மற்றமையும் அதிகாரமும்

பிறர் நம்மை குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று நாம் தொடர்ந்து கவலை பட்டுக்கொண்டே இருக்கிறோம்.பிறிரில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதே அதிகாரத்தை நோக்கிய நமது இச்சையாக மாறுகிறது.நாம் ஏன் நிறைய பணம் சம்பாதிக்க நினைக்கிறோம்.நாம் ஏன் பெரும் பதவிகளை அடைய விரும்புகிறோம்.நாம் ஏன் நமது உடலை அழகானதாக வலுவானதாக மாற்ற விரும்புகிறோம்.அறிவை பெற நாம் அலைந்து கொண்டே இருக்கிறோம்.பணம், கல்வி,வீரம்,அழகு இவை அதிகாரத்தை அடைய வழி வகுக்கின்றன.

நிறை செல்வம்  வைத்திருப்பவரின் அகங்காரம் தன்னை விட குறைவான செல்வம் வைத்திருப்பவரை பார்த்து நிறைவடைகிறது.அப்படியே கல்வி,வீரம்,அழகு எல்லாம் மற்றமையில் தன்னை ஒப்பிட்டு நிறைவு கொள்கிறது.பிறரில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதே நம்மை நிறைவடையச் செய்கிறது அல்லது அமைதி இழக்கச் செய்கிறது.
அமைப்பியலில் ஒரு சிகப்பு விளக்கு "நிறுத்து" என்ற சமிக்ஞையை அளிப்பது அது பச்சை மற்றும் மஞ்சள் நிற விளக்குகளுடன் இருப்பதால் தான் என்று கூறி நாம் அனைத்தையும் ஒரு சூழமைவில் வைத்து தான் புரிந்து கொள்கிறோம் என்கிறது.இதை நாம் பெளத்தத்திலும் பார்க்கலாம்.நாம் எதையும் அது அதுவல்ல என்று புரிந்தே தொகுத்து கொள்கிறோம்.அது அதுதான் என்று புரிந்து அல்ல.

நாம் நம்மை புரிந்து கொள்வதும் தொகுத்துக் கொள்வதும் பிறரை முன்னிலை படுத்தித்தான்.பிறர்,  மற்றமை தான் எப்போதும் பிரதானமாகிறது.ஐரோப்பா போல நாம் நாட்டில் தனிமனித சுதந்திரம் இல்லை என்றுதான் பேசுகிறோம்.தனியான தனித்த பிறிதொன்றை சாராத சுயம் என்று ஒன்று இல்லை.நாம் நான் நான் என்று சொல்லும் அனைத்திலும் பிறர் தான் இருக்கிறார்கள்.தனித்த சுயம் என்பது பாவனை மட்டுமே.

நாம் அடையும் மகிழ்ச்சியும் துயரமும் பிறரில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதில் இருக்கிறது.நமது வேலை இடங்களில் , நமது குடும்பத்தில் , நமது நட்பு சூழலில் , உறவுகளில், ஊரில் நாம் எப்படி பார்க்கப்படுகிறோம் என்பது நமது ஆளுமையை பாதிக்கிறது.மிகுந்த அவமானத்தை அடையும் தருணத்தில் நீங்கள் வேலை செய்யும் இடத்தையும் உடன் வேலை செய்பவர்களையும் எரித்து விட வேண்டும் கொலை செய்து விட வேண்டும் என்று தோன்றுவது நீங்கள் பிறிரில் நீங்கள் எப்படியாக பதிந்துவீட்டீர்கள் என்பதை மாற்றுவதற்காகத்தான்.அங்கே அதிகாரத்தின் மீதான இச்சை துவங்குகிறது.ஆரோக்கியமான பால்ய காலத்தை கொண்டவர் வளர்ந்த பின் பிறரை துயரப்படுத்துவதை விட ஆரோக்கியமற்ற பால்ய காலத்தை கொண்டவர் அதிகம் துயரப்படுத்துகிறார்.அதிகாரத்தின் வழி அவர் தன் துயரமான அவமானமான பால்ய காலத்தின் பக்கங்களை துடைக்கிறார்.

பணம், பதவி, வீரம் , அழகு , கல்வி ,சேவை என்று எதுவுமே சமூகத்தில் அதிகாரத்தை அடைவதற்கான இச்சையை உள்ளடக்கியதுதான்.அதிகாரம் பிறிரில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை மாற்றுகிறது.ஆல்பர் காம்யூவின் வீழ்ச்சி நாவலில் அதன் மைய கதாபாத்திரம் கிளைமண்ட் ஒரு முறை சாலையில் சிகப்பு விளக்கு எரிவதால் காரை நிறுத்தியிருப்பான்.அந்த காரை கடந்து செல்ல வழி விடாததால் ஒரு மோட்டார் சைக்கிள் காரன் கிளைமண்டை திட்டிவிட்டு சென்றுவிடுவான்.கிளைமண்ட் அவனை பிடித்து மண்டியிட வைத்து தண்டிக்க வேண்டும் என்று மறுபடி மறுபடி நினைப்பான்.அந்த நினைவால் அவனால் சமநிலையுடன் நடந்து கொள்ளவே முடியாது.

தஸ்தாயெவ்ஸ்கியின் பதின் நாவலில் பத்தொன்பது வயது இளைஞன் அர்காடி தன் தந்தையிலிருந்து தன்னை பிறித்து அறிய முடியாமல் அவரை மையப்படுத்தியே சிந்திப்பான்.அவர் உண்மையில் நல்லவரா தீயவரா என்பதில்தான் அவனது பெரும் பகுதி காலம் கழியும்.அவர் நல்லவர் என்ற எண்ணம் வந்தவுடன் அவரை மிகவும் நேசிப்பான்.அவரைப் பற்றிய தவறான செய்தியை அறியும் போது அவரை மிகவும் வெறுப்பான்.அவனது இருப்பு அவனது தந்தையின் இருப்பால் மட்டுமே அர்த்தம் கொள்கிறது.அவன் அவனது தந்தையின் நிழலுருவம்.ஏதோ ஒரு கட்டத்தில் தன் தந்தையிலிருந்து தன்னை விலக்கி தான் தனி மனிதன் என்பதை அவன் அறிகிறான்.தஸ்தாயெவ்ஸ்கியின் மற்றொரு நாவலான இரட்டையில் கொல்யாட்கின் தன்னைப் போல ஒருவனை பார்த்து அவனது வெற்றியை பார்த்து புழுங்குவான்.இறுதியில் மனப்பிறழ்வு அடைவான்.உண்மையில் அப்படி ஒரு மற்ற கொல்யாட்கின் இருந்தானா அல்லது அது சீனியர் கொல்யாட்கினின் கற்பனையா என்று நாவலில் தெளிவில்லை.ஆனால் அவன் அந்த மற்ற கொல்யாட்கினால் தன்னில் குறுகுகிறான்.அவன் தன் மனப் புழுக்கத்திலிருந்து விடுபட அதிகாரத்தை நோக்கி செல்ல முடியும்.அல்லது மனப்பிறழ்வு கொள்ள முடியும்.அவன் மனப்பிறழ்வு அடைகிறான்.

பிறர் இல்லாத தனித்த சுயம் என்பது சாத்தியம் இல்லை என்பது போல பிறர் அல்லது மற்றமை என்று நாம் எண்ணுவதும் பாவனைதான்.மற்றமை உண்மையில் வெளியில் இல்லை.நமது பிரக்ஞையே அதுவாகத்தான் இருக்கிறது.அந்த உணர்தலே தன்னுணர்வு.

ஒரு அழகான , படித்த , பெருநகரத்தை சேர்ந்த பெண்ணை ஒருவன் திருமணம் செய்ய விரும்புகிறான்.அவன் படித்த , அழகான , பெருநகரத்தை சேர்ந்த பெண்னை திருமணம் செய்யும் போது அழகற்ற படிக்காத சிறுநகரத்து பெண்ணை திருமணம் செய்தவனை மனப்புழுக்கம் கொள்ளச் செய்கிறான்.அழகு , படிப்பு, பெருநகரம் இவை அதிகாரத்திற்கு அருகில் இருப்பவை.அதை அடைபவன் அதை அடையாதவனின் அகங்காரத்தை தகர்க்கிறான்.சமூக மதிப்பீடுகள் அதிகார கட்டமைப்பை உருவாக்குகிறது.அந்த அதிகார கட்டமைப்பு நமது அகங்காரத்தை கட்டமைக்கிறது.சிவப்பான , அழகான, படித்த , பெருநகரத்து பெண்னை திருமணம் செய்பவன் அடையும் நிறைவு அதிகாரத்தின் நிறைவு.அங்கே அவன் அடையும் காம இச்சையின் நிறைவு அவனின் அகங்காரத்தின் நிறைவு.

பிறர் என்பது பிறரில் இல்லை.மற்றமையின் பொருட்டே அதிகாரம்.மற்றமை குறித்த பிரக்ஞை தன்னுணர்வுக்கான முதல் வழி.அப்படியாக நமக்கு உண்மையில் என்ன வேண்டும் என்று யோசிக்கலாம்.வீழ்வேன் என்னு நினைத்தாயோ என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை.


No comments: