தாய்நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது கணித ஆசிரியர் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்பதால் தரையில் மண்டியிட சொன்னார்.என்னுடன் சேர்ந்து இன்னும் ஐந்தாறு சிறுவர்களும் இருந்தனர்.பிறகு சட்டையை கழற்றச் சொன்னார்.எவ்வளவு மன்றாடியும் அவர் விடவில்லை.எல்லோரும் சட்டையை கழற்றினோம்.அந்த வகுப்பு முடியும் வரை அப்படியே இருந்தோம்.நான் ஆண்கள் பள்ளியில்தான் படித்தேன்.ஆனால் அன்று மதிய உணவு இடைவேளையில் என் சகோதரன் மற்றும் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்த போது, நண்பர்கள் விஷயத்தை என் அண்ணனிடம் சொன்னார்கள்.நான் அப்போது தலை குனிந்திருந்தேன் என்பது இப்போதும் நினைவில் இருக்கிறது.அதை ஒரு அவமானமாக உணர்ந்திருக்கிறேன், தண்டனையாக அல்ல என்பதை இப்போது அவதானிக்க முடிகிறது.

அந்த ஆசிரியர் பெண்.எனக்கு முப்பது வயது கடந்து விட்டது.இன்று வரை அந்த ஆசிரியரின் மனம் ஏன் அப்படி செயல்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நான் இதுவரை எந்தக் குழந்தையையும் அடித்ததில்லை.தண்டித்ததில்லை.அப்படி ஒன்றை செய்ய முடியும் என்பதையே என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.ஆனால் குழந்தைகளை கண்டிக்காமல் வளர்க்க முடியாது என்பதும் உண்மை.

குற்றம் கடிதல் திரைப்படத்தின் மைய கதாபாத்திரம் மெர்லின்.கிறுஸ்துவப் பெண். புரோட்டஸ்டண்ட்.அதிலும் பெந்தகோஸ்தே பிரிவைச் சேர்ந்தவள்.அவள் ரோமன் கத்தொலிக்க பிரிவை சேர்ந்தவள் அல்ல, பெந்தகோஸ்தே என்பதில் இரண்டு செய்திகள் இருக்கிறது.
கத்தொலிக்கர்களை போல புரோட்டஸன்ட் கிறுஸ்துவர்கள் அன்னை மேரியை  முக்கியமாக கருதுவதில்லை.அவர் கிறுஸ்துவின் தாய்.வணக்கத்துக்குரியவர்.அவ்வளவுதான்.பிராத்தனையும் மன்றாடலும் கிறுஸ்துவிடம் மட்டுமே செய்யப்பட வேண்டும்.இந்த அன்னை மேரியின் வழியாக மெர்லின் படத்தின் இறுதியில் மாக்ஸிம் கார்க்கியின் தாயுடன் இணைகிறாள்.இரண்டாவது பெந்தகோஸ்தே போன்ற பிரிவுகளை சேர்ந்துவர்கள்தான் ஆழமான மதப்பற்று உள்ளவர்களாக இருப்பார்கள்.பெரும்பாலும் இந்து மதத்திலிருந்து கிறுஸ்துவத்திற்கு மாறுபவர்கள் இந்தப் பிரிவில் தான் இணைகிறார்கள்.அவர்களுக்கு கிறுஸ்துவை தவிர பிறிதொரு கடவுளை வணங்குவது பெரிய குற்றம்.பிற மதத்தினர் தங்கள் தெய்வத்தை வழிபட்டு கொடுக்கும் பிரசாத உணவை அவர்கள் உண்பதில்லை.பாலியல் உணர்வுகள், சின்னச் சின்ன குற்றங்கள் கூட பெரிய பாவம் என்று போதிக்கப்படுகிறார்கள்.எப்போதும் ஆழமான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.திரைப்படங்களை குறைவாக பார்க்கிறார்கள்.அல்லது குற்றவுணர்வுடன் பார்க்கிறார்கள்.உயிரியல் ரீதியாக நம்மை மகிழ்ச்சியடைய செய்யும் எதுவும் அவர்களால் பாவமாக்கப்படுகிறது.அவர்களின் கூட்டு வழிபாட்டு முறை உளவியல் ரீதியாக பலவீனமானவரை எளிதில் வசீகரிக்கக்கூடியது.கிட்டத்தட்ட மனவசியம் போன்ற வழிபாட்டு முறை அது.

நான் கிறுஸ்துப் பள்ளியில் படித்தேன்.ரோமன் கத்தொலிக்க பள்ளி.அங்கே ஒரு முறை கூட நான் மதமாற்றம் போன்ற விஷயங்களை எதிர்கொண்டதில்லை.மிக ஆரோக்கியமான பள்ளி வாழ்க்கை என்னுடையது.ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் போது சிறிது காலம் டியூஷன் சென்றேன்.அவர்கள் புரோட்டஸ்டண்ட் கிறுஸ்துவர்கள்.அவர் பாதிரியாரும் கூட.வள்ளலார் இறுதி காலத்தில் போதித்தது கிறுஸ்துவம்தான், அதனால் தான் அவர் கொல்லப்பட்டார் என்றார்கள்.எனக்கு என் மதம் குறித்து அப்போதும் பெரிதாக ஒன்றும் தெரியாது.ஆனால் அவர்கள் சொல்வது உண்மையில்லை என்று மட்டும் தெரிந்தது.பிறகு நான் நிறைய நாட்கள் டியூஷன் செல்லவில்லை என்று நினைக்கிறேன்.  

அத்தகைய பிரிவின் போதகரான பெண்ணின் மகள் மெர்லின்.பள்ளி ஆசிரியர்.அவள் மணிகண்டன் என்ற இந்துப்பையனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.அவளுக்கு தன் அன்னை தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதிலும் தான் இந்து மத அடையாளங்களை ஏற்றுக் கொள்கிறோமே என்பதிலும் குற்றவுணர்வு இருக்கிறது.ஒரு கிறுஸ்துவ பையனை காதலித்திருக்கக்கூடாதா என்று ஏங்குகிறாள்.திருமணத்திற்கான விடுமுறை முடிந்து மறுபடியும் பள்ளிக்கு செல்கிறாள்.அவளை பள்ளியில் விட்டுவிட்டு தன் அலுவலகம் செல்கிறான் மணிகண்டன்.அன்றைய நாளில் பள்ளியில் ஒரு குறும்புக்கார சிறுவனை அடித்துவிடுகிறாள்.அவன் மயங்கி கீழே விழுகிறான்.அவனை மருத்துவமனை எடுத்துச் செல்கிறார்கள்.

பிரச்சனை பெரிதாகிவிடும் என்று பள்ளியின் முதல்வர் அவளையும் அவளது கணவனையும் எங்காவது சென்றுவிட சொல்கிறார்.வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்பதால் தேவாலயம் செல்பவள் அங்கு இருசக்கர வாகனத்தின் கண்ணாடியில் தன் முகம் பார்த்து அழுகிறாள்.பின்னர் நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து அதை துடைக்கிறாள்.அவள் இந்து மதத்தின் அடையாளங்ளை ஏற்றுக்கொண்டதால் கிறுஸ்து தன்னை தண்டித்துவிட்டார் என்று அவள் மனம் தர்க்கம் புரிகிறது.பெருங்கருணையின் வடிவாக கிறுஸ்து அவளுக்கு அறிமுகாகவில்லை.அவளின் கிறுஸ்து தண்டனைகள் வழங்க வல்லவர்.அடிப்பட்ட மாணவன் செழியனின் மாமா உதயன் இடதுசாரி சிந்தனையாளர்.தொழிற்சங்கத்தில் இருக்கக்கூடும்.படத்தில் காட்டப்படவில்லை.தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.செழியனின் அன்னை ஆட்டோ ஒட்டுநர்.

காவல் துறையினர் மெர்லின் நேரில் வர வேண்டும் என்று நிர்பந்திக்க மெர்லினும் மணிகண்டனும் சென்னை திரும்புகிறார்கள்.காவல் நிலையம் செல்லாமல் மருத்துவமனை சென்று செழியனின் அன்னையிடம் மன்னிப்பு கேட்கிறாள் மெர்லின்.மெர்லின் பேருந்தில் திரும்ப சென்னை வரும் போது செழியனை பற்றி நினைக்கிறாள்.அவளின் நினைவுகள் ஊடாக சின்னஞ்சிறு கிளியே பாடல் ஒலிக்கிறது.என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் என்ற வரியில் அவனை பின்தொடர்ந்து அவள் படிகளில் ஏறி செல்கிறாள்.செழியன் அவளது கன்னத்தில் முத்தமிடுகிறான்.அவள் அவனின் அன்னையாகிறாள்.அன்னையான பின் அவளின் மன அழுத்தம் குறைகிறது.செழியனின் அன்னையை பார்த்து மன்னிப்பு கேட்கிறாள்.செழியன் உடல் மீள்கிறான்.மெர்லின் செய்தியாளர் சந்திப்பில் மாணவனை அடித்தது தவறுதான் என்கிறாள்.எல்லாவற்றையும் விட உயிர் முக்கியம் என்கிறாள்.அதன்பின் இந்து அடையாளங்களை கொண்டிருப்பதில் அவளுக்கு குற்றவுணர்வு இல்லை.அவளுக்கு செழியனின் மாமா உதயன் தாய் நாவலை அளிக்கிறார்.செழியனின் அன்னையின் பெயர் படத்தில் எங்கும் வரவில்லை.ஒரு வேளை அவளின் பெயர் மேரியாக இருக்கலாம்.மெர்லின் மேரியை வணங்குகிறாள்.அப்படியாக அவள் மாக்ஸிம் கார்க்கியின் தாயுமாகிறாள்.புரட்சியின் தொடக்கமாகிறாள்.

ஒரு பக்கம் குற்றம் – குற்றவுணர்வு – பாவம் – தியாகம் அல்லது மன்னிப்பு என்ற கிறுஸ்தவ தளத்தில் பயனிக்கும் திரைப்படம், மறுபுறம் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டிய பாலியல் கல்வி, மாணவர்கள் தண்டிக்கப்படுதலுக்கு பின்னாலுள்ள குற்றம், இடதுசாரி சிந்தனை, பத்திரிக்கையாளர்களின் பொறுப்பற்ற தண்மை என்று நிறைய அடுக்குகளை கொண்டிருக்கிறது.ஆனால் தங்கமீன்கள் திரைப்படத்தில் தனியார் பள்ளிக்கூடங்களை காண்பிப்பது போல இதில் அத்தனை எதிர்மறையாக காண்பிக்கவில்லை.தனியார் பள்ளிகள் குறித்த எதிர்மறையான கேள்விகளை உதயன் கேட்கிறார்.ஆனால் அவரே இவர்கள் ஏதோ பணத்தின் மீது மட்டும் அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பதையும் புரிந்துகொள்கிறார்.மருத்துவர்கள் கூட நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள்.பத்தரிக்கையாளர்களின் பொறுப்பற்ற தண்மை மட்டும்தான் எதிர்மறையாக காட்டப்பட்டுள்ளது.

இந்தப் படம் யதார்த்த தளத்தில் பள்ளிக்கூட மாணவர்களை அடிக்கக்கூடாது என முன்வைக்கும் போதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்தான்.ஆனால் அவர்களை கண்டிக்கத்தான் வேண்டும்.ஏப்படி பெரியவர்களின் உலகில் சுரண்டல் இருக்கிறதோ அது போல் சிறியவர்களும் சுரண்டக்கூடியவர்கள்தான்.ஒரே மாற்றம் அவர்களின் சிக்கல்கள் வேறு தளத்திலானவை.நாம் குற்றம் என் கொள்வதிலும் சிறுவர்கள் குற்றம் என கொள்வதிலும் வேறுபாடு உள்ளது.ஆனால் இரு உலகங்களிலும் குற்றம் உள்ளது.ஒரு பள்ளியில் எல்லா குழந்தைகளையும் ஒரு ஆசிரியரால் தன் பிள்ளைகளாக பார்க்க முடியாது.ஏதேனும் ஒரு குழந்தையிடம் மட்டும் முகச்சாயல் காரணமாக , பெயர் காரணமாக , அவர்களின் செயல்கள் காரணமாக தனிப்பட்ட அன்பும் பற்றும் சாத்தியம்.உண்மையில் பற்றற்று சற்று விலகி நின்று அவர்களை கண்டிப்புடன் வளர்ப்பதே ஆசிரியர்களுக்கு சாத்தியம்.ஆனால் அந்த கண்டிப்பின் பெயரில் உடலை துன்புறுத்தக் கூடாது.அவர்கள் அவமானமாக கருதும் தண்டனைகளையும் வழங்கக்கூடாது.ஒருவர் தன் உடல்மொழியால் கூட குழந்தைகளை கட்டுப்படுத்த முடியும்.ஒரு வகுப்பு சூழலை பொறுத்து அந்த ஆசிரியர் எத்தகைய கண்டிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அவரே கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த திரைப்படத்தை பிரம்மா எழுதி இயக்கியுள்ளார்.அற்புதமான காட்சிசார் நுண்ணுணர்வு கொண்டவர்.படத்தின் இசையமைப்பும் பாடல்களும் நன்றாக உள்ளது.காலை நிலா கடல் தாண்டி கரை ஏறுதே பாடலும் சின்னஞ்சிறு கிளியே பாடலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் சிறப்பாக உள்ளது.படத்தொகுப்பை சி.எஸ்.பிரேம் செய்திருக்கிறார்.இவர் லெனினிடம் பணிபுரிந்தவர்.இதற்கு முன் இவர் பணிபுரிந்த சில படங்கள் இன்னும் வெளிவரவில்லை.இதுதான் அவர் வேலை செய்து வெளியாகும் முதல் முழுநீளத் திரைப்படம் என்று நினைக்கிறேன்.இந்தப் படத்தில் சிறப்பாக பணிபுரிந்திருக்கிறார்.அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.மெர்லின் கதாபாத்திரத்தில் நடித்த பெண் நாடகத்துறையை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.பாலகிருஷ்ணன் என்ற ஒரு நாடக நடிகர் சென்னையில் ஆங்கில நாடகங்களை அரங்கேற்றி நடிப்பார்.இருவரின் முகச்சாயலும் ஒரே போல இருக்கிறது.உறவுக்காரர்களாக இருக்கலாம்.நன்றாக நடித்திருக்கிறார்.அந்த மன அழுத்தத்தையும் குற்றவுணர்வையும் சிறப்பாக வெளிகொணர்ந்துள்ளார்.மணிகண்டனாக நடித்தவர் பிசாசு படத்திலும் நடித்திருக்கிறார்.மெர்லினை காதலிக்கும் போது அவர் தாடியில்லாமல் நீல நிற சட்டை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.அந்தக் காட்சி நன்றாக இருந்தது.காதல் திருமணமும் அதில் உருவாகும் மன அழுத்தங்களும் ஆண்களை தாடி வளர்க்கச் செய்துவிடுகிறது போலும்!

இன்று நிறைய இளைஞர்கள் மாற்றுப் பொருளாதாரம் குறித்து, நமது அமைப்பின் சிக்கல்கள் குறித்து ஆழமாக சிந்திக்கிறார்கள்.இந்தப் அமைப்பை இப்படியே ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் ,நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான பாதைகள் இருக்கிறது , அவற்றை நோக்கிச் செல்லலாம் என்கிறார்கள்.பிரம்மா அவர்களில் ஒருவர்.அவர் இன்னும் நிறைய நல்ல திரைப்படங்களை நமக்களிப்பார் என்று தாராளமாக நம்பலாம்.


No comments: