருவாகி தனி அமைப்பை (Human Rights Forum) உருவாக்கினார்.கல்லூரி வேலை போனதால் சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றினார்.அவர் 2009யில் காலமானார்.

இந்தப் புத்தகம்3 கீதா ராமசாமி நடத்திவரும் ஐதராபாத் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் ஆங்கிலப் பதிப்பான செளத் சயிட் புக்ஸ் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு:

1 – பாலகோபாலின் வலைத்தளம் - https://balagopal.org/

2 - பாலகோபால் பற்றிய ஆவணப்படம் - K.Balagopal - The Man, The Movement and The Moral Compass

3 - புத்தகத்தின் பெயர் – Understanding Fascism – Writings on Caste Class & State – K. Balagopal – Curated and Introduced by V.Geetha. South Side Books.

4   -  புகைப்படம்  - இந்த காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது - Democracy dialogues- Interview of Dr. K Balagopal (part 2)

 

 

இந்தியாவில் உற்பத்தித் துறை

 

பொருளாதார நிபுணர் ஹா-ஜூன் சாங்கின் (Haa-Joon Chang) நேர்காணல் சமீபத்திய பிரண்ட்லைன் இதழில் வந்திருக்கிறது. இது போன்ற உரையாடல்களில் பேட்டி எடுப்பவருக்கு தன் கேள்விகளை சரியாக தொகுத்துக் கொள்ளத் தெரிந்திருந்தால் , அதிலிருந்து விலகாமல் இருக்க முடிந்தால் நேர்காணல்களே கட்டுரை போல திரண்டு வரும். ரோஹித் இனானி என்பவர் பேட்டி கண்டிருக்கிறார். நல்ல கேள்விகள்.சிறந்த பதில்கள்.

நேர்காணலின் முக்கிய நோக்கம் இந்தியாவின் உற்பத்தித் துறை பற்றியது. ஹா-ஜூன் சாங் தென் கொரியாவுடன் ஒப்பிட்டு இந்தியா தொழிற்துறையில் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்று கூறுகிறார். இந்தியாவில் தொழில் மயமே நிகழவில்லை என்கிறார். ஏன் இந்திய மக்களுக்கு தேவையான ஷூக்கள், ஜீன்ஸூகள் போன்ற அடிப்படை பண்டங்களை உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டக்கூடாது என்று கேள்வி கேட்கிறார்.ஒரு துறை வளர வேண்டும் என்றால் அந்தத் துறையில் அந்நிய முதலீட்டை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.தென் கொரியாவில் ஹூண்டாய் நிறுவனம் வளர்ந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சமமாக மாறும் வரை அங்கே அந்த அரசு அதை பாதுகாத்தது என்று சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவில் சேவைத்துறை தான் வளர்ந்திருக்கிறது. ஆனால் அதில் கூட மெக்கென்சி போன்ற ஒன்று உருவாகவில்லை என்று சொல்கிறார். உற்பத்தித் துறையின் வளர்ச்சியே தொழில்மயம் என்பது அவரது வாதம்.இந்தியாவின் மொத்த ஜிடிபியில் பன்னிரெண்டிலிருந்து பதிமூன்று சதவிகிதம் தான் உற்பத்தித் துறையின் பங்கு என்கிறார்.

இதற்கான முக்கிய காரணம் இந்தயாவின் பணக்கார சிண்டிகேட்டுகள் தான் என்பது அவரது எண்ணம்.உற்பத்தித் துறை உடனே வளராது. அதற்கு பல பத்தாண்டுகள் தேவைப்படும். இவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை.உடனடியாக பங்குச் சந்தையில் லாபம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உற்பத்தித் துறை வளர முதலீடும் பொறுமையும் தேவைப்படுகிறது. அது இங்கே நிகழவில்லை என்கிறார். இப்போதும் தாமதம் இல்லை , தொடங்கலாம் என்று சொல்கிறார்.

நல்ல நேர்காணல்.


Bad Girl


சரவணகார்த்திகேயன் Bad Girl திரைப்படம் பற்றி எழுதியிருப்பதை படித்த போது இதைக் குறித்து என் எண்ணங்களை பகிரலாம் என்று தோன்றியது. ஒரு பதின் வயது ஆண் பள்ளியில் ஒரு பெண்ணை விரும்பி , பின்னர் கல்லூரியில் காதலில் ஆழ்ந்து , புத்தி பேதலித்து , கோமாளியாகி , பின்னர் அதிலிருந்து மீண்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து அதுவும் தோற்றுப் போய் முப்பதுகளின் முற்பகுதியில் தலை வழுக்கையாகி தொந்தி பெருத்து உடல் சீரழிந்து கிடக்கலாம் என்றால் அதைத் திரைப்படமாக உருவாக்கலாம் என்றால் ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மையாக்கி அதே போன்ற கதையை சொல்லலாம்.

இருத்தலியம் என்பது சுதந்திர விருப்புறுதியை குறித்து பேசும் கோட்பாடு.நாம் ஒன்றை தேர்வதற்கான சுதந்திரம். நீங்கள் வேலையில் தொடர்வதற்கு , திருமணம் செய்து கொள்வதற்கு , ஓட்டு செலுத்துவதற்கு, தோசை சாப்பிடுவதற்கு நீங்கள் தான் பொறுப்பு. அமைப்பு அல்ல. ஒன்றை செய்வதற்கும் செய்யயாமல் இருப்பதற்கும் முழு சுதந்திரம் ஒருவருக்கு உண்டு. பின்னர் அதைச் சுமக்கும் எடையும் அவருடையது தான். விதி, ஊழ், சட்டம், குடும்பம், மரபு, அப்பா, அம்மா , என் தங்கை கல்யாணி என்றெல்லாம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. எல்லா சூழ்நிலைகளிலும் எத்தனை கையறு நிலையிலும் நமக்கு ஒரு தேர்வு இருக்கிறது. அந்தத் தேர்வின் விளைவுகளும் நமதே. சாராம்சம் என்று எதுவும் இல்லை. இருத்தல் அனைத்து சாராம்சங்களுக்கும் முந்தையது. இதுதான் இருத்தலியம்.

Bad Girl திரைப்படத்தில் அந்தப் பெண் பதின் வயதில் ஒருவன் மீது ஆர்வம் கொள்கிறாள். பின்னர் கல்லூரியில் ஒருவனை தீவிரமாக காதலித்து ஏமாற்றப்படுகிறாள்.அல்லது ஏமாற்றப்படுவதாக உணர்கிறாள்.அதிலிருந்து மீண்டு வேறொரு உறவில் சில காலம் இருந்து அதிலும் கசப்புற்று தனித்து வாழ்கிறாள். இதை ஐம்பதுகளின் பெண் செய்திருக்க முடியாது. இத்தகைய வாழ்வை நிகழ்த்த அவளுக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. சுதந்திரம் என்பது சாதிப்பதற்கு மட்டுமானது அல்ல, சிதைவதற்கும் தான். அது பெண்ணுக்கும் உண்டு.ஆண் ஒருவன் பெண்ணை நம்பி ஏமாந்து தேவதாஸாக இருக்க முடியும் என்றால் அது குறித்து நமக்கு பச்சாதாபம் ஏற்படலாம் என்றால் காலம் தோறும் அதைக் குறித்து கதைகளும் , கட்டுரைகளும் , நாவல்களும் படைக்கலாம் என்றால் பெண் பாத்திரம் மீது அத்தகைய கதைகளை உருவாக்கலாம்.

தி.ஜானகிராமனின் மரப்பசு அம்மணி என்ற பெண்ணைப் பற்றியது. அதில் அம்மணி கோபாலி என்ற பாடகரை சுரண்டி வாழ்வாள். பின்னர் அதுவும் சலித்துப் போய் தன் சொல்லுக்கு கட்டுப்படும் ஒருவனை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து சேர்வாள். இந்தத் திரைப்படத்தில் வரும் பெண் யாரையும் சுரண்டுவதில்லை. குழப்பத்துடன் தன் வாழ்வை எதிர்கொள்கிறாள். அதற்கான சுதந்திரம் அவளுக்கு சாத்தியமாகியிருக்கிறது. Bildungsroman வகையிலான கதை. நல்ல திரைப்படம்.மரப்பசுவை விட நல்ல ஆக்கம்.

 


இலக்கியமும் லெளகீகமும்


பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுத்தாளர்கள் நல்ல வேலையிலிருந்து கொண்டு தங்கள் எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்று தன் பதிவு ஒன்றில் கூறியிருக்கிறார். அவர் இதை நல்ல நோக்கத்தோடு தான் சொல்லியிருக்கிறார்.ஆனால் இலக்கியம் என்பது அடிப்படையில் ஒரு முரணிலிருந்து தோன்றவது.சமூக , பொருளாதார, அரசியல் , உயிரியல் முரண்கள் தான் ஒருவனை எழுத வைக்கும். The Strange case of Billy Biswas என்ற நாவல் அருண் ஜோஷி என்பவரால் எழுதப்பட்டது. அது சிறந்த இலக்கிய ஆக்கம்.அதை எழுதியவர் ஒரு நிறுவனத்தை நிர்வகித்தவர்.செல்வந்தர்.அந்த நாவலே நீதிபதிகள், அரசு உயரதிகாரிகளின் உலகிலிருந்து பிறழ்ந்து போகும் பில்லி பிஸ்வாஸை பற்றியது தான். அவரில் உள்ள முரண் தான் அந்தக் கதையை எழுத வைக்கிறது. அந்த அக சமநிலையின்மை தான் தத்துவமாகவும் , இலக்கியமாகவும் பரிணமிக்கிறது.

ஓர் இலக்கிய ஆக்கத்தை உருவாக்குபவனின் அக உலகமும் அவனது அன்றாட உலகமும் வெவ்வேறு தளங்களில் இருக்கின்றன.அவன் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஓரே நாளில் சென்று வருவது ஒரு உடலை கோட்ஸ்டாண்டில் மாட்டிவிட்டு மற்றொன்றை சூட்டிக்கொள்வது போலத்தான்.அது கடினம்.அந்தக் கடினமான காரியத்தை செய்து தான் பலரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.கார்ல் யுங் ஒரு கலைஞனின் அகப் போராட்டங்கள் பற்றிய நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறார். அவன் ஒரு சமூக மனிதனாக இருக்கும் அதே நேரத்தில் ஓர் எழுத்தாளனாகவும் இருப்பதின் உள்ளார்ந்த தவிப்பை, பகுதிகளாக துண்டாடப்படுதலை அவர் அதில் சொல்லியிருப்பார். 

ஜி.நாகராஜனுக்கு இருந்த திறன்களுக்கு அவர் பெரும் அரசியல் தலைவர், பத்திரிக்கையாளர் , கல்லூரித் தாளாளர் என்று பல்வேறு தளங்களுக்கு சென்றிருக்க முடியும்.ஆனால் அது சாத்தியமாகவில்லை.ஓர் எழுத்தாளன் தன் சதைத் துண்டின் துணைக்கொண்டு தான் எழுத முடியும். தீமையை தரிசிக்காத எவனும் எழுத்தாளனாக முடியாது.

அதே நேரத்தில் கலைகள் மனிதனை உய்விக்கும் , மெய்விக்கும் என்று எல்லாம் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை.அதை மக்கள் கொண்டாட  வேண்டும் , போற்ற வேண்டும் என்றெல்லாம் எண்ண இயலாது. வரலாற்றில் கலைஞர்கள் எப்போதும் வணிகர்கள் போல செல்வந்தராக இருக்கவில்லை.அவர்களுக்கு புரவலர்கள் இருந்திருக்கலாம்.இன்று இல்லை.இரண்டாம் உலகப் போரின் போது போலந்தின் ஆளுநராக இருந்தவர் ஹான்ஸ் ப்ராங்க்.அப்போது அங்கே அவர் தலைமையில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர் இசை மீது பித்து கொண்டிருந்தார். அவரே இசைக் கருவிகளை வாசிக்ககூடியவராகவும் இருந்தார். சிறந்த ஓவியங்களை சேகரித்திருக்கிறார்.அதனால் மனிதாபிமானத்திற்கும் கலைக்கும் தொடர்பில்லை. 

இலக்கியம் மதிப்பீடுகளை , விழுமியங்களை உருவாக்கும் சித்தாந்த ஏடு அல்ல.அது அடிப்படையில் ஓர் ஆவணம்.ஆனால் செய்தித்தாள் ஆவணம் அல்ல.ஒரு செயலின் மீது மக்களிடமிருக்கும் தாக்கத்தை குறைக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்று தான்.அதை புள்ளி விபரங்களாக மாற்ற வேண்டும்.கடந்த பத்து வருடங்களில் ஐம்பது ரயில் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டாயிரம் மக்கள் இறந்திருக்கிறாரகள் என்ற புள்ளிவிபரம் எந்த விளைவையும் உருவாக்காது. அதிகாரிகளுக்கு திட்டங்கள் தீட்ட இவை உதவியாக இருக்கும். ஆனால் வாசிப்பவர் இதை அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மறந்து போய்விடுவார். 

இலக்கியம் அந்த புள்ளியியலின் மறு பக்கத்தில் நிகழ்வது.கொரோனா காலத்தில் நிகழ்நத எத்தனையோ இன்னல்களை அவலங்களை செய்திக் கட்டுரைகள் முன்னரே பேசியிருக்கின்றன.ஆனால் Homebound திரைப்படம் அதை நிகழ்த்துகிறது. அந்த நிகழ்த்துதல் ஓர் அக சமநிலையின்மையை பார்வையாளரிடம் ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் தன் வாழ்வின் சாயலிலிருந்த சந்தன் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பதை சொல்லியிருக்கிறார்.எந்த நல்ல ஆக்கத்திலும் அந்தக் கலைஞனின் குருதி படிந்தே இருக்கும்.முழு நேர எழுத்தாளனாக இருக்க வேண்டும் என்பது முழுமையாக அந்த சிருஷ்டியில் திளைத்திருப்பதற்கான அவா.அது சாத்தியமில்லாத போது புலம்பலாம்.தவறில்லை.

 


உடைந்து விழுந்த மேகம்



 


ஜான் மரணமடைந்த செய்தி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எண்பது வயதில் இறப்பது அத்தனை வருத்தம் தரும் செய்தி அல்ல. ஆனால் ஜானின் மரணம் எனக்குத் தொந்தரவு அளித்தது.அவனது  இன்மைச்செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.அவனது பள்ளிப் பருவம் ,அவனது அரசியல் பயணம் , அவனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு நிறைய அழைப்புகள். நான் அவனது இள வயது நண்பன்.

நான் அவனை முதல் முறை சந்தித்தது இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.ஐம்பது வருடங்கள் இருக்கும்.மறுநாள் நிகழவிருந்த போராட்டத்திற்காக கட்சி கொடிகளையும் பதாகைகளையும் வண்டியில் ஏற்ற நான் அலுவலகம் சென்றேன்.அவற்றை என் வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவு எடுத்தேன்.காலை கட்சித் தோழர்கள் வீட்டின் அருகிலிருந்த சர்க்கிளில் கூடும் போது அதை அவர்களுக்கு கொடுக்க முடிவு செய்திருந்தோம்.

வண்டி கிளம்பிப் போன பின்னர் நான் சிகரெட் எடுத்து பற்ற வைத்து அருகிலிருந்த மைதானத்தில் சென்று அமர்ந்தேன்.தை மாதம் தொடங்கிய பின்னரும் குளிர் குறையவில்லை.நான் எனது சால்வையை இறுகப் போர்த்திக்கொண்டேன்.மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் கேலரியில் யாரோ படுத்திருப்பது போலத் தோன்றியது.பெரிய ஜமுக்காளத்தை சுருட்டி வைத்திருப்பார்களோ என்று கூட நினைத்தேன்.ஆறடிக்கும் நீளமான உருவம்.நான் அருகில் சென்று அது ஜமுக்காளமா அல்லது ஆளா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

அருகில் சென்ற போது அது ஒரு மனிதன் தான் என்பது உறுதியானது.கனமான போர்வை ஒன்றை போர்த்தியவாறு அவன் உறங்கிக் கொண்டிருந்தான்.இவன் இந்த நகரத்து ஆசாமி அல்ல என்பது எனக்குப் புரிந்துவிட்டது.இந்த நகரத்து பிச்சைகாரர்கள், பொறுக்கிகள் கூட இந்தக் குளிரில் இப்படியான வெட்டவெளியில் படுக்கத் துணிய மாட்டர்கள்.அவன் தலைக்குத் தனது ஜோல்னா பையை வைத்திருந்தான்.கீழே ஒரு வஸ்திரத்தை விரித்திருந்தான்.மூக்குக் கண்ணாடியோட தூங்கிக்கொண்டிருந்தான்.நான் அவன் தலைமாட்டின் அருகே உட்கார்ந்தேன்.அவனது தோள்பட்டையில் லேசாக தட்டினேன்.அவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.மெல்ல அவனைப் பற்றி உலுக்கிய போது எழுந்து கொண்டான்.என்னைப் பார்த்ததும் சற்று திடுக்கிட்டான்.அவனது இடது கையை கொண்டு தலையை சரி செய்து மூக்குக் கண்ணாடியை கழற்றி மாட்டினான்.

“யார் நீங்கள்”

“நான் ஜான்.”

“இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.”

“தூங்கிக் கொண்டிருக்கிறேன்”

நான் சிரித்தேன்.அவனும் சிரித்தான்.அவனை எங்கோ பார்த்திருப்பதை சொன்னேன்.என் பெயர் பரதன் தானே என்று கேட்டான்.உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.அலுவலகம் மூடியிருந்தது.நான் நகருக்கு புதிது. எங்கு செல்வது என்று தெரியவில்லை.இங்கு வந்து சற்று கண் அயர்ந்தேன்.அப்படியே உறங்கிவிட்டேன் என்றான்.

அவனை என் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு என் வீட்டுக்குச் சென்றேன்.பத்மா அவனுக்கு ஆலூ பரோட்டாவும் கெட்டித் தயிரும் ஊறுகாயும் எடுத்து வந்தாள்.உண்டான்.மேல் மாடியிலிருந்த ஒரு படுக்கை அறைக்கு அவனை அழைத்துச் சென்றேன். இங்கே உறங்கிக் கொள்ளலாம்.காற்றாடி ஓடாது என்றேன்.கம்பளி கொடுத்தேன்.இந்தக் குளிரில் காற்றாடி அத்தனை முக்கியமானதல்ல.மற்றவை காலையில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லி இறங்கி வந்தேன்.பத்மா உறங்கியிருந்தாள்.

மறுநாள் காலை நாங்கள் சர்க்கிளிலிருந்து பிஎம்சி கட்டடம் வரை செல்லத் திட்டமிட்டிருந்தோம்.கார்ப்பரேஷனில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கோரி கோஷம் எழுப்பியவாறு நாங்கள் சென்றோம்.ஜான் குறித்து உண்மையில் நான் மறந்து விட்டேன்.என் மனைவி பத்மா கூட பள்ளிக்குச் சென்று விட்டாள்.வீட்டில் யாருமில்லை.மேல்மாடிக்கு தனியாக செல்லும் படிக்கட்டு உண்டு.எங்கள் தொழிற்சங்கத்திற்கு இன்னும் மூன்று தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்திருந்தன.துப்புரவு பணியாளர்கள் பணி செய்யாமல் இருந்தால் நகரம் முடங்கும்.போராட்டத்தை தொடங்கி இரண்டு கீலோ மீட்டர் கூட நாங்கள் செல்லவில்லை.அனைவரும் கைது செய்யப்பட்டோம்.அருகிலிருந்த திருமண அரங்கில் எங்களை கொண்டு போய் அமர்த்தினர்.கார்ப்பரேஷன் கமிஷனர் , மேயர் வந்து பேசினார்கள்.எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

மற்ற தொழிற்சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தன.அன்றே துப்புரவு பணியாளர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.மாலை நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.வீடு திரும்பினோம்.இது இவ்வாறு தான் முடியும் என்று நாங்கள் அறிந்திருந்தோம்.இல்லம் வந்து குளித்து உடை மாற்றி நான் சற்று கண் அயர்ந்தேன்.வெளியில் ஒருவர் கம்பளி விற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.அப்போது தான் ஜான் நினைவு வந்து மேல் மாடிக்குச் சென்றேன்.அங்கே அவனைக் காணவில்லை.பத்மாவிடம் கேட்ட போது அவளுக்கும் தெரியவில்லை.

அருகிலிருந்த பெட்டிக்கடையில் சிகரேட் வாங்கச் சென்றேன். தெரு முக்கில் ஜான் ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த நான்கைத்து பேருடன் கதைத்துக்கொண்டிருந்தான். உடைந்த ஹிந்தியில் அவன் பேசுவது வேடிக்கையாக இருந்தது.என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தான்.

“சிகரெட்” ஒன்று என்று சொல்லி தனக்கும் வாங்கிக்கொண்டான். அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு என்னோடு திரும்பினான்.பேச்சு போராட்டம் பற்றித் திரும்பியது.போரட்டத்தின் தோல்வி பற்றி நான் புலம்பத் தொடங்கிய போது அவன் சொன்னான்.போராட்டங்கள் நதி போலத் தங்களின் பாதைகளை எடுத்துக் கொள்கின்றன.போராட்டங்களை எப்போது நிறுத்த வேண்டும் என்ற புரிதல் நமக்கு இருக்கு வேண்டும்.துப்புரவு பணியாளர்களுக்கான போராட்டத்தை கைவிட்டது நல்ல முடிவு தான்.அதற்கான தருணம் இன்னும் கூடிவரவில்லை.அது வரும் போது நமக்கு காற்று சமிக்ஞை அளிக்கும் என்றான்.கைதுகள் போரட்டங்களை வலுவிலக்கச் செய்யும்.வலு பெற வைக்கவும் செய்யும்.அவன் பேசியபடியே வந்தான்.அவனை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நாங்கள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் கட்சி நாளிதழை கொண்டு வந்தோம். ஆங்கில நாளிதழின் துணை ஆசிரியராக பணிபுரியத் தொடங்கினான் ஜான்.அவன் தனக்கென்று தனியாக அறை எடுத்துக் கொண்டு தங்கினான்.நாங்கள் அநேகமாக தினமும் சந்தித்துக்கொண்டோம்.ஒரு முறை அவனது அறைக்குச் சென்ற போது அங்கே இரைந்து கிடந்த புத்தகங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.பாதி திறந்து கிடந்த புத்தகங்கள் ஏதேதோ சிதறல்களுடன் கிடந்த காகிதக் குறிப்புகள் என்று அந்த அறை எனக்கு குழப்பமாக இருந்தது.அவனிடம் இது குறித்து கேட்டேன்.என் அறை சிதறிக்கிடக்கலாம் , ஆனால் என் சிந்தனையில் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்றான்.ஆங்கிலத்தில் , தெலுங்கில், ஹிந்தியில் என்று பல்வேறு மொழிகளில் படித்தான்.சில மாதங்களில் ஹிந்தியில் நன்கு உரையாடினான்.அரசியல் , சமூகவியல் , தத்துவம் ஆகிய துறைகளின் மீது ஆழமான வாசிப்பை கொண்டிருந்தான். புனைவுகளை எப்போதாவது வாசிப்பான்.துப்பறிவு கதைகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருந்தான்.காமிக்ஸ் கதைகளை பயணங்களில் படிப்பதை பார்த்திருக்கிறேன்.ஒரு முறை எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வெளியே ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்தான்.அவன் அந்தப் பெண்ணின் கணவன் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.குடிக்க பணம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான்.கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.ஜானும் நானும் அப்போது தான் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தோம். ஜான் அந்த ஆளின் அருகில் சென்றான்.அவன் ஜானை நோக்கி கத்தியை திருப்பினான்.ஜான் ஒரு கையால் அவனது மணிக்கட்டை அழுத்தி பிடித்துக்கொண்டு மறுகையால் அவன் மார்பைத் தட்டினான்.உண்மையில் அது ஏதோ கதவைத் தட்டுவது போலத்தான் இருந்தது.ஆனால் ஆச்சரியமாக அவன் தூரச் சென்று விழுந்தான்.கத்தி அவன் கைகளிலிருந்து கீழே விழுத்தது.அதை எடுத்து சாக்கடையில் எறிந்து விட்டு அந்தப் பெண்ணை பார்த்து அவன் இனி மேல் தொந்தரவு செய்தால் இங்கு வந்து சொல்லவும் என்று கூறிவிட்டு என்னுடன் வந்துவிட்டான்.அடிவாங்கியவன் நிறைய நேரம் அங்கிருந்த மரத்தடியில் மார்பை பிடித்தவாறு அமர்ந்திருந்தான்.

ஜான் சிறுவயதில் குங்பூ கற்றான்.முழுமையாக கற்றான்.ஜான் தற்காப்புக்கலைகளின் அவசியத்தை தொடர்ந்து சொல்வான்.என் வரையில் தற்காப்புகலைகள் உடல் அளவிலான தியான முறை என்றான்.ஜான் நல்ல உயரம்.கலைந்த சிகையோடே எப்போதும் இருந்தான்.அவன் ஒரு போதும் தன் உடைகளை இஸ்திரி செய்து உடுத்திக்கொண்டதில்லை.அவன் மெல்ல சட்டை ஃபேண்ட் அணிவதிலிருந்து ஜிப்பா பைஜாமாவிற்கு மாறினான்.அவன் துணிகளை அவனே துவைத்தான்.சமைத்துக்கொண்டான்.அவனுடைய தந்தையும் தாயும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.தாயார் ஹிந்து.தமிழர்.சென்னையில் கல்லூரியில் ஒன்றாக படித்த போது திருமணம் செய்து கொண்டார்கள்.தந்தை கிறிஸ்தவர்.ஐதராபாத் நகரத்தை சேர்ந்தவர்.திருமணத்திற்கு பின்னர் ஜானின் தந்தை வீட்டில் அவரின் தாயார் மரியாதையுடன் நடத்தப்படவில்லை.

இதனால் அவர் பிரிந்து சென்னைக்குச் சென்று வேலை செய்து பிள்ளைகளை வளர்த்தார். ஜான் ஓரளவு தமிழ் பேசுவான். ஆனால் அவன் தனது தாய்மொழி என்று தெலுங்கைத்தான் சொல்லிக்கொண்டான். அவனுக்கு ஐதராபாத் நகரத்தின் மீது ஆழமான வாஞ்சை உண்டு.இரயிலில் ஊருக்குச் திரும்பும் போது பெரும் பாறைக் கற்களை பார்க்கும் போதே வீட்டுக்கு சென்று விட்டதாக தோன்றும் என்பான்.சென்னையில் சில காலம் படித்து பின்னர் ஐதராபாத்தில் படிப்பைத் தொடர்ந்தான்.

உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது தான் அவனுக்கு அரசியல் அறிமுகமானது. அவன் ஒரு இடதுசாரி அமைப்பை உருவாக்கினான்.வியட்நாம் போர், கறுப்பின மக்களின் எழுச்சி , பிரான்ஸில் மாணவர் போராட்டம் , இந்தியாவில் நகஸல்பாரி அமைப்புகளின் துவக்கம், கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்புகளின் மீதிருந்த அதிருப்தி, வேலையின்மை , வறுமை என்று அன்று இளைஞர்களை வதைத்துக் கொண்டிருந்தன வெம்மையும் வாழ்வும்.

கல்லூரித் தேர்தலில் அவனுக்கும் வலதுசாரி அமைப்புகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் அவன் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டான்.அப்போது அவன் இந்தியாவிற்கு கம்யூனிஸம் சரியான பாதை அல்ல என்ற முடிவுக்கு வந்திருந்தான்.அவன் லோஹியாவை ஏற்றான்.ஆனால் சோஷியலிசம் இந்தியாவில் இறந்து பிறந்த சவலைக் குழந்தை என்றும் என்னிடம் சொல்லியிருக்கிறான்.

சோஷியலிசக் கட்சிகள் காங்கிரஸின் அங்கமாக இருந்து பின்னர் காங்கிரஸிலிருந்து வெளியேறி தனி அடையாளத்தை பெற முயன்று பின்னர் காங்கிரஸிடமே இணைந்து விடலாமா என்று சிந்தித்து இறுதியில் ஜனதா சங்கமத்தில் முடிவு கொண்டது என்று அதன் சுருக்கமான வரலாற்றை சொல்லிச் சிரிப்பான்.ஜான் பேசும் ஆங்கிலம் கேட்பதற்கு சுவராசியமாக இருக்கும்.அவன் கூர்மையானவன்.வார்த்தைகளை கோர்த்து பேசுவான்.அவனது ஆங்கிலம் அவனது சிந்தனையை மேலும் கூர்மையாக்கியது.

பெண்கள் அவன் வாழ்வில் வந்து கொண்டே இருந்தார்கள்.பல பெண்கள் அவனிடம் சரணாகதி என்று விழுந்து கிடந்தார்கள்.அவன் யாரையும் காதலிக்கவில்லை.யாரையும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கவில்லை.யாரையும் ஏமாற்றவில்லை.அவன் மீது காதலை பொழிந்தவர்களிடம் பரிவுடன் பேசி அவர்களைப் புண்படுத்தாமல் வழியனுப்பி வைத்தான். சில பெண்களுடன் அவன் உறவில் இருந்தான் என்பதும் உண்மை தான்.அவை எதுவும் நிரந்தரமான உறவுகள் அல்ல.அந்த உறவுகள் உரையாடலின் பொருட்டு உருவாகின.இனி பேசிக்கொள்ள ஒன்றுமில்லை என்றான போது அவை முடிவுக்கு வந்தன.அந்த உறவுகளுக்குப் பின்னர் அந்தப் பெண்களுக்கு ஜான் மீது புகார் ஏதும் இல்லை.ஏனேனில் அங்கே எந்தச் சுரண்டலும் இல்லை.எப்போதும் எங்கும் கொடுக்கும் நிலையிலேயே அவன் இருந்தான்.யாரிடமும் அன்பையும் , உடலையும் , பணத்தையும் அவன் யாசிக்கவில்லை.அவன் எந்தப் பெண்ணின் இருப்புக்காகவும் ஏங்கியதில்லை.அதே நேரத்தில் அவன் பெண்களுடன் உரையாடுவதை விரும்பினான் என்பதும் மெய்யே.

அவன் தன் முப்பதுகளின் துவக்கத்தில் திருமணம் செய்து கொண்டான்.அவன் வாழ்வின் முதல் சறுக்கல் அங்கு தான் தொடங்கியது என்று நினைக்கிறேன்.ஜான் அதன் பின் தன் களங்கமற்ற சிரிப்பைத் தொலைத்தான்.தனித்து அமர்ந்திருக்கையில் அவன் முகம் இறுகுவதை இருண்மை கொள்வதை பார்த்திருக்கிறேன்.நாங்கள் ஒரு நாள் கடற்கரையில் அமர்ந்திருந்த போது அவன் என்னிடம் சொன்னான்  “பரதன் , உனக்குத் தெரியுமா, உனக்கு சாத்தியப்பட்டுள்ள வாழ்க்கை மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது.காரணம் ஒன்று தான். உன் மனைவி பத்மா. எத்தனை அற்புதமான பெண் அவர்.அவர் ஒரு போதும் உன்னை இகழ்ந்து பேசி புறம் பேசி நகைத்து பேசி நான் பார்த்ததில்லை.அவர் ஒவ்வொரு முறை பேசும் போதும் அதில் உன் மீதான பிரமிப்பை அன்பை நட்பை பிரமையை பரிவை நான் பார்க்கிறேன்.அவர் உன் மீது கொண்டுள்ள அன்புக்கு நீ உன் அரசியல் வாழ்க்கையில் உண்மையானவனாக இருப்பது தான் முக்கிய காரணம்.நீ உண்மையில் மக்கள் நலனில் அக்கறை கொண்டவன் , தனிப்பட்ட வாழ்வில் நேர்மையானவன் என்பதே அந்த அன்பின் முதல் துளி என்று நான் கருதுகிறேன்.அவர் மனதில் நீ மிகப்பெரிய ஆகிருதி.உன்னை அவர் எப்போதும் ரசித்துக்கொண்டிருக்கிறார்.ஒரு நாள் உன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.நீ வீட்டிலில்லை.பத்மாவோடு எதையோ பேசிக்கொண்டிருந்தேன்.பிறகு பேச்சு உன்னைச் சுற்றி வந்தது.அவர் நீ காலை படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து பேப்பர் படிக்க அமர்வதை மிமிக் செய்து காட்டினார்.நான் வெடித்து சிரித்தேன்.அப்படியே நீ செய்வது போலவே இருந்தது.அசலாக உன் உடல்மொழியை கொண்டு வந்திருந்தார்.கை கால்களைக் கூட உன்னைப் போலவே அசைத்தார்.நான் அதிசயித்து போனேன்.ஒரு பெண்ணால் ஒரு ஆணை இந்தளவு காதலிக்க இயலுமா என்று எனக்கு உண்மையில் புரியவில்லை.எந்தளவு உன்னை அவர் உள்வாங்கி இருக்கிறார்.ஒரு ஆணுக்கு குழந்தைகள் , பெற்றோர் , சுற்றோர், நண்பர்கள் எல்லோரும் முக்கியம் தான்.ஆனால் மனைவி இருக்கிறாளே அவள் தான் முதன்மையானவள்.அவளில் தான் உண்மையில் அவனது படிமம் பொதிந்திருக்கிறது.ஒரு பெண்ணின் மார்பில் முகம் பொதித்து உறங்கும் போதும் பேரன்பின் கரங்கள் அவனை தழுவிக் கொள்ளும் போதும் அவன் மறுபடியும் கருவறைக்குள் செல்வது போன்ற பாதுகாப்பை அடைகிறான்.அவனது கர்வம் முழுக்க இல்லாமல் ஆகிறது.அல்லது அவனது கர்வம் முழுமை பெறுகிறது.மிட்டாய் சாப்பிடும் சிறு குழந்தையின் ஓர்மையை அவனுக்கு அவள் அளிக்கிறாள்.அவள் அவனை வாரிச்சுருட்டி ஒக்கலித்துக்கொள்கிறான்.உன் வாழ்க்கை அந்த வகையில் ஒளி நிரம்பியது” என்று சொன்னபடியே இருந்தான்.

உண்மையில் பத்மா என் மீது கொண்டிருந்த காதலை நான் அத்தனை தீவிரமாக அப்போது தான் உணர்ந்தேன். பத்மா என்னைக் காதலித்து தன் வீட்டைத் துறந்து திருமணம் செய்து கொண்டாள்.பத்மா ஒரு முறை ஒரே ஒரு முறை கூட என்னை காயப்படுத்தும் வகையில் பேசியதில்லை.நிறைய சலித்துக்கொள்வாள்.ஏனேனில் நிறைய அன்றாட வேலைகளை அவள் தான் செய்வாள்.எங்கள் மகன் பள்ளிக்குச் செல்வதை நான் அதிகம் பார்த்ததில்லை.அனைத்தையும் அவள் தான் பார்த்துக்கொண்டாள்.ஆனால் என்னை எதற்கும் ஏசியதில்லை.இரவில் நான் வீடு திரும்பிய பின்னர் அவள் எழுந்து ஐந்து பத்து நிமிடம் பேசிவிட்டுத்தான் உறங்கச் செல்வாள்.ஜான் சொல்வதை நான் ஏற்றேன்.நான் அதிர்ஷ்டக்காரன் தான்.

இதன் மறு பொருள் ஜான் துரதரிஷ்டசாலி.அவன் வாழ்வில் வந்தப் பெண் வெண்ணலா.தெலுங்கப் பெண்.ஜான் சில காலம் தான் அலுவலகப் பணியிலிருந்தான்.பின்னர் தொழிற்சங்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான்.துப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை அவன் முழுமையாக நிகழ்த்திக்காட்டினான்.பெருநகரத்தை முடக்கினான்.பேச்சுவார்த்தையில் அவனுக்கு வெற்றி கிடைத்தது.துப்புரவு வேலை செய்பவர்களை முழு நேரப் பணியாளர்களாக ஏற்றுக்கொள்வதாக கார்ப்பரேஷன் ஆணை பிறப்பித்தது.அவன் கூட்டங்களில் பேசும் போது உண்மையில் அங்கு தீ பற்றிக் கொள்ளும். இந்தப் போராட்டங்களின் பின் அவன் பிரபலம் அடைந்தான்.ஒரு முறை வெள்ள நிவாரணப் பணிக்காக நாங்கள் சென்றிருந்த போதுதான் அவன் அவளைச் சந்தித்தான்.அகன்ற நெற்றி.தாடை நன்றாக மடிந்திருந்தது.உதட்டின் கீழ் அழுத்தமான கோடு.அது அவளை அழகாகக் காட்டியது.கதுப்புக் கன்னங்கள்.கண்ணாடி அணிந்திருந்தாள்.சற்று குள்ளமாக தெரிந்தாள்.மாநிறம்.குட்டையான கைகள்.ஆரோக்கியமான தேகம்.சலசலவென்று பேசிக்கொண்டே இருந்தாள்.அவள் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக காத்திருந்தாள்.வெள்ள நிவாரணப் பணிக்காக ஒரு என்ஜிஓவில் இணைந்து பணிபுரிந்தாள்.அவனைப் புகழ்ந்து கொண்டே இருந்தாள்.ஒரு பெண் முதல் சந்திப்பிலேயே ஒரு ஆணிடம் எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்று எனக்கு குழப்பாக இருந்தது.ஒரு வேளை அவனை அவள் வெகுவாக காதலிக்கிறாளோ என்று கூடத் தோன்றியது.அதெப்படி முதல் சந்திப்பிலேயே காதல் தோன்றும் என்பதும் எனக்கு விளங்கவில்லை.ஏனோ அவளது முகத்தை பார்க்கும் போது எனக்குச் சர்ப்பம் நினைவுக்கு வந்தது.

ஜான் அந்தப் பெண்ணை பற்றி என்னிடம் பேசினான்.அவளை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை.ஆனால் ஏதோ சுழலில் சிக்கிக்கொண்டது போல உணர்கிறேன் என்றான்.அவன் ஐதராபாத் சென்று திரும்பி வந்த போது அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று வந்ததாகவும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினான்.எனக்கு அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை.ஆனால் நான் மறுப்பேதும் சொல்லவில்லை.

திருமணத் தேவைகளுக்கு ஒரு நாள் கூட ஜான் செலவிடவில்லை.வெண்ணலாவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாள்.பொருட்கள் வாங்கினாள்.ஜானும் வெண்ணலாவும் வீட்டுக்கு வந்து எங்களைத் திருமணத்திற்கு அழைத்தார்கள்.அப்போது வெண்ணலா ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.திருமணம் என்றால் ஏன் பெண்களின் முகங்கள் அத்தனை பொலிவு கொள்கின்றன என்பது இன்று வரை எனக்கு புரிந்ததே இல்லை.

ஒரு மழைநாளில் அவர்களுக்கு திருமணம் நிகழ்ந்தது.திருமணத்திற்கு வாங்கிய உடைகள் மழையில் முழுக்க நனைந்துவிட்டதால் அவர்கள் எளிய உடைகளில் வரவேற்புக்கு நின்றார்கள்.சடங்குகள் ஏதும் அற்ற எளிய திருமணம்.அன்று அவன் நிறைய சிரித்தான்.அவன் சிரித்த கடைசி நாள்.வெண்ணலாவின் பிரச்சனை அவளால் எதையும் கொடுக்க இயலாது என்பது தான்.அவள் அவனை உண்ண முயன்றாள்.அவனை , அவனது கனவுகளை.ஜான் மிகவும் சுதந்திரமான மன அமைப்பை கொண்டவன்.அவளின் பதின் வயது சிக்கல்கள் , தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொள்ள இயலாததின் வெறுப்பு என்று அனைத்தையும் ஜான் மீது கொட்டினாள்.அவர்களுக்கு குழந்தை பிறந்தது.அதற்கு அவர்கள் கோபாலன் என்று பெயர் வைத்தார்கள்.ஜானுக்கு கர்நாடகத்தின் கோபால கெளடா மீது மிகுந்த மதிப்பு இருந்தது.அவனுக்கு ஏ.கே.கோபாலனும் முக்கியமானவர் தான்.இந்தியன் காபி ஹவுஸின் உருவாக்கம் அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்த நிகழ்வு.ஏ.கே.கோபாலனுக்கும் மதராஸ் மாநிலத்தற்குமான வழக்கு சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்மையான மனித உரிமைகள் வழக்கு என்பான்.

குழந்தை பிறந்த பின்னர் அவள் ஐதராபாத் கிளம்பிச் சென்றாள். அதன் பின்னர் ஜான் பெரும்பாலும் தனியாகத்தான் இருந்தான்.அவனுள் ஏதோ ஒன்று உடைந்து போனது.அது அவனது அறியாமையா, குழந்தமையா என்று எனக்குத் தெரியவில்லை.ஆனால் அவனுக்குள் ஒரு சலிப்பு உண்டானது.அதற்கு முன்னர் அந்த சலிப்பு அவனிடம் இருந்ததில்லை.புரட்சிகளுக்கு தேவைப்படுவது இரண்டே இரண்டு தான்.குழந்தைமையும் , பிடிவாதமும்.இரண்டையும் ஜான் திருமணத்திற்கு பின்னர் இழந்தான்.அல்லது இழக்கத் தொடங்கினான்.

எமர்ஜென்சியின் போது நாங்கள் கைது செய்யப் பட்டோம்.அப்போது நான் மாநிலத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன்.ஜான் எங்கள் கட்சியிலிருந்து விலகி ஒரு சோஷியலிச கட்சியைத் தொடங்கியிருந்தான்.அவன் பாராளுமன்றத்தின் உறுப்பினராக நின்று வெற்றி பெற்றிருந்தான்.சிறையில் நாங்கள் இருவரும் ஒரே அறையில் தான் இருந்தோம்.அவனது மனைவி அப்போது அவனுக்கு நிறைய கடிதங்கள் எழுதினாள்.அவனும் பதில் எழுதுவான்.உண்மையில் அவன் வெளியே வர வேண்டும் என்று அவள் போராடினாள்.உடனிருக்கும் போது விலகிச் சென்றாள்.சந்தித்து கொள்ள இயலாத போது அவனுக்கு ஏங்கினாள்.சாத்தியப்படும் போது ஜான் சமைத்தான்.ஜான் நன்றாகச் சமைப்பான்.கைது செய்யப்பட்ட புதிதில் நான் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டேன்.சிறை உணவு எனக்கு உவக்கவில்லை.அவன் இருப்பு எனக்கு ஆறுதலாக இருந்தது.அவன் என்னை நன்றாக பார்த்துக்கொண்டான்.

நாங்கள் சிறையில் நிறையப் படித்தோம்.அலெக்சாண்ட்ரா கொலேந்தாய் புத்தகத்தை அப்போது நான் வாசித்தேன்.கிராம்சியை முழுமையாக கற்றோம்.அப்போது ஜான் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது.செவ்வியல் இடதுசாரி சிந்தனையில் நாம் இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற பதத்தை அடிக்கடி பயன்படுத்துகிறோம்.இது சமூகத்தை பற்றிய புரிதலை அளிப்பதற்காக பயன்படுத்துகிறோம்.அதாவது மேற்கட்டுமானம் , அடித்தளம் என்று பிரித்து இவைகளுக்கு மத்தியிலான இயங்கியலைப் பற்றி பேசுகிறோம்.ஆனால் இதை நாம் மிக எளிமையாகச் சொல்ல முடியும்.சமூகம் என்பது மனிதக் கூட்டம்.அதாவது பல மனித உடல்கள்.அப்படியென்றால் நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த மேற்கட்டுமானமும் அடித்தளமும் உண்மையில் சமூகத்தின் அகமும் புறமும் தானே என்றான்.அகம் புறத்தை பாதிக்கிறது, புறம் அகத்தை பாதிக்கிறது.புறம் என்பது பொருள் உற்பத்தி நிகழும் தளம்.அகம் என்பது பொளுள் உற்பத்திக்கான விழுமியங்களை உருவாக்கில் கருத்தியல் பூமி.அவ்வளவுதானே என்றான்.நான் புன்னகைத்தேன்.ஜான் தேர்ந்த சிந்தனையாளன்.

ஜான் ஒரு போதும் தன் வலிகளை பகிர்ந்து கொண்டதில்லை.அவன் மிகவும் சலிப்புற்றால் அமைதியாக இருப்பான்.சிறையிலிருந்த போது சீட்டுக்கட்டு விளையாடுவது எங்களுக்கு சற்று இளைப்பாறலாக இருந்தது.சிறை தன்னளவில் ஒர் உலகம்.அங்கு முதல் முறை வந்த குற்றவாளிகள், தொடர் குற்றம் புரிந்தவர்கள் , குற்றமே செய்யாமல் வந்தவர்கள் என்று எண்ணற்றோர் இருந்தனர்.நான் சமூகப் பணியில் இருப்பவன்.ஒர் இடதுசாரி கட்சியின் மாநில பொதுச் செயலாளார்.ஆனால் சிறையிலிருந்த நாட்கள் எனக்கு நீதி என்றால் என்ன என்ற கேள்வியை கேட்க வைத்தது.

ஆடு மேய்த்து கொண்டிருந்தவன் நக்ஸல் என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.தந்தையை கொன்றுவிட்டு மகனே கொன்றதாக மாற்றி அவனை சிறையில் அடைத்தார்கள்.எங்களைப் போன்ற அரசியல் கைதிகளை குற்றத்தின் பொருட்டு வந்தவர்கள் மதித்தார்கள்.அவர்களுக்கு மனுக்கள் எழுதித் தருவது , ஆலோசனைகள் வழங்குவது , சிறையிலிருந்து வெளியேற வழக்கறிஞர்களின் உதவியைப் பெறுவது, படிப்புக்கான பொருள் உதவியை அளிப்பது என்று நாங்கள் சில பணிகளைச் செய்து கொடுத்தோம்.சிறையிலிருந்தவர்கள் பட்ட பாடுகளுக்காக நாங்கள் போரட்டங்கள் நடத்தினோம்.உண்மையில் எமர்ஜென்சி முடிந்து நாங்கள் வெளியே வருவோம் என்ற எண்ணமே எங்களுக்கு இருக்கவில்லை.

சட்டென்று மூடுபணி விலகுவது போல ஒரு நாள் எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டது.ஜான் தேர்தலில் போட்டியிட்டு மறுபடியும் பாராளுமன்றத்தின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டான்.டெல்லியில் அவனது வீடு எந்த பாதுகாப்பு விதிகளும் கொண்டதல்ல.யாரும் செல்லலாம், உதவி கோரலாம், அவனோடு பேசலாம், சண்டை செய்யலாம்.அவன் பின்னர் மத்திய அமைச்சரான போது கூட இதே போலத்தான் இருந்தான்.அவன் மாறவில்லை.அவன் முதல் முறை மத்திய அமைச்சராக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட போது எனக்கு மிகச் சிறிய கையடக்க தட்டச்சுப்பொறியை வாங்கி வந்தான்.அதை எளிதில் எங்கும் எடுத்து செல்லலாம்.இந்தியாவில் சாதியும் வர்க்கமும் என்ற என் முதல் புத்தகத்தை அதில் தான் தட்டச்சு செய்தேன்.கணிப்பொறி பயன்படுத்த தொடங்கிய பின்னர் தான் அது என்னை விட்டுப் போனது.

நான் பொலீட்பீரோ உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அவனை டெல்லியில் அடிக்கடி சந்திந்தேன்.பாராளுமன்றத்தின் கேண்டீனில் மாலைகளில் சிற்றுண்டிகளும் தேநீரும் அருந்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்த நாட்கள் எங்கோ பல ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பது போல தோன்றுகிறது.ஜான் காங்கிரஸ் மீதான எதிர்ப்பிலிருந்து தன் அரசியல் பாதையைத் துவக்கினான்.அறுபதுகளில் , ஏழுபதுகளில் இளைஞர்களாக இருந்த பலரும் அப்படியான பாதையைத்தான் தேர்ந்தார்கள்.ஆனால் ஜான் காங்கிரஸை முழுமையான வெறுத்தான்.தெலுங்கானாவில் நிலச்சுவான்தார்கள் பண்னையடிமைகளையும், விவசாயக் கூலிகளையும் நடத்திய விதத்தை எண்ணி குமறுவான்.அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அந்தப் பெண்கள் சந்தித்த அவலங்களுக்கு நாம் எங்கு சென்று நீதி பெற போகிறோம் என்று ஒரு நாள் உக்கிரமாக பேசினான்.அத்தனை நிலச்சுவான்தார்களும் ரெட்டிகளும் ராவ்களும் தான்.ஜானும் ஒரு ரெட்டிதான்.தன் பெயருக்கு பின்னாலிருந்த ரெட்டியை நீக்கிவிட்டு ஜான் ஸ்ரீ ஆபிரகாம் என்று வைத்துக்கொண்டான்.ஸ்ரீமதி என்பது அவனது அண்ணையின் பெயர்.அவனது தந்தையின் பெயர் ஆபிரகாம் ரெட்டி.இருவரையும் தன் பெயருடன் இணைத்துக்கொண்டான்.ரெட்டிகளும் ராவ்களும் காங்கிரஸில் இருந்தார்கள்.வெறும் உறுப்பினர்களாக அல்ல.சட்டசபை உறுப்பினர்களாக , பாராளுமன்ற உறுப்பினர்களாக, மத்திய அமைச்சர்களாக , மாநில அமைச்சர்களாக.அதைப் பார்த்து வளர்ந்த ஜான் காங்கிரஸை வேரறுக்க வேண்டும் என்று சூழறைத்துக் கொண்டான்.இங்கே வறிய நிலையில் இருக்கும் மக்கள் விடியலை நோக்கி பயணிக்க காங்கிரஸ் தோற்க வேண்டும் என்று எண்ணினான்.

ஆனால் காங்கிரஸூக்கு மாற்றாக அவன் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏற்கவில்லை.சோஷியலிசக் கட்சிகளே இந்தியாவிற்கு உகந்தது, வன்முறை அற்றது என்று சொல்வான்.பின்னர் சோஷியலிசக் கட்சிகள் ஜனதாவில் இணைந்து , பிரிந்து , மரணமடைந்தன.அவன் மறுபடி வேறொரு கட்சியைத் தொடங்கினான்.ஜனதா சங்கமத்தில் பயனடைந்த ஒரே அமைப்பு ஜன சங்கம்.அவர்கள் பாரதிய ஜனதா கட்சியாக புது அவதாரம் கொண்டார்கள்.

தொண்ணூறுகளில் காங்கிரஸ் வலுவிழந்து வலதுசாரி அமைப்புகள் மெல்ல மேலெழுந்தன.இந்த இடைப்பட காலத்தில் உருவான பல்வேறு கூட்டணி அரசுகளில் ஜான் ஏதோ ஒரு வகையில் பங்கு கொண்டான்.தனித்திருந்த கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டணியாக மாற்ற அவனால் முடிந்தது.அதில் அவன் பங்களிப்பு முக்கியமானது.அவன் எப்போதும் பாராளுமன்றத்தில் இலங்கை அகதிகளுக்காக , திபெத்திய மக்களுக்குகாக , சாதிய அவலங்களுக்காக , மத ரீதியிலான ஓடுக்குதல்களுக்காக , பாலஸ்தீனர்களின் வாழ்க்கைக்காக குரல் கொடுக்க கூடியவானகவே இருந்தான்.தன் தொகுதி மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்தான்.கடிதங்களுக்கு பதில் எழுதுவான்.மனுக்களை முழுமையாக படித்து முடித்தவற்றை செய்தான்.அவன் எளிய மக்களின் பக்கம் நின்றான்.

எண்பதுகளின் பிற்பகுதியில் பஞ்சாப்பைத் சேர்ந்த ஒருவனுக்கு கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற இன்னும் சில தினங்களே இருந்த நிலையில் பிரதம மந்திரியின் வீட்டுக்கே சென்று வெகு நேரம் வாதித்து அன்றிரவே ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்து அந்த மரண தண்டனையை ரத்து செய்தான்.

உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் நன்கு படித்துக்கொண்டிருந்த ஜான் வலதுசாரி அமைப்புகள் உடனான சண்டையால் தான் வெளியேற்றப்பட்டான்.இல்லை என்றால் அவன் இயற்பியலாளராக ஆகியிருப்பான்.அப்படிப்பட்ட ஜான் தொண்ணூறுகளின் முடிவில் வலுதுசாரி அமைப்புகளில் சென்றுச் சேர்ந்தான்.

என்னால் அதை புரிந்து கொள்ளவே முடியவில்லை.நான் ஒரு முறை அவனை தொலைபேசியில் அழைத்து அவனது செயல்களை விளக்கச் சொன்னேன்.அவன் எதுவும் சொல்லவில்லை.நான் அவனோடு பேசுவதை குறைத்துக்கொண்டேன்.உண்மையில் நான் அவனை வெறுக்கத் தொடங்கியிருந்தேன்.அவன் என் இள வயது நண்பன் என்பது எனக்கு எரிச்சலை அளித்தது.நாங்கள் பம்பாயில், நாக்பூரில் இருந்த காலங்கள் , அவனது வாதங்கள் எல்லாம் எனக்கு சலிப்பைத் தந்தன.

கோத்ரா இரயில் சம்பவமும் அதன் பின்னான கலவரங்களும் இந்திய சமூகத்தில் இந்திய அரசியலில் புதிய அத்தியாயங்களை தொடங்கி வைத்தன.அவன் பாராளுமன்றத்தில் அந்தக் கலவரங்களைப் பற்றிய உரையில் அரசுக்கு ஆதரவாகப் பேசினான்.காங்கிரஸ் ஆட்சியில் கலவரங்கள் நிகழவில்லையா என்று கேட்டான்.

நான் கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு பின்னர் அன்று மாலை அவனைச் சந்தித்தேன். பச்சை நிற ஜிப்பா அணிந்திருந்தான்.கலைந்த கேசம்.நாங்கள் இருவரும் தேநீர் கோப்பைகளோடு அமர்ந்திருந்தோம்.எங்களுக்கு மத்தியில் பல ரயில்கள் கடந்திருந்தன.நிறைய நேரம் மெளனமாகவே இருந்தோம்.உனக்கு வெட்கமாக இல்லையா ஜான் என்று நேரடியாகவே கேட்டேன்.அவன் ரஜாக்கர்கள் தெலுங்கானாவில் நிகழ்த்திய கொடூரங்கள் பற்றி எனக்குத் தெரியுமா என்று எதிர் கேள்வி கேட்டான்.எனக்குத் தலையே வெடித்து விடும் என்பது போல இருந்தது.ஜான் இப்படி தரம் தாழ்ந்து பேசுவான் என்று நான் எண்ணவில்லை.நான் அருந்திக்கொண்டிருந்த தேநீர் கோப்பையை அப்படியே வைத்துவிட்டு எழுந்து வந்தேன்.அன்று தான் அவனோடு கடைசியாக பேசினேன்.

அதன் பின் அவனுக்கு சில வருடங்களில் பார்கின்ஸன் நோய் வந்தது.பார்க்கின்ஸன் முற்றிய போது ஞாபக மறதி ஏற்பட ஆரம்பித்தது.அவன் மனைவி வெண்ணலா அவனை வந்து பார்த்துக்கொண்டாள்.எனது அலுவலகத்திலிருந்து ஜானின் இல்லம் வெறும் பத்து கீலோ மீட்டர் தூரம் தான்.ஆனால் நான் செல்லவில்லை.ஒரு முறை முயன்ற போது வெண்ணலா அனுமதிக்கவில்லை.அவள் யாரையும் அனுமதிக்கவில்லை.

இப்போது அவன் மரணமடைந்து விட்டான்.கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நோயால் அவதிப்பட்டு இறந்து போனான்.மரணம் எல்லா உறவுச் சிக்கல்களையும் தீர்த்து விடுகிறது.இப்போது நான் அவன் வீட்டுக்குச் சென்றேன்.பத்திரிக்கைகள் , கேமராக்கள், கட்சித் தலைவர்கள்.கண்ணாடி பெட்டிக்குகள் இருந்த அவனை நான் வெகு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். யார் யாரோ என்னன்னவோ பேசினார்கள்.நான் ஏதேதோ பதில் சொன்னேன். மழை.கார் மேகங்கள் உடைந்து விழுவது போன்ற பெரும் மழை.நான் ஒரு வெண்ணிற கம்பளியை அந்தப் பெட்டகத்தின் மீது வைத்தேன்.வெண்ணலாவை பார்த்தேன்.அருகில் ஜானின் மகன் கோபாலன்.அவனில் ஜானின் சாயலே இல்லை.அவன் அவளது அன்னை போலவே இருந்தான்.அவள் என் கரங்களை பற்றிக்கொண்டாள்.நான் தலையை மட்டும் அசைத்து விட்டு வெளியே வந்தேன்.பத்மா இறந்த பின்னர் நான் கட்சி அலுவலகத்திலேயே ஒரு அறையை எடுத்துக் கொண்டு தங்க ஆரம்பித்தேன்.என் அறையில் மாட்டப்பட்டிருந்த பத்மாவின் புகைப்படத்தை பார்த்தவாறு அமர்ந்தேன்.பத்மாவை பற்றி ஜான் சொன்ன வார்த்தைகள் என்னுள் பெருக்கெடுத்தது. எத்தகைய கொடையாளன் ஜான். மக்களின் மீது உண்மையான அன்பும் அக்கறையும் பரிவும் கொண்டிருந்தான்.அவர்களுக்காக வாதாடினான் , சண்டை போட்டான்.ஒரு முறை பாராளுமன்ற வளாகத்தில் ரயில்வே ஊழியர்களுக்காக அவன் செய்த போராட்டத்தின் போது போலீஸ்காரர்கள் அவன் மண்டையில் தாடையில் லத்தி கொண்டு கொடூரமாக தாக்கினார்கள்.அவனுக்கு பார்க்கின்ஸன் வருவதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம் என்று என்னிடம் சிலர் சொன்னார்கள்.

ஜானின் வாழ்க்கை துயரம் நிரம்பியது.அவனது தாய் அவனை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார்.கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டான்.அவனது திருமணம் தோற்றுப் போனது.ஜான் அரசியலில் பல வெற்றிகளைப் பெற்றான்.ஆனால் அவன் தன் இறுதி அரசியல் அத்தியாயத்தில் பல பிழைகளையும் செய்தான்.அவனை எப்படி புரிந்து கொள்வது.தொகுத்துக் கொள்வது.எனக்குத் தெரியவில்லை.மனிதன் எப்போது மற்றமையை உருவாக்கிக் கொள்கிறான்.தன்னிலை உருவாகும் போதே மற்றமை உருவாகுகிறதா.தன்னிலை அழிந்தால் மற்றமையும் அழியுமா.புரியவில்லை.ஆனால் அந்த வீழ்ச்சி எப்போதோ தொடங்கி எங்கேயோ அவனை கொண்டு போய் விட்டது.அவன் வாழ்வில் ஒளி அகன்று நிழல் விழுந்தது.பரதன் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று அவன் சொன்ன வரி உறங்கச் செல்லும் போது என்னுள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.பத்மாவை பற்றி ஜான் சொன்னதை பத்மாவிடம் பல வருடங்கள் கழித்து ஒரு மாலைப் பொழுதில் பகிர்ந்து கொண்டேன்.பத்மா சட்டென்று கண் கலங்கினாள்.மரணமடைந்த ஜானின் இல்லத்திற்கு சென்று திரும்பிய போது பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.எதாவது சொல்லுங்கள் எதாவது சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்டார்கள்.என்னிடம் உண்மையில் சொற்களே இல்லை.என் மனதில் கடற்கரையில் , அலுவலகத்தில் , போராட்டங்களில் நாங்கள் கழித்த பொழுதுகள் தான் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது.இறுதியில் என்னைத் தொகுத்துக் கொண்டு ஜான் என் நண்பன் , என் சிறந்த நண்பன், எமர்ஜென்சியின் போது அதிகாரத்தை எவ்வித அச்சமுமின்றி எதிர்த்து நின்ற அந்தத் தருணமே அவன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.அலமாரியிலிருந்து என் முதல் புத்தகத்தை தேடிப் பிடித்து எடுத்தேன்.பத்மா என் ஒவ்வொரு நூலினும் ஒரு பிரதியை பைண்ட் செய்து பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.அந்த நூலின் முன்னுரையில் ஜானின் நட்புக்கு, அவன் எனக்கு வாங்கித் தந்த தட்டச்சுப்பொறிக்கு நன்றி தெரிவித்திருந்தேன்.பத்மாவுக்கு அந்த நூலை சமர்பித்திருந்தேன்.இன்று என் அருகில் இவர்கள் இல்லை.சாளரத்திற்கு வெளியே தூவானம்.உள்ளே என்னுள் எண்ணற்ற நெகிழ்வான நினைவுகள்.நான் என்னை அறியாமல் உறங்கத் தொடங்கியிருந்தேன்.

வனம் இதழில் பிரசுரமான சிறுகதை

- புகைப்படம் - By Google Arts & Culture — KwF-AdF1REQl6w, Public Domain,https://commons.wikimedia.org/w/index.php?curid=22554513


மஞ்சுநாதா பார் ஷாப்

 




நான் பொதுவாக மதுபானக்கடைகளுக்கு செல்வதில்லை.அதாவது பார்களுக்கு.மது விற்பனையகங்களுக்கு சென்று பாட்டில்களை வாங்கி வந்து ஃபிரிட்ஜில் அடுக்கிவிடுவேன்.என் வீட்டின் அருகில் மதுலோக்கா என்ற ஒரு கடை இருக்கிறது.எல்லாவித அயல்நாட்டு சோமபானங்களும் கிடைக்கும்.பெரும்பாலும் அங்கு தான் வாங்குவேன்.மாலையில் வீடு திரும்பிய பின்னர் ஒன்று அல்லது இரண்டு பேக் அருந்துவேன்.பெரும்பாலும் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி.சில நேரங்களில் ரம்.சற்று மகிழ்ச்சியாக இருந்தால் வைன்.என்னுடன் யாருமில்லை.நான் காலை எழுந்தவுடன் பிரேட் ஆம்லேட் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றுவிடுவேன்.மதியத்திற்கு அலுவலகத்தில் எதாவது உட்கொள்வேன்.மாலை பைக்கில் வீடு திரும்புகையில் சிறிது நேரம் வீட்டின் அருகிலிருக்கும் லக்ஷ்மி தேவி பூங்வாகவில் அமர்வேன்.பலரும் வேகமாக நடைச் செல்வார்கள்.சிலர் கைகளில் ஸமார்ட் வாட்ச் அணிந்திருப்பார்கள்.கார்ன் , ஐஸ்கிரீம் , காபி கடைகள் பார்க்கின் வெளியே இருக்கும்.குழந்தைகளுக்கு சருக்கு மரம், சீஸா , ஊஞ்சல் , கயிறு ஏறுதல் போன்ற விளையாட்டுகள்.பெரியவர்கள் கூட சில உடற்பயிற்சிகளை செய்வார்கள்.அவர்கள் மெய்வருத்தி நம்மை வதைப்பதை ஒரு நொடி கூட பார்க்க மாட்டேன்.அடர்ந்த மரங்கள் இருப்பதால் அந்தியில் விளக்குகளின் வெளிச்சத்திலும் சற்று இருண்டு காணப்படும்.அது சோபையான ஓர் உணர்வை அளிக்கும்.அப்போது அங்கிருந்து வெளியேறிவிடுவேன்.

நான் ஐந்து மணி வாக்கில் சென்றால் ஆறு ஆறரை வரை அமர்ந்திருப்பேன்.அப்போது நான் பாட்டு கேட்க மாட்டேன்.அலைபேசியை எடுத்துப் பார்க்க மாட்டேன்.யார் அழைத்தாலும் எடுக்க மாட்டேன்.வெறுமன இருப்பேன்.பேராக்குப் பார்ப்பேன்.யுவதிகள் செல்லும் போது கண்கள் அவர்களையே தொடர்வதை கவனித்திருக்கிறேன்.எப்போதாவது வெளியில் பில்டர் காபி வாங்கி குடிப்பேன்.அந்தி சாய்ந்த பின் வெளியே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வேன்.சமீபத்தில் கார் வாங்கினேன்.மாலைகளில் இங்கு சட்டென்று மழை பெய்வதால் அலுவலகம் செல்லும் போது சில நாட்கள் காரிலும் செல்கிறேன்.மூன்றாவது மாடியில் பால்கனியை கொண்ட ஒரு படுக்கையறை வீடு.மாலையில் பெரும்பாலும் வெளியே செல்ல மாட்டேன்.தோசை அல்லது இட்லி உடன் ஏதேனும் ஒரு தொக்கு வைத்துக்கொண்டு இரவு உணவை முடித்துவிடுவேன்.பொதுவாக தொக்குகளை ஃபோரம் மாலில் ஏதாவது படம் பார்த்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது அடையார் ஆனந்த பவனில் வாங்கி விடுவேன்.

மாலையில் ஒரு மதுக்கோப்பையை எடுத்துக் கொண்டு போய் பால்கனியில் அமர்வேன்.அந்தச் சாலையில் பெரிதாக வாகனங்கள் செல்லாது.சில நாட்கள் வீடு திரும்பும் போது சிக்கன் வாங்கி வருவேன்.கபாப் செய்து உண்டுவிடுவேன்.சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் சாலைகளில் உலாவுவேன்.இரவுகளில் கதவைத் திறந்து இல்லத்திற்குள் புகும் போது வெறுமை ஒரு பூதம் போல சோபாவின் மேல் வியாபித்திருக்கும்.அதற்காகவே பேச்சரவம் இருக்கட்டும் என்று தொலைக்காட்சியை ஒலிக்க விடுவேன்.

அன்று வழக்கம் போல் சாயுங்காலத்தில் வீடு திரும்பிய பின்னர் பிரட்ஜை திறந்த போது பாட்டில்கள் தீர்ந்து விட்டன என்பதை கவனித்தேன்.என்னால் குடிக்காமல் இருக்க முடியாது.வண்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல விருப்பம் இருக்கவில்லை.அருகில் நடந்து போகும் தொலைவில் மஞ்சுநாதா பார் இருக்கிறது.தமிழ்நாட்டில் செந்தில் போல கர்நாடகாவில் மஞ்சு என்ற பெயர் பிரபலம்.அது வெள்ளிக்கிழமை.வாரயிறுதியில் அடுத்த வாரத்திற்கான போத்தல்களை வாங்கி நிரப்பிவிடலாம்.இன்று ஒரு நாள் மட்டும் கடைக்குச் சென்று அருந்தலாம் என்று தோன்றியது.

வெளியிலிருந்து பார்க்கும் போது எப்போதும் ஒரு சலிப்பான மஞ்சள் ஒளி அந்தக் கடை முழுதும் பரவியிருப்பதை பார்த்திருக்கிறேன்.மலிவானக்கடை.பலரும் குவார்ட்டர்கள் வாங்கி சாலையை வேடிக்கை பார்த்தவாறு அங்கிருந்த ஒரு திட்டில் வைத்து நின்றவாறே அருந்திவிட்டுச் சென்றார்கள்.அழகற்ற பிளாஸ்டிக் மேஜைகள் , நாற்காலிகள். நான் சென்று ஒரு காலியான இடத்தில் அமர்ந்தேன்.ஏப்ரல் மாதம் என்பதால் வெம்மையாக இருந்தது.வெளியிலிருந்து பார்க்கும் போது தான் கூட்டமாக இருந்தது.உள்ளே அதிக மக்கள் இல்லை.நான் ஒரு குவார்ட்டர் ரம்மும் சிக்கன் பேப்பர் ப்ரையும் ஆர்டர் செய்தேன்.

ஏதோ ஒரு கன்னடப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.முதல் மடக்கில் உண்டான வெதுமையை போக்க சிக்கனை எடுத்து ஒரு கடி கடித்தேன்.மெல்ல படபடப்பு குறைந்து உடல் சமநிலைக்கு வந்து கொண்டிருந்தது.அப்போது என் மேஜை அருகில் ஒருவன் வந்தான்.உயரமாக பருமனாக இருந்தான்.பல டேபிள்கள் காலியாக இருந்த போது என் மேஜையின் எதிரில் அமர்ந்தான்.அவன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.நான் யாரைப் பார்த்தும் புன்னகைப்பதில்லை.எனக்கு தெரிந்த யாராவது சாலையில் என் எதிரில் வந்தால் தலையை கவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவேன்.எனக்கு யாருடனும் உரையாடப் பிடிக்காது.பெண்களைப் பிடிக்கும்.அவர்கள் பெண்கள் என்கிற அளவில்.ஆனால் அலுவலகத்தில் கூட பெண்களுடன் அலுவல்கள் தாண்டி பேச மாட்டேன்.ஆண்களோடு பேச எனக்கு ஒன்றுமிருக்காது. குழந்தைகளை நான் தூக்கியதே இல்லை.ரயிலில் , பேருந்தில் குழந்தைகள் என்னைப் பார்த்து சிரித்தால் நான் முகத்தை திருப்பிக் கொள்வேன்.

உண்மையில் இந்த உலகத்தில் மனிதர்களுக்கு பேச என்ன இருக்கிறது என்பது எனக்கு பல காலமாகவே புதிர்தான்.அலுவலகத்தில் காபி அருந்த உணவு சாப்பிட என்று பல காரணங்களுக்காக என் அணியில் இருப்பவர்கள் ஒன்றாகச் செல்வார்கள்.நான் யாருடனும் செல்ல மாட்டேன்.அவர்களும் என்னை சட்டை செய்ய மாட்டார்கள்.அரசியல் , சினிமா, விளையாட்டு, தட்பவெட்பம், டிராபிக், அலுவலகத்தில் புதிதாக வந்துள்ள சட்டங்கள், மேனேஜர் என்று எதை பற்றியாவது இவர்கள் கதைப்பதை பார்த்திருக்கிறேன்.இதைப் பற்றியெல்லாம் எதற்கு பேசுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன்.உரையாடி என்ன ஆகப்போகிறது.

அலுவலகத்தில் தொலைபேசி உரையாடல்களில் கூட தொடக்கத்திலேயே விஷயத்திற்கு வந்து விடுவேன்.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் , உங்கள் ஊரில் என்ன வெயில் அடிக்கிறதா , ஓலிம்பிக் போட்டிகளை பார்த்தீர்களா என்பது போன்ற சல்லித்தனமான கேள்விகளை கேட்க மாட்டேன்.அவர்கள் கேட்டாலும் சடசடவென்று பதில் சொல்லிவிட்டு பணி குறித்து பேச ஆரம்பித்து விடுவேன்.

இந்த வேலை கூட அவசியம் கருதித் தான் செய்கிறேன்.எனக்கு பெரிதாக சொத்தெல்லாம் ஒன்றமில்லை.என் தந்தை பார்கின்ஸன் நோய் முற்றி நிமோனியா வந்து இறந்தார்.தாயார் சகோதரனுடன் சென்னையில் இருக்கிறார்.சகோதரனுக்கு திருமணமாகிவிட்டது.என் அம்மா எப்போதாவது போன் செய்து என் கல்யாணம் குறித்து பேசுவார். எனக்கு முப்பத்தியைந்து வயதாகிவிட்டது என்பதில் அவருக்கு வருத்தம்.முடி கூட நரைக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லி அழுவார். மனைவி , மக்கள் என்றாலே எனக்கு எரிச்சல் வந்துவிடும்.எங்கள் தொலைபேசி உரையாடல் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீளாது.நானும் என் சகோதரனும் பேசி எப்படியும் ஐந்து வருடங்கள் இருக்கும்.சண்டை எல்லாம் ஒன்றுமில்லை.எனக்கு அவனோடு பேச ஒன்றுமில்லை.அவனும் அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிவிட்டான்.

பள்ளி நண்பர்கள் , கல்லூரி நண்பர்கள் , அலுவலகத்தில் பணிபுரிந்தோர் , பணிபுரிவோர் என்று யார் அழைத்தாலும் பெரும்பாலும் எடுக்க மாட்டேன்.எதாவது கூடுகைகளுக்கு அழைத்தால் செல்லமாட்டேன்.எனக்கு இந்த வேலையில்லை என்றால் மாத வாடகை , சாப்பாடு இவைகளுக்கு அதிகப்பட்சம் ஒரு வருடம் தான் தாக்குப் பிடிக்க முடியும்.அதன் பின் கடினம்.எனக்கு யாரையும் அண்டிப் பிழைக்க பிடிக்காது.அதன் காரணமாக பணிக்குச் செல்கிறேன்.மேலும் அலுவலகம் சென்று வந்தால் அந்த நாள் முடிந்துவிடுகிறது என்பதால் எனக்கு வேலைக்குச் செல்லப் பிடிக்கும்.

வாரயிறுதிகளில் நான் எதையாவது சமைத்து உண்பேன்.சமைக்க பிடிக்கவில்லை என்றால் வெளியில் சென்று உட்கொள்வேன்.தமிழகத்தில் சைவ உணவகங்களில் பெயருக்கு பின் பவன் என்ற ஒட்டு சேர்த்துக் கொள்வது போல இங்கே சாகர் என்று முடியும் நிறைய ஹோட்டல்கள் உண்டு.உடுப்பி சாகர், சாந்தி சகார், சூக் சாகர் இப்படி நிறைய இருக்கும்.மெனுவை பார்த்து மோவாயைத் தடவி என்று இங்கு நிறைய மெனக்கெடுக்க வேண்டியதில்லை.நாம் போய் எதையாவது சொல்லி நின்றவாறே உண்டுவிட்டு வந்துவிடலாம்.பெரும்பாலும் இந்த நாட்களில் நான் ஐந்தாறு வார்த்தைகள் பேசினால் அதிகம்.எஷ்டோ , ஏனு போன்ற கன்னட வார்த்தைகளைத் தாண்டி பெரிதாக எதையும் பேசமாட்டேன்.சில நேரங்களில் சென்னையில் கூட கடைகளில் எவ்வளவு என்று கேட்பதற்கு பதிலாக எஷ்டோ என்று தவறுதலாக கேட்டிருக்கிறேன்.என் குடியிருப்பில் மொத்தம் ஆறு வீடுகள்.ஒன்றிரண்டு வீடுகளில் குடும்பங்கள் இருந்தன.என் பக்கத்து வீட்டில் இரண்டு பெண்கள் வாடகைக்கு குடியிருக்கிறார்கள்.அதில் ஒருத்தி ஒரு நாள் என்னைப் பார்த்து ஏதோ கேட்க முனைந்த போது நான் பார்க்காதது போல நடந்து சென்றேன்.அதன் பின் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.தண்ணீர் வரவில்லை , கரண்ட் கட் எதுவாக இருந்தாலும் அதுவாக சரியாகும் என்பது என் எண்ணம்.அதைக் குறித்தும் பெரிதாக யாரிடமும் கேட்டதில்லை.என் ஓனருக்கு நான் ஐந்தாம் தேதியானால் வாடகை கொடுத்து விடுவேன் என்பதால் அவரும் என்னை தொந்தரவு செய்வதில்லை.

அவன் வந்து அமர்ந்த போது புன்னைகத்தது எனக்கு எரிச்சலைத் தந்தது.நான் பதிலுக்கு சிரிக்கவில்லை.நான் வேறு எங்கோ வெறித்துப் பார்த்தேன்.அவன் கையில் பியர் நிரப்பப்பட்ட கிளாஸ் இருந்தது.

“என் பெயர் யாசர்” என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.

எனக்கு தூக்கிவாரி போட்டது.நீ யாராக இருந்தால் எனக்கென்ன,என்னை என் தொந்தரவு செய்கிறாய் என்று எண்ணிக்கொண்டேன்.நான் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்று தலையாட்டி விட்டு அமைதியாக இருந்தேன்.

“உங்கள் பெயர் ரகுநந்தன் தானே”

இப்போது என் கைகால்கள் எல்லாம் மரத்துப்போவது போல ஆகிவிட்டன.வயிற்றில் பெரிய வெற்றிடம் உருவானது.என்னை இந்த நகரத்தில் யாருக்கும் தெரியாது.நான் பேஸ்புக் உட்பட எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை.உலக நடப்பை செய்தித்தாள்கள் வழி அறிவேன்.அதுவும் மேம்போக்காக படிப்பேன்.மற்றபடி வேறு எவற்றிடனும் எதனுடனும் எனக்குத் தொடர்பில்லை.

“ஆமாம்”.

எனக்கு ஒரு சிக்கல் இருக்கிறது.யாருடனும் உரையாட பிடிக்காது என்றாலும் யாரையும் புண்படுத்தவும் பிடிக்காது.முகத்தில் அடித்தால் போல பேச விரும்ப மாட்டேன்.நாம் எந்த கேள்வியையும் கேட்காவிட்டால் அந்த உரையாடல் நீடிக்காது என்பது என் திண்ணம்.நான் யாசரை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

“என்னை உனக்கு அடையாளம் தெரிகிறதா”

அதற்கு முன்னர் அந்த முகத்தை எங்கும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை.அப்படியே நினைவில் வந்தாலும் அதையெல்லாம் சொல்லக்கூடிய எண்ணத்திலும் நானில்லை. இப்போது அவன் அடுத்த அஸ்திரத்தை வீசினான்.

“நீங்கள் நெய்வேலிதானே.”

இப்போது நான் உண்மையில் பதற்றம் கொள்ள ஆரம்பித்தேன்.கால்கள் அப்படியே தரைக்குள் சென்று விடும் என்று தோன்றியது.இவனுக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது, என் ஊரை அறிந்திருக்கிறான்.நான் இந்த நகருக்கு வந்து பத்தாண்டுகள் கழிந்துவிட்டன.எனக்கு இந்த நகரில் நண்பன் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை.இந்த நகரத்தின் அந்நியத்தன்மை தான் எனக்கு மிகவும் உவப்பாக இருக்கிறது.இந்த யாசர் அதை உடைக்க பார்க்கிறான்.

“ஆமாம்”

“நானும் நெய்வேலிதான்”

இருண்ட வீட்டின் சிறு மூலையிலிருந்து மஞ்சள் ஒளி படர்வது போல இப்போது எனக்கு யாசர் என்ற பெயர் லேசாக நினைவுக்கு வந்தது.நாங்கள் சிறு வயதில் ஒரு லைன் வீட்டில் வாழ்ந்தோம்.அப்போது அதே லைன் வீட்டில் வாழ்ந்த எனது நண்பர்கள் சாகுல், உமர், பஷீர், ஹாஜா, யாசர்.சாகுலும் உமரும் சகோதரர்கள்.போலவே பஷீரும் ஹாஜாவும்.சாகுலின் தந்தை மரக்கடை வைத்திருந்தார்.ஹாஜாவின் வாப்பா கடிக்காரக் கடை வைத்திருந்தார்.யாசரின் தந்தை மகாலட்சுமி திரையரங்கில் கேண்டீன் எடுத்து நடத்திக்கொண்டிருந்தார்.

யாசருக்கு இரண்டு சகோதரிகள் பானு , சுபைதா.எங்களுக்கு மூத்தவர்கள்.அதில் பானு மிக நன்றாக வரைவார்.அவர் நீல வண்ணத் தாவணியில் ஸ்கூலுக்கு சைக்கிளில் சென்ற சித்திரம் நினைவில் நிற்கிறது.பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு அவர் படிக்கவில்லை.நாங்கள் தமிழ்நாடு லைனிலிருந்து பின்னர் வீடு மாறி பெரியாகுறிச்சி சென்றோம்.பெரிய தூரம் ஒன்றுமில்லை.ஐநூறு மீட்டர் தொலைவு இருக்கும்.ஆனால் அதன் பின் என் நண்பர்கள் மாறிவிட்டார்கள்.யாசரை நான் அதன் பின் அதிகம் பார்க்கவில்லை.எப்போதாவது மகாலட்சுமி திரையரங்கு சென்றால் அங்கு இருப்பான்.அவன் நல்ல சிவப்பு.குழந்தை போல சிரிப்பான்.அப்போதே சற்று குண்டாக இருப்பான்.இப்போது மிகவும் பெரிதாக இருக்கிறான்.வெள்ளை நிற டீசர்ட் அணிந்திருந்தான்.அநேகமாக அது டபுள் எக்ஸலாக இருக்க வேண்டும்.அவனுக்கு எப்படி என் முகம் நினைவிலிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை.நாங்கள் நெய்வேலியிலிருந்து பின்னர் சென்னையில் குடியேறிவிட்டோம். அவனைப் பார்த்தே எப்படியும் பதினைந்து இருபது வருடங்கள் இருக்கும்.

ஒரு முறை நான் பள்ளி முடிந்து நெய்வேலி டவுன்ஷிப் சிபிஎஸ் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன்.நான் எப்போதும் வீடு திரும்பும் பாலாஜி பஸ் வந்தது.அது சிதம்பரம் வரை செல்லும்.நான் பேருந்தில் பையை வைத்து விட்டு பஸ் ஸ்டாண்டுக்கு பின்னே இருக்கும் சாலையில் சிறுநீர் கழிக்கச் சென்றேன்.வந்து பார்த்தால் பஸ்ஸைக் காணோம்.அடுத்து வந்த பெரியார் வண்டியில் ஏறி மந்தாரக்குப்பம் சென்று அங்கிருந்து இன்னொரு கடலூர் பேருந்தைப் பிடித்து வீட்டுக்குச் சென்றேன்.எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.அந்த வருடத்தின் ரெகார்ட் நோட்டுகள் பையில் இருந்தன.இதை எப்படி வீட்டில் சொல்வது, பள்ளியில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை.கிடைக்குமா என்றும் தெரியவில்லை.பேருந்து நடத்துனர் பையை எடுத்துவைத்தால் சரி.தொலைந்து போனால் என்ன செய்வது.இரவு நைனாவை அழைத்துக்கொண்டு சிதம்பரம் டிப்போ சென்று விசாரிக்கலாமா என்றும் யோசித்தேன்.அச்சம் வயிற்றை கவ்விக்கொண்டது.எனது கம்யூட்டர் சயின்ஸ் வாத்தியார் எதையாவது சொல்வதற்குள்ளாகவே பட்டென்று கன்னத்தில் அடித்து விடுவார்.வீடு திரும்பினால் யாசர் வாசலில் இருந்த பேஞ்சில் அமர்ந்திருந்தான்.அவன் தோளில் என் பையும் சாப்பாட்டுக் கூடையும்.தேவதை ஒன்று இறங்கி வந்தது போல இருந்தது அந்தத் தருணம்.அவனும் அப்போது தான் வந்திருப்பான் போல.இவனுக்கு எப்படி இவை கிடைத்தன என்று எண்ணிக்கொண்டேன்.அவன் சிபிஎஸ்ஸூக்கு அடுத்திருந்த தொமுச நிறுத்தத்தில் ஏறியிருக்கிறான்.பையின் வெளியே என் பெயரை பார்த்து உள்ளே டயரியில் அது நான் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு எடுத்து வந்திருக்கிறான். வீட்டினுள் வந்து காபி குடித்து விட்டு போனான்.அவன் என்னை விட ஒரு வயது மூத்தவன்.பள்ளிப் படிப்பு முடிந்து ஒன்றும் செய்யாமல் இருந்தான்.மருத்துவம் படிக்க விருப்பம் என்றும் அதனால் இம்ப்ரூமண்ட் எழுதப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்.தேவிரத்னா திரையரங்கிலும் அவனது வாப்பா கேண்டீன் நடத்திவந்தார்.அங்கு சென்று திரும்பிய போது தான் பையை பார்த்து கண்டக்டரிடம் சொல்லி எடுத்து வந்திருக்கிறான்.

அது தான் யாசரை கடைசியாக பார்த்தது.அதன் பின் அவன் எங்கோ உத்தர பிரதேசம் சென்று விட்டதாகவும் மருத்துவம் படிக்கப்போவதாகவும் அம்மா ஒரு முறை சொன்னார்.நெய்வேலியிலிருந்து உத்தர பிரதேசம் எத்தனை தூரம் இருக்கும் அதற்கு எத்தனை நாள் பயணிப்பார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.பானு அக்கா, சுபைதா அக்காவின் திருமணங்களுக்கு சென்று வந்த ஞாபகம் இருக்கிறது.பானு அக்காவின் நிக்காஹ் வேலூரில் நடந்தது.அவை எல்லாம் நடந்து பதினைந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.எல்லாம் எங்கோ எப்போதோ யாரோவாக எனக்குத் தோன்றின.எனக்கு அவர்களின் முகங்கள் கூட மங்கலாகத்தான் நினைவில் இருக்கிறது.

இதோ இப்போது என் சதைத்துண்டின் ஒரு பகுதி போல யாசர் அமர்ந்திருக்கிறான்.அவன் முழுப் பெயர் யாசர் அராபத்.எத்தனை அழுத்தமான அழகான பெயர்.அந்தப் பெயரை உச்சரிக்கும் போது அது உருவாக்கும் ஒலியும் லயமும் அழுத்தமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.நான் சில நேரங்களில் அந்தப் பெயரை தனியாக இருக்கும் போது சிறு வயதில் உச்சரித்துக் கொண்டதுண்டு.

எனக்கு அவனிடம் கேட்க மிக முக்கியமான வினா ஒன்று இருந்தது.என் முகத்தை எப்படி இந்த மாலைப் பொழுதில் மங்கலான மஞ்சள் ஒளியில் அடையாளம் கண்டு கொண்டாய் என்று கேட்டேன்.அவன் நீ உன் தந்தை போலவே இருக்கிறாய் என்றான்.நான் மெளனமானேன்.எனக்கு மேற்கொண்டு அவனிடம் என்ன கேட்க என்று தெரியவில்லை.என் தந்தை இறந்தப் பின்னர் ஒரு திருமணத்திற்கு நெய்வேலிக்கு செல்ல வேண்டியிருந்தது.நான் பொதுவாக எந்த நிகழ்வுக்கும் செல்வதில்லை.அவை இறப்போ பிறப்போ திருமணமோ எதுவாக இருந்தாலும்.இந்தத் திருமணத்திற்கு பெண்ணின் தந்தை பெங்களூர் வீட்டுக்கே வந்து அழைத்திருந்தார்.நான் நெய்வேலியிலிருந்த போது அவரின் பெல்ட் கடையில் அடிக்கடி சென்று அமர்ந்து கொள்வேன்.திண்பண்டங்கள வாங்கி கொடுப்பார். எதாவது பேசிக்கொண்டிருப்பார்.கேட்டுக்கொண்டிருப்பேன்.அவருக்கு என் நைனாவிடம் அதிக ஸ்நேகம்.மேலும் என்னை அவருக்கு ஏனோ பிடிக்கும்.அந்த உரிமையில் வந்து அழைத்தார்.நல்ல மனிதர்.நான் சென்றேன்.கஸ்தூரி திருமண மண்டபம் என்று நினைக்கிறேன்.திருமணச் சடங்குகள் எரிச்சலைத் தந்ததால் நான் வெளியே வந்து சாலையில் சிறிது நேரம் நின்றேன்.ஊரே திரிந்துவிட்டது.சாலையை விரித்திருந்தார்கள்.நிறைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டிருந்தன.சற்று நேரம் நடந்தேன்.நான் வாழ்ந்த தமிழ்நாடு லைன் , எதிரிலிருந்த கடைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதோ ஒரு துணுக்குறல்.என் தந்தை நினைவுக்கு வந்து விட்டார்.அவர் அந்தச் சாலையில் என்னை அழைத்துச் செல்வது , அவர் எல்.எம்.எல் வேஸ்பாவில் தனியாகச் கோர்ட்டுக்குச் செல்வது என்று ஏதேதோ நினைவுகள்.என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.மனதில் ஏதேதோ ஓலங்கள்.அதன் பின் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை.உடலை நினைவுகளால் உலுக்க முடியும் என்பதை அன்று தான் உணர்ந்தேன்.நான் சாலையில் நடப்பதை நிறுத்திவிட்டு மண்டபத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.இப்போது இங்கு யாசர் என் முகத்தில் என் தந்தை இருக்கிறார் என்று சொல்கிறான்.நான் மிகவும் இலகுவாக உணர்ந்தேன்.என்னுள் ஏதோ விலகிக்கொண்டது.நான் புன்னைகைத்தேன்.

“யாசர் அராபத்.” என்று என்னுள் சொல்லிக் கொள்ளும் லயத்துடன் கூப்பிட்டேன்.

“ம்.”

“எப்படி இருக்க”

“நல்லாயிருக்கேன்.நீ எப்படி இருக்க”

“நானும் நல்லா இருக்கேன்.”

அவனுடைய குரல் சன்னமாக இருந்தது.ஊற்று பெருக்கெடுப்பது போல நினைவுகள் திரள்வதும் மதகில் மோதி நிற்கும் வெள்ளம் போல உணர்வுகள் குழம்பி நிற்பதுமாக சலனத்திருந்தேன்.சொல் கனத்து மொழி அற்றுப் போனேன்.குடிப்பதை நிறுத்தினேன்.

வெளியே போவோம் என்றேன்.அவன் தலையசைத்தான்.சிறது நேரம் எதுவும் பேசாமல் நடந்து சென்றோம்.எங்கும் உணவு விடுதிகள்.சிறிதும் பெரிதுமாக.மக்கள் தின்றுகொண்டே இருந்தார்கள்.வீதி விளக்குகளும் கடைகளின் எல்ஈடி வெளிச்சமும் நடந்து சென்ற மாதர்களும் அவர்களின் உடைகளும் சாலையின் இரைச்சலும் போதையும் என்னை வெகுமாக சுழற்றி அடித்தன.மாமோஸ் கடை, பானி பூரி கடை , சமோஸா கடை , சிக்கன் கடை , காபி கடை , சின்ன பிரியாணி கடைகள், பெரிய பிரியாணி கடைகள் ,சஹார்கள், பார்கள், ஜூஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள் , இத்தாலிய உணவுக் கடைகள் , அராபிய உணவுக் கடைகள், தலைச்சேரி உணவகம் ,குட்டநாடு உணவகம்,ஆந்திரா மீல்ஸ், தமிழ்நாடு சாப்பாடு, ஸ்வீட் கடைகள்,கேக் கடைகள், நூறு வகை தோசைக் கடைகள், லக்னோ ஸ்ரீரீட், வடக்கன் கபே , பேக்கரிகள் என்று எத்தனை எத்தனை அங்காடிகள்.எங்கும் கூட்டம்.இப்படியே உண்டு உண்டு எல்லோரும் ஒரு நாள் வயிறு வெடித்து இறக்கப் போகிறார்கள்.மனிதர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறார்கள்.உண்டு உண்டு எதை தீர்த்துக் கொள்ளப் போகிறார்கள்.நிரப்ப முடியாத எது அவர்களுக்குள் இருக்கிறது.அப்படியே ஓடிச்சென்று சமோசா கடையில் விரல்களை வழித்துக் கொண்டிருந்தவனின் புட்டத்தில் உதைக்க வேண்டும் என்பது போல இருந்தது.

கடைகள் இருந்த தெருவை கடந்து நான் வாழும் பகுதியை நோக்கி நடந்தோம்.இரைச்சல் குறைந்தது.சிந்தை எல்லாம் எங்கோ தொலைந்து போய் மனம் இனிமை கொண்டது.யாசர் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்திருக்கிறான்.சிறிது காலம் அலிகரிலும் பின்னர் டெல்லியிலும் பணிபுரிந்திருக்கிறான்.வாணியம்பாடியை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறான்.மனைவியின் பெயர் வஹீதா.முதலில் ஒரு பெண் குழந்தை.அதன் பெயர் நாஸியா.பின்னர் ஒரு ஆண் குழந்தை.அதற்கு தாரீக் என்று பெயர் வைத்திருக்கிறான்.மூன்றாவதாக அவன் மனைவி கருவுற்ற போது தான் 2019யில் அங்கே சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன.அவர்கள் டெல்லியில் தென் கிழக்கு பகுதியில் மதன்பூர் காதர் கிராமத்தில் சரிதா விஹார் என்ற பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள்.அதன் அருகில் இரண்டு கீலோ மீட்டார் தொலைவில் தான் தான் ஷாகின் பா போராட்டங்கள் நடந்திருக்கின்றன.டெல்லி முழுதும் பல இடங்களில் இது போன்ற போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன.2020 பிப்ரவரி மாதத்தில் வட கிழக்கு பகுதியில் கலவரங்கள் மூண்டிருக்கின்றன.இவன் வாழ்ந்த பகுதியில் குழப்பங்கள் எதுவும் முதல் நாள் இருக்கவில்லை.வன்முறைகள் தொடங்கிய அடுத்த நாள் மனைவியை பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.வீடு திரும்பிய போது பிறழாட்டங்கள் குறித்த வதந்திகள் பரவியிருக்கின்றன.மக்கள் பதறியபடி ஓடியிருக்கிறார்கள்.அந்தப் பகுதியில் தள்ளுமுள்ளு நிகழ்ந்திருக்கிறது.ஆட்டோவிலிருந்து இறங்கிய அவனது மனைவி கிழே விழுந்திருக்கிறார்.அன்றிரவு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது.பல முறை டெல்லியை விட்டு வேறு எங்காவது சென்று விடலாம் என்று மனைவி மன்றாடியும் யாசர் அதை பொருட்படுத்தவில்லை.இவ்வாறு நிகழ்ந்த பின் கருச்சிதைவுக்கு அவன் தான் காரணம் என்று சொல்லி டெல்லியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது சொந்த ஊரான வாணியம்பாடிக்கு சென்று விட்டார்.பின்னர் டெல்லியை விட்டு வந்தால் தான் திரும்புவேன் என்று அவர் பிடிவாதம் கொண்டார்.

அப்போது கோவிட் காலம் என்பதால் இவனால் எங்கும் மாற முடியவில்லை. கொரோனா கட்டம் முடிந்து ஒரு வருடம் கழிந்து இவன் டெல்லியிலிருந்த வேலையை உதறவிட்டு பெங்களூரில் புதிதாக பணியாணை பெற்று வந்திருக்கிறான்.மனைவியிடம் பல முறை மன்னிப்பு கேட்டு சமாதானப் படுத்தியிருக்கிறான்.

நாங்கள் பேசிக் கொண்டே வந்த போது யாசர் சட்டென்று நின்றான்.ஏன் என்பது போல நான் அவனைப் பார்த்தேன்.இது தான் நான் தற்போது குடியிருக்கும் வீடு என்றான்.இப்ராஹிம் மன்ஸில் என்று பெயர் பொரிக்கப்பட்டிருந்த இல்லம்.முதல் மாடியில் வாடகைக்கு குடியிருக்கிறான்.அவனது மனைவியின் உறவினர்கள் வீடு.அடுத்த நாள் தன் இல்லாள் வந்துவிடுவாள் என்றான்.வாழ்வை புதிதாக தொடங்க வேண்டிய இடத்தில் நின்றான் யாசர்.புதிய ஊர்.கோரமங்களாவிலேயே அக்கூரா மருத்துவமனையில் பொது மருத்துவராக பணியில் சேர்ந்திருப்பதாகச் சொன்னான்.

தன் வீட்டுக்கு அழைத்தான்.இன்று இராப் பொழுது இங்கே இரு என்றான்.நான் என் இருப்பிடம் தவிர வேறு எங்கும் தங்குவதில்லை.அவன் அழைப்பை நிராகரிக்கவும் முடியவில்லை.நான் டீசர்ட்டும் ஷார்ட்ஸூம் அணிந்திருந்ததால் அங்கேயே உறங்குவதில் அத்தனை சிக்கல் இல்லை என்று தோன்றியது.இரவு உணவுக்கு இருவருக்கும் தோசையும் உடன் சிக்கன் கறியும் சமைத்தான்.அவன் தன் மனைவி குழந்தைகளுடன் டெல்லியில் காந்தி நினைவகத்தின் முன் நின்று எடுத்துக்கொண்டிருந்த புகைப்படத்தை பெரிதாக மாட்டியிருந்தான்.அரபியில் எழுதப்பட்ட ஒரு சட்டகம் இருந்தது.பிபிசியில் காஸாவில் நிகழும் அவலங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்கள்.சிறிது நேரம் பார்த்தோம்.

அவன் தன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.ஒரு பெரிய பிளாஸ்டிக் பாய் அதன் மேல் படர்த்த ஒரு விரிப்பு , இரண்டு தலையனைகள் , போர்வைகள் எடுத்து வந்தான்.ஒரு பாட்டிலில் தண்ணீர்.பெளர்ணமிக்கு முந்தைய நாள்.இன்றிரவு நிலவின் கீழ் நாம் உரையாடலாம் என்றான்.வீட்டின் முன் ஒரு பூவரச மரம் இருந்தது.காற்று லேசாக வீசியது.கொஞ்சம் குளிர்.அவன் கொண்டு வந்த போர்வைகள் கனமாக இருந்தன.என்னைக் குறித்து கேட்டான்.நான் என்னைக் குறித்து சொல்ல ஒன்றுமில்லை என்றேன்.

“ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல”

“பிடிக்கல”

“ஏன் பிடிக்கல”

எனக்கு அவன் கேட்டதில் உவப்பில்லை என்றாலும் எரிச்சலும் இல்லை.அவன் மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை.உடல் தீண்டல் உயிர்களுக்கு அவசியமானது என்றான்.ஒரு மருத்துவனாக நான் அதை மேலும் வலியுறுத்துவேன் என்றான்.

நான் விலைமாதுகளுக்கு மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் வரை செலவு செய்கிறேன்.ஒரு திங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெண்கள்.இன்று இணையம் வந்து விட்டப் பின்னர் இவை எல்லாம் மிக எளிதாகி விட்டது.வீட்டு வாடகைக்கு தரகர் இல்லா தளங்கள் இருப்பது போல இவற்றிற்கும் தளங்கள் இருக்கின்றன.இதை முழு நேரத் தொழிலாக செய்யும் பெண்கள் மட்டுமல்லாமல் பகுதி நேரமாக செய்யும் கல்லூரிப் பெண்களும் திருமணமான பெண்களும் இருக்கிறார்கள்.நான் எட்டு மணி நேரத்திற்கு அவர்களை பதிவு செய்வேன்.நான் சந்தித்த பெண்கள் அனைவரும் மிகுந்த கரிசனத்தோடே என்னோடு நடந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் என் உடலைத் தீண்டும் போது அதில் பரிவு இருக்கும், பரிகாசம் இருக்காது.

எனக்கு அவர்கள் மீது ஒரே ஒரு புகார் தான்.அவர்கள் பெரும்பாலும் நான்கு மணி நேரத்திற்கு பிறகு புறப்படுகிறேன் என்பார்கள்.இரவு இன்னும் முடிந்திருக்காது.அவர்களுக்கு அடுத்த கஸ்டமர் கூட பல நேரங்களில் கிடைத்திருக்க மாட்டான்.ஆனால் அவர்கள் கிளம்ப யத்தனிப்பார்கள்.இனி புணர்தல் வேண்டாம் , தொடுகை கூட வேண்டாம் ,ஏன் உரையாடல் கூடத் தேவையில்லை வெறுமன உடன் இருந்து போகலாமே என்று கெஞ்சுவேன்.என்னால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.அவர்கள் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்துவிடுவார்கள்.போகும் போது இதெல்லாம் எல்லா காலத்துக்கும் சரிபட்டு வராது , விரைவில் திருமணம் செய்து கொள் என்று அறிவுறுத்துவிட்டு போவார்கள். அவர்களின் ஸ்பரிசம் ,கொஞ்சல், வாசனை,உடை, குரல்,உடல் வாகு என்று எண்ணியவாறே தூங்கிவிடுவேன்.ஒரு முறை புணர்ந்தால் அடுத்த ஒரு வாரம் தாக்குப் பிடிப்பேன்.இரண்டு மூன்று வருடங்களாக இப்படித்தான் இருக்கிறேன்.

நான் இதைச் சொன்ன போது யாசர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.சிறிது நேரம் அவன் ஒன்றும் சொல்லவில்லை.இப்படி எல்லாம் உன்னைச் சீரழித்துக்கொள்ள உனக்கு யார் உரிமை கொடுத்தார்கள் என்று கேட்டான்.இதில் என்ன சீரழிவு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.திருமணம் செய்வது , குழந்தைகள் பெறுவது , அவர்களை வளர்ப்பது , மனைவியிடம் இனிமையாக நடந்து கொள்வது என்பதை எல்லாம் நினைத்தால் சலிப்பாக இருக்கிறது என்றேன்.மேலும் இன்று எல்லாமே பிளாஸ்டிக்காக மாறிவிட்டது.யாரிடமும் அறியாமை இல்லை,எல்லாமே கணக்குகள் தான், எனக்கு இவை எல்லாம் போரடிக்கிறது என்று சொன்னேன்.

நாங்கள் இருவரும் பாயில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டுருந்தோம்.அவன் முன் தலையில் வழுக்கை ஏறியிருந்தது.தாடி வைத்திருந்தான்.அவனது ஒவ்வொரு கையும் தும்பிக்கை போல இருந்தன.உண்மையில் அவன் ஒரு வெள்ளை நிற குட்டி யானை போல இருந்தான்.அந்த முகத்தில் இருந்த சலனமின்மை எனக்கு வியப்பூட்டியது.அவன் சினம் கொண்டிருக்கிறானா அல்லது மகிழ்ந்திருக்கிறானா என்பதை கண்டு கொள்ள இயலாத ஒரு முக அமைப்பு.

“நீ தப்பான பாதையில ரொம்ப தூரம் போயிட்ட டா”

“இதுல என்ன தப்பு இருக்கு”.

“நீ இன்னும் எத்தனை ஆயிரம் பெண்களை புணர்ந்தாலும் உன்னால் ஒரு போதும் இந்த சூன்யத்தை கடக்க முடியாது”

“ஒரு மனைவியுடன் இருந்தால் இந்த சூன்யத்தை கடந்து விட முடியுமா”

அவன் சிரித்தான்.

“எதாவது வெரினியல் டிசிஸ் வந்துடப் போவுது”

“இதுவரைக்கும் இல்ல”

“இதை நான் எதிர்பாக்கல”

“எதை”

“நீ இப்படி.ஒண்ணுமில்ல”

“நானும் உன்னைய பார் ஷாப்புல பாப்பேன்னு நினைக்கல”

“அது வந்து , நாளைக்கு வைஃப் வராங்க. இனிமே புதுசா எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு ஒரே பதற்றம்.ஒரு மாதிரி மனசு தொந்தரவா இருந்துச்சு.அதான்”.

“ம்.”

“சரி. நான் உனக்கு அட்வைஸ் பண்ணல.இதை விட்டுவிடுவோம்”

“ரெயிட்”

டெல்லியில் பல காலம் இருந்துவிட்டு பெங்களூரு வந்திருப்பது , இங்கே புது ஊரில் பொருந்திக் போவது கடினமாக இருக்கிறதா என்று கேட்டேன்.நான் டெல்லியில் நிகழ்ந்த கலவரத்தை எதிர்பார்க்கவில்லை என்றான்.அது சட்டென்று நிகழ்ந்துவிட்டது.அலிகரில் சிறிதும் பெரிதுமாக கலவரங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.ஆனால் டெல்லியில் தலைநகரில் அது நிகழும் என்று நான் நினைக்கவில்லை.என் மனைவி அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று எவ்வளவோ சொன்ன போதும் நான் அதைச் சட்டை செய்யவில்லை.நாங்கள் ஒரு இந்துப் பெண்ணின் வீட்டில் தான் குடியிருந்தோம்.அவர் எங்களோடு நன்றாகத்தான் பழகினார்.அந்தப் பகுதியிலிருந்த சிலர் எங்களை சிலேடையாக கிண்டல் செய்தாலும் பெரிய தொந்தரவு என்று எதுவும் இருந்ததில்லை.

சிஏஏவிற்கு எதிரான போரட்டாங்கள் நிகழ்ந்த போது கூட மக்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்.அதனால் இது இவ்வளவு பெரிய வன்முறையாக மாறும் என்று நாங்கள் எண்ணவில்லை.அன்று மாலை மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஊர் அமைதியாகத்தான் இருந்தது.வரும் போது தான் நகரம் பற்றிக் கொண்டது.அப்போது தான் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.என் மனைவியால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதன் பின் உடனடியாக கோவிட் வந்துவிட்டது.இரண்டு வருடங்கள் அப்படியே சென்றுவிட்டன.அதன் பின் நான் அடிக்கடி வாணியம்பாடி செல்வதும் வருவதுமாக இருந்தேன்.வஹீதா கண்டிப்பாக டெல்லிக்கு வர மாட்டேன் என்று சொன்னாள்.பிறகு தான் இங்கு பெங்களூரில் சில தொடர்புகள் மூலம் வேலை வாங்கினேன்.வந்து சில மாதங்கள் ஆகின்றன.

அவன் தொடர்ந்து பேசினான்.இந்த மூன்று வருடங்கள் தனியாக இருந்தது மிகுந்த சோர்வை அளித்துவிட்டது.நாளை அவள் வருகிறாள்.எனக்கு ஏனோ மனம் நிலைகொள்ளாமல் இருக்கிறது.குழந்தைகளின் இருப்பும் இனிமையும் நாளை எனக்கு கிடைக்கப் போகிறது.அதனுடன் எங்களின் மூன்றாவது குழந்தையின் இன்மையும் திரும்ப எங்கள் முன் வரும்.இனி எந்த அசம்பாவிதமும் வாழ்வில் நிகழக்கூடாது.அமைதியான மகிழ்வான வாழ்க்கை சாத்தியமாக வேண்டும்.தெற்கில் இருப்பவர்களுக்கு இந்து மூஸ்லீமகளுக்கு இடையிலான இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வதில் குழப்பங்கள் இருப்பதை கவனிக்கிறேன்.இந்தச் சிக்கலுக்கு பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன.உயர் குடி இந்துக்களுக்கும் உயர் குடி இஸ்லாமியர்களுக்கும் இடையிலான ஓர் அதிகாரப் போட்டியாகவும் இவை ஒரு காலத்தில் இருந்தன.ஆனால் இன்று இந்த வேறுபாடுகள் புதிய தளத்தை அடைந்துவிட்டன.நிலம் , சொத்து ,வரலாறு, தேசம், தேசக் கடவுள், தொழில், எண்ணிக்கை, உணவு , கலாச்சாரம், உடை, மற்றமையின் அரசியல் தேவை,முதலாளித்துவம் உருவாக்கும் பதற்றமும் அச்சமும் என்று பல்வேறு வகையிலும் இன்று இது ஊடுபாவுகிறது.இதற்கு தீர்வெல்லாம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அவரவர் முடிந்தவரை பாதுகாப்பாக வாழ வேண்டியது தான்.ஆனால் ஒன்று.இங்கு உண்மை என்று எதுவும் இல்லை.எல்லாமே கதையாடல்கள் தான்.எண்பதுகளில் இங்கு சீக்கியர்கள் எப்படிப் பார்க்கப்பட்டார்கள்.யூதர்கள் ஐரோப்பா முழுவதும் இருபதாம் நூற்றாண்டில் வெறுக்கப்பட்டார்கள்.அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.இன்று இவை எல்லாம் மாறிவிட்டன.யார் மாற்றியது.ஐரோப்பிய மக்கள் சட்டென்று யூதர்களை ஏற்றுக்கொண்டு விட்டார்களா?.இல்லை.கதையாடல்கள் மாறிவிட்டன.இன்று எங்கள் மீது எண்ணற்ற புனைவுகள் கட்டமைக்கப்படுகின்றன.பின்னர் இந்தப் புனைவகளுக்குள் இருக்கும் கதாபாத்திரங்களாக நாங்கள் மாறுகிறோம்.மாற்றப்படுகிறோம்.கதையாடல்கள் நம்மை கட்டுப்படுத்துகின்றன.இன்று நமக்கு தேவைப்படுவது புதிய கதை.அதை நிகழ்த்த தேவை ஒரு நிமித்தம்.ஒரு தருணம்.ஒரு சாத்தியம்.அவை உருவாக வேண்டும்.அதற்கு காலம் எடுக்கும்.பேசிக்கொண்டு இருக்கும் போதே அவன் முகம் கூர் கொண்டு சிந்தையில் ஆழ்ந்தது.விரிப்பில் விரல்களால் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தான்.

நான் யாசரிடம் ஆறுதலாகவோ மறுப்பாகவோ எதையும் சொல்லவில்லை.எனக்கு உண்மையில் இவை குறித்தெல்லாம் எந்த அறிவும் இல்லை.ஆனால் யாசர் இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறான்.அவன் கூற்றில் ஏதோ ஒரு மெய்மை இருக்கும் என்று தோன்றியது.நான் எந்தக் கேள்வியும் கேட்காமல் இருப்பதே சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.அவன் கரங்களை மட்டும் பற்றினேன்.அதன் பின் நாங்கள் அதைக் குறித்து அதிகம் பேசவில்லை.

“ரஜினிகாந்த் படமெல்லாம் இன்னும் பாக்குறீயா”

“ஏன்”

“சின்ன வயசுல , உள்ளே ஒரு டீசர்ட் போட்டுக்கிட்டு மேலே உங்க நைனா சட்டையை பட்டன் போடாம மாட்டிக்கிட்டு வந்து நிப்பியே, ஞாபகம் இருக்கா”

நான் சிரித்தேன்.நாங்கள் பேசிக்கொண்டே உறங்கிப்போனோம்.மறுநாள் சனிக்கிழமை.எனக்கு அலுவலகம் இல்லை.ஏழு ஏழரை மணிக்கு நல்ல வெயில்.நான் எழுந்து கொண்டேன்.யாசர் என்னருகில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.வாய் விரித்து நன்றாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தான்.நான் எழுந்து சோம்பல் முறித்தேன்.பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து கொப்பளித்தேன்.அவன் கண் விழித்து என்னைப் பார்த்தேன்.

“மணி என்ன”

“எட்டு”

அவனும் எழுந்து கொண்டான்.

“எப்போது வருகிறார்கள்”

“இன்னைக்கு சாய்ந்திரம் மைசூர் எக்ஸ்பிரஸூல ஆம்பூர்ல ஏறுவாங்க.ராத்திரி எட்டு மணிக்கு கண்டொண்மண்டுல நிக்கும்.போய் கூப்பிட்டு வரனும்”

“உன்கிட்ட கார் இருக்கா”

“இல்ல.ஓலா தான் புக் பண்ணணும்”

“நான் கார் எடுத்து வரவா”

“உன்கிட்ட கார் இருக்கா.”

“ஆமா.இப்போதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி கார் வாங்கினேன்.அடிக்கடி மழை பெய்யறதால ஆபிசுக்கு பைக்குல போறது சிரமமா இருக்கு.”

“ஓ”

“நான் கார் எடுத்து வரட்டுமா”

“உனக்கு எதாவது வேலை”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல”

“ஆர் யூ சூவர்”

“நான் வந்தா உனக்கு எதாவது தொந்தரவா”

“இல்ல.நீ சும்மா கேக்குனுமேன்னு கேக்குறியான்னு”

“எனக்கு அப்படியெல்லாம் கேக்க தெரியாதுடா.சரி.ஏன் நீயே ஆம்பூர் போயி கூட்டிக்கிட்டு வரல”

“அவ நீ ஒண்ணும் வரத் தேவையில்லனு சொல்லிட்டா”

“ஓ,அப்படி”

“ஆமாம்.அவளுக்கு எதையும் தனியா அவளே செய்யப் பிடிக்கும்.”

“ம்.ஸ்டாரங் லேடி”

அவன் இளித்தான்.

நான் இரவு ஆறரைப் போல வருவதாகவும் ஒன்றாகச் செல்வோம் என்று யாசரிடம் கூறிவிட்டு வீடு திரும்பினேன்.யாசர் மொட்டை மாடியிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.நான் தனியாக நடக்க ஆரம்பித்தேன்.அவன் இருந்த தெருவிலிருந்து நடந்து பார்க்கை கடந்து இடது பக்கம் திரும்பினால் வீடு.வழியில் மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.நான் அங்கேயே நின்று வெகு நேரம் அவர்களின் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மணல் வீடு இதழில் பிரசுரமான சிறுகதை