|
நான் கடவுள் படத்தில் வரும் காட்சி |
சமீபத்திய ப்ரண்ட்லைன் இதழில் காசியில் காசி விஸ்வாநாதர் ஆலயத்தை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மிக துரிதமாக நிகழ்ந்து வருவதை பற்றி கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறது.சில நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டிடங்கள் , கோயில்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன.இந்த பணியின் நோக்கம் கங்கையிலிருந்து காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடையில் எந்த ஆக்கிரமிப்புகளும் இருக்கக்கூடாது என்பதாகும்.மத்தியிலும் , உத்தர் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கிறது.இடிக்கப்படுவதில் கோயில்கள் இருக்கிறது.அப்படியென்றால் இவர்களுக்கு எந்தளவு இறை நம்பிக்கை உள்ளது.இந்த செயல் திட்டத்தின் உள்நோக்கம் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் மசூதியை மையப்படுத்தியதாக இருக்குமோ என்ற ஊகமும் பதற்றமும் எழுந்துள்ளது.
உண்மையில் பாரதிய ஜனதா கட்சியிலும் ராஷ்டிரிய ஸ்வயம்ஸேவக் சங்கிலும் , விஷ்ய இந்து பரிஷத்திலும், பிற இந்துத்துவ அமைப்புகளிலும் இருப்பவர்கள் எந்தளவு இந்துக்கள்.இவர்கள் எந்தளவு இறை நம்பிக்கையாளர்கள்.இவர்கள் எந்தளவு இறைவனின் மீது நம்பிக்கை வைத்து பாவ புண்ணியத்திற்கு அஞ்சுபவர்கள்.இவை முக்கியமான கேள்விகள்.
இடது சாரி அமைப்புகள் வர்க்க அடிப்படையில் பாட்டாளி மக்களை ஒருங்கிணைத்து பாட்டாளி சர்வாதிகாரம் என்ற அரசு இயந்திரத்தை உருவாக்க முனைகிறது.உலக பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள் என்று அது கூக்குரலிடுகிறது.பாட்டாளிகள் அனைவரும் ஒன்று என்று அது உலக பாட்டாளிகளை ஒரே ஜனத்திரளாக ஒர் அமைப்பாக ஒர் இயக்கமாக மாற்ற முற்படுகிறது.அதற்காக சமூகத்தை முதலாளி X தொழிலாளி என்ற வர்க்க அடிப்படையில் பிரிக்கிறது.பாட்டாளியின் உழைப்பே முதலாளியின் லாபமாக மாறுகிறது.பாட்டாளிகள் ஒன்றிணைந்து மூலதனத்தை கைப்பற்றும் போது வர்க்க வேறுபாடுகள் அற்ற ஆன்மிகமான சமூகம் உருவாகும் என்று அது நம்புகிறது.அத்தகைய சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகள் இருக்காது.இது பாட்டாளிகள் ஒன்றிணையாமல் நிகழாது.இதனால் தொழிற்சங்கங்கள் உருவானது.கம்யூனிச அரசாங்கங்கள் உலகில் தோன்றியது. ஆனால் இன்று நவீன முதலாளித்துவத்தில் தொழிலாளியும் முதலாளி ஆகலாம் என்ற எண்ணம் உருவாகிவிட்டது. இடதுசாரிகள் பாட்டாளிகளை இனி அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்று சொல்லி ஒருங்கிணைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது.ஏனேனில் இன்று சுரண்டப்படும் தொழிலாளி நாளை சுரண்டும் முதலாளியாகலாம்.அதற்கான வாசல்கள் திறந்திருக்கிறது என்று அவன் உண்மையிலேயே நம்புகிறான்.இன்று அதிகாரத்தை ஒன்று முன்வாசல் வழி அடையலாம் அல்லது பின்வாசல் வழி அடையலாம்.இரண்டிலும் வெற்றி அடையும் வரைதான் போராட்டம்.வெற்றி பெற்ற பின் முன்வாசல் வழி வந்தவர் பின் வாசல் வழி வந்தவர் வரவேற்பரையில் அமர்ந்து தேநீர் அருந்துகின்றனர்.
இந்த இடதுசாரி இயக்கங்களின் மறுபக்கம் வலதுசாரி அமைப்புகள்.இவர்களுக்கு மதத்தின் மீதும் மொழியின் மீதும் சாதியின் மீதும் இனத்தின் மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஆனால் இதை கொண்டு பண்பாட்டு தளத்தில் ஜனத்திரளை ஒருங்கிணைக்க முடியும் என்பதை வலதுசாரி இயக்கங்கள் தொடர்ச்சியாக கண்டு உணர்ந்து பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளன.இதன் தலைவர்கள் சாதி மாறி திருமணம் செய்து கொள்வார்கள்.தங்கள் பிள்ளைகளுக்கு வேறு சாதியில் மதத்தில் திருமணம் செய்து வைப்பார்கள்.பண்பாட்டு தளத்தில் மக்களை ஒருங்கிணைப்பது , எதிரியை கட்டமைப்பது , வெறுப்பை உருவாக்குவது அதிகாரத்தை கைப்பற்றுவது இது வலதுசாரி இயக்கங்களின் பணி.இன்று
ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதனால் உருவாக்கப்பட்ட இயக்கங்களும் இந்து என்ற அடையாளத்தை கொண்டு இதை செய்கிறது.இவர்களுக்கு இந்து சமயம் மீதோ அதன் உண்மையான வரலாற்றின் மீதோ அக்கறை இல்லை.இவர்கள் ஒரு புனைவான வரலாற்றை உருவாக்குகிறார்கள்.அதில் ஒரு எதிரி கட்டமைக்கப்படுகிறான்.அந்த எதிரியால் தாங்கள் பிரிதிநித்துவப்படுத்தும் ஜனத்திரள் வரலாற்றில் எந்தளவு பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டது என்று பிரச்சாரம் செய்கிறது.பின்னர் நிகழ் காலத்தில் இந்த எதிரி தொடர்ந்து வளர்ந்து வருவதால் தாங்கள் பிரிதிநித்துவப்படுத்தும் ஜனத்திரள் தங்களின் பண்பாட்டு அடையாளங்களை தொலைத்துவிடும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கிறது.அவர்களுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது.அவர்களுக்கு அந்த வலதுசாரி அமைப்பு ஒர் அடையாளத்தை அளிக்கிறது.மக்கள் பண்பாட்டு தளத்தில் ஒருங்கிணைகிறார்கள்.அந்த வலதுசாரி அமைப்பு அதிகாரத்தை அடைகிறது.
ஒரு முறை அபிலாஷூடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் தொண்ணூறுகளின் உலகமயமாக்கல் கொள்கைக்கு பின்னர்தான் பாரதிய ஜனதா வளர்ந்தது என்றார்.அது மிக முக்கியமான அவதானிப்பு.உலகமயமாக்கல் கிராமத்து , சிறுநகரத்து மனிதனை பெருநகருக்கு அழைத்து வருகிறது.பெருநகரத்து மனிதன் அடையாளமற்றவன்.அந்நியன்.அவன் இந்திய அளவிலான ஒர் அடையாளத்தை ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் வழி பெறுகிறான்.அவன் தமிழனற்ற இந்தியன்.கிராம தெய்வங்கள் அற்ற பெருந் தெய்வங்களை கொண்ட இந்தியன்.ஹிந்தியை ஏற்கும் இந்தியன்.மொழி வழி மாநிலங்கள் என்பவை நிர்வாகத்தின் தேவை கருதிதானே தவிர அதில் உண்மையான கூட்டாட்சி அமைப்பு என்று எதுவும் இல்லை என்று கருதுபவன்.மொழி வேறுபாடுகள் அற்று சாதி வேறுபாடுகள் அற்று ஒரு மதத்தின் கீழ் ஒருங்கிணைப்படும் ஜனத்திரள் பெரும் ஜனசக்தி.அந்த ஜன சக்தி அதிகாரத்தை அடைவதற்கான வழி.பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது.
பாரதிய ஜனதா கட்சி பெருநகரத்தின் தனிமனிதனின் கட்சி.பெருநகரத்தின் உயர்த்தப்பட்ட இந்துக்கள் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சியை ஆதிரிக்கிறார்கள்.அவர்கள் கிராம தெய்வங்கள் அற்றவர்கள்.மொழி அற்றவர்கள்.வேர் அற்றவர்கள்.ஜாதி அற்றவர்களும் கூட.அவர்களின் அடையாளம் , அரண் இந்துத்துவ அமைப்புகள்.உண்மையில் இன்று நமது மொழி , பண்பாட்டு வழக்கங்கள் , கிராம பொருளாதாரம் , கிராம தெய்வங்கள் , நாட்டார் கலைகள் அழிந்து போவது தொழிற்மயத்தை முன்வைக்கும் உலகமயமாக்கல் கொள்கையால்தான்.அது வேறு எந்த எதிரியாலும் இல்லை.ஆனால் ஒரு பக்கம் இந்து என்ற அடையாளத்தை முன்வைத்தவாறு புஷ்பக விமானம் அன்றே இருந்தது என்று பிதற்றிக்கொண்டு மறுபக்கம் கிராம பொருளாதாரத்தை முழுமையாக வேரறுத்து வருகிறோம்.
வலதுசாரி அமைப்புகள் இந்துக்கள் அல்ல.அவர்கள் இந்துத்துவம் என்ற கோட்பாட்டை முன்வைத்து பண்பாட்டு தளத்தில் மக்களை ஒருங்கிணைத்து அதிகாரத்தை அடைய விரும்பும் அமைப்பு ,அவ்வளவுதான்.தொடர்ந்து கல்வி மாநில அரசின் அதிகாரத்திலிருந்து மத்திய அரசின் அதிகாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பல பள்ளிகள் தமிழக அரசின் பாடத்திட்டத்திலிருந்து மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.மாநிலங்களின் உரிமைகள் சிறிது சிறிதாக பறிக்கப்பட்டு கவர்னருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டு தமிழகத்தில் இருப்பது போல ஒரு அதிகாரமற்ற அரசை இந்திய அளவில் உருவாக்குவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.முற்றிலும் தொழிற்மயமான பெருநகரங்களை கொண்டு சிறு நகரங்களில் உள்ள தொழில்கள் நசுக்கப்பட்டு கிராம பொருளாதாரம் முழுமையாக இல்லாமல் செய்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது மட்டுமே ஒருவனுக்கான வாழ்வாதாரம் என்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது.இதனால் பண்பாட்டு தளத்தில் முற்றிலும் வேர்கள் அற்ற மனிதர்கள் முளைத்து வருவார்கள்.இந்த வேர்கள் அற்ற மனிதர்களுக்கு பண்பாட்டு தளத்தில் அடையாளத்தை அளிக்கும் இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் இருக்கும்.அவர்கள் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த படி இருப்பார்கள்.
இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் உயர்த்தப்பட்ட பெருநகரத்தை சேர்ந்த குழுந்தைகள் மட்டும் மருத்துவம் , பொறியியல் போன்ற படிப்புகளை படித்தால் போதும் என்று நினைக்கிறது.கிராம சிறு நகரத்து பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அதிகாரத்தை அடையும் மக்களுக்கு சேவகர்களாக இருந்து செத்து மடிய வேண்டியதுதான்.நீட் போன்ற இந்திய அளவிலான மருத்துவ தேர்வுக்கு உண்மையான நோக்கம் என்ன.இவை கிராம சிறு நகரத்து பிள்ளைகளை மருத்துவம் படிக்க விடாமல் செய்கிறது.இது பிற படிப்புகளுக்கும் தொடரும்.உயர்த்தப்பட்ட பெருநகரத்தை சேர்ந்தவர்கள் அதிகாரத்தை அடைவார்கள்.அவர்கள் அதிகாரத்தை உருவாக்குவர்கள்.பிறர் வாழ அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக மாற்றம் உண்மையில் மாநில கட்சிகளின் கூட்டமைப்பு.அது உருவாக வேண்டும்.பண்பாட்டு தளத்தில் பெருநகர் சார்ந்த மாற்று கலாச்சார வெளிகள் உருவாக வேண்டும்.கிராம சிறு நகர தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.கல்வி முழுக்க முழுக்க மாநில உரிமைக்கு மாற வேண்டும்.இவை நிகழ வேண்டும். மண் பயனுற வேண்டும்.