அன்புடையார்

 

 

ஸ்ரீநிகேதன் கிணற்றடியில் நின்று கொண்டிருந்தான்.தென்னங்கீற்றுகள் நீரில் பிரதிபலித்தன.நீர் தொட்டு விடும் தூரத்தில் தான் இருந்தது.தன் காதலைத் தெரிவிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் கொண்டு சொல் கணத்து நிற்கும் பெண் போல மேகங்கள் திரண்டிருந்தன.மண் வாசம் மேலெழுந்தது.காற்றில் பிளாஸ்டிக் கவர் ஒன்று சுழன்று சுழன்று பறந்து சென்றது.கீரில் கதவின் அருகில் பழுப்பு நிற நாய் ஒன்று பாதாம் மரத்தின் சருகுகள் மேல் படுத்திருந்தது.பச்சை நிற சிறிய கீரில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் பரதன்.நாய் நிமிர்ந்து பார்த்து விட்டு படுத்துக்கொண்டது.

பரதன் கரிய நிறத்தில் இருந்தார்.இறுக்கமான உறுதியான தேகம்.கால்களை நெருக்கி அருகருகே வைத்து நடந்தார்.சட்டென்று வளைந்து நிமிரும் மூங்கில் போன்ற உடல்.நீல நிற முழுக்கை சட்டையும் பிஸ்கட் நிற ஃபேண்டும் அணிந்திருந்தார்.சட்டையை இன் செய்து கைகளை மடிந்துவிட்டிருந்தார்.கையில் ஒரு லேதர் பேக்.அவரது கண்ணாடி பிரேம் தங்க நிறத்தில் ஜ்வலித்தது.

மேல் மாடிக்கு வந்திருப்பார் என்று எண்ணிய ஸ்ரீநிகேதன் அவரை எதுவும் கேட்கவில்லை.பரதன் மாடிக்குச் செல்லவில்லை.ஸ்ரீநிகேதனின் வீட்டு வாசல் படியில் நின்றார். நாற்சந்தியில் திசையறியாமல் விழிக்கும் சாரதி போல சுற்றும் முற்றும் பார்த்தார்.

“யாரு வேணும்”

“ஐ எம் பரதன்”

“யாரு வேணும்”

“ஐ வுட் லைக் டூ மீட் மிஸ்டர் ஸ்ரீநிகேதன்.இஸ் ஹி லிவிங் ஹியர்”.பிசிறுகள் அற்ற கோர்வையான கம்பீரமான அவனது குரலும் ஆங்கிலமும் வசீகரிக்கக்கூடியதாக இருந்தது.

“நான் தான் ஸ்ரீநிகேதன்”

“ஓ.ஐ எம் சாரி” என்று புன்னகைத்தவாறு அவன் அருகில் சென்று கை நீட்டினார் பரதன்.

“நீங்க”

“நான் பரதன்.நெய்வேலியிலிருந்து வரேன்.உங்களால் எனக்கு ஒரு உதவி ஆகனும்”.

“நெய்வேலியா.நானும் நெய்வேலிதான்.என்ன உதவி.புரியல”

“ஐ கேன் எக்ஸ்ப்ளேய்ன் யூ இன் டீடெய்ல்”

“சரி சொல்லுங்க”

“இங்க வைச்சு பேச முடியாது.உள்ள போகலாமா.கொஞ்சம் தண்ணி வேணும்” என்று தனது பையிலிருந்த காலியான பாட்டிலை எடுத்துக் காட்டினார்.

“நெய்வேலியில எங்க”

“பெரியாகுறிச்சி”

“ஓஹோ.சரி.நான் கெங்கைகொண்டான்.”

“அது தெரியும்.நான் உங்க வீட்டுக்கு போயிருக்கேன்.எனக்கு உங்களத் தெரியும்.உங்க அப்பாவத் தெரியும்.உங்களப் பாத்தது இல்ல, அவ்வளவுதான்.உங்க குடும்பத்த தெரியும்.நான் லா படிச்சிருக்கேன்.ஆனா ப்ராக்டீஸ் பண்ணல.கொஞ்சம் உள்ள போயி பேசலாமா.”

“அப்பாவைத் தெரியுமா.நேத்து கூட ஃபோனுல பேசினேனே.அவரு நீங்க வருவீங்கனு சொல்லயே”

“ஐ கேன் எக்ஸ்ப்ளேய்ன்”.

“வாங்க”

வீட்டில் ஸ்ரீநிகேதனின் மனைவி தனு டிவி பார்த்துக்கொண்டு வெண்டைக்காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.சோபாவில் பரதனை அமரச் சொன்னான்.தனு காய்கறி தட்டை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்றாள்.அவன் ரிமோட்டை எடுத்து டிவியை அணைத்தான்.

“வீட்டுக்கு முன்னாடி இவ்வளவு பெரிய கிணறு இருக்கு.நீச்சல் குளம் மாதிரி”. அமர்ந்தவாறு பரதன் கேட்டான்.

“அப்ப அப்படி கட்டியிருக்காங்க.நாங்க வாடகைக்கு இருக்கோம்.மேலே ஓனர்”

“தெரியும்”

“சரி.நீங்க ஒண்ணும் சொல்லலையே”

“உங்க நிலத்தை , வீட்டை என்.எல்.சி எடுக்குதுல்ல”

“ஆமாம்.எடுத்தாச்சு.”

“ஆமாம்.எடுத்தாச்சு.அதுக்கு அறுபத்தி ஐஞ்சு லட்சம் கிடைச்சுது இல்லையா”

“சரியாத் தெரியல.அப்பாவுக்குத் தெரியும்”.

“அது உங்க பரம்பரை சொத்து.உங்க அப்பா சம்பாரிச்சது இல்ல.கரெக்ட்டா.”

“ஆமாம்.நீங்க யாரு.இருங்க அப்பாவுக்கு ஃபோன் பண்றேன்”

“ஒரு நிமிஷம் , நான் சொல்லி முடிச்சுடிறேன்.வர பணத்த உங்க அப்பா முழுசா வாங்கிட்டாரு.கிடைச்ச பணம் போதாதுன்னு கோர்ட்ல எக்ஸ்ட்ரா காம்பன்சேஷனுக்கு கேஸூம் போட்டிருக்காரு.ஆனா இதுவரைக்கும் அவரோட கூடப் பொறந்த அக்காவுக்கு ஒரு ரூபா தரல.அதப்பத்தி பேசத்தான் நான் வந்திருக்கேன்” அவசரமாக சொல்லி முடித்தார் பரதன்.

“இதுக்கு என்கிட்ட ஏன் பேசனும்.எங்க அப்பா கிட்ட பேசுங்க”

“அவர் கிட்ட பேசியாச்சு.அவரு ஐம்பதாயிரம் தரேன்னு சொல்றாரு.உங்களுக்குத் தெரியும்.உங்க அத்தை பத்துப் பாத்தரம் தேச்சுதான் வாழ்க்கையை நடத்தறாங்க.அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு.இன்னும் கல்யாணம் பண்ணல.அந்தப் பொண்ணுக்கு இருபத்தியைஞ்சு வயசு ஆகுது.அறுபத்தி ஐந்து லட்சுத்துல ஐம்பதாயிரங்கறது பாவம் இல்லையா”

“நீங்க இப்போ இங்கிருந்து கிளம்பிப் போறீங்களா இல்லையா.நீங்க யாருன்னுனே புரியல.இந்த சொத்து விஷயத்துல எதுவா இருந்தாலும் எங்க அப்பா கிட்ட பேசிக்கொங்கே.அதவிட்டுட்டு இங்க வந்து என்ன பேச்சு.”

தனு சமையலறையிலிருந்து சத்தம் கேட்டு வந்து பார்த்தாள்.ஸ்ரீநிகேதன் மிகவும் பதற்றமடைந்திருந்தான்.அவனது தாடையை தடவிக்கொண்டே இருந்தான்.பரதனை பார்க்காதவாறு தலையை திருப்பிக்கொண்டான்.அவனது உடல் அசைவுகளில் ஒரு பெண்ணின் நளினம் இருந்தது.மீசையை அன்று தான் ஒருக்கியிருந்தான்.பென்சிலால் வரைந்தது போல மெல்லிய மீசை.கூன் போட்ட அவனது உடலுக்கு டீஷர்ட் சரியாக பொருந்தவில்லை.ஜெல்லி போல தொள தொள வென்று இருந்தது அவனது உடல்.

”மிஸ்டர் ஸ்ரீநிகேதன்” என்று சற்று அழுத்தமாக தொனியில் குரலை உயர்த்தினார் பரதன்.அவரது கார்வையான குரல் ஸ்ரீநிகேதனை திடுக்கிட வைத்தது.அவன் எதுவும் பேசாமல் பார்த்தான்.தனு என்ன நிகழ்கிறது என்று புரியாமல் முழித்தாள்.

“உங்களுக்கு வயது முப்பது இருக்கும்.எனக்கு உங்களை விட ஐஞ்சு வயது ஜாஸ்தி.உங்க அப்பாகிட்ட நான் பேசிட்டேன்.அவருக்கு நான் சொல்றது புரியல.நீங்க புரிஞ்சிப்பீங்கனு தான் உங்கள பாக்க வந்தேன்”

“முதல்ல ஒரு விஷயம் சொல்லுங்க.நீங்க ஏன் என் அத்தைக்காக பேசுறீங்க”

சரி செல்றேன் என்று சொன்னவர் எரியும் சுடர் போல தன்னுள் ஆழ்ந்தார்.பின்னர் பழுதடைந்த இயந்திரத்தின் துருப்பிடித்த திருகாணிகளை கொறடா கொண்டு பிடுங்கும் தீவிரத்துடன் பேசத் துவங்கினார்.

“நான் லா படிச்சிருக்கேன்னு சொன்னேன் இல்லையா.என் மனைவியும் லாயர் தான்.நெய்வேலி கோர்ட்ல விருத்தாசலம் கோர்ட்ல ப்ராக்டீஸ் பண்றாங்க.கிரிமினல் லாயர்.எங்க வீட்ல உங்க அத்தை வேல செய்றாங்க.அவங்க என் மனைவிக்கிட்ட இதப்பத்தி பேசியிருக்காங்க.பத்மாவதி அதாவது என் வைஃப் என்கிட்ட இதச் சொன்னாங்க.கோர்ட்ல சிவில் கேஸ் போடலாம்.தெரிஞ்ச சிவில் லாயர்ஸ் நிறைய பேர் இருக்காங்க.ஆனா அதுக்கு முன்னாடி ஒரு தடவ உங்க எல்லாரு கிட்டயும் பேசிடலாம்னு நான் சொன்னேன்.அதான் வந்திருக்கேன்”

தனு வந்து நீர் நிரப்பிய பாட்டிலை கொடுத்தாள்.வாங்கியவர் அண்ணாந்து வாயை விரித்து ஒரே மிடறில் ஒரு துளிக்கூட சிந்தாமல் தண்ணீரைக் குடித்தார்.காலி பாட்டிலை டீப்பாயின் மீது வைத்துவிட்டு தனுவை பார்த்தார்.நீங்களும் இத கவனிச்சா நல்லா இருக்கும் என்றார்.தனு அமர்ந்தாள்.

“தண்ணீ ரொம்ப தித்திப்பா இருக்கே.கிணத்து தண்ணியா”

ஆமாம் என்றாள் தனு.ஸ்ரீநிகேதன் அவள் பேசுவதை விரும்பாதது போல அவளைப் பார்த்தான்.அவள் மிகவும் தளர்வாக சோபாவில் ஏதோ தன் உறவினர் அருகில் அமர்வது போல அமர்ந்திருந்தாள்.பரதனின் உடல்மொழி அவளுள் ஒரு இயல்புத்தன்மையை கொண்டு வந்திருந்தது.அவள் பரதனையே கூர்ந்து பார்த்தாள்.

“நான் முன்னவே சொன்ன மாதிரி என் மனைவி லாயர்.நானும் அவங்களும் ஒண்ணாத்தான் பாண்டிச்சேரி லா காலேஜ்ல படிச்சோம்.உங்க அத்தை வட்சலா எங்க வீட்ல வேலை செய்றாங்க.நான் ஊருல அதிகம் இருக்கறதில்ல.என் வேல அப்படி.பத்து பதினைஞ்சு நாளுக்கு ஒரு தடவ ஊருக்கு போவேன்.போன தடவ போயிருந்தப்போ பத்மா உங்க அத்தையை பத்தி சொன்னாள்.அன்னைக்கே நான் உங்க அப்பா வெங்கடாசலத்தை பார்த்துப் பேசினேன்.அவரு நான் கல்யாணத்தப்பவே எல்லாத்தையும் செஞ்சிட்டேனு சொன்னார்.நான் புரிய வைக்க முயற்சி பண்ணேன்.யூஸ்லெஸ்.அவருகிட்ட அதுக்குமேல ஒண்ணும் பேச முடியல.அதான் உங்கள பாக்கலாமுனு வந்தேன்” 

பரதன் பேசும் போது கர்சீப்பை கைகளில் வைத்திருந்தார்.வார்த்தைகளில் எங்குமே தங்கு தடையே இல்லை.கசாப்பு கடையின் கத்தி போல கூர்மையாக இருந்தன அவனது சொற்கள்.சொற்களுக்கு இரு வேறு அர்த்தங்கள் இல்லை.மழுப்பல்கள் இல்லை.சிரிக்கவில்லை. தழுதழுக்கவில்லை.

“நீங்க சொல்றது எனக்குப் புரியது. ஆனா நீங்க ஏன் இதுல பஞ்சாய்த்து பண்றீங்க.உங்க வைஃப் கிட்ட எங்க அத்தை எதாவது கேஸ் கொடுக்கச் சொன்னாங்களா”

“ஸி.உண்மையைச் சொல்லனும்னா ,கேஸ் நடத்தற அளவுக்கு உங்க அத்தைக்கு வயசும் இல்லை.தெம்பும் இல்ல,பணமும் இல்ல.”

“சரி.அப்போ நீங்க எந்த அடிப்படையில இங்க வந்து பேசுறீங்க”

“ஹூமானிட்டேரியன் அடிப்படையில்”. என்று சொன்ன பரதன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.தனு நிமிர்ந்து அமர்ந்தாள்.ஸ்ரீநிகேதன் என்ன சொல்வது என்று புரியாமல் சிரமப்பட்டான்.

“இப்ப நான் இதுல என்ன செய்யனும்.எனக்கு ஒண்ணும் புரியல.நீங்க நேரடியா விஷயத்த சொன்னா நல்லா இருக்கும்.நாங்க ஈவினிங் படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியிருக்கோம்.நேரம் ஆயிடிச்சு” என்று கடிகாரத்தை பார்த்த ஸ்ரீநிகேதன் தொடைகளை ஆட்டிக்கொண்டே சொன்னான்.

“ஓ.ஐ எம் சாரி.நான் சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லிடிறேன்.உங்க சொத்து பாகப்பிரிவினைப் படுத்தப்படாத இந்து குடும்பச் சொத்து.ஆங்கிலத்தில் HUFன்னு சொல்வாங்க.உங்க அப்பாதான் அதுக்கு கர்தா.கர்தானா அவருக்குத்தான் எல்லா உரிமையும்.அவரா வித்துக்கறத தவிர.ஆனா பாருங்க என்.எல்.சி. நிலத்தை ஆக்கிரமிக்கிது. அவரு சொத்தை கொடுத்துதான் ஆகனும்.இப்போ கர்தாவுக்கு HUF சட்டப்படி அதுக்கு முழு உரிமை உண்டு.இந்தக் காசை அவரு பாகம் பிரிக்கலாம்.அல்லது புது சொத்தை வாங்கலாம்.இங்க மத்த பங்குத்தாரர்கள் சட்டப்படி ஒண்ணும் செய்ய முடியாது.”

“அப்ப அப்பா செஞ்சது சட்டப்படி சரிதானே”

“இங்க பாருங்க.உங்களுக்கு அறுபத்தி ஐஞ்சு லட்சம் கொடுத்தாங்க.இந்திரா நகர்ல மூணு செண்ட் நிலம் கொடுத்தாங்க.அது மட்டுமில்லாம உங்க அப்பா கிடைச்ச காசு பத்தாதுன்னு வக்கீல் ரவீந்திரனை வைச்சு கேஸ் போட்டிருக்காரு.எப்படியும் இன்னும் பதினைஞ்சு இருபது லட்சம் வரும்.இவ்வளத்தையும் என்ன பண்ணப் போறீங்க.நீங்களே எடுத்துக்கப் போறீங்களா.பாகப்பிரிவினைப்படி பாத்தா அவங்களுக்கு அதுல பங்கு வேணும்”.

“ஆனா பாகப்பிரிவினையே நடக்கலயே” என்ற ஸ்ரீநிகேதன் தொடர்ந்து உற்சாகமாக பேச ஆரம்பித்தான்.

“எங்க அப்பா நிலத்தோட கர்தா.அவருக்கு சாதாரண சூழல்ல நிலத்தை விக்க உரிமை இல்லை.கரேக்ட் தான்.ஆனா இது லேன்ட் அக்யூஸ்ஸேஷன். என்.எல்.சி.கையகப்படுத்துது.அதுக்கு காம்பன்ஸேட் பண்ணுது.காசு வருது.கர்தாவா அவரு காசை வாங்குறாரு.மொத்த காசையும் வைச்சு புதுச் சொத்து வாங்கப்போறாரு.ஆனா அதுவும் பாகப்பிரிவனை செய்யப்படாத சொத்து தான்”.இதை சொல்லிவிட்டு ஸ்ரீநிகேதன் தனுவை பார்த்து நெற்றி சுருக்கி புன்னகைத்தான்.பரதன் ஸ்ரீநிகேதனை பார்த்தார்.தனுவையும் பார்த்தார்.சிறிது நேரம் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்த பரதன் இருக்கையிலிருந்து சற்று முன்னகர்ந்து பேசத் தொடங்கினார்.

“அப்போ உங்களுக்கு எல்லா விவரமும் தெரிஞ்சிருக்கு.அப்படித்தானே”

“ஆமாம்.”

“இது பாவமில்லையா”

“என்ன பாவம்.எங்க அத்தைக்கு கல்யாணத்தப்ப பத்து பவுணு போட்டு நல்லாத்தான் கல்யாணம் செஞ்சு வைச்சாங்க.போன இடத்துல அவரு பொறுப்பில்லாம இருந்தாரு.நிலத்தை வித்தாரு.செத்துப்போயிட்டாரு.அதுக்கு நாங்க எண்ணப் பண்றது.இப்பக்கூட அப்பா அடிக்கடி காசு கொடுத்துக்கிட்டுத்தான் இருக்காரு”.

“என்ன பத்து இருபதா”

“தோ பாருங்க.அவ்ளோதான் மரியாதை.நாங்க குரோம்பேட்டையில படத்துக்குப் போறோம்.மணி ஐஞ்சரை ஆயிடுச்சு.நீங்க கிளம்புங்க.எதுவானாலும் அப்பாகிட்ட பேசுங்க.” என்று ஸ்ரீநிகேதன் கைகளை வாசலை நோக்கி நீட்டி ஆவேசமாக பேசினான்.

பரதன் எழுந்து கொண்டார்.தனுவும் எழுந்து கொண்டாள்.அவர் தன் தண்ணீர் பாட்டிலை எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டார்.எதுவும் பேசாமல் வெளியே சென்றார்.தனு அவன் பின்னால் வெளியே சென்று கிணற்றடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுத்தாள்.பரதன் ஷூக்களை மாட்டிக்கொண்டார்.தனுவைப் பார்த்தார்.அவளும் அவரைப் பார்த்தாள்.

“உங்க பேரு”.

“தனு”.

“தேங்கஸ் ஃபார் தி வாட்டர்.ஐ வில் கம் டூமாரோ” என்று சொல்லி கீரில் கேட்டை சத்தமில்லாமல் திறந்து சரியாக தாழிட்டுவிட்டு சென்றார்.தனு அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.அவர் ஒரு முறை கூட வீட்டைத் திரும்பிப் பார்க்கவில்லை.

துணிகளை கொண்டுவந்து சோபாவில் போட்டுவிட்டு அமர்ந்த தனு அவரு நாளைக்கும் வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார் என்றாள்.

“நீ ஏன் அவன் பின்னாடியே போனே”

“மழை வர மாதிரி இருக்குனு துணி எடுக்கப்போனேன்” என்று சொல்லிவிட்டு துணிகளை எடுத்து மடிக்கக் தொடங்கினாள்.ஸ்ரீநிகேதனால் அதன் பின் அமர இயலவில்லை.எழுந்து பெண்டுலம் போல அங்கும் இங்கும் நடந்தான்.

“நீ அவன் கிட்ட நாளைக்கு ஏன் வருவேன்னு கேட்டியா”

“இல்ல.”

“மரமண்டை.இங்க வரத்தேவையில்ல.அங்க நெய்வேலியில போயி எங்க மாமாகிட்ட பேசுங்கனு சொல்ல வேண்டியது தானே.” என்று கத்தினான்.

“என்னைய இதுக்குள்ள இழுக்காதீங்க நிகேத்.எனக்கு ஒண்ணும் தெரியாது.சரி.வந்தா எண்ண.பேசுங்க.பேசி அனுப்புங்க.என்ன கொலையா பண்ணப்போறாரு” என்று சொல்லிவிட்டு துணிகளை வைக்க அறைக்கு எடுத்துச் சென்றாள்.

“ஏங்க”

“என்ன”

“இந்த சினிமாலாம் எதுக்குங்க எடுக்குறாங்க”

“எதுக்குன்னா.பாக்கறதுக்குத்தான்”

“ஆனா பாக்கறமாதிரியே இல்லையே”

“சரி.உனக்கு என்ன வேணும்”

“பாப்கார்ன்.கேரமல் வேணாம்.உங்களுக்குத் தனியா கேரமல் போட்டு வாங்கிக்கோங்க.”

படம் முடிந்து வெளியே வந்த போது மழை பெய்து ஓய்ந்திருந்தது.சாலையில் வண்டிகள் நீரில் மிதந்து சென்றன.பைக்கில் செல்லும் போது முகத்தில் ஈரக்காற்று வீசியது.அவர்கள் குரோம்பேட்டை மேம்பாலத்தில் ஏறி சிட்லபாக்கம் வரதராஜா தியேட்டர் வழியாக ஸ்ரீராம் காலனியில் இருக்கும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.இன்னும் சிறிது நேரம் பைக்கில் எங்காவது சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள் இறங்கி கதவைத் திறந்து விட்டாள்.

“அவன் நாளைக்கு வருவான்னு நினைக்கிறியா”.

“கண்டிப்பா வருவார்”

“ம்.நைனாகிட்ட சொல்லனும்”.

“அந்தாளு நாளைக்கு என்ன சொல்றாருன்னு பாருங்க.அப்பறம் உங்க அப்பாகிட்ட சொல்லுங்க.”

“தனு” என்று கூப்பிட்டு மறுபக்கம் படுத்திருந்தவளை தன் பக்கம் திரும்புமாறு தோள்களை பற்றி இழுத்தான்.திரும்பியவள் என்ன வென்றாள்.அவள் வயிற்றில் கைகளை வைத்தவன் அந்தாளுக்கு இதுல என்னடி அக்கறை என்று கேட்டான்.

“அவரு தான் சொன்னாரே.ஹூமானிட்டேரியன் அடிப்படையிலன்னு”

“இந்தக் காலத்துல என்னடி ஹூமானிட்டேரியன்.எனக்கு ஒண்ணு தோணுது”

“என்ன”

“எங்க அத்தை பொண்ணு ,  அவ பேரு என்ன”

“பானு”

“கரேக்ட்.பானு.அவளுக்கும் இந்தாளுக்கும் எதாவது”.

“வாய மூடுங்க நிகேத்.பைத்தியக்காரத்தனமா கல்யாணம் ஆகாத பொண்ண பத்தி தப்பா பேசாதீங்க.” என்றவள் வயிற்றில் இருந்த கைகளை தட்டிவிட்டாள்.

“ஏன்.இருக்கக்கூடாதா”

“கண்டிப்பா இருக்காது” என்று சொல்லி மறுபக்கம் திரும்பிப் படுத்தாள்.

“இந்தப் பக்கம் பாத்து பேசு”

“என்ன”

“இப்பச் சொல்லு”

“நான் ஃபேங்கல ஒரு நாளுக்கு எத்தன கஸ்டமர்ஸை பாக்குறேன் தெரியுமா.உங்கள மாதிரி லேப்டாப் முன்னாடி உக்காந்துகிட்டு காலத்த ஓட்டல”

“சரி.இப்ப அதுக்க என்ன.”

“அந்தாளு இன்னிக்கு என்னைய பாக்கும் போது அந்தப் பார்வையில கூச்சமே இல்ல, வெட்கமே இல்ல, ஒண்ணுமே இல்ல.ரொம்ப கம்ஃபர்டபுளா பீல் பண்ணேன்.அதான் ஹால்ல உக்காந்தேன்.அந்தாளு நல்லவர் மாதிரிதான் தெரியுது”.

“இப்ப என்ன சொல்ல வர்ற”

“ஒண்ணும் சொல்லல.ஆள விடுங்க.எனக்கு தூக்கம் வருது.மண்ணாங்கட்டி மாதிரி ஒரு படத்துக்கு கூட்டிட்டு போறீங்க.நான் அப்பவே சொன்னேன்.அந்தப் படம் வேணாம்னு.சும்மா டம்மு டம்முனு ஓரே சத்தம்.தல வலிக்குது.என்ன விடுங்க” என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.

ஸ்ரீநிகேதனால் உறங்க முடியவில்லை.தந்தையை அழைக்கலாம் என்றால் உறங்கியிருப்பார்.எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.தனு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.எப்போதும் எதிலும் அவளுக்கு குழப்பங்களே இருந்ததில்லை.இது தான் இப்படித்தான் இவ்வளவுதான் என்று முடிவெடுத்துவிடுவாள்.பரதன் உண்மையில் இவள் சொல்வது போல அத்தனை நல்லவனாக இருக்க இயலாது.நெய்வேலியிலிருந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை நான்கு மணி நேரம் பயணம் செய்து பெருங்களுத்தூரில் இறங்கி யூனிட் ட்ரெயின் பிடித்து சானிடோரியம் வந்து நடந்தே சாயும் பொழுதில் ஒருவனின் விலாசம் தேடி சந்திக்க வருவது சாத்தியம் என்று ஸ்ரீநிகேதனால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.அதுவும் மற்றவர்களுக்காக.ரத்த உறவும் இல்லை.கொண்ட உறவும் இல்லை.பரதனுக்கு தன்னுடைய அட்ரஸ் எப்படி கிடைத்தது என்று எவ்வளவு யோசித்தும் அவனுக்கு விளங்கவில்லை.தன் தந்தை எதன் பொருட்டும் அளித்திருக்க வாய்ப்பில்லை.ஊரில் பிறருக்கும் தெரியாது.யோசித்துக்கொண்டே இருந்தவன் குறட்டை விடத் தொடங்கினான்.

பரதன் கிழக்கு தாம்பரத்திலிருந்த கட்சி ஆபிஸில் தங்கிக்கொண்டார்.காலையில் எழுந்து துணிகளைத் துவைத்து பிழிந்து கொடியில் காய போட்டார்.குளித்து கொண்டு வந்திருந்த வெண்ணிற சட்டையையும் சிமெண்ட் நிற ஃபேண்ட்டையும் இஸ்திரி செய்து அணிந்து அறையிலிருந்து வெளியில் வந்தார்.ஒருவர் ஜனசக்தி இதழை வாசித்துக்கொண்டிருந்தார்.

“என்ன தோழரே.கிளம்பிட்டீங்களா.டீ குடிக்கிறீங்களா”.

“நேரம் ஆகிடுனும்னு நினைக்கிறேன்.கோர்ட்டுக்கு போறேன்”

“எந்த கோர்ட்டு.”

“ஹை கோர்ட்டு தான்.கடலூர் பையன் சிப்காட்டுல வேல செஞ்சப்போ அடிதடி கேஸூல மாட்டி வேலையிலிருந்து எடுத்துட்டாங்க.அப்பீல் வந்திருக்கு.இன்னிக்கு ஹியரிங்.போயி பாத்துட்டு  அப்படியே தி.நகர் போகனும்.”

“இன்னிக்கே ஊருக்கு கிளம்புறீங்களா”

“வேல முடிஞ்சா கிளம்பலாம்னு இருக்கேன்.சரி நான் வரேன்”

“இருங்க தோழரே.முருகன் இருக்கான்.வண்டில சானிடோரியம் ஸ்டேஷன்ல இறங்கிக்கோங்க."

"அதுவும் சரிதான்”

லாக்கர் தொடங்க வந்திருந்த வாடிக்கையாளரிடம் சேமிப்பு கணக்கு ஒன்றையும் கூடவே ஒரு யூலிப்பையும் தொடங்கினால்தான் லாக்கர் கிடைக்கும் என்று  விளக்கிக்கொண்டிருந்தாள் தனு.கேஓய்சி படிவத்தை நிரப்பக் கொடுத்தாள்.ஆதார் கார்டு நகல், பான் கார்டு நகல் ,ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோகிராஃப் ஆகியவற்றை கொடுத்து விடச் சொன்னாள்.

“இந்த யூலிப் வருஷத்துக்கு எவ்வளவு கட்டணும்”

“ஒரு லட்சத்திலிருந்து இரண்டரை லட்சம் வரை கட்டலாம்.”

“இல்ல.முடியாது.ரொம்ப கஷ்டம்.”

சேமிப்பு கணக்கை தொடங்குவதாவும் யூலிப் தன்னால் இயலாது என்றும் வாடிக்கையாளர் கூறினார்.அதற்கு மேல் தனு அதைப்பற்றி வற்புறுத்தவில்லை.யூலிப் இல்லாம லாக்கர் கிடைப்பது அத்தனை எளிதல்ல என்றும் ஆனால் தான் கிளை மேலாளரிடம் கேட்டு விட்டு உறுதி செய்வதாகவும் சொன்னாள்.வாடிக்கையாளர் படிவங்களையும் நகல்களையும் அளித்து விட்டுச் சென்றார்.வாடிக்கையாளர்களை வற்புறுத்தாவிட்டால் அவர்கள் இது போன்ற யூலிப் கணக்குகளை தொடங்க வாய்ப்பில்லை என்றார் கிளை மேலாளர்.ஆனால் அவரது வருமானத்திற்கு யூலிப் தொடங்குவது மிகவும் கடினம் என்று விளக்கினாள் தனு.அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்.பிறகு வருடக் கடைசியில் சம்பள உயர்வு கேட்டு வந்து நிற்காதீர்கள் என்று கடிந்து கொண்டார்.தனு சலனமற்று கிளை மேலாளரின் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அன்றைய நாளை மடித்து பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு கதிரவன் மேற்கு பக்கம் சென்று கொண்டிருந்தான்.தனு புரசைவாக்கத்திலிருந்து நடந்து எழும்பூர் ரயில் நிலையம் வந்து தாம்பரம் செல்லும் யூனிட் ட்ரெயினில் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறினாள்.செயின்ட் தாமஸ் மெளன்டில் ஜன்னல் ஓரத்தில் அமர இடம் கிடைத்தது.அருகில் அமர்ந்த பருமனான பெண் தான் வைத்திருந்த பிளாஸ்டிக் பாக்ஸைத் திறந்து ஆப்பிள் ஒன்றை எடுத்தாள்.பெரிய பெரிய கடிகளாக கடித்து வேகமாக மென்றாள்.தனு கூந்தலை பண் போல சுருட்டி முடிந்தாள்.ஒரு பெரிய ஆரஞ்சு நிறப்பந்து போல கதிரவன் அமிழ்ந்து கொண்டிருந்தது.ஓளிக்கற்றைகளை உள்ளங்கைகளில் வாங்கினாள்.எதிர் வரிசையில் யாருமில்லாத சீட்டில் மஞ்சள் வெயில் படர்ந்தது.வண்டி சானிடோரியத்தில் நின்றது.

“குங்குமம் , குமுதம் கொடுங்க”

“ப்ரண்ட்லைன் ஒண்ணு”

ஃப்ளாட்பார கடையில் நின்று கொண்டிருந்த தனு குரல் வந்த திசை பார்த்தாள்.பரதன் நின்று கொண்டிருந்தார்.

“என்ன சார் நீங்க இங்க”

“ஓ.நீங்களா.நான் உங்கள கவனிக்கல.ஆபிஸ் முடிஞ்சு வர்றீங்களா”

“ம்.என்ன இன்னிக்கு என் ஹஸ்பண்ட பாக்கறதுக்காக பிளாட்பாரத்துலேயே தங்கிடீங்களா”.

பரதன் சிரித்தார்.கட்சி ஆபிஸில் தங்கியதையும் ஹை கோர்டு சென்று திரும்புவதையும் சொன்னார்.சரி என்று தலையாட்டினாள்.இருவரும் தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையத்திலிருந்து சப்வே வழியாக சாலைக்கு வந்தார்கள்.

“உங்கள எங்கேயோ பாத்து இருக்கேன் சார்.எங்கனு தான் ஞாபகம் வரல”

“சார் வேண்டாம்.கால் மீ பரதன்.யூனியன் கூட்டத்துல எங்கயாவது பாத்து இருப்பீங்க.”

“ஓ”

“சிபிஐ.கடலூர் டிஸ்ட்ரிக்ட் தொழிற்சங்கத் செயலாளர்”

“ஓ”

“உங்க ஃபேங்கல வேலை செய்ற ரசூல் ஏஐடியுசி மெம்பர்.அவர் வழியாத்தான் உங்க அட்ரஸை கண்டுபிடிச்சோம்”

“ஓ.ரசூல் எங்கிட்ட சொல்வே இல்லையே.இன்னிக்கி கூட ஓண்ணாத்தான் சாப்பிட்டோம்”

“நான் சொல்ல வேண்டாம்னு சொல்லியிருந்தேன்”.

“ஓ”

“ஆனா நேத்து என் பேர கேட்டீங்க”

“அது சும்மா கர்டஸிக்கு”

“ஓ”

“ரொம்ப ஆச்சரியப்பட்டுக்கிட்டே இருக்கீங்களே”

“சொல்றது எல்லாம் ஆச்சரியமா இருந்தா ஆச்சிரயப்பட்டுத்தானே ஆகனும் பரதன்”

“சரி வாங்க டீ குடிக்கலாம்”

“இன்னும் ஐந்து நிமிஷம் நடந்தா வீட்டுக்கே போயிடலாம்.காபி குடிக்கலாம்.பீல்டர் காபி.நேத்து கூட உங்களுக்கு ஓண்ணும் குடிக்கத் தரல.”

“நான் கண்டிப்பா உங்க வீட்ல காபி குடிக்கிறேன்.இப்போ டீ குடிப்போம்”.இரண்டு டீ சொல்லிவிட்டு அவளது கணவனின் அலுவலகம் பற்றி விசாரித்தார் பரதன்.

“சோழிங்கநல்லூர்.அவரு பைக்ல போயிடுவாரு.வர்ற நேரம்.அநேகமா வந்திருப்பார்.”

“ம்”

“இங்க இருந்து சோழிங்கநல்லூர் எவ்வளவு நேரம் ஆகும்”

“பக்கம் தான்.அப்படியே ஈஸ்ட் தாம்பரம் வழியா மேடவாக்கம் போனா சோழிங்கநல்லூர் போயிடலாம்.அரை மணி அல்லது நாப்பது நிமஷம் ஆகும்”.அவள் கைகளை நீட்டி வளைத்து சொன்னாள்.

பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள்.ஸ்ரீநிகேதனின் பைக் நின்று கொண்டிருந்தது.அவன் வாசல் படியில் அமர்ந்திருந்தான்.கதவு பூட்டியிருந்ததது.கிணற்றடி ஈரமாக இருந்தது.நீரை இரைத்து முகம் கை கால்களை கழுவியிருந்தான்.

“என்ன வாசல்ல இருக்கீங்க”

“இவரு வந்துட்டாரு இல்ல.இனிமே வாசலுக்கு என்ன ரோட்டுக்கே வந்திர வேண்டியதுதான்”

“நிகேத், என்ன சாவி எடுத்துட்டுப் போகலயா?”

“ஆமா.சாவி எடுத்துப்போக மறந்துட்டேன்.சரி இவரு ஏன் இங்க வர்றாரு”

“எப்ப வந்தீங்க”

“இப்ப தான்.ஐஞ்சு நிமிஷம் ஆகுது.”

“இவர எங்க பிடிச்சன்னு கேட்டேன்”

“ஸ்டேஷன்ல பாத்தேன்”

“சார்.நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.இதெல்லாம் முடியாதுன்னு.நீங்க கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தா பயந்துடுவோம்னு நினைக்கிறீங்களா.நான் நைனாகிட்ட காலையிலேயே பேசிட்டேன்.நீங்க கிளம்புங்க.அவருகிட்ட ஊர்ல பேசிக்கொங்க”.அமர்ந்த இடத்திலிருந்தே சத்தமாக பேசினான் ஸ்ரீநிகேதன்.

நிகேத் என்று ஸ்ரீநிகேதன் மீது பாயும் தொனியில் கத்தினாள் தனு.ஸ்ரீநிகேதன் உடனே அமைதியாகி எழுந்து விட்டான்.மேலே பால்கனியில் நின்றுகொண்டிருந்த ஓனர் என்னம்மா என்று கேட்டார்.ஓண்ணுமில்லை என்று சொல்லி கதவைத்திறந்து பரதனை உள்ளே வரச் சொன்னாள்.பரதன் அசையாமல் அங்கேயே நின்றார்.அவரை வரச் சொல் என்று ஸ்ரீநிகேதனுக்கு கட்டளையிட்டாள்.

“வாங்க”

ஜன்னல்களைத் திறந்து விட்டு மின்விசிறியை சுழற்றவிட்டாள்.பரதன் சோபாவில் அமர்ந்தார்.ஸ்ரீநிகேதனும் தனுவும் ஆளுக்கொரு திசையில் சென்று விட்டார்கள்.ப்ரண்ட்லைன் இதழில் விருத்தாசலத்தில் 2003யில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கின் தீர்ப்பை பற்றிய கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தார் பரதன்.வழக்கிறஞர் ரத்தினத்திற்கு தீர்ப்பு பற்றிய கட்டுரை வந்திருப்பதை குறித்து குறுஞ்செய்தி அனுப்பினார்.உடை மாற்றி வந்து அமர்ந்தான் ஸ்ரீநிகேதன்.தனு ஸ்ரீநிகேதனுக்கு காபி போட்டு எடுத்து வந்தாள்.

“அவருக்கு”

“நாங்க இப்ப தான் வெளிய டீ குடிச்சோம்”

“அப்படியா” 

பரதன் இதழை மூடி பையில் வைத்தார்.மின்விசிறியின் இரைச்சலை தவிர அறையில் வேறு சத்தமில்லை.இரைந்து கிடைக்கும் பூக்களை எடுத்து சரடாக்குவது போல ஸ்ரீநிகேதன் தான் சொல்ல வேண்டிய சொற்களை கோர்த்துக் கொண்டிருந்தான்.

“சாரி பரதன் சார். உங்கள வெளிய வைச்சு கத்திட்டேன்.”

“இட் இஸ் ஓகே.ரொம்ப பதற்றமா இருக்கீங்க.நேத்து உங்க வைஃப் கிட்ட இன்னிக்கு வருவேன்னு சொல்லிட்டுத்தான் போனேன்.”

“சென்னாள்.ஆனா நேத்து சொன்னதுல எதுவும் மாற்றம் இல்ல சார்.”.

“பரதன்னே கூப்பிடலாம்.நான் நேத்து நிறைய பேச முடியல.நீங்க பொறுமையா கேட்க விரும்பல.சினிமாவுக்கு வேற போகனும்னு சொன்னீங்க.அதனால கிளம்பிட்டேன்.கொஞ்சம் நிதானமா பேசுனா நிறைய பேசுலாம்.”

“இல்ல பரதன்.உங்களுக்கு புரியல.நானே ஒத்துக்கிட்டாலும் எங்க நைனா அதாவது எங்க அப்பா இதுக்கு சம்மதிக்க மாட்டாரு”

“ம்.நீங்க லவ் மேரேஜ் தானே ஸ்ரீநிகேதன்” என்று கேட்டுவிட்டு பரதன் தனுவையும் பார்த்தார்.

“ஆமாம்”

“நீங்க கம்மா நாயுடு , தனு செங்குந்த முதலியார் இல்லையா”

“ஆமா.உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்”

“உங்க அப்பா கல்யாணத்துக்கு முதல்ல சரின்னு சொல்லை இல்லையா”

“ஆமாம்”

“நீங்க என்ன செஞ்சீங்க”

“எங்க அத்தைக்கு கூட இந்த விஷயமெல்லாம் முழுசா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லையே.உங்களுக்கு எல்லா விபரமும் தெரியுது”

“உங்க அப்பா ஏத்துக்கவே முடியாதுன்னு சொன்னதுக்கு அப்பறம் எப்படி உங்க கல்யாணம் நடந்துச்சு.அத கொஞ்சம் சொல்லுங்க”

“அவரு ஒரு ஆறு மாசம் ஊருக்கு போகல” என்று தனு சொல்லத் தொடங்கினாள்.

“நானே சொல்றேன்.நான் ஒரு ஆறு மாசம் ஊருக்கு போகல.ஃபோன் பேசல.நைனாவால அதுக்கு மேல பிடிவாதமா இருக்க முடியல.இங்க சென்னையில வந்து பாத்து பேசினாரு.நான் தனு இல்லனா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டேன்.அதே மாதிரி ஊரு பக்கமும் வர மாட்டேனு சொல்லிட்டேன்.அப்பக்கூட அவரு சரின்னு சொல்லல.கம்மால பொண்ணு எடுக்கலன்னா அவமானமா போயிடும்னு புலம்பினாரு , நான் சங்கத்து தலைவரா வேற இருக்கேன்னு சத்தம் போட்டார்.சொத்துல ஒரு ரூபா கூட கொடுக்க மாட்டேனு மிரட்டினாரு.”

“ம்”

“ஆனா எனக்கு வேற வழி தெரியல.நான் பிடிவாதமா இருக்கவும் வேற வழி இல்லாம கல்யாணம் செஞ்சு வைச்சார்.நான் ஒரே பையன் இல்லையா.பொண்ணும் கிடையாது. அவருக்கும் என்னைய விட்டா வேற யாருமில்லை.”.

“குட் ஸ்ரீநிகேதன்.லவ் பண்ண பொண்னை யாரு என்ன சொன்னாலும் கைவிடக்கூடாதுன்னு பிடிவாதமா இருந்தீங்க இல்லையா.அதனால தான் உங்கள பாத்து பேசலாம்னு வந்தேன்”

“ஆனா இந்த அளவுக்கு தெரிஞ்சு வைச்சிருங்கீங்க,போலீஸ் மாதிரி.நிகேத்,தெரியுமா – நீ காலையில கேட்டியே நேத்து எப்படி அட்ரஸை பிடிச்சாருன்னு,எங்க ஃபேங்க்ல ரசூல்னு ஒருத்தர் – நாம கூட அவர் கல்யாணத்துக்கு போயிருந்தோமே – அவர் மூலமாத்தான் இவருக்கு தெரிஞ்சிருக்கு” என்று தகவல்களை உற்சாகமாக அடுக்கினாள் தனு.

“ஓ.அப்படியா” என்று ஆச்சரியமாக கேட்டான் ஸ்ரீநிகேதன்.

“இப்ப நான் என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க பரதன்”

“ஃபைன்.உங்க அத்தைக்கு பெருசா செலவு எதுவும் இல்ல.உங்க அத்த பொண்ணு பானுவுக்கு கல்யாணம் செய்யனும்.உங்க அத்தைக்கு கடைசிக் காலத்துக்கு யாரையும் நம்பி இல்லாம இருக்கக் கொஞ்சம் பணம் அவங்க பேருல ஃபேங்கல போடனும்.அவ்வளவுதான்”

“ம்”

“உங்களுக்கு மொத்தம் எண்பது லட்சம் வரும்னு நினைக்கிறேன்.ஒரு இருபது லட்சம் அதாவது நாலுல ஒரு பங்கு கொடுத்தீங்கனா போதும்”

“ஆனா அவங்களுக்கு நிறைய செஞ்சாச்சு பரதன்”

“எனக்கு அந்த விபரங்களும் தெரியும்.நான் அதப்பத்தி விபரமாக பேச முடியும்.உங்க அத்தையை கல்யாணம் செஞ்சி கொடுத்தவருக்கு அப்பவே மனநில பாதிப்பு இருந்துச்சு.உங்க அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியும்.தெரிஞ்சேதான் கல்யாணம் பண்ணி வெச்சாரு.நிறைய செஞ்சாச்சுன்னு சொல்றீங்க.அப்படியிருந்தா அவங்க ஏன் வீட்டு வேல செஞ்சு பொழைக்கனும் ஸ்ரீநிகேதன்.”

“ஆனா அப்பா இதுக்கு ஒத்துக்க வாய்ப்பே இல்ல பரதன்”

“கல்யாணத்துக்கு பிடிவாதம் பிடிச்ச மாதிரி இதுக்கும் பிடிவாதம் பிடிச்சிங்கனா ஒத்துக்குவார்”

“இல்ல பரதன்.உங்களுக்குத் தெரியும்.இன்னைக்கு சிட்டில ஒரு ஸ்கொயர் பீட் பத்தாயிரம் போகுது.ஆயிரம் ஸ்கொயிர் பீட்னாலே இஸியா ஒரு கோடி போயிடும்.கொஞ்சம் நல்ல பீல்டர்ஸா பாத்து வாங்கினா ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் சேர்த்து ஒன்றரை கூட போகும்.இந்த காசு முழுசா கிடைச்சா எனக்கு உதவியா இருக்கும்.தனு வீட்ல வேற என்ன இன்னும் வீடு வாங்காம இருக்கீங்கனு கேட்குறாங்க”

“அப்போ உங்களுக்கு அடிப்படையில இதுல இஷ்டம் இல்ல”

“லேடீஸ்க்கு ஷேர் கொடுக்கறது எல்லாம் அதிகம் பழக்கம் இல்லயே பரதன்.இப்ப தானே அதப்பத்தி நிறைய பேசுறாங்க.முன்ன அப்படி ஒரு விஷயமே இருந்ததில்லையே”

“ஜாதி மாத்தி கல்யாணம் பண்றது கூடத்தான் முன்ன அதிகம் இல்ல”

“இப்போ நான் ஜாதி மாத்தி கல்யாணம் பண்ணதுதான் தப்புன்னு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டான்.

“நாங்க கொடுக்குறோம்” என்று சட்டென்று சொன்னாள் தனு.

“என்ன தனு உளர்ற” என்று அருகில் அமர்ந்திருந்த அவளது கைகளை பற்றினான் ஸ்ரீநிகேதன்.

“சும்மா இருங்க நிகேத்.நியாயம்னு ஒண்ணு இல்லையா.இருபது லட்சம் தானே கேக்குறாங்க.உங்க வருஷ வருமானமே இருபத்தியைஞ்சு லட்சம் இல்லையா.நானும் சம்பாதிக்கிறேன்.அப்பறம் என்ன.இத நீங்க செய்லனா இந்த பாவம் நமக்கு பொறக்குற குழந்தையை கூட சும்மா விடாது.”

“இருபது லட்சம் ஜாஸ்திடீ”

“ரொம்ப கம்மியா கேக்குறாங்க.நாற்பது லட்சம் கேட்கலாம்.” என்று கூர்மையாக பேசினாள் தனு.

“நைனா ஒத்துக்கவே மாட்டாரு”

“அதெல்லாம் பாத்துக்கலாம்.பரதன் நாங்க நிச்சயம் தர்றோம்.இது உறுதி.நீங்க இத இறுதியானதாவே எடுத்துக்கலாம்”.

பரதன் எதுவும் பேசாமல் வெறுமன தலையாட்டினார்.ஸ்ரீநிகேதன் பதற்றத்துடன் நகத்தை கடிக்கத் தொடங்கினான்.பரதன் எழுந்து தான் ஒருவருடன் ஃபோனில் பேச வேண்டும் ஐந்து நிமிடங்கள் என்று சொல்லி வெளியே சென்றார்.

“என்ன நீ இருபது லட்சம் கொடுக்குறோமுனு சொல்லிட்ட.அறிவில்ல.”

“அவரு சொல்றது நியாயம் தானே நிகேத்.நாளைக்கு நமக்கு பொண்ணு பொறந்தா அவளுக்கு நாம பங்கு கொடுக்க விரும்ப மாட்டோமா.எங்க வீட்டு சொத்துல பங்கு வருதுன்னா நீங்க வேணாம்னா சொல்லப் போறீங்க.”

“உங்க கிட்ட சொத்து இல்ல”

“ஆமா இல்ல.ஆனா இருந்திருந்தா”

“ஆனா நீ டக்குனு ஓக்கே சொல்லி இருக்கக்கூடாது.அதிகப்பட்சம் ஐந்து லட்சம் கொடுத்திருக்கலாம்” என்று ஸ்ரீநிகேதன் தனுவின் காதருகில் வந்து கிசுகிசுத்தான்.

“அவங்க உங்க அத்தை நிகேத்.அந்த பொண்ணு பானு உங்க அத்தை பொண்ணு.ரத்த உறவு.சம்மந்தமே இல்லாத ஒருத்தர் இரண்டு நாளா நம்ம வீட்டுக்கு அவங்களுக்காக வர்றாரு.உங்களுக்கு இந்த விஷயத்துல இருக்குற அப்ஸர்ட்னெஸ்செ புரியலயா.நாம தெரிஞ்சே தப்பு பண்ணக்கூடாது நிகேத்.பெரிய பாவம்”

“பாவ புண்ணியம் பாத்தா வாழ முடியாது தனு”

“ஆனா நம்ம குழந்தைங்க நல்லா வாழணும் நிகேத்.”

“தனு நீ இத ரொம்ப செண்டிமெண்டலா பாக்குற”

“என்ன நிகேத் பேசுறீங்க.ஒன்றரை கோடி போட்டு வீடு வாங்கி நாம ஜம்முனு இருக்கணும்.அவங்க பத்துப் பாத்திரம் தேச்சு வாழணுமா”

“தனு”

“நிகேத்.நீங்க அவங்களுக்கு பணம் கொடுக்கலனா பரவாயில்லை.ஆனா பணம் கொடுக்கலனா நாம குழந்தைங்க பெத்துக்க வேணாம்.நம்ம பாவம் நம்மோட போட்டும்.அவ்வளவுதான்”.தனு பேசிக்கொண்டிருக்கும் போதே தொண்டை உடைந்து அவளது சொற்கள் கிரீச்சிட்டன.ஸ்ரீநிகேதன் பெருமூச்சு விட்டான்.அதன் பிறகு அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.உள்ளே வந்த பரதன் கழிவறையை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா என்று கேட்டார்.தனு நேராக சென்றால் இறுதியில் இருக்கிறது என்று வழி காட்டினாள்.

பரதனுக்கு காபி போட்டு எடுத்து வந்தாள்.அவர் காபியை மெல்ல சுவைத்து மென்றார்.காபி நன்றாக இருக்கிறது என்று சொன்னார்.டம்ளரை டீபாயில் வைத்துவிட்டு தன் பையை எடுத்துக் கொண்டு எழுந்தார்.ஸ்ரீநிகேதனை பார்த்து என் இடத்தில் நீங்கள் இருந்து , இல்லை உங்கள் அத்தை இடத்தில் நீங்கள் இருந்து உங்கள் தந்தையிடம் பேசுங்கள்.நாம் நினைத்தது போல எல்லாம் நடக்கட்டும்.ஒரு மாதத்தில் பணம் கொடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.ஸ்ரீநிகேதன் சரி என்பது போல தலையாட்டினான்.இருவரையும் பார்த்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நொடியே வீட்டை விட்டு வெளியேறினார் பரதன்.வாசல் வரை வழியனுப்ப சென்ற தனு ஏன் பாதி பங்கு கேட்கவில்லை என்று கேட்டாள்.அப்படி கேட்டால் எதுவுமே கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லி புன்னகைத்து கிளம்பினார்.முந்தைய நாளைப் போலவே சத்தமில்லாமல் கீரில் கதவைத்திறந்து மெல்ல தாழிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்.அவர் செல்திசையை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த தனு வாசல் விளக்கை போட்டுவிட்டு உள்ளே வந்தாள்.ஸ்ரீநிகேதன் அறைக்குள் சென்று படுத்தான்.அவள் காபி டம்பளர்களை எடுத்துக்கொண்டு அடுப்பறைக்குச் சென்றாள்.மின்விசிறியின் இரைச்சலை தவிர அங்கு வேறு எந்த சத்தமும் இல்லை.

- வனம் இணைய இதழில் பிரசுரமான சிறுகதை 

Photograph- Arnold Lakhovsky , https://commons.wikimedia.org/w/index.php?curid=31106282


 

No comments: