பஷீரின் பர்ர்ர்........


வைக்கம் முகம்மது பஷீரின் சில சிறுகதைகள் உலகின் மிகப்பெரிய மூக்கு என்ற தொகுப்பில் குளச்சல்.மு.யூசுப்பால் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு வெளியிட்டது. அதில் பர்ர்ர்..... என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.ஒரு எளிமையான கதை.ஆனால் அது தரும் தரிசனம் அற்புதமானது.ஒரு பதிமூன்று வயது சிறுவன் ஒரு பதினாறு பதினேழு வயது நிரம்பிய பெண்ணின் அழகை பார்த்து வியந்துபோகிறான்.அவள் மிகப் பெரிய சிம்மாசனத்தில் தேவதை போல அமர்ந்திருக்கிறாள்.அவளிடம் பேச பஷிர் மிகவும் ஆசைப்படுகிறான்.அவளோ மிகவும் அலட்டிக்கொள்கிறாள்.ஒரு நாள் அவள் அருகில் அமர்ந்திருக்கிறான்.அவள் ஒற்றை ரோஜாவை தலையில் சூடியபடி தேவதையாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.சட்டென்று ஒரு சத்தம்.பர்ர்ர்...... பஷிர் வெடித்து சிரிக்கிறார்.நான் குளிக்க வேண்டும் என்று சொல்லி சிரிக்கிறான்.அவள் சிம்மாசனம் உடைந்து போய் எளிய மனுஷியாக அவன் முன் அமர்ந்திருக்கிறாள்.வீட்டில் அவளது தங்கை , தாய் , தந்தை விஷயம் அறிந்து மேலும் சிரிக்கிறார்கள்.இந்த விஷயத்தை பஷிர் அவனது தாயிடம் சொல்கிறான். அவள் அவனை கண்டித்து இது என்ன பெரிய விஷயம் , அவளும் உன்னைப் போலத்தானே என்கிறாள்.அப்படியா என்று பஷிர் வியக்கிறார்.அத்தோடு பஷிருக்கு அந்தப்பெண் மீது இருந்த மேகக்கூட்டங்கள் மறைந்துவிடுகின்றன.சாதாரணமாக அவளிடம் பேச முடிகிறது.ஆண் பெண் ஈர்ப்புகளில் மிக முக்கியமானது தேவதை பிம்பம்தான்.அது உடைந்துபோய் விட்டால் எல்லாம் எளிமையாகிவிடும்.தேவதை என்கிற போது உடல் சார்ந்து மட்டுமல்லாது அறிவு சார்ந்தும் கூட. சில பெண்களுக்கு உடல் சார்ந்த தேவதை பிம்பம் அல்லாது அறிவு ஜீவிகள் என்கிற தளத்தில் ஆண்கள் மீது தேவதை பிம்பத்தை வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்.அவன் அப்படியொன்றும் அவள் நினைகக்கூடிய அறிவு ஜீவியல்ல என்கிற உண்மை புரியும் போது அந்தப் பெண் அந்த ஆணிடமிருந்து விலகுகிறாள்.அப்படி அறிவு ஜீவியே என்று கொண்டாலும் கூட குடும்பம் என்று வருகிற போது லெளகீக தளத்தில் அவனது செயல்பாடுகளால் பெண்களுக்கு அந்த ஆணின் மீதான மேகக்கூட்டங்கள் மறைந்துபோக்க்கூடும். வாழ்க்கை வெறுமையாக மாறக்கூடும்.பெரும்பாலும் ஆண்கள் பெண்களை நோக்கி அறிவு தளத்தால் ஈர்க்கப்படுவார்கள் என்று தோன்றவில்லை.மனிதன் இருக்கும் இடத்தில் நாற்றம் இருக்கும்(கி.ரா - மறைவாய் சொன்ன கதைகள் தொகுப்பின் முன்னுரையில் எழுதியது) என்ற உண்மை தான் விரும்பும் பெண்ணுக்கும் பொருந்தும் என்று உணரும் போது எண்ணங்கள் மாறுபடும்.


பஷீரிடம் வாழ்க்கை குறித்த புகார்கள் இருப்பதாக தோன்றவில்லை.அவரின் அக உலகத்திற்கு சுகுமாரன் அவர் பற்றிய எழுதிய வரிகளால் மிக எளிதாக செல்லமுடிந்தது.கீழ்மையும் தீமையும் மனிதனின் ஆதார குணங்கள் என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதே அந்த வரிகள்.ஜென்ம தினம் என்ற சிறுகதையில் சிறு பிள்ளைகள் ஏழ்மையால் வீடு வீடாக ஏதோ பொருள் விற்று - காசை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும்.அந்த குழந்தைகளிடம் மாணவன் ஒருவன் செல்லாக்காசை கொடுத்து அனுப்பிவிட்டு அவர்கள் சென்ற பின் அதை சொல்லி சிரிக்கிறான்.பஷீர் மனதிற்குள் நினைத்து கொள்கிறார் - மானவர்கள்தானே இன்னும் உலகம் புரியவில்லை என்று. சப்தங்கள் குறுநாவலில் கூட புகார் என்பதாக ஏதுவுமில்லை. பஷீரின் உலகமும் கி.ராஜநாராயணனின் அக உலகமும் ஒன்று தான் என தோன்றுகிறது.உலகம் என்கிற போது அவர்களின் தரிசனம்.கோபல்ல கிராமம் நாவலில் தந்தையையும் மகனையும் ஒரே பெண்ணுக்கு தாலி கட்டச்சொல்லுவார் ஜோசியர்.ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேள்விக்கு வேறு எப்படி செய்திருந்தாலும் அது சிக்கலாகித்தான் போயிருக்கும் என்பார் ஜோசியர்.ஒரு வயோதிகர் எளிய புன்னகையோடு மனிதர்களின் விளையாட்டுகளை பார்த்தபடி கடந்து சென்றபடியே இருக்கிறார்.அதை பஷீரிடமும் , கி.ராவிடமும் நாம் காணலாம்.திருடனை கழுமரமேற்றி கொலை செய்யும் தன்டனை வழங்கப்படும்போது கூட அது ஒரு இனக்குழு தன்னை தற்காத்துக் கொள்ள மேற்கொண்ட முடிவு என்பது போலத்தான் இருக்கும்.ஈரம் காயாமல் வந்துவிட்ட விறகே புகைக்காக காரணம் (கண்மனி குனசேகரனின் அஞ்சலை நாவலின் முன்னுரை வரிகள்).அதை வெளியே எடுத்து கடாசிவிடுவது எந்தக் இனக்குழுவும் செய்யக்கூடியது தான்.எம்.டி.வாசுதேவன் நாயர் - பஷீர் பற்றிய எழுதிய கட்டுரையொன்றில் இவ்வாறு எழுதியிருப்பார்.'பஷீர் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்க பார்க்கையில் அவர் பர்ஸ் இல்லாததை பார்த்து அதிர்ச்சிஅடைகிறார். கடைக்காரன் சட்டையை கழற்ற சொல்கிறான். அப்படியாக மற்ற உடைகளையும்.தன்னை நிர்வானமாக்கி விடுவானோ என்று பஷீர் அச்சப்படுகையில் ஒருவன் - இவர் எவ்வளவு பனம் தர வேண்டும் என்று கேட்டு அதை தருகிறான்.வெளியே கொஞ்ச தூரம் வந்தபின் இதில் எது உன் பர்ஸ் - எடுத்துக்கொள் என்கிறான்.அவன் சென்றுவிட்டபின் பஷீர் அவன் பெயரை அறிந்துகொள்ளவில்லையே- ஒரு வேளை கருணை என்று இருக்குமோ என்று நினைக்கிறார்.

எல்லா மனிதர்களிடமும் வியர்வையும் நாற்றமும் இருக்கிறது.புனிதர்கள் என்று நாம் எண்ணுபவர்கள் கூட நறுமனத்தை பரவவிட முடியாது.கரமசோவ் சகோதரர்கள் நாவலில் தன் குரு ஜோசிமா இறந்துவிட்டபின் நாற்றம் வருவதை என்னி அல்யோஷா ஒரு வேளை அவர் புனிதர் இல்லையோ என்று அச்சப்படுவான்.அந்த தருணமே அவன் வாழ்வை மாற்றுகிறது.எல்லாரும் மண் மேல் நிற்கும் எளிய மனிதர்கள் தான். பஷீர் , கி.ரா. , தஸ்தாவெய்ஸ்கி மூலமாக நாம் அந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள முடியும். பெரும்பாலான ஆண் - பெண் உறவுகள் , சிக்கல்கள் இந்த உண்மையின் உணர்வில் கடந்து செல்லமுடியும்.
1 comment:

rvelkannan said...

படிப்பது தான் எவ்வளவு சுகம்,
அதுவும் நீங்கள் குறிப்பிட்ட பஷீரும் கி.ராவும். ஆஹா, இப்பொழுதே எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு அவர்களின் எழுத்து வழியாக அந்த உலக்கத்தில்
நுழைய வேண்டும் என்பது போல் உள்ளது. இன்றைக்குள் ஒரு கதையாவது படித்து(ம் .. பார்ப்போம்)விட வேண்டும்.
//எல்லா மனிதர்களிடமும் வியர்வையும் நாற்றமும் இருக்கிறது//
//இந்த உண்மையின் உணர்வில் கடந்து செல்லமுடியும்.//
Excellent Word...