இந்தியாவில் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் இளைஞர்கள் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தி வருகிறார்கள். கடந்த மே மாதம் சட்டென்று தொடங்கிய இந்தக் கிளர்ச்சி முன்னகர்ந்து இன்று ஒரு போராட்டத் களமாக மாறி இருக்கிறது. இது திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்பது மிகுந்த வியப்பை அளிக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பல ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. கல்வி , வேலைவாய்ப்பு என்று இளைஞர்கள் இன்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்பு சொல்லும் "Scientific Temper" என்பதை எப்படி முன்னெடுப்பது என்று எண்ணாமல் தொடர்ந்து பிழையான பின்னொக்கிய வெறுப்பை உமிழக்கூடிய பார்வையை மட்டும் கல்வியில் எப்படி புகுத்துவது என்பதைத் தவிர இந்த மத்திய அரசு கல்வியில் எதையும் செய்யவில்லை.உயர்த்தப்பட்ட ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்த இவர்கள் அதுவரை இட ஒதுக்கீடு தகுதியற்றவர்களை உள்ளே கொண்டு வந்து விடுகிறது என்றார்கள். இந்தியாவில் இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் அல்ல சமூக மூலதனத்தை அடிப்படையாக கொண்டது என்பதை கூட அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை.
உலகில் உள்ள அனைத்து வலதுசாரி அமைப்புகளும் கொடுங்கோன்மையை அரங்கேற்றுகிறார்கள்.அது இலங்கையானாலும் , இந்தியாவானாலும் , இஸ்ரேலானாலும் ஒன்று போலவே இருக்கிறது.வலதுசாரிகள் உண்மையில் தனிமனிதர்களாக அடையாளம் அற்றவர்கள். அவர்களின் அடையாளம் அவர்களின் மதத்தில் , ஜாதியில் , இனத்தில் , நிறத்தில் இருக்கிறது.மேலும் அவர்கள் எதிர்காலத்தில் இறந்த காலத்தை தேடிக் கொண்டிருப்பவர்கள்.
நதி முன்னோக்கித்தான் பாயும்.காலம்
முன்பு தான் செல்லும்.எதுவும் கருவறைக்கு திரும்பாது. அது போல உலகம் புதியவற்றை
ஏற்றுத்தான் தீர வேண்டும்.நான் இங்கே இருந்து கொள்கிறேன், இப்படி இருந்து கொள்கிறேன் , அங்கே
பழைய வீட்டுக்கு போகிறேன் என்று செல்ல முடியாது. புதியவை வந்து கொண்டே இருக்கும்.
அமெரிக்காவில் யாரையும் குடிபெயர அனுமதிக்காவிட்டால் காலப்போக்கில் அங்கு
இருக்கும் கல்லூரிகள் காலியாகும். லிபர்டி அது தான் அமெரிக்கா.அதனால் தான்
அமெரிக்கா. காட்பாதர் படத்தில் அந்தச் சிறுவன் முதல் முதலாக இத்தாலியிலிருந்து
கப்பலில் அமெரிக்கா வரும் போது அந்த சுதந்திர தேவி சிலையைத்தான்
பார்க்கிறான்.அதைத் தடுத்தால் பின்னர் அமெரிக்கா அடுத்த ஐம்பது ஆண்டுகளில்
இங்கிலாந்து போலாகிவிடும்.
இந்தியா பன்முகம் கொண்ட நாடு.இது
வலதுசாரிகளுக்கு ஒரு போதும் புரியாது.மனித உரிமைகள் , தனி மனித சுதந்திரம் என்று இருபதாம் நூற்றாண்டு
கொண்டு வந்த எந்தக் கோட்பாட்டையும் அவர்கள் அறிய மாட்டர்கள்.அதிகாரம் - அதை அடைய
தேசத்தையும் கடவுளையும் இணைக்கும் ஒரு கருத்தியல் , அந்தக்
கருத்தியலை கொண்டு செல்ல ஒரு எதிர்த் தரப்பு.
எப்போதும் வலதுசாரிகளுக்கு எண்ணிக்கை
முக்கியம்.அவன் உங்களை முந்திக் கொள்ளப் போகிறான்.அவன் உங்கள் வீட்டுப் பெண்ணை
திருமணம் செய்து கொள்வான்.அவன் உங்கள் வேலையை பறித்துக் கொள்வான்.அவன் தனது கடவுளை
உங்களை வணங்கச் செய்வான். இதைத் தவிர வலதுசாரிகள் வேறு எதைச் சொல்லிவிட முடியும்.
மனிதனின் அடிப்படை விசை அச்சமும்
வெறுப்பும். மனிதன் எந்தக் காரணமும் இல்லாமல் இன்னொரு மனிதன் மீது வெறுப்பை
உமிழ்பவன்.மனிதன் அடிப்படையில் அச்சம் கொள்பவன்.இரவு , இருட்டு , புதியது , புதியவர்கள் எதுவுமே அவனுக்கு பயத்தை மட்டுமே தருகிறது. இந்த இரண்டையும்
பயன்படுத்திக் கொள்வது தான் வலதுசாரி அரசியல்.
இடது என்பது அச்சத்தையும்
வெறுப்பையும் துறந்து சகோதரத்துவத்தை முன்மொழிவது. உண்மையில் இடதுசாரி அரசியல் ஒரு
கிளர்ச்சி போல சட்டென்று வளர்ந்து பின்னர் காணாமல் போகும் தன்மை கொண்டது. ஏனேனில்
மனிதர்களால் எப்போதும் உயர்நிலையில் இருக்க முடியாது. அதுவும் மனித இயல்பு தான்
என்றாலும் உயர்நிலை.
இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்
கொண்டு வந்திருக்கும் இந்த கிளர்ச்சி போராட்டமாக மாறி இந்த அரசுக்கு எதிரான
மிகப்பெரியத் தரப்பாக உருவெடுக்கும் என்று நான் எண்ணுகிறேன். இவர்கள் ஆட்சிக்கு
வருவார்கள் என்று சொல்ல முடியாது.ஆனால் இவர்கள் வழி மாற்றம் வரும். இந்தியா ஒரு
குழப்பமான காலத்திற்கு பிறகு நிலையான ஆட்சியை அடையும். அது காங்கிரஸாகவும்
இருக்கலாம் அல்லது கூட்டணியாகவும் இருக்கலாம்.
அன்னா ஹசாரே லோக் பால் வேண்டும் என்று
போராட்டம் நடத்தி பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு கொண்டு வந்தார்.எல்லா அரசுகளும் கொடும்
அடுக்குமுறைகளை ஏவும் என்கிற ஜெயமோகன் அப்போது ஏன் அன்னா ஹசாரேவின் போராட்டம்
அப்படி ஒடுக்கப்படவில்லை என்று சொல்லவில்லை.அன்னா ஹசாரே தகவல் அறியும்
சட்டத்திற்காகவும் போராடினார் என்று அவர் வழி அறிந்து கொள்ள முடிந்தது!
ஏதாவது செய் என்று சொல்கிறார்
ஆத்மாநாம்.இளைஞர்கள் உண்மையில் எதையோ செய்துவிட்டார்கள். மகிழ்ச்சி. அவர்களுக்கு
எதிரான கடுமையான அடுக்குமுறைகளை மீறி அவர்கள் கிளர்தெழுவது உண்மையில் வியப்பையே
அளிக்கிறது.ஏனேனில் இந்த அரசு எதையும் செய்யும் என்பதை அனைவரும் அறிவர். பத்திரிக்கையாளர்கள்
, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்
தாங்கள் பதிவு செய்தவற்றை நீக்கிய பிறகே விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் போராட்டம் எந்த சித்தாந்த
அடிப்படையும் இல்லாத ஒரு கிளர்ச்சி தான்.ஆனால் அவை முக்கியம்.ஹன்னா அரெண்ட் தன்
புத்தகம் ஒன்றில் யூதர்கள் ஆட்டு மந்தைகள் போல ரயில்களில் ஏறாமல் தங்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக திரண்டிருந்தால் கத்தியிருந்தால் சண்டை
போட்டிருந்தால் அவர்கள் இந்தளவு மடிந்திருக்க மாட்டார்கள் என்றார். ஆல்பர் காம்யூ
சொல்வது போல மனிதனுக்கு எப்போதும் செய்வதற்கு ஒரு தேர்வு இருக்கிறது.ஒன்று
ஏற்றுக்கொள் அல்லது சண்டையிடு.அதனால் நீ அழிந்து போகலாம்.சிதைந்து போகலாம்.ஆனால்
அது தேர்வை இல்லாமல் செய்வதில்லை.
காந்தி உப்பின் வழி மக்களை சென்றடைய
முடியும் என்று அறிந்து கொண்டது போல இந்த இளைஞர்கள் இன்றைய முக்கிய பிரச்சனைகளான
நீட், எஸ்ஐஆர் போன்றவற்றை தேர்வு செய்து எதிர்த்தரப்பு
எந்தக் கதையாடலையும் முன்னெடுக்க முடியாத வகையில் இந்தப் போராடத்தை கொண்டு
செல்கிறாரகள்.
எப்போதும் போராட்டத்திற்கு எளிய ஆனால்
அனைவரையும் பாதிக்கும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.அதை இவர்கள் சரியாக
செய்கிறார்கள்.இவர்கள் வெற்றி பெற வேண்டும்.
தமிழகத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள திமுக முயலக்கூடும் என்று தோன்றுகிறது. இன்று காங்கிரஸ் திமுகவிடமிருந்து விலகி உள்ள நிலையில் பாஜகவுடன் இணைந்து செயல்படுவதில் உள்ள தவிப்பு நிலையில் இந்த புதிய மாற்றம் திமுகவினருக்கு ஒரு சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.
நேகா போரா சிபிஎம் (எம்எல்) கட்சியின்
மாணவர் அணித் தலைவர். சிபிஐயும் சிபிஎம்மும் இந்தப் போராட்டத்தில் தங்களை
முழுமையாக இணைத்துக்கொண்டுள்ளனர்.கஜக இன்னும் ஒரு அரசியல் அணியாக திரளவில்லை
என்றாலும் அவர்கள் தொடர்ந்து எஸ்ஐஆரால் தான் ஸ்டாலின் , மம்தா தோற்றனர் என்று சொல்லி வருகிறார்கள்.
தமிழகத்தில் தவெக இன்னும் ஐந்து
ஆண்டுகள் நீடிக்குமா என்று தெரியவில்லை. அவர்களின் தலைவருக்கும் ஒன்றும்
தெரியவில்லை. ஊழல் அது இது என்றார்கள் இறுதியில் அவர்களால் சரியான நிர்வாகத்தைக்
கூட அளிக்க இயலவில்லை என்பது தெரிந்துவிட்டது. அவர்கள் எதையும் கற்கப் போவதில்லை.
இடதுசாரிகள் அவர்களுக்கு ஆதரவு தந்ததால்
தான் விஜயால் ஆட்சிக்கு வர முடிந்தது.அவர்கள் இடைத் தேர்தலில் எதிர்த்து
நிற்கின்றனர் என்கிற போது அவர்களை அழைத்து அவர்களின் குறைகள் என்ன என்று கூட
கேட்கத் திராணியற்ற ஒரு தலைமைத்தான் இன்று இருக்கிறது.இவர்கள் எதையாவது
செய்வார்கள் என்று எண்ணுவது மடமை. மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை
குறைந்துவிட்டது என்பதற்கு இந்த இடைத்தேர்தலே சாட்சி.ஆம் ஆத்மி அளவுக்குக் கூட
தவெக நிலைக்காது.
இந்த நிலையில் காங்கிரஸ் மறுபடியும்
வருங்காலத்தில் திமுகவிற்கு போகுமா என்று தெரியவில்லை. ஆனால் திமுக கஜக , இடதுசாரிகளுடன் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்க
முயலக்கூடும். காங்கிரஸ் இப்போது வரை காஜகாவை எப்படி கையாள்வது என்று தெரியாமல்
குழம்பி வருகின்றனர்.
ஒரு வேளை சாமர்த்தியமாக காங்கிரஸ்
கஜகவை தங்களுடன் இணைத்துக் கொண்டால் காங்கிரஸ் தன் அடையாளத்தை தக்க வைக்கும் அதே
வேளையில் தனித்து விடப்படாமல் இருக்கவும் கூடும்.
எது எப்படி இருந்தாலும் தவெக
தமிழகத்தில் காணாமல் போகும்.மத்தியில் 2029யில் ஆட்சி மாற்றம் வரும். இது நிச்சயம் நிகழும்.
No comments:
Post a Comment