பிம்பம்




-1-

கூரை வேய்ந்திருந்த டீக்கடையில் பட்டர் பிஸ்கட்டும் டீயுமாக நின்றிருந்தார் கிருஷ்ணன்.புங்கை மரத்தின் இளஞ் சிவப்பு பூக்கள் எங்கும் சொரிந்தன.இளஞ் சிவப்பு பாவாடை தாவணியில் சிற்றருவியின் இரைச்சல் போல சென்று கொண்டிருந்தார்கள் பள்ளி யுவதிகள்.மாலை வெயிலின் சத்தம் வண்டின் ரீங்காரம் போல ஒலித்துக்கொண்டிருந்தது.சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டு  யுவதிகளை தாண்டிச் சென்றான் சிறுவன்.டீக்கடை பேஞ்சில் அமர்ந்தார் கிருஷ்ணன்.கவுன் அனிந்தவாறே வந்தார் ஏபிபி. கிருஷ்ணன் எனக்கும் டீ சொல்லுங்க என்று சொல்லிக் கொண்டு அமர்ந்து தினத்தந்தி பேப்பரை திறந்தார்.ராஜ் நரேய்ன் சிறுநீர் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது என்று மறுபடியும் சொல்லியிருந்தார்.சரண் சிங் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.ரஜினிகாந்த் தூப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் பில்லா திரைப்படத்தின் விளம்பரம் வந்திருந்தது.தன் கழுத்திலிருந்த மருக்களை தடவிக்கொண்டார் ஏபிபி.

ஏட்டை பார்த்து என்ன ஏட்டு இன்னிக்கு கிருஷ்ணன் அந்த கரண்ட் தெப்ட் கேஸ்ல கிராஸ் பண்ணது மாஜிஸ்திரேட்டுக்கு கேட்காதது இருக்கட்டும் , அது கிருஷ்ணனுக்கு கேட்டதா என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று சொல்லி சிரித்தார்.எல்லோரும் சிரித்தார்கள்.யாரையோ சொல்வது போல எழுந்து தனக்கும் ஏபிபிக்கும் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு கவுன் அணிந்தவாறு ஓப்பன் கோர்ட்டுக்குள் சென்றார் கிருஷ்ணன்.சிகரெட்டை பற்ற வைத்துவாறு கிருஷ்ணன் செல்வதையே பார்த்துக்கொண்டே இருந்தார் ஏபிபி.கோர்ட்டுக்குள் செல்லும் போது கையிலிருந்த கேஸ் கட்டு கீழே விழுந்தது.எடுக்கக் குனிந்தவர் இந்த வழக்கில் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைத்துக்கொண்டார். தொங்கு மீசையை நீவிவிட்டார்.ஓடுங்கியிருந்த அவரின் தோள்களில் கூன் விழுந்திருந்தது.மெல்ல உள்ளே சென்றார்.

விட்னஸ் நான்கு அருவாளால் வெட்டினார் என்று சொல்லியிருக்கிறார்.ஆனால் மருத்துவர் அளித்த அறிக்கையில் கத்தி காயம் என்று சொல்லியிருக்கிறார்.சந்தேகத்தின் பலனை எதிரி ராஜனுக்கு அளித்து இந்த நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது என்று தீர்ப்பளித்தார் மாஜிஸ்திரேட்.நான்காவது விட்னஸ் ஏட்டிடம் கிருஷ்ணன் அன்று கேட்கும் போது தனக்கு சரியாக புரியவில்லை.ஏதோ ஒரு குழப்பத்தில் அருவாள் தானே என்று கேட்டதற்கு ஆமாம் என்று சொல்லிவிட்டதாக புலம்பிக்கொண்டிருந்தார்.

காலணாவுக்கு நாவல் பழங்களை பெரிய அலுமனிய பாத்திரத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த மூதாட்டியிடம் வாங்கி ஒன்றை எடுத்து நாவில் சுழற்றி கொட்டையை துப்பினார் கிருஷ்ணன்.நாவல் பழ பொட்டலத்தை எடுத்து ஸ்கூட்டரின் பெட்டியில் வைத்தார்.கவுன் பையை ஸ்கூட்டர் கேரியரில் மாட்டினார்.மடித்துவிட்டிருந்த வேஷ்டியை எடுத்துவிட்டவாறு கிருஷ்ணன் அருகில் வந்தார் ராஜன்.அவர் செருப்பு அணிந்திருக்கவில்லை.நூறு ரூபாயை கொடுத்து விட்டு மீதியை வீட்டிற்கு வந்து தருவதாக சொன்னார்.ராஜனின் கால் கட்டை விரலில் லேசாக ரத்தம் கசிந்தது.கிருஷ்ணன் கேட்டதற்கு கீழே இறங்கி வரும் போது படியில் தடுக்கிவிட்டதாக சொன்னார்.அவரே மேலும் ராமலிங்க சாமிக்கு வேண்டிக்கொண்டதால் இனி செருப்பு அணிவதில்லை என்றார்.அசைவத்தை கூட விட்டுவிட்டதாக சொன்னார்.அவர் பேசும் போது கைகளை காற்றில் அலையவிட்டார்.எதிரியை தாக்க உண்மையில் ராஜனுக்கு கத்தியும் தேவையில்லை,அருவாளும் தேவையில்லை,இந்த தூண் கைகள் போதும் என்று நினைத்துக்கொண்டார் கிருஷ்ணன்.

ஏபிபி கிருஷ்ணனிடம் எதுவும் பேசாமல் ஜாவா பைக்கை எடுத்துக்கொண்டு சென்றார்.ஸ்கூட்டரின் கீக்கரை அடித்துவிட்டு சுற்றிவந்து ஸ்டாண்டிலிருந்த வண்டியை தள்ளி திருப்பினார் கிருஷ்ணன்.ராஜன் கிருஷ்ணனுக்கு சலாம் வைத்தார்.தலையை அசைத்து ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லிச் சென்றார் கிருஷ்ணன்.ராஜன் அடுத்து ஒருவரை அடித்துவிட்டு கைதாகும் போது  ஜாமின் எடுக்க அவரின் தம்பி ஐம்பது ரூபாயை எடுத்துக்கொண்டு சைக்கிளில் வருவார்.அதுவரை இந்த நூறு ரூபாய்க்கு மேல் எதுவும் வரப்போவதில்லை.கமினாட்டி பய என்று ஏபிபியை நினைத்துக் கொண்டார்.நால்ரோடு மார்கெட்டில் காய்கறி வாங்க வண்டியை நிறுத்தினார்.

-2-

டீ கிளாஸூம் கையுமாக நின்றிருந்தான் அரவிந்தன்.வெள்ளை நிறத்தில் பழுப்பு திட்டுகள் நிரம்பிய பசுமாடு தர்பூசணி பழ மட்டைகளை தின்றுகொண்டிருந்தது.விரட்டிய பூசணிக்கடைக்காரரை பார்த்து சர்தான்பா என்று சொல்லிக்கொண்டு திரும்பியது.இளஞ் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்த யுவதி தன் ஹேண்ட் பேக்கை சரி செய்தவாறு அரவிந்தன் அருகில் வந்தாள்.ரிஷி மோட்டார்ஸ் நிறுவனம் எங்கிருக்கிறது என்று கேட்டாள்.அப்போது அவளது செந்நிற உதடுகள் கீழே விழுந்துவிட்டது.அதை எடுத்து அவளுக்கு தர வேண்டும் என்று நினைத்தவாறு கீழே பார்த்தான்.பிறகு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.நா என்று சொல்லி அவளது உதடுகளை பார்த்தான். பின்னர் தொண்டையை கமறி, நானூறு மீட்டர் சென்று இடது பக்கமாக திரும்பினால் மூன்றாவது கட்டிடம் என்றான்.அவள் ம்ம் என்று தலையாட்டி சென்றாள்.

ரிஷி மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் தன் வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தால் உடன் வேலை செய்பவனோடு வந்து இறங்கினாள் இளஞ் சிவப்பு சேலைக்காரி.அரவிந்தனை பார்த்துவிட்டு தலையை சிலுப்பிக்கொண்டு உள்ளே சென்றாள்.அவன் அரவிந்தனை பார்த்து புன்னகைத்தான்.அரவிந்தன் புன்னகைக்கவில்லை.

கண்ணாடியில் பட்டு சிதறிய மாலையின் மஞ்சளில் செருகியிருந்தாள் வரவேற்பறை பெண்.அவளிடம் தன் பெயர் ரேணுகா என்றும் நேர்காணலுக்கு நாதன் வரச்சொல்லியிருந்தார் என்றும் சொன்னாள் இளம் நங்கை.தலையசைத்து அமரச்சொல்லி சைகை செய்தாள் மஞ்சள் மங்கை.கண்வேயர் மிக மெதுவாக  செல்கிறது ,மேலே வா என்ற மாடியிலிருந்து கத்தினான் தலை முழுமையாக வழுவியிருந்தவன்.அமர்ந்திருந்த செந்நிறத்தாள் அழைத்தவனையும் அரவிந்தனையும் மாறி மாறி பார்த்தாள்.

பழுதான கன்டன்ஸரை மாற்றிவிட்டு தன் இடம் நோக்கி சென்றவனை கண்ணாடி அறையிலிருந்து சைகையால் அழைத்தார் அவனின் மேலாளர் யாசர்.அறையில் அமர்ந்திருந்தாள் யுவதி.இவர் ரேணுகா.எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்கிறார்.ஒரு வருடம் ஆகிறது.இவரை நேர்காணல் செய்துவிட்டு என் இடத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு பருவமே புதிய பாடல் பாடு என்று ஹம்மிங் செய்தபடியே சென்றார் யாசர்.

ஸிங்கரனஸ் மோட்டாருக்கும் இன்டக்ஸன் மோட்டாருக்கும் என்ன வித்யாசம் என்று கேட்டான் அரவிந்தன்.தெரியாது என்றாள்.ஃபேனில் என்ன மோட்டார் பயன்படுத்தப்படுகிறது என்று கேட்டான்.உதட்டை பிதுக்கினாள்.அந்தரத்தில் பறந்துகொண்டு ஹைய் டென்ஸன் கம்பியை பிடித்தால் ஷாக் அடிக்குமா என்ற கேள்விக்கு அடிக்கும் என்றுதான் நினைக்கிறேன் என்றாள்.ட்ரான்ஸ்பார்மரில் எப்படி வோல்டேஜ்ஜை குறைப்பதும் ஏற்றுவதும் சாத்தியமாகிறது என்று கேட்டுவிட்டு மேலும் தொடரலாமா என்று அவளை வினவினான்.தொடரலாம் என்றாள்.மழை நேரங்களில் தென்னமரத்தின் மட்டை டிரான்ஸ்மிஸன் கம்பியில் பட்டால் ஏன் பற்றிக்கொள்கிறது என்று கேட்டான்.ஷார்ட் ஸர்கூட் ஆவதால் இருக்கலாம் என்றாள்.டிரான்ஸிஸ்டரை எதற்கு பயன்படுத்துவார்கள் என்பதற்கு அவள் சிரித்துவிட்டாள்.உங்களுக்கு அடிப்படைகள் தெரியவில்லையே என்று சொல்லி அவளைப் பார்த்தான்.நீள் நகங்களில் இளஞ் சிவப்பு நிறத்தில் நெயில் பாலிஷ் ஈட்டிருந்தாள்.அப்போதுதான் அவளது ஹேன்ட் பேக் கூட இளஞ் சிவப்பு நிறத்திலிருந்ததை கவனித்தான்.அவளது காதணிகள் கூட அந்த நிறத்தில் இருக்கலாம்.அவளது கார்மேகக் கூந்தல் அவளது காதுகளை மறைத்திருந்தது.அவளது காலணியை பார்க்கலாம் என்றால் குனிந்து பார்ப்பது தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம் என்று அதை தவிர்த்தான்.டிரான்ஸ்மிஷனிலேயே அதிக மின்சாரம் வீணாகிவிடுகிறது என்று சொல்லப்படுகிறதே , அப்படியென்றால் என்ன என்று விளக்கமுடியுமா என்ற கடைசியாக கேட்டான்.எதையும் உளற வேண்டாம் என்று முடிவு செய்து தெரியவில்லை என்றாள்.சரி இங்கேயே இருங்கள் நான் வருகிறேன் என்று சொல்லி யாசரை பார்க்கச் சென்றான்.

அந்தப் பெண்ணுக்கு எதுவும் தெரியாது என்பது தனக்கும் தெரியும் என்றார் யாசர்.அந்தப் பெண்ணுக்கு சம்பளம் இல்லாமல் ஆறுமாதம் ட்ரெயினிங் கொடுத்து பார்ப்போம் , பிறகு முடிவு செய்யலாம் என்று நாதன் சொன்னதாக சொன்னார்.அந்தப் பெண்ணிடம் சென்று செய்தியை சொன்னான்.அவள் புன்னகைத்து எழுந்தாள்.அவளது காலணிகளும் இளஞ் சிவப்பு நிறத்தில் இருந்தது.

-3-

ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரி இங்கு யாருமில்ல என்று அலறிக்கொண்டிருந்தது லக்ஷ்மி திரையரங்கின் ஸ்பீக்கர்கள்.டாக்ஸியில் கட்டிடத்தின் மீது செங்குத்தாக சென்றுகொண்டிருந்தார் ரஜினிகாந்த்.காக்கி சட்டை பேன்ட் அணிந்திருந்த ரஜினிகாந்த் கட் டவுட்டில் புன்னகைத்தார்.கருப்பு நிற நிஜார் அணிந்திருந்த அரவிந்தன் நைனா நைனா என்று சிணுங்கிக்கொண்டிருந்தான்.கூச்சி ஐஸ்காரன் ஐஸ் பெட்டியின் மூடியை திறந்து மூடி தட்டிக் கொண்டிருந்தான்.நிறை கூட்டம்.காக்கி பேன்ட்டை பார்த்த அரவிந்தன் தலை தூக்கி பார்த்தான்.கான்ஸடபிள் லத்தியால் கூட்டத்தை வரிசைக்கு தள்ளினார்.அவரின் பேன்ட்டை பிடித்து இழுத்தான்.குனிந்து பார்த்த கான்ஸடபிளிடம் எங்க அப்பா லாயர் கிருஷ்ணன் ,அவருகிட்ட ஈட்டுக்கினு போங்க என்றான்.கிருஷ்ணன் பையனா நீ என்றவர் அவனை தூக்கிக்கொண்டார்.டிக்கட் வாங்கிய கிருஷ்ணன் நிற்கச் சொன்ன இடத்தில் பையனை காணவில்லை என்பதை கண்டுகொண்டார்.அந்தக் கூட்டத்தில் எங்கிருந்து தொடங்கி எப்படி தேடுவது என்பதை குறித்து ஆலோசித்தார்.கான்ஸடபிள் கிருஷ்ணன் தோளை தட்டினார்.திரும்பிய கிருஷ்ணனிடம் அரவிந்தனை கொடுத்துவிட்டு பாத்துக்கோங்க சார் என்று சொல்லி கூட்டத்தை வரிசைப்படுத்த சென்றுவிட்டார்.கிருஷ்ணன் அரவிந்தனின் கரங்களை பற்றிக்கொண்டார்.அரவிந்தன் கூச்சி ஐஸை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.கிருஷ்ணனும் அரவிந்தனும் படிக்காதவன் படத்தை பார்க்க திரையரங்குக்குள் ஒன்றாக சென்றார்கள்.

-4-

நாதனின் அறையில் மல்லி புஷ்பங்களை வைத்து வேங்கடாசலபதியை அலங்கரித்து விஷ்ணு சகஸ்ரநாமத்தை சொன்னார் அர்ச்சகர்.அர்ச்சகர் சென்ற பின் மேஜையில் இருந்த உதிரிப்பூக்களை    பார்த்துக்கொண்டிருந்தான் அரவிந்தன்.நாதனின் நெற்றியில் அர்ச்சகர் வைத்துச் சென்ற குங்குமம் இருந்தது.வெண்ணிற சல்வார் கமீஸில் அமர்ந்திருந்தாள் ரேணுகா.ரேணுகாவுக்கு பயிற்சியளித்து ஆறு மாதங்கள் கழித்து ஒரு நேர்காணலை யாசர் வைப்பார்.தேர்ச்சியில் வெற்றி பெறும் நிலையில் அவள் தொடரலாம்.அவளுக்கு பயிற்சியாளராக அரவிந்தனை நியமிக்கிறேன் என்றார்.யாசர் சரியென்று தலையசைத்தார்.எனக்கு இதில் விருப்பமில்லை என்றான் அரவிந்தன்.நாதன் யாசரை பார்த்தார்.அவர் நாதனை பார்ப்பதை தவிர்த்து அரவிந்தனை பார்த்தார்.அவன் நான் பணிக்கு திரும்புகிறேன் என்று சொல்லி அறையிலிருந்து வெளியேறினான்.யாரும் பேசவில்லை.யாசர் எழுந்திருக்க எத்தனித்தார்.அவரை அமரச்சொல்லி சைகை செய்த நாதன், அரவிந்தனுக்கு இதில் விருப்பமில்லை என்றால் அதை உங்களிடம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும்,இல்லையென்றால் பிறகு சொல்லியிருக்கலாம்.இது தவறு.சரி போகட்டும்.வேறு யார் இதற்கு சரியாக இருப்பார் என்று தோன்றுகிறதோ அவரை நியமியுங்கள்.பொறுப்பு உங்களுடையது என்று சொல்லிச் சென்றார்.

-5-


எப்போதும் பச்சை தமிழன் , இப்போ நான் வெள்ளைத் தமிழன் என்று பாடிக்கொண்டிருந்தார், ஆடிக்கொண்டுமிருந்தார் ரஜினிகாந்த்.பச்சை தமிழன் என்று ஈவேரா காமராஜரை சொன்னார்.திராவிட முன்னேற்ற கழகத்தை கண்ணீர்த்துளிகள் என்றார்.தன் காதல் ஏற்கப்படாததால் தற்கொலைக்கு துணிகிறார் சிவாஜி.கதாநாயகி தன் சிவப்பு தாவணியை கழற்றி ரயிலை நிறுத்த சமிக்ஞை செய்தவாறு தண்டவாளத்தில் ஓடி வருகிறார்.வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றி எழுந்த கிருஷ்ணன் திரையரங்கை விட்டு வெளியே வந்து நின்றார். சிவப்பு நிற சோபாவில் அமர்ந்து தளர்வானார்.மொட்டை தலையுடன் கூலிங்கிளாஸில்  ரஜினிகாந்தின் டிஜிட்டல் போஸ்டரை பார்த்தார்.கதாநாயகியின் பெயர் ஸ்ரேயா.ஸ்ரேயஸ் என்பது அற வாழ்வின் பயன்.அதுவும் முக்கியம் என்கிறது நம் மரபு.எழுந்து சென்று ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கினார்.மறுபடியும் வந்து சோபாவில் அமர்ந்துகொண்டார்.நீங்க பாத்ரூம் போயிருக்கீங்கனு நினைச்சேன், இங்க என்ன பண்றீங்க என்று கேட்டுக்கொண்டு அவர் அருகில் வந்தான் அரவிந்தன்.இல்ல நீ போய் பாரு , எனக்கு படம் பிடிக்கல என்றார் கிருஷ்ணன்.அவர் அருகில் அமர்ந்த அரவிந்தன் அவர் வைத்திருந்த பாட்டிலை வாங்கி அவனும் நீர் அருந்தினான்.சரி வாங்க என்றவன் அவரை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.பெரும் மழை.முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு நின்றிருந்த இரு சக்கர வாகனங்கள் மழையில் பனித்திருந்தன.கெடிலம் ஆற்றின் நதிக்கரையில் தன் அண்ணன் வரதராஜூலுவுடன் நின்று கொண்டு பார்த்த பெரும் மழை.காமராஜரின் மறைவின் போது அதே கெடிலம் ஆற்றின் நதிக்கரையில் பார்த்த மழை.தன் திருமணத்தின் பந்தகால் அன்று பொழிந்த மழை.ஒடுங்கி நின்றார் கிருஷ்ணன்.அரவிந்தன் இருவருக்கும் டீ வாங்கி வந்தான்.

-6-



மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன தான் வித்யாசம் என்று தோழர் ஸ்ரீனிவாசராவை கேட்டான் அரவிந்தன்.இந்தியா என்கிற நாட்டை இருவரும் எப்படி பார்க்கிறோம் என்பதில் வித்யாசம் உள்ளது என்றார்.கெட்டியான கறுப்பு கண்ணாடி சட்டகத்திற்கு பின்னால் தொலைவில் அழுந்தியிருந்தன அவரது கண்கள்.ஆனால் சீனப்போரின் போது இருந்த சிக்கல்கள் இப்போது இருக்கிறதா என்று கேட்டான்.ஆமாம் என்றார்.கம்யூனிஸ்ட் அரசாங்கம் தன் மக்களின் மீது தானே எப்படி அரசு இயந்திரத்தின் அதிகாரத்தை செலுத்த முடியும் என்று கேட்டான்.நீங்கள் அதிகம் வாசிக்க வேண்டும் என்றார் ஸ்ரீனிவாசராவ்.புத்ததேவ் தொழிற்சாலைகள் மட்டுமே படித்துவரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழி என்று கருதுகிறார்.அது உண்மையும் கூட.தொழிற்சாலைகளுக்கு நிலம் வேண்டும்.சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு எதிராக  உருவாக்கப்பட்ட போராட்டங்கள் தானாக உருவானவை அல்ல.நந்திகிராமில் கெமிக்கல் தொழிற்சாலை வரப்போவதில்லை என்று சொன்ன பின்னும் போராட்டம் தொடரும் போது ஒர் அரசு அமைதியாக இருக்க வாய்ப்பில்லை என்றார்.

நாம் தொழிற்சாலைகளைத் தான் முதன்மையானதாக கொள்ள வேண்டுமா என்று கேட்டான்.எது வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குமோ அதுவே முதன்மையானது என்றார் ஸ்ரீனிவாசராவ்.கொஞ்சம் இருங்க என்று படுக்கையிலிருந்து எழுந்தவர் தன் படுக்கையின் மீது  பரணில் இருந்த முன்னேற்றப் பதிப்பகத்தின் சில புத்தகங்களை எடுத்து அரவிந்தனிடம் கொடுத்தார்.புத்தகங்களை வைக்க இடமில்லை.வாசிப்பார்கள் என்று தோன்றுபவர்களிடம் கொடுத்துவிடுகிறேன் என்றார்.வாங்கிக்கொண்டான்.

கயர்லாஞ்சியில் நடந்தது போல இந்தியாவில் ஏகப்பட்ட சாதிய கொடூரங்கள் நடக்கிறது.ஆனால் ஏன் இந்தியாவை நீங்கள் சாதியால் பிளவுண்ட சமூகமாக பார்க்காமல் வர்க்க அடிப்படையில் பார்க்கிறீர்கள் .உயர்த்தப்பட்ட சாதி பெண் தாழ்த்தப்பட்ட சாதி பெண் கொடுமை படுத்தப்படுவதை பார்த்து ஒன்றும் செய்யாமல் நிற்கிறாள்.இதில் எங்கு வர்க்கம் வருகிறது.ஸ்ரீனிவாசராவ் மறுக்கும் தொனியில் தலையசைத்து நாங்கள் இந்தியாவில் இருக்கும் சாதிய பாகுப்பாட்டை தீவிரமாக கவனிக்கிறோம்,ஆராய்கிறோம், சமீபத்தில் கூட உத்தப்புரத்தில் போராட்டம் நடத்தினோம் என்றார்.இன்று மாறிவிரும் முதலாளித்துவத்தை கம்யூனிஸ்ட் கட்சி கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்று தெரியவில்லை என்றான்.புத்ததேவ் அதைத்தான் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்.முதலீடுகளை ஊக்குவிக்கிறார்.நாங்கள் அனைத்தையும் விவாதிக்கிறோம் என்றார்.அப்படியென்றால் வலதுக்கும் இடதுக்குமான வித்யாசம் இனி பண்பாட்டு தளத்தில் மட்டும்தானா என்று கேட்டான்.மிகவும் மேலோட்டமான கேள்வியாக தெரியவில்லையா என்றார்.

அரவிந்தன் கதவை திறக்க முற்பட்ட போது இரும்பு நாற்காலி கதவில் இடித்தது.நாற்காலியை மடித்து சுவற்றில் சாய்த்து விட்டு கதவை திறங்கள்.இது ஒரு ஆள் மட்டுமே புழங்க சாத்தியமுள்ள அறை என்று சொல்லி சிரித்தார் ஸ்ரீனிவாசராவ்.அரவிந்தன் நாற்காலியை மடித்து சுவற்றில் சாய்த்துவிட்டு மரக்கதவை திறந்து வெளியே வந்தான்.

-7-



இந்திரா காந்தி சரண் சிங்கால் கைது செய்யப்படுகிறார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டதுமே தன்னுடன் பார் ரூமிலிருந்த குமாஸ்தாக்களுக்கும், வக்கீல்களுக்கும் , எஸ்.ஐக்கும் டீ வாங்கிக்கொடுத்தார் கிருஷ்ணன்.காமராஜரின் இறுதி காலகட்டத்தின் துயரத்திற்கு பழிவாங்கியாகி விட்டது என்று பெருமூச்சு விட்டார்.அப்போது இந்திரா காங்கிரஸ்தான் இனி காங்கிரஸாக இருக்கும் என்று சொன்ன ஏபிபியை போடா துரோகி என்று கத்தினார்.நாம் எப்போதும் ஸ்தாபன காங்கிரஸ் தான் என்று குமறினார்.ஸ்தாபன காங்கிரஸ் ஜனதாவில் கலந்துவிட்டது, நீயும் ஒரு நாள் இந்திரா காங்கிரஸூக்கு வருவாய் என்று சுண்ணாம்பை வெற்றிலையில் தடவியபடி சொன்னார் ஏபிபி.மேஜையை தள்ளிவிட்டு ஏபிபியை நோக்கி பாய்ந்தார் கிருஷ்ணன்.கிருஷ்ணனை தடுத்த எஸ்.ஐ. ஏபிபியை அமைதியாக  இருக்கும் படி சொன்னார்.வெற்றிலைச்சாறு வழிய சிரித்தபடி பார் ரூமிலிருந்து வெளியே சென்றார் ஏபிபி.

-8-



மாலை , கோர்ட்டின் வரந்தாவில் மஞ்சள் வெயிலை படரவிட்டிருந்தது.தனியாக நின்றார் கிருஷ்ணன்.சரண் சிங்கும் மொராஜி தேசாயும் அதிக காலம் ஒன்றாக இருக்க மாட்டார்கள்.மறுபடியும் இந்திரா காங்கிரஸ் வந்துவிடக்கூடும்.ஸ்தாபன காங்கிரஸ் என்பது இனி இல்லாத காங்கிரஸாக ஆகிவிடும்.ஜனதா கட்சியில் பொறுப்பு வகிப்பது பொருளற்றது என்று  தோன்றியது.எல்லோரும் கிளம்பிகொண்டிருந்தார்கள்.தம்பி இங்க வாப்பா என்று அழைத்தார் திருமண் ஈட்டுயிருந்த அனந்தரங்கன்.நாளைக்கு நான் வரல, சகலன் பொண்ணுக்கு கடலூர்ல சுப்புராயலு மண்டபத்துல கல்யாணம், அப்படியே செசன்ஸ் கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கு.நீ என்ன பன்ற, நாளைக்கு வேலுச்சாமி கேஸ் ஹியரிங் வருது.அவருக்கு உடம்பு சரியில்ல, வர முடியலன்னு சொல்லி அடுத்த மாசத்துக்கு ஹியரிங் டேட் வாங்கிக்கோ என்று சொல்லி பத்து ரூபாய் அளித்தார்.கிளம்ப யத்தனித்தவர் நான் வாழவைப்பேன்னு ஒரு படம் வந்திருக்கு, சிவாஜி படம், அதுல ஒரு பையன் புதுசாக நடிச்சிருக்கான்.பெரு ரஜினிகாந்த்.நல்லா நடிக்கிறான்.நீ போய் பாரு என்றார்.ஆகட்டும் பார்க்கலாம் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் கிருஷ்ணன்.

ஐ எம் மைக்கேல் டிசோஸா.ட்ரூ கிறிஸ்டியன் என்று திரையில் பழுப்பு பேன்டும் பழுப்பு கோட்டும் தொப்பியுமாக அடிக்கடி சொல்லிகொண்டிருந்தான் ஒருவன்.வேகமாக நடந்தான்.துப்பாக்கியை சுழற்றினான்.கோட்டை விலக்கி இடையில் இரு கைகளையும் வைத்து ஸ்டைலாக நின்றான்.படிக்கட்டுகளில் விரைவாக ஏறினான்.அவனின் தமிழ் கொச்சையாக இருந்தது.கரிய நிறத்திலிருந்த அந்த ஆள் மேஜர் சுந்தர்ராஜனை தப்ப விடாமல் தன்னுயிரை இழக்கிறான்.சிறிய கூர்மையான கண்கள்.விரைவாக நடந்து திரையரங்கை விட்டு வெளியே வந்தார் கிருஷ்ணன்.சட்டென்று தாவி சைக்கிளில் அமர்ந்தார்.வேகமாக மிதித்தார்.ஐ எம் மைக்கேல் டிசோஸா.ட்ரூ கிறிஸ்டியன் என்று சொல்லிக் கொண்டார்.விசில் அடித்தார்.தன் வீட்டின் படிக்கட்டுகளில் பரவசமாக நடந்தார்.வீட்டின் கதவை திறந்த போது மெட்ராஸிலிருந்து சம்மந்தம் வந்திருப்பதாகவும் ஜாதகம் நன்றாக இருப்பதாகவும் பெண் பார்க்க வரும் திங்கட்கிழமை செல்லலாம் என்றும் அண்ணன் வரதராஜலு கடிதம் எழுதியிருந்தார்.பெண் பார்க்க தான் இப்போது வரவில்லை , ஆனால் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமே என்று பதில் எழுதிவிட்டு தூங்கப்போனார் கிருஷ்ணன்.கைகளை கட்டிலில் வைக்காமல் குதித்து படுத்தார்.

-9-



லோக் பால் அமைய வேண்டும் என்று ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கினார் அண்ணா ஹாசாரே என்ற தினத்தந்தியின் தலைப்புச் செய்தியை சத்தமாக வாசித்தான் மணிகண்டன்.திருவான்மியூரில் இருந்து கிளம்பும் மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் நானும் கலந்து கொள்ளப்போகிறேன் என்று மணிகண்டனிடம் சொன்னாள் ரேணுகா.அரவிந்தன் டீக்கடையிலிருந்து எழுந்து வந்து வெளியில் நின்றான்.சுத்தியலை கொண்டு சிலையை உடைக்கலாம்.சுத்தியலோடு உளியும் இருந்தால் சிலையை உருவாக்கலாம்.திருப்புளியை வைத்துக் கொண்டு திருகாணிகளைத்தான் திருக முடியும்.அது போதும் போலிருக்கிறது.மற்றபடி எந்தப் பிரச்சனையும் ஒரு வேளை இல்லையோ.எல்லாம் யோசிக்கும் வேலையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாய் முடிகிறது.பசுமாடு தர்பூசணி மட்டைகளை தின்றுகொண்டிருந்தது.

ரேணுகா அரவிந்தன் அருகில் வந்தாள்.மணிகண்டனும் வந்தான்.நான் அரவிந்தனுடன் தனியாக பேச வேண்டும் என்று சொன்னவள் கண்களை சுருக்கி அரவிந்தனை கூர்மையாக பார்த்தாள்.கைகளை கட்டிக்கொண்டு வயிற்றுக்கு முட்டுக்கொடுத்து நின்றாள். நான் நாதனின் உறவுக்காரப் பெண் என்பதால்தான் இங்கு பயிற்சி பெறுகிறேன்.உண்மைதான்.ஆனால் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அற்றவள் இல்லை.எங்கள் கல்லூரியில் எந்த அடிப்படையும் இல்லை.எதுவும் கற்றுத்தரப்படவில்லை.ஏதோ படித்து வெளியே வந்தோம்.இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இங்கே இருக்கிறேன்.உங்களுக்கு ஏன் என் மீது இவ்வளவு எரிச்சல் என்று கேட்டாள்.அவளது உதடுகள் துடித்துக்கொண்டிருந்தது.நான் உங்களை பொருட்படுத்தவில்லை என்பது இல்லை.எனக்கு உங்களுக்கு பயிற்சி அளிக்கும் அளவு பொறுமை இல்லை , அவ்வளவுதான்.வேறு காரணங்கள் இல்லை என்றான்.கைகளை தொங்க விட்டு் ரொம்ப நல்லது என்று  சலித்தவள் விலகி நின்ற மணிகண்டனை பார்த்து போகலாம் என்று கண் அசைத்தாள்.அவனுடன் நடந்து அலுவலகம் நோக்கி சென்றாள்.

மாலை ,மஞ்சள் வெயிலை சாலையில் படரவிட்டிருந்தது.பசுமாட்டை கடைக்காரர் விரட்ட அது தன் வழி பார்த்து சென்றது.தனியாக நின்றான் அரவிந்தன்.வண்டியை கிளப்பிக்கொண்டு அலுவலகம்  சென்றான். வண்டியை நிறுத்திய போது கிருஷ்ணன் அழைத்தார்.திருமண சம்மந்தம் வந்திருப்பதாக சொன்னார்.பெண் பார்க்க வர சொல்கிறார்கள் என்ன சொல்லட்டும் என்றார். நான் வரல, நீங்க போய் பேசிட்டு வாங்க என்றான்.ஆனா நீ வரலன்னா என்று கேட்க வந்த கிருஷ்ணன், சரி நான் பேசிட்டு சொல்றேன் என்றார்.தொங்கு மீசையை நீவிவிட்டுக்கொண்டான் அரவிந்தன்.ஓடுங்கியிருந்த அவனது தோள்களில் கூன் விழுந்திருந்தது.

-10-



எண்ணத்தில் நூறு திட்டமிட்டு கபாலி வாரான் கைத்தட்டு , பம்பரம் போல சுத்திக்கிட்டு பறையிசை அடித்து நீ பாத்திகட்டு என்று முணுமுணுத்துக் கொண்டு மருத்துவமனை லாபியில் அமர்ந்திருந்தான் அரவிந்தன்.அவனை உள்ளே அழைத்தார்கள்.தொப்புள் கொடி சுற்றிக்கொண்டிருக்கிறது என்றார் மருத்துவர்.அரவிந்தன் தலையசைத்தான்.மானிட்டரில் பத்து எட்டு நான்கு என்று எண்கள் மாறிக்கொண்டிருந்தது.மீரா அரவிந்தனின் கரங்களை பற்றிக்கொண்டாள்.அவள் கண்களிலிருந்து நீர் கொட்டியது.அரவிந்தன் அங்கிருந்த மற்ற இயந்திரங்களை போல நின்றுகொண்டிருந்தான்.மருத்துவர்கள் அரவிந்தனை வெளியே சென்று காத்திருக்கச் சொன்னார்கள்.கதவுகள் திறப்பதும் மருத்துவர்கள் வருவதும் செல்வதுமாக இருந்தது.உங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று சொல்லிச் சென்றாள் செவிலி.என்ன குழந்தை  என்று கேட்டதற்கு வந்து சொல்வார்கள் என்று சொல்லி மறைந்தாள்.செந்நிற பூக்கள் நிரம்பிய சேலை அணிந்திருந்த மாந்தளிர் மருத்துவர் உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று புன்னககைத்து கடந்தார்.அரவிந்தன் கிழே இறங்கி வந்தான்.எதிரில் டீக்கடையில் லேமன் டீ சொன்னான்.டீ குடித்துவிட்டு கிருஷ்ணனை அழைத்து பேசினான்.பெரும் மழையாக பெய்துகொண்டிருந்த வெயிலை பார்த்து வெறுமன நின்றான்.

-11-

இருள் அப்பியிருந்த இரவின் இருட்டில் கிருஷ்ணன் அமர்ந்திருந்தார்.மெழுகுவர்த்தியை பற்ற வைத்தான் அரவிந்தன்.நெருப்பின் ஜ்வாலை கண்ணாடியில் பிரதிபலித்தது.படிகளிலிருந்து வழிந்தோடியது மழைநீர்.மீராவின் மடியில் குழந்தை படுத்துக்கொண்டிருந்தது.வதபத்ர சாயிக்கி வரஹாலா லாலி என்று பாடிக் கொண்டிருந்தாள் மீரா.மென் ஒளியில் ஜ்வலித்தது அவளின் கூர் நாசி.மீராவின் அருகில் வந்து அமர்ந்தான் அரவிந்தன்.அவளது தலையை வருடினான்.

என் தந்தை என் மகன்
என் மகன் என் தந்தை
நான் தந்தை நான் மகன்

என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னான்.இங்கு எதுவுமே நிற்பதில்லை,எல்லாம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.உன் மடியில் ஒரு துளி பிரபஞ்சம் என்றான்.மீரா சிரித்தாள்.சாப்ட்டிங்களா என்றாள்.தலையசைத்தான்.நான் உறங்கச் செல்கிறேன் என்று எழுந்தார் கிருஷ்ணன்.அரவிந்தனின் தோளில் தலை சாய்த்து கண் அயர்ந்தாள் மீரா.அவளின் மடியில் குழந்தை உறங்கத் துவங்கியிருந்தது.


No comments: