மற்றமை - சில குறிப்புகள்

தீபன்  என்கிற பிரஞ்சுப் படம் பார்த்தேன்.2015யில் வெளிவந்த திரைப்படம்.எழுத்தாளர் ஷோபா சக்தி நடித்திருக்கிறார்.கான் தங்கப்பனை விருது பெற்றிருக்கிறது.அகதிகளாக பிரான்ஸூக்கு செல்லும் மூன்று பேர் ஒரு குடும்பமாக மாறும் சித்திரத்தை தீபன் திரைப்படம் அளிக்கிறது. தீபன், யாழினி, இனியாள் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலியான ஆவணங்களைத் தயாரித்து பிரான்ஸ் செல்கிறார்கள். அங்கு தீபனுக்கு ஒரு அடுக்ககத்தின் காப்பாளராக வேலை கிடைக்கிறது.அங்கே நிகழும் பிரச்சனைகளின் ஊடே மெல்ல அந்த மூவருக்கு மத்தியில் உருவாகும் பற்று, நேசம் மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தீபன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷோபா சக்தி ஒரு வித அயர்ச்சியை படம் முழுக்க உடலில் முகத்தில் கொண்டு வருகிறார். அந்தக் குழந்தை கதாபாத்திரமாக நடித்தவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மிகத் தேர்ந்த நடிப்பு. அவரின் நடிப்பில் இருக்கும் முதிர்ச்சி ஆச்சரியம் அளித்தது.அந்த மூவரும் பிரிந்து போகாமல் ஒன்றாக இணைந்து குடும்பமாக முகிழ வேண்டும் என்று படம் பார்க்கும் போது மனம் அவாவியது. மனிதன் தன்னை மிகவும் வருத்திக்கொள்வது குடும்பத்தை உருவாக்கத்தான். பின்னர் அந்த குடும்பமே இன்னல்களும் வன்முறையும் நிரம்பியதாக இருக்கலாம். ஆனால் குடும்பம் என்கிற அமைப்பு இன்றும் மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. ஷோபா சக்தியின் நடிப்பை பார்த்த போது 96 திரைப்படத்தில் இவர் நடித்திருந்தால் விஜய் சேதுபதியை விட நன்றாக நடித்திருப்பார் என்று தோன்றியது.

*

பி.ஏ.கிருஷ்ணன் தொடர்ந்து திராவிட இயக்கங்களின் பிராமண வெறுப்பை பற்றி எழுதுகிறார். இந்துத்துவ இயக்கங்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது திராவிட இயக்கினத்தினரும் இது போல நிறைய செய்திருக்கிறார்கள் என்று எழுதுகிறார். அவர் இந்துத்துவ இயக்கங்களையும் திராவிட இயக்கங்களையும் ஒன்றாக பாவிக்க விரும்புகிறார்.இரண்டிலும் மற்றமை மீது வெறுப்பு கட்டமைக்கப்படுகிறது, இது தவறு , பிழையானது, கண்டித்தால் இரண்டையும் கண்டிக்க வேண்டுமே தவிர ஒன்றை சரியாக்கி மற்றதை பிழையாக கொள்ள இயலாது என்கிறார். அவருடைய ஆவேசம் பல நேரங்களில் இந்துத்துவ இயக்கங்களை விட திராவிட இயக்கங்கள்  மீது தான் உள்ளது. அவர் தன்னை மார்க்ஸியர் என்று சொல்லிக் கொள்கிறார்.மார்க்ஸியமும் ஒரு மற்றமையை உருவாக்கியது. அதன் பொருட்டு கம்யூனிஸக் கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதோ அங்கெல்லாம் மிகப்பெரிய அழித்தொழிப்புகள் நிகழ்ந்தன. ஒரு லட்சியவாதத்தின் துணைக்கொண்டு அவை நிகழ்த்தப்பட்டன.ஸ்டாலினை விதந்தோதும் பி.ஏ.கிருஷ்ணனுக்கு சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்த மற்றமை உருவாக்கமும் கொலைகளும் பிரச்சனைகளாகத் தெரியவில்லை போலும். 

இங்கே மற்றொரு விஷயத்தை நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.வர்க்கத்தையும் அடையாளத்தையும் இணைத்தே  இன்று நாம் மற்றமையை அணுக இயலும். இரண்டில் ஒன்றை விடுத்து ஒன்றை கொண்டால் பிழை தான் நிகழும். இந்துத்துவம் கொள்ளும் மற்றமை அடையாளத்தின் அடிப்படையில் சிறுபான்மையினர். வர்க்க அடிப்படையில் பெரும்பாலான இந்திய முஸ்லிம்களின் பொருளாதார நிலை தலித்துகளின் பொருளாதார நிலையை போலவே உள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.எந்த பெருநகரத்தின் சேரிப்பகுதிகளுக்குச் சென்றாலும் அங்கே இஸ்லாமியர்களை பெருமளவில் பார்க்க இயலும்.வர்க்க அடிப்படையில் அவர்கள் ஏழைகள்.தலித் முஸ்லிம் என்ற புத்தகத்தை ஹெச்.ஜி.ரசூல் எழுதியிருக்கிறார்.திராவிடர்களின் மற்றமை பிராமணர்கள். தமிழ் பிராமணர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் என்றாலும் அவர்கள் அரசியலில் ,கலையில் அன்று முதன்மையானவர்களாக இருந்தார்கள். பல பிராமணர்கள் நிலச்சுவான்தார்களாக இருந்தார்கள். 

சிறுபான்மை + எளியோர் என்ற இந்துத்தவ மற்றமையும் பெரும்பான்மை + வலியோர் என்ற திராவிட மற்றமையும் நேர் எதிரானவை. இரண்டும் ஒன்றல்ல.ஆனால் திராவிடத்தின் அப்படியான மற்றமை பிழையானதா என்றால் பிழையானது தான். ஆனால் அது அரசியல் அதிகாரத்தை அடைய உருவாக்கப்பட்ட ஒரு கதையாடல்.இன்று திராவிட இயக்கங்கள் எதன் பொருட்டோ உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இன்று தமிழகத்தில் இடைநிலை சாதியினர் தான் அரசியலில் , கலைத்துறைகளில்,அதிகாரத்தில் முதன்மையான பங்கை வகிக்கிறார்கள்.இனி அந்த கதையாடல் தேவையற்ற ஒன்று என்று திராவிட இயக்கங்களுக்கே தெரியும். அது பி.ஏ.கிருஷ்ணனுக்கும் தெரியும்.இரண்டையும் இணைத்துப் பேசி இந்துத்துவத்தின் மற்றமைகளோடு திராவிட மற்றமைகளை கலப்பது பிழையானச் செயல்.இந்துத்துவ எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் செயல்.ஒரு மார்க்ஸியர் இப்படிச் செய்ய மாட்டார்.

*

2021

இந்த வருடம் ஜனவரி 10ஆம் தேதி முறையிட ஒரு கடவுள் சிறுகதைத் தொகுப்பு கோயில்பட்டியில் மணல் வீடு இலக்கிய நிகழ்வில் வெளியிடப்பட்டது. முதல் புத்தகம்.முதல் சிறுகதைத் தொகுப்பு. சற்று மகிழ்ச்சியாக இருந்தது.நான் சிறுகதைகள் எழுதுவேன் , தொகுப்பாக கொண்டு வருவேன் என்று முன்னர் எண்ணவில்லை. 2015யில் எதேர்ச்சையாக பெனுகொண்டா சென்று வந்ததை புனைவாக மாற்ற முயன்று பூதக்கண்ணாடி சிறுகதை உருவானது.காலச்சுவடுக்கு அனுப்பினேன்.பிரசுரமானது.அதன் பின் தொடர்ந்து எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது.ஆறு வருடங்கள் கழித்து 2021 தொகுப்பு வெளியானது.

கட்டுரைகள் எழுதினாலும் புனைவுகளை எழுதும் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.2021யில் ஒரு கதை எழுதிப் பார்த்தேன். நன்றாக வரவில்லை. முறையிட ஒரு கடவுள் தொகுப்பில் உள்ளது போல எழுதக்கூடாது என்று எண்ணுகிறேன்.மேலும் அந்த மனநிலை இப்போது இல்லை.பிறரை பிரதானமாக்கும் கதைகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.2022 இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எழுத வேண்டும்.

ஏப்ரல் மாதம் 21ம் தேதி தந்தை இறந்து போனார். தந்தையின் மரணம் ஒரே நேரத்தில் அமைதியையும் இன்மையையும் ஏற்படுத்தியது. இப்போது இன்மை மட்டுமே தொடர்கிறது.நண்பன் நேதாஜியின் மரணம் என்னை உலுக்கிவிட்டது.என் நீண்ட நாள் நண்பன். நீங்கள் புதிய காதலியைக் கூட பெற்றுவிடலாம் ஆனால் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது.இரு சிறு குழந்தைகள்.அவனது மனைவி இந்த துயரத்தை கடந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். பெரும் பணி அவருக்காக காத்திருக்கிறது.

செப்டம்பர் வரை சென்னையில் இருந்தேன்.அதன் பின் அங்கு இருக்க பிடிக்கவில்லை.குடும்பத்துடன் பெங்களூரு வந்து விட்டேன்.வீட்டிலிருந்தே வேலை செய்வதில் நிறைய சலுகைகள் இருக்கின்றன. சலிப்பும் உண்டு. இந்த மென்பொருள் துறையில் நான் விரும்பும் வரை இருக்க இயலும் என்ற நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கிறது.வேலைக்கு தேவையானவற்றை படிக்க வேண்டும்.2022யில் அதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும்.

தி.ஜா.பாண்டியராஜூ இயக்கியுள்ள நகுலன் பற்றிய ஆவணப்படத்திற்கு சப்-டைட்டில்கள் செய்து கொடுத்தேன்.அதை அவர் பயன்படுத்திக் கொள்வாரா  என்று தெரியவில்லை ,ஆனால் சப்-டைட்டில்களுக்காக அந்த ஆவணப்படத்தை பல முறை பார்க்க வேண்டி இருந்தது. நகுலன் பற்றி தமிழ் சூழலில் இருக்கும் பல பிம்பங்கள் இந்த ஆவணப்படம் வந்தால் உடையும். அதில் பணி புரிந்தது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

கனலி கொண்டு வந்த நகுலன் சிறப்பிதழில் ஒரு கட்டுரை எழுதினேன்.அதே போல ஷங்கர்ராமசுப்ரமணியன் கொண்டு வர இருக்கும் நகுலன் இதழுக்கும் கட்டுரை எழுதியிருக்கிறேன்.ஜனவரியில் வரும். தமிழினியிலும் வனத்திலும் தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய கட்டுரைகள் எழுதினேன்.அனைத்து கட்டுரைகளையும் நன்றாக எழுத முடிந்தது.பக்தீன் பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.நன்றாக எழுத முடிந்தால் பிரசுரமாகும். வேலை அழுத்தத்திற்கு மத்தியில் வாசித்து தொகுத்து எழுதுவது சில நேரங்களில் சவாலாக இருந்தது.அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையை சரியாகச் செய்தால் அனைத்து பணிகளையும் திறன்பட செய்ய முடியும் என்று எண்ணுகிறேன்.2022யில் 2021யில் எழுதியதை விட நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும். சிறுகதைகள் எழுத வேண்டும்.

முறையிட ஒரு கடவுள் தொகுப்பை ஏதோ ஒரு வகையில் என்னளவில் அடையாளத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.அடுத்த தொகுப்பில் பிறர் தான் பேசுபொருளாக இருக்கும். நான் மிகத் தீவிரமாக நம்பும் ஒரு கருத்தின் அடிப்படையிலேயே என்னால் கதைகளை எழுத இயலுகிறது. ஒரு படிமத்தின் துணைக்கொண்டோ , அல்லது ஒரு நிகழ்வின் அடிப்படையிலோ என்னால் எழுத இயலவில்லை. அது ஒரு தோல்விதான் , ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை.கருத்தின் அடிப்படையில் தான் என்னால் தொகுத்து சிந்திக்க முடிகிறது. அதே நேரத்தில் அந்தக் கருத்து ஒரு புனைவாக மாற வேண்டும் என்றால் அதன் மீது எனக்குத் தீவிரமான நம்பிக்கை இருக்க வேண்டும். என்னளவில் அதை நான் முழுமையாக ஏற்றாக வேண்டும்.அப்போது தான் அதை என்னால் புனைவாக மாற்ற இயலுகிறது. முன்னர் அடையாளமின்மை, அபத்தம் என்பதாக எனக்கு சில கருத்துகள் இருந்தன.இடையில் சில காலம் எந்த எண்ணமும் இல்லை.அதனால் கதைகளும் எழுத முடியவில்லை. இப்போது அவற்றிலிருந்து நான் விலகி வந்து விட்டேன். நகுலனின் புனைவுகளும் கவிதைகளும் எனக்கு புதிதான ஒரு கருத்தை அளித்திருக்கிறது. அந்தக் கருத்தின் துணைக்கொண்டே நான் எனது கதைகளை எழுதவிருக்கிறேன். 

இந்த வருடம் அதிகம் வாசிக்கவில்லை , ஆனால் வாசித்தவற்றை கூர்மையாக வாசித்தேன். வரும் வருடம் முழுக்க முழுக்க சிறுகதைகளையும் , நாவல்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அதைப்பற்றி கட்டுரைகளையும் எழுதுவேன். 2022யின் பிரதான திட்டம் அதுதான். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுத வேண்டும். 2022 அல்லது 2023யில் கட்டுரைத் தொகுப்பை கொண்டு வருவேன்.

இந்த ஆண்டு போலில்லாமல் வரும் ஆண்டு கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறைந்து அனைவரும் அவரவர் இயல்பு வாழ்க்கை முறைகளுக்கு திரும்ப வேண்டும் என்பதற்கு அப்பால் கேட்பதற்கு ஒன்றுமில்லை.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.


மம்தா பானர்ஜி

 

மம்தா பானர்ஜி தொடர்ந்து 34 வருடங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சி புரிந்த இடதுசாரி கூட்டணியை முறியடித்து ஆட்சிக்கு வந்தார். மேற்கு வங்கம் தொழில் துறையில் மிகவும் பின் தங்கி இருந்ததால் அதற்கான தீர்வாக டாட்டா மோட்டர்ஸ் நிறுவனத்தின் நானோ கார் உற்பத்தியை சிங்கூரில் கொண்டு வர புத்ததேவ் பட்டாச்சார்யா முயன்றார்.நந்திகிராமில் ஒரு தொழிற்பேட்டையை உருவாக்க விரும்பினார்.இரண்டுக்கும் மிகப்பெரிய எதிர்பியக்கம் நடத்தினார் மம்தா பானர்ஜி. நானோ கார் உற்பத்தி குஜராத்துக்கு சென்றது. நந்திகிராம் தொழிற்பேட்டைத் திட்டம் கைவிடப்பட்டது.அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி தோல்வி அடைந்தது.இடதுசாரிகளுக்கு அது மிகப்பெரிய வீழ்ச்சி.அதன் பின் வங்கத்தில் அவர்கள் இன்று வரை மீளவில்லை. இனி அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்கள் இன்று கேரளத்தில் மட்டும் இருக்கிறார்கள்.அதே நேரத்தில் மிகச் சிறிய அளவில் என்றாலும் தேசம் முழுவதும் இடதுசாரிகளுக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது.பிஹார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அவர்கள் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள்.வங்கத்தை மம்தா வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதாகவும் தெரியவில்லை.ஆனால் அவரால் வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி அடைய முடியாமல் தடுக்க முடிந்தது. அது அவருக்கு தேசிய அளவில் கவனத்தை அளித்திருக்கிறது.தேசிய கதையாடலுக்கு எதிரான வங்கத்து கதையாடலை அவரால் உருவாக்க முடிந்தது அவரது வெற்றிக்கு ஒரு காரணம்.
 
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதாக இருந்தது.அவரது கோரிக்கைகளை காங்கிரஸால் ஏற்க இயலவில்லை. கன்னையா குமார் போன்றோர் காங்கிரஸில் இணைவதற்கான எண்ணத்தை அவர் தான் உருவாக்கியிருப்பார் என்று நினைக்கிறேன்.இப்போது அவர் திரினாமூல் காங்கிரஸில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணிபுரியத் தொடங்கி உள்ளார். கோவா, அஸாம் , திரிபுரா , மேகாலயா என்று திரினாமூல் காங்கிரஸில் அணி சேர்ப்பு நிகழ்வு நடந்து வருகிறது.மேகாலயாவின் முன்னாள் முதலமைச்சர் தான் பிரசாத் கிஷோருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பிறகே திரினாமூல் காங்கிரஸில் இணைந்ததாக சொல்லியிருக்கிறார். மறுபுறம் சரத்பவார் , மம்தா, கெஜ்ரிவால் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. கூட்டணிக்கு மம்தா தலைமை ஏற்கக்கூடும்.ஆம் ஆத்மி இப்போதைக்கு டெல்லியிலும் , பஞ்சாபிலும் வலுவான கட்சியாக உள்ளது.தேசியவாத காங்கிரஸ் மஹாரஷ்டிராவில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது.
 
ஆனால் கர்நாடகம்,தெலுங்கானா, கேரளம், தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் காங்கிரஸ் முக்கியக் கட்சியாக உள்ளது.அதே போல மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் இப்போதும் பெரும் வாக்கு வங்கி உள்ள கட்சிதான். உத்திரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்த நிலையில் சமாஜ்வாதி கட்சி உள்ளது.பிஹாரில் ஐக்கிய ஜனதா தளமும் , ராஷ்டிரிய ஜனதா தளமும் முக்கிய கட்சிகள்.மேலும் ராம் விலாஸ் பஸ்வானின் மகனும் கட்சி வைத்துள்ளார். இந்தக் கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணியில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.லாலு பிரசாத் யாதவ் பாரதிய ஜனதாவுக்கு செல்ல வாய்ப்பு குறைவு. காங்கிரஸ் இப்போது வலுவிழந்த கட்சிதான் என்றாலும் அதன் இருப்பு இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளது.அது இன்னொரு கட்சியின் தலைமையின் கீழ் தன்னை பொருத்திக் கொள்ள துணியாது. ராகுல் காந்தியின் செயல்முறை மாறினால் அல்லது காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை வந்தால் காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி அடையும்.ஆனால் எதிர்கட்சிகள் பிரிந்திருந்தால் 2016யில் அதிமுக வெற்றிபெற்றது போல பாரதிய ஜனதா கட்சி 2024லும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. காங்கிரஸ் இல்லாமல் மம்தாவால் பாரதிய ஜனதாவை வெல்வது சாத்தியமில்லை.பிரசாந்த் கிஷோர் நினைத்தாலும் முடியாது. ஒரு வேளை அவர்கள் 2029 தேர்தலுக்காக இப்படியான அமைப்பை உருவாக்க முனையலாம்.இந்த முறை தங்களால் எந்தளவு வெற்றி பெற முடிகிறது என்பதை அவர்கள் சோதித்துப் பார்க்கலாம்.
 
மம்தா பானர்ஜிக்கு சித்தாந்தம் என்று எதுவும் இருப்பதாக தெரியவில்லை.அவர் வெற்றி பெற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்பவர். மோதி ,அமித் ஷா போல அவரும் கடின உழைப்பாளி. அதைத் தவிர்த்து அவர் வருவதால் கூட்டாட்சி தத்துவம் மாநில சுயாட்சி போன்றவை வலுப்பெற வாய்ப்பு உள்ளது.எழுபத்தியேழில் ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தது.அப்போது அத்வான ரேடியோ அமைச்சராக இருந்தார்.வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.மொரார்ஜி தேசாய் சில காலமும் சரண் சிங் சில காலமும் பிரதமராக இருந்தார்கள்.இரண்டாவது விடுதலை இயக்கம் என்று அது சொல்லப்படுகிறது.அப்போது ஜெயபிரகாஷ் நாரயணனின் மாணவர்கள் என்ற அரசியலுக்கு வந்தவர்கள் தான் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் எல்லாம்.மூன்று வருடங்களில் ஆட்சி கலைந்தது.ஆனால் அது காங்கிரஸ் இல்லாத முதல் ஆட்சி. அதற்கு முன்னரே காங்கிரஸ் இரண்டாக உடைந்தது என்பதையும் நாம் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும்.எண்பத்தொண்பதிலும் தொண்ணூற்றியாறிலும் கூட்டணி ஆட்சி உருவானது.அவை இரண்டுமே இரண்டு வருடங்களே நீடித்தன. இரண்டும் கலைவதற்கு காங்கிரஸ் காரணமாக இருந்தது.
 
அது போன்ற காங்கிரஸ் இல்லாத ஒரு கூட்டணி இப்போது உருவாகி ஆட்சி அமைப்பது அத்தனை எளிதானதாக தெரியவில்லை.பாரதிய ஜனதா கட்சி இன்று வலுவான வாக்கு வங்கி உள்ள மிகப்பெரிய கட்சி.அதை அத்தனை எளிதில் முறியடிப்பது சாத்தியமில்லை.இன்று மோதி அலை என்று ஒன்று இல்லை. வங்கத்தில் தோற்றிருக்கிறார்கள்.பஞ்சாப்பில் அவர்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.உத்திரப்பிரதேசத்தில் அவர்களுக்கு கடினமான போட்டி இருக்கும். உத்திரப்பிரதேசத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திசைகாட்டியாக அமையும்.ஆட்டங்கள் பிறழ் ஆட்டங்கள் எதிர் ஆட்டங்கள் என பூமித் தளத்தின் பொழுதுகள் மெல்ல விடிந்தன என்று பகடையாட்டம் நாவலில் யுவன் சந்திரசேகர் எழுதியது போல வருங்காலத்தில் நடக்கவிருக்கும் ஆட்டங்களை நாம் பார்க்கவிருக்கிறோம். ஆனால் எப்படிப்பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி மறுபடியும் ஆட்சிக்கு வராத வகையில் ஆட்டங்கள் இருக்க வேண்டும்.பார்ப்போம்.
 
 

பாரதி மணி

 

பாரதி மணி


பாரதி மணி அவர்களின் இறப்பு வருத்தமளிக்கிறது. நான் 2009யில் எடுத்த ராவ் சாஹிப் குறும்படத்தில் அவர் நடித்தார்.நவம்பரில் சென்னையில் இது போன்ற ஒரு மழைக்காலத்தில் திருவல்லிக்கேணி, அடையார் ஆகிய இடங்களில் மூன்று அல்லது நான்கு நாட்கள் படத்தை எடுத்தோம். எனக்கு எந்த திரைத்துறை அனுபவமும் இல்லை. காட்சிகளை எப்படி ஷாட்டுகளாக மாற்ற வேண்டும் என்ற புரிதலும் இல்லை. ஏதோ எடுத்தேன். அவரும் அலிடாலியா ராஜாமணி அவர்களும் அந்த மழையிலும் வந்து நடித்துக்கொடுத்தார்கள்.சென்ற வருடம் இறந்து போன அருண்மொழி அந்தப் படத்திற்கு நிறைய உதவிகள் செய்தார்.அந்தப் படத்தை எடுத்த போதும் அதன் பிறகும் சில முறை விருகம்பாக்கத்தில் இருந்த அவரது இல்லத்தில் அவரை சந்தித்திருக்கிறேன்.நான் இயக்கிய இரண்டாவது குறும்படத்தில் அவரை நடிக்கக் கேட்டு 2013யில் ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்றேன். பிறகு அதில் எஸ்.எஸ்.ராமன் நடித்தார். அதன் பிறகு அவரை அதிகம் சந்திக்கவில்லை. 
 
எப்போதும் கையில் பைப்புடன் சாக்லெட் நறுமணம் தரும் புகையிலையை நிரப்பி அறையில் கம்பீரமாக அமர்ந்திருப்பார். தொலைக்காட்சியில் எதாவது செய்திச் சேனல் ஓடிக்கொண்டிருக்கும். இவ்வளவு தனியாக எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு முறை கேட்டிருக்கிறேன்.நண்பர்கள் வருவார்கள், இசை கேட்பேன் என்று சொல்லியிருக்கிறார்.பல வருடங்கள் சென்னையில் தனியாக இருந்தார்.ஆனால் தனிமையிலும் அவர் நிறைவாகவே இருந்தார் என்பதே என் எண்ணம்.கடந்த நான்கு ஐந்து வருடங்களாகத்தான் அவர் பெங்களூரில் அவர்களின் மகள்கள் வீட்டில் வாழ்ந்து வந்தார்.கொரோனா காலத்தில் எப்படி இருக்கிறீர்கள் என்று சென்ற வருடம் அழைத்து நலம் விசாரித்தார்.நானும் கோரமங்களாவில் தான் இருக்கிறேன் என்றேன்.பின்னர் எல்லாம் சரியானபின் வந்து பாருங்கள் என்றார்.பண்பாளர்.
 
நாடகங்கள் மீது அவருக்கு பெரும் பற்று இருந்தது.செம்மீன் படத்தின் தேசிய விருதுக்கு அவரும் ஒரு காரணம்.உச்சரிப்பு குறித்து நிறைய கவனம் கொள்வார்.மோடி இல்லை மோதி , லல்லு இல்லை லாலு என்பார்.திண்டிவனம் என்பது Tindivanam என்கிற போது ஏன் பாரதி என்பது Bharathi ஆகிறது Bharati என்று தானே இருக்க வேண்டும் என்று கேட்பார். தன் பெயருக்கு முன் அவர் பாரதியை இணைத்துக்கொண்ட போது Bharati என்று தான் எழுதினார்.எதையும் திருத்தமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். லெனின் இயக்கிய ஊருக்கு நூறு பேர் படத்தில் நடித்திருப்பார். பாரதி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார்.ஷாயாஜி ஷிண்டேவை அவர் தான் தேர்வு செய்தார். பாரதி மணி அவர்களின் திரைப் பங்களிப்பில் முக்கியமான ஆக்கம் பாரதி திரைப்படம் . செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் முதலமைச்சர் வேடத்தில் அவர் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது.அந்தப் படத்தில் அவரது குரலைக்கூட சற்று மாற்றி பேசியிருப்பார் என்று எண்ணுகிறேன்.இறுதியாக சைக்கோ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.
 
டெல்லியில் பல நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்.அவரே இறுதியில் ஒரு நிறுவனத்தை நடத்தினார்.பின்னர் எதன் பொருட்டோ அவர் அனைத்தையும் விட்டுவிட்டு சென்னையில் விருகம்பாக்கத்தில் ஒரு வீடு எடுத்து தங்கினார்.ஐம்பது வருடங்கள் இருந்த ஊரை விடுத்து அறுபது வயதுக்குப் பின்னர் தனியாக தங்க அவர் சென்னையை தேர்தெடுத்து வந்தது எனக்கு ஆச்சரியம் அளித்தது.பள்ளிப் படிப்பை முடித்து டெல்லி சென்று அக்கா வீட்டில் தங்கி பி.காம் , எம்.பி.ஏ என்று வேலை செய்து கொண்டே படித்து வாழ்க்கையில் முன்னேறியவர்.டெல்லியில் தேசிய நாடகப் பள்ளியில் இந்திய நாடகத்துறையில் புது பாய்ச்சலை கொண்டு வந்த மேதை இப்ராஹிம் அல்காஸியிடம் பயின்றார்.ஐம்பது வருடங்களுக்கு மேலாக நாடகங்களை இயற்றி நடித்தார்.இசை , திரைப்படங்கள் , நாடகங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். நன்கு சமைப்பார். கூர்மையான நினைவுத்திறன் கொண்டவர்.அவர் தனியாக இசைக்கேட்டுக் கொண்டு இருக்கும் சித்திரத்தின் அடிப்படையில் "நடிகர்" என்ற ஒரு கதையை எழுதினேன். அந்தக் கதையில் வரும் வாசுதேவன் கதாபாத்திரத்திற்கும் அவரின் குணத்திற்கும் தொடர்பு இல்லை. ஆனால் புறச்சித்திரமாக அவரை வரித்துக்கொண்டேன். இறந்த பின் எந்த சடங்குகளும் செய்யாமல் அவர் தன் உடலை புனித ஜோன்ஸ் மருத்துவமனைக்கு கொடுத்து விட சொல்லியிருக்கிறார்.அதன் படி அவரின் மகள்களும் அப்படியே செய்திருக்கிறார்கள்.அவர் டெல்லியில் இருந்த போது இறந்து போனவர்களுக்கு உதவியது குறித்து தில்லியில் நிகம்போத் காட் என்ற கட்டுரை எழுதியிருப்பார். அந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது.என் அஞ்சலி.
 

 

வந்து போகும் அர்ச்சுனன்

 

 


 

அடையாள அரசியல் மிக அதிக அளவில் மக்களை பிளவுபடுத்தும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.சில அடையாளங்கள் பிறப்பால் வருபவை.சில நாம் விரும்பி பெற்றுக்கொள்பவை, அடைபவை.அடையாள எல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அவாவை உள்ளடக்கியவை நகுலனின் படைப்புகள்.நகுலனின் தன் படைப்புகள் வழி அவர் இந்த அடையாள அணித்திரள்விலிருந்து விடுவித்துக்கொள்வதை பற்றியே முதன்மையாக அக்கறை கொள்கிறார்.

கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தன் உடலை எடுத்து கோட்ஸ்டாண்டில் மாட்டிவிடும் எளிய கற்பனையிலிருந்து  சாத்தியப்பட்ட கவிதைகள்.நாம் கோட்ஸ்டாண்டில் உடைகளை மாட்டுவோம்.உடலைக் கழற்றி தொங்கவிட்டால் என்ற சர்ரியலிஸ நோக்கே அந்தக் கவிதைகள் உருக்கொள்ள காரணம்.ஆனால் அந்தக் கவிதைகள் வழி அவர் ஒரு அரூப உலகை சிருஷ்டித்து வேடிக்கைக் காட்டி நின்று விட விரும்பவில்லை.அவை அந்தக் கவிதைகளின் நோக்கமும் அல்ல.அவர் தன் தத்துவத்தை அந்தக் கவிதைகள் வழி கூறுகிறார்.உடல் தான் அணைத்து வேறுபாடுகளுக்குமான துவக்கமாக இருக்கிறது.உடலைக் கழற்றுதல் என்ற இந்தக் கவிதைகள் உடல் பொய் என்ற தரிசனத்தை பேசவில்லை.நகுலன் உடல் மாயை என்று சொல்லும் அத்வைதி அல்ல.அத்வைதம் உடலை மறுத்து ஆன்மாவை பிரம்மத்தின் சூக்கும வடிவமாக மாற்றி ஏகம் அத்விதீயம் , ஒன்று இரண்டற்றது என்கிறது.நகுலன் உலகத்தை மாயமாக பார்க்கவில்லை.மனிதன் தன்னை மீறினால் ஒழிய ஒன்றும் முடியாது என்பது என் சித்தாந்தம் என்று நவீனன் நினைவுப்பாதையில் எண்ணிக்கொள்கிறான்.மனிதன் தன்னை மீற இருக்கும் பல்வேறு சாத்தியங்களில் ஒன்று உடலைக் கழற்றுதல்.அதுதான் கோட்ஸ்டாண்ட் கவிதைகள்.

மனிதன் தன்னை மீறுவது என்பது தன் அடையாளத்தை மீறுவதுதான்.அவன் எல்லைகளை கடந்துகொண்டிருக்கிறான் என்கிறார் நகுலன்.கலை வெளிப்பாடுகளில் உருவம் அருவம் இரண்டும் உள்ளன.உருவம் கொண்டு அருவம் கண்டு மறுபடியம் உருவத்தை பிரதிஷ்டை செய்கிறான் இன்றைய மனிதன்.

நினைவுப்பாதையில் நடராஜனுக்கும் நவீனனுக்கும் இடையிலான ஓர் உரையாடல்.

“என்ன செய்வது பார்க்கிறோம்,பேசுகிறோம்,சிந்திக்கிறோம்.கனவு காண்கிறோம்,நாகரிகம் வளர ,வளர நாற்காலியும் அதைச் செய்த தச்சனும் ஆதியில் ஒருவனும் ஒன்றும் பினணந்திருந்ததைப் போல இப்போது முடியாது.ஸமைன் வீல்…”

“யார் இந்த ஸமைன் வீல்”

“சச்சிதானந்தன் பிள்ளையை போல இன்னொரு பைத்தியம் என்று வைத்துக்கொள்”

“ஸமைன் சொன்னது போல தச்சனை விட எஞ்சினியர் மேல்.ஏனென்றால் அவனால் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடிவதால், சந்தேகங்கள் ஊடே சஞ்சரிக்க முடியுமென்பதால் இதெல்லாம் படைப்பு இலக்கியத்திற்கும் பொருந்தும்.மேலும் நீ இன்னும் என் நாவலைப் படிக்கவில்லை. ஆதலால் அதைப் பற்றி இப்பொழுதே எப்படி அபிப்பிராயம் சொல்ல முடியும்?”

“அதாவது ஸ்தூலமும் சூக்குமமும் ஒன்றிலொன்று இணையும் பொழுது மற்றொன்று தோன்றி அதன் முழு உருவத்தைத் தன் இயல்பில் எய்துகிறது என்கிறாய்”

நகுலன் கல்குதிரை நேர்காணலில் தன்னைக் கருத்துமுதல்வாதி அல்லது பொருள்முதல்வாதி என்று தொகுக்க இயலாது என்கிறார்.அவரை இயங்கியலாளர் என்று தொகுக்க முடியும் என்று எண்ணுகிறேன்.நிலப்பிரபுத்துவக் காலத்தில் தச்சன் இருந்தான்.முதலாளித்துவ அல்லது சோஷியலிசக் காலத்தில் பொறியியலாளன் வருகிறான்.தச்சன் நாற்காலியோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். பொறியியலாளன் தான் படைக்கும் பொருளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.பொதுவாக நாம் இதை அந்நியமாதல் என்ற கோட்பாடுடன் இணைத்து புரிந்து கொள்கிறோம்.தச்சன் தன் உழைப்பின் பருண்மை வடிவத்தை பார்க்க உணர முடிகிறது.அதன் பயனை அறிய இயல்கிறது.அவன் தச்சன் , ஆசாரி என்றே அழைக்கப்படுகிறான்.அவனுக்கு ஓர் அடையாளம் உண்டு.அவனது எல்லைகள் சில நூறு கீலோமீட்டருக்குள் அடங்கிவிடுபவை.ஆனால் ஒரு பொறியியலாளன் தான் அதுவரை கொண்டவற்றை கொண்டு அருவமான ஒரு கோட்பாட்டை உருவாக்குகிறான்.ஆற்றல் ஒன்றிலிருந்து ஒன்றாக மாற முடியும் , ஆனால் அழியாது என்பது வெப்ப இயக்கவியலின் முதல் விதி.இரண்டாம் விதி அதே நேரத்தில் ஒரு ஆற்றல் முழுமையாக வேறொன்றாக மாறாது , அவை வேறு ஆற்றல்களாக மாறி வீனாகவும் செய்யும் என்றும் சொல்கிறது.அதாவது மின்சாரத்தை கொண்டு மோட்டரை சுற்ற வைத்து பின் அதில் ஒரு ஜெனரேட்டரை இணைத்து அதே அளவிலான மின்சாரத்தை உருவாக்க இயலாது.அதில் ஆற்றல் வீனாகும்.இதற்கு இரண்டாம் வெப்ப இயக்கவியல் விதி என்று பெயரிடுகிறான்.விதி செய்கிறான் பொறியியலாளன்.அவன் உலகத்தை சோதனைக் கூடமாக மாற்றி அருவப்படுத்தி அதிலிருந்து விதி சமைத்து உருவங்கள் படைக்கிறான். இங்கே நாம் பொதுவாக சொல்லும் முதலாளித்துவ சமூகத்தில் அந்நியமாதல் உண்டு என்பதை கடந்து எப்படி இன்றைய மனிதனின் பெளதீக உலகம் அருவமாக அவனுள் உருக்கொள்கிறது என்கிறார் நகுலன்.இதனால் தான் ஆப்பிள் கிழே விழுந்ததை பார்த்து புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் நியூட்டன் என்பது எத்தனை எளிய அபத்த வாதம் என்கிறான் நவீனன்.புத்தர் மூன்று துயரக்காட்சிகளை கண்டு துறவறம் பூண்டார் என்ற அபத்த வாதத்தையும் நாம் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.மனிதன் சந்தேகங்கள் ஊடே சஞ்சரிப்பவன்.அப்படி சஞ்சரித்து பிரச்சனைகளைப் புரிந்து கொள்கிறான்.இந்தக் கருத்தை தமிழில் வேறு எழுத்தாளர்கள் எழுதி நான் கண்டதில்லை.நகுலனை இந்த அடிப்படையில் இயங்கியலாளர் என்று சொல்ல முடியும்.

இருத்தலியம் மனிதனை சுதந்திரமானவனாக கருதுகிறது.அவன் தனிமனிதன் என்கிறது.அவனது செயல்களுக்கு அவனே பொறுப்பு என்று சொல்கிறது.நகுலன் இருத்தலியவாதத்தை தன் கவிதைகள் வழி நாவல்கள் வழி முன்வைத்தார் என்று சொல்ல இயலும்.தனிமையை இருத்தலிய அவதியை தன் கவிதைகள் வழி முன்வைத்தார்,அவரது நாவல்களில் வரும் பிளவுண்ட ஆளுமை அந்த அந்நியமாதலால் உருவாக்கிய ஒன்றுதான் என்றும் சிலர் சொல்லக்கூடும்.ஆனால் நகுலன் இருத்தலியவாதியும் அல்ல, நவீனத்துவரும் அல்ல.உண்மையில் நகுலன் அதன் மறுதரப்பை சொல்ல முனைந்தார்.

நினைவுப்பாதை நாவலில் - மேல்நாட்டில் மனிதனின் ஆற்றலை மிகைப்படுத்துகிறார்கள் என்கிறான் நவீனன்.மனிதன் கட்டுண்டவன்.நினைவுப்பாதையில் நவீனன் சிவன் , நடராஜன் என்ற இலக்கிய நண்பர்களுடன் தொடர்ந்து உரையாடுகிறான்.நவீனன் சுசீலா என்ற பெண்னை விரும்புகிறான்.அவளுக்கு வேறு யாருடனோ திருமணம் நிகழ்கிறது.நவீனன் தன்னைப்பற்றிய தன் நண்பர்களைப் பற்றிய சுசீலா குறித்த நாவலை டயரி வடிவில் எழுதுகிறான்.ஏன் டயரி வடிவில் எழுத வேண்டும்.ஏனேனில் நாட்குறிப்பு உண்மைக்கு மிக அருகில் வருகிறது.நவீனன் நகுலனுடன் மனம் விட்டு பேச பிரியப்படுகிறான்.ஆனால் நேரடியாக பேச இயலவில்லை.ஏனேனில் உண்மையை நேரடியாக எதிர்கொள்ளும் தைரியம் மனிதனுக்கு இருப்பதில்லை.அதனால் நாட்குறிப்பாக எழுதுகிறான்.இறுதியில் நவீனன் சில நாட்கள் மனநலவிடுதியில் இருக்கிறான்.குணமாகி வீடு திரும்புகிறான்.தன்னை அழிப்பது , கரைத்துக்கொள்வது , விடுவித்துக்கொள்வது , மழை மண்ணை புணர்வது போல இரண்டரக்கலப்பது என்று தனிமனித இருப்பை கடந்த நிலையை நகுலன் முன்வைக்கிறார்.

நகுலன் என்ற பெயர் குறித்து எம்.டி.முத்துகுமாரசாமி தன் பெயரில் என்ன இருக்கிறது என்ற கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.நகுலன் பாண்டவர்களில் ஒருவன்.ஆனால் அர்ஜூனன் போல பீமன் போல தனித்த அடையாளம் அற்றவன்.அவன் பாண்டவர்களின் நிழல்.நிழல்கள் தனித்த இருப்பு இல்லாதவை.நகுலனின் பிளவுண்ட ஆளுமை நவீனன்.மற்றமையாகவே தன்னை காணுதல் தான் நவீனன்.நவீனனின் மனம் நதி தன் பாதை மாறி பிரவாகிப்பது போல கோர்வையற்று பாய்கிறது.மழை மரம் காற்று கவிதையில் இவ்வாறு எழுதுகிறார்.

கண்ணாடிகள் சூழ
நான் ஏன் பிறந்தேன்
பகல் பொழுது
என்னைச் சுற்றி வட்டமிடுகிறது
ராத்திரியில்
ஒவ்வொரு நக்ஷத்திரமும்
என்னை ப்ரசவிக்கிறது
நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை

தன் தனிமனிதப் பிரக்ஞையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அவாவுதல் நகுலனின் படைப்புகளில் தொடர்ந்து வருகிறது.நினைவுப்பாதை – பார்க்க பயமாக இருக்கிறது / பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை என்று நினைவுப்பாதையை கூறுகிறார்.நம் நினைவுகள் நம்மை கரைந்து செல்ல இயலாமல் தடுக்கின்றன.நமது பிரக்ஞை நினைவுகளின் வழியே விழிப்புடன் இருக்கிறது.நினைவுகளையே நாம் அறிவு என்றும் கூறுகிறோம்.இந்த எண்ணம் நகுலன் எழுத்தில் மட்டும் அல்ல சமீபத்தில் எழுதும் சபரிநாதன் எழுத்தில் கூட தென்படுகிறது.

அடையாள அரசியல் பிறர் என்ற கதையாடலை கட்டி எழுப்புகிறது.இன்றைய தனிமனிதர்கள் உலகமே அடையாள அரசியலின் அடித்தளம்.தனிமனிதப் பிரக்ஞை இல்லையேல் அடையாள அணித்திரள்வு சாத்தியமில்லை.ஏனேனில் அங்கு பிறர் சாத்தியமில்லை.பிறர் என்பது நரகம் என்று மீள முடியுமா நாடகத்தில் சார்த்தர் எழுதியது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.இருத்திலியத்தின் இருண்ட பக்கங்கள் பிறர் குறித்த அதன் எண்ணங்கள்.  

நினைவுப்பாதையில் நடராஜன் எழுதிய அனுபவ சத்தியங்கள் என்ற நாவல் வெளியிடப்படுகிறது.நாவலின் முன்னுரையில் நடராஜன் 20ஆம் நூற்றாண்டில் எப்படிப் பொருளாதாரம், பதவிமோகம்,புகழாசை ஆட்சி செலுத்துகின்றன என்பது குறித்து எழுதியிருக்கிறான். “பிதாவே எங்களை மன்னித்துவிடு , எங்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாது” என்று சச்சிதானந்தம் பிள்ளை சொல்லக்கூடும் என்று நினைத்துக்கொள்கிறான் நவீனன்.மனிதனை மீறியது ஒன்றுமில்லை என்கிறான் நடராஜன். எப்படி அனுபவத்தை அழிப்பது என்று தனக்குத் தெரியவில்லை , ஆனால் அதுவே தன் பாதை என்று எண்ணுகிறான் நவீனன்.

உடலை கோட்ஸ்டாண்டில் தொங்கவிடுவதின் வழி மற்றும் மனம் பிரக்ஞையிலிருந்து தப்பிப்பது ஆகியவற்றின் வழி நகுலன் வேண்டுவது அடையாளங்களிலிருந்து அனுபவங்களிலிருந்து நினைவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதையைத்தான்.இதன் பயன் என்ன.பிறருக்கும் தனக்குமான எல்லைகளை அறுத்து அடையாளமற்ற பெருவெளியை உருவாக்க முனைகிறார் நகுலன்.அப்படியான அடையாளமற்ற பெருவெளி மற்றமை என்பதை இல்லாமல் செய்யும்.

ஆல்பர் காம்யூவும் இப்படியான ஒரு மானுட நேசத்தை முன்வைக்கிறார்.ஆனால் காம்யூ அதை மனிதன் தன் முழுப் பிரக்ஞை வழி அடைய வேண்டும் என்கிறார்.நீங்கள் இந்த உலகம் அபத்தம் என்று ஏற்க வேண்டும். இந்த அபத்த உலகை உங்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ள வேண்டும்.அனைத்தும் அபத்தம் என்பதால் அதற்கு எதிரான கிளர்ச்சியே நமது இருப்பை அர்த்தப்படுத்துகிறது.அப்படியாக மானுட நேசம் சாத்தியம் என்கிறார் காம்யூ.ஆனால் நகுலன் வாழ்க்கை அபத்தமானது என்று சொல்லவில்லை.அவர் பிறர் என்ற ஒன்று இல்லை என்ற என்ற நிலைக்கான தாவுதலை பற்றியே பேசுகிறார்.

ராமச்சந்திரன் கவிதையில் ராமச்சந்திரன் என்பதன் அடையாளம் இல்லாமல் போகிறது.யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு நகுலன் எல்லாம் என்கிறார்.இந்த உலகத்தை மாற்றுவது தான் நம் வேலை என்று மார்க்ஸ சொன்னதை மறுப்பவை நகுலன் கவிதைகள்.மனிதன் நீங்கள் எண்ணுவது போல அத்தனை பெரிய ஆளெல்லாம் இல்லை என்கிறார் நகுலன்.

நினைவுப்பாதை நாவலில் வரும் கொல்லிப்பாவை – 1 என்ற கவிதையின் தொடக்க வரிகள் இவை.

திரெளபதி அவள்
வந்து போகும் அர்ச்சுனன் நான்
வில்லெடுத்துக் கணைபூட்டி
நாண்வளைத்துக் குறிவிழ்த்தி
செளரியம் காட்டிச் சமர் செய்து
காதல் பெற்றான் ஒருவன்
ஆனால்
வந்து போகும் அர்ச்சுனன் நான்


நாக்கடித்து வாய்ப்பறை கொட்டி
வோதாந்தக் கயிறு திரித்துக்
குறிதான் ஏதுமின்றி
ஆண்மை தோற்று
பேடியெனப் பால்திரிந்து
அவள் உருக் கண்டு
உள்ளங் குலைந்து
உரம் வேண்டி
வந்து போகும் அர்ச்சுனன் நான்

 

திரெளபதியை நாண்வளைத்துச் காதல் பெற்ற அர்ச்சுனன் அல்ல தான், அடையாளம் அற்று வந்து போகும் அர்ச்சுனன் நான் என்கிறான் நவீனன். இங்கும் தன்னிலை அற்று மற்றொன்றில் தன்னை கரைத்துக்கொள்ளும் நிலை தான் கவிதையில் வருகிறது.நகுலனின் மனிதர்கள் முழுமையானவர்கள் அல்ல.அவர்கள் பிறிதொடு இணைந்து முழுமைக்கு வேண்டுகிறார்கள்.பிறிது இல்லாமல் முழுமை சாத்தியமில்லை.தன்னை அழித்து மற்றமையில் தன்னை கண்டுகொள்ள விரும்புகிறார்கள் நகுலனின் தனிமனிதர்கள்.நகுலனே நவீனனாக பிளவு கொள்கிறான்.பிறரில் தன்னை காண விரும்புபவர்களே பிளவுண்ட ஆளுமையாகுகிறார்கள்.நாம் நமது அகங்காரத்தை முழுமையாக இழந்து பிறருடன் – அவர் உங்கள் காதலியாகவோ மனைவியாகவோ நண்பனாகவோ இருக்கலாம் – ஆனால் எந்த எல்லை வரை அதை உங்களால் செய்ய முடியும். நீங்கள் யாரையோ ஏமாற்றியதைப் பற்றி அப்பட்டமாக இன்னொருவருடன் - அவர் உங்களுக்கு எவ்வளவுதான் நெருக்கமானவர் என்றாலும் – உங்களால் பகிரந்து கொள்ள இயலாது.அப்படியே பகிரந்துகொண்டாலும் அதை எந்தளவு முழுமையாக சொல்ல முடியும். உண்மைக்கு மிக அருகில் செல்லும் போது நீங்கள் உங்களை நியாயப்படுத்த ஏதேனும் ஒரு புனைவை உருவாக்கி விடுவீர்கள்.மனிதனால் அப்பட்டமாக பிறிதொடு இணைவது சாத்தியமில்லை.நகுலன் நவீனன் என்ற பிளவுண்ட ஆளுமை இந்த உண்மையை மிக அருகில் பார்ப்பதற்கான ஓர் ஏற்பாடாகவும் கொள்ள முடியும்.

உடல் அற்று போதல், அறிவு தான் நினைவு என்றால் நினைவு இல்லாது போதல், மனம் பிறழ்ந்து போதல், பால் திரிந்து பிறிதொடு ஒன்றாகுதல் ஆகியவைதான் நகுலன் முன்வைக்கும் விடுதலைக்கான பாதை.இருத்தலியத்தில் பிறர் என்பது நரகம் என்ற பிறழ்வு நிகழும் போது நகுலன் தான்Xபிறர் என்ற எல்லைகளை கடக்கும் விடுதலையை இணக்கத்தைப் பற்றி பேசுகிறார்.

இருப்பதற்கென்று தான் வருகிறோம் / இல்லாமல் போகிறாம் என்பது வருத்தத்தை தனிமையை சொல்லும் நிலை அல்ல.மாறாக தனிமனிதன் என்ற உணர்வு இல்லாது போதலே நகுலன் முன்வைக்கும் சாத்தியம்.வானத்தின் பகுதியாகிவிடும் பறவை போல அல்ல மண்ணின் பகுதியாகிவிடும் உடல் போல.

அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் பதினெட்டு வயது இளைஞன் தான் சுமந்து நிற்கும் அடையாளங்களே தன்னை ஒரு சிறுமியிடம் எதிரியாக காண்பிக்கிறது என்பதை உணர்கிறான்.அவன் தான் சுமந்து நிற்கும் அடையாளங்களை கண்டு அருவெருப்பு அடைகிறான்.அவன் அங்கிருந்து ஓடுகிறான்.தன் அடையாளங்களிலிருந்து ஒடுகிறான். அவன் அமைப்புகளில் தன்னை பொருத்திக்கொள்ள இயலாத தனிமனிதன் ஆகிறான்.நகுலனும் அந்த அடையாள அழிப்பை தான் முன்வைக்கிறார்.ஆனால் அவர் அடையாளம் அழித்து தனிமனிதன் ஆவதை பேசவில்லை. அடையாளம் அழித்து , உடல் அழித்து, நினைவுகளிலிருந்து தப்பி, பிறிதாகும் நிலை பற்றி பேசுகிறார்.அந்தப் பதினெட்டு வயது இளைஞன் சிறுமியாகும் நிலை.இந்த இடத்தில் அசோகமித்திரனும் நகுலனும் மாறுபாடுகிறார்கள்.அசோகமித்திரனும் நகுலன் ஓரெல்லை வரை ஒன்றாகி பிறகு பிரிகிறார்கள்.நான் கவனித்தவரை அசோகமித்திரனும் நகுலனும் தமிழில் தங்கள் இலக்கியங்களின் வழி ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள்.இவை எளிதானவை அல்ல.மிகப்பெரிய சாதனை.அரிதாகவே நிகழக்கூடியவை.நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதினாலும் அப்படியான ஒரு நிகழ்த்துதல் சாத்தியமில்லை.ஏனேனில் அது பழகிய பாதை அல்ல.

நகுலன் இருத்தலியவாதியோ , நவீனத்துவரோ அல்ல, அத்வைதியோ அல்ல.அவரை பின்நவீனத்துவர் என்று சொல்ல முடியும்.இயங்கியலாளர் எனலாம்.தனிமனிதன் மீது எதையும் ஏற்றாதவர் என்பதால் அவர் இருத்தலியவாதி அல்ல.உடல் பொய் என்ற வேதாந்தம் பேசமால் உடல் கடந்து பிறிதொடு ஐக்கியமாகும் நிலையை அவர் பேசினார்.அதனால் அவர் அத்வைதியும் அல்ல.இது நகுலனின் நூற்றாண்டு.தமிழில் நகுலன் குறித்து எழுதப்பட்டவற்றுள் பெரும்பாலானவை அவரை எப்படி தொகுத்துக் கொள்வது என்று தெரியாமல் விக்கித்து நிற்பவை.அல்லது நகுலன் எளிய விஷயங்களை புரியாத வகையில் பேசுகிறார் என்று புறம் ஒதுக்குபவை.நகுலன் தன் கவிதைகள் வழி, தன் நாவல்களின் மொழி வழி ,கண்டுபிடிப்புகள் வழி தமிழின் மகத்தான படைப்பாளியாக வீற்றிருக்கிறார்.அவரது நோக்கு, தத்துவம் அவரது நாவல்களில் , கவிதைகளில் , கதைகளில் எளிதில் கண்டுகொள்ளும் வகையிலேயே இருக்கின்றன.நாம் தான் நம் அகங்காரங்களை களைந்து அவர் சொல்வதை புரிந்துகொள்ள முயல வேண்டும்.இன்றைய அடையாளங்கள் சூழ் உலகின் ,தனிமனித உரிமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் உலகின் எதிர்க்குரல் நகுலன்.

கனலி இணைய இதழில் பிரசுரமான கட்டுரை.

 

மனித அகம்

 

மனித அகத்தில் ஒரு கூடுண்டு.ஒவ்வொருவரும் தன்னைப்பற்றிய ஒரு பிம்பத்தை அதில் தொகுத்து வைக்கின்றனர்.ஒரு குழந்தையின் மணல் வீடு போன்றது தான் அது. அந்தக் கூட்டில் தான் அவன் தன் புத்தாடை அணிந்து தலை வாரி மிட்டாயை மென்றவாறு தாய் தந்தையருடன் அமர்ந்திருக்கிறான்.அங்கு அவன் உலகம் பூரணமாக இருக்கிறது.அவன் யார் , இந்த உலகில் அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பது குறித்த தொகுப்பு அந்தக் கூட்டில் தான் உள்ளது.மனிதன் தன் ஒவ்வொரு நாளையும் அந்தக் கூட்டின் பிம்பத்தைக் கொண்டுதான் எதிர்கொள்கிறான்.அங்கு தான் நேற்றைக்கும் நாளைக்குமான தொடர்ச்சி அவனுக்குக் கிடைக்கிறது.வாழ்க்கை நிலையற்றது , அனைத்தும் மாறிக்கொண்டிருக்கிறது என்று அனைத்து சமயங்களும் கூவிக்கொண்டிருந்தாலும் அந்தக் கூட்டில் சலனமேதும் இருப்பதில்லை.
 
காதல், அவமானம்,இழப்பு,மரணம் ஆகியவை ஓரெல்லை வரை இந்தக் கூட்டின் மீது எறியப்படும் கற்கள்.உடைந்து போகும் கூடுடையோர் தான் பெரும்பாலும் கலைஞர்களாகவும் இருக்கிறார்கள்.தந்தி அறுபடும் நிலை.உடைந்த கூடுகளிலிருந்து பதறி வெளியே செல்லும் குருவிகள் போல மனிதன் பதற்றம் கொள்கிறான்.பல நேரங்களில் ஒரு அதிர்ச்சியான தகவலை நாம் காலம் தாழ்த்தி மெல்ல அதற்கான மனத்தயாரிப்புகளை உருவாக்கி ஒருவரிடம் சொன்னால் அவர் அதை எளிதல் உள்வாங்குவார்.அதற்கு காரணம் அந்தக் கூடு உடையாமல் இருப்பது தான். பத்மராஜனின் ஒரு படத்தின் தலைப்பு கூடு ஏவிடே.காதல் ஒரு வகையில் மனிதன் தன்னை நிரப்பிக்கொள்ள முன்வைக்கும் ஒரு மன்றாடல்.பக்திக் கவிதைகள் காதல் கவிதைகளாகவும் இருக்கின்றன.அனைத்துக் காதல் கவிதைகளும் பக்திக் கவிதைகளாவும் மாறும் சாத்தியங்களைக் கொண்டுள்ளன.காதல் தோல்வி சிலருக்கு அந்தக் கூட்டை நிரந்தரமாக சிதைத்து விடுகிறது.மனிதன் தன்னைப் பற்றிய சுயத்தை அந்தக் கூட்டில் தான் பொதித்து வைக்கிறான்.அந்த சுயம் கலைந்து விடுவது கண்ணாடியில் உங்கள் முகம் சரியாக தெரியாதது போலத்தான்.அவமானம் , இழப்பு ஆகியவையும் அந்த சுயத்தை அழிக்கிறது. அப்போது தண்ணீரிலிருந்து வெளியேறிவிடுகின்ற மீனைப் போல அவன் அல்லலுறுகிறான். மரம் கொள்ளும் வேர்களும் பறவைகளுக்கான சிறகுகளும் தான் மனிதனுக்கான கூடு.பல நேரங்களில் உடைந்த கூட்டை கட்டி எழுப்புவது அத்தனை எளிய காரியம் இல்லை. கடின உழைப்பும் கூர்மையான கவனமும் அதற்கு தேவைப்படுகிறது.
 
ஆனால் உடைந்த கூடுகள் செய்யம் முதல் வேலை கவனச்சிதறலை ஏற்படுத்துவது தான். ஓயாத மன உரையாடல்களை அவை உருவாக்கும்.ஓரிடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு உட்கார இயலாத அவதியை இந்த சிதறிய கூடுகள் உருவாக்குகின்றன. ஒரு புத்தகத்தின் ஒரு வரியைப் படிப்பது மற்றவருடன் உரையாடுவது உட்பட பல எளிய விஷயங்களை இவை மாற்றுகின்றன. மனச்சோர்வு , ஏக்கம் என்று இவற்றை நவீன உளவியல் பெயரிட்டு அதற்கான தீர்வுகளை வழங்கினாலும் உடைந்த கூடுகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் கட்டியெழுப்பப்படாதவரை மனிதனுக்கு மீட்சியில்லை. விஷ்ணுபுரம் நாவலில் வரும் திருவடி, பிங்கலன்,சங்கர்ஷணன் அந்த உடைந்த சிதறிய கூடுகளை கொண்டிருந்தோர் தான். அவரவர் தன் வழி மீண்டும் அதை உருவாக்கிறார்கள். மனிதன் இதனால் அழிவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். கலாப்ரியாவின் கவிதையொன்றில் அல்லலுறும் பறவைகளை குறிப்பிட்டு எனக்கு அதன் இடம் தெரியும் ஆனால் பாஷை தெரியாது என்று சொல்லப்பட்டிருக்கும்.அது போலத்தான் கூடுடைந்த கலைஞர்களும்.அதனை மீட்பதற்கான அனைத்து பாதைகளையும் அவர்கள் அறிவார்கள்.ஆனால் அந்த பாஷையைத்தான் அவன் தொலைத்துவிடுகிறான்.அன்பும் கருணையும் தான் மனிதனை மீட்பதற்கான வழிகள்.

இந்திய பெளத்தம்

 

பெளத்தம் பற்றி இரண்டு விதமான பார்வைகள் தமிழில் இருக்கின்றன.ஒன்று அதற்கும் வேதாந்தத்திற்கும் பெரிய வித்யாசங்கள் இல்லை என்ற நோக்கு.பெளத்தம் வேதங்களை முழுக்க நிராகரிக்கிறது என்று சொல்ல இயலாது என்றும் வேதங்களின் தொடர்ச்சியாகவே பெளத்தத்தை பார்க்க முடியும் என்ற பார்வை.மற்றது பெளத்தம் முழுக்க தனித்த மரபை கொண்டது,அது வேதங்களிலிருந்து எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என்னும் பார்வை.
 
பொதுவாக பெளத்தம் வேதங்களை , ஆன்மாவை , சாதிகளை மறுக்கும் ஒரு கருத்தியலாக இங்கே இடதுசாரி சிந்தனையாளர்கள் முன்னெடுக்க விரும்புகிறார்கள்.அயோத்திதாசர் ஓடுக்கப்பட்டவர்கள் உண்மையில் பூர்வ பெளத்தர்கள் என்றும் நாம் பூர்வ பெளத்தத்தை மீட்டெடுப்பதே பொற்காலத்திற்கு திரும்பும் வழி என்றார். அயோத்திதாசர் சொல்வதில் உண்மை இல்லை என்று பலரும் சொல்கிறார்கள்.அயோத்திதாசர் முன்வைப்பது ஒரு கதையாடலை.A Narrative.அந்த கதையாடல் வழி அவர் ஒரு சட்டகத்தை உருவாக்குகிறார்.அதன் வழி எப்படி பழைய பொற்காலத்தை மீட்பது என்று சொல்கிறார்.உண்மையில் அப்படி ஒரு பொற்காலம் இருந்ததா என்பதல்ல முக்கியம்.அப்படியான பொற்காலத்தை இனி ஓடுக்கப்பட்டவர்களுக்கு உருவாக்க முடியுமா என்பதை அதில் உள்ள அக்கறை. ஓர் அடையாள அணித்திரள்வு எந்த வர்க்கத்தை முன்னிறுத்துகிறதோ அதன் அடிப்படையில் அது எப்படியான நோக்கை முன்வைக்கிறது என்று கூற முடியும். இந்துத்துவமும் ஒரு பொற்காலம் இருந்தது என்று சொல்கிறது.ஆனால் அயோத்திதாசரின் பார்வையும் இந்துத்துவத்தின் பார்வையும் ஒரே வர்க்கத்தை பாதிக்கப்பட்டவர்களாக கொள்ளவில்லை.அதிலிருந்தே அதன் வேறுபாடுகளும் துவங்குகின்றன.பொற்காலங்கள் புனையப்படுபவை.எல்லா   பொற்காலங்களும்.அவை லட்சியவாதங்களும் கூட.
 
அம்பேத்கர் ஒரு மாற்று சமயத்தை பற்றி ஆராய்ந்த போது அவர் அனைத்து சமயங்களையும் பரிசீலித்தார்.சார்வாகம் , ஆஜிவிகம் போன்றவற்றை எவராலும் பரிசீலிக்க இயலாது. ஆஜிவிகம் பற்றி நமக்கு பெரிதாக எதுவும் தெரியாது.ஏ.எல்.பாசாம் ஒரு நூல் எழுயிருக்கிறார்.ர.விஜயலட்சுமி தமிழகத்தில் ஆசிவகர்கள் என்ற நூலை எழுதியிருக்கிறார்.அறிவுத்தோற்றவியல் குறித்தும் , இருப்பியல் உலகம் குறித்தும் அந்தத் தத்துவம் என்ன கூறுகிறது என்பதும் அதை எப்படி தன் நியாயங்கள் மூலம் நிரூபிக்கிறது என்பதும் முக்கியம்.அதைத் தொடர்ச்சியாக வளர்த்தெடுத்து அதற்கு சடங்குகளையும், குறியீடுகளையும் உருவாக்கும் தரிசனம் காலப்போக்கில் மதங்களாக மாறுகின்றன.
 
ஆஜிவிகம் , சார்வாகம் போன்றவற்றிக்கு அப்படியான எந்த முறையான பார்வையும் இல்லை.சார்வாகத்திற்கும் நமது எளிய தர்க்கங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.பெரியார் கூறியதும் ஒரு வகை சார்வாகம் தான்.அது எளிய தர்க்கம்.ஆனால் அது முழு நாத்திக கோட்பாடு என்ற வகையில் முக்கியத்துவம் கொள்கிறது.ஆனால் அதை ஒரு மெய்யிலாக சமயமாக கொள்ள முடியாது.
 
அறிவுத்தோற்றவியலில் ஸ்ருதிகளை (வேதங்களை) பெளத்தம் ஏற்கவில்லை. தனிப்பெரும் பொருளான பிரம்மத்தின் மற்றொரு வடிவமே ஆன்மாவாக நம் மரபில் இருக்கிறது.அப்படி தனித்த மாறாத ஒரு பொருளாக எதையும் பெளத்தம் ஏற்கவில்லை. மறுபிறப்பை பெளத்தம் ஏற்கிறது. பெளத்தம் நிர்ணயவாதத்தை(ஊழ்) முன்வைக்கிறது. அறிபடு பொருள், அறியும் பொருள், அறிவு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.எதுவும் தனித்து இயங்குவதில்லை. சூனியவாதம் என்பது அத்வைதம் அல்ல.எதுவும் இல்லை என்று சூனியவாதம் சொல்லவில்லை. தனித்து அர்த்தம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை என்று சொல்கிறது.பிரம்மம் இல்லையேல் ஆன்மாவும் இல்லை.
 
பெளத்தம் சாதிகள் குறித்து என்ன சொல்கிறது என்று கேள்விக்கு நாம் எளிய விடைகளை தர இயலாது.சட்டென்று மூன்று துயரங்களை கண்டு புத்தர் தன் ஞானத்தேடலைத் துவங்கினார் என்ற கதையாடலை அம்பேத்கர் ஏற்கவில்லை. தர்மானந்த் கோஸாம்பியும் தன் பகவான் புத்தர் நூலில் அதை மறுக்கிறார். புத்தர் இரு நாடுகளுக்கு மத்தியில் ரோகிணி ஆற்றை முன்னிட்டு நிகழந்த போர்களை கண்டு துயரம் கொண்டே தன் தேடலைத் துவங்கினார்.மறத்திற்கும் அன்பு சாத்தியம் என்பதே பெளத்தம்.அவர் சங்கத்தை துவங்கினார். அதில் தொடர்ச்சியாக சட்டங்களை உருவாக்கியபடியே இருந்தார்.அதனால் சாதி குறித்த பெளத்தத்தின் பார்வை என்ன என்பதற்கு அதை கடக்கும் சாத்தியப்பாடுகளை அதன் தரிசனம் கொண்டுள்ளது என்பதையே பதிலாக கொள்ள முடியும்.ஏனேனில் அது உடல் பொய்யானது என்ற பார்வையை கொண்டிருக்கவில்லை.ஆன்மாயின்மை, நிலையின்மை, நிறைவின்மை ஆகியவையே பெளத்தம் முன்வைக்கும் மூன்று உண்மைத் தன்மைகள்.
 
இப்படி நாம் பெளத்தத்தை விளக்கும் போதே சிறுபாண்மையினருக்கு இலங்கையில் , பர்மாவில் நிகழும் துயரங்களையும் பார்க்கிறோம்.திபெத்திய பெளத்தம் எப்படி மிகப்பெரிய நாடான சீனாவை எதிர்க்கும் ஆற்றலை தன் மக்களுக்கு அளித்துள்ளது என்றும் பார்க்கிறோம்.சீனா அடுத்த தலாய்லாமாவை தேர்தெடுத்தாலும் திபெத்திய மக்கள் இப்போதைய தலாய்லாமா சுட்டிக்காட்டும் ஒருவரையே தங்கள் தலாய்லாமாவாக கொள்ளப்போகிறார்கள். இப்படி நம் முன் பல்வேறு பெளத்தங்கள் இருக்கின்றன. அப்படியாக இந்தியாவிற்கும் ஒரு பெளத்தம் இருக்கிறது. அது அசோகர் காலத்திலிருந்து தொடர்ந்து மறத்திற்கும் அன்பு என்ற போதனையை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது.அது நேருவின் ஆட்சிக்காலத்தில் இருந்தது.இன்றைய ஆட்சியில் இல்லை.நாளைய ஆட்சியில் இருக்கும்.
 
பெளத்தம் இந்தியாவிற்கு அளித்த கொடையாக அந்த நோக்கையே பார்க்கிறேன்.ஆன்மாவை, சாதியை, தனித்த பெருங்கடவுளை , பிரம்மத்தை மறுத்து ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகிறது என்னும் பார்வை.மறத்திற்கும் அன்பு என்ற விரிவு. அந்த பெளத்த மெய்யியல் தான் என்னுடைய பெளத்தம்.இந்தியாவின் பெளத்தம்.அம்பேத்கரின் பெளத்தம்.அந்த பெளத்தத்தில் சாதி இல்லை,ஆன்மா இல்லை, வேதம் இல்லை.நாம் இருக்கிறோம்.

பா.இரஞ்சித்

 

பா.இரஞ்சித்தின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவை குறித்து விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்தபடியே இருக்கின்றன. கபாலி வந்த போது தினமணியில் அதைக்குறித்த விமர்சனக் கட்டுரை வந்திருந்தது.பொதுவாக தினமணியில் திரைப்படங்கள் குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை. தமிழில் தலித் இலக்கியம் என்ற ஒரு பிரிவு தொண்ணூறுகளுக்குப் பிறகு உருவானதாக பொதுவான ஒரு எண்ணம் உண்டு.திரைப்படங்களில் தலித் சினிமா என்பதன் துவக்கம் பா.இரஞ்சித்திலிருந்து துவங்குவதாக கொள்ளலாம்.சரவணகார்த்திகேயன் தலித் திரைப்படங்கள் என்று ஒரு பட்டியலிட்டு ஒவ்வொன்றையும் தரம் பிரித்திருக்கிறார்.அவற்றில் பாதிக்கு மேல் பா.இரஞ்சித் இயக்கியவை அல்லது அவர் தயாரித்தவை.அசுரன் என்ற படத்தை வெற்றிமாறன் இரஞ்சித்தின் திரைப்படங்களின் வெற்றியை கண்டே எடுத்தார்.இன்று இத்தகைய திரைப்படங்கள் வணிகரீதியாகவும் பெறும் வெற்றி பெறுகின்றன.
 
பாலா, மிஷ்கின் போன்ற இயக்குனர்கள் தனி மனிதனின் அகநெருக்கடிகளை முன்வைத்தே தங்கள் திரைப்படங்களை இயக்கினர்.பாலாவின் பரதேசி விரிந்த தளத்தில் ஓடுக்கப்பட்ட மக்களுக்கான படம் என்று கொள்ள முடியும்.ஆனால் அந்தப் படத்தின் அமைப்பு தனிமனிதனின் பாடுகளை முதன்மையாக கொண்டது.இருத்தல் சாராம்சத்திற்கு முந்தையது என்று இருத்தலியத்தை தொகுக்க முடியும். தனிமனிதனின் அகம் நிர்ணயிக்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது என்று கூறுகிறது இருத்தலியம்.டி.ஆர்.நாகராஜ் தன் எரியும் பாதம் புத்தகத்தில் அம்பேத்கர் மற்றும் காந்தியின் அணுகுமறையை பற்றி விரிவாக எழுதுகிறார்.காந்தியின் பார்வை தனிமனிதனை அலகாக கொண்டது.அம்பேத்கர் சாதியப் பிரச்சனையை இந்து மதம் என்ற அமைப்பின் சிக்கலாகவே பார்க்கிறார்.தனிமனிதர்களின் சிக்கலாக அல்ல.தனிமனிதன் மாறினால் சாதியச் சிக்கல்களை தீர்க்கலாம் என்றார் காந்தி.அமைப்பை மாற்றினாலே இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்றார் அம்பேத்கர். கனிவை அல்ல சுய மரியாதையை கோருவதே அம்பேத்கரின் பாதை. அமைப்பு வருகிற போது தனி மனிதர்கள் அங்கு வருவதில்லை. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி அமைப்பியல் பிரதியும் கூட. வேம்பலை என்ற ஊரை பிரதிநித்துவப்படுத்துபவனே நாகு. அதைத் தவிர்த்து அவன் ஒன்றுமில்லை. அவனின் துயரங்கள் வேம்பலையின் துயரங்கள் , அவனது பாடுகள் வேம்பலையின் பாடுகள். 
 
பா.இரஞ்சித்தின் திரைப்படங்களையும் நாம் அப்படி பார்க்க முடியும்.அவை முன்வைக்கும் தனிமனிதர்கள் அந்த அமைப்பை பிரதிநித்துவப்படுத்துகிறார்கள். சார்பட்டா பரம்பரையில் வரும் கபிலன் ஹிரோ அல்ல. எளிமையான சூழலிலிருந்து வருபவன் தன்னை தகவமைத்துக் கொண்டு முன்னேறுவதற்கு எவை தடையாக இருக்கின்றன.குடி ஒரு முக்கியச் சிக்கல்.தன் சூழலால் அவன் அடையும் அழற்சி.குடியும் அழற்சியும் மேலும் கீழ்மை நோக்கித் தள்ளுகிறது.அவனுக்குத் தன்னை எப்படி மீட்டுக்கொள்வது என்றே தெரியவில்லை.
 
இவை பொதுவாக மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு தங்கள் லட்சியங்களை நோக்கி பயணிக்கும் எவருக்கும் ஏற்படக்கூடிய தடுமாற்றங்கள் என்றும் பார்க்க முடியும்.பா.இரஞ்சித் சோழர்கள் குறித்து பேசியதற்காக பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.அவர் திசை திரும்பியிருந்தால் அவரால் அதன் பின் சார்பட்டா பரம்பரையை எடுத்திருக்க இயலாது.இந்த அமைப்பு உங்களின் பாதையை தீர்மானிக்கிறது. உங்களை நோக்கி தன் மாயக்கரங்களை வீசிக்கொண்டே இருக்கிறது.இங்கே துவங்குவது ஒரு பகடையாட்டம்.
 
நீங்கள் மைய அமைப்பு உருவாக்கும் கதையாடல்களுக்கும் கலாச்சார வெளிகளுக்கும் மாற்றான ஒரு கதையாடலை ,வெளியை உருவாக்க வேண்டிய பகடையாட்டம்.அம்பேத்கர் பெளத்தத்தை தழுவினார்.அமைப்பின் பிரச்சனையை மற்றொரு அமைப்பின் வழியாகவே எதிர்கொள்ள முடியும். ஒரு சட்டகத்தில் ஒரு பெருளின் அர்த்தம் மற்றொன்றால் தான் அர்த்தம் கொள்கிறது.நீங்கள் உயரமானவர் குண்டானவர் சான்றோர் என்று அடையும் அடையாளங்கள் அந்த சட்டகத்தாலேயே அர்த்தம் கொள்கின்றன. ஒரு வேற்றுகிரவாசிக்கு இவை என்ன அர்த்தம் கொடுக்கப் போகிறது.அவனுக்கு நாம் எல்லோருமே பிறர் தான்.பூமிவாசிகள்.அவ்வளவுதான். அது மேலும் பெரிய சட்டகம்.
 
ஓடுக்கப்பட்டவர்கள் குறித்த ஒரு மாற்று கதையாடலை, பண்பாட்டு வெளியை பா.இரஞ்சித் உருவாக்கி வருகிறார். நீலம் என்ற இலக்கியப் பத்திரிக்கையைத் துவங்கியிருக்கிறார்.திரைப்படங்களை , ஆவணப்படங்களை தயாரிக்கிறார். அவர் கடந்த சில ஆண்டுகளாக நடத்திவரும் கலாச்சார நிகழ்ச்சிகள் முக்கியமானவை. 
 
பெருநகரங்கள் கிராமத்து திருவிழாக்கள் போன்ற சில கலாச்சார வெளிகளை கொண்டிருக்க வேண்டும்.இசை, நடனம், நாடகம், சினிமா, ஓவியம் என்று பல்வேறு மாற்று கதையாடல்களை உள்ளடக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் அங்கே அரங்கேற வேண்டும். அவை மக்கள் ஓன்று கூடி தங்கள் தனிமனித இருப்பை தற்காலிகமாக மறக்கும் கொண்டாட்டங்களாகவும் இருக்க வேண்டும்.அவை மைய பண்பாட்டு வெளியில் மாற்றங்களை ஏற்படுத்தும்.உரையாடல்களை உருவாக்கும்.அமைப்பில் சலனங்கள் சாத்தியப்படும்.
 
பா.இரஞ்சித்தின் ஆக்கங்கள் அனைத்தும் இத்தகைய சலனங்களை ஏற்படுத்தும் முயற்சிகளாவே இருக்கின்றன. அவை நல்ல விளைவுகளையே உருவாக்கும் என்று நான் எண்ணுகிறேன்.என் தலைமுறையின் சினிமா இயக்குனர்களில் பா.இரஞ்சித் முக்கியமானவர்.அவரை பலரும் பல வகைகளில் விமர்சித்தபடியே இருக்கிறார்கள்.அதில் பலருக்கு ஒரு ஷாட்டை உருவாக்கும் கற்பனை கூட இல்லை என்பது தான் அதில் உள்ள வேடிக்கையான விஷயம்.
 

உடைபடும் கண்ணாடிகளும் சிதைவுறும் ஆன்மாக்களும்

 


நாம் எல்லோரும் சமமானவர்கள்.மனிதர்கள்.உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொள்ளுதல் கூடாது என்று பயிற்றுவிக்கப்படுகிறோம்.ஆனால் நடைமுறையில் இது எந்தளவு சாத்தியம்.அன்பு, நேசம், மனிதாபிமானம் இவற்றைப் பற்றி நாம் பேசினாலும் அதை முன்னிட்டு சீர்திருத்தங்களை முன்வைத்தாலும் அதிகாரத்திற்கு கீழ்படிதலும் அதிகாரம் செலுத்துதலும் மனித உறவுகளில் முதன்மையான பங்களிப்பை ஆற்றுகிறது.நான் உன்னை விட மேலானவன் என்பது மனிதனுக்கு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது.சமூக அமைப்பில் சமத்துவம் , சகோதரத்துவம் ஆகியவை முக்கியமானவைதான்.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதும் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பிற்கான அலகுகள்.ஆனால் சமத்துவம் , சகோதரத்துவம் ஒரு விழுமியமாக இஷ்டலோகமாகவே செயல்பட இயலும்.அதே நேரத்தில் எந்த ஒரு அமைப்பும் அதிகாரம் இல்லாமலோ அதற்கான சடங்குகள் இல்லாமலோ இயங்க இயலாது.உங்கள் உயர் அதிகாரியை நீங்கள் பெயர் சொல்லி அழைக்கலாம் ,ஒன்றாக சென்று உணவருந்தலாம், ஆனால் அவரும் நீங்களும் நண்பர்கள் அல்ல.ஒரு போதும் உங்கள் நண்பனுடன் பேசுவது போல நீங்கள் உங்கள் உயரதிகாரியுடன் பேசப்போவதில்லை.அதை குறிப்புணர்த்தும் சமிக்ஞைகள் சடங்குகள் அந்த உறவில் இருந்து கொண்டே இருக்கும். அவர் உங்களை காபி சாப்பிடலாம் வா என்று ஒரு நாள் அழைக்கலாம் , அதற்காக மறுநாள் நீங்கள் சென்று அழைக்க முடியாது.அப்படி அசட்டுத்தனமாக நீங்கள் அழைத்தாலும் அதை மறுத்து அவர் தன் இடத்தை உங்கள் இடத்தை குறிப்பால் உணர்த்தக்கூடும்.தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரு ஆயாசமான நிகழ்வு (A Nasty Anecdote) கதையில் இவான் இலியச் என்ற உயரதிகாரி மனிதாபிமானம், மானுட நேசம் போன்ற விழுமியங்கள் வழி அனைத்து சீர்திருத்த சிக்கல்களையும் தீர்த்துவிடலாம் என்கிறார். நாம் தாக்குப் பிடிக்கமாட்டோம் என்கிறார் இன்னொரு உயரதிகாரி.

அன்று இரவு இவான் இலியச் அலுவலகத்தில் அவருக்கு கீழ் பணிபுரியும் குமாஸ்தாவின் திருமணத்திற்கு தற்செயலாகச் சென்று சேர்கிறார்.குமாஸ்தா இவான் இலியச்சைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறார்.நான் உங்களை விட உயர்வானவன், ஆனால் அதே நேரத்தில் உங்களைச் சமமாக பாவித்து உங்கள் திருமண நிகழ்வுக்கு வந்திருக்கிறேன்.இதுவே மானுட நேசம் , மனிதம் மீது மனிதன் கொள்ளும் அபிமானம் என்று பிரசங்கிக்க விரும்புகிறார்.ஆனால் அவர் எண்ணியத்திற்கு மாறாக அங்கு நிகழும் பல்வேறு சம்பவங்களால் இவான் இலியச் ஒரு கோமாளி போல ஆகிவிடுகிறார்.ஆரம்பத்தில் அவர் வருகையால் எப்படி நடந்து கொள்வது என்று குழம்பும் கூட்டத்தினர் பின்னர் அவரை பொருட்படுத்தாமல் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.அவரும் வோட்கா குடித்து மயங்கி கீழே விழுந்துவிடுகிறார்.அந்த சம்பவத்திற்குப் பிறகு இவான் இலியச் இனி எப்படி அலுவலகம் செல்வது என்று குழம்புகிறார்.அவர் தன்னைத் தொகுத்துக்கொண்டு செல்லும் போது அங்கு அந்த குமாஸ்தா தன்னை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று விண்ணப்பித்திருப்பதை பார்க்கிறார்.ஆம் , என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று தன்னிடமே ஒப்புக்கொள்கிறார் இவான் இலியச்.மனித உறவுகளில் நாம் அந்தப் பாத்திரத்திற்கான உடல்மொழியை வரையறைகளை ஏற்கிறோம்.அவை மாறும் போது வேறு ஒரு வரைமுறை உருவாகுகிறது.போலித்தனமான மனிதாபிமான முயற்சிகள் பாவனைகள் கோமாளித்தனத்தில் தான் சென்று முடியும்.

ஒரு ஆயாசமான கதையின் மற்றொரு வடிவம் ஒரு கோமாளியின் கனவு.(A dream of a ridiculous Man).தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவுடன் சாலையில் நடந்துச் செல்லும் இளைஞனை நோக்கி விரைந்து வரும் சிறு பெண் அவனிடம் உதவி கேட்டு மன்றாடுகிறாள்.தான் தற்கொலை செய்துக் கொள்ளும் முடிவு எடுத்திருப்பதால் தன் அளவில் இனி இந்த உலகிற்கு அர்த்தமில்லை என்று எண்ணுபவன் அந்தக் குழந்தைக்கு உதவி செய்யாமல் போய்விடுகிறான்.அவன் அறையில் ஒரு துப்பாக்கியை மேஜை மீது எடுத்து வைக்கிறான்.நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கி விடுகிறான். கனவில் அவன் தற்கொலை செய்துக் கொள்கிறான்.பூமியை போலவே இருக்கும் வேறு ஒரு உலகத்திற்கு செல்கிறான்.அங்கே மனிதர்கள் பொய் சொல்வதில்லை.விலங்குகளை துன்புறுத்துவதில்லை.ஒருவர் மீது ஒருவர் நேசத்துடன் இருக்கிறார்கள்.அன்பும் நேசமும் ப்ரியமும் காற்றைப் போல அந்த மண்ணைச் சூழ்ந்திருக்கிறது.பின்னர் இந்த பூமி மனிதன் அவர்களை பிறழச் செய்கிறான்.அது ஒரு விளையாட்டாக உருவாகிவிட்டது என்கிறான்.பிறழ்வின் துவக்கமாக அமைவது புலனுணர்வு.புலனுணர்விலிருந்து பொறாமை.அங்கிருந்து குரூரம்.அதன் பின் அந்த புத்துலகத்தில் முதன் முறையாக ரத்தம் சிந்தப்படுகிறது.அவர்கள் குற்றவுணர்வு கொள்கிறார்கள்.குற்றவுணர்வு ஒரு விழுமியமாக மாறுகிறது.கெளரவமும் மரியாதையும் பெருமையும் பிறக்கிறது.விலங்குகளை துன்புறுத்துகிறார்கள்.அவர்களுக்கு துயரம் அறிமுகமாகிறது.பின்னர் துயரத்திலிருந்தே உண்மையை அறிய முடியும் என்று சொல்லத் துவங்குகிறார்கள்.விஞ்ஞானம் பிறக்கிறது.அவர்கள் பிறழ்ந்த பின்னர் மனிதாபிமானம் குறித்தும் சகோதரத்துவம் குறித்தும் பேசுகிறார்கள்.அவர்கள் குற்றவாளிகளானதால் நீதி அமைப்பை கண்டுபிடிக்கிறார்கள்.அந்த சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கில்லட்டினை அமைக்கிறார்கள்.முன்னர் இருந்த அறியாமையை கனவு போல பாவிக்கிறார்கள்.பின்னர் அவனை அந்த புத்துலகத்தை சேர்ந்தவர்கள் மனநிலை விடுதியில் சேர்க்கப்போவதாக மிரட்டுகிறார்கள்.அவன் கனவு கலைந்து விடுகிறது.

கனவில் இருந்து மீள்பவன் தான் உண்மையைக் கண்டு கொண்டதாக சொல்கிறான்.மனிதர்கள் அழகாக மகிழ்ச்சியாக இந்த பூமியில் வாழ முடியும் என்பதே அவன் கண்டுகொண்ட உண்மை.இந்த பூமியில் வாழ ஒருவன் பிறழத்தான் வேண்டும் என்ற அவசியமில்லை.தீமை தான் மனித இயல்பு என்பதை தான் ஏற்கவில்லை என்கிறான் கோமாளி மனிதன்.இனி தான் அந்தச் சிறுபெண்னைக் கண்டுபிடித்து அவளுக்கு உதவப் போவதாகச் சொல்கிறான்.அறிவுக்கு முந்தைய குழந்தைமை, மகிழ்ச்சி பற்றிய பிரக்ஞைக்கு முந்தைய குதூகலம், விஞ்ஞானத்திற்கு முந்தைய ஞானம் ஆகியவையே மனிதனின் இயல்புகள் என்கிறான் கனவு மனிதன்.விலங்கைப் போன்ற குழந்தைமை நிரம்பிய உயிரியல் பிண்டமாக சமூக அமைப்பில் மனிதன் இருக்க முடியம்.அதைக் குறித்து நான் அனைவருக்கும் உரைக்கப் போகிறேன் என்கிறான்.ஒரு வகையில் உண்ணக்கூடாத பழத்தை உண்டதால் உருவான பிறழ்வு என்பது போன்றதே இந்தக் கதை.ஆனால் முந்தைய தஸ்தாயெவ்ஸ்கியின் ஒரு ஆயாசமான நிகழ்வுக்கு மறுப்பு சொல்லும் கதை ஒரு கோமாளியின் கனவு.நாம் பிறழ்ந்து பின்னர் அதன் மேல் ஒரு புத்துலகத்தை கட்ட விரும்புகிறோம்.மாறாக நாம் அந்த பிறழ்விலிருந்து நம் உண்மையான இயல்புகளுக்கு திரும்பினால் வேறொரு புத்துலகம் சாத்தியம் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.

நேற்றிரவு உங்களுடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசிவிட்டு வீடு திரும்பிய நண்பர் காலையில் தற்கொலை செய்துக்கொண்டார் என்ற செய்தியை கேட்கும் போது உங்களுக்குள் ஒரு துணுக்குறல் எழுகிறது.நேற்று ஏன் அவன் நம்முடன் தன் துயரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை.அவனுடன் பேசும் போதும் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் அவனுக்கு இருக்கும் என்பதையே உங்களால் ஊகிக்க இயலாமல் போனது உங்களை உறைந்து போகச் செய்யும்.சிசிபஸின் தொன்மம் கட்டுரையில் ஆல்பர் காம்யு கொலை செய்பவர்கள் பலரும் அன்று கொலை செய்வார்கள் என்பதை அன்று காலை சவரம் செய்யும் போது கூட உணராதுதான் இருக்கிறார்கள் என்கிறார்.சமீபத்தில் செய்தித்தாளில் ஒரு செய்தி. ஜாமீனில் ஒருவன் வெளியில் வந்திருக்கிறான்.வந்தவன் தன் நண்பர்களை வீட்டுக்குச் சாராயம் குடிக்க அழைத்திருக்கிறான்.குடித்துக்கொண்டிருக்கையில் என்னை ஏன் நீங்கள் ஜாமீனில் எடுக்க முயலவில்லை என்று அவர்களுடன் சண்டை போட்டிருக்கிறான்.இரண்டு நண்பர்கள் குடித்து முடித்தப்பின் அவர்களின் வீட்டுக்கு கிளம்பிவிட்டார்கள்.மூன்றாவது நண்பன் அங்கேயே தூங்கிவிட்டான்.ஜாமீனில் வந்தவன் பெரிய கல்லை எடுத்து நண்பனின் தலையில் போட்டு கொலை செய்து விட்டான்.அவன் அன்று காலையோ அல்லது குடிக்கும் போதோ அப்படி செய்ய வேண்டும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.அப்படி இருந்திருந்தால் அவன் அதற்கென்று ஆயுதங்களை தயார் செய்து வைத்திருப்பான்.கிடைத்த கல்லை கொண்டு கொலை செய்திருக்க மாட்டான்.நம்முள் இருக்கும் சலிப்பு, எரிச்சல், அவமானம் , இழப்பு, உடல்நிலை, தட்பவெட்பம் என்று பலவும் நம்மை ஒரு முடிவை நோக்கி நகர்த்துகிறது.நாம் பல நேரம் அதை உணர்வதே இல்லை.என்னை மீறி அப்படி பேசிவிட்டேன் , என்னை மீறி அடித்துவிட்டேன் என்று நாம் அடிக்கடி சொல்கிறோம்.நம்மால் அறிந்து தொகுத்து புரிந்து கொள்ள இயலாத செயல்கள் பலவற்றை நாம் செய்கிறோம்.அந்த அறியமுடியாமையின் வேர் எது.அந்த அறியமுடியாமையின் சிக்கல்கள் என்ன.தஸ்தாயெவ்ஸ்கியின் பல அக்கறைகளில் இந்த அறியமுடியாமையும் ஒன்று.

நிரந்தர கணவன்(The Eternal Husband) என்ற குறுநாவலில் நடாலியா என்ற பெண் உடல் நலக்குறைவால் இறந்து விடுகிறாள்.நடாலியாவின் கணவன் பாவல் அவளது மரணத்திற்கு பிறகு அவளது தனிப்பெட்டி ஒன்றில் இருந்த பழையக் கடிதங்களைப் பார்க்கிறான்.அவற்றை படிக்கையில் அவளுக்கு இருந்தக் காதல்கள் பற்றி அறிகிறான்.அவனது மகள் லிசா அவனுக்கு பிறந்த குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொள்கிறான்.அந்தக் குழந்தையின் உயிரியல் தந்தை அலெக்ஸி இவானோவிச்.அலெக்ஸி இவானோவிச்சை சந்திக்க மகள் லிசாவை அழைத்துக்கொண்டு பீட்டர்ஸ்பர்க் வருகிறான்.அலெக்ஸியை சந்திக்கிறான்.ஆனால் அவன் நேரடியாக எதையும் அலெக்ஸியிடம் கேட்கவில்லை.பாவல் குழந்தை லிசாவிடம் கடுமையாக நடந்துக் கொள்கிறான்.அலெக்ஸி குழந்தையை அழைத்து சென்று தன் நண்பர் வீட்டில் தங்க வைக்கிறான்.தாய் தந்தையரிடமிருந்து பிரியும் குழந்தை லிசா நோயுண்டு இறக்கிறாள்.அலெக்ஸியையும் பாவலையும் அந்த மரணம் பெரிய அளவில் உலுக்கவில்லை.அவர்கள் அதை கடக்கிறார்கள்.பாவலுக்கு எந்தளவு தன் காதல் பற்றிய உண்மைத் தெரியும் என்பதை அலெக்ஸியால் அறிந்துகொள்ள இயலவில்லை.அவனால் அதை கேட்டு அறிந்து கொள்ளவும் முடியவில்லை.அவன் நடாலியாவிற்கு எந்தக் கடிதத்தையும் எழுதவில்லை.லிசாவின் மரணத்திற்கு பிறகு அலெக்ஸி வீட்டில் ஓர் இரவு தங்கும் பாவல் அவன் உறங்கிக்கொண்டிருக்கும் போது சவரக்கத்தியால் அவனைக் கொல்ல முற்படுகிறான்.ஆனால் அலெக்ஸி அவனைத் தடுத்து கீழே தள்ளி கைகளை பின்பக்கம் மடக்கி கொலை முயற்சியிலிருந்து தப்பிக்கிறான்.பாவல் கொலை திட்டத்துடன் அன்று அங்கு தங்கவில்லை.அவன் அங்கிருக்கும் சவரக்கத்தியை கொண்டே கொலை செய்ய முயல்கிறான்.அந்த கொலை முயற்சி அவனுள் வடிவம் பெறாமல் இருந்த எண்ணத்தின் வெளிப்பாடாக அமைகிறது.இந்த நிகழ்வுக்கு பிறகு தன் மனைவி நடாலியா அலெக்ஸிக்கு எழுதி அனுப்பாமல் இருந்த கடிதத்தை பாவல் வேறொருவன் வழி அலெக்ஸியிடம் கொண்டு சேர்க்கிறான்.பின்னர் பாவல் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து சென்று விடுகிறான்.அவர்கள் அதன் பின் வெகுகாலம் சந்திக்கவில்லை.இரண்டு வருடம் கழித்து அவன் வேறு ஒரு பெண்னை திருமணம் செய்துக்கொள்கிறான்.தற்செயலாக பாவலும் அலெக்ஸியும் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.அவர்களுக்கு மத்தியில் லிசாவின் மரணம் இருக்கிறது. இங்கே பாவல் தன் புதுமனைவி அலெக்ஸியிடம் பேசுவதை கண்டு அஞ்சுகிறான்.ஒரு போதும் தன் வீட்டுக்கு வரக்கூடாது என்ற வாக்குறுதியை வாங்கிக்கொண்டு பாவல் ரயில் ஏறுகிறான்.மறுபடியும் அவர்களை அறியாமலேயே அவர்கள் தங்கள் பழைய கதாபாத்திரங்களை ஏற்கிறார்கள்.இருவரும் தங்கள் கதாபாத்திரங்களை தங்களின் ஏற்பு இல்லாமல் வகிக்கிறார்கள்.நாம் ஒரு குறிப்பிட்ட சூழலில் மறுபடி மறுபடி ஒரே போலத்தான் நடந்து கொள்கிறோம்.நாம் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

நம்முள் இருக்கும் வன்மம் பல நேரங்களில் நேரடியாக வெளிப்படுவதில்லை.நாம் ஏமாற்றப்பட்டதும் கோமாளி ஆக்கப்பட்டதும் அவமானத்திற்கு உள்ளானதும் நம்முள் நொதித்துக் கொண்டிருக்கலாம்.ஆனால் நம்மால் எதிராளியை நோக்கி வன்மத்துடன் பாய இயலுவதில்லை.நம்முள்ளேயே பல்வேறு உரையாடல்கள் குழப்பங்கள் இருக்கலாம்.நாம் யாரை வெகுவாக வெறுக்கிறோமோ அவர்கள் மீது மிகுந்த பற்றுக்கொள்கிறோம்.பாவல் அலெக்ஸி உடல்நலம் குன்றி அவதிப்படும் போது அவனுக்கு சிகிச்சை அளித்து வலியிலிருந்து மீட்கிறான்.மனிதனுள் ஒரு அறியமுடியாமை உள்ளது.அதை நம்மாலேயே பல நேரங்களில் புரிந்துகொள்ள முடிவதில்லை.பெரும்பாலும் நேரடியாக தாக்கப்படும் போது நாம் எதிர்த்து பேசிவிடலாம்,அடித்துவிடலாம்.ஆனால் நீங்கள் முழுமையாக உடைந்துவிடக்கூடிய சிதறிவிடக்கூடிய ஒரு விஷயம் உங்களை எப்படியான எதிர்வினை புரிவது என்பதைக் குறித்த குழப்பத்தை ஏற்படத்தும்.உங்கள் மனம் தொடர்ந்து பல்வேறு உரையாடல்கள் வழி அலைபாய்ந்துக் கொண்டே இருக்கும்.தர்க்கம் அற்று மனம் பல்வேறு எண்ணங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தி குழப்பிக்கொள்ளும்.மிகுதியான சோர்வும் சலிப்பும் ஆயாசமும் இருக்கும்.பாவலால் அலெக்ஸியை எதிர்த்து நேரடியாக எதையும் கேட்க முடியவில்லை.அது அவனை மேலும் அவமானப்படுத்தும்.ஆனால் அந்த நெருப்பையும் அவனால் முழுக்க முழுங்க முடியவில்லை.இந்த குறுநாவல் தீவிரமான தொனியில் எழுதப்படவில்லை.மாறாக பாவல் பற்றிய ஒரு கேலிச்சித்திரத்தை உருவாக்குகிறது.அலெக்ஸிக்கும் பாவலுக்குமான உறவை ஒரு விளையாட்டாக மாற்றுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி.

இதற்கு மாறாக மனிதனின் அறியமுடியாமை குறித்த சற்று தீவிர தொனியில் எழுதப்பட்ட சிறுகதை உள்ளோடங்கியள் (A meek one).பதினாறு வயது நிரம்பிய பெண் தன் வீட்டின் வறுமை காரணமாக ஒரு நகை அடகுக்கடைக்கு பல்வேறு மதிப்பிழந்த பொருட்களை அடகு வைக்க அடிக்கடி வருகிறாள்.அந்த ஊரில் வேறு எவரும் அவளது மதிப்பிழந்த பொருட்களை பெற்றுக்கொள்ளவதில்லை.அந்த நகை அடகுக்காரன் நாற்பது வயது நிரம்பியவன்.வேலையிலிருந்து ஒரு அவமானமான நிகழ்வால் விலகியவன்.அவள் கொண்டு வரும் பொருட்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்றாலும் அவன் சிறு தொகையை அளிக்கிறான்.பின்னர் அவளைத் திருமணம் செய்துக்கொள்கிறான்.அவள் அவனின் கடந்த காலத்தை அறிந்து கொள்கிறாள்.அவர்களுக்குள் ஒரு உடைவு உண்டாகுகிறது.இருவருக்கும் மத்தியில் ஒரு தடுப்பை உருவாக்கி வாழ்கிறார்கள்.தன் அவமானங்களால் மிகவும் துவண்டு இருப்பவன் தன் உறவினர் வழி கிடைத்த மூன்றாயிரம் ரூபள்களை கொண்டு நகை அடகுக்கடையை துவங்கிறான்.தன் கடந்த கால அவமானங்களை துடைத்தெறிந்து புதிதான ஒரு வாழ்வை துவங்க வேண்டும் என்று ஏங்குகிறான்.அதற்கான ஊன்றுகோலாக தன் திருமணத்தை காண்கிறான்.அவர்களுக்குள் உண்டான பிரிவுக்கு பின்னர் அவள் ஒரு நாள் தன்னை மறந்து பாடுகிறாள்.அது அவனுக்கு ஒரு சமிக்ஞையாக தோன்றுகிறது.தன் அதுவரையான இறுக்கங்களிலிருந்து விடுபட்டு அவளிடம் தன்னை முழுதும் ஒப்புக்கொடுக்கிறான்.அவள் கால்களை முத்தமிடுகிறான்.தான் எந்தளவு ஓர் உறவுக்கு ஏங்குபவன் என்பதை அவன் வெளிப்படையாகவே சொல்கிறான்.அவளால் அவனது காதலை புரிந்துகொள்ளவே முடியவில்லை.துப்பாக்கி கொண்டு ஒரு முறை அவன் தூங்கிக் கொண்டிருக்கையில் கொல்ல முயன்ற பின்னர் அவன் தன்னை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை என்ற அவள் எண்ணுகிறாள்.இறுதிவரை அந்த பிரிவு இருக்கும் என்றே நினைக்கிறாள்.அவனது அந்த ஏக்கம் கதறல் அவளை உலுக்குகிறது.ஒரு நாள் அவள் ஜன்னலுக்கு அருகே திருவோவியத்தை பற்றிக் கொண்டு நிற்கிறாள்.அவன் அவளைப் பார்த்துக் கொண்டே பின்னால் நிற்கிறான்.திடீரென்று அவள் ஜன்னலிலிருந்து திருவோவியத்தை மார்போடு புதைத்துக்கொண்டு குதித்து விடுகிறாள்.அவள் வாயிலிருந்து ஒரு தேக்கரண்டி அளவு ரத்தம் வந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.இந்தக் கதை ஏனோ விமாலித்த மாமல்லனின் சிறுமி கொண்டு வந்த மலர் சிறுகதையை நினைவுப்படுத்துகிறது.

எதனால் அவள் தற்கொலை செய்துக்கொண்டாள், ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் தான் வந்திருந்தால் அவளை தற்கொலையிலிருந்து மீட்டிருக்க முடியும் என்று புலம்புகிறான்.தான் மறுபடியும் இந்த தனியான வாழ்க்கையை வாழ வேண்டுமே என்று துயரத்தில் உழல்கிறான்.இந்தக் கதையை மணி கெளல் நஸர் என்ற திரைப்படமாக எடுத்திருக்கிறார்.இலங்கைச் சேர்ந்த பிரசன்ன விதானகே இதே கதையை அடிப்படையாக கொண்டு உன்னுடனும் உன்னுடன் இல்லாமலும் (With you , Without you) என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.தஸ்தாயெவ்ஸ்கியின் பல்வேறு கதைகள் நாவல்கள் தன்னிலையில் சொல்லப்பட்டவை.நிலவறையிலிருந்து குறிப்புகள், சூதாடி, பொபொக், உள்ளொடங்கியவள் போன்ற கதைகள் தன்னிலையில் எழுதப்பட்டவை.பல கதைகள் வெற்றியடையாத எழுத்தாளர்கள் தான் கதையை சொல்பவர்கள்.ஆனால் இந்த உள்ளொடுங்கியவள் கதையில் வரும் நகை அடகுக்காரனின் தன்னுரை போலவே இந்தக் கதை அமைந்திருக்கிறது.ஒரு எழுத்தாளனின் குறிப்புகளாக அல்ல.ஏன் அவள் தற்கொலை செய்துகொண்டாள் என்பதும் ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே என்பதுமே அவனை உருக்குலைக்கிறது.இனி மறுபடியும் தன் வாழ்க்கையில் இணைந்துகொள்ள போகும் தனிமை அவனை அச்சமூட்டுகிறது.அவன் அந்த மனதின் அறியமுடியாமை முன் உறவுகளின் புரிந்து கொள்ளமுடியாமையின் முன் செயலற்று நிற்கிறான்.

பொபொக் கதை இவான் என்ற தோற்றுப்போன எழுத்தாளனின் குறிப்புகள்.அவன் எழுதும் பலவும் நிராகரிக்கப்படுகிறது.அவன் மிகவும் அயர்ச்சியாக உணர்கிறான்.ஒரு மாற்றத்திற்காகத் தனக்கு தெரிந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கல்லறைக்குச் செல்கிறான்.அவனை அங்கு இறந்துபோனவரின் உறவினர்கள் யாரும் பொருட்படுத்தவில்லை.அவர்களிலிருந்து விலகி மூன்றாம் வகுப்பு கல்லறையில் சென்று அமர்கிறான்.திடீரென்று அவனுக்கு அங்கு பல குரல்கள் கேட்கத் துவங்குகிறது.மரணமடைந்திலிருந்தாலும் கல்லறையில் இருப்பவர்கள் உயிருடன் இருந்த போது இருந்த சமூக அடுக்குகளின் வரையறைகளுக்கு உட்பட்டே பேசுகிறார்கள்.அவர்களின் தவறுகள், பிழைகள், கீழ்மைகள் குறித்த அவமானங்களிலிருந்து விடுபட்டு வெளிப்படையாக பேசிக்கொள்கிறார்கள்.ஒரு பெண் நான் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்கிறாள்.அதை பலரும் ஏற்கிறார்கள்.இந்தக் கதை குறித்து நாம் மிகையான குறியீடுகளை உருவாக்கிக்கொள்ளலாம்.ஆனால் எளிய அளவில் இந்தக் கதை சமூக அமைப்பு உருவாக்கும் விழுமியங்கள் மரணத்திற்கு பிறகு பொருளற்று போகும் சூழலில் மனிதன் தன் கீழ்மைகளை எப்படி எந்தப் பாசாங்கும் இல்லாமல் கொண்டாட முனைகிறான் என்பதை சொல்வதாகக் கொள்ளலாம்.

நம்முள் நம் தீமை குறித்த ஒரு கொண்டாட்ட உணர்வும் அதை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.சட்டங்கள் , உறவுகள், சமூக கண்கானிப்பு, பிறர் குறித்த அச்சம், நம்மை எப்படி முன்நிறுத்த வேண்டும் என்ற ஏக்கம் ,அதிகாரத்திற்கான பிம்ப கட்டமைப்பு , மறுஉலகம் குறித்த ஊகங்கள் நம்மை பல்வேறு வகைகளில் நமது தீமையை நிர்வாணத்தை முழுக்க வெளிப்படுத்த இயலாத வகையில் மாற்றி வைத்திருக்கிறது.அப்படியான மனத்தடுப்புகளை மரணம் அகற்றுகிறது.கல்லறையில் இருக்கும் சடலங்கள் “அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையே” என்ற சுதந்திரத்தை பெறுகிறன்றன.அப்படியான சூழலில் சடலங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது அவைகளிலிருந்து எவை திமிறி மேலெழுகிறது என்பதை பற்றிய கேலிச்சித்திரம் தான் பொபொக்.தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் தந்தை கரமசோவ், குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ஸ்விட்ரிகைலோவ் போன்றவர்களின் கீழான செயல்களுடன் இந்த பொபொக் கதையை இணைத்து வாசிக்கலாம்.தன் கீழான எண்ணங்கள் உருவாக்கும் அவமானம் பற்றிய கூச்சம் அகலும் போது மனிதனின் தீமை பேருருவம் கொள்கிறது.கூச்சம், வெட்கம், அவமானம் மனிதனை பல வகைகளில் கட்டுப்படுத்துகிறது.அது இல்லாத போது மனிதன் முழுக்க வேறொன்றாக மாறிவிடுகிறான்.இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் நாம் கூச்சம் , வெட்கம் போன்றவற்றை வாழ்வின் முன்னேற்றத்தை தடுக்கும் எதிர்மறையான பண்புகளாவே பார்க்கிறோம்.ஆனால் தீய எண்ணங்கள் , செயல்களின் போது மனிதன் இயல்பாகவே கூச்சமும் கொள்கிறான், மகிழ்ச்சியும் கொள்கிறான்.பொபொக் எந்த சட்டகங்களும் அற்ற சூழலில் மனித நடத்தை குறித்த ஒரு விசாரணை என்று கொள்ள முடியும்.ஒரு எழுத்தாளனின் வெற்றி அவன் தன் கதைக்கானத் தளத்தை உருவாக்குவதில் இருக்கிறது.இந்தக் கதையில் தஸ்தாயெவ்ஸ்கி கல்லறையில் இருக்கும் சடலங்கள் பேசிக்கொள்ளும் தளத்தை உருவாக்குகிறார்.அதை விவரிக்க ஒரு தோற்றுப்போன எழுத்தாளரை மைய கதாபாத்திரமாக்குகிறார்.இப்படியாக இந்தக் கதையை தன் விசாரணைக்கு பயன்படுத்திக்கொள்கிறார்.இந்த பொபொக் கதையை வளர்த்து பல்வேறு சூழல்களில் பொருத்தி எழுத முடியும். எழுதுபவருக்கு அதற்கான தைரியம் இருக்க வேண்டும்.தஸ்தாயெவ்ஸ்கிக்கு இருந்திருக்கிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த குறுநாவல்கள் சிறுகதைகள் தொகுப்பை வாசிக்கும் போது அவரின் அக்கறை விசாரணை மனிதனின் அகம் குறித்தே இருக்கிறது என்பதை மீண்டும் உணர முடிகிறது.உளவியலில் அவர் செய்திருக்கும் பாய்ச்சல்கள் நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது.அவமானம் மனிதனை எந்தளவு துரத்தும் எப்படி மாற்றும் என்பதை பல்வேறு கதைகளில் தஸ்தாயெவ்ஸ்கி தொடர்ந்து எழுதுகிறார்.மரணம், இழப்பு ஆகியவற்றை விட அவமானம் மனிதனை வெகுவாக பாதிக்கிறது.அவனைச் சிதறடிக்கிறது.அவனை பல்வேறு கோமாளித்தனங்களை செய்ய வைக்கிறது.மறுபடியும் இந்த உலகின் முன் தன் அவமானங்களிலுந்து விடுபட்டு கனவானாக மாற அவனை உந்துகிறது.அவமானம் உருவாக்கும் கூச்சம், ஏக்கம், வெட்கம் போன்ற உணர்வுகள் , அவற்றால் நம் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி தஸ்தாயெவ்ஸ்கி போல எழுதியிருப்பவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும்.

அவர் மறுபடி மறுபடி இந்த அகம் சார்ந்த சிக்கல்களில் அக்கறை காட்டுவது இது எப்படி அவனது உறவுகளில் சித்தாந்தங்களில் கருத்தியல்களில் ஆன்மிகத்தில் பெரும் பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதை வலியுறுத்தத்தான்.மேலும் மனிதன் தன்னை முழுமையானவாக உணர விரும்புகிறான்.உடைந்த கண்ணாடியில் மனிதன் தன் முகத்தை பார்க்க விரும்புவதில்லை.அவமானம் மனிதனின் ஆன்மாவில் முழுமையில் ஒரு சிதைவை சிதறலை உடைவை ஏற்படுத்துகிறது.நான் என்ற முழுமையை அது உடைக்கிறது.அவன் சிதறுகிறான்.”அறுபட்டதென்ன விடுபட்டதென்ன ஒன்றாத சுவைக்கு ஓராயிரம் நாக்கு” என்ற பெருந்தேவியின் கவிதை வரி போல அவனுள் ஒயாத உரையாடல்கள் கொப்பளிக்கின்றன.அவன் கடல் அலை போல நுரைத்து பொங்குகிறான்.அவனுள் மறுபடியும் தன்னை முழுமையாக தொகுத்துக் கொள்ள முனையும் அவா இருந்து கொண்டே இருக்கும்.அவன் பிராத்தித்திக் கொண்டே இருக்கிறான்.மண்டியிட்டு வணங்கிக்கொண்டே இருக்கிறான்.அவன் தனக்கான மீட்சியை கண்டு கொள்ள பயணிக்கிறான்.அப்படி கொந்தளிக்கும் ஆன்மாக்களே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள்.அவமானங்களும் அது உருவாக்கும் பிறழ்வுமே அவரின் அக்கறைகள்.அங்கிருந்து அவர் மற்றவற்றை விசாரிக்கிறார்.உங்களின் பெரும் திட்டங்கள் , சித்தாந்தங்கள், கருத்தியல்கள் , ஆன்மிகச் சொற்பொழிவுகள் எல்லாம் சரிதான், ஆனால் இங்கு மனிதன் சிதறிக் கிடக்கிறான், இதற்கு உங்கள் தீர்வு என்ன என்று கேட்கிறார்.

அவரின் கேள்விக்கு அவரே பதில்களைக் கண்டுபிடிக்கிறார்.கண்டுபிடிக்கும் பதில்களை அவரே கேலியும் செய்கிறார்.ஆனால் அனைத்துக்கும் அப்பால் மனிதன் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்பது ஒர் உண்மை என்பதன் பக்கம் அவர் அதிக சாய்வு கொள்கிறார்.நாமும் அவரை ஏற்க விரும்புகிறோம்.

The Eternal Husband and Other Stories – Fyodor Dostoevsky – Translated by Richard Pevear and Larrisa Volokhonsky  - Bantam Classics.

 - வனம் இணைய இதழில் பிரசுரமான கட்டுரை.

நிழற்படம் - https://commons.wikimedia.org/wiki/File:Dostoevskij_1863.jpg