இடதுசாரி லட்சியவாதம்




சிதாராம் யெச்சூரி சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்த போது சிபிஎம் கட்சியில் ஏதேனும் மாற்றங்கள் வரும் என்று நினைத்தேன்.அவர் வந்து ஒரு வருடம் மேலே கடந்து விட்டது.இதுவரை எதையும் அவர் செய்யவில்லை.எந்த மாற்றமும் நிகழவில்லை.பிரகாஷ் காரத் சிபிஎம் கட்சியின் மூடுவிழாவை தொடங்கி வைத்தார்.அது அப்படியே அந்த திசையில்தான் செல்கிறது.மேற்கு வங்காளத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்த முயற்சிகள் மாவோயிச - திரினாமூல் கூட்டணியால் தீவிரமாக எதிர்க்கப்பட்டு கம்யூணிஸ்ட் கட்சி அங்கு வரும் சாத்தியமே இல்லாத நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.

சிபிஎம் கட்சியும் சிபிஐயும் இன்றைய காலகட்டத்தில் ஒரு கட்சியாக இணைந்திருக்க வேண்டும்.அவர்கள் பிரிந்த போது இருந்த காரணம் இந்தியாவை இரு கட்சிகள் எப்படிப் பார்க்கிறாரகள் என்பதே.ஒரு தரப்பு சீனாவை ஆதரித்தது.ஒரு தரப்பு இந்தியாவை ஆதிரித்தது.இன்று உலகமயமாக்கல் சூழலில் இத்தகைய நிலைப்பாடுகளுக்கு பொருள் இல்லை.அவர்கள் இருவரும் இணைய வேண்டும்.ஆனால் இனி இணைந்தால் கூட பெரிய மாற்றத்தை அவர்களால் கொண்டு வர முடியாது என்றுதான் தோன்றுகிறது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சச்சரவில் கண்ணையா குமார் உள்ளிட்ட சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.கண்ணையா குமார் சிபிஐ கட்சியின் மாணவர் அமைப்பில் இருப்பவர்.இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர் எனக் கொள்ளலாம்.இவர் வருங்காலத்தில் என்ன செய்யக்கூடும்.சிபிஐயில் பொறுப்பு வகிக்கலாம்.சிபிஎம் செல்லலாம்.புதிதாக ஒரு இடதுசாரி அமைப்பை தொடங்கலாம்.அல்லது மாவோயிஸ அமைப்புகளை ஆதரிக்கலாம்.ஆனால் இவர் எதை செய்தாலும் அது ஒன்றுமில்லாமல்தான் ஆகும்.அவரால் ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது.ஒன்று அரசாங்கம் அவரை விலைக்கு வாங்கி விடும் ,அல்லது நசுக்கி விடும் அல்லது தன்னில் ஒருவராக மாற்றிவிடும் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் நிலையில்தான் அவர் இருப்பார்.

இன்று இங்கு எதுவுமே ஐந்து நிமிட பரபரப்புதான்.அதன்பின் அவரவருக்கு தன் வேலை ,காதலி,திருமணம் ,குழந்தைகள்,சாலைப் போக்குவரத்து,உடல் பருமன்,வெளிநாட்டு பயணம்,படிப்பு , குடும்பச் சிக்கல்கள்,வெங்காய விலையேற்றம் என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது.

இன்றைய அனைவரின் முக்கிய கவலைகள் பணம்,பதவி,அதிகாரம்,செளகரியங்கள்.லட்சியவாதம் எங்கும் கொண்டு செல்லாது என்பது இன்று எந்த மனிதனும் புரிந்துவைத்திருக்கும் யதார்த்தம்.யாரும் பாவம் புண்ணியம் என்றெல்லாம் பயப்படுவதில்லை.லட்சியவாதம் என்று பேசுவதே இன்று கேலியாகிவிட்டது.தெருவில் இறங்கி நடந்தால் உலகம் பொருள் பொருள் நுகர்வு நுகர்வு என்று அன்னை பன்றியின் மடியை முட்டும் குட்டிப் பன்றிகள் போல ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்று சாதிகளால் உருவான ஏற்றத்தாழ்வுகள் அப்படியே இருக்கின்றன.இருக்கும்.இங்கே இருப்பவர்கள் தங்கள் இடத்தை விடப்போவதில்லை.அதை புதிதாக வருபவர்கள் பெறுவதும் எளிதல்ல.இன்று திருமணம்,காதல் கூட ஒரு பொருளை பெறுவது போலத்தான் பார்க்கப்படுகிறது.இன்றைய சூழலில் செவ்வியல் மார்க்ஸிய கோட்பாடுகள் எந்த வகையிலும் உதவாது.இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களை எந்த வகையிலும் புதிப்பித்து கொள்ளவில்லை.சூழியல் அறிஞர்கள் இயற்கைக்கு திரும்பலாம் என்கிறார்கள்.எந்த அளவுக்கு திரும்புவது திரும்பினால் கழுத்து வலிக்குமா என்பதும், அங்கு சாதி பெரிய சிக்கலாக இருப்பதும் பிரச்சனைகளாக இருக்கின்றன.

இன்று அடிப்படையில் மாற்று உலகம் சார்ந்த எந்த கனவுகளும் யாருக்கும் இல்லை.கடவுள் நம்பிக்கையாளர்கள்,மறுப்பாளர்கள்,லட்சியவாதிகள் யாருக்கும் எதன் பொருட்டு எதையும் முன்வைப்பது என்று புரியவே இல்லை.நான் உங்களை அடிக்கக்கூடாது , சுரண்டக்கூடாது என்பது சட்டத்திற்கு அப்பால் எதன் அடிப்படையில் நான் ஏற்க வேண்டும்? உங்களை அன்பு என்ற சூது கொண்டு ஏமாற்றி நான் சுரண்டுகிறேன் எனக் கொள்வோம்.நீங்கள் ஏமாற்றத்தை உணர்ந்து ஐயோ பாவம் செய்துவிட்டாயே என்று சொன்னால் எதன் அடிப்படையில் அதை பாவம் என்று சொல்கிறீர்கள் என்று நான் கேட்கலாம்.இந்த பாவம் என்று சொல்வதின் அடிப்படைகளை நாம் யாரும் இன்று நம்புவது இல்லை.ஒரு பாவச்செயல் நம்மை அதிரச்செய்வதில்லை.சட்டம் ஒன்று மட்டுமே நம்மை தடுக்கிறது.இன்றும் பாவ புண்ணியத்தை நம்பும் ஏராளமான மனிதர்கள் இருக்கிறார்கள்தான்.ஆனால் இன்று படித்து வரும் இளைஞர்கள் மத்தியில் இத்தகைய பாவம் புண்ணியம் என்ற நோக்கமெல்லாம் இல்லை என்பதே உண்மை.பாவம் புண்ணியம் என்பதே கடவுளின் அடிப்படையில் உருவானது.நாம்தான் விஞ்ஞானம் கொண்டு கடவுளை கொண்றுவிட்டோமே.

முன்னர் ஒரு மாற்று கனவாக இருந்த சோவியத் ரஷியா வீழ்ச்சி அடைந்து இன்று இருபத்தியைந்து வருடங்கள் கடந்துவிட்டன.இன்று மாற்று கனவு இருக்கும் சில இளைஞர்களை இஸ்லாமிய  மதத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.வஹாபிஸம் மிக ஆழமாக நம் சூழலில் வேரூன்றி விட்டது.அவர்கள் முன்வைக்கும் இஸ்லாம் பல இளைஞர்களை மிகவும் இறுக்கமாக்கி விட்டிருக்கிறது.அவர்களுக்குள் இருந்த நெகிழ்வுத்தன்மை காணாமல் போய்விட்டது.இது ஒரு முக்கிய சிக்கல்.

இன்று இடதுசாரி சிந்தனை என்பது ஒரு மாற்று கனவை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.வஹாபிஸம் முன்வைக்கும் இறுக்கமான இஸ்லாமிய நெறி ஏன் நம் இந்திய மண்ணுக்கு சரியானதில்லை என்பதை சொல்ல வேண்டிய நிலையில் இடதுசாரி சிந்தனை இருக்கிறது.இந்திய தேசத்தையும் இந்து மதத்தையும் இணைக்கும் ஆர்எஸ்எஸ்ஸின் முயற்சிகள் எப்படி நம் இந்திய மண்ணின் பல்சமூக இணக்கமான வாழ்க்கைக்கு எதிரானது என்பதை வலியுறுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறது.நுகர்வு கலாச்சாரம் தேவையற்றது என்றால் இன்றைய பொருள் சார்ந்த வாழ்க்கை முறை தவறானது.இன்றைய பொருள் சார்ந்த வாழ்க்கை முறை தவறானது என்றால் நமது பெருநகர வாழ்க்கையும் அதை உருவாக்க காரணமாக இருந்த படிப்பு , வேலை , தொழில்துறைகள் போன்ற விஷயங்களுக்கு மாற்றான ஒரு சிந்தனையை உருவாக்க வேண்டும்.அது இயற்கைக்கு திரும்புதல் என்றால் அது எப்படியான இயற்ககைக்கு திரும்புதல் என்ற தரிசனத்தை இடதுசாரி சிந்தனைகள் வளர்க்க வேண்டும்.அல்லது இருக்கும் சூழலையே வேறொன்றாக மாற்றுவதாக அது அமைய வேண்டும்.அப்போது மட்டுமே இடதுசாரி கட்சிகள் உயிர்பெற்று இருக்க முடியும்.

ஆனால் இந்த விஷயங்கள் அத்தனை எளிதல் சாத்தியமாக கூடிய விஷயங்கள் இல்லை என்றே தோன்றுகிறது.இனி சில பத்தாண்டுகளுக்கு இடதுசாரிகள் நம் மண்ணில் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.அவர்கள் மறுபடி வருவார்கள் என்றால் இங்கே ஏதோ ஒரு லட்சியவாதம் உருவாகிவிட்டது என்று பொருள்.ஆனால் அதை நாம் முன்பே இலக்கியத்தில் கண்டுகொள்ளலாம்.இப்போது புதிய வகையிலான மாற்று கனவை முன்வைக்கும் ஒரு நாவல் ,கவிதை ,சிறுகதை நம் சூழலில் இருக்கிறதா.அப்படி ஒன்று வலுவாக உருவாகும் போது நம் இடதுசாரிகளும் மீண்டு வருவார்கள் என்று கொள்ளலாம்.



No comments: