2021

இந்த வருடம் ஜனவரி 10ஆம் தேதி முறையிட ஒரு கடவுள் சிறுகதைத் தொகுப்பு கோயில்பட்டியில் மணல் வீடு இலக்கிய நிகழ்வில் வெளியிடப்பட்டது. முதல் புத்தகம்.முதல் சிறுகதைத் தொகுப்பு. சற்று மகிழ்ச்சியாக இருந்தது.நான் சிறுகதைகள் எழுதுவேன் , தொகுப்பாக கொண்டு வருவேன் என்று முன்னர் எண்ணவில்லை. 2015யில் எதேர்ச்சையாக பெனுகொண்டா சென்று வந்ததை புனைவாக மாற்ற முயன்று பூதக்கண்ணாடி சிறுகதை உருவானது.காலச்சுவடுக்கு அனுப்பினேன்.பிரசுரமானது.அதன் பின் தொடர்ந்து எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது.ஆறு வருடங்கள் கழித்து 2021 தொகுப்பு வெளியானது.

கட்டுரைகள் எழுதினாலும் புனைவுகளை எழுதும் போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.2021யில் ஒரு கதை எழுதிப் பார்த்தேன். நன்றாக வரவில்லை. முறையிட ஒரு கடவுள் தொகுப்பில் உள்ளது போல எழுதக்கூடாது என்று எண்ணுகிறேன்.மேலும் அந்த மனநிலை இப்போது இல்லை.பிறரை பிரதானமாக்கும் கதைகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.2022 இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எழுத வேண்டும்.

ஏப்ரல் மாதம் 21ம் தேதி தந்தை இறந்து போனார். தந்தையின் மரணம் ஒரே நேரத்தில் அமைதியையும் இன்மையையும் ஏற்படுத்தியது. இப்போது இன்மை மட்டுமே தொடர்கிறது.நண்பன் நேதாஜியின் மரணம் என்னை உலுக்கிவிட்டது.என் நீண்ட நாள் நண்பன். நீங்கள் புதிய காதலியைக் கூட பெற்றுவிடலாம் ஆனால் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது.இரு சிறு குழந்தைகள்.அவனது மனைவி இந்த துயரத்தை கடந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். பெரும் பணி அவருக்காக காத்திருக்கிறது.

செப்டம்பர் வரை சென்னையில் இருந்தேன்.அதன் பின் அங்கு இருக்க பிடிக்கவில்லை.குடும்பத்துடன் பெங்களூரு வந்து விட்டேன்.வீட்டிலிருந்தே வேலை செய்வதில் நிறைய சலுகைகள் இருக்கின்றன. சலிப்பும் உண்டு. இந்த மென்பொருள் துறையில் நான் விரும்பும் வரை இருக்க இயலும் என்ற நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கிறது.வேலைக்கு தேவையானவற்றை படிக்க வேண்டும்.2022யில் அதற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும்.

தி.ஜா.பாண்டியராஜூ இயக்கியுள்ள நகுலன் பற்றிய ஆவணப்படத்திற்கு சப்-டைட்டில்கள் செய்து கொடுத்தேன்.அதை அவர் பயன்படுத்திக் கொள்வாரா  என்று தெரியவில்லை ,ஆனால் சப்-டைட்டில்களுக்காக அந்த ஆவணப்படத்தை பல முறை பார்க்க வேண்டி இருந்தது. நகுலன் பற்றி தமிழ் சூழலில் இருக்கும் பல பிம்பங்கள் இந்த ஆவணப்படம் வந்தால் உடையும். அதில் பணி புரிந்தது எனக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

கனலி கொண்டு வந்த நகுலன் சிறப்பிதழில் ஒரு கட்டுரை எழுதினேன்.அதே போல ஷங்கர்ராமசுப்ரமணியன் கொண்டு வர இருக்கும் நகுலன் இதழுக்கும் கட்டுரை எழுதியிருக்கிறேன்.ஜனவரியில் வரும். தமிழினியிலும் வனத்திலும் தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய கட்டுரைகள் எழுதினேன்.அனைத்து கட்டுரைகளையும் நன்றாக எழுத முடிந்தது.பக்தீன் பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.நன்றாக எழுத முடிந்தால் பிரசுரமாகும். வேலை அழுத்தத்திற்கு மத்தியில் வாசித்து தொகுத்து எழுதுவது சில நேரங்களில் சவாலாக இருந்தது.அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையை சரியாகச் செய்தால் அனைத்து பணிகளையும் திறன்பட செய்ய முடியும் என்று எண்ணுகிறேன்.2022யில் 2021யில் எழுதியதை விட நிறைய கட்டுரைகள் எழுத வேண்டும். சிறுகதைகள் எழுத வேண்டும்.

முறையிட ஒரு கடவுள் தொகுப்பை ஏதோ ஒரு வகையில் என்னளவில் அடையாளத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.அடுத்த தொகுப்பில் பிறர் தான் பேசுபொருளாக இருக்கும். நான் மிகத் தீவிரமாக நம்பும் ஒரு கருத்தின் அடிப்படையிலேயே என்னால் கதைகளை எழுத இயலுகிறது. ஒரு படிமத்தின் துணைக்கொண்டோ , அல்லது ஒரு நிகழ்வின் அடிப்படையிலோ என்னால் எழுத இயலவில்லை. அது ஒரு தோல்விதான் , ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை.கருத்தின் அடிப்படையில் தான் என்னால் தொகுத்து சிந்திக்க முடிகிறது. அதே நேரத்தில் அந்தக் கருத்து ஒரு புனைவாக மாற வேண்டும் என்றால் அதன் மீது எனக்குத் தீவிரமான நம்பிக்கை இருக்க வேண்டும். என்னளவில் அதை நான் முழுமையாக ஏற்றாக வேண்டும்.அப்போது தான் அதை என்னால் புனைவாக மாற்ற இயலுகிறது. முன்னர் அடையாளமின்மை, அபத்தம் என்பதாக எனக்கு சில கருத்துகள் இருந்தன.இடையில் சில காலம் எந்த எண்ணமும் இல்லை.அதனால் கதைகளும் எழுத முடியவில்லை. இப்போது அவற்றிலிருந்து நான் விலகி வந்து விட்டேன். நகுலனின் புனைவுகளும் கவிதைகளும் எனக்கு புதிதான ஒரு கருத்தை அளித்திருக்கிறது. அந்தக் கருத்தின் துணைக்கொண்டே நான் எனது கதைகளை எழுதவிருக்கிறேன். 

இந்த வருடம் அதிகம் வாசிக்கவில்லை , ஆனால் வாசித்தவற்றை கூர்மையாக வாசித்தேன். வரும் வருடம் முழுக்க முழுக்க சிறுகதைகளையும் , நாவல்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அதைப்பற்றி கட்டுரைகளையும் எழுதுவேன். 2022யின் பிரதான திட்டம் அதுதான். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுத வேண்டும். 2022 அல்லது 2023யில் கட்டுரைத் தொகுப்பை கொண்டு வருவேன்.

இந்த ஆண்டு போலில்லாமல் வரும் ஆண்டு கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறைந்து அனைவரும் அவரவர் இயல்பு வாழ்க்கை முறைகளுக்கு திரும்ப வேண்டும் என்பதற்கு அப்பால் கேட்பதற்கு ஒன்றுமில்லை.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.


No comments: