டெல்லியில் ஒரு பெண் மருத்துவர் மீது திராவகம் வீசிய செய்தி
இன்றைய செய்திதாள்களில் வந்திருக்கிறது.அவர் மீது திராவகம் வீசச்செய்தவர் அந்த பெண்ணின்
நெருங்கிய நண்பர் அசோக் யாதவ்.இருவரும் ரஷ்யாவில் ஒன்றாக மருத்துவம் படித்திருக்கிறார்கள்.பத்து
வருடங்களுக்கும் மேலாக நீடித்த நட்பு.அந்த பெண் தன் மீது திராவகம் வீசப்பட்டவுடன் அந்த
நண்பரைத்தான் அழைத்திருக்கிறார்.அவர்தான் அந்த பெண்னை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
அசோக் யாதவ் வைபவ் என்ற இருபது வயது இளைஞன் மூலமாக இந்த செயலை
செய்திருக்கிறார்.வைபவ் இரண்டு சிறுவர்களை இதை செய்ய பணித்திருக்கிறார்.முதலில் அந்த
இரண்டு சிறுவர்களையும் ஊசியில் நீரை நிறைத்து தன் மீது செலுத்தவைத்து எப்படி அந்த பெண்
மீது திராவகம் வீசுவது என்று செயல்விளக்கம் அளித்திருக்கிறார் அசோக் யாதவ்.சம்பவத்தன்று
அந்தப் பெண் தன் வீட்டிலிருந்து கூட்ட நெரிசல் மிகுந்த மார்கெட் பகுதிக்கு சென்ற போது
அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடரந்த சிறுவர்கள் அவர் மீது ஊசி மூலம் திராவகத்தை செலுத்திவிட்டு
தப்பிசென்றுவிட்டனர்.கண்காணிப்பு காமிராக்கள் இருந்தாலும் ஹெல்மெட் அணிந்திருந்ததால்
அவர்களை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சிரமமிருந்திருக்கிறது.ஆனால் இது திருட்டுக்காக
செய்யப்படவில்லை என்பதில் காவல்துறையினர் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.பின்னர் மோட்டார்
சைக்கிளையும், அந்த சிறுவர்களையும் அவர்கள் மூலமாக வைபவையும் பிடித்திருக்கிறார்கள்.
அந்த சிறுவர்கள் திராவகம் வீச உபயோகப்படுத்திய ஊசிகளையும்
கைப்பற்றியிருக்கிறார்கள்.விசாரனையில் சிறுவர்கள் தங்களுக்கு அசோக் யாதவ் இந்த செயலுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் தருவதாக சொன்னதையும் அதில் முன்பணமாக இருபத்திரெண்டாயிரம் தந்துவிட்டதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.காவல்
துறையினர் அசோக் யாதவை விசாரிக்க போகிறார்கள் என்று அறிந்த அந்த பெண் மருத்துவர் அவரை
விசாரிப்பதாகயிருந்தால் நான் இந்த வழக்கையே திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.ஆனால்
விசாரனையில் அவரே அனைத்துக்கும் காரணம் என்பதை அறிந்தபோது அந்த பெண்ணும் அவர்களது குடும்பத்தினரும்
அதிர்ந்து விட்டனர்.
இந்த குற்றத்திற்கு பின்னான காரணம் அந்த பெண்ணிடம் அசோக்
யாதவ் பலமுறை தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடியும் அவர் அதை மறுத்துவிட்டார் என்பதுதான்.அந்த
பெண்ணுக்கு அவருடைய குடும்பத்தினர் வேறொருவரோடு திருமணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளை
செய்துக்கொண்டிருப்பதை அறிந்த அசோக் அந்த பெண்னை பழிவாங்க இந்த செயலை செய்திருக்கிறார்.அந்த பெண் தன் மீது திராவகம் வீசப்பட்டதை விட தன் நண்பர்
இப்படி ஒரு செயலை தனக்கு செய்துவிட்டதை எப்படி தொகுத்துக்கொள்வது என்று புரியாமல் வலியால்
பதறியிருப்பார் என்றே தோன்றுகிறது.
ஒருவர் நம்மை தீய சொற்களால் ஏசும் போதோ கோபத்தால் தாக்கும்
போதோ ஏற்படும் வலியை விட நாம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை உடையும் போது உண்டாகும் வலி பயங்கரமாகயிருக்கிறது.நம்பிக்கை
உடைந்த உறவுகள் பின்னர் ஒருபோதும் முன்போல இருப்பதில்லை.எப்போதும் ஒரு உரசல் அந்த
உறவிலிருக்கும்.அதன் பின் அவர்கள் நிரந்தரமாக பிரிந்துவிடுவதுதான் இருவருக்கும் நலம்.எவ்வளவுதான்
இருவரும் முதிர்ச்சியடைந்தாலும் அந்த உறவு எப்போதும் சீரடையப்போவதில்லை.
அசோக் யாதவ் அந்த பெண் மீது மிகுந்த காதலை கொண்டிருந்திருக்கலாம்.அவர்கள்
இருவர் மத்தியிலும் மலர்ச்சியானதொரு நட்பு இருந்திருக்கலாம்.ஆனால் அந்த பெண் அவரை திருமணம்
செய்துகொள்ள மறுத்திருக்கிறார்.திருமணம் செயதுக்கொள்ள மறுப்பதற்கும் அல்லது ஏற்பதற்கும்
பின்னால் பெரிய தர்க்கமெல்லாம் இருப்பதாக தோன்றவில்லை.அது அந்த மனிதரின் அந்த காலத்தின்
மன அவஸ்தையை பொறுத்தது.அதை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுவது நலம்.அந்த பெண் வேறொருவரை
திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பது அசோக் யாதவின் அகங்காரத்தை சீண்டியிருக்கலாம்.அவர்
அதை அவமானமாக கருதியிருக்கலாம்.அந்த பெண்ணிடம் நட்பு பாராட்டுவதை நிறுத்திவிட்டு நிரந்தரமாக
விலகுவதே அவர் செய்திருக்கவேண்டிய செயல்.தன்னை நிராகரித்துவிட்டு வேறொருவனை ஒரு பெண்
திருமணம் செய்துகொள்ளப்போகிறாள் என்னும் போது எந்த இந்திய ஆணுக்கும் கோபமும் எரிச்சலும்
அவமானமும் வரத்தான் செய்யும்.ஆனால் சிலர் அந்த பெண்ணிடம் தங்கள் உறவை முறித்துக்கொள்ள
இயலாமல் அதை நட்பாக தொடர்கிறார்கள்.அந்த நெருடல் எப்போது வேண்டுமானாலும் மிகுந்த வன்மம்
கொண்டதாக மாறலாம்.
ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம் அசோக் யாதவின் குற்றத்திற்கு
பின்னான உளவியலை பற்றியதல்ல.அந்த பெண் பற்றியது.அந்த பெண் தன் மீது திராவகம் வீசப்பட்டவுடன்
அசோக் யாதவை அலைபேசியில் அழைத்திருக்கிறார்.அவர் மீது அந்த பெண்ணுக்கு அத்தனை நம்பிக்கை.தான்
அவனது காதலை மறுத்தாலும் தன் மீது அவன் அதே அன்புடன் இருப்பான் என்ற அந்தப்பெண்ணின்
நம்பிக்கை வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.நம்மை மிகவும் புண்படுத்துபவர்கள் நம்மீது
அன்பு செலுத்துபவர்களே.இது ஒரு உண்மை.
நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் மீதேனும் அதீத நம்பிக்கை
வைத்துவிடுகிறோம்.அவர்கள் எந்த செயலை செய்தாலும் அதை நண்மையின் சட்டகத்தின் வழியாக மட்டுமே
பார்க்க விரும்புகிறோம்.நாம் அடிப்படையில் ஏதேனும் ஒன்றை இறுகப்பற்றிக்கொள்ள விரும்புகிறோம். பற்றிக்கொண்டிருக்கும் பொருளோ மனிதரோ விஞ்ஞானக்கோட்பாடோ கடவுளோ
மதமோ கருத்தோ நமக்கு பல அசெளகரியங்களையும் மனகசப்புகளையும் உருவாக்கினாலும் நாம் அந்த
பற்றுதலை விட்டுவிடவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ விரும்புவதில்லை.ஏனேனில் அந்த பற்றுதலை
விட்டுவிட்டால் நாம் பாலைவனத்தில் விழவேண்டியதுதான்.பற்றிக்கொள்ள வேறு எதுவுமிருக்காது.எங்கும்
வெட்டவெளிதான்.வெட்டவெளி முழுதும் வெண்மணல்.அதில் தனியாக நடந்தால் பாதங்கள் எரிந்துவிடும்தான்.உடலே பற்றி எரிவதை விட பாதங்கள் எரியலாம்.நாம் எதிலும் அகப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அனைத்தையும் சற்றே அவநம்பிக்கையோடு
அணுகவேண்டும்.இந்த உலகில் யார் ஒருவருக்கும் நம்மைப்பற்றி நம்மைவிட அதிக அக்கறை இருக்கும்
என்ற எண்ணத்தை முழுவதுமாக ஒதுக்கவேண்டும்.பெற்றோர், உடன்பிறந்தவர்கள், ஆசிரியர்கள்,
காதலி, மனைவி, நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள், வயோதிகர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள்,
எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வணிகர்கள் என எல்லோரின் மீதும் சற்று அவநம்பிக்கையின் சாயத்தை பூச வேண்டும்.அப்போதுதான் அவர்கள் நிறம் மாறும் போது
சட்டென்று கண்டுபிடிக்கவும் அவர்களிடமிருந்து விலகவும் ஏதுவாக இருக்கும்.
சந்தேகமற்ற நம்பிக்கை பிறர் மீது பொறுப்பை ஏற்றுகிறது.அவர்களின்
நண்மையை நாம் மறைமுகமாக சுரண்டுகிறோம்.அதீதமான நம்பிக்கை மற்றொருவரை பதற்றம் கொள்ளச்செய்கிறது.பிறரை
சந்தேகப்படுவதன் மூலம் நாம் அவரை இந்த மண்ணில் கால் பதித்து நடக்கும் மனிதனாக பாவிக்கிறோம்.அப்படியாக
அவர்களுக்கு தங்கள் அளவில் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதையும் ஏற்கிறோம்.
ஆனால் அப்படியிருப்பதில் ஒரு பிரச்சனை இருக்கிறது.அப்படி
பிறரை சந்தேகப்படுவதன் மூலம் நாம் எப்போதும் பதற்றமாகத்தான் இருக்க இயலும்.ஒருவகை பாதுகாப்பின்மையான
உணர்விருக்கும்.வேறு வழியில்லை.நாம் அப்படியான ஒரு காலகட்டத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment