கூட்டு நனவிலி என்று நாம் பயன்படுத்தும் வார்த்தை கார்ல் யுங் சொல்லும் Collective Unconscious என்ற சொல்லிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்.கார்ல் யுங் ஒருவர் தன் சிகிச்சையின் பகுதியாக அந்தரங்கமான துயரத்தை,சிக்கலை ஒரு மனநல மருத்துவரிடம் பகிர்ந்து கொள்வதை பாதிரியாரிடம் கொள்ளும் பாவ மன்னிப்புக்கு நிகரானதாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.அவரை படிக்கும் போது அமைப்பியலில் கிளாட் லெவி ஸ்ட்ராஸ் எழுதிய கட்டுரைகள் இயல்பாகவே நினைவுக்கு வருகின்றன.
டார்வின் பரிணாமவியல் கோட்பாட்டை முன்வைத்த பின்னர் நம்மிடையே Survival of the fittest,Natural Selection போன்ற எண்ணங்கள் ஆழமாக வேர் விட துவங்குகிறது.ஒரு சமூகத்தில் யார் இருக்கலாம், யார் இருக்கக்கூடாது , ஒரு வீட்டில் யார் இருக்கலாம் என்பது குறித்த நம் பிரக்ஞை இந்த பரிணாமவியல் கோட்பாட்டால் வடிவமைக்கப்பட்டுள்ளது.நமது பொருளாதார கோட்பாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
நமது பொருளாதார கோட்பாடுகள் மனிதனின் தீமையின் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டன.நாம் நம் மார்பில் அறைந்து கொண்டு நான் நான் என்று பிதற்றுவதும் முன்னே செல்வதும் அதற்கான நியாயங்களையும் டார்வின் வழங்குகிறார்.நீட்ஷேவின் அதிமனிதன் டார்வினின் பரிணாமவியலால் வந்த மனிதன்.இன்றைய அனைத்து முன்னேற்றங்களும் மனிதனின் அக உலகில் பெரிய மாற்றத்தை உருவாக்கவில்லை.
இன்று உலகின் முதல் பணக்காரர் எந்தளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்.நின்றால் தீவு அசைந்தால் தோணி இரண்டுக்கும் மின்னற் பொழுதே தூரம் என்ற தேவதேவனின் வரிதான் மனிதன்.இன்று ஒரு அலுவலக அறையில் நாகரீகமாக நடந்து கொள்ளும் மனிதன் தன் மூதாதையின் வாழ்க்கை பார்வையை அடைவதற்கான நேரம் மின்னற் பொழுதுதான்.நம் விஞ்ஞானம் நம் அக வாழ்வில் அந்தளவுதான் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.கார்ல் யுங் நாம் நம் கூட்டு நனவிலியை பிரக்ஞையின் வழி அறிவதன் வழியே நாம் அக விடுதலை பெற முடியும் என்கிறார்.அதை ஆழ் படிமங்கள் மூலம் விளக்குகிறார்.இவை இலக்கியத்திற்கு , மதத்திற்கு அருகில் வருபவை.இங்கு விஞ்ஞானத்திற்கு இடமில்லை.இன்று மனச்சோர்வு குறித்து பேசும் போது அதை ஒரு ரசாயன மாற்றத்தின் விளைவு என்றே நிறுவ முற்படுகின்றனர்.ஒரு முறை மனச்சோர்வு சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தான் சிறுவயதில் தன் அன்னையுடன் மேற்கொண்ட கப்பல் பயணத்தை பற்றி சொல்கிறார் கார்ல் யுங்.அந்த பெண் தன் சிக்கலிருந்து விடுபடுகிறார்.
மனிதர்கள் எல்லோரும் எதோ ஒரு வகையில் ஒன்றுதான் என்ற எண்ணத்தை கூட்டு நனவிலி கோட்பாடு உருவாக்கி விடுகிறது.இது மொழியியல் , அமைப்பியல் முன்வைத்த கோட்பாடுகளுடன் ஒத்துப்போகிறது.
No comments:
Post a Comment