ஒடுக்கப்படுபவர்கள் வன்முறையை தங்கள் போராட்ட முறையாக கொள்ளக்கூடாது என்று நம்மில் பலர் சொல்கிறோம்.ஏனேனில் வன்முறையை வெளிப்படுத்தும் போது அரசு பிரச்சனையை விட்டுவிட்டு வன்முறையை வன்முறை கொண்டு ஒடுக்க முனைகிறது.ஒடுக்கப்படுபவர்கள் மேலும் ஒடுக்கப்பட வேண்டியவர்களே என்ற எண்ணத்தை மைய சமூகத்தில் அந்த வன்முறை உருவாக்குகிறது.மூன்றாவதாக வன்முறை இருப்பவற்றையும் பறித்துக்கொள்ளும் அபாயத்தை கொண்டிருக்கிறது.மேலும் பொருள் தேசங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.அந்த வடிவத்தின் மூலம் எதை அடைய விரும்புகிறோமோ அது இறுதியில் கிடைக்காமலே போகிறது.இந்தக் காரணங்களால் வன்முறை கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.
பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் சுதந்திரம், சகோதரத்துவம் , சமத்துவம் முக்கிய விழுமியங்களாக மாறின.சமத்துவம் வேண்டும் என்றால் மன்னராட்சி கூடாது.நாடுகள் மெல்ல மன்னராட்சியிலிருந்து ஜனநாயகத்தை நோக்கி பயணித்தன.ஜனநாயக சமூகங்கள் தனிமனிதனை அலகாக கொண்டவை.தனிமனிதனின் சுதந்திரம் ஜனநாயகத்தில் முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது.இந்திய அரசியலமைப்பின் பல ஷரத்துகள் தனிமனிதனுக்கானவை.உண்மையில் தனிமனிதன் முதலாளித்துவ சமூகங்களில் தான் பிறந்தான்.அந்த தனிமனிதனுக்கு ஒரு கோட்பாட்டை உருவாக்கியது இருத்தலியம். நிலபிரபுத்துவ சமூகத்தில் தனிமனிதன் இல்லை.அதற்கு முந்தைய உற்பத்தி முறைகளில் குழுக்கள் மட்டுமே இருந்தனர்.
வரலாற்றில் தனிமனிதன் மிகச் சமீபத்தில் பிறந்தவன்.முதலாளித்துவம் மனிதனின் வேட்கையை முதன்மையாக கொண்டது.மற்றமை பற்றிய அக்கறை இல்லாமல் முன்னேறுவதற்கான உந்துதலை அளிக்கும் அமைப்பு முதலாளித்துவம்.மனிதர்கள் அனைவரும் சமம் என்று இந்திய அரசியலமைப்பின் 15வது ஷரத்து சொல்கிறது.ஷரத்து 19 சுதந்திரத்தை பற்றி பேசுகிறது.சுதந்திரம் என்பது விடுதலையை மட்டும் குறிக்கவில்லை.அது இரு தளங்களில் பயணிக்கிறது.ஒன்று ஒரு பிரஜை இந்த நாட்டில் வாழ்வதற்கான சுதந்திரம்.அவன் தான் விரும்பும் மதத்தை பின்பற்றலாம், உரைக்கலாம், எழுதலாம், ஆட்சியாளர்களை தேர்தெடுக்கலாம்.இரண்டாவது பொருள் உற்பத்திக்கான சுதந்திரம்.ஜனநாயக சமூகத்தில் தனிமனிதன் தொழில் தொடங்கலாம், விரிவாக்கலாம், சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கலாம்.அரசு அதை தடுக்காது.மாறாக அதற்கு உதவும்,அதற்கான சட்டப் பாதுகாப்புகளை அளிக்கும்.இதுதான் இந்தியாவில் தாராளவாதம் என்ற பொருளில் தொண்ணூறுகளுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கை.அதற்கு முன்னர் அரசின் தலையீடு இருந்தது.எவ்வித தலையீடும் இல்லாமல் ஆகும் போது அது முழு லிபரல் சமூகமாக பார்க்கப்படுகிறது.
ஒரு பக்கம் நாம் சமத்துவத்தை பற்றி பேசுகிறோம்.மற்றொரு புறம் சுதந்திரம்(பொருள் உற்பத்திக்கான சுதந்திரம்) பற்றி பேசுகிறோம்.ஆனால் சமத்துவமும் சுதந்திரமும் ஒரு சீசா போல மேல் கீழ் என்று தான் இருக்க முடியும்.சமத்துவம் மேலே இருந்தால் சுதந்திரம் கீழே இருக்கும்.சுதந்திரம் மேலே இருந்தால் சமத்துவம் கீழே இருக்கும்.டார்வினின் கோட்பாட்டை இன்று நாம் சமூகத்தில் பொருத்திப் பார்க்கிறோம்.தனிமனிதர்கள் சுதந்திரமானவர்கள்.அவர்கள் தங்களுக்கான பாதைகளை வகுத்துக்கொள்ள இயலும்.முழுமையான சுதந்திரம் அவர்களுக்கு உண்டு.அவர்களுக்கு முழு சுதந்திரம் இருப்பதால் அவர்களின் செயல்களுக்கு அவர்களே பொறுப்பு.இவை இருத்தலியவாதத்தின் கோட்பாடுகள் போல் தோன்றினாலும் முதலாளித்துவமும் இதைத்தான் வலியுறுத்துகிறது.
டார்வினின் உயிரியல் தளத்திலான கோட்பாட்டை சமூகவியல்
தளத்தில் பொருத்துவது சரியான அணுகுமுறை அல்ல.தக்கன பிழைக்கும் என்பது உயிரினங்களின்
தோற்றம் என்ற தளத்தில் மட்டுமே பொருத்திப் பார்க்க வேண்டிய கோட்பாடு.தனிமனிதன் தன்
முழுத் திறமையையும் ஆற்றலையும் கொண்டு போராடினாலும் அவன் எந்த சட்டகத்தின் உள் இருக்கிறானோ
அந்த சட்டகத்தை மீறி அவனுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை.அமெரிக்காவில் பேஸ்புக்,
டெஸ்லா, கூகிள் போன்ற நிறுவனங்கள் இத்தனை தூரம் வளர்ந்ததற்கு அவர்கள் திறமையானவர்கள்
என்பது மட்டும் காரணம் அல்ல.அவர்கள் இருந்த அமைப்பு அவர்களுக்கான உத்வேகத்தையும் உதவியையும்
அளித்தது.மார்கஸ் தனிச்சொத்து,பொருள் தான் ஒரு சமூகத்தில் அதிகாரத்தை நிர்ணயம் செய்யக்கூடியதாக
இருக்கிறது என்று கூறினார்.சமூகவியலாளர் மாக்ஸ் வேபர் அதற்கு மாறாக மூன்று விஷயங்களை
குறிப்பிடுகிறார்.அவை சமூக படிநிலை,அரசியல் சமூக அதிகாரம்,தனிச் சொத்து.இவை மூன்றும்
இணைந்துதான் அவர்களின் அதிகாரத்தை நிர்ணயிக்கிறது என்றார்.ஆனந்த் டெல்டும்டே இதைப்பற்றி சாதியின் குடியரசு(Republic of Caste) என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.
இந்தியாவில் தமிழகத்தில் பிராமணர்கள் மற்றும் மற்ற உயர்த்தப்பட்ட சாதியினர் சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதற்கு தனிச்சொத்து மட்டும் காரணம் அல்ல.அதற்கு அப்பால் சமூக அதிகாரமும் , சமூக படிநிலையும் காரணங்களாக இருக்கின்றன.இத்தகைய சூழலில் தான் நாம் சமத்துவத்தை பற்றி பேசுகிறோம்.சமத்துவத்தை உருவாக்க தனிச்சொத்து , சமூக படிநிலைகள், சமூக அதிகாரம் ஆகியவற்றில் சமநிலையை கொண்டு வர வேண்டும்.ஆனால் நாம் பொருள் உற்பத்திக்கான முழு சுதந்திரத்தை அளிக்கும் போது ஏற்கனவே இருக்கும் சட்டகத்தின் வழி சமூக படிநிலையில் முன்னே இருப்பவர்கள் மேலும் உயர்ந்த நிலைக்கு செல்வர்.சமூக படிநிலையில் கீழே இருப்பவர்களுக்கு எத்தனை திறமையும் ஆற்றலும் இருந்தாலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.அப்படியென்றால் சமத்துவத்திற்கு மாறாக சமத்துவமின்மை அதிகரிக்கும்.
அதிகார அமைப்புகள் அணைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மென்மேலும் சமத்துவமின்மையை பெருக்கும்.இவை ஒடுக்கப்பட்டவர்களை இன்னும் அதிகமாக ஒடுக்கும் இடத்திற்குத்தான் ஈட்டுச்செல்லும்.அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த இயலாதவாறு அவற்றை தொடுவானம் ஆக்கும்.இருக்கும் ஆனால் உண்ண இயலாது.இத்தகைய ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒருவர் தன் எதிர்ப்பை எப்படி காண்பிப்பது. தங்களுக்கு படிப்பில் , வேலையில், தொழில்துறையில் சலுகைகள் அளிக்க கோரலாம்.எப்படி கோருவது.கோரிக்கையின் வடிவம் என்னவாக இருக்க வேண்டும்.அந்த வடிவத்தையும் அதிகார நிலைகளே முடிவு செய்து விடுகின்றன.
சுதந்திரம், சமத்துவம் போல சகோதரத்துவமும் நம் அரசியலமைப்பின் தோற்றுவாயில் இருக்கிறது. சமத்துவமும் , சுதந்திரமும் அரசு அளிக்க வேண்டியது.சகோதரத்துவம் யார் அளிக்க வேண்டும்.அரசு மட்டும் சகோதரத்துவத்தை அளிக்க இயலாது.அது ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு தனிமனிதனும் ஏற்றக்கொள்ள வேண்டிய ஒரு விழுமியம்.உனக்கு எது அளிக்கப்படக் கூடாது என்று கருதுகிறாயோ அதை உன் அண்டை வீட்டுக்காரனுக்கும் அளிக்காதே என்பது தான் சகோதரத்துவம்.இதைப்பற்றி முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹிமீத் அன்சாரி சமீபத்தில் ஒரு கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார்.சகோரத்துவத்தை வழக்கமான பண்பாட்டு விஷயமாக மாற்றுவதில் அரசுக்கும் பிரஜைகளுக்கும் பங்கு இருக்கிறது.
சமத்துவத்தை வலியுறுத்த ஒடுக்கப்படுபவர்கள் கோரிக்கை வடிவத்தை உருவாக்க வேண்டிய இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.இங்கு தான் அதிகார படிநிலையில் முன்னே இருப்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்களைப் பார்த்து சில விஷயங்களை சொல்லத் தொடங்குகிறார்கள்.அவை நீங்கள் முயன்றால் முன்னேற முடியும்.அதற்கான வழிகள் உங்கள் முன் இருக்கின்றன.மாற்றங்கள் மெல்ல வரும் , அது வரை பொறுத்திருங்கள் என்ற உபதேசங்கள்.உங்களை போல ஒடுக்கப்படுபவர்கள் எத்தனை பேர் படித்து நல்ல வேலையில் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் , அவர்கள் எப்படி முன்னேறினார்கள் , உங்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்ற ஒப்புமைவாதம்.நிலப்பிரபுத்துவ சமூகத்தில் விவசாயம் போன்ற வேலைகளை செய்ய இதுபோன்ற படிநிலைகள் தேவைப்பட்டன.அதனால் அப்படியான இறுக்கமான அமைப்புகள் இருந்தன என்று ஒடுக்கப்பட்டவர்களின் துயரத்தை வரலாற்று பொருள் முதல் வாதத்தில் வைத்து நீர்த்துப் போகச் செய்யும் தர்க்கம்.இப்படி ஒடுக்கப்படுபவர்கள் மேல் பல குப்பைவாதங்களை கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அரசியலமைப்பு தரும் உரிமையை பெற போராட வேண்டியிருக்கிறது.புதிய உரிமைகளை பெறுவதற்கு அல்ல, இருக்கும் உரிமைகளை பெறுவதற்கு.நீதித்துறை,பாராளுமன்றம்,அதிகார அமைப்பு ஆகிய அமைப்புகளை நோக்கித்தான் ஒடுக்கப்படுபவர்கள் தங்கள் கோரிக்கைகளுடன் செல்கிறார்கள்.ஆனால் ஒடுக்கப்படுபவர்கள் கேட்கும் உரிமை இந்த அமைப்புகள் தரவில்லை என்றால் என்ன செய்வது.ஒடுக்கப்படுபவர்கள் நேரடியாக இந்த அமைப்புகளை நெருங்க இயலவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது.போராட்டங்களில் ஈடுபடலாம்.இந்திய அரசியலமைப்பு போராட்டங்கள் நடத்துவதை தடை செய்யவில்லை.எத்தகைய போரட்டங்களில் ஈடுபடலாம்.கூட்டங்கள் நடத்தலாம்.பேரணி செல்லலாம்.முகாம்களை உருவாக்கி அங்கு தங்கி போராடலாம்.உண்ணாவிரதம் இருக்கலாம்.விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யலாம்.ஆனால் அரசாங்கங்கள் இவற்றை கண்டு கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது.நீதிமன்றம் செல்லலாம்.வழக்குகள் தொடுக்கலாம்.ஆனால் வழக்கு என்பது இரு தரப்புகளுக்கு இடையிலான வாத பிரதிவாதங்களை கேட்டு பாரபட்சம் எதுவும் இல்லாமல் ஒரு நீதிபதி சொல்லும் தீர்ப்பு.நீதிமன்றத்தில் நடக்கும் வாதங்கள் , நீதிபதியின் சமூக அக்கறை , ஆவணங்கள் , சாட்சிகள் ஆகியவற்றைக் கொண்டு தான் தீர்ப்புகள் வழங்க முடியும்.எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நல்ல வழக்கறிஞர்களும் , ஆவணங்களும், சாட்சிகளும் , பாரபட்சமற்ற நீதிபதிகளும் கிடைப்பார்கள் என்று சொல்ல இயலாது.அதிகார அமைப்பில் ஒரு கோப்பை ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு நகர்த்தவே பிரயத்தனங்கள் தேவைப்படுகின்றன.முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் உச்சநீதிமன்றத்தில் முப்பத்தி நான்கு நீதிபதிகள் இருக்கிறார்கள்.அவர்கள் முப்பத்தி நான்கு உச்சநீதிமன்றங்களுக்குச் சமமானவர்கள் என்று கூறியிருக்கிறார்.
ஒடுக்கப்படுபவர்கள் எதற்காக போராடுகிறார்கள்.நல்ல தண்ணீர், இருப்பிடம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, படிப்பு , நில உரிமைகள், ஊதிய உயர்வு,சுயமரியாதை,தன்மதிப்பு, உண்ணும் உணவை தேர்வதற்கான உரிமை , தங்கள் சடங்குகளை நம்பிக்கைகளை தொடர்வதற்கான உரிமை, சமூக உரிமைகள் ஆகியவற்றிற்காகவே பெரும்பாலும் போராடுகிறார்கள்.சுதந்திரம் உரிமையாக கொள்ளப்படும் சமூகத்தில் தனிச்சொத்தை அரசு கட்டுப்படுத்துவதில்லை.எவரும் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்காகவும் பேரக்குழந்தைகளுக்காகவும் குருதிவழித் தோன்றலுக்காகவும் எவ்வளவு இயலுமோ அவ்வளவு சேர்த்து வைக்கலாம்.தொழில்துறைக்கு லிபரல் அரசுகள் எந்தத் தடையையும் விதிப்பதில்லை.விதக்கப்படும் தடைகளும் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன.இப்படியான சூழலில் தான் ஒடுக்கப்படுபவர்கள் அமைப்பாக திரண்டு தங்களுக்கு அதே அரசியலமைப்பு அளிக்கும் உரிமைகளை கோர வேண்டும்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் தொழில் துறைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவது சமூகத்திற்கு நல்லதல்ல.உலக அளவில் கூட தொழில் துறை தனிச்சொத்து ஆகியவை அரசுகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.தனியார் தொழில் நிறுவனங்களுக்கு நாடுகள், பிராந்தியங்கள் , மனித வளம், சுற்றுச்சூழல், நில வளம் ஆகியவை முக்கியமில்லை.லாபம்.காலாண்டு தோறும் அவர்களின் லாபம் அதிகரிக்க வேண்டும்.தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்கள் மகிழ்ச்சியும் லாபமும் அடைய வேண்டும்.தொழில் துறை மேலும் விஸ்தரிக்க வேண்டும்.இவற்றிக்கு அப்பால் தொழில் நிறுவனங்களுக்கு எதன் மீதும் யார் மீதும் அக்கறை இல்லை.அதை ஒரு தனிமனிதன் நிர்விக்கலாம்.அவர் நல்ல மனிதாபிமானியாக கூட இருக்கலாம்.ஆனால் அவர் சார்ந்திருக்கும் அமைப்பு வளர்ச்சியைத் தவிர வேறு எதையும் கணக்கில் கொண்டு செயல் பட இயலாது.
இத்தகைய தனியார் தொழில் நிறுவனங்கள் , அதிகார அமைப்பு, அரசியல் அமைப்பு , நீதித்துறை, இவர்களின் ஊடகம் ஆகியவற்றிற்கு மத்தியில் தான் ஒடுக்கப்படுபவர்கள் வாழ வேண்டும்,போராட வேண்டும், முன்னேற வேண்டும்.ஆனால் அவர்கள் தங்கள் போராட்டங்களில் எந்த கசப்பையும் வெளிப்படுத்தக்கூடாது, வன்முறையை தூண்டும் பேச்சும் மூச்சும் இருக்கக்கூடாது.அவர்கள் மறுதரப்பை புரிந்து கொள்ள வேண்டும்.அதன் வரலாற்று அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் கலைகள் எந்த வகையிலும் வன்முறையை ஆதரிக்கக்கூடாது,பரிந்து பேசக்கூடாது.அவர்கள் மெல்லிய மனச்சோர்வுடன் கவலையுடன் ஆனால் இன்முகத்துடன் தங்கள் கவலைகளை ,தேவைகளை சொல்ல வேண்டும்.ஒரு போதும் அதிகார வர்க்கத்தை புண்படுத்தும் எதையும் அவர்கள் செய்யக்கூடாது.இன்று ஒடுக்கப்படுபவர்கள் தாங்கள் ஒரு காலத்தில் இப்படி இருக்கவில்லை என்ற கதையாடலை உருவாக்கினால் அதை அதிகார அமைப்பு கேலி செய்யும்.நீங்கள் இப்போது மட்டும் அல்ல எப்போதும் இப்படித்தான் இருந்தீர்கள் என்பதே அந்தக் கேலிக்கு பின்னால் உள்ள வக்கிரம்.மாறாக அதிகார அமைப்பை இரக்கம் கொள்ளச் செய்யலாம்.அவர்களும் இரக்கம் கொண்டு தங்களால் கொடுக்க இயன்ற துரும்புகளை கொடுப்பார்கள்.
வன்முறையால் லாபம் இல்லை என்பது ஏற்றக்கொள்ளக்கூடிய வாதம் தான்.ஆனால் ஒடுக்கப்படுபவர்கள் தாங்கள் இருக்கும் சட்டகத்தை இன்முகத்தோடு கசப்பின்றித்தான் அணுக வேண்டும் என்று சொல்வது தான் மிகப்பெரிய வன்முறை.மேலும் ஒடுக்கப்படுபவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டதாலேயே தங்களுக்கான கதையாடல்களை உருவாக்கிக்கொள்ளும் உரிமை கொண்டவர்கள்.அவர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நாட்டை ஆண்டார்கள் என்ற கதையாடலை உருவாக்கிக் கொண்டால் அதில் எந்தப் பிழையும் இல்லை.அதில் உண்மையில்லாவிட்டாலும்.அவர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நாடாண்டார்களா இல்லையா என்பதல்ல அந்த கதையாடலின் நோக்கம்.இன்று இனி அவர்கள் நாட்டின் அதிகாரம் நோக்கிச் செல்லும் அனைத்து உரிமையும் கொண்டவர்கள் என்பதே அதில் இருக்கும் உள்பிரதி.
கசப்பையும் எரிச்சலையும் வைத்துக்கொண்டு எதிர் தரப்பை மெய்ஞானத்தை புரிந்துகொள்ள இயலாது என்று ஆன்மிகவாதிகளும் காந்தியவாதிகளும் கூறுகிறார்கள்.வர்க்கமும் அடையாள அணித்திரள்வும் இணையும் போது புதிய சாத்தியங்கள் உருவாகுகின்றன.கசப்பும் எரிச்சலும் வன்மமும் இருப்பது தான் இயல்பு.அதை கடந்து செல்ல வேண்டுமென்றால் ஒடுக்கப்பட்டவர் சமூக படிநிலையில் உண்மையான கெளரவத்தையும் மதிப்பையும் அடைய வேண்டும்.அது நிகழும் போது கசப்பு மறையும்.அவமானம் ஒருவரை சிதைக்கிறது.சிதைக்கப்பட்ட ஆன்மா சினம் கொள்பவது தான் இயல்பு.அலைகளை சொல்லி குற்றமில்லை கடல் இருக்கும் வரை , மூச்சு நின்றால் பேச்சும் அடங்கும் என்பது போல அவமானம் மறைந்து உரிமைகள் மீட்கப்படும் போது மெய்ஞானம் நோக்கிச் செல்லலாம்.அதுவரை கீதை அர்ச்சுனனுக்கே உபதேசிக்கப்படட்டும்.கர்ணனுக்கு முதலில் உரிமைகள் கிடைக்கட்டும்.பிறகு தேவன் விரும்பினால் உபதேசிக்கட்டும்.
அறத்திற்கு அன்பு சார்பு என்பார் மறத்திற்கும் அஃதே துணை என்கிறது பெளத்தம்.ஒரு மனிதன் ஒரு அமைப்பு வலிமை ஆகும் போது அங்கு அன்பு சாத்தியம்.ஏனேனில் அப்போது அந்த அமைப்பு கொடுக்கும் நிலைக்கு நகர்கிறது.சுயமரியாதையும் தன்மதிப்பும் இருக்கும் இடத்தில் அன்புக்கு பஞ்சமில்லை.
ஒடுக்கப்படுபவர்கள் ஒரு அமைப்பாக திரள்வது உரிமைகளுக்காக போராடுவது வன்முறையற்ற புதிய வழிமுறைகளை கண்டுபிடிப்பதன் வழி தங்களின் உரிமைகளை பெற முடியும்.இந்திய அரசியலமைப்பு அளிக்கும் உரிமைகளை பெற போராட வேண்டியிருக்கிறது.சமத்துவமும் சகோதரத்துவமும் இருக்க வேண்டுமென்றால் பொருள் உற்பத்தி தளத்திலான சுதந்திரம் கட்டுக்குள் இருக்க வேண்டும்.இல்லையென்றால் சமத்துவத்தை பற்றி பேசுவதில் பொருளில்லை.
ஒடுக்கப்படாதவர்கள் சமூகத்தை பார்க்கும் நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களும் பார்க்க வேண்டும் என்று எண்ணுவது பெரும் பிழை.எந்த ஒரு சட்டகத்திலும் வலு கொண்ட ஒரு அமைப்பை எதிர்க்க கேள்வி கேட்க உரிமைகளுக்கு போராட இன்னொரு வலு கொண்ட அமைப்பு தான் தேவைப்படுகிறது.ஒடுக்கப்படுபவர்கள் உதிரிகளாக செயல்படுவதும் தங்களுக்குள் பூசலிட்டுக் கொள்வதும் அவர்களுக்கு எந்த விடுதலையையும் அளிக்காது.ஒடுக்கப்படுபவர்கள் அமைப்பாக திரள வேண்டும்.தங்கள் உரிமைகளை பல கலை வடிவங்களில் பேச வேண்டும்.அரசியல் அதிகாரம் நோக்கி முன்னேற வேண்டும்.நீதித்துறையை முடிந்த இடங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சாத்தியப்படும் போது எதிர் அமைப்புகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருக்கும் சில குரல்கள் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனையை ஒடுக்கப்படுபவர்கள் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும் என்று தொடர்ந்து பேசுகிறது.பெண்களைப் பற்றி பெண்களும் ஆண்களைப் பற்றி ஆண்களும் சிறுவர்களைப் பற்றி சிறுவர்களும் வயதோகியரை பற்றி வயதோகியரும் தான் பேச வேண்டும் என்றில்லை.பிறரை புரிந்து கொள்வது தான் மனித இயல்பு.ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒடுக்கப்படாதவர் குரல் கொடுக்க முன்வந்தால் அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.எங்கள் பிரச்சனைகள் உங்களுக்குப் புரியாது என்பவர்கள் மனிதர்கள் சமூகங்களாக வாழ மட்டுமே சாத்தியப்பட்டவர்கள் என்கிற உண்மையை அறியாதவர்கள்.புரிந்துணர்வு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஒடுக்கப்பட்டவர்களுக்கு முகவர்கள் தேவையில்லை என்பது சரிதான்.ஆனால் ஒடுக்கப்படுபவர்கள் தங்களின் உரிமைகளை பெற ஒடுக்கப்படாதவர்களின் அரசியல் அதிகாரத்தையும் சமூக படிநிலையையும் உண்மையான அக்கறையையும் முகமையாக கொள்வது அவசியம்.மேலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு யார் குரல் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை ஒடுக்கப்பட்டவர்களுக்கு இல்லை.சகோதரத்துவத்தை கேள்வி கேட்பது பிழை.
நாம் தொடர்ந்து தனிமனிதர்களை பற்றி பேசுகிறோம்.ஆனால் சமூக சட்டகங்களும் அமைப்புகளுமே உண்மையான அலகுகள்.தனிமனிதன் என்பது ஒரு புனைவு.நாம் தனிமனிதர்கள் உருவாக்கிய மாற்றங்கள் என்று சொல்பவை அந்தக் காலகட்டத்தில் சமூக சட்டகத்திலிருக்கும் நேர்மறை ஓர்மையின்மையால்(Positive Unconsciousness) நிகழ்ந்தவை.அந்த தனிமனிதன் அந்த இடத்தில் இருந்ததால் அவன் அதை நிகழ்த்தினான்.நாம் விஞ்ஞானத்தில் எப்போதும் ஒரு விஷயத்தை கவனிக்கிறோம்.ஒரே கோட்பாட்டை இரண்டு அல்லது மூன்று பேர் ஒரே காலகட்டத்தில் கண்டுபிடிக்கிறார்கள்.அதனால் தான் விஞ்ஞான உலகில் முதல் வேலையாக தங்கள் கோட்பாட்டை ஏதேனும் விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரித்து விடுகிறார்கள்.ஒரே கோட்பாடு பலரால் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்படுவது எதனால் நிகழ்கிறது என்றால் அந்தக் காலகட்டத்தில் விஞ்ஞான சட்டகத்தில் அந்த உரையாடல்கள் நேர்மறை ஓர்மையின்மை நிலையில் இருப்பதால் தான்.ஏதோ ஒரு தனிமனிதன் அதே அலைவரிசையில் இருக்கும் போது ஒத்திசைவால் அந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறான்.அவன் இல்லாது போனால் அந்த இடத்தில் வேறு ஒருவன் அதைச் செய்திருப்பான்.ஐன்ஸ்டீன் இல்லாவிட்டாலும் சார்பியல் தத்துவத்தை இந்த உலகம் அடைந்திருக்கும்.அதனால் தனிமனிதர்களை அலகாக கொண்டு அவர்கள் வெற்றி தோல்விகளை விதத்தோதுவது அவசியமற்றது.அமைப்புகள் தான் முக்கியம்.அமைப்பாக்கம் பெறுவதும் ஒன்றிணைந்து செயல்படுவதும் நாம் பேசும் அதே உரிமைகளை வேறு குரலில் பேசுபவர்களை சகோதரத்துவத்துடன் அணுகுவதும் முகமைகளை பற்றிக்கொள்வதும் தான் விடுதலைக்கான வழி.
புகைப்படம் - By Peter Pettus - Library of Congress, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=5697323
No comments:
Post a Comment