ஜாதி மாற்று திருமணங்களும் மேல்நிலையாக்கமும்
இன்று பெருநகரங்களில் ஓரளவு ஜாதி மாற்று திருமணங்கள் நிகழ்கின்றன.சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் கூட நிகழ்கிறது.இந்த திருமணங்கள் நிகழ்வதால் ஜாதிய கட்டமைப்பு எந்தளவு மாறியிருக்கிறது.பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தரவுகளை சரி பார்க்காமலே சொல்ல முடியும்.ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளும் போது அவர்கள் உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களாக மாறுகிறார்கள்.அவர்கள் ஜாதியற்றவர்களாக மாறுவதில்லை.பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் ஆணோ பெண்ணோ அவர்களின் பெற்றோரிடமிருந்து மனதளவில் விலகுகிறார்கள்.அவர்களின் ஜாதியிலிருந்து அதன் சடங்குகளிலிருந்து அதன் உணவு பழக்கவழக்கங்களிலிருந்து அதன் குல தெய்வங்களிலிருந்து விலகுகிறார்கள்.அவர்கள் அதுவரை இருந்த ஜாதியிலிருந்து திருமணம் செய்துகொண்ட உயர்த்தப்பட்ட ஜாதிக்காரராக மாறுகிறார்கள்.இதை அவர்கள் விரும்பாமல் செய்யவில்லை.இதை அவர்கள் விரும்பியே செய்கிறார்கள்.அவர்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அருவெருக்கதக்க ஒன்றை சட்டையை கழற்றி வீசி விட்டு செல்வது போலவே செய்கிறார்கள்.

இடைநிலை ஜாதியை சேர்ந்தவர் பிராமண ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்யும் போது இடைநிலை சாதிக்காரர் பிராமணர் ஆகிறார்.அவர் அந்த ஜாதி மாற்றத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் குழந்தைகள் பிறந்த பின்னர் இது நிகழ்கிறது.அந்தக் குழந்தைகளுக்கான சடங்குகள் அவர்கள் இருவரில் யார் உயர்த்தப்பட்ட ஜாதியோ அதன் அடிப்படையிலேயே நிகழ்கிறது.இதே போல தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் இடைநிலை ஜாதியை சேர்ந்தவரையோ அல்லது பிராமணர் போன்ற உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரையோ திருமணம் செய்யும் போதும் இது நடக்கிறது.அங்கும் அவர்கள் எது உயர்த்தப்பட்ட ஜாதியோ அதன் தெய்வங்கள் , சடங்குகள், உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஏற்கிறார்கள்.உயர்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரின் உறவினர்கள் , பெற்றோர்கள் ஆகியோருடன்தான் அந்த தம்பதியினர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவரின் பெற்றோர்கள் , உறவினர்கள் , சுற்றோர் சிறிது சிறிதாக அந்தத் தம்பதிகளின் வீட்டிற்கு வருவது , பண்டிகைகளில் கலந்து கொள்வது ஆகியவை குறைந்து விடுகிறது.சின்னச் சின்ன அவமானங்களை அவர்கள் தொடர்ந்து சந்திக்கிறார்கள்.அவர்கள் சிறிது சிறிதாக அந்தக் தம்பதிகளிடமிருந்து விலகிவிடுகிறார்கள்.இது மெல்ல யாரும் சரியாக கவனிக்காத வண்ணம் நிகழ்ந்து முடிந்து விடுகிறது.

இறுதியில் ஜாதி நிலைக்கொள்கிறது.அவர்களில் யார் உயர்த்தப்பட்ட ஜாதியனரோ அவர்களின் ஜாதியே அவர்களின் குழந்தைகளுக்கு செல்கிறது.பள்ளிகளில் அவர்கள் இதை பதிவு செய்வார்கள் என்று சொல்லவில்லை.அவர்கள் ஜாதி அற்றவர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளக்கூடும். ஆனால் அவர்களின் தினசரிகளில் அது வந்துவிடுகிறது.அதை அவர்கள் அங்கீகரிக்காமல் இருக்கலாம்.நமக்கு இயல்பாகவே ஜாதிய உயர்வு தாழ்வும் அதன் படிநிலைகளும் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.ஜாதி மாறி திருமணம் செய்யும் போது உயர்த்தப்பட்ட ஜாதிக்கு மாறும் ஒரு விஷயமாக இது முடிந்துவிடுகிறது.ஜாதிய கட்டமைப்பு அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.Status Quo.பெருநகரங்களில் இன்று ஜாதி மாற்று திருமணங்கள் நிறையவே நிகழ்கின்றது.கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் மிக குறைந்த எண்ணிக்கையில் நிகழ்கிறது.உண்மையில் ஜாதி மாற்று திருமணங்களில் மேல்நிலையாக்கம் மட்டுமே நிகழ்கிறது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் அவன் நான் யார் நான் யார் என்று கேட்டுக் கொள்கிறான்.அவனது தந்தையை இவர்தான் என் தந்தை என்று சொல்ல அவன் கூச்சப்படுகிறான்.இறுதியில் இவர்தான் என் தந்தை என்று சபையினர் முன் சொல்கிறான்.அவன் இது தான் என் தந்தை ,இது தான் ஊர், இது தான் என் ஜாதி,  இது தான் என் உணவு பழக்கவழக்கங்கள் , நான் படிக்க வந்திருக்கிறேன் , படிப்பேன் என்று அறிவிக்கிறான். மேல்நிலையாக்கத்தை
நோக்கி அவன் செல்லவில்லை.நான் நான் இருக்கும் இடத்திலிருந்தும் நீங்கள் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வந்து தேநீர் அருந்தலாம் என்கிறான்.அதற்கு நான் நீங்கள் ஆக வேண்டியதில்லை என்கிறான்.அவன் மேல்நிலையாக்கத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்கிறான்.நான் நானாக இருந்து கொண்டே எனக்கானவற்றை பெற்றுக்கொள்கிறேன் என்கிறான்.அவன் தன்ணுணர்வு கொள்கிறான்.தன் சுயத்தை கண்டுகொள்கிறான்.ஜாதி மாற்று திருமணங்களில் வெற்றி அவை ஜாதி மாற்று திருமணங்களாக மட்டும் இருப்பதில் இல்லை.அதன் பிறகு அதில் எது உயர்த்தப்பட்ட ஜாதியோ அதன் அடையாளங்களை இருவருமே நிராகரிப்பது.அல்லது இரண்டையும் சமமாக பார்ப்பது.அந்தத் தம்பதியினர் எந்த ஜாதியை தேர்வு செய்கின்றனர் என்பதை சமூக மதிப்பீடு முடிவு செய்கிறது.அந்த சமூக மதிப்பீட்டை உடைத்து உங்களுக்கான விழுமியங்களை உருவாக்கிக்கொள்ளா விட்டால் ஜாதி மாற்று திருமணங்களால் பெரிய பலன் ஒன்றுமில்லை.

மேல்நிலையாக்கத்தின் மூலம் ஒருவர் நான் ஜாதியை வெறுக்கிறேன், என் பெற்றோரை வெறுக்கிறேன், என் குலதெய்வத்தை , உணவு பழக்கவழக்கங்களை வெறுக்கிறேன் என்று அறிவிக்கிறார்.அவர் மற்றொருவரின் ஜாதியை உயர்ந்த ஜாதி என்று ஏற்கிறார்.உண்மையில் அவர் அந்த சமூக மதிப்பீட்டை ஏற்கிறார்.ஜாதிய ஏற்றத்தாழ்வை ஏற்கிறார்.அவர்களின் பெற்றோர் தன் பெற்றோரை விட சிறந்தவர்கள் என்கிறார்.அவர்களின் உணவு பழக்கங்கள் , தினசரி செயல்பாடுகள் உயர்ந்தவை என்கிறார்.அவர் சுயம் அற்றவர் ஆகிறார்.அவர் தொலைந்து போய்விடுகிறார்.இது உண்மையில் மிகவும் பரிதாபத்திற்குரியது.

Photograph : https://www.deviantart.com/m-lucia/art/dialogue-144416688

2 comments:

Chandrakumar said...

Congrats on a very well written article! An impressive new viewpoint and analysis on this issue makes it quite unique. Wishing you all the best!

சர்வோத்தமன் சடகோபன் said...

Thanks Chandrakumar