பீடிக்கப்பட்டவர்களின் கதை

 


பேராசிரியர் ஸ்டீபன் ட்ரோபிமோவிச் வார்வாரா என்ற பெண்மணியை இருபது வருடங்களாகக் காதலிப்பார். வார்வாரா அவரைப் பொருட்படுத்துவதேயில்லை. அவ்வவ்போது ஸ்டீபன், வார்வாராவுக்குத் தீவிரமான ஆவேசமான கடிதங்களை எழுதுவார். அவரது நண்பர் அவற்றைப் படித்துவிட்டு இவற்றைத் தயவுசெய்து அனுப்பாதீர்கள் என்று கெஞ்சுவார். ஆனால் ஸ்டீபன் அனுப்புவார். அதைப் படிக்கும் வார்வாரா எந்தச் சலனமும் இல்லாமல் மடித்துவைத்துவிடுவார். அவர் என்ன நினைக்கிறார் என்று ஸ்டீபனுக்கு புரிவதே இல்லை. நாவல் ஆரம்பிக்கும்போது ஸ்டீபனுக்கு ஐம்பத்து மூன்று வயது. முப்பத்து மூன்று வயதிலிருந்து வார்வாராவை காதலிப்பார். இறுதியில் மரணப்படுக்கையில் ஸ்டீபன், வார்வாராவிடம் ‘நான் உன்னை எவ்வளவு தீவிரமாகக் காதலித்தேன்’ என்று கதறுவார். வார்வாராவும் ஆம், நானும் உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டேன் என்று தனது அன்பை ஸ்டீபனின் மரணத்தின்போது வெளிப்படுத்துவார்.

இவான் துர்கனேவ் இருபது வருடங்களுக்கு மேலாக ஒரு பாடகியைக் காதலித்தார். அதன் கேலிச்சித்திரமாக ஸ்டீபனைப் பார்க்கலாம். தஸ்தாயேவ்ஸ்கியின் இந்த நாவலில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே கேலிச்சித்திரங்கள்தான். புனிதர் லூக்கின் வரிகளே நாவலின் கதை. இந்த நாவலின் தலைப்பு முக்கியம். அது பீடிக்கப்பட்டவர்கள் என்று இருக்கலாம் அல்லது பீடிப்பது அல்லது பீடிப்பவர் என்றுகூட மாற்றம் செய்யலாம். ஆங்கிலத்தில் இதை மொழியாக்கம் செய்யும்போது The Possessed என்பதை விட The Possessor அல்லது Devils அல்லது Demons என்று தான் மாற்றுகிறார்கள். அதாவது பீடிப்பதுதான் முக்கியம். இந்த நாவலில் தஸ்தயேவ்ஸ்கி கம்யூனிச சோஷியலிச சிந்தனைகளைப் பயங்கரமாகப் பகடி செய்கிறார்.

நாத்திகம், சோஷியலிசம், கம்யூனிசம், இருத்தலியவாதம், மறுப்புவாதம் ஆகிய சிந்தனைகளை அவருடைய எல்லா நாவல்களிலும் தொடர்ந்து எதிர்மறையாகவே தஸ்தயேவ்ஸ்கி சித்திரித்திருக்கிறார். கிட்டத்தட்ட நீட்சேவின் அதிமனிதன் போன்ற கருத்தை உடைய ரஸ்கோல்நிகோவ் இறுதியில் துயரத்தை ஏற்கிறான். கரமாஸவ் சகோதரர்கள் நாவலில் இவான் மனப்பிறழ்வு அடைகிறான். ஆனால் மற்ற நாவல்களுக்கும் இதற்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம் தொனி. இதில் அந்தக் காலத்தில் ரஷ்யாவில் புரட்சிகரச் சிந்தனைகளை முன்வைத்த பல உண்மையான மனிதர்களைக் கிண்டல் செய்திருக்கிறார் தஸ்தாயேவ்ஸ்கி.

இருபது வருடங்களாக ஒரே பெண்ணை, அவர் சற்றும் பொருட்படுத்தாதபோதும் தொடர்ந்து காதலித்துக்கொண்டிருக்கும் ஸ்டீபன் ட்ரோபிமோவிச்சின் மாணவன் நிகோலய். நிகோலய் வார்வாராவின் மகன். ஸ்டீபனின் மகன் பீட்டர். நிகோலயின் நண்பர்கள் அல்லது மாணவர்கள் கிரிலோவ் மற்றும் ஷாடோவ். பெரும்பாலும் கதை இவர்களைச் சுற்றியே நிகழ்கிறது. இந்த நாவலின் மையப்பாத்திரம் நிகோலய் என்று சொல்லலாம். ரஷ்யாவில் ஒரு சிறுநகரத்தில் நிகோலய் மற்றும் பீட்டர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்படுகிறது. உண்மையில் அந்தக் குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் நான்கு வருடங்களுக்கு முன்னர் பீட்டர்ஸ்பர்கில் ஒன்றாக இருப்பார்கள். அதில் கிரிலோவும் ஷாடோவும் சில வருடங்கள் ஒன்றாக அமெரிக்காவில் வசிப்பார்கள். அந்தக் குழுவின் நோக்கம் அந்த நகரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்குவது. அதுபோலப் பல நகரங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது. அந்த எண்ணத்தைப் பயன்படுத்தி புதிய புரட்சிகர சோஷியலிச அரசாங்கத்தை நிறுவுவது.

நிகோலய், பீட்டர்ஸ்பர்க் நகரில் இருக்கும்போது பதினான்கு வயது சிறுமியுடன் வல்லுறவு கொள்கிறான். அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். அந்தக் குற்றவுணர்வு அவனைப் பீடிக்கிறது. அவன் ஒருமுறை தன் நகரிலுள்ள பாதிரியாரை சந்தித்து தன் தவறுகள் அனைத்தையும் சொல்கிறான். பின்னர் அதை ஒரு அறிக்கையாக்கி பத்திரிகையில் பிரசுரத்திற்கு அனுப்பப்போவதாகச் சொல்கிறான். பாதிரியார் டிகோன் அவனிடம், ‘குற்றங்களில் இரண்டுவகைகள் இருக்கின்றன. ஒன்று குரூரமான குற்றங்கள். அத்தகைய குற்றங்களைச் செய்தவர்கள் அதை ஒப்புக்கொள்ளும்போது அவர்கள்மீது வன்மமும் அதேநேரத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டான் என்பதால் அனுதாபமும் தோன்றலாம். ஆனால் வேறுசில குற்றங்கள் இருக்கின்றன. அவற்றைச் செய்தவர்கள் அதை ஒப்புக்கொள்ளும்போது அவர்கள்மீது கோபம் வருவதில்லை; மாறாக அது ஒரு கேலிப்புன்னகையையே உருவாக்குகிறது. உன்னுடைய குற்றம் அத்தகையது. நீ இதை ஒப்புக்கொள்வதால் உனக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக நீ ஊருக்கு வெளியே நான் சொல்லும் பாதிரியாரிடம் சென்று ஏழு வருடங்கள் அவருடன் தங்கி ஊழியம் செய், அதுவே உனக்கு நன்மைபயக்கும், என்பார். அது முடியாது என்பான் நிகோலய். அப்போது அவனிடம் பாதிரியார் டிகோன் நான் உன்னை நினைத்து அச்சம்கொள்கிறேன், நீ இறுதியில் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதில்லை; மாறாக இந்த அவமானத்தால் இதைவிடப் பெரிய குற்றத்தைச் செய்யப்போகிறாய் என்பார். நீங்கள் ஒரு உளவியல் நிபுணர் என்று கத்தியவாறு நிகோலய் பாதிரியாரின் அறையிலிருந்து ஓடுவான்.

நிகோலய் சிறுவயதில் ஸ்டீபனிடம் பயின்றவன். அச்சமற்றவன். அவன் பீட்டர்ஸ்பர்க்கில் செய்த குற்றம் அவனை அவனது மரணம்வரை துரத்துகிறது. நிகோலய், பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும்போது புரட்சிகர சிந்தனைகளுக்கு அறிமுகமாகிறான். அவனுடன் இருக்கும் கிரிலோவ், ஷாடோவ், பீட்டர் ஆகியோரும் அந்தச் சிந்தனைகளுக்கு அறிமுகமாகிறார்கள்.

இதில் கிரிலோவும் ஷாடோவும் சிறுநகரத்திற்கு வந்தபின் குழுவிலிருந்தாலும் அதில் முனைப்பற்று இருக்கிறார்கள். கிரிலோவ் ஒரு எண்ணத்தால் பீடிக்கப்படுகிறான். அவன் மனிதர்கள் தங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் மனிதக்கடவுளாக மாற்றமடைய முடியும் என்று நம்புகிறான். சுய மனவிருப்பம் அல்லது சுய இச்சையை முன்வைக்கிறான். அதாவது முழுவதும் சுதந்திரமானவன். சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டவன். விட்டு விடுதலையாகி நிற்பவன். அந்த எண்ணத்தை முன்வைத்து அவன் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்கிறான். அவன் தற்கொலை செய்துகொள்வதன் மூலம் ஒருவகை அதிமனிதனாக மாற்றம் கொள்ளமுடியும் என்று தீர்மானிக்கிறான்.

மறுபுறம் ஷாடோவின் துணைவி ஒரு கட்டத்தில் ஷாடோவை விடுத்து நிகோலயுடன் பீட்டர்ஸ்பர்கில் வாழ்கிறாள். அவள் நிகோலயின் மூலமாகக் கர்ப்பம் தரிக்கிறாள். ஷாடோவ் கிரிலோவ் வாழும் அதே வீட்டின் கீழ் அறையில் வாழ்கிறான். இருவரும் அநேகமாக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில்லை.

நிகோலய், மரியா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை தனது குற்றவுணர்வு காரணமாக பீட்டர்ஸ்பர்க்கில் வாழும்போது திருமணம் செய்துகொள்கிறான். அவளுடன் அவளது சகோதரன் லேப்யாட்கினும் வாழ்கிறான். நிகோலய் மரியாவை திருமணம் செய்துகொண்டது பீட்டருக்கும் கிரிலோவுக்கு மட்டுமே தெரியும். மரியாவும் அவளது சகோதரனும் நிகோலயின் பராமரிப்பில் சிறுநகரில் வாழ்கிறார்கள்.

நிகோலயை பல பெண்கள் நேசிக்கிறார்கள். அவனது அன்னை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று ஆசைப்படும் லிசாவிட்டா, வார்வாரா இல்லத்தில் வளரும் தார்யா (இவள் ஷாடோவின் தங்கை), மற்றும் ஷாடோவின் மனைவி, அவன் வல்லுறவு கொள்ளும் பதினான்கு வயது சிறுமி, மனநிலை பாதிக்கப்பட்ட மரியா ஆகிய அனைவருமே அவனை நேசிக்கிறார்கள்.

பீட்டர் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டும் என்ற இச்சை கொண்டவன். அவனுக்கு நிகோலய் தேவை. நிகோலய் அச்சமற்றவன். அவனை தேவதூதன் போன்ற ஒரு இடத்திற்குக் கொண்டுசென்று அவனே மாற்றத்தின் திருவுரு என்று மக்களை ஏற்கவைக்கவும் அதே நேரத்தில் அதிகாரம் முழுக்க தன்னிடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவனாகவும் பீட்டர் இருக்கிறான். அவனை பீட்டர்ஸ்பர்க்கில் ஷாடோவ் அவமானப்படுத்திவிடுகிறான். சிறுநகரத்தில் அந்தக் குழு ஒன்றாக இருக்கும்பட்சத்திலும் சற்று ஒழுங்கற்று இருக்கிறது. அதை ஒன்றிணைக்க அவனுக்கு ஒரு கொலை தேவைப்படுகிறது. ரத்தம் அனைவரையும் ஒன்றிணைக்கும் என்று பீட்டர் முடிவுசெய்கிறான். ஷாடோவ் தங்கள் குழுவைப்பற்றி அரசாங்கத்திடம் தெரிவித்துவிடக்கூடும் என்ற அச்சத்தை குழுவில் பீட்டர் உருவாக்குகிறான். அச்சத்தின் காரணமாக குழுவினரும் பீட்டர் தலைமையில் ஷாடோவை கொலை செய்கிறார்கள். மறுபுறம் அந்த நகரின் கவர்னர் மனைவி ஏற்பாடு செய்யும் விழாவை கேலிக்கூத்தாக மாற்றுகிறான் பீட்டர். அதே நேரத்தில் அந்த நகரத்தின் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சனையைத் திசைமாற்றி ஆற்றை ஒட்டியிருக்கும் வீடுகளில் ஆட்களை வைத்து தீ வைக்கிறான். அதேபோல மரியாவையும் அவனது சகோதரன் லேப்யாட்கினையும் பெட்கா என்ற திருடனை வைத்து கொலை செய்கிறான்.

ஷாடோவின் மனைவி, நிகோலயின் பிள்ளையை கருவில் சுமந்து இறுதியில் ஷாடோவின் இல்லத்திற்கு வருகிறாள். இந்த நாவலில் மிக அற்புதமான கவித்துமான மலர்ச்சியான பக்கங்கள் ஷாடோவிற்கும் அவனது மனைவிக்கும் மலரும் அந்தக் காதல். அத்தனை துரோகத்திற்குப் பிறகும் ஷாடோவ் அவளைக் காதலிக்கிறான். அவள் பிரசவவலியால் துடிப்பதைப் பார்த்து செவிலித்தாயை அழைத்துவர அந்த இரவில் பித்துப்பிடித்தவன் போல ஓடுகிறான். அவன் அவனது மனைவியைப் பிரிந்துவாழும் மூன்று ஆண்டுகளில் ஒருநாள் கூட அவளை நினைக்காமல் இருக்கவில்லை. செவிலித்தாய், ஷாடோவின் பித்துக் காதலைப் பார்த்து கேலி செய்கிறாள். பிள்ளைப்பேற்றின் பின் அவன் மனைவி ஷாடோவின் நெற்றியில் முத்தமிடுகிறாள். பிறக்கும் குழந்தையை எங்கெனும் சேர்த்துவிடலாம் என்று செவிலித்தாய் யோசனை தெரிவிக்கும்போது ஷாடோவ் இது என் குழந்தை, நானே இதன் தந்தை, நான் இதை வளர்ப்பேன் என்கிறான். தன் மகனுக்கு இவான் என்று பெயர் சூட்டுகிறான். அன்று முழுவதும் அவள் உறங்கும்போது ஷாடோவின் உள்ளங்கைகளைப் பற்றிக்கொண்டு உறங்குகிறாள். அன்றிரவுதான் பீட்டரும் அவனது குழுவினரும் சேர்ந்து ஷாடோவை கொலை செய்துவிடுகிறார்கள். கிரிலோவ் எப்படியும் தற்கொலை செய்துகொள்ள போகிறான், ஷாடோவின் மரணத்தை ஏற்றுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள பீட்டர் வற்புறுத்துகிறான். கிரிலோவும் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோகிறான். பிறந்த குழந்தை குளிரால் இறந்துபோகிறது. அதன்பின் நிகோலயின் காதலி லிசாவிட்டா தீப்பற்றி எரிந்த வீடுகளைப் பார்த்துக்கொண்டு நிற்கும்போது கூட்டத்தினர் தாக்கி இறந்து போகிறாள். நடக்கும் குற்றங்கள் அனைத்தையும் அது அவ்வாறே நிகழப்போகிறது என்று அறிந்திருக்கும் நிகோலய் அதைத்தடுக்க எதுவும் செய்யவில்லை. இறுதியில் அவன் தன்னால் இறந்துபோன சிறுமியை போலத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறான்.

தன் நீண்டநாள் காதலைப் புரிந்துகொள்ளாத வார்வாராவைவிட்டு விலகி ஸ்டீபன் தன் இறுதி நடைப்பயணத்தை மேற்கொள்கிறார். அவர் வழியில் உடல் நலிவுற்று இறந்துபோகிறார். அவர் இறக்கும்போது பாவ மன்னிப்பு கோருகிறார். அவர் கடவுளை ஏற்கிறார். பீட்டரின் குற்றங்களை அரசாங்கம் அறியும்முன் அவன் ஸ்விஸர்லாந்து தப்பிச்செல்கிறான். ஷாடோவின் கொலையில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்படுகிறார்கள். கரமாஸவ் சகோதரர்கள் நாவலுக்கும் இதற்கும் இருக்கும் முக்கிய வித்யாசம் இது எந்த விதமான நம்பிக்கையும் இல்லாமல் முடிகிறது என்பதுதான். கரமாஸவ் சகோதரர்கள் நாவலில் அல்யோஷா சிறுவர்களோடு நிகழ்த்தும் உரையாடலோடு நாவல் முற்றுப் பெறுகிறது. ஆனால் இந்த நாவலில் பிறந்த குழந்தைகூட இறந்துவிடுகிறது. இந்த நாவலை காம்யு நாடகமாக மாற்றி அவரே இயக்கி அரங்யிருக்கிறார். தஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களிலேயே ஒரு அரசியல் பிரகடனம் போன்ற நாவல் இந்தப் பீடிக்கப்பட்டவர்களின் கதை.

தஸ்தாயேவ்ஸ்கியை ஸ்லேவோவிரும்பி (Slavophile) என்று சொல்லலாம். அதாவது அவர் தன் ரஷ்ய மண்ணில் ரஷ்ய மரபு கிறிஸ்துவம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் ரோமன் கத்தோலிக்கத்தை வெறுத்தார். ரோமன் கத்தோலிக்கத்தின் மீதான விரக்தியில் உருவான எதிர்மறை விளைவே நாத்திகம் என அவர் நம்பினார். நாத்திகத்தின் விளைவுகளே அனைத்து முற்போக்கு சிந்தனைகளும் என்று அவர் தீர்மானமான எண்ணம் கொண்டார். இதை ஒரு அறிக்கைபோல தி இடியட் நாவலில் மிஷ்கின் சொல்கிறான். இந்த நாவலை முற்போக்கு சிந்தனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு குழுவையும் அந்தக் குழுவின் ஆசிரியரையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பற்றிய கேலிச்சித்திரமாகக் கொள்ளலாம்.

குழுவின் ஆசிரியர் ஸ்டீபன். அவருடைய பிரச்சனை இருபது வருடங்களாகக் காதலித்தும் தன்னைப் பொருட்படுத்தாத வார்வாரா. அவரது அனைத்து சிந்தனைகளும் இந்தப் பொருட்படுத்தாத காதலால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்னும் கேலிச்சித்திரத்தை தஸ்தாயேவ்ஸ்கி உருவாக்குகிறார். அதேபோல நிகோலய் ஒரு பதினான்கு வயது சிறுமியின் தற்கொலைக்குக் காரணமாக இருப்பது அவனை உண்மையை ஒருபோதும் நெருங்கவிடாமல் செய்துவிடுகிறது என்று இன்னொரு கேலிச்சித்திரத்தை உருவாக்குகிறார். தனிப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்கநெறியின்மை உருவாக்கும் அவமானமே பொதுவாழ்க்கையில் முற்போக்கு சிந்தனைகளை முன்வைப்பதற்குப் பின்னால் உள்ள உளவியல் காரணம் என்ற சித்திரம் இந்த நாவலில் இருக்கிறது. அதாவது அத்தகைய அவமானத்தால் சிதறுண்டு கிடப்பவர்களைச் சாத்தானைப் போன்ற இந்த முற்போக்குச் சிந்தனைகள் எளிதில் பீடித்துக்கொள்கிறது, அது மிகப்பெரிய அழிவுகளை உருவாக்குகிறது என்கிறார்.

லூக்கா எழுதிய சுவிசேஷ வரிகளில் பன்றிக்கூட்டமும் அதன் மேய்ப்பனும் மலையில் இருக்கிறார்கள். சாத்தான் மேய்ப்பனுக்குள் நுழைந்து அவனை துன்புறுத்துகிறது. பின்னர் அந்த மனிதனிலிருந்து விலகி பன்றிக்கூட்டத்திற்குள் நுழைகிறது. பன்றிக்கூட்டம் வெறித்தனமாக ஓடி ஏரியில் விழுந்து மூச்சடைத்து இறக்கிறது. சாத்தான் நீங்கிய பன்றிமேய்ப்பன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருக்கிறான். அதைப்பார்த்து ஊர்க்காரர்கள் அச்சம் கொள்கின்றனர்.(லூக்கா எழுதிய சுவிசேஷம் 8ஆம் அத்தியாயம் 32 முதலான வரிகளில் இடம்பெறும் இந்த உருவகமே நாவலின் கதை).

ஸ்டீபன் பன்றி மேய்ப்பாளன். பன்றிக்கூட்டம் நிகோலய், பீட்டர், ஷாடோவ், கிரிலோவ் மற்றும் அந்த முற்போக்குக் குழுவின் அங்கத்தினர். ஸ்டீபனை முதலில் பற்றும் சிந்தனைகள் அவர் மூலமாக அவரது மாணவர்களையும் பற்றுகிறது. பற்றிய சிந்தனைகளால் வெறித்தனமாகக் குற்றங்களைச் செய்யும் பன்றிக்கூட்டத்தினர் பின்னர் மடிந்துபோகிறார்கள். அவர்கள் வெறித்தனமாக ஓடியதில் பலர் இறந்துபோகிறார்கள். பல அழிவுகளை உருவாக்குகிறார்கள். இறுதியில் பன்றி மேய்ப்பாளனான ஸ்டீபன் பாவமன்னிப்பு பெற்று இறந்து போகிறார்.



புரட்சிக்குப்பின்னான ரஷ்ய அரசாங்கத்தால் இந்த நாவல் தடைசெய்யப்படவில்லை. சில பகுதிகள் மட்டுமே நீக்கப்பட்டன. இந்த நாவலை நாடகமாக மாற்றிய ஆல்பர் காம்யு அதற்கான முக்கிய காரணம் அது முன்வைக்கும் நம்பிக்கையின்மையே என்கிறார். அதுவே இன்றைய மனிதனுக்கு மிகவும் நெருக்கமானதாக இந்த நாவலை மாற்றுகிறது என்கிறார் காம்யு.

இந்த நாவலை இன்று வாசிக்கு போது ஒரு விஷயம் நிச்சயமாகச் சொல்லமுடிகிறது. எத்தனை பெரிய முற்போக்குச் சிந்தனையும் மனிதனாலே முன்வைக்கப்படுகிறது. அவை தேவதூதனின் ஆசிர்வாதம் அல்ல. மனிதன் அதிகாரம், இச்சை மற்றும் கீழ்மையின் குணங்களாலானவன். எந்த முற்போக்குச் சிந்தனையும் மனிதனின் மண்டைக்குள்சென்று வெளிவரும் போது அது அதிகாரத்தின் இச்சையின் கீழ்மையின் குணங்களைக் கொண்டதாகவே இருக்கமுடியும். சாத்தானின் பிடியிலிருந்து விடுபட்டு நாம் இயேசு கிறிஸ்துவின் பாதங்களில் அமரக்கூடிய நாட்கள் இன்று இல்லை. இன்று நமக்கு சாத்தானும் இல்லை, கடவுளும் இல்லை. முற்போக்குப் பிற்போக்கு நவீனத்துவ பின்நவீனத்துவ அமைப்புவாத பின்அமைப்புவாத சிந்தனைகளின் பித்தசுழற்சியின் மத்தியில் நிற்கும் மனிதன் நட்சத்திரங்களைப் பார்த்தவாறு சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறான்.


No comments: