2018 பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லாத மகிழ்ச்சியான வருடமாக அமைந்தது.இரண்டு வீடுகள் மாறினேன்.மகள் தாரா பிறந்தாள்.மகள் பிறக்க வேண்டும் என்று நானும் மனைவி லக்ஷ்மியும் ஆசைப்பட்டோம்.அப்படியே நிகழ்ந்தது.கெளதம் செய்யும் சேட்டைகளை பொறுத்துக்கொள்பவர் மிக விரைவிலேயே கெளதமர் ஆகிவிடுவார்.லேப்டாப் , மொபைல் போன் என்று உடைபடாத பொருள்கள் இல்லை.அவனை சமாளிப்பதே ஒரு நாளின் முக்கிய விஷயமாக இந்த வருடத்தில் இருந்தது.வேலையில் சின்னச்சின்ன சிக்கலகள்.அடுத்த வருடம் இனிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.வேலை சார்ந்தும் நிறைய படிக்க வேண்டியிருக்கிறது.
ஒரளவு நன்றாகவே இந்த வருடத்தில் வாசித்தேன்.குறைவாக எழுதினேன்.மணல் வீடு ஹரிகிருஷ்ணன் கேட்டதால் இரண்டு சிறுகதைகளை எழுத முடிந்தது.பிம்பம் என்ற சிறுகதை முதலில் அவருக்கு அனுப்பினேன்.அவருக்கு பிடிக்கவில்லை.பின்னர் காலச்சுவடுக்கு அனுப்பினேன்.பதிலில்லை.வலைதளத்தில் பிரசுரித்துவிட்டேன்.பிம்பம் சிறுகதை என்னளவில் முக்கிய முயற்சி.அதில் 30 வருடங்களுக்கு மேலான காலத்தை எழுதியிருக்கிறேன்.நான் பெரும்பாலும் தன்னிலையில் லீனியரான கதைகளையே எழுதியிருக்கிறேன்.இது படர்க்கையில் முன் பின் என்று ஒரு தந்தைக்கும் மகனுக்குமான தொடர்ச்சியான கதையாக எழுதினேன்.தினறல் இருந்தது.ஆனால் இனி அது போல எழுதும் கதைகளை எளிதாக எழுத முடியும் என்று நினைக்கிறேன்.பிளவு என்ற மற்றொரு சிறுகதையை மணல் வீடு இதழுக்கு அனுப்பினேன்.வரும் ஜனவரி இதழில் பிரசுரமாகும்.2019யில் என் முதல் சிறுகதை தொகுப்பை கொண்டு வருவேன்.ஒரு குறும்படம் எடுக்கும் ஆவல் இருக்கிறது.
கார்ல் யுங்கின் சில புத்தகங்களை வாசித்தது இந்த வருடத்தின் முக்கியமான விஷயம்.அது பல கதவுகளை திறந்து விட்டது.அவரை தொடர்ந்து வாசிக்க வேண்டும்.தமிழில் நாம் இலக்கியம் சார்ந்து வாசிக்கும் பல கருத்துகள் கார்ல் யுங் வழியாக பெற்றவையாக இருக்க வேண்டும்.ஓ.ரா.ந.கிருஷ்ணன் எழுதிய Buddhism and Spinoza வாசித்தேன்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது.தொடர்ந்து அவரை வாசிக்கிறேன்.தத்துவத்திற்கான இணைய இதழ் ஒன்றை துவங்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.அதைப்பற்றி கிருஷ்ணனிடம் பேசினேன்.ஒரிரு அடிகள் எடுத்து வைத்துவிட்டு நிறுத்திவிட்டேன்.அடுத்த வருடத்தில் அதை செயல்படுத்த இன்னும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.முதல் இதழை கொண்டு வருவதுதான் சிக்கல்.அடுத்தடுத்து கொண்டுவருவது எளிதாகிவிடும்.
ஒரிரு கவிதைகள் எழுதினேன்.கட்டுரைகள் எழுதினாலும் சிறப்பான கட்டுரை என்று எதுவும் இல்லை.தொடர்ந்து நிறைய வாசிக்க வேண்டும்.எழுத வேண்டும்.அதைத் தவிர்த்த பெரிய கனவுகள் எதுவும் இல்லை.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment