மனிதனுக்கு மரணமில்லை






ஆர்.கே.நாராயணனின் என் நாட்கள்(My Days) சுயசரிதையில் தன் மனைவி இறந்தவுடன் தன் நான்கு வயது பெண் குழந்தையுடன் சென்னை வருகிறார் நாராயணன்.ஆர்.கே இலக்கற்று அலைகிறார்.அவர் மனம் அவரின் மனைவியின் மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.தொடர் உள் மன உரையாடல்கள்.மன அழுத்தம்.ஒரு முறை மைலாப்பூரில் கடற்கரை நோக்கி வேகமாக செல்கிறார்.தனக்கு தெரிந்த ஒருவரை வழியில் சந்திக்கிறார்.அவர் ஆர்.கேவிடம் ஒரு யோசனை சொல்கிறார்.மாலையில் தனக்கு தெரிந்த ஒரு வக்கீல் வீட்டுக்கு வரச் சொல்கிறார்.எதாவது மீட்சி கிடைக்கும் என்ற எண்ணத்தில் நாராயணன் செல்கிறார்.அந்த வக்கீல் ஒரு அறையில் நாராயணனனையும் உடன் வந்தவரையும் அமரச் செய்கிறார்.ஒரு பைனாவையும் காகித கட்டையும் மேஜையில் வைக்கிறார்.சிறிது நேரத்தில் வக்கீல் வேகமாக அந்த காகிதத்தில் கிறுக்கிறார்.அவர் எழுதும் வேகம் கண்டு நாராயணன் ஆச்சரியம் கொள்கிறார்.ஒரு சாதாரண மனிதனால் இத்தனை வேகத்தோடு ழுத முடியாது என்று நினைக்கிறார்.நாராயணின் மனைவி சொல்வதை வக்கீல் வேகமாக எழுதுகிறார்.நாராயணின் மனைவி அவரிடம் நான் எப்போதும் உங்களோடு இருப்பேன் என்கிறார்.நீங்கள் துயரத்திலிருப்பது எனக்கு கவலை அளிக்கிறது என்கிறார்.ஆர்.கே. ஏதோ கேள்வி கேட்கிறார்.அதற்கு அவர் மனைவி சரியான பதிலை சொல்கிறார்.ஆர்.கேவின் ஆழ்மனம் தன் மனைவி தன் கண்ணுக்கு தெரியவில்லை,பூத உடல் மறைந்துவிட்டது.ஆனால் அவள் இருக்கிறாள்,எப்போதும் இருப்பாள் என்பதை உணர்கிறது.அங்கே வக்கீல் எழுதியவை நிச்சயம் தன் மனைவி சொல்லித்தான் என்று நம்புகிறார்.அதன் பின் அவர் மனம் அமைதி அடைகிறது.அழுத்தம் குறைகிறது.பழையபடி எழுதுகிறார்.படிக்கிறார்.தன் குழந்தையை நன்றாக வளர்க்கிறார்.மறுமணம் செய்துக்கொள்ள பலரும் சொல்லியும் அதை அவர் பொருட்படுத்தக்கூட இல்லை.பல வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து முதுமையில் மரணமடைந்தார்.

என் நண்பர் ஆத்மாநாம் என்ற கட்டுரை தொகுப்பில் ஸ்டெல்லா புரூஸ் தன் மனைவி ஹேமா மரணம் அடைந்தபின்னும் பூத உடல் இன்றி அவர் தன் மனைவியின் இருப்பை உணர்ந்த அபூர்வ தருணங்களை பட்டியலிடுகிறார்.அய்யம்பாளையம் என்ற ஊரில் 2050 ஆம் ஆண்டு தன் மனைவி மறுபிறவி எடுப்பார் என்கிறார்.ஆனால் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துக்கொள்கிறார்.நம் நெருங்கிய மனிதர் மரணமடையும் போது இனி அவர் இல்லை என்பதை நாம் ஏற்க விரும்புவதில்லை.ஏதோ ஒரு வகையில் இந்த உலகில் அவர் இருக்கிறார் என்று நம்ப விழைகிறாம்.பித்ரு தர்ப்பணம் தருகிறோம்.தனக்கு பிறக்கும் குழந்தை தன் தந்தைதான் அல்லது அன்னைதான் என்று மரணமடைந்தவர் மறுபடியும் வந்துவிட்டார் என்று நம்ப விழைகிறோம்.நாம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது கூட நாம் இங்கு இருக்க விரும்புகிறோம் என்கிற காரணத்தால் தான் என்று தோன்றுகிறது.தார்கோவ்ஸ்கியின் தி மிரர் படத்தில் உயிர் தொடர்ச்சியை மையப்படுத்துகிறார்.அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார்.இந்த விஷயத்தில் இறை மறுப்பாளர்கள் , பகுத்தறிவுவாதிகள் என்ற பேதமெல்லாம் இல்லை.

ஒரு இந்திய தந்தை தன் மகன் தானேதான் என்று நினைக்கிறான்.அவனுக்கு தன்னால் இயன்றவற்றை தொடர்ந்து செய்கிறான்.அவனை தன்னால் எந்தளவுக்கு உயர்த்தி ஒரு பீடத்தில் அமர வைக்க முடியுமோ அதைச் செய்கிறான்.ஒரு முதலமைச்சர் தன் மகனை முதலமைச்சர் ஆக்குகிறார்,தாசில்தார் தன் மகனை மாவட்ட ஆட்சியாளராக்க முயல்கிறார்.இது எல்லா தளங்களிலும் நிகழ்கிறது.இதிலிருப்பது நாம் இன்னும் சில வருடங்கள் வாழ வேண்டும் என்ற நோக்கமின்றி வேறில்லை.மிஸ்டிக்கலான அனுபங்கள் எண்ணங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.முழு இறை மறுப்பாளர் கூட சாலையில் நடந்து செல்லும் போது ஒரு காவி உடை அணிந்த கிழவர் தன்னருகில் அழைத்து நீ நன்றாக இருப்பாய் மகனே , உன் வாழ்வில் சில துர் சம்பவங்களை சந்திக்க இருக்கிறாய் , அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் உனக்கு சித்தியாகட்டும் என்று சொன்னால் நிச்சயம் அன்று முழுவதும் அந்த எண்ணம் அவருடைய மனதில் இருந்துக்கொண்டே இருக்கும்.

எல்லோருக்கும் நாம் ஏதோ ஒரு வகையில் அபூர்வமானவர்கள் என்ற எண்ணம் உள்ளது.நமது பிறந்த தேதி,ஊர்,நாள்,ராசி,நட்சத்திரம் சார்ந்த ஏதோ ஒரு வகை அதிசயத்தை ரகசியமாகவாவது வைத்துக்கொள்கிறோம்.இத்தனை கோடிக்கணக்கான மனிதர்கள் வாழும் பூமியில் இத்தனை மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் மண்ணில் ஒரு சின்ன பூகம்பம் சில ஆயிரம் மனிதர்களை சுருட்டிக்கொள்ளலாம் என்கிற நிலையில் நாம் இந்த அதிசயத்தை ரகசியமாக நீவிக்கொள்கிறோம்.இவை ஒரு வகையில் அற்பமானவை.ஒரு வகையில் யூதிஸ்டரர் சொல்வது போல மனித மனத்தின் பேரதிசயம்.

தன்னைக்குறித்து தன் நெருங்கிய மனிதர்களின் மரணம் குறித்து தனக்கு பிறக்கும் வாரிசுகள் குறித்து மனிதனுக்கு இருக்கும் எண்ணங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமானவை.இங்கே எல்லாவற்றையும் பகுத்தறிவால் விளக்கி விட முடிவதில்லை என்பதால் எப்போதும் இத்தகைய விஷயங்கள் சார்ந்து ஒரு மயக்கம் எல்லோருக்கும் இருக்கிறது.இத்தகைய விஷயங்கள் அழியாத் தொன்மங்களாக தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது.ஒரு வகையில் அடுத்த நாளை எதிர்கொள்ளவே இத்தகைய தொன்மங்கள் அவசியமானதாக இருக்கின்றன.இல்லையென்றால் ஒரு காய்ந்த சருகை போல உதிரும் ஒரு நாளை அத்தனை ஆவேசத்துடன் ஏன் மனிதன் எதிர்கொள்ள போகிறான்.

எனக்கு ஆச்சரியமானதாக இருந்தது ஆர்.கே.நாராயணனும் ஸ்டெல்லா புரூஸூம் இதை வெளிப்படையாகவே எழுதியிருப்பதுதான்.ஏனேனில் இது எளிதில் கேலி செய்யப்படக்கூடிய விஷயம்.ஒருவர் ஆர்.கே.விடம் இது உங்கள் ஆழ்மனம் கொள்ளும் மயக்கமின்றி வேறில்லை என்று நிறுவலாம்.ஆனால் ஆர்.கே. அதை ஏற்கத்தயாராக இல்லை.இங்கு அவருக்கு ஒரு விஞ்ஞான விளக்கம் தேவையில்லை.அவர் தன் மனைவி தன் கண்ணுக்கு புலப்படாத வேறு ஒரு உலகில் வாழ்கிறாள்.தான் முயன்றால் அவளுடன் பேச முடியும் என்பதே அவருக்கு போதுமானதாக இருக்கிறது.அந்த எண்ணம்தான் அவர்களுக்கு தேவைப்படுகிறது.மனிதனுக்கு மரணமில்லை என்பதைத்தான் மனிதன் நம்ப முற்படுகிறான்.அதுவே அவன் அடுத்த நாளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்கிறது.



No comments: