மகேந்திரனின் திரைப்படங்கள்






மகேந்திரனின் நண்டு திரைப்படம் பெரிய அளவில் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன்.இதில் மைய கதாபாத்திரத்தில் நடித்தவர் அதற்கு முன்னோ பின்னோ வேறு படங்களில் நடித்ததாகவும் தெரியவில்லை.அவருக்கு சரத்பாபு குரல் கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.படத்தின் கதை கூட அத்தனை வலுவானதில்லை.நல்லவர்களை துயரம் உருக்குலைக்காது என்பதுதான் கதை.படத்தில் டைட்டில் கார்டில் மகேந்திரனின் பெயர் தமிழ் , ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் வரும்.ஏன் ஹிந்தியிலும் பெயர் போட்டார்கள் என்று பார்த்த போது படத்தின் நாயகனின் சொந்த ஊர் லக்னோ.அந்த ஊருக்கு தன் மனைவியை முதல் முறையாக அழைத்துச்சென்று ஊர் சுற்றிக்காட்டும் போது வருவதுதான் அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா பாடல்.படத்தில் ஒரு ஹிந்தி பாடல் கூட வரும்.படத்தில் லக்னோ சம்பந்தப்பட்ட காட்சிகள் அத்தனை அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது.அசோக்குமார்தான் ஒளிப்பதிவாளர்.கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் போன்ற காட்சி அமைப்புகளும் வசனங்களும் கொண்டதாக லக்னோ பகுதி இந்த படத்தில் வருகிறது.மற்றபடி இந்த படத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

மகேந்திரன் மிகச்சிறப்பான படங்களை எடுத்திருக்கிறார்.ஆனால் அவருடைய நுண்ணுனர்வு சமயங்களில் மிக சாதாரணமானதாக இருப்பதை சில காட்சிகளில் கண்டுபிடித்துவிடலாம்.நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் மோகன் சுஹாசினியை காதலிப்பார்.பின்னர் மோகனின் தவறான வார்த்தைகளால் புண்பட்டு சுஹாசினி பிரதாப் போத்தனை மணப்பார்.ஆனால் அவரால் பிரதாப் போத்தனோடு சேர்ந்து வாழ இயலாது.மோகனை தேடிச்செல்வார்.மோகன் ஒரு ஊனமுற்ற பெண்னை திருமணம் செய்திருப்பார்.மேலும் மோகன் சுஹாசினிக்கு நான் உனக்கு செய்த துரோகத்திற்காகத்தான் இந்த ஊனமுற்ற பெண்னை திருமணம் செய்துக்கொண்டேன் என்பார்.மிக வேடிக்கையான காட்சி.தன் தியாகத்தை பறைசாற்ற ஒரு ஊனமுற்ற பெண்னை திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியை வைத்ததும் அதை வசனம் மூலமாக விளக்குவதும் மிக அபத்தமான விஷயம்.சமயங்களில் நாம் Playing to the gallery என்பதற்காக சில விஷயங்களை செய்கிறோம்.யாருக்கோ நம்மை நிரூப்பித்துக்கொண்டு என்ற மனுஷ்யபுத்திரன் வரியைப்போல.எல்லாவற்றையும் நம்மால் கச்சிதமாக விளக்க முடிந்துவிட்டால் நாம் குற்றவுணர்விலிருந்து தப்பித்துவிடலாம் என்பதுபோன்ற மனக்கணக்கு.கிட்டத்தட்ட மோகனின் செயலும் அத்தகையதுதான்.

மகேந்திரன் இயக்கிய படங்களில் மிக அற்புதமான திரைப்படங்கள் ஜானியும் முள்ளும் மலரும் தான்.உதிரிப்பூக்கள் நிச்சயம் சிறந்த திரைப்படம் இல்லை.அந்த திரைக்கதையில் ஒரு தினறல் இருக்கும்.ஒரு தீயவனை அந்த ஊரே சேர்ந்து இறுதியில் கொல்கிறது.அவன் ஒரு பெண்னை குரூரமாக அவமானப்படுத்துகிறான்.அதன் பொருட்டு தண்டிக்கப்படுகிறான்.இது ஒரு எளிமையான கதை.அந்த தீயவனின் செயல்கள் அதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் சற்று Subtle ஆக சொல்லப்பட்டிருக்கும்.அந்த ஊருக்கு பதிலாக அந்த இடத்தில் ரஜினிகாந்த் அந்த ஊருக்கு ஆசிரியராக வருவது போல காட்டி அவர் அந்த தீயவனை கொலை செய்வது போல இருந்தால் அது ஒரு சாதாரண படமாக இருந்திருக்கும்.சற்று குரலை தாழ்த்தி உணர்ச்சிகளை கொட்டாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற வகையில் தான் உதிரிப்பூக்கள் மிகவும் கொண்டாடப்பட்டது , கொண்டாடப்படுகிறது.ஆனால் மற்றபடி அது மிக எளிய கதையை கொண்ட ஒரு திரைப்படம் தான்.

கை கொடுக்கும் கை மகேந்திரனின் திரையுலக வாழ்வின் கீழ்நோக்கு பயணத்தின் துவக்கப்புள்ளியாக அமைந்த திரைப்படம்.ரஜினிகாந்த் நடித்தார்.மைய கதாபாத்திரத்தின் மனைவியான பார்வையற்ற பெண்னை ஏமாற்றி  அவளோடு ஒருவன் வல்லுறவு கொள்கிறான்.பின்னர் தன் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டவனை கொலை செய்ய செல்லும் நாயகன் தவறிழைத்தவனின் மனைவியின் கதறலுக்கு இனங்கி அவனை கொலை செய்யாமல் விட்டுவிடுகிறான்.இறுதியில் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊர் விட்டு செல்கிறான் நாயகன்.இந்த படம் மிகப்பெரிய தோல்வி.அதன் பிறகு மகேந்திரனின் திரையுலக வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது.ஒரு வேளை படத்தின் நாயகன் தவறிழைத்தவனை கொலை செய்திருந்தால் இந்தப்படம் வெற்றி பெற்றிருக்கலாம்.தெரியவில்லை.

மெட்டி திரைப்படமும் தோல்விதான் என்று நினைக்கிறேன்.திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள்.மூத்தவள் தவறான ஒருவனை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் அவனால் சித்ரவதைக்கு உள்ளாகி வீடு திரும்புகிறாள்.வாதம் தாக்கி அவள் ஒரு போதும் நடக்கமுடியாதவளாகிறாள்.இளையவளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படும் அண்ணன் திருமணத்தன்று மெட்டி வாங்க செல்லும் வழியில் லாரியில் அடிப்பட்டு இறந்து போகிறான்.கடைசிவரை அந்த வீட்டில் மெட்டி ஒலி கேட்பதே இல்லை.இளையவள் முதல்முறையாக இறந்துபோன தன் அண்ணனை அண்ணா என்று அழைக்கிறாள்.மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட என்ற பாடல் மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டியிருக்கும்.மற்றபடி பெண்கள் காலில் மெட்டி அணிந்து வீட்டில் நடக்கும் ஒலியை கேட்க ஆசைப்படும் அண்ணன்களும் இன்று இல்லை,தங்கைகளும் இன்று இல்லை.அது எப்போதோ முடிந்து போன ஒரு காலகட்டத்தின் திரைப்படம்.அந்த உணர்வுகள் இன்று நிச்சயம் எவராலும் ஏற்றுக்கொள்ளவோ, ஒப்பிட்டுக்கொள்ளவோ முடியாது.

ஆனால் முள்ளும் மலரும் மிகச்சிறந்த திரைப்படம்.காளி கதாபாத்திரம் தமிழில் இதுவரை வேறு எந்த படத்திலும் வந்ததில்லை.என்ஜினியர் தன்னை அவமானப்படுத்தியதாக கற்பனை செய்துக்கொண்டு துயரம் கொள்கிறான் காளி.என்ஜினியர் தன் தங்கையை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சொல்லும் போது காளிக்கு என்ஜினியரை அவமானப்படுத்த அற்புதமான சந்தர்ப்பம் அமைகிறது.அவன் வேறு ஒருவனுக்கு தன் தங்கையை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறான்.இங்கும் அந்த ஊரே காளியின் முட்டாள்தனமான செயலை சகித்துக்கொள்ள முடியாமல் அவனுடைய தங்கையை அந்த என்ஜினியருக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறது. ஊரே திரண்டு என்ஜீனியருக்கு தன் தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில் ஒரு கை இல்லாத காளியால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.அவன் மரணித்து விட்டவனை போல நிற்கிறான்.அவனால் தன் தங்கை தன்னைவிட்டு செல்வாள் என்பதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.ஆனால் அவள் ஊர் மக்களை தவிர்த்து அவனிடம் ஒடி வந்து மார்பில் சாய்ந்து அழுகிறாள்.அப்போது காளி மலர்கிறான்.அவனுக்குளிருந்த முள் மலர்கிறது.அவன் அந்த கர்வத்தில் தன் தங்கையை அந்த என்ஜியிருக்கு திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவிக்கிறான்.அவமானம், பழிவாங்குதல், மலர்ச்சி என்ற எளிய மனித உணர்வுகள் மிக அற்புதமாக இந்த திரைப்படத்தில் பதிவாகியிருக்கும்.ரஜினிகாந்த் சிறந்த நடிகர் என்பதை வெளிகொணர்ந்த படம்.

அதே போல ஜானியும் கீழ்நோக்கிய பயணத்தை மேற்கொள்பவனின்  வாழ்வை திசைதிருப்பும் இசையின் மேண்மையை எடுத்துரைக்கும் படம். இரண்டுமே ரஜினிகாந்த் நடித்தவை.இரண்டுக்கும் அசோக்குமாரின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை.மகேந்திரனின் மிகச்சிறந்த படங்களாக இவை இரண்டும் காலத்தில் நிற்கும்.

மகேந்திரனின் மிக முக்கியமான பங்களிப்பு என்றால் தோய்வற்ற திரைக்கதை, குரலை மேல் எழுப்பாமல் கதை சொல்லும் முறை, அசோக்குமாரையும் இளையராஜாவையும் சரியாக பயணப்படுத்திக்கொண்டது, ரஜினிகாந்திற்குள் இருக்கும் சிறந்த நடிகரை வெளிகொணர்ந்தது ஆகியவைதான்.மனித உணர்வுகளை குரல் உயர்த்தாமல் அதுவரை தமிழ் சினிமா செய்த நாடகீயத்தருணங்களை விடுத்து மிக எளிமையாக சொல்ல முயன்றது அவரின் சாதனை. 


No comments: