ஆரண்யகாண்டமும் மாற்று சினிமாவும்




ஆரண்யகாண்டம் தமிழில் வந்த மிக நல்ல திரைப்படங்களில் ஒன்று என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.கட்டுரைகள் கூட எழுதப்பட்டுயிருக்கின்றன.அந்தப் படத்தின் கதையில் ஒரு பெண் சற்று மனத்தெளிவற்ற ஆணை சுரண்டுவதை மாற்றி ஒரு ஆண் மனத்தெளிவற்ற பெண்ணை சுரண்டுவது போல இருந்திருந்தால் அந்த படம் இத்தனை பாராட்டப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.

உண்மையில் ஆரண்யகாண்டம் ஒரு எளிமையான வெகுஜன திரைப்படம்.அந்தப்படத்தில் இறுதிக்காட்சி அந்தப் பெண் சாலையில் சென்றப்பின் ஒரு அந்திமக்காட்சியை வைத்திருந்தால்கூட அதில் எளிய அளவில் ஒரு கலைத்தண்மை கைகூடியிருக்கும்.இலக்கியமும் சினிமாவும் மனிதனின் கீழ்மையையும் தீமையையும் பேசலாம்.ஏன் கொண்டாட கூட செய்யலாம்.அவை மனித இயல்புகள்.அனைத்து மனித இயல்புகளும் கதைகளுக்கு உரியவைதான்.ஆனால் அதை அந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் கொண்டாட வேண்டும்.அந்தப் படைப்பாளி கொண்டாடக்கூடாது.ஒரு அந்திமக்காட்சி அந்த விலகலை காட்டியிருக்கும்.The Departed படத்தின் இறுதிக்காட்சி போல.

இந்தத் திரைப்படம் , சூது கவ்வும் இவையெல்லாம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டன.இந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்கள் அவர்களது இரண்டாவது திரைப்படத்தை இன்னும் கொண்டுவரவில்லை.சொல்வதற்கு இவர்களிடம் கதைகள் இல்லை.வாழ்க்கை இல்லை.தரிசனம் இல்லை.அவை உருவாக்கப்பட வேண்டியிருக்கிறது.கார்த்திக் சுப்புராஜ் என்பவர் இயக்கிய ஜிகிர்தண்டா போன்ற ஒரு மோசமான திரைப்படத்தை நான் பார்த்ததே இல்லை.அவ்வளவு கீழ்த்தரமாக பிறரின் வாழ்வை ஒருவர் எப்படி பார்க்க முடியும்.Voyeurism வகைமைக்குள் கொண்டு வரப்பட வேண்டிய படம் அது.எனக்கு முந்திய தலைமுறை இயக்குனர்களில் பாலா, செல்வராகவன்,கற்றது தமிழ் ராம், மிஷ்கின் போன்றவர்களிடம் சொல்வதற்கு கதையும், அனுபவமும் , தரிசனமும் இருக்கிறது.வெற்றிமாறனை அதில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை.அவரது பொல்லாதவன், ஆடுகளம், அவர் எழுதிய உதயம் ஆகிய திரைப்படங்கள் எல்லாமே ஒரே கதைதான்.Persistent Young man.

என் தலைமுறை இயக்குனர்களில் நான் பார்த்தவரை ரஞ்சித்திடம் மட்டுமே சொல்வதற்கு கதையும், அனுபவமும்,வாழ்க்கையும், தரிசனமும் இருக்கிறது.தமிழின் மிகச்சிறந்த படங்களை அவர் நிச்சயம் இயக்குவார் என்றுதான் தோன்றுகிறது.

No comments: