ஆறிலிருந்து அறுபது வரை படத்தில்
ரஜினிகாந்த் தன் காதலியிடம் நான் காண்டேகர், தி.ஜானகிராமன்,ஜெயகாந்தன் ஆகியோரை
மிகவும் விரும்பி படிப்பேன் என்பார்.அதற்கு அவர் காதலி இந்த புத்தகங்களை எல்லாம்
எதற்கு படிக்கிறீர்களோ என்பாள்.புரிந்தவர்களுக்கு சொல்லத்தேவையில்லை , புரியாதவர்களுக்கு
சொல்லி பிரயோஜனமில்லை என்பார் ரஜினிகாந்த்.நல்ல திரைப்படம்.நல்ல வசனம்.காண்டேகர்
என்ற பெயர் தமிழில் அந்த திரைப்படத்தில் மட்டும் தான் வந்திருக்கும் என்று
நினைக்கிறேன்.கதையின் பிற்பகுதியில் ரஜினிகாந்த் எழுத்தாளராகிறார்.அதற்காகத்தான்
கதையின் முற்பகுதியில் அவர் சிறந்த வாசகர் என்பதை நிறுவ அந்த வசனம்
இடம்பெற்றிருக்கிறது.ஆனால் படத்தில் ஒரிடத்தில் கூட அவர் வாசிப்பது போன்ற
காட்சியில்லை.
ரஜினிகாந்த் கன்னடிகர் என்பதால்
அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சுப.உதயகுமார் எழுதியிருக்கிறார்.எனக்கு
சுப.உதயகுமாரிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது.நான் வாணியம்பாடியில்
படித்தேன்.அங்கே உருதுவை தாய்மொழியாக கொண்ட இஸ்லாமியர்கள் அதிகம்.அவர்களில் ஒருவர்
நாளை அரசியலில் இறங்கி (அது ஏன் அரசியலில் இறங்க வேண்டும், அதென்ன பாதாளத்திலா
இருக்கிறது), தமிழக முதலமைச்சராகும் சூழல் உருவாகும் பட்சத்தில் சுப.உதயகுமார் அதை
எதிர்ப்பாரா அல்லது ஆதிரிப்பாரா.சுப.உதயகுமாரின் இதுபோன்ற வாதங்கள்
வேடிக்கையானவை.சிறுபிள்ளைத்தனமானவை.
உண்மையில் ரஜினிகாந்த் ஆட்சிக்கு
வந்தாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவும் தமிழகமும் ஒரே போலத்தான்
இருக்க போகிறது.இன்று நம் எல்லோருக்கும் தேவை பணமும் செளகரியங்களும் தான்.அது நமக்கு சாத்தியப்பட இங்கு
சந்தைகளும் அதில் நிறைய கடைகளும் உருவாக வேண்டும்.அவ்வளவுதான்.அதைத்தான் காங்கிரஸ்
செய்தது.பி.ஜே.பி செய்கிறது.நாளை வேறு யார் வந்தாலும் அதைத்தான்
செய்வார்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பரதன் கம்யூனிஸ்ட்
கட்சியின் காலம் முடிவடைந்துவிட்டதை சமீபத்தில் ஒரு பேட்டியில்
சொல்லியிருந்தார்.உண்மையில் மாற்று பொருளாதார கொள்கைகள் உள்ள ஒரே தரப்பு
கம்யூனிஸ்ட்கள்தான்.அதற்கும் பிரகாஷ் காரத் மூடுவிழா நடத்திவிட்டார்.காந்திய
தரப்புகள் கட்சி அரசியலில் இல்லை.சுப.உதயகுமார் போன்றவர்கள் காந்தியம் பேசுவது போல
தோன்றும் போது அவர் தமிழ் தேசியம் பேசுகிறார்.தமிழ் தேசியம் பேசுகிறார் என்று
நினைக்கும் போது ஆம் ஆத்மியில் இணைந்து தேர்தலில் நிற்கிறார்.வேடிக்கைத்தான்.
ஸ்டீபன் ஹாக்கிங் தன் புத்தகம்
ஒன்றில் 'Philosophers of Science' என்பவர்களை
இயற்பியலாளர்களாக முடியாமல் தோற்றுபோனவர்கள் என்று கிண்டல் செய்கிறார்.அது
போலத்தான் இங்கு பணம் வேண்டாம் , செளகரியங்கள் வேண்டாம் என்று கூச்சல் போடும்
நிறைய பேரும்.எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.பீடிக்கப்பட்டவர்களின் கதை நாவலில்
இது போன்று முற்போக்கு சிந்தனையாளர்களை பயங்கரமாக பகடி செய்திருக்கிறார்
தஸ்தாவெய்ஸ்கி.
உண்மையில் பி.ஜே.பிக்கும் காங்கிரஸூக்கும்
வித்யாசமில்லை.கலாச்சார தளத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம்.இருக்கிறது.மற்றபடி
எந்த வித்யாசமுமில்லை.மாற்று தரப்புகள் நிச்சயம் இருக்கின்றன.ஆனால் இன்று அதை முன்வைப்பர்களுக்கே
இந்தியாவோ , தமிழகமோ தனக்கே என்று தனியான ஒரு பொருளாதார கொள்கையை வைத்துக்கொள்ள
முடியாது என்று தெரியும்.உலகம் தழுவிய மாற்று பொருளாதார கொள்கை உருவாகி
வரும்போதுதான் உண்மையான மாற்றம் சாத்தியம்.நிச்சயம் இன்றைய சூழலில் அது
சாத்தியமில்லை.
No comments:
Post a Comment