சூன்ய வெளி

பல ஆயிரகணக்கான மக்கள் தங்களை காப்பாற்ற கடவுள்கள், அரசாங்கங்கள் , மனித உரிமை அமைப்புகள், இன மொழி பற்றாளர்கள் , உண்மையான மனிதாபிமானிகள் , இதழாளர்கள் இவர்களில் யாராவது வருவார்கள் என்று அவர்களின் துர்மரணத்திற்கு முன் நினைத்திருக்க கூடும்.ஆனால் கடவுளின் பீடத்தில் இருப்பது சூன்யம் என்பதை அவர்கள் இறக்கும் போது அறிந்தனர்.இதழாளர்கள் அவர்கள் நம்பும் சிந்தாந்தங்கள் அடிப்படையில் செய்திகளை உருவாக்கினர்.அரசுகளின் பிரச்சனைகள் நமக்கு புரிவதில்லை.நமக்கு செய்தியை வாசித்துவிட்டு பேச ஒரு விஷயம், இரக்கப்பட சில ஆயிர மனிதர்கள், நம் மனம் கசிய சில கண்ணீர்துளிகள், செல்ல வேண்டிய ரயில் , ஏறி அமர்ந்து கண்ணீரை துடைத்துகொண்டு பணிக்கான முகத்தை தயாரித்துக் கொள்கிறோம்.

எழுத்தாளர்களுக்கு , கோட்பாட்டாளர்களுக்கு அவர்கள் நம்பும் தத்துவத்தை முன்வைக்கும் தருணமாகிறது.உண்மையில் யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை.எந்த கதறல்களும் நம்மை மிக எளிய அளவில் கூட அசைத்துவிடுவதில்லை.எல்லாம் முடிந்துபோய்விட்டது. அங்கே இனி உருவாக போகும் தலைமுறைக்கு தெரியும் , கடவுள் பீடத்தில் இருப்பது சூன்யம்.ஆக அதனிடம் யாசிக்க ஒன்றுமில்லை.நம்புவதற்கு ஒரு சித்தாந்தம் இல்லை.வெளி இல்லை.கனவு இல்லை.எல்லோர் உணவிலும் அவர்களின் மூதாதையர்களின் ரத்தம். அவர்களுக்கு தெரியும்.பெருந்துயர் வந்தாலும் இனி அவர்கள் கதற மாட்டார்கள்.கதறினால் எந்த கையும் வரப்போவதில்லை.எல்லாவற்றையும் ஏற்கலாம்.பழகிக்கொள்ளலாம்.உயிர் வாழலாம்.நம்மை சுற்றிய மனிதர்கள் மரணமடையும் போது, நாம் சித்ரவதைக்கு உள்ளாகும் போது நாமும் நினைவில் வைத்துக்கொள்வோம் - நாம் இருப்பது வெட்டவெளியில்.மேலே வானமும் இல்லை.கீழே மண்ணும் இல்லை.சூன்ய வெளி.1 comment:

rvelkannan said...

'சூன்ய வெளி' எப்படிப்பட்ட வெறுமையான வார்த்தை. வலி. கல்லை(கடவுள்) விடுங்கள். //உண்மையில் யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை//
இதனை சொன்னிர்களே இதுதான் உண்மை. என்ன செய்யலாம் நண்பரே ? சொல்லுங்கள் .// நமக்கு செய்தியை வாசித்துவிட்டு பேச ஒரு விஷயம்//
இப்படியாக இல்லாமல் இருப்பதால் தானே நீங்களும் நானும் நம்மை போன்ற சிலரும் இன்று வரை அலறிக்கொண்டு கதறிக்கொண்டு இருக்கிறோம்.

//வீசியெறிந்த மாமிசத்துண்டுகள்
மனிதனுடையதா ?
மனிதனுக்குடையதா ?//
எனது இந்த வரிகளில் வலியின் சிறு வெளிப்பாடே(http://rvelkannan.blogspot.com/2010/05/blog-post_24.html )
உள்வலியை பற்றிய உங்களின் இந்த பதிவை அருமை என்று எப்படி சொல்ல முடியும். வலிகிறது நண்பரே