பெளத்தம் பற்றி இரண்டு விதமான பார்வைகள் தமிழில் இருக்கின்றன.ஒன்று அதற்கும் வேதாந்தத்திற்கும் பெரிய வித்யாசங்கள் இல்லை என்ற நோக்கு.பெளத்தம் வேதங்களை முழுக்க நிராகரிக்கிறது என்று சொல்ல இயலாது என்றும் வேதங்களின் தொடர்ச்சியாகவே பெளத்தத்தை பார்க்க முடியும் என்ற பார்வை.மற்றது பெளத்தம் முழுக்க தனித்த மரபை கொண்டது,அது வேதங்களிலிருந்து எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என்னும் பார்வை.
பொதுவாக பெளத்தம் வேதங்களை , ஆன்மாவை , சாதிகளை மறுக்கும் ஒரு கருத்தியலாக இங்கே இடதுசாரி சிந்தனையாளர்கள் முன்னெடுக்க விரும்புகிறார்கள்.அயோத்திதாசர் ஓடுக்கப்பட்டவர்கள் உண்மையில் பூர்வ பெளத்தர்கள் என்றும் நாம் பூர்வ பெளத்தத்தை மீட்டெடுப்பதே பொற்காலத்திற்கு திரும்பும் வழி என்றார். அயோத்திதாசர் சொல்வதில் உண்மை இல்லை என்று பலரும் சொல்கிறார்கள்.அயோத்திதாசர் முன்வைப்பது ஒரு கதையாடலை.A Narrative.அந்த கதையாடல் வழி அவர் ஒரு சட்டகத்தை உருவாக்குகிறார்.அதன் வழி எப்படி பழைய பொற்காலத்தை மீட்பது என்று சொல்கிறார்.உண்மையில் அப்படி ஒரு பொற்காலம் இருந்ததா என்பதல்ல முக்கியம்.அப்படியான பொற்காலத்தை இனி ஓடுக்கப்பட்டவர்களுக்கு உருவாக்க முடியுமா என்பதை அதில் உள்ள அக்கறை. ஓர் அடையாள அணித்திரள்வு எந்த வர்க்கத்தை முன்னிறுத்துகிறதோ அதன் அடிப்படையில் அது எப்படியான நோக்கை முன்வைக்கிறது என்று கூற முடியும். இந்துத்துவமும் ஒரு பொற்காலம் இருந்தது என்று சொல்கிறது.ஆனால் அயோத்திதாசரின் பார்வையும் இந்துத்துவத்தின் பார்வையும் ஒரே வர்க்கத்தை பாதிக்கப்பட்டவர்களாக கொள்ளவில்லை.அதிலிருந்தே அதன் வேறுபாடுகளும் துவங்குகின்றன.பொற்காலங்கள் புனையப்படுபவை.எல்லா பொற்காலங்களும்.அவை லட்சியவாதங்களும் கூட.
அம்பேத்கர் ஒரு மாற்று சமயத்தை பற்றி ஆராய்ந்த போது அவர் அனைத்து சமயங்களையும் பரிசீலித்தார்.சார்வாகம் , ஆஜிவிகம் போன்றவற்றை எவராலும் பரிசீலிக்க இயலாது. ஆஜிவிகம் பற்றி நமக்கு பெரிதாக எதுவும் தெரியாது.ஏ.எல்.பாசாம் ஒரு நூல் எழுயிருக்கிறார்.ர.விஜயலட்சுமி தமிழகத்தில் ஆசிவகர்கள் என்ற நூலை எழுதியிருக்கிறார்.அறிவுத்தோற்றவியல் குறித்தும் , இருப்பியல் உலகம் குறித்தும் அந்தத் தத்துவம் என்ன கூறுகிறது என்பதும் அதை எப்படி தன் நியாயங்கள் மூலம் நிரூபிக்கிறது என்பதும் முக்கியம்.அதைத் தொடர்ச்சியாக வளர்த்தெடுத்து அதற்கு சடங்குகளையும், குறியீடுகளையும் உருவாக்கும் தரிசனம் காலப்போக்கில் மதங்களாக மாறுகின்றன.
ஆஜிவிகம் , சார்வாகம் போன்றவற்றிக்கு அப்படியான எந்த முறையான பார்வையும் இல்லை.சார்வாகத்திற்கும் நமது எளிய தர்க்கங்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.பெரியார் கூறியதும் ஒரு வகை சார்வாகம் தான்.அது எளிய தர்க்கம்.ஆனால் அது முழு நாத்திக கோட்பாடு என்ற வகையில் முக்கியத்துவம் கொள்கிறது.ஆனால் அதை ஒரு மெய்யிலாக சமயமாக கொள்ள முடியாது.
அறிவுத்தோற்றவியலில் ஸ்ருதிகளை (வேதங்களை) பெளத்தம் ஏற்கவில்லை. தனிப்பெரும் பொருளான பிரம்மத்தின் மற்றொரு வடிவமே ஆன்மாவாக நம் மரபில் இருக்கிறது.அப்படி தனித்த மாறாத ஒரு பொருளாக எதையும் பெளத்தம் ஏற்கவில்லை. மறுபிறப்பை பெளத்தம் ஏற்கிறது. பெளத்தம் நிர்ணயவாதத்தை(ஊழ்) முன்வைக்கிறது. அறிபடு பொருள், அறியும் பொருள், அறிவு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.எதுவும் தனித்து இயங்குவதில்லை. சூனியவாதம் என்பது அத்வைதம் அல்ல.எதுவும் இல்லை என்று சூனியவாதம் சொல்லவில்லை. தனித்து அர்த்தம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை என்று சொல்கிறது.பிரம்மம் இல்லையேல் ஆன்மாவும் இல்லை.
பெளத்தம் சாதிகள் குறித்து என்ன சொல்கிறது என்று கேள்விக்கு நாம் எளிய விடைகளை தர இயலாது.சட்டென்று மூன்று துயரங்களை கண்டு புத்தர் தன் ஞானத்தேடலைத் துவங்கினார் என்ற கதையாடலை அம்பேத்கர் ஏற்கவில்லை. தர்மானந்த் கோஸாம்பியும் தன் பகவான் புத்தர் நூலில் அதை மறுக்கிறார். புத்தர் இரு நாடுகளுக்கு மத்தியில் ரோகிணி ஆற்றை முன்னிட்டு நிகழந்த போர்களை கண்டு துயரம் கொண்டே தன் தேடலைத் துவங்கினார்.மறத்திற்கும் அன்பு சாத்தியம் என்பதே பெளத்தம்.அவர் சங்கத்தை துவங்கினார். அதில் தொடர்ச்சியாக சட்டங்களை உருவாக்கியபடியே இருந்தார்.அதனால் சாதி குறித்த பெளத்தத்தின் பார்வை என்ன என்பதற்கு அதை கடக்கும் சாத்தியப்பாடுகளை அதன் தரிசனம் கொண்டுள்ளது என்பதையே பதிலாக கொள்ள முடியும்.ஏனேனில் அது உடல் பொய்யானது என்ற பார்வையை கொண்டிருக்கவில்லை.ஆன்மாயின்மை, நிலையின்மை, நிறைவின்மை ஆகியவையே பெளத்தம் முன்வைக்கும் மூன்று உண்மைத் தன்மைகள்.
இப்படி நாம் பெளத்தத்தை விளக்கும் போதே சிறுபாண்மையினருக்கு இலங்கையில் , பர்மாவில் நிகழும் துயரங்களையும் பார்க்கிறோம்.திபெத்திய பெளத்தம் எப்படி மிகப்பெரிய நாடான சீனாவை எதிர்க்கும் ஆற்றலை தன் மக்களுக்கு அளித்துள்ளது என்றும் பார்க்கிறோம்.சீனா அடுத்த தலாய்லாமாவை தேர்தெடுத்தாலும் திபெத்திய மக்கள் இப்போதைய தலாய்லாமா சுட்டிக்காட்டும் ஒருவரையே தங்கள் தலாய்லாமாவாக கொள்ளப்போகிறார்கள். இப்படி நம் முன் பல்வேறு பெளத்தங்கள் இருக்கின்றன. அப்படியாக இந்தியாவிற்கும் ஒரு பெளத்தம் இருக்கிறது. அது அசோகர் காலத்திலிருந்து தொடர்ந்து மறத்திற்கும் அன்பு என்ற போதனையை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது.அது நேருவின் ஆட்சிக்காலத்தில் இருந்தது.இன்றைய ஆட்சியில் இல்லை.நாளைய ஆட்சியில் இருக்கும்.
பெளத்தம் இந்தியாவிற்கு அளித்த கொடையாக அந்த நோக்கையே பார்க்கிறேன்.ஆன்மாவை, சாதியை, தனித்த பெருங்கடவுளை , பிரம்மத்தை மறுத்து ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகிறது என்னும் பார்வை.மறத்திற்கும் அன்பு என்ற விரிவு. அந்த பெளத்த மெய்யியல் தான் என்னுடைய பெளத்தம்.இந்தியாவின் பெளத்தம்.அம்பேத்கரின் பெளத்தம்.அந்த பெளத்தத்தில் சாதி இல்லை,ஆன்மா இல்லை, வேதம் இல்லை.நாம் இருக்கிறோம்.
No comments:
Post a Comment