சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்
- கெளதம் இயக்கியுள்ள திரைப்படத்தை பார்த்தேன்.அவரது முதல் புனைவுத் திரைப்படம்.
பெர்லின் உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது.
கெளதம் பழனிக்கு நடந்தே செல்லும்
நகரத்தார் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்திருப்பார். அது தமிழின் ஒரு பண்பாடு என்றால்
இந்த சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள் திரைப்படம் மற்றொரு பண்பாடுத்தளம்.
நாம் நமது மாலைகளில் என்ன
செய்கிறோம்.அல்லது நமது ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறோம். தொலைக்காட்சி
பார்க்கலாம், தூங்கலாம், மொபலை நோண்டலாம், நண்பர்களுடன் பேசலாம், காதலியுடன் குதூகலிக்கலாம்,உடற்பயிற்சி செய்யலாம்,
மனைவி மக்களுடன் இருக்கலாம்.ஆனால் பெரும்பாலும் இன்று நீக்கமற
பெரும்பாலும் அனைவரும் செய்வது குடிப்பது.மாலைகள் குடிப்பதற்கானவை என்ற பொதுமறை
உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படம் சென்னையின் புறநகரான
செங்குன்றத்திலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் நடக்கிறது. சென்னையின் வெம்மையும்
வெக்கையும் இந்தப் படத்தில் நன்கு பதிவாகியுள்ளது. சென்னை என்றாலும் கிட்டத்தட்ட
ஒரு சிறுநகரத்தை பார்ப்பது போன்ற காட்சியமைப்புகள் தான் நிறைய இருக்கின்றன.
சென்னையே பல சிறுநகரங்களின் தொகை தான் என்று எனக்குத் தோன்றும். சென்னையின்
மையச்சாலைகளை விடுத்து உள்ளே சென்றால் நிறைய இடங்கள் சிறுநகரங்கள் தான்.
இப்படத்தின் தலைப்பு சொல்வது போல இது
ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றியது.அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள்
சிக்கலானவர்கள்.அவர்களின் சிக்கல் என்ன. அதை தீவிரமாக பேசுகிறது இத்திரைப்படம்.
மனிதர்கள் சமூக விலங்குகள்
என்கிறோம்.நமக்கு சமூக ஒப்பந்தம் இருக்கிறது என்கிறோம்.ஆனால் மனிதர்கள்
தனியானவர்களும் தான். தமிழகம் பொருளாதாரத் தளத்தில் வளர்ந்திருக்கிறது தான். நிறைய
குடும்பங்கள் தன்னிறைவு அடைந்திருக்கின்றன. ஆனால் நமது அன்றாடம் என்ன.அந்த தன்னிறைவு
அடைந்த குடும்பம் தனது நாளை ஆக்கப்பூர்வமாக அந்த உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக
இருக்கும் வகையில் கழிக்கிறதா.இல்லை.
நாம் பெரிய பெரிய தத்துவங்களை
பேசலாம். ஆனால் நமது தினசரி எப்படி இருக்கிறது என்பது தான் நாம். இத் திரைப்படம்
நமது அன்றாடத்திற்குள் செல்கிறது. ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் தனித்து
தங்களுக்குள் சுருண்டு கிடக்கிறார்கள்.ஆண்கள் அனைவரும் குடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.ஒருவரை
ஒருவரை அவமானப்படுத்திக் கொள்கிறார்கள்.காயப்படுத்திக் கொள்கிறார்கள்.தொந்தரவு
செய்தபடியே இருக்கிறார்கள். தங்களையே சீரழித்துக்கொள்கிறார்கள்.பெண்களும்
தனித்துதான் இருக்கிறார்கள்.
யாரும் யாருடனும் மனம் விட்டு
மகிழ்ச்சியாக பேசுவதில்லை.யாருக்கோ எதையோ நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம்
அனைவருக்கும் இருக்கிறது.ஆனால் அந்த யாரோ யார் என்பது கூட யாருக்கும் நிச்சயம்
தெரியாது. அந்த அன்றாடத்தின் வெறுமையை கொண்டாட்டமின்மை பெரிதாக்குகிறது. அது
குடியை நோக்கி செலுத்துகிறது. குறிக்கோள்கள் இல்லாமல் ஆகின்றன.அல்லது
ஒத்திப்போடப்படுகின்றன.மேலும் மேலும் சிக்கலான ஒரு வாழ்க்கையாக அனைத்தும்
மாறிவிடுகிறது.
இத் திரைப்படத்தில் ஒருவர் நாயுடன்
தூங்குவார். வீட்டின் சமையலறையில் இருக்கும் சிங்கில் சிறுநீர் கழிப்பார்.மிகத்
தீவிரமான காட்சிகள். ஒருவன் இறந்து விடுகிறான்.இளைஞன்.ஆனால் யாராலும் அழ
முடியவில்லை. அத்தனை நிம்மதியை அந்த மரணம் அவர்களுக்கு தருகிறது.பிணம் செல்லும்
பாதை , பூக்கள் போல சொற்கள் என்ற ந.ஜெயபாஸ்கரின் வரி ஒன்று
உண்டு.அது போல இறந்து போனப்பின் அவனைப் பற்றி நிறைய சொற்கள்.அதில் உண்மை இல்லாமல்
இல்லை.அதே நேரத்தில் யாருக்கும் யாரிடமும் அக்கறை செலுத்தவும் நேரம் இல்லை.அவன்
திரும்ப வந்தால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு ஆவணப்படத்தின் முறைமையில்
எடுக்கப்பட்ட முழு நீளத் திரைப்படம்.ஆவணப்பட முறைமை சில சலுகைகளை அளிக்கின்றன.ஒரே
சீரான கோர்வையில் ஒரு காட்சியை எடுத்துவிடலாம்.சீக்கிரம் எடுக்க முடியும்.மேலும்
அது யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான ஒரு வடிவமாகவும் இருக்கிறது.
மரணம் அதையொட்டிய சடங்குகள் பதினாறாம்
நாள் காரியம் என்று திரைப்படம் முழுக்க அதைச்சுற்றித் தான்.மானுடவியல் விவரணைப்
போல, இமையத்தின் கோவேறு கழுதைகளின் வருவது போல, சடங்குகள் மிக நுணுக்கமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளன.ஆனால் சடங்குகள்
சடங்காகவே செய்யப்படுகின்றன.
இந்தத் திரைப்படத்தை பார்த்து
முடித்தபின்னர் இது தானே இன்றைய தமிழ் பண்பாடு,தமிழரின்
தினசரிப் பண்பாடு என்று தோன்றியது.மனிதன் ரொட்டித் துண்டால் வாழ்வதில்லை.ரொட்டித்
துண்டு இல்லாமலும் வாழ்வதில்லை. அவனுக்கு அதுவும் வேண்டும்.அதற்கு அப்பால் வேறு
ஒன்று வேண்டும். அது அவனது மனதில் சலனமற்று சுயமதிப்புடன் அமர்ந்திருக்கும் அவனது
பிம்பம்.அந்தப் பிம்பம் அப்படி இருப்பதற்கு மனிதனுக்கு ரொட்டித் துண்டுகள்
போதுமானதில்லை. அதை கலைகள், இலக்கியங்கள், சுற்றியுள்ள மனிதர்கள், கொண்டாட்ட வெளிகள், ஆன்மிகம், சாதி, சடங்குகள்,
உழைப்பு கொடுக்கும் மகிழ்ச்சி,சமூக மதிப்பு
என்று பல ஈடு செய்கின்றன.
எம்.டி.வாசுதேவன் நாயரின் நிர்மால்யம்
திரைப்படத்தில் தான் பொதிந்து வைத்திருந்த தன் வாழ்க்கை பிம்பம் உடைந்து போகும்
போது அந்த மனிதரும் கடவுளை உமிழ்ந்து இறந்து விடுகிறார். அந்த கையறுநிலை தான்
இந்தப் படத்திலும் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. ஒரு குடும்பத்து மனிதர்களின்
கையறுநிலை கடனால் , இழப்பால் , அவமானத்தால் மட்டும் வருவதில்லை.அது இன்மையாலும் வருகிறது.அந்த இன்மையை
தீவிரமாக சொல்லியுள்ள திரைப்படம் சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்.நம் வாழ்வை
நிரப்பியிருக்கும் இன்மை.
இந்திய அளவில் கரடான திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.ஜான்
ஆப்ரஹாம் அப்படியான சினிமாக்களை இயக்கியிருக்கிறார்.ஆனால் சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்
திரைப்படம் போன்ற ஒரு கரட்டு வடிவம் (As
Raw as possible) இதற்கு முன்னர் இந்திய அளவில் எடுக்கப்பட்டிருக்கிறதா
என்று எனக்குத் தெரியவில்லை.
தமிழ் வாழ்க்கை தமிழனின் வாழ்க்கை
திரைப்படமாக மாறியிருக்கிறது. கெளதமுக்கும் அவரது குழுவினருக்கும்
வாழ்த்துகள்.இதில் ஒரு கனவுக் காட்சி வருகிறது.அது மிகவும் நன்றாக
வந்திருக்கிறது.மிகத் தீவிரமான திரைப்படம்.கடினமானதும் கூட.எடுப்பதற்கும் , பார்ப்பதற்கும்.

No comments:
Post a Comment