கிறுஸ்துவ பார்வை




ட்ரி ஆப் லைப் படத்தில் வாழ்வின் பிரபஞ்சத்தின் ஆடலாக கருணைக்கும் இயற்கைக்குமான முரணியக்கம் காண்பிக்கப்படுகிறது.இந்த கருணைக்கும் இயற்கைக்குமான முரணியக்கம் கிரேக்க தத்துவத்தில் (Love and Strife) பல காலமாக இருந்து வருகிறது.இந்த பிண்ணனிதான் கிறுஸ்துவத்தில் குற்றம் - குற்றவுணர்வு - பாவம் - மன்னிப்பு - தியாகம் - மீட்பு என்பதாக வருகிறது என்று தோன்றுகிறது.

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இந்த கிறுஸ்துவ எண்ணத்தால் அதிகம் பாதிகப்பட்டவர்.அவருடைய படங்களில் குற்றம் - பாவம் - மீட்பு மறுபடி மறுபடி வருகிறது.பாலாவின் படங்களில் இதை பார்க்க முடியாது.அவருடைய படங்களில் குற்றம் - சாபம் - தண்டனை - சாபவிமோசனம் என்ற கருத்துதான் வருகிறது.அடிப்படையில் நம் மரபில் இதுதான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இங்கே நீங்கள் குற்றம் செய்தால் அது சாபத்தை உருவாக்கும்.சாபத்திலிருந்து மீள வழி இருக்கும்.இறுதியில் சாபவிமோசனம்.பிஷ்மருக்கு அம்பை அளிப்பது சாபவிமோசனம்.நமது புராணங்களில் வரும் தீயவர்கள் அவர்கள் செய்த செயல்களால் சாபம் பெறுபவர்கள்.சாபத்தை கடந்து இறுதியில் விமோசனம் அடைகிறார்கள்.

நாம் பெரும்பாலும் ஒரு தீய செயல் அல்லது நற்செயல் நிகழும் போது இப்படி நடக்கனும்னு இருந்திருக்கு பாரேன் என்றுதான் சொல்கிறோம்.ஒன்று பிரபஞ்சத்தின் அல்லது நமது கர்ம வினை பலன்கள் அல்லது ஊழ் என்ற பூங்குன்றனார் சொன்ன நீர்வழி படூஉம் புணை என்று இவை இரண்டாகத்தான் நாம் விஷயங்களை பார்க்கிறோம்.மேற்குலகம் சொல்லும் free will நம் மரபில் இல்லை.அது இல்லாததால் குற்றவுணர்வு - மன்னிப்பு - மீட்பு போன்ற விஷயங்களும் இங்கு இல்லை.

ஆனால் நாம் சமீப காலங்களில் கிரேக்க முரணியக்கமாக வாழ்வை பார்க்கிறோம் என்று தோன்றுகிறது.கருணைக்கும் இயற்கைக்குமான மோதலாக முரணியக்கமாக வாழ்வை பார்ப்பது, குற்றவுணர்வால் மன அழுத்தம் பெறுவது , மீட்சிக்கான வழியற்று அவதியுறுவது என்று கிறுஸ்துவ கருத்தியலின் தாக்கம் நம்மில் அதிகமாக இருக்கிறது.குற்றவுணர்வு இல்லையென்றால் மன அழுத்தம் இல்லை.உங்கள் செயலுக்கு நீங்கள் பொறுப்பில்லை என்றால் குற்றவுணர்வு இல்லை.free will இல்லையென்றால் உங்கள் செயலுக்கு நீங்கள் பொறுப்பில்லை.

சமீபத்தில் அஜிதன் இயக்கிய காப்பன் என்ற குறும்படத்தை பார்த்தேன்.இது ட்ரி ஆப் லைப் படத்தின் பாதிப்பினால் உருவானது என்று தோன்றியது.குற்றம் - கருணை - குற்றவுணர்வு - வாழ்வின் அழைப்பு என்று இது கருணைக்கும் இயற்கைக்குமான ஒரு விஷயமாக வாழ்வை பார்க்கிறது.அது ஒரு பார்வை.ஆனால் அப்படி பார்க்கத்தேவையில்லை என்று படுகிறது.

No comments: