இருப்பே சுவர்க்கம்
ஆலமரத்தின் இலைகள் சூரிய ஒளியை எகிற நோக்க அவை பச்சை வெள்ளி கண்களாயிரமாய் அந்த வெளிச்சத்தில் சுவர்க்கமாகிறது.இருப்பே திரிசங்கு சுவர்க்கமாகிறது. தபஸேற்றது ஆல் என்கிற வரியில் ஆலமரம் அப்படியே Freeze ஆகி நிற்கிறது.இதில் ஆலமரம் மட்டுமல்ல.அதை, அந்த நொடியில் இயற்கையின் இடைவெளிகள் அற்ற படைப்பாற்றலை பார்த்து வியந்து நிற்கும் அந்த கவிஞனுக்கும் அது சுவர்க்கம்.வாசித்து அதை அனுபவமாக கொள்கையில் வாசிப்பவர்க்கும். பிரமளின் கவிதை.
திரிசங்கு
தளராத ஏழுதூண்
வேரூன்றி
அணுவிதையில் விளைந்த
அடையாளம் தெரியாமல்
விஸ்வரூபம்
விரிந்து
பச்சை வெள்ளிக்
கண்களாயிரம்
அந்தரத்தில்
இறங்கும் ஒளியை
எகிறி நோக்க
தபஸேற்றது
ஆல்.
ஒவ்வொரு இலையிலும்
தெறித்தது சுவர்க்கம்.
பகுப்புகள்:
கவிதை
இந்தியாவில் வாழும் முன்வரலாறு - 1
ஒரு முன்வரலாற்று ஆய்வாளருக்கு இருக்கக்கூடிய முதன்மையான பணி தான் ஆய்வு செய்ய விரும்பும் மறைந்துபோன மக்களின் வாழ்வை பற்றி எவ்வளவு இயலுமோ அவ்வளவு கற்றுக்கொள்வதுதான்.அவன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை விட சாட்சிகளோடே வேலை செய்ய விரும்புவதால் , சிலசமயம் தன்வரலாற்றையே எழுதாது வாழும் மக்களிடம் அத்தகைய ஒளியுட்டும் இணைக்கோடுகளை கண்டுகொள்கிறான்.கண்டிப்பாக இந்தியாவை தவிர வேறெங்கும் நாம் இத்தகைய இணைக்கோடுகளை இவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.ஒன்று மட்டும் உறுதி, பண்டைய காலத்தில் எழுதப்பட்ட எவற்றையுமே இந்தியாவின் வரலாறாக கொள்ள முடியாது.இஸ்லாமிய அரசர்களுக்கு முன்பு( பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆரம்பமாகும்) வாழ்ந்த எந்த ஒரு வரலாற்று நாயகனின் ஆண்டையும் துல்லியமாக கூறுவது மிக அரிது .மேலும் பொதுவான கூறுகள் உண்மைகளுக்கோ பொது அறிவுக்கோ அக்கறை செலுத்துவதாக இல்லை.சுருங்கச் சொல்வதென்றால் , கண்டிப்பாக இன்று இந்தியாவில் இருக்கும் பல பழங்குடி இனமக்களின் பழக்கவழக்கங்கள் பண்படா காலத்தை ஒத்தது. இந்தியாவில் மொத்தம் உள்ள 440 மில்லியன் மக்களில் 30 மில்லியனை(சுமார் 6 சதவீகிதம்) பிரதிநித்துவப்படுத்தும் இந்த மக்கள் முன்வரலாற்றில் இருந்த இந்தியாவின் பல்வேறு அம்சங்களை தொல்படிமங்களாக பாதுகாக்கின்றனர்.
கி.மு. மூன்றாயிரத்திலிருந்தே மாநகரங்களும் நாகரிங்களும் இருந்திருக்கையில் எப்படி வரலாற்றுக்கு முன்பிலிருந்து பெரிய அளவில் எவ்வித மாற்றமும் இல்லாத இந்த மக்களின் வாழ்க்கை ஜீவிக்க முடிந்தது. இதற்கான விடை உணவு கிடைப்பதில் இருக்கிறது.இந்தியாவில் உணவு பற்றாக்குறை அனைவரும் அறிந்ததே.ஆனால் இது ஒப்பிடுகையில் தற்போதய உருவாக்கமே.இப்போது கூட பெரு விளைச்சல் கொடுக்காத நிலங்களில் வேலை செய்யும் கிராம விவசாயிகள் மற்றும் வறுமையில் வாழும் மாநகர்வாசிகளுக்கு மட்டுமே வரையறுக்கக்கூடியது இது.இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயற்கை மிகுந்த நேசக்கரம் கொண்டதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வெறும் வேட்டை மற்றும் பண்டைய உணவு பாதுகாப்பு மூலமே மக்கள் எளிதாக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்.இப்போது கூட அதீத பயிரிடுதல் மற்றும் மிக அதிக அளவில் காடுகளை காலிசெய்து நிலத்தின் இயற்கை விரிப்பை நீக்காத இடங்களில் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.மீன் மற்றும் வேட்டையாடப்படும் மிருகங்கள் பறவைகள் தாராளமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற பல்வேறு இயற்கை பொருட்களும் தன்னளவில் போதுமானதாக இருப்பதால் இது சமநிலையான உணவை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.பழங்கள், பருப்புகள் , பெர்ரி பழ வகைகள், கீரைகள் , சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், காளான்கள் , தேன் — நூற்றுக்கும் மேற்பட்ட இதுபோன்ற இயற்கை பொருட்களை பருவங்களில் சேகரிக்க முடியும்.ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்திற்கு பாதுகாத்து வைக்கக்கூடிய பெரிய எண்ணிக்கையிலான உணவுப்பொருட்கள் வேளாண்மை செய்யாமலும் செய்தும் வளர்கின்றன.எள் (உட்கொள்ளக்கூடிய எண்னெயயை வழங்கக்கூடியது) , கோதுமை, அரிசி, பல்வேறு அவரை வகைகள், சோளம் மற்றும் சிறுதானியங்கள் இது போன்ற வகைகளை சார்ந்தவை. உண்மையில் கெளதம புத்தரின் நாட்களில் (கி.மு. ஆறு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டு) சிறுதானியம் Panicum frumentaccum வேளாண்மை செய்யாமல் சேகரிக்கப்பட்டதுதானே தவிர பயிரிடப்பட்டதே இல்லை.
படம் - கரசூர் பத்மபாரதி எழுதிய நரிக்குறவர் இனவரைவியல் புத்தகத்தின் அட்டைப்படம்
கோசாம்பி எழுதிய Living Prehistory in India (Scientific American - February 1967) என்ற கட்டுரையின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு. தொடரும்.
பகுப்புகள்:
கோசாம்பி,
மொழிபெயர்ப்பு
இந்தியாவின் தொழில்மயம் - 4
நிகழ்வுகள் இப்படியிருக்குமென்றால் , பழைய மற்றும் முன்னேறிய தொழில்மய சமூகங்களில் நிலவாத ஒரு சூழல் இங்கே நிலவக்கூடும்.(அங்கே எப்போதும் நிலவியதில்லை). பெயரிட்டு சொல்வதென்றால் , உடனடி உற்பத்தியாளர்கள் தங்களுடைய உழைப்பாலும் ஒய்வாலும் தங்களுடைய முன்னேற்றத்தை தாங்களே உருவாக்குவதோடு அதனுடைய தரத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயம் செய்ய முடியும்.சுய நிர்ணயம் அடித்தளத்திலிருந்து பயணித்து , தேவைகளுக்கான வேலை என்பதிலிருந்து முற்றிலும் மன நிறைவு அளிக்கக்கூடிய ஒன்றாக விரிவடையக்கூடும்.
ஆனால் இத்தகைய தெளிவற்ற ஊகங்களால் கூட , சுய நிர்ணயத்திற்கான வரையறைகளை உணர்வற்று ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கிறது.மூளை மற்றும் பொருள் சார்ந்த சுரண்டல்களை அகற்றுவதால் புதிய வளர்ச்சிக்கான முன்-தேவைகளை நிலைநாட்டக்கூடிய முதல் புரட்சி தன்னியல்பான ஒரு செயலாக இருக்கும் என்று கருதுவது மிகக்கடினம்.மேலும் இந்த சுயமான வளர்ச்சி, இன்று உலகையே வடிவமைக்கும் இருபெரும் தொழில்மய அங்கங்கள் புது காலணியத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கைவிடக்கூடிய கொள்கைமாற்றத்தை முன்அனுமானக்கிறது. இப்போதைக்கு அப்படியொரு மாற்றத்திற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.
-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 1971
படம் - ஜே.சி.குமரப்பா
இந்தியாவின் தொழில்மயம் - 3
இந்தியாவின் தொழில்மயம் - 2
இந்தியாவின் தொழில்மயம் - 1
(முற்றும்)
பகுப்புகள்:
மார்க்யூஸா,
மொழிபெயர்ப்பு
இந்தியாவின் தொழில்மயம் - 3
எனினும் , மற்றொரு மாற்றம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. தொழில்மயமும் தொழில் நுட்பத்திற்கான அறிமுகமும் பின்தங்கிய நாடுகளின் பாரம்பரிய வாழ்க்கை மற்றும் உழைப்பு முறையால் தீவிர எதிர்ப்பை சந்திக்குமென்றால் , அந்த எதிர்ப்பு எளிதானதும் சிறந்ததுமான வாழ்க்கை உருவாகுமென்ற தெளிவான வாய்ப்பு உள்ள நிலையிலும் கைவிடப்படாதென்றால் இந்த தொழில்நுட்பத்திற்கு முந்தைய பாரம்பரியமே வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத்திற்குமான ஆதாரமாக அமையக்கூடாதா?
பின்தங்கிய நாடுகளில் உள்ளவர்களை மனித இருப்புக்கான வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்க இயலாத வகையில் செய்யும் அடக்குமுறை மற்றும் சுரண்டல் சக்திகளை(பொருள் மற்றும் சமயம்) அகற்றி பாரம்பரிய வாழ்க்கை மற்றும் உழைப்பு முறைகளுக்கு மேல் தொழில்நுட்பத்தை திணிக்காது அவைகளின் சொந்த தளத்தில் முன்னேறவும் நீட்டித்துகொள்ளவும் கூடிய வகையில் அமைய இந்த சுயமான வளர்ச்சி ஒரு திட்டமிட்ட கொள்கையை கோருகின்றது. சமூக புரட்சி, வேளாண்மை சீர்திருத்தம் மற்றும் மக்கள் தொகையை கட்டுபடுத்துதல் இவற்றின் முன்-தேவைகள்.ஆனால் தொழில்மயம் முன்னேறிய சமூகங்களின் பாங்கில் இருக்க கூடாது.இயற்கை வளங்கள் அடக்குமுறை ஆக்கிரம்பிப்புகளிலிருந்து நீக்கப்படுமானால் சுயமான வளர்ச்சி இத்தகைய பகுதிகளில் உண்மையிலேயே சாத்தியம் என்று தான் தோன்றுகிறது.அப்படியாக அவை ஒரு பிழைப்புபாக மட்டும் அல்லாமல் மனித வாழ்வை அளிக்ககூடியதாகவும் இருக்கும்.அத்தகைய இயற்கை வளங்கள் இல்லாத இடங்களில் , சிறிது சிறிதான தொழில்நுட்ப உதவியால் பாரம்பரிய வடிவத்துக்குள் இருந்துகொண்டே சீராக அதை போதுமானதாக சாத்தியப்படுத்த முடியாதா?
(தொடரும்)
-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 1971
படம் - சூரிய சக்தியை முன்னிறுத்தி பேசிய பண்முக ஆளுமை கோசாம்பி
இந்தியாவின் தொழில்மயம் - 2
இந்தியாவின் தொழில்மயம் - 1
பகுப்புகள்:
மார்க்யூஸா,
மொழிபெயர்ப்பு
பார்வை
சோப்பு பவுடர் விற்க வரும் பெண்ணின் பார்வை. அந்த வீட்டு பெண்ணின் பார்வை.விற்பனை பெண் என்ன படித்திருக்கிறாள் என்பதற்கு பி.ஏ. என்கிறாள். சாதி - கிறுஸ்துவம். இருந்தது போலவே இருக்கக்கூடாதா என்ற வீட்டு பெண்மனியின் கேள்விக்கு பதிலாய் சிறிய சயசரிதை. இதில் விற்பனை பெண்ணின் பார்வை இந்த சோப்பு பவுடர் துணிக்கும் அழுக்குக்கும் இடையில் புகுந்து அழுக்கை நீக்கும் என்பதில் இருக்கிறது. இன்னும் பல வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் இருக்கிறது.மற்றவருக்கோ பார்வை அவள் படிப்பில் , சாதியில் இருக்கிறது.பொழுதை கழிப்பதில் இருக்கிறது.தன்னுடைய தங்கை ஒரு மழை நாள் இரவில் கண்ணை இழந்துவிட்ட பின் அந்த வீடு அதன் பார்வையை இழந்தது.ஒரு வயோதிகர் பிச்சை கேட்க வந்த பொழுதில் கர்த்தரை ஜபி வெளிச்சம் உண்டாகும் என சொல்லி செல்கிறார். கர்த்தரை தாயும் அக்காளும் ஜபிக்கிறார்கள்.தந்தைக்கு விருப்பமில்லை. தங்கைக்கு லேசாக பார்வை திரும்புகிறது.தந்தையும் ஜபிக்கிறார். தங்கைக்கு முழுவதுமாக பார்வை திரும்பி அச்சமயம் டீச்சர் டிரெயினிங் சென்று கொண்டிருக்கிறாள்.இதில் அந்த விற்பனை பெண்ணின் தத்துவ பார்வை.பிரக்ஞைபூர்வமான பார்வை.அவளுடைய தங்கையின் பார்வை. முக்கியமாக கர்த்தரின் பார்வை. வாதை இனி உன் கூடாரத்தை அனுகாது என்பதாக கர்த்தரின் பார்வை.இந்த சுயசரிதை முடியும் போது வீட்டு பெண்ணுக்கு கிறுஸ்துவளாக அவள் மாறியதிலிருந்த விமர்சனப் பார்வை போய்விடுகிறது. பிரக்ஞை இருந்தால் தானே விமர்சனம்.விற்பனை பெண்ணின் சுயசரிதையில் அவள் பிரக்ஞையை இழந்துவிடுகிறாள்.இதில் இன்னொன்று .அதே விற்பனை பெண்ணிடம் இருக்கும் நடைமுறை பார்வை. மீதி இரண்டு சாம்பிள் சோப்பு பவுடர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டு காரர்கள் இருக்கும் போது அவர்களிடமே வந்து தந்து விடுவதாக சொல்லி கிளம்புகிறாள்.எல்லா மனிதர்களிடம் இரண்டு பார்வைகள் இருக்கிறது.லெளகீக பார்வை. தத்துவ பார்வை.அதை இந்த சிறுகதை சிறப்பாக சொல்கிறது. மிக சாதாரணமாக ஒரு விற்பனை பெண் வந்து செல்லும் காட்சி. அதில் தான் எத்தனை பார்வை. நான் அசந்து போய்விட்டேன். அசோகமித்திரன் பார்வை என்ற இந்த சிறுகதையில் இன்னும் எனக்கு தெரியாத எத்தனையோ உள் சரடுகள் உள்ளன.
அசோகமித்திரன் சாதாரணமாக ஏதேதோ சொல்லிவிடுகிறார்.
பகுப்புகள்:
சில குறிப்புகள்
இந்தியாவின் தொழில்மயம் - 2
இந்த பின்தங்கிய நாடுகளின் தொழில்மயம் சூன்யத்தில் நிகழவில்லை. முதற்கட்ட குவிப்புக்கான சமுதாய மூலதனத்தை வெளியிலிருந்தே பெற்றாக வேண்டிய வரலாற்று சூழலில் இது நிகழ்கிறது. இத்தகைய வெளி - முதலாளித்துவ அல்லது கம்யூனிச கூட்டமைப்பாகவோ அல்லது இவ்விரண்டுமாகவோ இருக்கும். மேலும் மிக வேகமான தொழில்மயம் மற்றும் குறிப்பிட்ட அளவுக்கான உற்பத்தியை எட்டுவது ஆகியவையால் பிறர் சார்பற்று நீடிக்கவும் , அதன் மூலம் ஓப்பிட்டளவில் இவ்விரு ஜாம்பவான்களிடமிருந்து சுயாதீனமாக இருக்கவும் இயலும் என்ற ஊகம் பரவலாக நிலவுகிறது.
இத்தகைய சூழலில் பின்தங்கிய சமூகத்திலிருந்து தொழில்மயமானதாக உருமாறுவதற்கு தொழில்நுட்பத்திற்கு முந்தைய வடிவங்களை எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக விலக்க வேண்டும்.எங்கு மக்களின் அத்தியாவசிய தேவைகள் கூட திருப்தி செய்யப்படாமல் இருக்கிறதோ, எங்கு கொடுமையான வாழ்க்கைத்தரம் முதன்மையாக —அளவில் எல்லோருக்குமானதாக இருக்கக்கூடிய வகையில் — இயந்திரமயப்பட்ட மற்றும் ஒழங்கமைக்கப்பட்ட பெரு உற்பத்தியையும் விநியோகத்தையும் கோருகின்றதோ அந்த மாதிரியான நாடுகளில் இவை மேலும் முக்கியமாகிறது. இதே நாடுகளில்தான் தொழில்நுட்பத்திற்கு முந்தைய மற்றும் நிலப்பிரப்புத்துவத்திற்கு முந்தைய பழக்கவழக்கங்களும் நிலைமைகளும் பாழ்சுமையாகி தன் மேல் திணிக்கப்படுகிற வளர்ச்சிக்கு தீவிர எதிர்ப்பை தெரிவிக்கின்றன.புனித தன்மைகளை முற்றாக நிராகரித்தும் சமூக அமைப்புகள் மற்றும் விழுமியங்களை நசுக்கியும் இயந்திர நடைமுறை ( சமூக நடைமுறையாக ) அடையாளமற்ற அதிகாரத்திற்கு கீழ்ப்படிகிற அமைப்பை கோருகிற நிலையில் இந்த நாடுகளில் அவைகளின் தூய்மைகளைதலே ஆரம்பமாகவில்லை.ஒட்டுமொத்த தொழில்நுட்ப நிர்வாகத்தை கொண்டுள்ள இரு பெரிய அமைப்புகளின் தாக்கத்தின் கீழ்யிருக்கையில் , இந்த எதிர்ப்பை மிதவாத மற்றும் ஜனநாயக வடிவங்களை கொண்டு நீர்மை படுத்தும் செயல்முறைகளில் இந்த நாடுகள் ஈடுபடும் என எவராலாவது நியாயமாக அனுமானிக்க இயலுமா? பின்தங்கிய நாடுகள் — தொழில்நுட்பத்திற்கு முந்தையதிலிருந்து தொழில்நுட்பத்திற்கு பிந்தைய சமூகமாகக்கூடிய வரலாற்று தாவுதலில் , தான் கற்று தேர்ந்த தொழில்நுட்ப சாதனத்தை கொண்டு உண்மையான ஜனநாயகத்திற்கு அடிதளம் அமைத்து தர இயலுமா? மாறாக , இத்தகைய நாடுகள் தன் மீது திணித்துக்கொள்ளும் இந்த வளர்ச்சியால் முன்னேறிய நாடுகளை காட்டிலும் ஒட்டுமொத்த நிர்வாகம் மிகவும் வன்முறையானதாகவும் மிகவும் இறுக்கமானதாகவும் இருக்கக்கூடிய காலத்தைத்தான் கொண்டு வரும் என்று தோன்றுகிறது. ஏனேனில் முன்னேறிய நாடுகள் தங்களுடைய சாதனைகளை தாராண்மைவாத யுகத்தின் வழி நிகழ்த்திக்கொள்ளும்.ஆக மொத்தம் : பின்தங்கிய பகுதிகள் ஏதாவது ஒரு வகை நவ-காலனிய வடிவமாக சரணடைந்து போகும், அல்லது முதற்கட்ட குவிப்பை மேற்கொள்ளும் கிட்டத்தட்ட தீவிரமானதொரு அமைப்பாக இருக்கும்.
(தொடரும்)
-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 1971
பகுப்புகள்:
மார்க்யூஸா,
மொழிபெயர்ப்பு
இந்தியாவின் தொழில்மயம் - 1
புது மார்க்சியர் - ஹெர்பர்ட் மார்க்யூஸாவின் ஒற்றை பரிமாண மனிதன் என்ற புத்தகத்திலிருந்து இந்தியா போன்ற நாடுகளின் தொழில்மயமாதல் பற்றி பகுதியின் மொழிபெயர்ப்பு. 1964ல் முதல் பதிப்பு.
பின்தங்கிய நாடுகளின் புதிய வளர்ச்சி , முன்னேறிய தொழில்மயமான நாடுகளின் எதிர்கால வாய்ப்புகளை மாற்றக்கூடியதாக மாத்திரமல்லாமல் அவை மூன்றாவது சக்தியாக தன்னை நிறுவிக்கொண்டு அதன் மூலம் ஒப்பிட்டளவில் தனித்த அதிகாரம் கொண்டதாகவும் மாறக்கூடும் என்ற அபிப்பிராயம் அடிக்கடி சொல்லப்படுகிறது.இதைக் குறித்து நான் சில குறிப்புகளை சொல்ல விரும்புகிறேன். அரை காலனிய நாடுகள் அல்லது காலனிகளாக இருந்த நாடுகள் , முதலாளித்துவமும் அல்லாத கம்யூனிசமும் அல்லாத மாற்று வழியில் தன் தொழில்மயமாதலை மேற்கொள்ளும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கிறதா?இந்த நாடுகளின் தனதேயான கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் அப்படியான மாற்றுக்கான அறிகுறிகள் உள்ளதா? தொழில்மயமாதலில் தன்னை ஏற்கனவே ஈடுபடுத்திக்கொண்ட பின்தங்கிய மாதிரிகள் பற்றி மட்டும் எனது எண்ணங்களை வரையுறுத்தி கொள்கிறேன்.அதாவது - தொழில்மயமாதலும் தொழில்மயமாதலுக்கு முன் மற்றும் எதிர் கலாச்சாரமும் ஒன்றாக இயங்கும் நாடுகளை பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன்.(இந்தியா , எகிப்து)
உற்பத்தித்திறன் , பயன்திறன் , தொழில்நுட்ப பகுத்தறிவு என்ற விழுமியங்கள் பற்றிய பயிற்சியற்ற மக்களை கொண்டு இந்த நாடுகள் தொழில்மயமாதலுக்குள் நுழைகிறது.வேறு வார்த்தைகளில் என்றால் - உற்பத்தி சாதனங்களிலிருந்து பிரிக்கப்பட்டு உழைக்கும் சக்திகளாக உருமாற்றப்படாத மக்கள் வெகுவாக இருக்கக்கூடிய நாடுகள் இவை.இந்த சூழல்கள் தொழில்மயமாதலும் விடுதலையும் புது வகையில் ஒன்றினைய உதவக்கூடுமா - முக்கியமாக வேறு விதமாக உருவாகக்கூடிய இந்த தொழில்மயம் கட்டமைக்கும் உற்பத்தி சாதனம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை மட்டுமல்லாது அவர்களின் இருப்புகான போராட்டத்தை ஆசுவாசப்படுத்த கூடியதாகவும் இருப்பது சாத்தியமா?
(தொடரும்)
-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 1971
பகுப்புகள்:
மார்க்யூஸா,
மொழிபெயர்ப்பு
பஷீரின் பர்ர்ர்........
வைக்கம் முகம்மது பஷீரின் சில சிறுகதைகள் உலகின் மிகப்பெரிய மூக்கு என்ற தொகுப்பில் குளச்சல்.மு.யூசுப்பால் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு வெளியிட்டது. அதில் பர்ர்ர்..... என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.ஒரு எளிமையான கதை.ஆனால் அது தரும் தரிசனம் அற்புதமானது.ஒரு பதிமூன்று வயது சிறுவன் ஒரு பதினாறு பதினேழு வயது நிரம்பிய பெண்ணின் அழகை பார்த்து வியந்துபோகிறான்.அவள் மிகப் பெரிய சிம்மாசனத்தில் தேவதை போல அமர்ந்திருக்கிறாள்.அவளிடம் பேச பஷிர் மிகவும் ஆசைப்படுகிறான்.அவளோ மிகவும் அலட்டிக்கொள்கிறாள்.ஒரு நாள் அவள் அருகில் அமர்ந்திருக்கிறான்.அவள் ஒற்றை ரோஜாவை தலையில் சூடியபடி தேவதையாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.சட்டென்று ஒரு சத்தம்.பர்ர்ர்...... பஷிர் வெடித்து சிரிக்கிறார்.நான் குளிக்க வேண்டும் என்று சொல்லி சிரிக்கிறான்.அவள் சிம்மாசனம் உடைந்து போய் எளிய மனுஷியாக அவன் முன் அமர்ந்திருக்கிறாள்.வீட்டில் அவளது தங்கை , தாய் , தந்தை விஷயம் அறிந்து மேலும் சிரிக்கிறார்கள்.இந்த விஷயத்தை பஷிர் அவனது தாயிடம் சொல்கிறான். அவள் அவனை கண்டித்து இது என்ன பெரிய விஷயம் , அவளும் உன்னைப் போலத்தானே என்கிறாள்.அப்படியா என்று பஷிர் வியக்கிறார்.அத்தோடு பஷிருக்கு அந்தப்பெண் மீது இருந்த மேகக்கூட்டங்கள் மறைந்துவிடுகின்றன.சாதாரணமாக அவளிடம் பேச முடிகிறது.ஆண் பெண் ஈர்ப்புகளில் மிக முக்கியமானது தேவதை பிம்பம்தான்.அது உடைந்துபோய் விட்டால் எல்லாம் எளிமையாகிவிடும்.தேவதை என்கிற போது உடல் சார்ந்து மட்டுமல்லாது அறிவு சார்ந்தும் கூட. சில பெண்களுக்கு உடல் சார்ந்த தேவதை பிம்பம் அல்லாது அறிவு ஜீவிகள் என்கிற தளத்தில் ஆண்கள் மீது தேவதை பிம்பத்தை வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்.அவன் அப்படியொன்றும் அவள் நினைகக்கூடிய அறிவு ஜீவியல்ல என்கிற உண்மை புரியும் போது அந்தப் பெண் அந்த ஆணிடமிருந்து விலகுகிறாள்.அப்படி அறிவு ஜீவியே என்று கொண்டாலும் கூட குடும்பம் என்று வருகிற போது லெளகீக தளத்தில் அவனது செயல்பாடுகளால் பெண்களுக்கு அந்த ஆணின் மீதான மேகக்கூட்டங்கள் மறைந்துபோக்க்கூடும். வாழ்க்கை வெறுமையாக மாறக்கூடும்.பெரும்பாலும் ஆண்கள் பெண்களை நோக்கி அறிவு தளத்தால் ஈர்க்கப்படுவார்கள் என்று தோன்றவில்லை.மனிதன் இருக்கும் இடத்தில் நாற்றம் இருக்கும்(கி.ரா - மறைவாய் சொன்ன கதைகள் தொகுப்பின் முன்னுரையில் எழுதியது) என்ற உண்மை தான் விரும்பும் பெண்ணுக்கும் பொருந்தும் என்று உணரும் போது எண்ணங்கள் மாறுபடும்.
பஷீரிடம் வாழ்க்கை குறித்த புகார்கள் இருப்பதாக தோன்றவில்லை.அவரின் அக உலகத்திற்கு சுகுமாரன் அவர் பற்றிய எழுதிய வரிகளால் மிக எளிதாக செல்லமுடிந்தது.கீழ்மையும் தீமையும் மனிதனின் ஆதார குணங்கள் என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதே அந்த வரிகள்.ஜென்ம தினம் என்ற சிறுகதையில் சிறு பிள்ளைகள் ஏழ்மையால் வீடு வீடாக ஏதோ பொருள் விற்று - காசை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும்.அந்த குழந்தைகளிடம் மாணவன் ஒருவன் செல்லாக்காசை கொடுத்து அனுப்பிவிட்டு அவர்கள் சென்ற பின் அதை சொல்லி சிரிக்கிறான்.பஷீர் மனதிற்குள் நினைத்து கொள்கிறார் - மானவர்கள்தானே இன்னும் உலகம் புரியவில்லை என்று. சப்தங்கள் குறுநாவலில் கூட புகார் என்பதாக ஏதுவுமில்லை. பஷீரின் உலகமும் கி.ராஜநாராயணனின் அக உலகமும் ஒன்று தான் என தோன்றுகிறது.உலகம் என்கிற போது அவர்களின் தரிசனம்.கோபல்ல கிராமம் நாவலில் தந்தையையும் மகனையும் ஒரே பெண்ணுக்கு தாலி கட்டச்சொல்லுவார் ஜோசியர்.ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேள்விக்கு வேறு எப்படி செய்திருந்தாலும் அது சிக்கலாகித்தான் போயிருக்கும் என்பார் ஜோசியர்.ஒரு வயோதிகர் எளிய புன்னகையோடு மனிதர்களின் விளையாட்டுகளை பார்த்தபடி கடந்து சென்றபடியே இருக்கிறார்.அதை பஷீரிடமும் , கி.ராவிடமும் நாம் காணலாம்.திருடனை கழுமரமேற்றி கொலை செய்யும் தன்டனை வழங்கப்படும்போது கூட அது ஒரு இனக்குழு தன்னை தற்காத்துக் கொள்ள மேற்கொண்ட முடிவு என்பது போலத்தான் இருக்கும்.ஈரம் காயாமல் வந்துவிட்ட விறகே புகைக்காக காரணம் (கண்மனி குனசேகரனின் அஞ்சலை நாவலின் முன்னுரை வரிகள்).அதை வெளியே எடுத்து கடாசிவிடுவது எந்தக் இனக்குழுவும் செய்யக்கூடியது தான்.எம்.டி.வாசுதேவன் நாயர் - பஷீர் பற்றிய எழுதிய கட்டுரையொன்றில் இவ்வாறு எழுதியிருப்பார்.'பஷீர் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்க பார்க்கையில் அவர் பர்ஸ் இல்லாததை பார்த்து அதிர்ச்சிஅடைகிறார். கடைக்காரன் சட்டையை கழற்ற சொல்கிறான். அப்படியாக மற்ற உடைகளையும்.தன்னை நிர்வானமாக்கி விடுவானோ என்று பஷீர் அச்சப்படுகையில் ஒருவன் - இவர் எவ்வளவு பனம் தர வேண்டும் என்று கேட்டு அதை தருகிறான்.வெளியே கொஞ்ச தூரம் வந்தபின் இதில் எது உன் பர்ஸ் - எடுத்துக்கொள் என்கிறான்.அவன் சென்றுவிட்டபின் பஷீர் அவன் பெயரை அறிந்துகொள்ளவில்லையே- ஒரு வேளை கருணை என்று இருக்குமோ என்று நினைக்கிறார்.
எல்லா மனிதர்களிடமும் வியர்வையும் நாற்றமும் இருக்கிறது.புனிதர்கள் என்று நாம் எண்ணுபவர்கள் கூட நறுமனத்தை பரவவிட முடியாது.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் தன் குரு ஜோசிமா இறந்துவிட்டபின் நாற்றம் வருவதை என்னி அல்யோஷா ஒரு வேளை அவர் புனிதர் இல்லையோ என்று அச்சப்படுவான்.அந்த தருணமே அவன் வாழ்வை மாற்றுகிறது.எல்லாரும் மண் மேல் நிற்கும் எளிய மனிதர்கள் தான். பஷீர் , கி.ரா. , தஸ்தாவெய்ஸ்கி மூலமாக நாம் அந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள முடியும். பெரும்பாலான ஆண் - பெண் உறவுகள் , சிக்கல்கள் இந்த உண்மையின் உணர்வில் கடந்து செல்லமுடியும்.
பகுப்புகள்:
கட்டுரை
வேடிக்கை
ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய சமீபத்திய செய்தியொன்றில் அவர் இவ்வாறு கூறியதாக இருந்தது.'என் கணித அறிவை கொண்டு சிந்திக்கும் போது இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் பூமி என்ற ஒரேயொரு கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.நம்மை விடவும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய வேற்றுகிரக உயிர்கள் இருக்கக்கூடும்.அவைகளை நாம் தொடர்புகொள்ளாமல் இருப்பது தான் நமக்கு நல்லது' என்பது போல இருந்தது. அவர் சொல்வது உண்மையாக கூட இருக்கலாம்.பிரபஞ்சம் எல்லையற்றது. அதன் நியதிகள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை. கடவுள், கடவுள் என்று யாசித்தல், நமக்கு இப்படி நிகழ்ந்துவிட்டதே என்று புலம்பல், இவைகள் சற்று வெளியே நின்று பார்த்தால் வேடிக்கையாகவும் இருக்கக்கூடும்.வாழ்க்கை குறித்த புகார்கள் எதுவும் என்னிடம் இல்லை என்பதே சரியாக இருக்கமுடியும். நீர்வழிப் படூஉம் புணைபோல் என்று எழுதியவன் தீர்க்கதரிசி. பிரமிளின் கவிதை ஒன்றை வாசித்த போது இவைகள் எல்லாம் சந்தித்துகொண்டன.பிரமிளின் இந்தக் கவிதை இந்தப் பொருளில்தான் எழுதப்பட்டதா என்பதை யார் அறிவார்.
வழி
வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்டன
வானம் எல்லையில்லாதது.
-பிரமிள்
பகுப்புகள்:
சில குறிப்புகள்
இந்திய மொழி திரைப்படங்கள்
லோக் சபா சேனலில் சனிக்கிழமை இரவு ஒன்பது மனிக்கு இந்திய மொழி திரைப்படங்களை ஒளிப்பரப்புவார்கள்.முடிந்தவரை பார்த்துவிடுவேன்.இன்று மிருனாள் சென் இயக்கிய Kharij என்ற படம் பார்த்தேன்.மத்திய தர வர்க்கத்தினர் வீட்டு பணியாளர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது பற்றிய படம்.நிறைய நல்ல படங்களை இதுவரை பார்க்க முடிந்திருக்கிறது. Monjai என்ற அசாமிய மொழி திரைப்படம்.Neem Annapurna என்று புத்ததேவ் தாஸ்குப்தாவின் படம் , ஒரிடத்தில் ஒரு பயில்வான் என்ற பத்மராஜனின் படம், புலிஜென்மம் ஆகிய மலையாள மொழி படங்கள், மெளனி , "மகனே , நீ ஒரு அனாதை" (Son, You Are An Orphan) ஆகிய கன்னட மொழி படங்கள் , நந்தன் என்கிற ஒரிய மொழி படம், இன்னும் பெயர் மறந்து விட்ட சில மராத்திய மொழி படங்கள் , வேறு மொழி படங்கள் என்று நிறைய பார்த்திருக்கிறேன்.தமிழ் படம் அக்ரஹாரத்தில் கழுதை(முன்னரே பார்த்திருந்தாலும்) ஜான் ஆப்ரகாம் இயக்கியது பார்த்திருக்கிறேன்.இதில் இரண்டாயிரத்திக்கு பிறகு வந்துள்ள சில ஹிந்தி மொழி படங்களை ஒளிப்பரப்பு செய்யப்படும் போது பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.அவை பெரும்பாலும் மிமிக்ரி போல இருக்கும்.நமக்கு உலக மொழி படங்கள் இன்று பார்க்க எளிதாக கிடைக்கிறது.அவற்றை பற்றி விவாதிப்பதும் மோஸ்தராகி விட்டது. இந்திய மொழியிலும் நிறைய நல்ல படங்கள் இருக்கிறது.முடிந்தவரை பார்க்கலாம்.
-
பகுப்புகள்:
சில குறிப்புகள்
ஷேர் ஆட்டோ:சில குறிப்புகள்
அனைத்து வயது
ஆண்கள்
பெண்கள்
திருநங்கைகளுக்கு
உண்டு அனுமதி.
பருமனானவர்களை கொள்வதில்
மதியபொழுதுகளில்லை
அசெளகரியம்.
ஏறிய பின்பும்
இறங்கும் முன்பும்
பால்அற்றுபோவதால்
ஸ்பரிசித்து கொள்ளலாம் உடல்கள்.
பகுப்புகள்:
கவிதை
சூன்ய வெளி
பல ஆயிரகணக்கான மக்கள் தங்களை காப்பாற்ற கடவுள்கள், அரசாங்கங்கள் , மனித உரிமை அமைப்புகள், இன மொழி பற்றாளர்கள் , உண்மையான மனிதாபிமானிகள் , இதழாளர்கள் இவர்களில் யாராவது வருவார்கள் என்று அவர்களின் துர்மரணத்திற்கு முன் நினைத்திருக்க கூடும்.ஆனால் கடவுளின் பீடத்தில் இருப்பது சூன்யம் என்பதை அவர்கள் இறக்கும் போது அறிந்தனர்.இதழாளர்கள் அவர்கள் நம்பும் சிந்தாந்தங்கள் அடிப்படையில் செய்திகளை உருவாக்கினர்.அரசுகளின் பிரச்சனைகள் நமக்கு புரிவதில்லை.நமக்கு செய்தியை வாசித்துவிட்டு பேச ஒரு விஷயம், இரக்கப்பட சில ஆயிர மனிதர்கள், நம் மனம் கசிய சில கண்ணீர்துளிகள், செல்ல வேண்டிய ரயில் , ஏறி அமர்ந்து கண்ணீரை துடைத்துகொண்டு பணிக்கான முகத்தை தயாரித்துக் கொள்கிறோம்.
எழுத்தாளர்களுக்கு , கோட்பாட்டாளர்களுக்கு அவர்கள் நம்பும் தத்துவத்தை முன்வைக்கும் தருணமாகிறது.உண்மையில் யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.எந்த கதறல்களும் நம்மை மிக எளிய அளவில் கூட அசைத்துவிடுவதில்லை.எல்லாம் முடிந்துபோய்விட்டது. அங்கே இனி உருவாக போகும் தலைமுறைக்கு தெரியும் , கடவுள் பீடத்தில் இருப்பது சூன்யம்.ஆக அதனிடம் யாசிக்க ஒன்றுமில்லை.நம்புவதற்கு ஒரு சித்தாந்தம் இல்லை.வெளி இல்லை.கனவு இல்லை.எல்லோர் உணவிலும் அவர்களின் மூதாதையர்களின் ரத்தம். அவர்களுக்கு தெரியும்.பெருந்துயர் வந்தாலும் இனி அவர்கள் கதற மாட்டார்கள்.கதறினால் எந்த கையும் வரப்போவதில்லை.எல்லாவற்றையும் ஏற்கலாம்.பழகிக்கொள்ளலாம்.உயிர் வாழலாம்.நம்மை சுற்றிய மனிதர்கள் மரணமடையும் போது, நாம் சித்ரவதைக்கு உள்ளாகும் போது நாமும் நினைவில் வைத்துக்கொள்வோம் - நாம் இருப்பது வெட்டவெளியில்.மேலே வானமும் இல்லை.கீழே மண்ணும் இல்லை.சூன்ய வெளி.
பகுப்புகள்:
சில குறிப்புகள்
அவமானங்கள்
குனிந்து நில்.
கைகளை கட்டு.
மீசையை மழி.
நிர்வானம் கொள்.
கூலியை பெறு.
சோற்றைத் தின்.
பழகிக்கொள்.
குறிப்பு
தொடர்ந்த வாக்கியங்களாக அல்லாமல் ஒரு வரிக்கு கீழ் ஒரு வரி என்கிற ரீதியில் கவிதை ஏன் எழுத வேண்டும் என்கிற போது செர்கய் ஐஸன்ஸ்டைனின் Film Sense புத்தகம் படித்ததில் ஒரு எண்ணம் கிடைத்தது.இரு வரிகள் பிரிக்கப்பட்டு நமது வாசிப்பில் அது சேரும் போது கிடைப்பது அவை இரண்டிலும் இல்லாத புதியதொரு எண்ணம் தானே.
மேலே எழுதியுள்ளதை(கவிதை) காட்சிபடுத்துகையில் இவ்வாறு தோன்றியது.
1. குனிந்து நில் - மிடில் ஷாட் - கைகள், இடைவரையிலான உடைகள் அற்ற உறுதியான உடல்.அவன் மட்டும்.
2. கைகளை கட்டு - அதே காட்சி - கேமிரா நகரவில்லை - கைகளை கட்டுகிறான் - அதன் சத்தம்.
3. மீசையை மழி - மிக அண்மைக் காட்சி - குனிந்த மீசையற்ற முகம்.
4. நிர்வானம் கொள் - மிக தூரக் காட்சி - முழு நிர்வானமான அவன் உடல் பக்கவாட்டில் இருந்து.பின்னனியில் காலியான அறை.சில நாற்காலிகள்,மேஜை. அதில் யாரும் இல்லை.
5. கூலியை பெறு - மிக அண்மைக் காட்சி - அவன் கைகள் இரண்டும் - பெறும் நிலையில்- சில்லறை நாணயங்கள் வேறொரு கையிலிருந்து அவன் கையில் விழுகின்றன. நாணயங்கள் சற்று பழைய காலத்தை சேர்ந்தவை.
6. சோற்றைத் தின் - அண்மைக் காட்சி - வெள்ளைச் சோறு - பின்னனியில் வீட்டின் தூண் - சோற்றை வாயில் தினிக்கிறான் - இரண்டு முறை.
7. பழகிக்கொள் - மிடில் ஷாட் - படுத்து உறங்குவது போலவோ தூணில் சாய்ந்து அமர்ந்திருப்பது போல இருக்கும் காட்சி.
எளிதில் காட்சிபடுத்த முடியாது எழுதப்படும் கவிதை சிறந்த கவிதைகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பகுப்புகள்:
கவிதை
கச்சாப்பொருள்
கச்சாப்பொருள்
காந்தி மிக எளிமையாக வாழ்ந்தார்
காந்தி எல்லாவற்றையும் பரிசோதனைக்கு உட்படுத்தினார்
காந்தி தன் வேலைகளை தானே செய்துகொண்டார்
காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
காந்தியின் சிந்தனைகள் காந்தியம் என்றழைக்கப்பட்டது
காந்தியம் சந்தையில் நன்றாக விற்கிறது.
காந்தியம் விலையுர்ந்த கச்சாப்பொருள்.
கருணை
மார்கஸ் கைகளில் ரத்தம் - மனித ரத்தம்
புனித ஏடுகளின் இலைகளில் ரத்தம்
நான் ரத்தம் குடித்துகொண்டிருந்த
பிசுபிசுப்பான இரவின் இருட்டொன்றில்
ஷெனாய் கசிந்துகொன்டிருந்தது.
பகுப்புகள்:
கவிதை
கருணை
ஸ்ரீனிவாசராவ் இறந்துபோனான். ராவ் என்று அவனது நன்பர்கள் அழைப்பார்கள்.வயது முப்பத்தி மூன்று.தாய்மொழி தெலுங்கு.பிறந்து வளர்ந்தது சென்னையில்.வழக்கறிஞராக பனிபுரிந்த காலம் ஒன்று.அதற்கு முன் மூன்று வருடம் துனை பேராசிரியராக இயற்பியல் துறையில் பணி. தாய் தந்தையர் இறந்து போயினர். சகோதரி ஏற்கனேவே திருமணம் நடந்து ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றாள்.ராவ் திருமணம் செய்து கொள்ளவில்லை.அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கபட்டது.ஆனால் அதை முன்னெடுக்க யாரும் இல்லாமல் முடங்கிபோனது.சென்னை சோளகார்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி வந்தான்.அட்டைபெட்டி போன்ற பொற்கொல்லர்களின் கடைகளை வேடிக்கை பார்த்து செல்வது வாடிக்கை.வால்டாக்ஸ் ரோட்டில் மாலை நேரங்களில் நடைபயணம் செல்வதுண்டு.
அவன் துனை பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்து சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரி சட்டம் பயில சேர்ந்ததற்கு அவனுக்கும் சில மனித உரிமை அமைப்பை சேர்ந்த தோழர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சட்டம் பயின்று வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டபின் யாரிடமும் ஜூனியராக வேலை செய்யவில்லை.சென்னையில் நாய்களின் தொல்லை பற்றிய வழக்கே அவன் வாதாடிய முதல் பொது நல வழக்கு.பல்வேறு மிருக நல சங்கங்கள் அவனது பொது நல வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்த்து வாதாடின.மிகவும் பிந்திய இருட்டில் இது போன்ற மிருக நல சங்கங்களை சேர்ந்த மிருகனிஸ்ட்கள் தனித்து நடந்து செல்ல வேண்டும் , அப்படி சென்ற பின் நாய்கள் கொல்லப்பட வேண்டாம் என்று அவர்கள் சொல்லும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வதாக ராவ் கூறினான்.நீதிபதியின் மனைவி மிக முக்கியமான தெருநாய் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக இருந்த்தால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுபோல பல வழக்குகள் ராவால் வாதாடப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை கடற்கரையில் சிறுவர்கள் விளையாட அனுமதி மறுத்தது,நடிகர் சிவாஜி கனேசன் காந்தி ஒரமாக இருக்கையில் பிரதானமாக சாலையில் நிறுவப்பட்டிருப்பது - இதில் கலைஞர்களுக்கு அங்கீகாரம் அவசியம் தான் என்றும் , ஆனால் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்தது அவரா, இவரா என்கிற குழப்பம் வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு வரக்கூடும் என்றும் அதுமட்டுமல்லாமல் வருங்கால சந்த்திகளுக்கே வரக்கூடும் என்று வாதிட்ட போதும் அந்த வழக்கு விசாரனைக்கே ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகிரிப்பட்டது.
ராவ் கடைசியாக வாதாடிய வழக்கில் சென்னையின் குடிசைகளில் வாழும் மக்களை செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளுக்கு மாற்றாமல் நமது ஆட்சியாளர்களை மாற்றினால் சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று அவன் சொன்ன யோசனை கடும் கண்டனத்துக்கு பிறகு நிராகிரிப்பட்டது.ராவ் சில மனித உரிமை வழக்குகளிலும் வாதாடினான்.லோக் அதாலத் மூலம் வந்த வழக்குகளிலும் வாதாடினான்.சில வழக்குகள் வெற்றியும் பெற்றன.முகத்தில் வறிய கோடுகளுடன் பழுப்பேறிய கண்கள் கொண்ட ஒரு மூதாட்டி அவனிடம் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றி தெரிவித்த போது உண்மையில் நெகிழ்ந்துபோனான்.இவர்கள் எத்தனை காலம் கைகூப்பி கொண்ட இருப்பார்கள் என எண்ணிக்கொண்டான்.ஆனால் தொடர்ந்து வேலை செய்த காலத்தில் ஒரு விஷயத்தை புரிந்துகொன்டான்.நீதிபதி ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள்.சில சமயங்களில் சில சமரசங்கள் சாத்தியம்.மற்றபடி நீதிமன்றங்களால் சமூகநீதி சாத்தியமில்லை என்பதை உணர்ந்தான்.மிக புத்துணர்ச்சியுடன் தொடங்கிய அவனது சட்ட வாழ்க்கை சட்டென்று நின்றுபோனது.உண்மையான சமூகநீதி மக்கள் போராட்டங்களாலேயே சாத்தியம் என்பதை உணர்ந்தான்.ஆனால் அதை முன்னெடுக்க வழி தெரியாமல் இருந்தான்.
அவன் சினிமா பார்ப்பதில்லை.தொலைக்காட்சி பார்ப்பதில்லை.ஜனரஞ்சக பத்திரிக்கைகள் வாசிப்பதில்லை.இசை கேட்பதில்லை.ராவின் வாழ்க்கையில் காதல் இருந்ததில்லை.பெண்கள் இருந்ததில்லை.ஒரு முறை ஒரு பெண் அவனிடம் ஒரு வழக்கிற்காக வந்தாள்.பெயர் நர்மதா.அவள் தான் ஒரு கார்ப்ரேட் நிறுவணத்தில் வேலை செய்வதாகவும்,கார்ப்ரேட்களுக்கான சமூக பொறுப்புக்கான குழுவிலும் பங்கேடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவனிடம் தெரிவித்திருக்கிறாள். கிராமங்கள் தோறும் சென்று மரக்கண்று நடுவது , அங்குள்ள பள்ளிகளை தங்கள் பொறுப்பில் கொண்டுவந்து மானவர்களுக்கு உதவுவது போன்றவற்றில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறாள்.மிக்க மகிழ்ச்சியென்றும் கார்ப்பரேட்கள் நிலத்தை , கானகங்களை ஆக்கிரமித்தோடு அல்லாமல் இதுபோன்ற சமூக பொறுப்புள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருக்கிறான்.அவள் அவன் புகழ்ச்சியில் ஏதோ உள்நோக்கு உள்ளதாக எண்ணினாலும் சிரித்திரிக்கிறாள்.ஒரு பெண் அவளது கணவர் மூலம் அடிக்கடி உடல் சார்ந்த தொந்தரவுக்கு உள்ளாவதாகவும், தன்னிடம் அந்த பெண் இதை அவள் மரக்கண்று நட்டுக்கொண்டிருந்த போது தனிப்பட்ட முறையில் தெரிவித்தாள் என்றும் , அவளுக்கு எப்படியும் அவளுடைய கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டியது என்று முடிவு செய்துவிட்டதாகவும் , விசாரிக்கையில் ராவ்தான் சிறந்த சமூகநல பொறுப்புள்ள வழக்கறிஞர் என்பதை அறிந்ததாகவும் தெரிவித்திறிக்கிறாள்.அவள் அவனுக்கு அழகாக இருந்திருக்கிறாள்.இருந்தாலும் உண்மையை சொல்லி இருக்கிறான்.தான் குடும்ப நல வழக்குகள் எடுத்த்தில்லையென்று.அவள் பிடிவாதமாக ராவ் தான் இந்த வழக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லிஇருக்கிறாள்.கட்டளை இட்டிருக்கிறாள்.விவாகரத்து பெரிய விஷயம் இல்லை.ஒரு வருடம் பிரித்திருந்தாள் கிடைத்துவிடும் என்று அந்த பாதிக்கப்பட்ட பெண்மனியிடம் சொல்லியிருக்கிறான்.அதைத் தொடர்ந்து நர்மதாவும் , ராவும் அடிக்கடி சந்திந்து இருக்கிறார்கள்.
நர்மதாவுக்கு வயது முப்பது.அவள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கையில் தான் பெண்ணியவாதி என்று பதில் சொல்லியிருக்கிறாள்.ஒஹோ என்பதாக எதிர்வினையை பதிவுசெய்திருக்கிறான் ராவ்.ஒரு நாள் ஏதேர்ச்சையாக அவள் சேலையில் வந்திருக்கிறாள்.அன்று தான் ராவ் முதல் முறையாக அவளிடம் காதல்வய பட்டிருக்கிறான்.அவளிடம் அதை தெருவிக்க தின்டாடியிருக்கிறான்.இறுதியாக அன்று அவளிடம் அவள் மிகவும் அழகாக இருப்பதாக தெரிவித்திருக்கிறான்.அவளும் தான் பெண்ணியவாதி என்பதை மறந்து போய் சற்று தடுமாறி இருக்கிறாள்.அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்லியிருக்கிறான்.அவள் அவனது கண்ணத்தில் முத்தம் கொடுத்திருக்கிறாள்.அப்படியென்றால், அப்படியென்றால் அவளும் காதல் என்பது தெரிந்திருக்கிறது.ஆனால் அவள் ஒரு பெண்ணியவாதி என்பதை குறித்து கேட்க நினைத்து கேட்காமல் இருந்துவிட்டான்.அன்று அவர்கள் கடற்கரை நீண்ட பேசியபின் அன்றைய இரவை சோளகார்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்திலேயே கழிக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறார்கள்.அன்றைய நாளில் அவன் அழுதான் .அவள் விசாரிக்கையில் தனக்கு அவள் அளித்த்து உடலை அல்ல , கருணை என்று சொல்லியிருக்கிறான்.மறுநாள் இனி பொதுநல வழக்குகள் போன்றவற்றில் ஈடுபடாமல் பணம் சம்பாதிக்ககூடிய வழக்குகளை தேர்வு செய்வது என்று அவளை வழியனுப்பிவிட்டு நீதிமன்றம் செல்கையில் சிந்தித்தபடி சென்றிருக்கிறான்.நர்மதா மூலம் தன்னிடம் விவாகரத்து வழக்குக்காக வந்த பெண்ணின் கணவன் சட்டென்று அவன் முன் பாய்ந்து கத்தியால் இரண்டு முறை "சதக் சதக்" என்று குத்தியபின் மறைந்துபோயிருக்கிறான்.நர்மதா அன்றைய தினம் பேருந்தில் பயணம் செல்கையில் தான் ஒரு பெண்ணியவாதி என்றும் திருமணம் செய்து கொள்ளகூடாது என்றும் , ஆக இனி ராவை தொடர்பு கொள்ள கூடாது என முடிவு செய்திருக்கிறாள். கொலை செய்தது யார் என தெரியவராமல் அப்படியே வழக்கு முடிங்கி போயிற்று.
ஆக மிகப்பெரிய லட்சியவாதியாகவும், சமூக நலத் தொண்டனாகவும் வந்திருக்கக்கூடிய ஸ்ரீனிவாசராவ் இறந்துபோனான்.அவன் இறந்துபோகும்போது நர்மதாவுடனான முந்திய நாள் இரவும், இந்த கொலையும் தனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கருணைகள் என்று சொன்னதாக ஒரு டீக்கடை பையன் சொன்னான்.அவன் சொன்னதை காவல் துறையினர் முக்கியமாக கருதவில்லை.அதன்பின் அந்த விவாகரத்து வழக்கு அப்படியே நின்று போனதால் அந்த பெண்ணும், அவனது கனவனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
பகுப்புகள்:
சிறுகதை
ஷெனாய் கசிந்துகொண்டிருந்தது
எம்.டி.ராமநாதனின் சாமஜ வர கமனா பாடலை கேட்டுக்கொண்டிருந்தார் ஸ்ரீனிவாசராவ்.எம்.டி.ராமநாதன் பாடும் போது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக உச்சரிக்கிறார்.சுதா மய என்று கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு இளைஞன் வந்து நின்றான்.ஏதோ கலவரத்திலிருந்து தப்பியோடிய முகம். சில குழந்தைகள் சேர்ந்து ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தது போல இருந்தது தலைமூடி. அவரை பார்க்கவந்ததாக சொல்லி தன் பெயர் மட்டும் சொன்னான்.உள்ளே அழைத்து அமரச் செய்தார். பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
ஐ.ஐ.எஸ்.சி யில் கணினி துறையில் படித்து , ஆஸ்திரேலியாவில் பணி புரிந்து சட்டென்று உள்ளோடுங்கும் ஆமை போல தன் கிராமம் வந்து விவசாயம் செய்து கொண்டிருந்தார் ஸ்ரீனிவாசராவ்.பாடல் முடிந்து நிசப்தமாக இருந்தது.ஏதேனும் சாப்பிடுகிறீர்களா என்றார்.சூடாக ஏதேனும் என்றான் ராஜன்.
ஹரியும் ஹரனும் ஒன்றே ஒலிக்க விட்டார் ஸ்ரீனிவாசராவ்.அவன் சொன்னான்.என் தந்தையின் பெயர் ஹரிஹரன் என்று. சிரித்தார். கருப்பட்டி காபி குடித்துக்கொண்டிருந்தான். விஞ்ஞானம் இல்லாவிட்டால் இந்தப் பாடலை நீங்கள் இப்போது கேட்க முடியாது என்றான்.ஒரு சிலர் உளரே என்றது ஒலிநாடா.சிரித்தார்.
காலையில் ராஜன் எழுந்து பார்த்த போது ஏதோ களிமண்ணில் உருட்டிய விதைகளை தூவி கொண்டிருந்தார் ராவ்.இயற்கை விவசாயமோ என்று அருகில் வந்து கேட்டான்.நீங்கள் நிறைய பணம் சம்பாதித்து விட்டீர்கள்.அதான் ஏதோ உளறிக்கொண்டு விவசாயம் செய்கிறேன் என்று இங்கே வந்து விட்டீர்கள். விவசாயத்தை வாழ்வதாரமாக கொண்டவர்களால் இதை செய்ய முடியாது.இதன் மூலம் நீங்கள் என்ன நிருபிக்க விரும்புகிறீர்கள்.நாம் காலைக்கு என்ன அருந்தலாம் என்றார்.தான் மறுபடியும் உறங்க விரும்புவதாக சொன்னான்.நான் கொஞ்சம் வெளியில் சென்று வரவேண்டும் என்றார்.எவ்வளவு தூரம்.எட்டு கிலோமீட்டர். நான் உறங்க செல்கிறேன் என்று சொல்லி சென்றான்.அவர் மூன்று சிறுவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க சென்றார்.சூரியன் ஆயிரம் கைகளால் வெயிலை கொட்டிக்கொண்டு இருந்தது.பின்மதியப் பொழுதில் எழுந்தான் ராஜன்.அவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். ஆராய்ச்சி குறிப்போ என்றான்.உங்களுக்கு சமைத்து வைத்திருக்கிறேன்.சாப்பிடலாம் என்றார்.
சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்கிவிட்டான் ராஜன்.மாலையில் வெளியில் வந்து நின்று கொண்டான்.முற்றிலும் வயல்வெளி.காற்று அற்புதமாக இருந்தது. உங்களுக்கு மனைவி மக்கள் இல்லையா என்றான். கருப்பட்டி காபி போட்டுதரவா என்றார்.மறுபடியும் அதே கேள்வியை கேட்டான். சிரித்தவாறு உள்ளே எழுந்து சென்றார். நான் உங்களிடம் சேர்ந்து விவசாயம் கற்றுக்கொள்ளட்டுமா என்றான். நீங்கள் விரும்பும் வரை இங்கே இருக்கலாம்.உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.எந்த தடையுமில்லை என்றார்.நீங்கள் மிகவும் நல்லவர் போல பாவனை செய்கிறீர்கள்.இது எனக்கு பிடிக்கவில்லை என்றான்.சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க நீங்கள் உபயோகபடுத்தும் உபகரணங்கள் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது.இதில் நீங்கள் என்ன மாற்றத்தை உருவாக்கிவிட்டீர்கள் என்றான்.அவர் ஒன்றும் சொல்லாதது அவனுக்கு ஆத்திரமூட்டியது.ஏன் எந்தக் கேள்விக்கும் பதில் தர மறுக்கிறீர்கள்.பெரிய ஞானி போல சிரிக்கிறீர்கள் என்று கத்தினான். நாம் எம்.டி.ராமநாதனின் மகா கணபதி பாடலை கேட்போமா என்றார்.அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அவரை அடித்து விடுவோமா என்ற வெறி ஏற்பட்டது.போயா லூசு,கம்முனாட்டி, என்ன மழுப்பிறியா, ஒரு இழவு கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டிங்கிற, பரதேசி என்று ஏதேதோ பேசினான்.மகா கணபதி பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
அவன் வீருட் என்று வெளியே சென்று விட்டான்.எம்.டி.ராமநாதனை தொடர்ந்து உஸ்தாத் பிஸ்மில்லா கானின் ஷெனாய் ஒலித்தது.ஏதோ எழுதிய பின் உறங்க போனார்.காலையில் முன்னர் தோன்டிய கக்கூஸ் நிரம்பி விட்டதால் வேறு குழி தோண்டி சுற்றி பலகை அமைத்துகொண்டிருந்தார்.அவன் வந்து அறையின் வாசலில் அமர்ந்தான்.அவர் குளித்து வாருங்கள்.உணவருந்தலாம் என்றார்.ஏன் என்னிடம் எதுவும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.நீங்கள் இவ்வளவு நல்லவர் போல நடந்து கொள்வது எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. நான் இரவு முழுவதும் எங்கே தங்கினேன் என்று கூட கேட்க மறுக்கிறீர்க்ள்.நான் இயற்பியலில் மேற்படிப்பு படித்தவன்.இயற்பியல் பிரபஞ்சத்தை புரிந்து கொள்ளவே முயற்சி செய்கிறது. மாசனோபு ஜன்ஸ்டீனை கேலி செய்து விட்டதால் ஐன்ஸ்டீன் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை.அவர் கக்கூஸை சுற்றிய பலகையை சரிசெய்து கொண்டிருந்தார்.ஏன் என்னுடன் உரையாட மறுக்கிறீர்கள் என்றான்.உரையாடல் உக்கிரமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.அவன் மேற்கொண்டு ஏதுவும் பேசாமல் சென்று அமர்ந்துவிட்டான்.அவர் விதைத்த களிமண் மூடிய விதைகளிலிருந்து பச்சையாக அங்கிங்காக வெளியே தெரிந்தது.அவர் சிறிய பாதைகள் அமைத்து மிக சிறிய அளவில் நீரை செலுத்தினார்.அவன் அவர் மின்சாரம் உருவாக்கி இருக்கும் வித்த்தை பார்த்தவாறு இருந்தான்.அவர் வெளியில் கிளம்பினார்.மூன்று சிறுவர்கள் தன்னிடம் பாடம் கற்று கொள்கிறார்கள்.நீங்கள் விரும்பினால் நீங்களும் கற்று தரலாம் என்றார்.இப்போதைக்கு ஆர்வமில்லை என்றான்.
அன்று மாலையில் மறுபடியும் உஸ்தாத் பிஸ்மில்லாகான் ஒலித்துக்கொண்டிருந்தார்.என்னை குறித்து நீங்கள் ஒன்றுமே கேட்கவில்லை என்றான்.நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் என்றார்.என் தந்தை ஹரிஹரன் ஒரு கம்யூனிஸ்ட்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில அளவிலும், பின்னர் சில காலம் மத்திய குழுவிலும் இருந்தார்.விஞ்ஞானமே இந்தியாவின் எதிர்காலம் என்று மிக தீவிரமாக நம்பினார்.இளமையில் கணிதத்தை மிக விரும்பி படித்திருக்கிறார்.கடைசி வரை கணிதம் சம்பந்தமான சஞ்சிகைகளை வாங்கி கொண்டிருந்தார்.நான் மிகப்பெரிய கணித நிபுனராக வேண்டும் என்று உள்ளளவில் விரும்பினார்.சிறுவயதில் நானும் அவரும் மிக நீண்ட தூரம் நடைபயணம் செல்வோம்.ஏதேதோ கேட்பேன்.ஏதேதோ சொல்வார்.ஒரு குழந்தை போல ஏதோ அதிசயம் போல சமயங்களில் அவர் இரவுகளில் நட்சத்திரங்களை பார்த்தவாறு அமர்ந்துவிடுவார்.சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்கு பின் மிகவும் மாறி போனார்.அவர் பற்றி கொள்ள எதுவும் இல்லாமல் அவதி படுவதை பார்க்க சகிக்கவில்லை.அப்போது பல கம்யூனிஸ்ட்கள் தமிழ் தேசியம் நோக்கி சென்றனர்.என் தந்தை காந்தியம் நோக்கி சென்றார்.நான் அப்போது இயற்பியல் இளங்கலை படித்துக்கொண்டிருந்தேன்.நான் ஆர்வத்தோடு எதைப்பற்றியேனும் அவரிடம் பேசுகையில் ஆர்வமில்லாமல் போனார்.பி.சி.ஜோஷி நீக்கப்பட்டு பி.டி.ரனதேவ் வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பார்.உண்மையில் முதலாளித்துவ சமூகத்திலும் , கம்யூனிச சமூகத்திலும் அந்நியமாதல் ஒரே மாதரிதான் இருக்கிறது என்பார்.அவர் கட்சி செயல்பாடுகளில் அவ்வளவு ஆர்வத்துடன் பின்னர் ஈடுபடவில்லை.காந்திய பொருளாதாரம் குறித்து என் தந்தை கடைசிக்காலத்தில் மிக தீவிரமாக வாசித்தார்.விஞ்ஞானம் இந்தியாவிற்கு ஒன்றும் செய்ய முடியாது என்றார்.இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.நான் அவரிலிருந்து விலக ஆரம்பித்தேன்.அவரும் என்னுடன் உரையாடுவதில்லை.நான் உயர் ஆராய்ச்சிக்காக பூனே சென்று விட்டேன்.அந்த காலத்தில் அவரின் உயிர் போய்விட்டது.அவருக்கு அப்போது வயது அறுவது.பின்னர் நான் ஆராய்ச்சியில் தீவரமாக ஈடுபட்டேன்.மிக பிரம்மாண்டமான சம்பளத்துடன் அணுமின் நிலையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.அங்கே தொழிலாளர்களுக்கு தினமும் சிறுநீர் பரிசோதனை நடைபெறும்.ஒரு நாள் இரண்டு தொழிலாளருக்கு கதிரியக்கத்திற்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாதிக்கபட்டு விட்டதாக தெரிவிக்க பட்டது.அதன் பின் அவர்கள் தனிமை படுத்த பட்டார்கள்.அவர்கள் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்று ஒன்றுமே தெரியவில்லை.ஊடங்களில் இது குறித்த செய்தி ஒன்றுமேயில்லை.சட்டென்று எனக்குள் இருந்த எல்லா கேள்விகளும் எந்த பதிலும் அற்று பெரும் அச்சங்களாக மாறின.நான் ராஜினாமா செய்தேன்.அதன் பின் நான் எங்கும் வேலை செய்யவில்லை.இரண்டு வருடங்களாக வெறுமனே இருக்கிறேன்.நான் விரும்பி படித்த துறை.என் தந்தை கொண்ட அதே அவதியை நான் இப்போது அனுபவிக்கிறேன்.நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பினேன்.இயலவில்லை.காந்திய பொருளாதாரம் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்.
என் மகனது பெயரும் ஹரிஹரன்.உங்கள் தந்தை போலவே அவனும் இப்போது உயிருடன் இல்லை.அவனுக்கு ஐந்து வயது இருந்த போது இறந்து போய்விட்டான்.அவனுடன் உங்கள் தந்தை போலவே நானும் நடைபயணம் செல்வேன்.அவன் கேள்வி கேட்டு கொண்டே இருப்பான்.நான் பதில் சொல்லிக் கொண்ட இருப்பேன்.அவன் இறப்பதற்கு சில காலம் முன்பு என்னிடம் கேட்டான் - நான் இறந்துவிடுவேனா என்று. அதற்கு என்னிடம் பதிலில்லை.ஒரு போதும் எந்த தந்தையும் சந்திக்க விரும்பாத கேள்வி.மரணம் குறித்து அவனுக்கு பிரக்ஞை எவ்வாறு உருவானது என்று எனக்கு தெரியவில்லை.மரணம் என்பதற்கு அவன் என்ன உருவம் கொடுத்திருப்பான் என்பதே என் எப்போதைக்குமான கேள்வி.என்னுடைய மனைவியை நான் காதலித்து திருமணம் செய்து கொன்டேன்.அவன் இறந்த அன்று அவளும் இறந்துவிட்டாள்.எனக்கு விவசாயம் தெரியாது.நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.நானாகவே ஏதோ செய்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.உண்மையில் நான் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு நான் ஒன்றுமே செய்யவிட்டாலும் இன்னும் அறுவது வருடங்கள் வாழலாம்,மிக செளகரியமாக.ஏதோ ஒரு உந்துதல்.ஒரு அழைப்பு.இங்கு வந்துவிட்டேன்.ஒரு வேலை நவீன மருத்துவம் கொண்டு என் மகனுக்கு நான் செய்த சிகிச்சை எனக்குள் ஏற்படுத்திய கசப்பு காரணமாக இருக்கலாம்.என் மனைவி அன்றே இறந்து போய்விட்டாள் என்று சொன்னேன் இல்லையா.அவள் தற்கொலை செய்துகொன்டாள்.பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தபின் கணவன் ஒரு பொருட்டே அல்ல.உண்மையில் எனக்கு இயற்கை விவசாயம் குறித்தோ , கிராமப் பொருளாதாரம் குறித்தோ முறையான சிந்தனை இல்லை.இந்தியா மிக வேகமாக ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது.இதன் இழப்புகள் , பெறுதல்கள் யாரும் சொல்லாமல் அடுத்த பத்து வருட, இருபது வருட காலத்தில் அனைவருக்கும் தெரியும்.ஆட்சியாளர்கள் உட்பட.ஆனால் ஒன்று.கூர்ந்து கவனித்து கொண்டிருந்தால் மிக எளிதாக விவசாயத்தில் சென்றுவிடலாம்.கேவலம் என் முன்னோர்கள் இதைத்தானே செய்துகொண்டிருந்தார்கள்.நாம் அமர்ந்திருக்கும் இந்த மண்ணுக்கு கீழே ஏதோ தாதுப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டால் நாம் இங்கு இருந்து அகற்றப்படலாம்.அப்படி இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி.இன்று இந்தியாவின் விளிம்புகள் நசுக்கப்படுவதில் தனக்கும் உண்டு பங்கு என்று நாம் குற்றவுனர்வு கொள்கையில் மற்றவை குறித்து பேசலாம்.மற்றபடி வேறு எதைப்பற்றியும் சொல்ல என்னிடம் கருத்துக்கள் இல்லை.உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் தான் பதில் தேட வேண்டும்.அதற்கு எங்குமே முன்முடிவான பதில்கள் இல்லை.தீவிர உடல் உழைப்பு இருந்தால் நன்றாக உறங்கலாம்.நான் இப்போது மிக நன்றாக உறங்குகிறேன்.இரவும்,இசையும், உறக்கமும் நமக்கு அளிக்கப்பட்ட கருணைகள்.அவ்வளவுதான்.பிசுபிசுக்கும் இருட்டில் ஷெனாய் கசிந்துகொண்டிருந்தது.
பகுப்புகள்:
சிறுகதை
கடல்புரத்தில்
லாஞ்சிகள் இல்லாதிருந்து , எல்லோரும் வல்லங்களையும் , நாட்டுப்படகுகளையும் மட்டும் உபயோகபடுத்திக்கொண்டிருந்திருந்தால்:
* பிலோமி சாமிதாஸின் திருமணம் நடந்திருக்கும்.
* ஜசக்கிற்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்காது.
* ரொசாரியோ இறந்து போயிருக்கமாட்டான்.
* குருஸூ மனம் குழந்தைபோல ஆகியிருக்காது.
* கடல்புரத்து ஊர் திரிந்திருக்காது.
உற்பத்தி முறைகள் மாறும் போது உற்பத்தி மட்டும் பெருகவதில்லை.மனதிர்களின் மனமும் மாறுகிறது.லாஞ்சிகள் வந்த பின் கிறுஸ்துமஸ் அன்று கடலுக்கு போவதில்லை என்ற மரபு மீறப்பட்டு கடலுக்கு செல்ல நினைக்கிறார்கள் லாஞ்சிகாரர்கள்.கிட்டத்தட்ட கொலை வரை செல்லும் அந்த நிகழ்வு பவுலு பாட்டாவால் தடுத்து நிறுத்தப்படுகிறது.விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் எவ்வளவு மாற்றங்கள்.விஞ்ஞானத்தின் வளர்ச்சி உண்மையில் எதனால் மனிதனை கவர்கிறது.அதனால் உற்பத்தி பெருக்கலாம், எல்லா துறைகளிலிலும்.கோசாம்பி Indus Valley நாகரிகம் பற்றி எழுதுகையில் மாற்றங்களே இல்லாமல் தேக்க நிலையில் இருந்த அந்த நாகரிக்த்தை ஆரியர்கள் எளிதல் அழித்து ஆக்ரமித்தார்கள் என்று எழுதுகிறார்.உண்மை என்னவோ.
ஆனால் ஒரு ஊர் சிரான இயக்கம் கொண்ட நிலையில் இருக்கும் என்றால் அதற்கான ஆன்மிகம் அந்த சமூகத்திற்கு இருக்கும்யென்றால் அதுவே சிறந்த சமூகம் தான்.
குருஸூ தன வல்லத்தை இழந்ததை நினைத்து ஆன்மிக மரணம் அடைகிறான்.இனி அவன் எப்படி வாழ்வான்.இந்தியாவில் எத்தனை குருஸூகளை நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம்.கவலைப்பட வேண்டிய விஷயம் லாஞ்சிகள் வருகைஅல்ல.அதை , அந்த மனசாட்சியை உலுக்கி குற்றவுணர்வு கொள்ள செய்யும் பவுலு பாட்டாக்கள் நம்மிடம் இல்லை என்பது தான்.
பரதவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தது போல இருக்கிறது கடல்புரத்தில் நாவல்.யாரும் மகாத்மாக்கள் அல்ல.ஆனால் எல்லோரும் எவ்வளவு அற்புதமாக இருக்கிறார்கள்.பிலோமியின் மனம் எத்தனை நுட்பமாக வாழ்க்கையை புரிந்து கொள்கிறது.நிஜ வாழ்க்கையில் வெறும் உணர்ச்சிக்கு இடமில்லை என்கிற வரிதான் எத்தனை அழகானது..வண்ணநிலவன் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எழுதியிருக்கிறார்.இப்போதய எழுத்தாளர்கள் ஏன் இவ்வளவு ஆர்ப்பரிக்கிறார்கள் என்று நினைக்த் தோன்றுகிறது.வண்ணநிலவனுக்கு என் வணக்கங்கள்.
கடல்புரத்தில் நாவல் - எழுத்தாளர் வண்ணநிலவன் - கிழக்கு வெளியீடு.
பகுப்புகள்:
கட்டுரை
புயலிலே ஒரு தோணி
நமக்கு இந்த புவியில் பல விஷயங்கள் பிடிக்கவில்லை.மிக பெரிய அமைப்பு.ஒன்றும் செய்வதற்கில்லை.எங்கு நோக்கினும் அற்பப் பதர்கள்.மனதை சமநிலை படுத்திக்கொள்ள அங்கதம்.அப்போதும் மனம் கேட்கவில்லை.அங்கதம் கசப்பாக மாறுகிறது.அந்தக் கசப்பை நாம் ப.சிங்காரத்தில் காணலாம்.
மாதவர் நோண்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்....
சிங்காரம் மனிதன் மீது , மானுடத்தின் மீது நம்பிக்கை கொண்டவரோ , அல்லது தாகங்கள் கொண்ட அற்ப மனிதர்கள் தானே என்ற கரிசனமும் இல்லை.'கட்டுபாடு இல்லாத மனிதன் கொடிய விலங்கு' என்றே நாவல் பேசுகிறது.
பாண்டியன் மந்தைகளிலிருந்து விலகி செல்லும் மனிதன்.ஆனாலும் அவனும் சொல்கிறான் -வல்லவன் வகுத்ததே வாய்க்கால்.நேதாஜி, காந்தி, ஸ்டாலின், மார்க்ஸ், எப்படியோ மந்தைகளுக்கு தேவை ஒரு ஆளுமை.வல்லமையான ஆளுமை.'எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும்'.இந்த வரிதான் நாவலில் மறுமறுபடி வருகிறது.இது தான் பாண்டியனை செயலில் ஆழ்த்துகிறது.
* பாண்டியன், தில்லைமுத்து , தங்கையா தமிழ்ர்கள் நிலை குறித்த உரையாடல்.
* பாண்டியன், மாணிக்கம் ,மற்றவர்கள் தமிழ் பெருமை பற்றிய உரையாடல்.
* இறுதியல் மறுபடியும் பாண்டியன் தங்கையா அறிவுநெறி பற்றிய விவாதம்.
* பாண்டியன் பினாங் செல்ல முடிவு எடுத்தபின் அவனது பாலியல் உறவுகள் குறித்த சிந்தனை.
* மறுபடியும் பினாங்கிலிருந்து சுமத்ரா செல்கையில் ஒழுக்க நெறி பற்றிய அவனது எண்ணங்கள்.
இந்த எண்ணங்களை தொகுத்து பார்த்தால் அந்த மந்தை வாழ்வின் கசப்பும் அதிலிருந்து தப்பிச் செல்ல எண்ணும் பாண்டியனின் சாகஸமும்,பின்னர் சாகஸத்திலிருந்து அறநெறி நோக்கிய அவனது பயணம் தெரிகிறது.சாகஸத்திற்கு சமநிலை ஒத்துவராது.ஆக பின்புலம் யுத்த காலம். அசாதாரண காலம்.உரையாடலும் நினைவுமாக சின்னமங்கலம், மதுரை வாழ்வு.இப்படியாக விரிகிறது நாவல்.
நாவலின் இறுதியில் பாண்டியனும் தங்கையாவும், பாண்டியன் கொரில்லா போரில் ஈடுபட முடிவெடுத்தபின் அறிவுநெறி, அறநெறி பற்றி பேசும் உரையாடலே இந்த நாவலின் உச்சம்.முதலில் அறிவியல் கோட்பாடுகள்.பின்னர் அந்த கோட்பாடுகளை நிருபிக்க வேண்டி அதே கோணத்தில் உருவாக்கப்படும் கருவிகள்.இது ஒரு நோக்கு , ஒரு பார்வை.முற்றான உண்மைகள் அல்ல. அதற்கு நிகரானதும் சற்று மேலானதும் என்று அறநெறி பற்றி பாண்டியன் கூறுவதுதான் நாவலின் தரிசனம்.அறநெறி என்பது மாறாது இருப்பது.அப்போதுதான் குழப்பங்க்ள் இருக்காது என்கிறான் பாண்டியன்.கட்டுபாடு இல்லாத மனிதன் கொடிய விலங்கு என்ற வாக்கியத்திற்கு நாவலின் பதில் அறநெறி மிக்க வாழ்க்கையே சரியான தீர்வு என்பதில் முடிகிறது.இது மானிடத்தை நோக்கி தேவதூதன் கூறும் அறநெறி அல்ல.மாறாக இது கசப்பினம் முழுமையில் கிடைக்கும் தரிசனம்.அதுவே ப.சிங்காரத்தின் தரிசனம்.
புயலிலே ஒரு தோணி.தோணி என்பது பாண்டியன் என கொண்டால் யுத்தம் என்பது புயல் என கொள்ளலாமா.
-தமிழினி வெளியீடு
பகுப்புகள்:
கட்டுரை
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
வைக்கம் முகமது பஷீரின் எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது.குளச்சல் மு.யூசப் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.குரானின் முதல் வார்த்தை வாசிப்பீராக! வாசித்ததில் நிறைய மகிழ்ச்சி.1951ல் எழுதியிருக்கிறார்.அட்டை வடிவமைப்பு மிக அற்புதமாக இருக்கிறது.ஏதோ ஒரு குழந்தையின் கனவு.குஞ்ஞுபாத்துமாவின் கனவு.யானையில் வருவானோ தன்னைக் கட்டிக்கொள்ள.இறுதியில் கக்கூஸ் கட்டிக்கொடுக்கும் நிஸார் அகமதுவை கட்டிக்கொள்கிறாள்.கனவிலிருந்து நடைமுறையை நோக்கி.நிஸார் அகமதுவில் பஷீர்.
அழகான பெயர்.முகம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய மகளார் பாத்திமாவின் பெயர்.ஆயிஷா குஞ்ஞுபாத்துமாவின் பெயரை கேட்டுவிட்டு சொல்கிறாள்.
"ஆயிஷா வீவி ஆரு புள்ளே ?"
குஞ்ஞுபாத்துமா சொன்னாள்.
"முத்து நபிக்கெ பெஞ்சாதி"
ஆயிஷா குஞ்ஞுபாத்துமாவுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கையில் "இனி என் மகள் என்னை அடிக்கத் தொடுங்குவாள்.அதற்கும் எனக்கு விதி இருப்பதாகத்தான் தெரிகிறது.'அப்போதும் ஆயிஷா பீவி புன்னகை பூத்த முகத்துடன் காணப்பட்டாள்.'என்று உலகம் சொல்லும்".
"என்னத்தெ துட்டாப்பி?" இது குஞ்ஞுபாத்துமா.
குஞ்ஞுபாத்துமா ஆயிஷா வினது உரையாடல்கள் ....துட்டாப்பி.கள்ள புத்தூசே.
நாவலின் முதல் வரிகள் - "அனேகமாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த்துபோல ஞாபகம்.ஏனென்றால் சிறுவயதென்பது நெடுந்தொலைவில் அல்லவா?".
இருப்பின் உவகை அகமகிழ்வால் மட்டுமே அடைக்கூடியது.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பகுப்புகள்:
சில குறிப்புகள்
Subscribe to:
Posts (Atom)