பிளவு






 பச்சை நிற ஜன்னல் கண்ணாடிகள் கொண்ட அந்த அறையில் காலை வெயில் சோர்வூட்டும் மயக்கமூட்டும் ஒளியை பாய்ச்சியது.இரண்டு பக்கமும் ஜோபி இருந்த சாம்பல் நிறச் சட்டையின் பொத்தானை திறந்து சிகரெட் ஒன்றை எடுத்தான்.மற்றொரு ஜோபியிலிருந்து தீப்பெட்டியை எடுத்து சிகரெட்டை பற்ற வைத்தான்.ராஜன் என் அறையில் யாரையும் நான் சிகரெட் பிடிக்க அனுமதித்ததில்லை என்றார் இப்ராஹிம்.இது மனநல மருத்துவகம்.நான் மிகவும் பதற்றமாக உணர்கிறேன், நான் சிகரெட் பிடித்துக்கொள்கிறேனே என்று கெஞ்சும் தொனியில் சொன்னான் ராஜன்.இப்ராஹிம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.ஃபிரிட்ஜை திறந்து மிகவும் குளிர்ந்திருந்த நீரை நீரின் பெயர் ஆங்கில லிபியில் பல வண்ணங்களில் எழுதப்பட்டிருந்த  வெள்ளை நிற கண்ணாடி குவளையிலிருந்து பச்சை நிற கிளாஸில் ஊற்றி மெல்லக் குடித்தார்.தொண்டையில் தண்ணீரை நிறுத்தி கிளூக் என்ற ஒலியை எழுப்பினார்.கையில் கிளாஸூடன் சுழல் நாற்காலியிலிருந்து எழுந்து நடந்தார்.ரோஸ் வுட் மரத்தாலான பீரோவிலிருந்து பித்தளை ஆஷ் ட்ரேவை எடுத்து மேஜையில் வைத்தார்.அந்த பீரோவை மறுபடியும் மூடும் போது அதில் பொருத்தப்பட்டிருந்த நிலைக்கண்ணாடியில் தன் முழு உருவத்தை பார்த்தவாறு நின்றார்.அவரது அகன்ற நெற்றியை இடதுகையால் தேய்த்தார்.ராஜன் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்புறத்திலிருந்து அவனைப் பார்த்தார்.பேசத் துவங்கினார்.

இன்று நவீன உளவியலில் பிராய்ட்,அட்லர்,கார்ல் யுங் போன்றோரின் சிகிச்சை முறைகளும் கோட்பாடுகளும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை ராஜன்.ஒருவனுக்கு மனச்சோர்வு என்றால் அதற்கு அவனது ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வோ, அதிகாரத்தை அடைய முடியவில்லை என்ற தாழ்வுணர்ச்சியோ , அல்லது கூட்டு நனவிலியை தொடர்பு கொள்ள இயலாத துண்டிக்கப்பட்ட பிரக்ஞையோ தான் காரணம் என்று யாரும் பேசுவதில்லை.உங்களின் கனவுகளை யாரும் ஆராயப்போவதும் இல்லை.உங்கள் வாழ்க்கை வரலாற்றை அறிந்து உங்களின் மனச்சோர்வு உங்களின் பால்ய காலத்தின் துர்கனவின் விளைவா என்று அறிய முற்படப்போவதும் இல்லை.நானும் அத்தகைய ஒரு உளவியலாளன் தான்.இன்று அனைத்தையும் நாம் புறவயமானதாகத்தான் பார்க்கிறோம்.உடல் மட்டும் தான் நம்மிடம் இருக்கிறது.ஆன்மா மனம் ஸ்பிரிட் சைக் அல்ல.இன்று சிந்தனைகள் இதயத்திலிருந்து உருவாகிறது என்று ஒரு பேச்சுக்காக கூட நாம் சொல்லத் தயங்குகிறோம்.இன்று பல மாநிலங்களில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.Only Matter.பொருள் தான் பேசுபொருள்.மனச்சோர்வு என்பது மூளையில் ஏற்படும் ரசாயன சமநிலைக்குலைவு.சமநிலையை உருவாக்க மாத்திரைகள் வழங்கப்படும்.நானும் வழங்குவேன்.அது உங்களை நன்றாக உறங்க வைக்கும்.காலையில் எழும் போது உற்சாகமாக உணர வைக்கக்கூடும்.அது பயன் அளிக்கவும் கூடும்.ராஜன் மற்றொரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

ஆனால் நான் உங்களுக்கு இதை சொல்ல விரும்புகிறேன்.இருள் என்பது குறைந்த ஒளி.தூய்மையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை . நம்முடன் எப்போதும் நம் நிழல் இருக்கிறது.தண்ணீரின் மேல் நிழல் விழும் போது கவனித்துப் பாருங்கள்.நிழலுக்கு தனியான பயணம் உள்ளது.அது உங்களின் உடலை மட்டுமே சார்ந்தது இல்லை.அது தன்னளவில் தனியானது.நீங்கள் என்னிடம் உங்களின் மனச்சோர்வை பற்றி சொன்னீர்கள்.உங்கள் அளவுக்கு இத்தனை பிரக்ஞை பூர்வமாக தன் சிக்கலை உணர்ந்தவர்களை குறைவாகத்தான் பார்க்கிறேன்.பெரும்பாலானவர்களுக்கு தங்கள் சிக்கலை கோர்வையாக சொல்லத் தெரியாது.நாம் பல கேள்விகளை கேட்டு ஊகிக்க வேண்டியிருக்கும்.தண்ணீரை தொண்டையில் வைத்து இப்ராஹிம் எழுப்பும் கிளூக் ஒலி ராஜனை எரிச்சல் அடையச்செய்தது.

இன்று பாப் மார்லியும் சே குவேராவும் மோஸ்தர் மட்டுமே.ஏன் காந்தி கூட அந்தப் பட்டியலில் சேரத் துவங்கிவிட்டார்.இயற்கை விவசாயம் குறித்த உங்களின் எண்ணங்கள் மேலோட்டமானவை.உங்களுக்கு தெரிந்திருக்கலாம், நாம் இன்று உணவு தன்னிறைவு அடைந்திருப்பது பசுமை புரட்சியால் தான்.நாம் உணவிற்காக இன்று வேறு நாட்டிடம் கை ஏந்த வேண்டிய தேவை இருக்க வில்லை.நான் விவாதத்தரப்பாக என் பார்வையை முன்வைக்கிறேன்.நீங்கள் நான் சொல்லும் விஷயங்களை பரிசீலித்து பாருங்கள்.நான் கொடுத்திருக்கும் மாத்திரைகளை இப்போதைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம்.உண்மையில் இயற்கை விவசாயம் என்ற ஒன்று இருக்கிறதா ராஜன்.அப்படி ஒன்றும் இல்லை.விவசாயம் என்பது தாணியத்திற்காக நமது நிலத்தை பதப்படுத்துவது.அதற்கு தேவையான அளவு நீர் பாய்ச்சுவது.காப்பது.அறுவடை செய்வது.காட்டில் வளரும் மரங்களுக்கும் செடிகளுக்கும் நாம் வளர்க்கும் செடிகளுக்கும் மரங்களுக்கும் வித்யாசம் உள்ளது.நாம் மனிதர்கள் உணவு உட்கொள்வதற்காகத்தான் விவசாயம் செய்கிறோம்.காட்டுப் பன்றி தனது நிலத்திலுள்ள கிழங்குகளை மண்ணைக் கிறி உண்பதை இயற்கை விவசாயி அனுமதிப்பார் என்று சொன்னால் ஏற்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் டாக்டர் இப்ராஹிம்.இரண்டு விஷயங்கள்.ராஜனுக்கு பின் நடந்தவாறு பேசிக்கொண்டிருந்த இப்ராஹிம் தான் பேசுவதை நிறுத்தினார்.எனக்கு நீங்கள் தண்ணீரை தொண்டையில் நிறுத்தி கிளூக் என்ற ஒலி எழுப்பதை சகிக்க முடியவில்லை.இரண்டாவது அறை மிகவும் குளிர்ந்திருக்கிறது.எனது சிகரெட்டும் தீர்ந்துவிட்டது.உங்களிடம் சிகரெட் இருந்தால் தாருங்கள்.அல்லது அறையின் வெப்பத்தை கூட்டுங்கள்.அவன் இதை சொல்லும் போது இப்ராஹிம் அமர்ந்திருக்காத சுழல் நாற்காலியை பார்த்தவாறு சொன்னான்.அவரை பார்த்து சொல்லவில்லை.இப்ராஹிம் தன் கண்ணாடி கிளாஸை மேஜையில் வைத்தார்.மன்னிக்கவும்.நான் உங்களுக்கு இந்த சத்தம் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கவில்லை.அறையின் வெப்பத்தை அதிகரித்தார்.தன் நீல நிற காட்டன் பேண்டிலிருந்து 555 சிகரெட் பெட்டியை திறந்து ராஜனிடம் ஒன்றை கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்து பற்ற வைத்தார்.நான் பெரும்பாலும் அறையில் சிகரெட் பிடிப்பதில்லை என்றார்.

ராஜனுக்கு அருகில் இருந்த நாற்காலியில் வந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்தார் இப்ராஹிம்.சிறிய மெல்லிய உடல்.நாற்காலிகளில் கால் மேல் கால் போட்டு அமர்வதற்கு சிறய மெல்லிய உடல் கச்சிதமாக பொருந்துகிறது.இருள் என்பது குறைந்த ஒளி என்று சொன்ன பாரதியை உளச்சிகிச்சைக்கு உட்படுத்தியிருக்க வேண்டுமா டாக்டர் இப்ராஹிம் என்று கேட்டான் ராஜன்.இப்ராஹிம் இல்லை என்று தலையசைத்தார்.நான் சொல்ல வருவதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.உங்கள் சிக்கலுக்கு இன்றைய நவீன உளவியிலில் மருத்துவம் இல்லை.அதீத தூய்மையும் தூய்மை சார்ந்த உங்கள் பார்வையும் சிக்கலுக்கு உரியவை என்று நான் கருதுகிறேன்.தூய்மையான கோட்பாடு,தூய்மையான அமைப்பு ,அதை எந்த பிசிறும் இல்லாமல் தூய்மையாக பின்பற்றும் மக்கள் என்ற உங்கள் எண்ணங்கள் உங்களை மிகவும் துயரப்படுத்துகிறது.உங்களின் மனச்சோர்வு , ஏக்கம் அதனால் உருவாகியிருக்கும் இந்த நடுக்கம் , பதற்றம், வேலையில் கவனமின்மை , சோதனைக்கூடத்தில் மயங்கி விழுந்தது அணைத்தும் தொடர்புடையவை.மனிதனுக்கு நிழல் இருக்கிறது.மனிதன் உருவாக்கும் அமைப்புகளுக்கும் அது பொருந்தும்.நீங்கள் சற்று இயல்பாக இருக்கலாம்.இது மிகவும் வன்முறையான வாக்கியம் என்றாலும் தூய்மையும் ஒரு வன்முறைதான் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் ஒரு Plant Pathologist.செடிகளுக்கு வரக்கூடிய நோய்களை கண்டறிவது, அதற்கான தீர்வுகளை உருவாக்குவது என்ற உங்களின் வேலை உண்மையில் நல்ல மானுட சேவை.நீங்கள் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனம் மரபணு மாற்று விதைகளை உருவாக்குவதை பற்றி கவலைப் படுகிறீர்கள்.நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.மரபணு கத்திரிக்காய், மரபணு பருத்தி இவை சூழலை பாதிக்கும் , இயற்கையை பாதிக்கும் என்று உங்களால் தீர்மானமாக சொல்ல முடியுமா.எது இயற்கை.சரி , அதற்குள் நாம் செல்ல வேண்டாம்.மரபணு கத்தரிக்காயால் பாதிப்பு எதுவும் இல்லை என்று உங்கள் நிறுவனம் ஒரு புள்ளி விபரத்தை வெளியிடும்.ஏதேனும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு மற்றொரு புள்ளி விபரத்தை வெளியிடும்.அந்த சுற்றுச்சூழல் அமைப்பும் கருத்தரங்கில் பிளாஸ்டிக் பொத்தல்களைத்தான் பயன்படுத்தும்.அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது இல்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.ஆனால் பெரும்பாலும் வேறு வழி இருப்பதில்லை.ஆனால் அதற்கு அப்பால் இதனால் உருவாகும் அறக்கேள்விகளுக்கு நம் யாரிடமும் பதிலில்லை.மனிதன் இயற்கையை தன் விருப்பத்திற்கு ஏற்ப புரமைக்கும் விருப்புறுதி கொண்டவன்.நாம் என்ன சொன்னாலும் சரி , மனிதனுக்கு இது விதிக்கப்பட்டிருக்கிறது.அவன் எதையும் அறிய விரும்புகிறான்.அவனால் ஒரு போதும் இயற்கையின் முன் சரண் அடைய முடியாது.நான் நிறைய பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன்.நான் சொல்ல விரும்பியதை சொல்லி விட்டேன் ராஜன்.

சுவற்றில் தொங்கிய போட்டோ பிரேமில் நெற்றியில் செந்நிற பெரிய குங்குமப்பொட்டு ஈட்டு தலை கேசத்தை விரித்து அமர்ந்திருந்த இளம் பெண்ணின் கோட்டோவியத்தை பார்த்தான் ராஜன்.எழுந்து அதன் அருகில் சென்றான்.புருவங்கள் , நாசி , கண் , வாய் என்று சின்னச் சின்ன கோடுகள்.அவள் தன் கால்களை விரித்து நேராக பார்த்தவாறு  அமர்ந்திருந்தாள்.அவளது இருகைகளும் உடலின் பின்பக்கம் தரையில் ஊன்றியிருந்தது.கைகளில் வளையல் இருந்தது. புடவை முந்தானையின் மறுமுனை கீழே சரிந்து விரிந்திருந்தது.கோட்டோவியத்தில் கண்கள் இல்லை.புருவங்கள் மட்டும் தான் இருந்தது.ஆனால் அவள் அலட்சியமாக பார்க்கிறாள் என்பதை உணர முடிந்தது.அவளது பாதங்களை பார்த்த போது அதிக தூரம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.அந்த கோட்டோவியத்தில் செந்நிற குங்குமம் விசித்திரமாக இருந்தது.அவனது முதுகுத்தண்டு ஜில்லிட்டது.பிரகிருதி அதன் இயல்பில் இருக்கும் போது சத்வ,ரஜோ,தமோ நிலைகள் சமவிசையில் இருக்கிறது.இதை யார் வரைந்தார்கள் டாக்டர் இப்ராஹிம் என்று கேட்டான்.யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்று சொல்லியவாறு அவன் அருகில் வந்தார்.இந்த ஓவியத்திற்கும் இதுவரை நீங்கள் பேசியதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லி சிரித்தான்.அவனது சிரிப்பு சட்டென்று நின்றது.உங்கள் குல தெய்வம் எது என்று கேட்டார்.திரெளபதி அம்மனும் காவல் தெய்வமான முத்தியால் ராவுத்தனும்.முத்தியால் ராவுத்தன் திரெளபதி அம்மனுக்கு காவல் இருந்ததாக சொல்வார்கள்.முத்தியால் ரத்தம் என்று கூட சிலர் சொல்வார்கள்.பெரிய கட்டை மீசையுடன் தலைப்பாகை அணிந்து அமர்ந்திருப்பார்.பெரிய கண்கள்.கூரிய நாசி.ஆசனத்தில் அமர்ந்து ஒரு காலை முட்டி மடக்கி அதன் மீது கையை தொங்க விட்டுருப்பார்.அவருக்கு அருகில் ஒரு கரிய நிற நாய் இருக்கும்.அவர் கழற்றி வைத்த வெள்ளை நிற காலணிகள் கூட இருக்கும்.எங்கள் குல தெய்வ கோவிலில் திரெளபதி அம்மன் தான் பிரதான தெய்வம்.தர்மன், பிமன் , அர்ஜூனன், நகுலன் சகாதேவன் சிலைகள் இருக்கும்.அங்கு சித்திரை மாதத்தில் திருவிழா,கூத்து எல்லாம் நடக்கும்.பாரதக்கூத்துதான்.கேள்விப்பட்டிருக்கிறேன்.நான் போனதில்லை.பார்த்ததில்லை.நான் எனது குல தெய்வ கோவிலுக்கு பள்ளி நாட்களில் சென்றது தான் கடைசி.உங்கள் ஓவியம் நன்றாக இருக்கிறது.நன்றி என்றார்.இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.நீங்கள் இன்னும் பெரிய கேன்வாஸில் சிந்தித்து பாருங்கள்.உங்களின் பிரச்சனை ஒரு வேளை தீர்ந்துவிடலாம் என்றார் இப்ராஹிம்.ஃபீஸ் என்றான்.வெளியே ரிசப்ஷனில் கொடுத்து விடுங்கள் என்றார்.நான் வருகிறேன் என்றான்.தலையசைத்தார்.

அமலா தன் கைகளை ராஜனின் கைகளுடன் பிணைத்தவாறு அமர்ந்திருந்தாள்.அவர்களுக்கு அருகில் மூன்று பெண்கள் செந்திற சோபாவில் அமர்ந்து ஹூக்கா இழுத்தார்கள்.தலையின் இரண்டு பக்கமும் முழுக்க சிராய்த்து மீசையை தாடை வரை வளர விட்டிருந்த மஞ்சள் நிற மத்திய வயதினன் அமலாவின் அருகில் வந்து தன்னுடன் நடனமாட இயலுமா என்று கேட்டான்.அவன் மெரூன் பேண்ட் அணிந்திருந்தான்.அவள் ராஜனை பார்த்தான்.பிறகு எழுந்து சென்று அவனுடன் நடனமாடுவது போல பாவனை செய்தாள்.போதும் என்று சைகை செய்துவிட்டு மறுபடியும் ராஜன் அருகில் அவனது தோளில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டாள்.பீர் கோப்பையை எடுத்து கொஞ்சமாக குடித்து விட்டு மேஜையில் வைத்தாள்.மின் ஒளி சூழற்றியடித்தது.பாடல் ஒன்று இரைத்ததுக்கொண்டிருந்தது.அவளது கூந்தலை தன் விரல்களால் நீவினான் ராஜன்.அவளது கூந்தலில் அவனது விரல்கள் வழுவிச்சென்றன.அவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.அவன் அவளது இடையை இறுகப்பற்றி இழுத்து அணைத்துக்கொண்டான்.நாம் எனது அறைக்கு செல்லலாமா என்று கேட்டான்.அவள் கடன் அட்டை கொடுத்து பணத்தை செலுத்துவிட்டு கிளம்பலாம் என்று சைகை செய்தாள்.அவளது இடையில் இருந்து கைகளை விடுத்து அவளது கைகளை பற்றிக்கொண்டு பப்பை விட்டு வெளியே வந்தான்.நீண்டிருந்த சாலையில் நீண்டு விழுந்த நிழல்கள் நாளின் முடிவை சோபையாக அறிவித்தன.

அவளது வெண்ணிற குர்தியை கழற்றி விசிறிவிட்டு அவளின் இடையில் , மார்பில் , ன்னங்களில் , கழுத்தில் ஆவேசமாக முத்தமிட்டான்.அவளது உதடுகளை தன் பற்களால் பற்றி இழுத்தான்.அவள் வலி பொறுக்காமல் கத்தினாள்.புணர்ந்த பின் அவளது மார்பில் தலை வைத்து உறங்கினான்.யாரோ ஒரு மோட்டார் பைக்காரன் ஆக்ஸிலேட்டரை வேகமாக திருகியபடி சாலையில் சத்தம் எழுப்பியபடி சென்றான்.திடுக்கிட்டு எழுந்தான் ராஜன்.

அமலா இருவருக்கும் காபி போட்டு எடுத்து வந்தாள்.இந்த குர்தி உனக்கு நன்றாக இருக்கிறது என்றான்.அதனால் தான் அறைக்கு வந்த உடனேயே கழற்றினாயா என்றாள்.அவளது நாசியை பற்றி இழுத்தான்.அவள் வலிக்கிறது என்று சினுங்கினாள்.எழுந்தமர்ந்து சுவற்றில் முதுகை சாய்த்து காபி குடித்தான்.அவள் அவனை பார்த்தவாறு இருந்தாள்.நெற்றி சுருக்கி என்ன என்றான்.ஒன்றுமில்லை என்றவள் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள போகிறாயா என்று அவன் கழற்றி போட்டிருந்த பேண்ட்லிருந்த மாத்திரை கவரையும் பிரிஸ்கிரிப்ஷனையும் எடுத்தவாறு கேட்டாள்.தெரியவில்லை என்றான்.நீ சிறிது காலம் வேலையிலிருந்த விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் , எங்காவது சென்று வரலாம் , உனக்கு வேண்டுமென்றால் நானும் விடுப்பு எடுத்து வருகிறேன் , நீ சோர்வாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது .நீ எதை எதையோ போட்டு குழப்பிக்கொள்கிறாய் என்றாள்.அவன் எதுவும் சொல்லவில்லை.அறச்சிக்கல் கொண்ட எதையும் செய்யக்கூடாது என்றால் காபி குடிப்பது கூட கஷ்டம் தான் என்றாள்.அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் தனது பீங்கான் கோப்பையை சட்டென்று விசிறி அடித்தான்.அது பல துண்டுகளாக உதறி சிதறியது.அதை சற்றும் எதிர் பார்க்காதவள் படுக்கையிலிருந்து எழுந்து அறையின் மூலையில் சென்று ஒடுங்கினாள்.இதற்குத்தான் நான் எதை பற்றியும் பேசுவதில்லை.இந்தளவுக்கு ஒரு ஜோக்கை கூட ரசிக்க முடியாவிட்டால் என்ன தான் பேசுவது என்று கத்தினாள்.எனது நுண்ணுணர்வு தமாஷ் விஷயம் இல்லை.கூட்டு பாவம் கூட்டு பொறுப்பு இவை ஜோக் அல்ல.கைகளை உயர்த்தி போதும் என்று சமிக்ஞை செய்தாள்.நாம் இதைப்பற்றி பிறகு பேசலாம் , இப்போது நான் கிளம்புகிறேன் என்றாள்.அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.அவளை போகாதே என்றும் சொல்லவில்லை.அவள் அவனது அறையில் வைத்திருந்த மாற்று உடையை அணிந்து தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றாள்.கதவை பட்டென்று இழுத்து சாத்தினாள்.

மலம் அசுத்தமானது , தூய்மையற்றது.அமலம் தூய்மையானது , சுத்தமானது.அமலா என்றால் தூய்மையானவள்.தூய்மை தான் எனது சிக்கல் என்கிறார் டாக்டர் இப்ராஹிம்.அமலாவும் அவர் சொல்வதுதான் சரி என்று சொல்கிறாள்.பால்கனியில் நின்றவாறு சாலையின் நடுவே இருந்த சாக்கடை மூடியால் ஏற்பட்டிருந்த பள்ளத்தை பார்த்தவாறு நின்றான்.வாகங்கள் இரவில் வேகமாக வந்து பள்ளத்தில் விழுந்து எழுந்து பெரும் சத்தம் எழுப்பி சென்றன.சாக்கடை அடைத்துக்கொண்டு சாலையில் வழிந்தோடியது.வீட்டுக்குள் சென்று முகத்தை கழுவ பைப்பை திறந்தான்.துர்நாற்றத்துடன் பழுப்பு நிறத்தில் நீர் கொட்டியது.சாக்கடை பைப் உடைத்துக்கொண்டு கசிகிறது.அது நண்ணீருடன் கலந்துவிட்டது.நாளை சீர் செய்து விடுவோம் என்று பாய் காலையில் சொன்னது நினைவுக்கு வந்தது.அமலா இந்த நீரைத் தானே பயன்படுத்தியிருப்பாள்.அவள் எதுவும் சொல்லவில்லையே என்று நினைத்துக்கொண்டான்.சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.அவளுடைய உடலின் மனம் அவனைப் பற்றிக்கொண்டது.சிதறி இருந்த பீங்கான் சில்லுகளை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டான்.

குட்டிக் குட்டி மேகங்கள் கொண்ட நீல வானத்தை பார்த்தான் ராஜன்.நாற்காலியில் அமர்ந்து ஸ்லைடில் மாதிரியை வைத்து நுண்ணோக்கி வழி பார்த்தான்.நுண்ணோக்கியிலிருந்து கண்களை எடுத்தவன் சோதனைக்கூடத்திலிருந் ஜன்னலின் வழி நீல நிற ஆகாயத்தை நோக்கினான்.ஒரு துண்டு வானம்.சட்டென்று கணினியில் மேலாளருக்கு ராஜினாமா செய்வதாக மின்னஞ்சல் அனுப்பினான்.உடனே தன் அறைக்கு வருமாறு பதில் மின்னஞ்சல் அனுப்பினார் மேலாளர்.தன் வெண்ணிற மேலங்கியை நாற்காலியில் கழற்றி வைத்துவிட்டு சென்றான்.சோதனைக்கூடத்தில் மயங்கி விழுந்து சென்றபின் ஒரு வாரம் கழித்து நேற்றுதான் வேலையில் சேர்ந்தீர்கள்.அதற்குள் ராஜினாமா செய்கிறீர்கள்.உங்கள் முடிவு அவசரகதியில் இருப்பது போல தெரிகிறது என்றார் மேலாளர்.தெரியவில்லை என்றான்.நீங்கள் ஏதோ தேவையற்ற கருத்தியல்களை எடுத்துக்கொண்டு குழப்பிக்கொள்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.நீங்கள் உங்கள் இடத்தில் வைத்திருந்த சஞ்சிஞை ஒன்றைப் பார்த்தேன்.இதைப்பற்றி எதுவும் முழுதாக புரியாதவர்கள் எழுதுவதை வாசித்து குழப்பிக்கொள்கிறீர்கள்.இன்று நமது நிறவனத்தை விட plant pathologyயில் முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறவனம் வேறு இல்லை.உங்களால் இதை விட சிறந்த வேலைக்கு செல்ல முடியாது.நீங்கள் வேண்டுமானால் விடுப்பு எடுத்து திரும்ப வரலாம் என்றார்.நான் நீண்ட ய்வு எடுக்க வேண்டும்.ஏதோ அவதியாக இருக்கிறது என்றான்.இதுதான் உங்கள் இறுதி முடிவா என்றார்.ஆமாம் என்றான்.உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டார்.அப்படியெல்லாம் நான் எதையும் நினைத்துக்கொள்வதில்லை என்றான்.சரி , எனக்கு உங்களிடம் இனி பேச ஒன்றுமில்லை.நீங்கள் போனால் மற்றொருவர்.நோட்டீஸ் பிரியட் தேவையில்லை.இன்றே நீங்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்கிறேன் , நீங்கள் போகலாம் என்றார்.

அகலமான இறக்கைகள் கொண்ட மின்விசிறி மிக மெதுவாக சுழன்று கொண்டிருந்தது.நயிலான் விரிப்பு கொண்ட ஈசி சேரில் வேஷ்டியும் கை வைத்த பனியனுமாக அமர்ந்திருந்தார் சின்னசாமி.அவரது கையில் நூற்றியெட்டு திவ்ய ஸ்தலங்களை விவரிக்கும் புத்தகம் இருந்தது.மேற்கூரையிலிருந்து கயிற்றால் தொங்கவிடப்பட்டிருந்த வெள்ளை பிங்கான் கிண்ணம் காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருந்தது.அதில் இருந்த பச்சை நிற குரோட்டன் செடியின் இலைகள் மெல்ல படபடத்தது.ராஜன் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தான்.சாம்பல் நிறப் புறா ஒன்று பால்கனியின் கிரில் கம்பிகளில் வந்து அமர்ந்தது.மத்தியானம் ஒரு பெரிய மானை முழுங்கிய மலைப்பாம்பு போல நெளிந்து கொண்டிருந்தது.

நீ உனது வேலையை ராஜினாமா செய்தது குறித்து எனக்கு கவலை இல்லை ராஜன்.ஆனால் நீ இங்கு இருக்க முடியாது.இது தாராவின் வீடு.தாராவிற்காக நான் எழுதிக்கொடுத்தது.அவளின் தந்தை என்ற வகையில் என்னை அவள் பராமரிக்கிறாள்.நான் உனது வயதில் சூட்கேஸை தூக்கிக்கொண்டு உலகம் முழுக்க சுற்றி இருக்கிறேன்.வேலையின் பொருட்டு பல இடங்களில் நல்ல சாப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறேன்.சென்னையில் மட்டும் நான்கு வீடுகள் வாங்கினேன்.எனக்கு வாடகை மட்டும் மாதம் ஒரு லட்சம் வருகிறது.தாரா இன்று சென்னையின் முக்கியமான வழக்கறிஞர்.அவளது கணவர் இந்த நாற்பது வயதில் பன்னாட்டு நிறுவனத்தின் Vice President.நான் அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.You have to take care of yourself. Maybe you can go to your girlfriend Amula. உனது அறைக்கான வாடகைக்கும் சாப்பிட்டிற்கும் உன்னை பராமரித்துக்கொள்வதற்கும் என்னிடம் பணம் எதிர்பார்க்காதே.நான் கொடுக்க மாட்டேன்.இதை நேற்று மாலையிலேயே சொல்லி இருப்பேன்.தாரா உன் மீது நிறைய அன்பு வைத்திருக்கிறாள்.நீ அதை சுரண்டுவதற்குத்தான் இங்கு வந்திருக்கிறாய் என்று அவளை எச்சிரித்தேன்.அவள் பொருட்படுத்தவில்லை.

உன் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.இருந்த கடைசி நம்பிக்கையும் நீ வேலையை விட்டதும் போய்விட்டது.உன்னால் நிலத்தில் ஒரு நாள் கூட விவசாயம் செய்ய முடியாது.வெயிலில் சுருண்டு விழுந்துவிடுவாய்.உன் அம்மா மாதிரி உனக்கும் பூஞ்சை உடம்பு.தாரா நீ அலுவலகத்தில் மயக்கம் போட்டு விழுந்தது, பெங்களூரில் சைக்காட்டிரிஸ்டை சென்று சந்தித்து குறித்து சொன்னாள்.நான் உன்னை நினைத்து உண்மையில் அருவெருப்பாக உணர்கிறேன் என்று சொல்லி முகத்தை சுளித்தார்.ராஜன் எழுந்து உள்ளே சென்று தன் பைபை எடுத்து வந்தான்.எனது காதலியின் பெயர் அமுலா இல்லை அமலா.தாராவிடம் நான் திரும்ப பெங்களூர் சென்று விட்டதாக சொல்லிவிடுங்கள் என்று சொல்லி கிரில் கதவை திறந்து வெளியே வந்தான்.சின்னசாமி அவன் போவதை பார்த்தவாறு இருந்தார்.பின்னர் சாய்வு நாற்காலியில் கண் அயர்ந்தார்.

செயின்ட் ஜான்ஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது பெரும் மழை பெய்து ஒய்ந்திருந்தது.அமலா ஸ்கூட்டியுடன் நின்று கொண்டிருந்தாள்.அவனைப் பார்த்து கையசைத்து புன்னைக்கத்தாள்.நானே அறைக்கு சென்றிருப்பேன்.இந்த அதிகாலையில் எதற்கு என்று கேட்டவாறு பின் இருக்கையில் அமர்ந்தான்.அவளது இடை வளைவில் தன் இருகைகளை வைத்து இறுக அணைத்துக்கொண்டான்.அறைக்குள் சென்றதும் படுக்கையில் விழுந்தான்.இருவருக்கும் தேநீர் வைத்து எடுத்து வந்தாள் அமலா.வாங்கி குடித்தவன் எனக்கு உறக்கம் வருகிறது, நான் உறங்குகிறேன் என்றான்.நான் காலைக்கும் மதியத்திற்கும் சமைத்து வைத்துவிட்டு செல்கிறேன்.எனது அறைக்கு சென்று துணிகளை எடுத்து வருகிறேன்.உனக்கு நான் போர் அடிக்கும் வரை இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லி சிரித்தாள்.அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் உறங்கிவிட்டான்.அவள் அவன் அருகில் அவனைப் பார்த்தவாறு அமரந்திருந்தாள்.

ஒரு பெரிய கரிய நிறப்பறவை ராஜனின் குதத்தை தன் அலகால் குத்திக் குதறியது.தன் உடலை திருப்பி அந்தப் பறவையை பற்றி இழுத்து தூக்கி வீச முயன்றான்.ராஜனால் தன் உடலை அசைக்கக் கூட இயலவில்லை.அவனை பெரிய பாறை ஒன்று அழுத்துவது போல இருந்தது.உடல் வெகுவாக கத்தது.அமலா கேசம் கலைந்து பார்வையை கீழே நிலை குத்தியவாறு அவனைப் பார்த்து இகழ்ந்து சிரித்தாள்.அவளது கண்களைச் சுற்றி கருவளையம் இருந்தது.கண் துவாரங்களில் பீளை.அவள் மலக்கிடங்குக்கு மத்தியில் அமர்ந்திருந்தாள்.ஈ ஈ என்று இளித்தாள்.அம்மா என்று அலறியவாறு கத்திக்கொண்டு எழுந்தான் ராஜன்.காதில் திருகாணிகளை மாட்டிக்கொண்டிருந்த அமலா திடுக்கிட்டு டி வந்தாள்.என் குதத்தில் ஒரு பறவை குத்திக்கொண்டிருக்கிறது என்று அலறினான்.வலி பொறுக்க முடியவில்லை என்று அழுதான்.அவள் அருகில் வந்தாள்.நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய் , நீ போ என்று அவளை நோக்கி கைகளை வீசினான்.அமலா செய்வதறியாது நின்றாள்.பக்கத்து அறைக்கு டிச்சென்று அங்கிருந்தவனை உதவிக்கு அழைத்தாள்.

ராஜன் பதினைந்து நாள் இங்கே இருக்கட்டும்.அவருக்கு இப்போது நல்ல உறக்கமும் ய்வும் தேவை.He might be suffering from Psychotic depression.நீங்கள் தினமும் வந்து பார்த்து செல்லுங்கள்.இது மூன்று படுக்கைகள் கொண்ட மருத்துவகம்.அவர் இங்கே என் கண்காணிப்பில் இருக்கட்டும்.ராஜனுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் NIMHANS செல்வது நல்லது.பார்ப்போம்.எல்லாம் சரியாகிவிடும்.இப்போது நீங்கள் புறப்படுங்கள் என்றார்.ராஜனின் வார்டுக்குச் சென்று அவனைப் பார்த்தாள்.அவன் ஆழ்ந்து உறங்கியிருந்தான்.கண்களில் நீர் கொட்ட ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ராஜனின் அறைக்குச் சென்றாள்.மேலாளரை அழைத்து உடம்பு சரியில்லை என்று விடுப்பு சொல்லிவிட்டு ராஜன் இல்லாத படுக்கையறைக்குள் நுழைந்தாள்.அயர்ச்சியாக உணர்ந்தவள் உறங்கலாம் என்று படுக்கையில் அமர்ந்தாள்.அங்கே ராஜன் அருந்தியிருந்த தேநீர் கோப்பையில் எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தது.

(மணல் வீடு சிற்றிதழில் பிரசுரமான சிறுகதை)

No comments: