சலிப்பு







ரஜினிகாந்த் பாபா திரைப்படம் தோல்வி அடைந்த போது மிகவும் துவண்டுவிட்டார்.திரைத்துறையில் அவரின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள இயலாத பலர் அதை கொண்டாடினார்கள்.இனி ரஜினிகாந்த் அவ்வளவுதான் என்றார்கள்.மூன்று வருடம் கழித்து சந்திரமுகி என்ற மலையாளத்திலும் கன்னடத்திலும் வெளியாகி வெற்றி பெற்ற கதைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக மட்டும் நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார் ரஜினிகாந்த்.அந்தப் படம் வெற்றி பெற்றது.லிங்கா வணிக ரீதியில் பெரிய வெற்றி பெறவில்லை.ஆனால் அவரின் எதிரிகள் அதை கொண்டாடவில்லை.ஏனேனில் பாபா படம் தோல்வியின் போது உடைக்கப்பட்ட ரஜினி பிம்பம் எந்திரனுக்கு பிறகு உடைபட இயலாத இந்திய - ஆசிய அளவிலான வேறு ஒரு பிம்பத்தை அடைந்துவிட்டது.இப்போது கபாலி தோற்றாலும் அது எந்திரன் இரண்டாவது பாகத்தின் வணிகத்தை எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை.ஏனேனில் ரஜினியின் பிம்பம் இன்று தமிழகத்தில் மட்டும் செல்லுபடியாகும் வணிகம் அல்ல.அநேகமாக தயாரிப்பாளர்கள் முதலீடு செய்யும் பணத்தை திரும்ப எடுத்துவிட முடியும் என்கிற சந்தை கணக்கீடுகளுக்கு பின்பே இத்தனை பெரிய பணத்தை முதலீடு செய்கிறார்கள்.

ரஜினி ஒரு நடிகராக இந்தியாவில் வேறு எந்த நடிகரோடும் ஒப்பிட இயலாதவர்.கமலஹாசன் போல அவர் பல வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவில்லை.நிச்சயமாக ரஜினியால் நாயகன், குணா போன்ற படங்களில் நடித்திருக்க முடியாது.ஆனால் சின்ன மாற்றங்களோடு வறுமையின் நிறம் சிவப்பு படத்தை அவரால் இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும்.இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ஒரு பெரிய மடக்கும் பேனாவை பயன்படுத்தியிருப்பார்.என் உறவினர் ஒருவர் அவருக்கு அதை விமான நிலையத்தில் பரிசாக அளித்திருக்கிறார்.நான் இதை ஏதேனும் ஒரு படத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று ரஜினி சொல்லியிருக்கிறார்.அதை செய்துமிருக்கிறார்.ஸ்ரீதர் படிக்கட்டில் நடந்து வர சொல்லும் போது இரண்டு அடி முன்வைத்து பின் இறங்கி மறுபடியும் ஏறுவது போல அதை செய்கிறார்.ரஜினிகாந்த் தொடர்ந்து தன் படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் தன்னால் அந்தக் காட்சியில் புதிதாக எதையாவது செய்ய முடியும் என்றால் அதை செய்கிறார்.

ரஜினி தொண்ணூறுகளுக்கு பிறகு செய்த படங்களில் ஒரு சட்டகம் இருப்பதை அபிலாஷ் காட்சிப்பிழை இதழ் கட்டுரை ஒன்றில் சொல்லியிருந்தார்.தொண்ணூறுகளுக்கு பிறகு அவர் நடித்த படங்களின் கதையை அவர் முடிவு செய்தார்.அதுவரை பெரும்பாலான படங்கள் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்தவை.அவரிடம் இயல்பாகவே ஒரு விட்டேத்தியான மனநிலை இருக்கிறது.அத்தகைய கதாபாத்திரங்களை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.உறவுகள் மீது ஆழமான கசப்பு அவருக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.சட்டென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்லும் ஒரு மனநிலை மீது அவருக்கு ஆழமான ஈர்ப்பு இருக்கிறது.அவர் நடித்த நிறைய படங்களில் அதிக பணம் சம்பாதித்து அதிகாரத்தை அடைந்து பின்னர் அதை தூக்கி எறிந்துவிட்டு எளிய வாழ்க்கையை நோக்கி செல்லும் சட்டகம் மறுபடி மறுபடி வருகிறது.

அவருடைய ஆன்மிகம் மிகவும் மேலோட்டமானது.அவர் நம்பும் ஆன்மிகம் பாபா படத்தில் அவர் முன்வைக்கும் ஆன்மிகம்தான்.ஆனால் அவரின் சிறப்பியல்பு அவருடைய சலிப்புதான்.அவர் மிகச்சிறப்பாக நடித்த காட்சிகள் அவர் சலிப்பை வெளிபடுத்தும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த படங்களில்தான்.முத்து படத்தில் வரும் தந்தை கதாபாத்திரம், பாபாவில் தன்னை காதலித்த பெண் தான் கூலி என்பதால் நிராகரிக்கும் போது , நல்லவனுக்கு நல்லவனில் தன் மகள் தன்னை மதிக்காமல் ஒருவனை திருமணம் செய்து கொள்ளும் போது, நண்பர்கள்  உறவினர்கள் ஏமாற்றிவிடும் தர்மதுரை ,அண்ணாமலை ,அருணாச்சலம் போன்ற படங்களில் நாம் இதை பார்க்கலாம்.சமீபத்தில் லிங்கா படத்தில் சமையற்காரன் கதாபாத்திரத்தில் சிறிது நேரம் வருவார்.அந்த ஒட்டு மொத்த படத்தில் அந்த சில காட்சிகள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும்.ஏனேனில் அதில் ஒரு சலிப்பு இருக்கிறது.ஊர் மக்கள் தன்னை புரிந்துகொள்ளாமல் தூற்றியதை எதிர்கொள்ளும் மனம் அடையும் சலிப்பை மிக எளிதாக வெளிப்படுத்தியிருப்பார்.

தளபதி படத்தில் தன் அன்னை தன்னுடனே இருக்கிறேன் என்று சொல்லும் போது அவர் அதை கொண்டாட்டமாக வெளிப்படுத்துவதில்லை.ஒரு எளிய முக அசைவு.அவ்வளவுதான்.தான் கொண்ற அதே ஆளின் மனைவியை திருமணம் செய்து அவளுடன் வாழும் போது அவர் அதே வாழ்வின் மீதான சலிப்பை வெளிப்படுத்துகிறார்.மன்னன் படத்தில் இறுதியில் மனைவியின் மன்னிப்பை ஒரு சலிப்புடன் ஏற்கிறார்.தளபதி படத்தில் தன் அன்னையை முதல் முறையாக பார்க்கும் காட்சியில் அவர் அன்னையின் மடியில் தலை சாய்த்து அழுவது போல காட்சிபடுத்தியிருப்பார் மணிரத்னம்.உண்மையில் அந்தக் காட்சி ரஜினி என்ற ஆளுமைக்கு அந்நியமானது.அந்த கதாபாத்திரத்திற்கு அல்ல.ரஜினிக்கு.அதே காட்சியில் அன்னை ஒரு தூணிலும் ரஜினி ஒரு தூணிலும் சாய்ந்து பெரிதாக எந்த உரையாடலும் இல்லாமல் முடித்திருந்தால் அது ரஜினி ஆளுமைக்கு பொருந்தியிருக்கும்.காதலின் வெற்றியிலும் தோல்வியிலும், உறவுகளின் நேசத்திலும் துரோகத்திலும்,நண்பர்களின் குரூரத்திலும் அன்பிலும்  அவர் குதூகலிப்பதும் இல்லை கதறுவதும் இல்லை.சற்று விலகி நின்றே அதை அவர் ஏற்கிறார்,நிராகரிக்கிறார்.இந்த சலிப்பு அவரை அதிக உடல் அசைவுகள் அற்ற எளிய முக பாவனைகள் கொண்ட நடிப்பை வெளிக்கொணற வைக்கிறது.இது ரஜினியின் ஆளுமையின் பகுதி.அது அவரின் திரைப்படங்களிலும் வெளிப்படுகிறது.நமக்கு ஏன் அப்படியான நடிப்பு பிடித்திருக்கிறது என்பதும் முக்கியம்.படிக்காதவன் படத்தில் தன் தம்பி காரில் செல்லும் போது ரஜினியை கவனிக்காமல் சேற்றில் காரை ஏற்றி வேகமாக  சென்றுவிடுவார்.தலை குணிந்து தரையை பார்த்து எந்த அலட்டலும் இல்லாமல் கார் சென்ற திசையை நோக்கும் அந்த சலிப்பை ஏமாற்றத்தை ரஜினி சாதரணமாக வெளிப்படுத்துவார்.ஐய்யோ தம்பி என் மீது சேற்றை வாரி இறைத்துவிட்டாயே என்று அவர் கதறுவது இல்லை.மூன்றாம் பிறையில் கமல் செய்வது போல குட்டிக்கரணம் அடிப்பதில்லை.ஏதோ ஒரு வகையில் நாமும் நம் வாழ்வின் மீது அப்படியான ஒரு சலிப்பை கொண்டிருப்பதால் அதை ஏற்கிறோமா,தெரியவில்லை.

ரஜினி பற்றிய இன்னொரு முக்கிய விஷயம் நடிகராக அவர் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை.தளபதி படத்தில் தான் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது துரியோதனன் கதாபாத்திரத்தில் நடிப்பவரும் முக்கிய நடிகராக இருக்க வேண்டும் என்று மணிரத்னத்திடம் சொல்கிறார்.பாண்டியன் படத்தில் அவர் வில்லனுக்கு காவலாளியாக இருப்பார்.ரஜினியன் அக்கா வில்லனுடன் பேசிவிட்டு செல்வது போன்ற காட்சி.ஒரு நிமிடத்திற்கும் மேலாக செல்கிறது.ஆனால் மொத்த காட்சியிலும் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.மிக சின்னச்சின்ன கண் அசைவுகள்.அவ்வளவுதான்.அந்தக் காட்சியில் ஒரு காவலாளி எதை செய்ய முடியுமோ அதை செய்கிறார்.அதற்கு மேல் தான் காணாமல் போய்விடுவோமோ என்று அவர் அசட்டையாக எதையும் செய்வதில்லை.இதை கமலால் செய்யவே முடியாது.அவர் எல்லா காட்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்.பிறரை நடிக்க விட்டு வேடிக்கை பார்க்க ஒரு நடிகருக்கு அபாரமான தன்னம்பிக்கை வேண்டும்.

வி.கே.ராமசாமி எனது கலைப்பயணம் புத்தகத்தில் ரஜினி அருணாச்சலம் படத்தில் தன்னை ஒரு தயாரிப்பாளராக இணைத்து உதவியதை பற்றி எழுதியிருப்பார்.அப்போது வி.கே.ராமசாமியிடம் சிலர் ரஜினி புகழுக்காக இதை செய்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள்.அதற்கு இவரின் பதில் புகழுக்காக செய்வதாக இருந்தாலும் இதை செய்ய துணிச்சல் வேண்டும் என்பதுதான்.ரஜினி தன் ஹோட்டல் ஸ்பிரிங்ஸ் புனரமைக்கப்பட்ட விழாவில் பேசிய வீடியோவை பார்த்தேன்.78யில் இருபத்தி நான்கு லட்சத்திற்கு ஐம்பதாயிரம் முன்பணமாக கொடுத்து அதை வாங்கியிருக்கிறார்.மீதி பணத்தை ஒன்றரை வருடத்தில் அவர் கட்ட வேண்டும்.அநேகமாக ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைத்து ஒன்றரை வருடத்தில் முழு பணத்தையும் செலுத்துகிறார்.ஹோட்டல் தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட அன்றைய தினத்தில் அந்த ஹோட்டலின் மதில் மீது அமர்ந்து அதுவரை பிடித்திக்கொண்டிருந்த சிகரெட்டை விடுத்து 555 சிகரெட் பிடிக்கிறார்.வேறு ஏதோ ஒரு உயர் ரக சாராயத்தை குடிக்கிறார்.அத்தகைய உழைப்புதான் அவருக்கு Nervous breakdown யை உருவாக்கியது.அதன்பின் எண்பதுகளில் அவர் ரமண மகரிஷி பற்றி பேச ஆரம்பிக்கிறார்.அங்கே அடைந்தவற்றின் மீதான சலிப்பும் களிப்பும் வெற்றியும் அவரின் ஆளுமையில் பெரும் பாதிப்பை செலுத்துகிறது.வெற்றியின் மீது வெறி கொண்ட இளைஞன் வெற்றியின் களிப்பில் அடையும் சலிப்பு.நாம் ரஜினியின் படங்களில் பார்க்கும் ஆளுமை கதாபாத்திரத்தின் ஆளுமை அல்ல.அது ரஜினியே தான்.ஆனால் அது கதாபாத்திரத்திலும் சரியாக பொருந்துகிறது.எனக்கு என்னவோ நலன் குமாரசாமி ரஜினியின் படம் ஒன்றை இயக்கினால் ரஜினியின் ஆளுமையை மிகச்சிறப்பாக வெளி கொணர்வார் என்று தோன்றுகிறது.

No comments: