எஸ்.ராமகிருஷ்ணன்






2004யில் திருவல்லிக்கேணி மேன்சனில் இருந்த போது தொடர்ந்து விகடன் வாங்கினேன்.அப்போது அதில் இரண்டு முக்கியமான தொடர் கட்டுரைகள் வந்தது.ஒன்று பாலாவின் இவன் தான் பாலா என்ற தொடர்.மற்றது துணையெழுத்து.இரண்டும் பிடித்திருந்தது.அதன் பிறகு 2005யில் உயிர்மை பத்திரிக்கையை தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் அருகே இருக்கும் பேப்பர் கடையில் பார்த்து வாங்கினேன்.அதிலும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிக்கொண்டிருந்தார்.அப்போது உயிர்மையின் உள்ளடக்கம் வித்யாசமாக இருந்தது.இப்போது போல இல்லை.ஐன்ஸ்டின் ஒரு அறிவுத் திருடரா என்ற கட்டுரை வந்திருத்தது.ரவி ஸ்ரீனிவாஸ் எழுதியிருந்தார்.புகைப்படம் பதிப்புரிமை உலகமயமாதல் என்று சே குவேராவின் புகைப்படம் சார்ந்து ஒரு கட்டுரை வந்திருந்தது.இந்த கட்டுரைகளின் தலைப்புகள் தான் முகப்பு பக்கங்களாக இருந்தன.இன்று உயிர்மை முற்றிலும் மாறிவிட்டது.அப்போது தொடர்ச்சியாக எஸ்.ராமிகிருஷ்ணன், ஜெயமோகன் (காய்தல் உவர்த்தல்!) , சாரு நிவேதிதா எழுதிக்கொண்டிருந்தார்கள்.ஷாஜி உயிர்மையில் இசை பற்றி எழுதிய கட்டுரைகளின் வழி புகழ் பெற்றார்.ஆரம்பத்தில் அவருடைய கட்டுரைகளை ஜெயமோகன் மொழிபெயர்த்தார்.ஆனால் பத்திரிக்கையில் தமிழில் ஜெ என்று இருக்கும்.ஜெயமோகன் என்று இருக்காது.

2005 அல்லது 2006யில் உயிர்மையில் நெடுங்குருதி நாவல் பற்றிய குறிப்பு பார்த்தேன்.அபிராமபுரத்தில் இருந்த மனுஷ்யபுத்திரன் வீட்டிற்கு சென்று புத்தகம் வாங்கினேன்.அந்த நாவல் நான் வாசித்த அற்புதமான நாவல்களில் ஒன்று.நாவல் வாசித்து முடித்த அன்று தொண்டையில் ஏதோ வலி ஏற்பட்டு மன அழுத்தம் கொண்டு அழுதது நினைவில் இருக்கிறது.எஸ்.ராமகிருஷ்ணனின் மிக முக்கியமான நாவலாக நெடுங்குருதி இருக்கும்.அவரின் மொத்த வாழ்க்கையும் தேடலும் அந்த நாவலில் இருப்பதாக எனக்கு தோன்றும்.அந்த கிராமத்து மக்கள் குற்றப் பரம்பரையினராக அடையாளம் காணப்பட்டிருப்பார்கள்.அந்த கிராமம் ஒரு சுழுல் போல அந்த மனிதர்களை அந்த கிராமம் நோக்கி மறுபடி மறுபடி இழுத்து வரும்.ரத்னாவதி இறக்கும் போது இந்த உலகில் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தவாறு தற்கொலை செய்து கொள்வாள்.

அவருடைய உறுபசி அதிக எழுத்துப்பிழைகளுடன் பிரசுரமானது.ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏதோ ஒரு லட்சியவாதம் இளைஞர்களை கவர்கிறது.ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு பிறகு அந்த இளைஞர்கள் என்னவாகுகிறார்கள்.ஒரு வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் அக்கறை உதிரி மனிதர்கள் பற்றிய அக்கறை. அவருடயை ஜன்னலை தட்டாதே அஷ்ரப் சிறுகதை அப்படியான உதிரி மனிதனை பற்றியதுதான்.
சம்பத் திராவிட இயக்கத்தின் லட்சியங்கள் முடிந்து போன காலத்தில் சிதறி போகிறான்.பின்தொடரும் நிழலின் குரல் , அபிலாஷ் எழுதிய ரசிகன் ஆகிய நாவல்களோடு இணைத்து வாசித்து பார்க்க வேண்டிய நாவல் உறுபசி.சம்பத்துக்கும் , ரசிகனின் சாதிக்குக்கும் பல ஒற்றுமைகள் உள்ளது.

யாமம் நாவல் சென்னையை மையப்படுத்தியது.மிளகு வரலாற்றை மாற்றிவிடுகிறது.இந்த நாவலை வாசித்துவிட்டு பாரீஸ் கார்னரில் இருக்கும் ஆர்மேனியன் சர்ச்சை சென்று பார்த்தேன்.இந்த நாவலில் ஏதோ ஒரு வகையில் எல்லோரும் பிறழ்ந்து விடுகிறார்கள்.இதுவும் உதிரி மனிதர்களை பற்றிய நாவல் தான்.இந்த நாவலின் மொழி நம்மை மிகவும் வசீகரிக்கக்கூடியது.

அதன் பின் அவருடைய நாவல்களை வாசிக்கவில்லை.வாசிக்க தோன்றவில்லை.அவருடைய அபுனைவு மிகவும் பலவீனமானது.அவரால் தன் எண்ணங்களை தொகுத்து தர்க்கப்படுத்தி ஏன் இவர் முக்கியமான எழுத்தாளர் , ஏன் இல்லை என்று சொல்ல முடியாது.சில நெகிழ்ச்சியான வரிகள்.சில தகவல்கள்.அவரால் ஒரு போதும் நல்ல கட்டுரையை எழுத முடிந்ததில்லை.அவரின் நல்ல கட்டுரை தொகுப்பு துணையெழுத்து மட்டும் தான்.விழித்திருப்பவனின் இரவு வாசித்திருக்கிறேன்.ஆனால் அதன் வழி நீங்கள் தகவல்களை மட்டுமே பெற முடியும்.சில்வியா பிளாத் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைக்கு ஜெயமோகன் வாசகர் கடிதம் எழுதியது நினைவுக்கு வருகிறது.அதில் ஜெயமோகன் எப்படி பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி அவர்களை பிரபலப்படுத்துகிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து இலக்கிய கூட்டங்களில் பேசுபவர்.அவர் தஸ்தாயெவ்ஸ்கி பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.பேசியிருக்கிறார்.ஆனால் அவை பெரும்பாலும் நெகிழ்ச்சியை மட்டுமே முதன்மைபடுத்துபவை.நீங்கள் அந்தக் கட்டுரைகளின் வழி தஸ்தாயெவ்ஸ்கி பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடியாது.ஆனால் ஏதோ ஒரு வகையில் அவை தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க தூண்டுபவை.Pakistan என்பதை bakistan என்று உச்சரிப்பார்.

ஜெயமோகன் போல ஒரு வாசகர் வட்டத்தை அவர் உருவாக்கவில்லை.அல்லது அப்படி எதுவும் உருவாகவில்லை.குறும்படங்கள் , தொலைக்காட்சி தொடர்கள், நாடகங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்திருக்கிறார்.நானும் பல ஆண்டுகளாக வடபழனியிலும் சாலிக்கிராமத்திலும் வசித்திருந்தாலும் அவரை சென்று சந்தித்ததில்லை.அபிலாஷ் அவர் எப்படி அட்டவனை போட்டு தன் ஒரு நாளை வகுத்திருப்பார் என்று சொல்லியிருக்கிறார்.தன் நேரத்தை மிகவும் கவனமாக செலவு செய்பவர்.இல்லை என்றால் இத்தனை தொடர்ச்சியாக எழுதியிருக்க முடியாது.அவருக்கு திரைப்படம் இயக்கும் எண்ணம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தமிழில் ஒருவர் முழு நேர எழுத்தாளராக இருக்க விழைவது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம்.உறவினர்கள் மத்தியில் மட்டுமே எத்தனை அவமானங்கள்.அத்தனையும் மீறி முழு நேர எழுத்தாளராக இருந்து வாழ்வில் வெற்றி பெற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன்.விருதுநகர் அவரின் சொந்த ஊர் என்றாலும் சாலிக்கிராமத்தில் ஒரு சொந்த வீடு வாங்கியது அவருக்கு மிகுந்த நிறைவை அளித்தது என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

சாகித்திய அகாடமி ஒரு நாவலை முன்னிட்டு விருது அளித்தாலும் அது அந்த எழுத்தாளரின் அதுவரையான எழுத்து செயல்பாட்டை அங்கீகரிக்கும் ஒன்றாகவே பார்க்க முடியும்.எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

No comments: