இந்த வருடமும் இதுவரையான வருடங்களை போலத்தான் அமைந்தது.ஆனால்
பெரும்பாலும் என் வாழ்க்கையில் ஒன்றுமே நிகழாது. மாறாக இந்த வருடம் சற்று நல்லதும் தீயதுமான
சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.இன்மையின் பாடல் என்று நான் இயக்கிய குறும்படம் அகமகிழ்வை
அளித்தது.அபிலாஷூடன் இணைந்து கவிதைக்கான இணைய இதழை தொடர்ந்து நடத்திவருவதும் இந்த வருடத்தின்
மகிழ்ச்சியான விஷயம்.மதுரையில் அமுதன் நடத்திய திரைப்பட விழாவிற்கு சென்ற போது ஒரு
எண்ணம் தோன்றியது.ஒரு திரைப்படம் அல்லது நாவல் போன்ற வடிவங்களில் பெரும்பாலானோர் கதையைத்தான்
தேடுகிறார்கள்.கதை என்பது தொடக்கம் – முடிச்சு – முதிர்வு என்பதான ஒரு வடிவம்.ஒரு புனைவு
அடிப்படையில் ஒரு கதையாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.அது ஒரு முக்கியமான
கற்றல்.எனது வலைத்தளத்தில் ஆறு வருடங்களாக எழுதி வந்தாலும் இந்த வருடம் தான் ஓரளவு
சரளமாக எழுத முடிந்தது.ஐந்து அல்லது ஆறு பக்க கட்டுரையை எழுதும் போது ஒரு தினறல் இல்லாமல்
இப்போதுதான் எழுதுகிறேன்.ஒருவன் எழுத எழுத சொற்கள் அவனுக்காக திறந்துகொள்ளும்.அதன்பின்
அவன் சொற்களுக்காக காத்துக்கொண்டிருக்க தேவையில்லை.
ஒட்டுமொத்தமாக இந்த வருடம் மகிழ்ச்சியான வருடம்தான்.மொத்த
வருடத்தில் இரண்டு மாதங்கள் மனச்சோர்வோடு இருந்தேன்.அந்த மனச்சோர்வை பற்றிய கவிதைதான்
குட்டிப்பெண்ணின் ஒற்றைச்செருப்பு.அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் அலுவலகத்தில் நல்ல
நண்பர்கள் அமைந்தார்கள், பெங்களூரில் இந்த வருடம் என்னோடு வீட்டில் ஒரு நண்பர் தங்கினார்,
அவரின் தயவால் நன்றாக உண்டேன்.பணியில் பதவி உயர்வு கிடைத்தது.நான் என்னுடைய வாழ்க்கையில்
எப்படியிருக்க வேண்டுமென்று விரும்பினேனோ அப்படியான ஒரு வாழ்க்கையைத்தான் இப்போது வாழ்கிறேன்.புகார்கள்
ஒன்றுமில்லை.இந்த வருடம் காய்ச்சல்,தலைவலி என்று எந்த காரணம் கொண்டும் மருத்துவமனை
செல்லவில்லை.எந்த பரிசோதனைக்காகவும் காத்திருக்கவில்லை.கிலாய்ட்ஸ் என்ற ஒரு சரும பிரச்சனைக்காக
சென்னை மைலாப்பூரில் ஒரு மருத்துவமனைக்கு சென்று மாதமிருமுறை சிகிச்சை எடுத்துக்கொள்வேன்.கிலாய்ட்ஸ்
இருப்பதால் திருமணம் செய்துகொள்வதை பற்றி நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன்.சிலர் இது
ஒரு பிரச்சனையை இல்லை என்றும் சிலர் குணப்படுத்திக் கொண்ட பின் திருமணம் செய்துகொள்ளுங்கள்
என்றும் சொன்னார்கள்.ஓரளவு குணமடைந்து விட்டது.அடுத்த வருடத்தில் அநேகமாக திருமணம்
செய்துக்கொள்வேன்.ஏதாவது ஒரு பெண் சற்று குழப்பமாக திருமணம் செய்து கொள்ள சம்பதித்தால்
உடனே திருமணம்தான்.அந்தப்பெண் நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று கவலைப்படுவதற்குள்
ஒரு குழந்தை.அவ்வளவுதான் பிறகு அந்தப்பெண்ணால் தப்பிக்கவே முடியாது.இதுதான் அடுத்த
வருடத்தின் பிரதான திட்டம்.
அதை தவிர்த்து பார்த்தால் ஆல்பர் காம்யூ பற்றிய ஒரு கட்டுரை
தொகுப்பும், திரைப்படத்திற்கான திரைக்கதையும் ஒரு குறுநாவலும் எழுத வேண்டுமென்ற ஆசையிருக்கிறது.பெரிய
கொந்தளிப்பான சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இன்றைய நாளை போல நாளையும் சென்றால் ஒரு புத்தகத்தையாவது
அடுத்த வருடத்திற்குள் எழுதிவிடுவேன்.இந்த வருடம் எனக்கு அளித்த மிக முக்கியமான நம்பிக்கை
என்னால் கதைகள் எழுத முடியும் என்பதே.
சென்னைக்கு மாற்றலாகி சென்றுவிடலாம் என்ற ஒரு எண்ணமிருந்தது.ஆனால்
இங்கேயும் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது , அதனால் சில காலம் இங்கேயே இருக்கலாம்
என்று முடிவு செய்திருக்கிறேன்.நான் பெங்களூரு வந்ததிலிருந்து இரண்டு விஷயங்களை கற்க
ஆசைப்பட்டேன்.ஒன்று குங்பூ மற்றது கன்னடம்.
குங்பூ வகுப்புகள் காலை ஆறு மணிக்கு.என்னால் எவ்வளவுதான்
முயற்சித்தாலும் அத்தனை காலையில் எழு முடியவில்லை.இரண்டு நாட்கள் செல்வேன் பின்னர்
அவ்வளவுதான்.இப்படியாக சில மாதங்கள் சென்றேன்.பின்னர் விட்டுவிட்டேன்.ஒரு வேளை திருமணம்
செய்துக்கொண்டால் அவசியம் செல்வேன் என்று நினைக்கிறேன். கன்னடம்
ஒரளவு கற்றேன்.பெங்களூரை விட்டு செல்வதற்கு முன்னால் கன்னடத்தில் எழுதவும் படிக்கவும்
தெரிந்திருக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது.சென்னைக்கு செல்லும் போதெல்லாம் பெரும்பாலும்
நண்பர் அபிலாஷை பார்த்துவிடுவேன்.இந்த வருடம் ஒரளவு மகிழ்ச்சியாக அமைந்ததற்கு முக்கிய
காரணங்கள் நண்பர் அபிலாஷூம் என் சகோதரனின் மகளும்தான்.இந்த வருடத்தை போலவே அடுத்த வருடம்
நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.பார்க்கலாம்.அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இக்கணத்தில் பழையதும் புதியதும் - ஆத்மாநாமின் கவிதை ஒன்றின் தலைப்பு
No comments:
Post a Comment