தமாஷ்








சென்ற வருட இறுதியில் அடுத்த வருடத்தின் பிரதான திட்டம் திருமணம் என்று எழுதியிருந்தேன்.ஒரு கனவு போல அது இந்த வருடம் நிகழ்ந்தது.கிலாய்ட்ஸ் இருந்தது ,அதற்காக குழம்பியது, ஒரு பெண் மீது கொண்டிருந்த பெரும்பற்று உடைந்த போது ஏற்பட்ட வலி, பெங்களூரின் தனிமை வாழ்க்கை என்று இந்த வருடமும் எல்லா குழப்பங்களுடன்தான் தொடங்கியது.சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் நாள் தற்கொலைக்கு முயன்றேன்.தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது நிறைய வலிக்கலாம் என்று தோன்றியது.தூக்க மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ள மடிக்கணினியை திறந்தேன்.பேஸ்புக்கில் கவிஞர் சுகுமாரன் என் அலைபேசி எண்னைக் கேட்டார்.கொடுத்தேன்.அழைத்தார்.காலச்சுவடு கொண்டு வர இருக்கும் காகித மலர்கள் நாவலுக்கு முன்னுரை எழுத முடியுமா என்று பாருங்கள் என்று சொன்னார்.

அவர் பேசி முடித்தப்பின் நான் கூகிளிலில் தூக்க மாத்திரைகள் பற்றி தேடவில்லை.இன்னும் சில காலம் வாழலாம் என்று தோன்றியது.அன்று புரசைவாக்கத்தில் ஒரு ஜோசியரை சென்றுப் பார்த்தேன்.வெட்கமாக இருந்தது.ஆனால் அன்று மிகவும் பதற்றமாக இருந்தேன்.வேறு வழியில்லை.ஏதோ ஒரு நம்பிக்கை கிடைத்துவிட வேண்டும் என்று தோன்றியது.அவர் நீங்கள் உங்களின் கெளரவம் பாதிக்கப்படும் என்று நினைத்து எந்த காரியத்தையும் செய்யாமல் இருக்க வேண்டாம் என்றார்.ஏதோ நம்பிக்கையாக உணர்ந்தேன்.அப்போது சென்னையில் விடுமுறையில் இருந்தேன்.இரண்டு வாரங்களும் பஷீரின் புத்தகங்களை வாசித்தேன்.பின்னர் பெங்களூர். எனக்கு பெங்களூரில் ஒரே பிரச்சனைதான் இருந்தது.அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது யாரோ பெரிய பாறாங்கல்லை எடுத்து மார்பில் வைத்துவிட்டது போல இருக்கும்.

ஜூலையில் முன்னர் என்னுடன் பெங்களூரில் அறையில் தங்கியிருந்த நண்பருக்கு அழைத்து சென்னை வந்திருக்கிறேன் என்றேன்.எதற்காக என்றார்.நிச்சியதார்த்தம் என்றேன்.யாருக்கு என்றார்.எனக்கு என்றவுடன் உங்களுக்கா என்றார்.திருமணம் நெய்வேலியில் நிகழ்ந்தது.இரண்டு நாட்களுக்கு முன் சென்றேன்.என் பள்ளித் தோழன் சாலையில் என்னைப் பார்த்தான்.பிறகு மாலையில் அழைத்தான்.என்ன விசேஷம் எல்லோரும் வந்திருக்கிறீர்கள் என்றான்.திருமணம் என்றேன்.யாருக்கு என்றான்.எனக்கு என்றேன்.உனக்கா , எப்போ என்றேன்.நாளை என்றேன்.என்னடா சொல்றே என்று கொஞ்ச நேரம் பேச்சற்று போனான்.நண்பர் ஒருவர் சென்றாண்டு திடீரென்று ஒரு நாள் அழைத்து நீங்கள் நல்ல எழுத்தாளர் , உங்கள் எழுத்தில் கவனம் செலுத்துங்கள் என்றார்.கிலாய்ட்ஸ் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது , எழுத்தாளன் ஆவதற்காவது முயற்சி செய்யச் சொல்லி வாழ்த்துகிறார் என்று புரிந்து கொண்டேன்.நன்றி சொன்னேன்.வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அப்போது ஒரு வீட்டில் மேற்கொண்டு பேசுவதற்கு ஒப்புதல் தெரிவித்தார்கள்.எனக்கு அந்த சம்மந்தம் வேண்டாம் என்று தோன்றியது.உறவினர் ஒருவர் நமக்கே கிலாய்ட்ஸ் எல்லாம் இருக்கிறது, கிடைப்பதை எதற்கு வேண்டாம் என சொல்ல வேண்டும் என்றார்.பஷீர் வாழ்க்கையே ஒரு பெரிய தமாஷ் என்றார்!!!தமாஷ் தான்.

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் லேபாக்ஷியும் பெனுகொண்டாவும் சென்றேன்.பெனுகொண்டாவில் ஷெர் கான் மசூதி சென்றேன்.பாபையா என்ற சூஃபி தியானம் செய்த இடம் சென்று பார்த்தேன்.இரண்டும் மிகுந்த கிளிர்ச்சியை அளித்த சம்பவங்களாக இருந்தன.அப்போது பஷீர் பற்றி எம்.கே.ஸானு எழுதிய தனிவழியிலோர் ஞானி நூலையும் தர்மானந்த் கோஸாம்பியின் சுயசரிதையையும் வாசித்திருந்தேன்.இருவரும் பெனுகொண்டா போன்ற ஊரில் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.பூதக்கண்ணாடி சிறுகதையை எழுதினேன்.மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.காலச்சுவடு இதழுக்கு அனுப்பினேன்.பிரசுரமானது.கே.என்.செந்தில் கொண்டு வந்த கபாடபுரம் இணைய இதழுக்கு சவரக்கத்தி என்ற சிறுகதையை எழுதினேன்.நீலம் என்ற தந்தைக்கும் மகனுக்குமான கதையை எழுதினேன்.மனல் வீடு சிற்றிதழில் பிரசுரமாகும்.இந்த வருடத்தின் மகிழ்ச்சியான விஷயம் நான் மூன்று சிறுகதைகளை எழுதினேன் என்பதுதான்.திருமணத்தை விட சிறுகதைகள் எழுதினேன் என்பதே பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

தொடர்ந்து எழுத வேண்டும்.எழுத முடியும் என்று தோன்றுகிறது.சுந்தர ராமசாமி புதுமைப்பித்தன் என்றால் சுதந்திரம் என்று சொன்னதாக நினைவின் நதியில் நூலில் ஜெயமோகன் எழுதியிருப்பார்.சிறுகதைகள் எழுதும் போது அந்த சுதந்திரம் வேண்டும் என்று நினைக்கிறேன்.மிக எளிய விஷயங்களிலிருந்து மிக சிக்கலான விஷயம் வரை எதை குறித்தும் எழுதலாம்.அது மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றில்லை.இதுதான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதை என்று யாரும் சொல்லத் தேவையில்லை.நான் தொடர்ந்து தொடக்கம் – முடிச்சு – முதிர்வு என்ற பாணியிலான கதைகளைத்தான் எழுத விரும்புகிறேன்.ஆனால் அதில் ஒரு தரிசனம் இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.தரிசனம் இல்லாமல் எழுதக்கூடாது என்றில்லை.தரிசனம் இருந்தால் எல்லாவற்றையும் இணைத்துவிடலாம்.

நமது சூழலில் இலக்கியம், தீவிர எழுத்து அதன் பொருளிழந்து இருப்பது போல தோன்றுகிறது.எல்லோருமே இதனால் என்ன பிரயோஜனம் என்று மறுபடி மறுபடி கேட்கிறார்கள்.எழுதுபவர்கள் கூட சந்தேகம் கொள்கிறார்கள்.வேறு துறைக்கு போகிறார்கள்.இலக்கியம் ஓர் அறிவுத்துறை.ஸ்டீபன் ஹாக்கிங் இயற்பியல் என்ற அறிவுத்துறையில் இயங்குகிறார்.அவரிடம் நீங்கள் செய்வதன் பயன்மதிப்பு என்ன என்று யாரும் கேட்பதில்லை.ஆனால் இலக்கியவாதியிடம் தொடர்ச்சியாக இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.அறிவியல்,தத்துவம் போல இலக்கியம் ஓர் அறிவுத்துறை.இலக்கியம் ஒரு போதும் சினிமாவைப் போல சமகால விஷயங்களை பேச முடியாது.அதனால் அது சமகாலத்தில் அதிக கவனத்தை பெற முடியாது.அதன் தளம் வேறு.தஸ்தாயெவ்ஸ்கி எழுதியுள்ளவை இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு பொருந்துகிறது.இது அசாதரணமான விஷயம்.இலக்கியம் சமயம் போன்றதும் கூட.அறிவியலின் சட்டகத்தில் இல்லாதது விழுமியம்.அதை இலக்கியமே கொடுக்க இயலும்.தத்துவம் அதற்கான தர்க்கத்தை அளிக்கும்.மற்ற துறைகள் அதற்கான தரவுகளை அளிக்கும்.இன்றைய தனிமனிதன் நாற்பதுகளில் புதுமைப்பித்தனில் உருவானவன் என்று ஜமாலன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.அதுதான் இலக்கியத்தின் பயன்மதிப்பு.ஒரு துறையில் நிறைய கவனம் செலுத்தி அதிலேயே இருந்தால்தான் எதையாவது உருப்படியாக செய்ய முடியும்.எழுத வேண்டுமென்றால் தொடர்ந்து மனம் இதிலேயே இருக்க வேண்டும்.உணர்வுகள் அனைத்தையும் மொழியாக்கி விடுவதற்கான சாத்தியங்கள் கைப்பெற வேண்டும்.வேறு விஷயங்களில் கவனம் இருக்கலாம்.ஆனால் அதை தனது அடையாளமாக எழுத்தாளன் ஒரு போதும் கொள்ளக் கூடாது.இதுதான் நான் எனக்காக கண்டுகொண்ட பதிலும் கூட.நம் சூழலில் எழுத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை.எந்த அங்கீகாரமும் கிடைக்கப்போவதில்லை.யாரும் வாசிக்கப் போவதில்லை.மேலும் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்கள், வேலை சார்ந்த சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள், உடல் பிரச்சனைகள் என்று நம் வாழ்க்கையில் எவ்வளவோ நிகழலாம்,நிகழ்கிறது.அந்தக் கொந்தளிப்புகளின் போதும் ஒருவன் எழுத்துக்குள் இருக்க வேண்டும்.அடிப்படையில் இதில் ஒரு மகிழ்ச்சி இருக்க வேண்டும்.இருந்தால் மற்றவை பிரச்சனையில்லை.எனக்கு இருக்கிறது.ஆதலால் நான் எழுதுவேன் என்றே நினைக்கிறேன்.பஷீர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு ரோஜா தோட்டத்தை உருவாக்கியது போல நாமும் உருவாக்கலாம் நமக்கான குட்டிப் பிரபஞ்சத்தை.

No comments: