போகன் சங்கரின் முதல் சிறுகதை தொகுப்பு கிருஷ்ணனின்
ஆயிரம் நாமங்கள்.நடிகன் , சுரமானி , யாமனி அம்மா , பாஸிங் ஷோ ஆகிய கதைகளில் எழுத்தாளன்
, ஒவியன் , நடிகன் கதைத்தலைவனாக இருக்கிறான்.பூ,படுதா,பொதி ஆகிய கதைகளில் முக்கிய கதாபாத்திரம்
ஒரு வேலைக்கு செல்பவனாக இருக்கிறான்.இந்த சிறுகதை தொகுப்பை வாசித்த போது அனைத்தும்
ஒரே கதை தான் என்ற எண்ணம் வலுப்பெற்றது.சமூக அடுக்கில் நிலப்பிரபுத்துவ காலத்தில் மேலான
நிலையிலிருந்த ஒரு குடும்பம் சட்டென்று கீழே சரிகிறது.அப்போது அவர்கள் தனிமனிதர்கள்
ஆகிறார்கள். அவமானப் படுத்தப்பட்டதின் , திடீரென்று பாதுகாப்பான சமூக அடுக்குகளிலிருந்து
தெருவில் கைவிடப்பட்டதின் சித்திரம் இந்த கதைகளில் வருகிறது.1
பூ கதையில் திருநெல்வேலியில் பிறக்கும் கதைத்தலைவனின்
அன்னைக்கு திருவட்டாரில் பெரிய காடு போல வீட்டின் பின்னால் கிடக்கும் இடத்தை பார்த்ததும்
அழுகையே வந்துவிடுகிறது.தந்தையால் ஹோட்டலை சரியாக நிர்வாகம் செய்யத் முடியவில்லை.அவமானப்படுகிறார்.பெரியப்பாவின்
தொந்தரவு.அன்னை தீக்குளித்து இறந்து விடுகிறார்.அவர்களின் சொத்து அனைத்தும் அவர்களை
விட்டு போய்விடுகிறது.சட்டென்று கதைத்தலைவன் கைவிடப்பட்டவனாகிறான்.அவன் தொடர்ந்து அவனது
அம்மாவிடம் என்னை எப்படி இப்படி விட்டுச் செல்லலாம் என்று தான் கேட்டுக்கொண்டிருக்கிறான்.இறுதியில்
தீப்பாய்ஞ்ச அம்மனில் தன் அன்னையை கண்டுகொள்கிறான்.கைவிடப்பட்டு ஊரை விட்டு விலகிச்சென்றவன்
இருபது வருடங்களுக்கு பிறகு சுடு வெயிலில் மணலில் நடந்த பாதங்கள் நிழலை அடைவது போல
உணர்கிறான்.அவனுக்கான நிலம் அவனுக்கு கிடைக்கிறது.பாதுகாப்பான கருவறைக்குள் சென்று
சேர்கிறான்.
இதே கதையின் வேறு ஒரு வடிவத்தை மீட்பு கதையில் காண
முடிகிறது.தன் இரண்டு குழந்தைகளும் விபத்தில் இறந்துவிடுவதால் அந்த பெருந்துயரத்திலிருந்து மீள முடியாமல் அவதியுறும்
பிலிப்பும் அவனது மனைவியும் கொடைக்கானலில் மலை உச்சியில் தங்கள் வாழ்வை அர்த்தம் கொள்ளச்
செய்யும் உயிர் தொடர்ச்சியை பார்த்த பின்னர் மீள்கின்றனர்.கொடைக்கானலில் அவர்கள் கண்டு
கொள்ளும் இந்த அரூப உலகை போகன் சங்கர் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார்.அவர் கவிஞர்
என்பது அவருக்கு இதை எளிதாகியிருக்கக்கூடும்.இந்தக் கதையின் மொழி நடை அபாரமானது.இங்கும்
நாம் சட்டென்று ஒரு விபத்தால் கைவிடப்படும் மனிதன் மீளும் சித்திரத்தை பார்க்க முடிகிறது.இந்த
இரண்டு கதைகளிலும் மரணத்திற்கு பிறகும் நாம் இந்த உலகில் இந்த பிரபஞ்சத்தில் இந்த உயிர்சக்தி
ஏதோ ஒரு வகையில் இருக்க வேண்டும் என்று அந்த மரணத்தால் கைவிடப்பட்டவராக உணர்பவரின்
பிராத்தனையாக இருப்பதை உணர முடிகிறது.இதே போல யாமினி அம்மா கதையில் யாமினி என்ற சிறுமி
விபத்தில் இறந்து விடுகிறாள்.அவளை ஆற்றுப்படுத்துபவனாக கதைத்தலைவன் வருகிறான்.
பாஸிங் ஷோ ஆதவனின் கதை உலகை நினைவுப்படுத்தியது.பாஸிங்
ஷோ, கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் , படுதா , நடிகன் ஆகியவை வெளித்திரைகளுக்கு அப்பால்
இருக்கும் மனித (பெண்!) மனத்தின் ஆச்சரியப்படுத்தும் புதிர்களை பற்றியவை என்று வகுக்கலாம்.நம்மால்
புரிந்துகொள்ளவே முடியாத ஏதோ ஒன்று ஒர் உறவில் இருக்கிறது.எங்கோ அந்த சிக்கல் சட்டென்று
ஆச்சிரயப்படுத்தும் வகையில் வெளிப்படுகிறது.அது உறவுகளை பாதிக்கிறது.ஆனால் இது எல்லா
உறவுகளிலும் இருக்கிறது.
பூ போன்ற மற்றொரு கதை பொதி.அவனது தந்தை இறந்துவிட்டதால்
அவனுக்கு அந்த வேலை கிடைக்கிறது.அவனது தந்தையை மேலதிகாரி கன்னத்தில் அறைந்துவிட்டதால்
அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.அலுவலகத்தில் எவராலும் மதிக்கப்படாத தனித்துவிடப்பட்டவனாக
இருக்கிறான் கதைத்தலைவன்.
ஆடியில் கரைந்த மனிதன் என்ற கதையில் தம்பி மற்றும்
மகனின் பெயர்களை குழப்பிக் கொள்கிறான் கதைத்தலைவன்.மனப்பிறழ்வு அவனது தந்தைக்கு இருந்திருக்கிறது.தம்பிக்கும்
அந்தச் சிக்கல் இருக்கிறது.ஒரு கட்டத்தில் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று அவன் அந்த
ஆடியில் சென்று கரைந்து விடுகிறான்.தன் தம்பியையும் மகனையும் காப்பாற்ற அதுவே வழி என்று
பிரக்ஞைபூர்வமாக அந்த முடிவை எடுக்கிறான். பூ கதையில் கதைத்தலைவனின் தந்தை ஹோட்டல்
நடத்துகிறார்.அதை அவரால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை.ஒரு முறை உணவருந்திவிட்டு ஒருவன்
பணம் தராமல் அவரை அடித்து விட்டு சென்று விடுகிறான்.அந்த அவமானத்தால் அவர் குடிக்க
துவங்குகிறார்.பொதி கதையில் அந்த கதைத்தலைவனின் தந்தை மேலதிகாரி கன்னத்தில் அறைவதால்
அதே அலுவலகத்தில் மறுநாள் தற்கொலை செய்து கொள்கிறார்.இந்த கதைகளில் இந்த அவமானமும்
அதை எதிர்கொள்ள இயலாமல் அவர்கள் தற்கொலை செய்வதும் , ஊரை விட்டு சென்று விடுவதும் ஆளுமை
சிக்கலாகவே வருகிறது.இவை புறவயமான பிரச்சனையின் காரணமாக ஏற்படும் அகச்சிக்கலாக சொல்லப்படவில்லை.ஆடியில்
கரைந்த மனிதனில் அந்த மனப்பிறழ்வு குருதி வழி வரும் சிக்கல்.மீட்பு கதையில் பெருந்துயரத்திலிருந்து
அந்த பெற்றோர் ஒரு அரூபத் தளத்தில் தங்களுக்குகான விடையை கருணையை மீட்சியை பெறுகின்றனர்.இங்கே
அனைத்து சிக்கல்களும் உறவுகளுக்கு இடையிலான சிக்கலாக , குருதி வழி சிக்கலாக இருக்கிறது.அந்தச்
சிக்கல்களுக்கு தீர்வும் அந்த உறவுகளில் அகத்தில் இருக்கிறது.அவை புறத்தில் இல்லை.
பொதி கதையில் வரும் தந்தை தன் அவமானத்தை ஒரு வர்க்க
பிர்ச்சனையாக பார்க்கவில்லை.பூ கதையில் வரும் தந்தை செல்வந்தர்.நிலப்பிரபுத்துவ காலத்தில்
நிலம் வைத்திருந்த சாதிகள் சமூக அடுக்கின் மதிப்பீடுகளால் பாதுகாக்கப்பட்டனர்.அந்த
நிலக்கிழார்களை யாரும் அவமானப்படுத்த இயலாது.அது அத்தனை சுலபமில்லை.அந்த சமூக அடுக்கு
அவர்களை காப்பாற்றுகிறது.நிலப்பிரபுத்துவ காலம் முடிந்து நிலம் கைவிட்டுச்சென்று தொழிலோ
அல்லது வேலைக்கோ செல்வது தான் வழி என்று ஆகும் முதலாளித்துவ காலத்தில் அந்த நிலக்கிழார்
சமூகத்தை சேர்ந்தவன் தனிமனிதன் ஆகிறான்.அங்கே அவனை பாதுகாக்க சமூக அரன்கள் இல்லை.அவன்
தன் புத்தி கூர்மையாலும் , சாதுர்யத்தாலும் புற உலகை புரிந்து கொள்வதன் வழியே தன்னை
காத்துக்கொள்ள முடியும்.அங்கே புறவய யதார்த்தம் மாற்றம் கொள்கிறது.அந்த புறவய யதார்த்தம்
மாற்றம் கொள்ளும் இடத்தில்தான் பூ , பொதி, ஆடியில் கரைந்த மனிதன் போன்ற கதைகளின் கதைத்தலைவனின்
தந்தைகள் வருகிறார்கள்.ஆனால் கதையில் இது அந்த தனிமனிதனின் ஆளுமைச்சிக்கலாக , குருதி
வழி வரும் சிக்கலாக, அகச்சிக்கலாக மட்டுமே இருக்கிறது.இதை எதிர்கொள்ள அந்த கதைத்தலைவன்
மறுபடி மறுபடி தன் அன்னையை ஏதோ ஒரு வடிவில் கண்டுகொள்கிறான்.அதுவே அவனுக்கான பாதுகாப்பாக
அமைகிறது.பொதி கதையில் இறுதியில் அந்த வேசியிடம் சொல்வதாக இந்த வரியை சொல்ல விரும்புகிறான்.”அவள்
மகன் நிச்சயமாக எங்கோ நல்ல படியாக இருக்கிறான் என்று சொல்ல விரும்பினேன்.அதே சமயம்
ஒர் அம்மையின் ஹிருதயத்தைவிடச் சுத்தமான இடம் கிடையாது என்றும்”.இது அவன் அவனுக்கே
சொல்லிக்கொள்ளும் வரியும் கூட.
பூ கதையில் தன் மகனுக்காக வைத்தியத்தில் அவன் இறுதியாக
மாற்று வைத்தியத்தை தேடிச் செல்கிறான்.மீட்பு கதையில் வரும் பெற்றோர் மனநல மருத்துவரை
சென்று ஆலோசனைகளை பெறுவதில்லை.ஆடியில் கரைந்த மனிதன் தன்னை அழித்துக்கொள்வதன் வழி மட்டுமே
தன் தம்பியையும மகனையும் காப்பாற்ற இயலும் என்ற முடிவுக்கு வருகிறான். போகன் சங்கரின்
கதை உலகில் சிக்கல்களுக்கான தீர்வு மனநல மருத்துவரிடமோ, புற உலகிலோ , அலோபதி மருத்துவரிடமோ
இல்லை.
குதிரைவட்டம் , சுரமானி ஆகிய கதைகள் சரியாக அமையாத
சிறுகதைகளாக இருக்கின்றன.கே.என்.செந்திலின் அரூப நெருப்பு என்ற சிறுகதை தொகுப்பிலுள்ள
தங்கச் சிலுவை என்ற சிறுகதையை படித்த போது அந்த வடிவம் பெரும் ஆயாசத்தை அளித்தது.தங்கச்
சிலுவையை திருடிவிடும் ஒருவன் குற்றவுணர்வில் அதை திரும்ப பாதிரியாரிடம் திரும்ப அளித்துவிடுகிறான்.அந்தச்
தங்கச் சிலுவை அந்த தேவாலயத்திற்கு எப்படி வந்தது என்ற விஷயங்கள் கதையில் வருகிறது.முன்
பின்னாக நான்-லீனியராக கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கதையை அவரால் காட்சிப்படுத்த
முடியவில்லை.அந்த கதாபாத்திரத்தின் குற்றவுணர்வும் பாதிரியாரின் நிஷ்களங்கம் நிரம்பிய
குணமும் அந்த கதை அமைப்பும் மிகவும் செயற்கையாக பின்னப்பட்டவை.அந்தக் கதையில் பாதிரியாருக்கு
ஏன் வயிற்று வலி இருக்க வேண்டும்.தங்கச்சிலுவை கதையை இங்கு பூ , மீட்பு போன்ற கதைகளுடன்
ஓப்பிடும் போது நான்-லீனியராக காட்சிப்படுத்தும் விதத்தில் போகன் சங்கரால் மிக அற்புதமாக
கதை சொல்ல முடிந்திருப்பதை பார்க்க முடிகிறது. போகன் சங்கரின் கதைகள் உங்களுக்கு ஒர்
உலகை காட்சிப்படுத்துகிறது.அந்த வகையில் போகன் சங்கர் தேர்ந்த எழுத்தாளராக தன் முதல்
சிறுகதை தொகுப்பிலேயே இருக்கிறார்.அவர் இன்னும் சிறந்த கதைகளை உருவாக்குவார் என்று
நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம். போகனின் கதையுலகத்தை தொகுத்து பார்க்கும் போது பிரமளின்
இந்தக் கவிதை நினைவுக்கு வந்த படியே இருந்தது.
பாலை
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஓரு பிடி நிலம்.
கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர் – கிழக்கு
வெளியீடு
1 - ஆர்.அபிலாஷ் தங்க மீன்கள் திரைப்படத்தை பற்றிய கட்டுரையில் இதே விஷயத்தை பற்றி எழுதியிருப்பார்.
1 - ஆர்.அபிலாஷ் தங்க மீன்கள் திரைப்படத்தை பற்றிய கட்டுரையில் இதே விஷயத்தை பற்றி எழுதியிருப்பார்.
No comments:
Post a Comment