கிளர்ச்சிகளும் அறிவுஜீவிகளும்

 

அஜிதன் 1968யில் பிரான்ஸில் நடந்த மாணவர் கிளர்ச்சியின் பின்னணியில் அடோர்னோவுக்கும் மார்க்யூஸாவிற்கும் இடையில் நடந்த விவாதங்கள் குறித்து எழுதியிருக்கிறார்.அதையொட்டி இப்போது இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தும் போராட்டங்களை பற்றியும் அது இந்தளவு விரிந்திருப்பதை பற்றியும் வியந்து எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையில் அவருக்கு அடர்னோ மீது சற்று சாய்வு இருக்கிறது.

பிரான்ஸில் நடந்த கிளர்ச்சி என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது அது ஒரு மக்கள் நல அரசை நோக்கிய பாதையை மட்டுமே உருவாக்கியது மாறாக எந்தப் புரட்சியும் நிகழவில்லை என்கிறார்.

கம்யூனிச அரசாக இருந்தாலும் முதலாளித்துவ சமூகமாக இருந்தாலும் சோஷயலிச சமூகமாக இருந்தாலும் வேலைப் பகிர்வு இருக்கும்.அதாவது Division of Labour. தொழிற்சாலைகளில் பிரிவுகள் இருந்தே தீரும். அந்த பிரிவுகளுக்கு அதிகாரிகள் தலைமைகள் தேவை. இப்படியான ஒரு பிரிவினை இல்லாமல் எந்த உற்பத்தியும் சாத்தியமில்லை.நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை பெருநகர உற்பத்தி முறைக்கு பொருந்தாது. ஏனேனில் இங்கு உபரியும் அதனாலான விநியோக முறையும் வேறானவை.

உபரியை எப்படி விநியோகிப்பது என்பதில் மட்டும் தான் கம்யூனிச சமூகத்திற்கும் முதலாளித்துவ சமூகத்திற்கும் வேறுபாடு வருகிறது. அதனால் மக்கள் நல அரசு என்பது முதலாளித்துவ அமைப்பிற்கும் சோஷியலிச அமைப்பிற்கும் இடையிலான ஒரு சாத்தியம். முதலாளித்துவ அமைப்பு சுதந்திரத்தை முதன்மையாக கொள்கிறது.இடதுசாரி அமைப்பு சமத்துவத்தை முதன்மையாக பார்க்கிறது. இந்த இரண்டிற்கும் எப்போதும் சீசா போல ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டே இருக்கும்.அதற்கு ஓர் இடைப்புள்ளி மக்கள் நல அரசு.

மார்க்யூஸா முதலாளித்துவ சமூகம் கொடுக்கும் அழுத்தம் மனிதர்கள் மத்தியில் ஓடுக்கப்பட்ட கீழ்நிலையாக்கத்திற்கு (Repressive Desublimation) வழிவகுக்கிறது என்றார். அவர் மார்கஸ் - பிராய்ட் ஆகியோரின் தத்துவங்கள் அடிப்படையில் தொழில் துறையில் முன்னேறிய சமூகங்களை ஆராய்ந்து தனது ஒற்றை பரினாம மனிதன் என்ற நூலை எழுதினார்.என்னை மிகவும் பாதித்த நூல்.அதில் அவர் எப்படி முதலாளித்துவ சமூகம் நமது அனைத்து எதிர் கலாச்சார சொல்லாடல்களையும் தன்னுள் செரித்துக் கொள்கிறது என்றும் மொழி எப்படி நீர்த்துப் போய் புரட்சி சொற்கள் அனைத்தும் வேடிக்கையாக மாறிவிடும் என்று எழுதியிருப்பார்.

நமது வேலை நேரங்களை மட்டும் அல்ல நமது ஓய்வு நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த அமைப்பே பார்த்துக் கொள்ளும் என்று எழுதியிருப்பார். என்னை ஆட்கொண்ட வரிகள். அவர் எரிக் ஃபிராம் பற்றியும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

கிளர்ச்சிகள் போரட்டங்களாக மாறுமா என்று சொல்ல இயலாது. ஐம்பதுகளில் இந்தியாவில் பிறந்தவர்கள் எழுபதுகளில் இடதுசாரி அரசியலில் ஈர்க்கப்பட்டு மனித உரிமை ஆர்வலர்களாக , நக்ஸல்பாரிகளாக, கலைஞர்களாக மாறினார்கள். கே.பாலகோபால் , கீதா ராமசாமி, ஜார்ஜ் ரெட்டி, சாகேத் ராஜன் போன்றோர் அந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் தான். பல அறிவுஜீவிகள் தங்கள் வாழ்வையே இந்தப் போராட்டங்களுக்கு ஒப்புக் கொடுத்தனர்.

அதன் தாக்கம் சினிமா , நாடகம் , இலக்கியம் என்பனவற்றில் தீவிரமாக ஒலித்தது. ஆனால் சட்டென்று எண்பதுகள் , தொண்ணூறுகளில் இந்தியாவில் உருவான தாராளமயமாக்கல் இவற்றை நீர்த்துப் போகச் செய்து ஒரு முதலாளித்துவ சமூகம் உருவானது.

அதன் தாக்கமும் அனைத்திலும் தெரிந்தது.அங்கூர்,ஆக்ரோஷ் போன்ற ஒரு படம் அதன் பின் வரவில்லை. சுகுமாரன் கவிதைகள் இலகுவாகின. அதன் பின் லோக் பால் போன்ற போலியான உள்ளீடற்ற காகித மலர்கள் பூத்துக் கொண்டே இருந்தன.

இப்போது சட்டென்று இரண்டாயிரத்துக்கு பிறகு பிறந்த பிள்ளைகள் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் ஏதேர்ச்சையாக நிகழ்ந்திருக்கிறது.இதை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏன் ஒரு கிளர்ச்சி சாத்தியமாகிறது என்பதை யாரும் வரையறை செய்ய இயலாது.

ஏழுபதுகளிலிருந்த இளைஞர்களுக்கு இருந்த சித்தாந்தப் பற்று இப்போது இருப்பவர்களுக்கு இல்லை. ஆனால் ஹன்னா அரெண்ட் சொல்வது போல எதிர்ப்பு முக்கியம். அதை இவர்கள் செய்திருக்கிறார்கள். சித்தாந்த தெளிவை விட எதையாவது செய்வது மேலானது. மார்க்யூஸா பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொண்டு அடர்னோவை விமர்சனம் செய்ததாக அஜிதன் எழுதியிருக்கிறார்.அவர் அங்கு சுற்றுலா செல்லவில்லை. அவர் யூதர் என்பதால் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது.அடர்னோ காவலர்களை அழைத்தது தவறு தான். அந்த தவறை நாமும் செய்யலாம்.அதனால் அது சரியாகாது. இன்று தமிழில் எழுதும் யாராவது எதற்காகவாவது ஒரு பதாகையையாவது தூக்கியிருப்பாகளா? காஸா குறித்து தமிழ் எழுத்தாளர்களின் எதிர்வினை என்ன.

நாம் எல்லோரும் சாப்பாட்டு டப்பாவை தூக்கிக் கொண்டு ஒன்பதிலிருந்து ஐந்து வரை ஒரு வேலையை செய்கிறோம். ஒரு சமூகத்தில் இளைஞர்கள் அந்தக் காலத்தின் வேலையின்மை , தெளிவின்மை, அரசு வன்முறை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்கின்றனர். புகைந்து கொண்டிருப்பதை விட பற்றி எரிவது மேல் என்ற சுகுமாரன் வரி போல இது சட்டென்று எரிந்து காணாமல் போய் விடும் ஒன்றாக இருக்கக்கூடும். அப்படி பலவும் இருக்கின்றன.

தன்னிடமிருந்து பணத்தை நிலத்தை பறித்துக் கொண்ட நிலப்பிரவுவை பார்த்து அவன் வீட்டின் முன் நின்று ஒப்பாரி வைப்பதால் என்ன பயன் இருக்கும்.ஆனால் ஒப்பாரிகள் சில நேரங்களில் கூட்டத்தை உருவாக்கி அந்த வீட்டின் மீது கல்லை எறிய வைக்கும்.அங்கூரில் வரும் இறுதிக்காட்சி போல.அதனால் ஆத்மாநாம் சொல்வது போல ஏதாவது செய்வது எப்போதும் நல்லது.

இன்றைய இளைஞர்கள் இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்றது போல தெரியவில்லை என்று அஜிதன் எழுதுகிறார்.இடதுசாரி சித்தாந்தம் என்பது பாட்டாளி சர்வாதிகாரம் மட்டுமல்ல.அது நல்ல கல்வி, மருத்துவம் , சுகாதாரம் ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு தரப்பும் தான். இடதுசாரி என்பது அடிப்படையில் எதிர்காலத்தில் பொற்காலத்தை முன்வைக்கும் ஒரு சாத்தியம்.முடிந்தவரை சமுத்துவத்தை சாத்தியப்படுத்த முனையும் ஒரு வாதம்.இடதுசாரிகள் உண்மையில் சுதந்திரத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை. ஆனால் இருத்தலியவாதம் அவர்களிடமும் நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

அஜிதனின் கட்டுரையை படித்த போது நமக்கு ஏன் இந்தக் கிளர்ச்சிகள் அச்சத்தை அளிக்கின்றன என்கிற கேள்வி எனக்கு எழுந்தது. ஆட்சியாளர்களுக்கு எழலாம்.ஏனேனில் அவர்களுக்கு அது இழப்பைத் தரும். ஏன் அறிவுஜீவிகளுக்கு அது பயத்தை எரிச்சலை அளிக்கிறது. அவர்கள் எதை இழக்கிறார்கள்.அவர்களின் மேதாவித்தனத்தை , அவர்களால் அப்படி சாலையில் இறங்கி போராட முடியவில்லை என்ற இயலாமையை, Status Quo வை விரும்பும் ஒரு செளகரியத்தை , இதில் ஏதாவது ஒன்று அவர்களை தொந்தரவு செய்கிறது. அல்லது இந்த எதுவும் இல்லாமல் தங்களால் இதை தொகுத்துக் கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கமாகவும் இருக்கலாம்.


No comments: