தர்மாணந்தின் பயணம் - I








 
தர்மாணந்த் கோசம்பி 1876 கோவாவில் பிறந்தார்.ஜோசியக்காரர் ஒருவர் தர்மாணந்த் நிறைய படிப்பார் என்றும் ஆனால் ஒன்றும் பெரிதாக சம்பாதிக்க மாட்டார் என்றும் அவரின் தந்தையிடம் சொல்கிறார்.பள்ளியில் சேரும் தர்மாணந்த் உடல் நலமின்மையால் பள்ளி படிப்பை தொடராமல் விட்டுவிடுகிறார்.தனக்கு கிடைக்கும் சில சஞ்சிகைகளையும் புத்தகங்கையும் வாசிக்கிறார்.அவருடைய பதினைந்தாவது வயதில் அவருக்கு திருமணம் செய்துவிக்க படுகிறது.அவருக்க சமஸ்கிருதம் வாசிக்க வேண்டும் என்ற ஆழமான ஆவல் இருக்கிறது.தர்மாணந்த் தன் தந்தையின் வயல்களை பார்த்துக்கொள்கிறார்.1894 ஆம் ஆண்டு சம்ஸ்கிருதம் பயிலும் ஆவலோடு கொல்காபூர் செல்கிறார்.அங்கே சில நாட்கள் தங்குகிறார்.ஆனால் தன் தந்தையின் நிணைவு வரவே அவர் கோவாவில் மார்கெளன் என்ற ஊருக்கு திரும்புகிறார்.அவர் திரும்பிய செய்தியை அறியும் தந்தையும் மார்கெளன் வருகிறார்.அவருடைய தந்தை நீ இனி வீட்டை விட்டு சென்றால் நானும் உண்னை தேடி வீட்டை விட்டு வர வேண்டியிருக்கும் என்கிறார்.1897 ஆம் ஆண்டு ஒரு மராத்தி சஞ்சிகையில் புத்தர் வாழ்வை குறித்து வாசிக்கிறார்.இது அவருக்குள் ஆழமான பாதிப்பை உண்டாக்குகிறது.அதே வருடம் அவரின் தந்தை பக்கவாதத்தால் இறக்கிறார்.1899 ஆம் வருடம் அவருக்கு முதல் பெண் குழந்தை பிறக்கிறது.அவருடைய மைத்துனர் சாக்காராம் போர்ச்சுகலிலிருந்து திரும்பி மாபுசா என்ற ஊரில் மருத்துவ பயிற்சியை தொடங்குகிறார்.

மூன்றாவது முறையாக 1899ஆம் ஆண்டு தன்னுடைய 23ஆம் வயதில் தர்மாணந்த் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.புனாவில் (புண்ணிய பூமிதான் புனா என்று பெயர் மாறியிருக்கிறது போலும்) டாக்டர் பந்தார்கரை சந்திக்கிறார்.தர்மாணந்த் கோவாவிலிருந்து வந்தாலும் மராத்தியில் நல்ல தேர்ச்சி இருப்பதை அறியும் பந்தார்கர் அவரை அங்கியிருக்கும் சமஸ்கிருத பள்ளியில் சேரச் சொல்கிறார்.அங்கே பராத்தணா சமாஜ்ஜில் தங்கி சமஸ்கிருதம் கற்கிறார் தர்மாணந்த்.தனக்கு ஏதேனும் வேலை கிடைத்தால் தன் செலவை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் தர்மாணந்த் அதை குறித்து பந்தார்கரிம் கேட்கிறார்.பராத்தணா சமாஜ்ஜில் அவர் உறுப்பினராகும் பட்சத்தில் சமாஜ் மூலமாக உதவுவதாக பந்தார்கர் சொல்கிறார்.பராத்தணா சமாஜ்ஜின் கொள்கைகளான சாதி பாகுபாடுயின்மை , குழந்தை திருமண மறுப்பு ஆகியவற்றில் தனக்கு மாற்றுக்கருத்து ஏதும் இல்லையென்றும் ஆனால் தன் லட்சியம் பெளத்தம் கற்பதே என்கிறார் தர்மாணந்த்.பெளத்தம் கற்பதற்கு நேபாளம் அல்லது சிலோன் செல்ல வேண்டும் , மேலும் துறவை ஏற்க வேண்டும் , அதனால் நம் நாட்டுக்கு என்ன பயன் என்கிறார் பந்தார்கர்.பெளத்தம் கற்பதே தன் வாழ்வின் நோக்கு என்று சொல்லும் தர்மாணந்த் இனியும் இங்கு இருப்பதில் எந்த வித பயனும் இல்லை என்று உணர்ந்து மேற்கொண்டு படிக்க நேபாளம் அல்லது சிலோன் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.ஆனால் சிலோன் குறித்து தனக்கு எதுவும் தெரியாது,அதே நேரத்தில் வடமொழியும் தெரியாது.ஆனால் காசியில் மராத்தி பேச கூடியவர்கள் இருக்கிறார்கள்.அப்படியென்றால் இப்போதைக்கு காசி சென்று வடமொழி கற்று பின்னர் நேபாளம் செல்லலாம் என்று முடிவு செய்கிறார்.புனாவிலிருந்து காசி நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறார்.

புனாவிலிருந்து 1900 ஆம் ஆண்டு ஒரு அமாவாசை அன்று கிளம்பும் கோசாம்பி கவாலியர் சென்று பின்னர் அங்கிருந்து காசி செல்கிறார்.காசியில் கங்காதர் சாஸ்தரியிடமும் அவரது மூத்த மாணவர் நாகேஸ்வர்-பண்ட் என்பவரிடமும் சமஸ்கிருதம் கற்கிறார்.அங்கு துர்காநாத் எண்ணும் நேபாளியை சந்திக்கிறார்.அவரும் அதே மடத்தில் தங்கி நாகேஸ்வரிடம் கல்வி கற்கிறார்.1902 ஆம் ஆண்டு துர்காநாத்தின் துணையோடு காசியிலிருந்து நேபாளம் செல்கிறார்.அங்கே பெளத்தம் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையிலிருப்பதை பார்த்து மிகுந்த கவலை கொள்கிறார்.

இனி பெளத்தம் கற்க எங்கு செல்வது என்று குழப்பம் கொள்கிறார்.சட்டென்று அவருக்கு ஒரு ஞாபகம் வருகிறது.கவாலியரில் இருக்கும் போது காசி யாத்திரை என்ற புத்தகம் ஒன்று படிக்கிறார்.அதில் கயாவிலிருந்து வடக்காக பதினைந்து மைல் தொலைவில் ஒரு புத்த விஹார் இருப்பதை பற்றி படித்ததை பற்றி நினைத்துக்கொள்கிறார்.அங்கு செல்லலாம் என்று முடிவு செய்கிறார்.அவர் நினைத்த்தற்கு மாறாக புத்தகயா பெளத்தர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஒரு இந்து பூசாரியின் கட்டுப்பாட்டில் இருப்பதை பார்த்து அதிர்கிறார்.அந்த பூசாரியின் முதல் சிஷ்யன் அங்கே வீற்றிருந்த தாய் தெய்வத்தின் அருகில் வராந்தாவில் அமர்ந்து கொண்டு ஹூக்கா இழுத்துக்கொண்டிருக்கிறான்.அங்கு தங்குகையில் அவருக்கு தர்மாபால் என்பவரை பற்றி அங்கிருக்கும் மாணவர்கள் சொல்கிறார்கள்.அவர் எங்கு இருக்கிறார் என்று விசாரிக்கையில் அவர் புத்தகயாவிலேயேதான் இருக்கிறார் என்று அறிந்துகொள்கிறார்.அடுத்த நாள் தர்மாபாலை சந்திக்க செல்கிறார்.பர்ம அரசர் மின்டோ மின் கட்டிய அறைகளில் தர்மாபால் தங்கி வந்ததை அறிந்து அங்கு செல்கிறார்.அங்கிருக்கும் புத்த துறவி தர்மாபால் இங்கு இல்லை என்றும் அவர் சிலோனில் இருப்பதாகவும் சொல்கிறார்.அவர் தர்மாணந்திடம் சில பெளத்த புத்தகங்களை காண்பிக்கிறார்.அவை பாலி மொழியில் சிங்கள லிபி கொண்டு எழுப்பட்டுள்ளதை அறிகிறார்.பெளத்தம் குறித்து அதிகம் கற்க பாலி மொழி அறிவும் முக்கியம் என்பதை உணர்கிறார்.அதில் இருக்கும் சில வரிகளை அந்த துறவி படித்து காட்டுகிறார்.இது சமஸ்கிருதம் போலவே இருக்கிறதே அப்படியென்றால் நான் சீக்கிரமாக பாலி மொழியை கற்றுக்கொள்வேன் என்று அந்த துறவியிடம் சொல்கிறார்.அந்த துறவியால் தனக்கு பாலி மொழியை கற்றுத்தர இயலுமா என்று கேட்கிறார்.அதற்கு அவர் நான் பாலி மொழியில் அந்தளவுக்கு தேர்ச்சி பெறவில்லை.பாலி மொழியும் பிற நூல்களும் கற்க சிலோன் செல்வதே சிறந்தது , அங்கு நிறைய பண்டிதர்கள் இருக்கிறார்கள் , அவர்கள் கற்றுத்தருவார்கள் என்று சொல்கிறார்.தன்னிடம் சுத்தமாக பணம் இல்லையே நான் எவ்வாறு சிலோன் செல்வது என்று தர்மாணந்த் கேட்கும் போது கல்கத்தாவில் மகாபோதி சபை இருப்பதாகவும் அங்கு சென்றால் அவர்கள் உதவுவார்கள் என்றும் அந்த துறவி சொல்கிறார். 

மகாபோதி சபை சென்று அங்கு அவர்கள் மூலமாக இருபத்தி ஜந்து ரூபாய் பெற்று அதைக்கொண்டு ஹவ்ராவிலிருந்து சிலோனுக்கு மார்ச் மாதம் 1902 ஆம் ஆண்டு பயணம் மேற்கொள்கிறார்.அவர் மதராஸை அடைவதற்கு முன் சிலோன் செல்பவர்களை தூத்துக்குடியில் தனித்து வைத்து சோதித்த பின்னரே சிலோன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று உடன் பயணிப்பவர் சொல்கிறார்.தன்னிடம் இருக்கும் காசை வைத்துக்கொண்டு பத்து நாட்களுக்கு அந்த தனி முகாமில் சாப்பிட இயலாது என்று நினைக்கும் தர்மாணந்த் மதராஸில் இறங்கி சிங்காரவேலுவை பார்க்க செல்கிறார்.சிங்காரவேலு சென்னையில் உள்ள மகாபோதி சபையின் செயலாளர் என்று அவர் கல்கத்தாவிலிருக்கும் போது அறிந்து கொள்கிறார்.அவருக்கு உதவியாக இருக்கமென்று கல்கத்தா மகாபோதி சபையிலிருந்து அவருக்கு சிங்காரவேலுக்கு அறிமுகம் செய்யும் கடிதம் ஒன்று தரப்படுகிறது.அதை சிங்காரவேலுவிடம் தருகிறார் தர்மாணந்த்.அதை படித்தவுடன் தர்மாணந்தை குளிக்க சொல்லி அவருக்கு உணவளிக்கிறார்.ஆனால் சிங்காரவேலுக்கு ஹிந்தி தெரியாது , தர்மாணந்த் அதிகம் ஆங்கிலம் அறியாதவர்.இருவரும் கிட்டத்தட்ட சமிக்ஞைகளிலே பேசிக்கொள்கிறார்கள்.சிங்காரவேலுவின் சகோதரர்கருக்கு ஹிந்தி தெரியும்.அவர் வேலை முடிந்து வந்தவுடன் அவரின் மூலமாக தன் கோரிக்கையை சிங்காரவேலுவிடம் தெ்ரிவிக்கிறார் தர்மாணந்த்.அவர் தனி முகாமில் அடைக்கப்படக்கூடாது அல்லது அங்கு தங்க நேர்ந்தால் அதற்கான பணம் அவருக்கு வேண்டும் என்று கோரிக்கையை எழுப்புகிறார்.சிங்காரவேலுக்கு தெரிந்த முதலியார் தூத்துக்குடியில் ஹெல்த் ஆபிசராக இருக்கிறார்.அவருக்கு சிங்காரவேலு ஒரு கடிதம் எழுதி தர்மாணந்திடம் தருகிறார்.ஒரு வேளை அப்படியும் தனி முகாமில் தங்க நேர்ந்தால் தனக்கு ஒரு தந்தி அனுப்ப சொல்கிறார்.தந்தி கிடைத்த உடன் பணம் அனுப்பவதாக உறுதி அளிக்கிறார் சிங்காரவேலு.பின்னர் தூத்துக்குடி சின்னச்சின்ன சிக்கல்களை கடந்து கொளும்பு சென்றடைகிறார்.அங்கு தர்மாபாலை சந்திக்கிறார்.

(தொடரும்)

Nivedan - The Autobiography of Dharamanand Kosambi - Translated by Meera Kosambi - Permanent Black Publications.

No comments: