India Wins Freedom 1935யிலிருந்து 1948வரையான காலகட்டத்தில் இந்திய அளவில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள் பற்றி மெளலானா அபுல் கலாம் அசாதின் பார்வையை முன்வைக்கும் புத்தகம்.இந்த புத்தகத்தின் வழி நாம் அறிந்த கேள்விப்பட்ட சில சம்பவங்கள் பற்றிய மாற்று பார்வையை புதிய பார்வையை இந்தப் புத்தகம் அளிக்கிறது.இந்தப் புத்தகத்தை அசாத் எழுதவில்லை.அவர் சொன்னதை ஹூமாயூன் கபீர் எழுத்தாக்கம் செய்திருக்கிறார்.அபுல் கலாம் அசாத் 1939யிலிருந்து 1946வரை காங்கிரஸின் தலைவராக இருந்திருக்கிறார்.இந்தப் புத்தகம் பெரும்பாலும் அந்தக் காலகட்டத்தை பற்றி பேசுகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா போருக்கான தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் முன்வைக்கப்படும் கிரிப்ஸ் தூதுக்குழுவின் திட்டம் தோல்வியில் முடிகிறது.கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் அபுல் கலாம் அசாத் வைக்கும் பிரதான கோரிக்கை இந்திய சுதந்திரம் பற்றிய வாக்குறுதி.ஆனால் கிரிப்ஸ் தூதுக்குழுவால் அதைத் தர இயலவில்லை.இதில் காந்தியும் அசாதும் வேறுபடுகிறார்கள்.அசாத் இந்திய சுதந்திரம் பற்றி வாக்குறுதி இருந்தால் ஆதரவு தரலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த போது காந்தி போருக்கு எதிரான நிலைப்பாட்டை வைத்திருந்தார்.இருந்த போதும் காங்கிரஸ் செயற் குழுவில் இந்திய சுதந்திரம் பற்றிய வாக்குறுதி இருந்தால் போருக்கான ஆதரவு தரலாம் என்கிற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.ஆனால் அதைப்பற்றி தெளிவாக கிரிப்ஸ் தூதுக்குழுவால் சொல்ல முடியாததால் அந்த திட்டம் தோல்வியில் முடிகிறது.பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி அறிவிக்கிறார்.அதற்கான தீர்மானத்தை காங்கிரஸ் கமிட்டியில் வெளியீட்ட அடுத்த நாளே அனைத்து தலைவர்களும் கைது செய்யப்படுகிறார்கள்.காந்தி தவிர பிறர் அனைவரும் அகமத்நகர் கோட்டை சிறைச்சாலையில் தங்க வைக்கப்படுகிறார்கள்.மூன்று வருடங்கள் கழித்து அவர்கள் வெளிவரும் போது போர் அநேகமாக முடிந்துவிடுகிறது.
அவர்கள் வெளிவந்தவுடன் சிம்லா மாநாடு நடைபெறுகிறது.அதில் இந்தியர்களை மட்டுமே உள்ளடக்கிய செயற்குழு ஒன்றை உருவாக்க இருப்பதாகவும் வைஸ்ராய் அந்த செயற்குழுவின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே நடப்பார் என்றும் அவர் தன்னிச்சையாக செயலாற்ற முடியாது என்றும் சொல்கிறார் ஸவஸ்ராய் வேவல்.கிரிப்ஸ் செயற்குழுவின் திட்டமும் கிட்டத்தட்ட இது போன்ற ஒன்று தான் என்றாலும் அதில் பாதுகாப்பு துறை இந்தியர்களிடம் இருக்காது என்பது இருந்தது.மேலும் அப்போது போர் நடந்துக்கொண்டிருந்தது.இப்போது போர் முடியும் தருணத்தில் இருக்கிறது.அதனால் பிரிட்டனுக்கு இந்தியாவின் ஆதரவு தேவையில்லை.ஆனால் இந்தியாவில் புதிய அரசியல் சூழலை உருவாக்குவதே இந்தக் கோரிக்கையின் நோக்கம் என்று வைஸ்ராய் விளக்குகிறார்.காங்கிரஸூம் முஸ்லிம் லீக் கட்சியும் அதை ஏற்கிறது.ஆனால் இறுதியில் ஆட்சியில் இடம் பெறப்போகும் முஸ்லிம்கள் , முஸ்லீம்கள் லீக் கட்சியினராகத்தான் இருக்க வேண்டும் என்று ஜின்னா வலியுறுத்துகிறார்.இந்த ஒரு விஷயத்தால் சிம்லா மாநாடு தோல்வியில் முடிகிறது.ஜப்பான் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியபின் போர் முற்றாக முடிந்துவிடுகிறது.
அதன் பின் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.பஞ்சாப், சிந்த், வங்கம் தவிர பிற மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது.வங்கத்தில் முஸ்லிம் லீக் வெற்றி பெறுகிறது.பஞ்சாபில் யூனியனிஸ்ட் கட்சியும் லீக் கட்சியும் சம எண்ணிக்கையை பெறுகின்றன.சிந்த் மாகாணத்தில் லீக் கட்சி அதிக இடங்களை பெற்றாலும் பெரும்பாண்மையை பெற இயலவில்லை.முஸ்லிம்களை அதிக அளவில் கொண்ட வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.பஞ்சாபில் யூனியனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தருகிறது.பிரட்டனில் போர் முடிந்து தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடிக்கிறது.அட்லீ பிரதமர் ஆகிறார்.தொழிலாளர் கட்சி வந்தவுடன் பிரித்தானிய அமைச்சர்களின் தூதுக்குழு திட்டம் உருவாக்கப்படுகிறது.அது முழுமையான கூட்டாட்சி அமைப்பு முறையை வலியுறுத்தியது. பாதுகாப்பு,வெளிவுறவுத் துறை, தொலைதொடர்பு ஆகியவை மட்டும் மத்திய அரசின் கீழ் வரும்.மற்றவை மாகாணங்கள் கீழ் வரும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.இதை முஸ்லிம் லீக் கட்சியும் காங்கிரஸூம் ஏற்றுக்கொள்கிறது.
1946யில் மெளலானா அபுல் கலாம் அசாத் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறார்.ஜவகர்லால் நேரு தலைவர் ஆகிறார்.ஆட்சியில் படேல் உள்துறையை ஏற்கிறார்.முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த லிகாயத் அலி நீதித்துறை அமைச்சர் ஆகிறார்.பிரிட்டன் அரசு இந்திய சுதந்திரத்திற்கான தேதியை குறிக்கிறது.வைஸ்ராய் வேவல் அவசரமாக தேதி குறித்து இதை செய்யாமல் நிதானமாக இதை செய்யலாம் என்கிறார்.வேறுபாடு முற்றவே அவர் ராஜினாமா செய்கிறார்.
மவுண்ட்பேட்டன் வைஸ்ராய் ஆகிறார்.அவர் இந்திய பிரவினை பற்றிய தன் வரைவை முன்வைக்கிறார்.இதற்கு அபுல் கலாம் அசாத் மறுப்பு தெவிக்கிறார்.மவுண்ட்பேட்டன் இது ஏன் நல்ல தீர்வு என்று தன் தரப்பை விளக்குகிறார்.இந்தியா போன்ற பல்வேறு இன மொழி வேறுபாடுகள் கொண்ட நாட்டிற்கு வலுவான மத்திய அரசு இருக்க வேண்டும்.பிரித்தானிய அமைச்சரவையின் தூதுக்குழு திட்டம் ஏறகப்படுமானால் அது பலவீனமான மத்திய அரசை ஏற்படுத்தும்.அது நிரந்தரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்கிறார்.இந்த பலவீனமான மத்திய அரசு எனும் திட்டம் ஏற்கப்படுவதற்கான முக்கிய காரணம் முஸ்லிம் லீக் கட்சி.அவர்களுக்கு தனி நாடு தந்துவிட்டால் இந்தியா தன் விருப்பம் போல் மத்திய அரசுக்கான அதிகாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறார்.
முதலில் சர்தார் படேல் மவுண்ட்பேட்டன் திட்டத்தை ஏற்கிறார்.பின்னர் நேருவும் அதை ஏற்கிறார்.காந்தியும் வேறு வழி இருக்கவில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.அபுல் கலாம் அசாத் தன் பார்வையில் இந்தப் பிரிவினை ஏன் நிகழ்ந்தது என்று சொல்கிறார்.நேரு காங்கிரஸ் தலைவரானபின் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பிரத்தானிய அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தை அப்படியே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை என்கிறார்.இதனால் ஜின்னாவிற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கிறது.அவர் காங்கிரஸ் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறது.கூட்டாட்சி அமைப்பில் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் என்பதால்தான் பிரித்தானிய அமைச்சரவையின் தூதுக்குழு திட்டதத்தை ஏற்றதாகவும் ஆனால் இப்படி முரணாக பேசினால் நாளை காங்கிரஸ் மத்தியில் பெரிய மாற்றங்களை செய்ய இயலும் , அதனால் பிரிவினை தான் தீர்வு என்றும் சொல்கிறார்.இந்த வாய்ப்பை நேரு ஜின்னாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாக அசாத் கருதுகிறார்.இரண்டாவது படேல் ஏதேனும் ஒரு முக்கியமான அமைச்சரவை பதவியை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்கிற போது நீதித்துறையை கொடுத்துவிடலாம் என்கிறார்.இதனால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற இயலாமல் போய்விடுகிறது.எல்லாவற்றிற்கும் நீதித்துறையின் ஒப்புதல் தேவைப்படுகிறது.இது மிகப்பெரிய சிக்கலை உருவாக்குகிறது.மேலும் 1944யில் காந்தி புனா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் ஜின்னாவை சந்திக்கிறார்.எந்த வித மக்கள் ஆதரவும் அற்ற ஜின்னாவை தன் தொடர் சந்திப்புகள் மூலமாகவே மக்கள் மத்தியில் முக்கியமானவர் என்ற எண்ணத்தை தோன்றச் செய்து விட்டார் என்று அசாத் தன் கவலையை தெரிவிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேவையில்லாமல் குவைத் இ அசாம் என்ற அடைமொழியுடன் ஜின்னாவிற்கு கடிதம் எழுதி அவருக்கு பெரிய மக்கள் தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டார் என்று ஆதங்கப்படுகிறார்.மேலும் முஸ்லிம் லீக்கை கண்டுகொள்ளாமல் காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்கிறது அரசு.தங்களை பொருட்படுத்தவில்லை என்ற எரிச்சலில் கல்கத்தாவில் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் மிகப்பெரிய அழிவுகளை உருவாக்குகிறது முஸ்லிம் லீக்.பிரிவினைக்கு இவைகள் முக்கியமான காரணம் என்று அசாத் புத்தகத்தின் பல்வேறு இடங்களில் சொல்கிறார்.
இப்படி தொடர்ச்சியான சம்பவங்கள் மூலமாக பிரிவினை ஒரு தவிர்க்க இயலாத விஷயம் என்ற பிம்பத்தை நாமே தோன்றச் செய்துவிட்டோம் என்கிறார் அசாத்.ஆனால் அவர் சொல்வதில் ஒரு முக்கிய விடுபடல் இருக்கிறது.மவுண்ட்பேட்டன் சொல்வது போல ஒரளவுக்கு வலுவான மத்திய அரசு இல்லாமல் மாகாணங்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என்றால் இந்தியா பலவீனமாகி இருக்கும்.இதை நேருவும் படேலும் ஏற்றார்கள்.அசாத் மற்றொரு யோசனையை தெரிவிக்கிறார்.இப்போது இருப்பது போல இடைக்கால அரசை இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கலாம்.அப்போது முஸ்லிம் லீக் கட்சியின் வலு குறைந்துவிடும்.அதன்பின் பிரிவினையின் தேவை இருக்காது என்கிறார்.அதை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை.ஜின்னாவிற்கு பிரதமர் பதவி கொடுத்துவிட்டால் இந்தப் பிரிவினையின் தேவை இருக்காது என்ற யோசனையும் முன்வைக்கப்படுகிறது.காந்தியும் மவுண்ட்பேட்டனும் அதை ஏற்கிறார்கள்.ஆனால் நேருவும் படேலும் அதை நிராகிரிக்கிறார்கள்.பிரிவினை தவிர வேறு வழியில்லை என்ற நிலை வந்துவிடுகிறது.அதற்கான நாளும் குறிக்கப்படுகிறது.பிரிவினையை தொடர்ந்து இந்தியா சுதந்திரம் பெறுகிறது.வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது.அவர்கள் பாகிஸ்தானோடு சென்று விட முடிவு எடுக்கிறார்கள்.கான் சகோதரர்கள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகிறார்கள்.காங்கிரஸ் இப்படி தங்களை சட்டென்று கைவிட்டதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அசாத்திற்கு படேலை பிடிக்கவில்லை என்று இந்தப் புத்தகம் மூலம் தெரிகிறது.பிரிவினைக்கு பின்னர் மேற்கு கிழக்கு பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.இது பின்னர் டெல்லியில் பரவுகிறது.டெல்லியில் இருக்கும் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்.காந்தி இதை குறித்து கேட்கும் போது படேல் அப்படி பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்கிறார்.காந்தி உண்ணாவிரதம் எடுக்கப்போவதாக அறிவிக்கிறார்.படேல் தான் பம்பாய்க்கு செல்ல வேண்டும் என்று சொல்லி சென்றுவிடுகிறார்.காந்தியால் மட்டுமே அரசியில் வாழ்க்கை பெற்ற படேல் காந்தியை விரோதித்து அவரது அறிவரையை ஏற்காமல் இருந்தது மிகப்பெரிய தவறு என்கிறார் அசாத்.
டெல்லியில் காந்தியின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து அமைதி திரும்புகிறது.காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரியில் பிர்லா இல்லத்தில் இருக்கும் போது அங்கு ஒரு முறை வெடிகுண்டு வீசப்படுகிறது.அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே கோட்சேவால் காந்தி கொல்லப்படுகிறார்.வெடிகுண்டு வீசப்பட்ட போதே காவலை அதிகரித்து சோதனையை தீவிரப்படுத்தியிருந்தால் இந்தச் துயரச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.ஆனால் படேல் அதை செய்யவில்லை.அந்த குற்றவுணர்வுதான் அவர் அடுத்த சில வருடங்களில் மாரடைப்பில் இறக்க காரணம் என்கிறார் அசாத்.
அசாத் பிரிவினை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் முழுக்க சொன்னாலும் அது சாத்தியமான ஒன்றாக இருக்கவில்லை என்பதை அந்த புத்தகத்தின் வழியே நம்மால் உணர முடிகிறது.அதற்கு முக்கிய காரணம் எந்த மக்கள் ஆதரவும் அற்ற அகங்காரம் மட்டுமே நிரம்பிய ஜின்னா.அவருக்கு இந்திய பிரதமர் பதவி கொடுக்கப்பட்டிருந்தால் அல்லது பிரித்தானிய அமைச்சரவையின் தூதுக்குழு திட்டத்தை ஏற்றிருந்தால் ஒரு வேளை பிரிவினை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.ஆனால் அது எத்தனை காலம் தொடர்ந்திருக்கும்.மேலும் பலவீனமாக மத்திய அரசு பல்வேறு இன மொழி அடையாளங்களை கொண்ட மாகாணங்களை எப்படி கட்டுப்படுத்தும்.மற்றும் மறுபடி நேரடி நடவடிக்கை நாள் போன்ற ஒன்று நிகழ்ந்திருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்.
மெளலானா அபுல் கலாம் அசாத்தின் இந்தப் புத்தகத்தில் அம்பேத்கர் எங்கும் வரவில்லை.மதராஸ் மாகானம் எங்கும் பெரிதாக வரவில்லை.ராஜகோபாலாச்சாரி ஒரிரு இடங்களில் வருகிறார். உண்மையில் அசாத்தால் பிரிவினையை ஏற்க முடியவில்லை.அந்தப் பிரிவினைக்கு காரணமாக நேரு, படேல்,ஜின்னா ஆகியோரின் பதவி சார்ந்த அகங்காரம்,தனிமனித பலவீனங்களை சுட்டிக்காட்டுகிறார்.நேருவுக்கு கிருஷண்ன் மேனன் மீது அபாரமான நம்பிக்கை இருந்ததை கண்டறிந்து அதன் வழி மவுண்ட்பேட்டன் பிரிவினைக்கு சாதகமான எண்ணங்களை நேருவில் உருவாக்கினார் என்கிறார்.மேலும் லேடி மவுண்ட்பேட்டனின் ஆளுமை நேருவில் பிரிவினை சார்ந்து முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறார்.காந்தி கூட ஒரு கட்டத்தில் பிரிவினையை ஏற்றுக்கொண்டதை சொல்லி புலம்புகிறார்.ஆனால் மனிதர்கள் மட்டுமே இந்தப் பிரிவினைக்கு காரணமில்லை.அது ஒரு சூழல்.அவ்வளவுதான்.அதில் மனித அகங்காரங்களும் பலவீனங்களும் ஒரு அங்கம் மட்டுமே.1930களிலிருந்து 1948வரையான இந்திய வரலாற்றை பற்றிய மற்ற புத்தகங்களுடன் இணைத்து வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.
அகமத்நகர் கோட்டை சிறைச்சாலையில் இருந்த போது நேரு அங்கு ஒரு பூந்தோட்டத்தை உருவாக்கலாம் என்கிறார்.விதைகள் கொண்டு வரப்பட்டு அங்கு அனைவரும் இணைந்து பூந்தோட்டத்தை உருவாக்குகிறார்கள்.பஷீர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு பூந்தோட்டத்தை உருவாக்கிவிடுவார்.அது போல இந்தப் பூந்தோட்டம் அந்த சிறைச்சாலையில் அந்த போர் காலத்தில் எதிர் காலத்தின் நிச்சயமின்மையில் உருவாக்கப்பட்டது அந்த பெருந்தலைவர்கள் பற்றிய அழகான ஆளுமை சித்திரத்தை உருவாக்கிவிடுகிறது.எத்தனை அற்புதமான மனிதர்கள்.இனி அப்படியான தலைவர்கள் இந்தியாவிற்கு எப்போது கிடைப்பார்கள்.
India Wins Freedom - Maulana Abul Kalam Azad - Orient Longman.
No comments:
Post a Comment