அதீத தூய்மை





நேற்று சிகரம் திரைப்படம் பார்த்தேன்.நல்ல திரைப்படம்.அந்தத் திரைப்படத்தை கே.பாலசந்தர்தான் எடுத்தார் என்று இதுவரை நினைத்திருந்தேன்.நேற்றுதான் அது அனந்து எடுத்தது என்று தெரிந்தது.அந்தத் திரைப்படத்தில் ஆத்மாநாமின் இந்தக் கவிதை வருகிறது.

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்.


ஆத்மாநாமின் கவிதைகளை வாசித்து அதைப்பற்றியே சிறிது காலம் யோசித்து கொண்டிருந்ததில் அவர் அதீத தூய்மை ஒன்றுக்காக ஏங்கினார் என்று தோன்றியது.நம் தனிப்பட்ட வாழ்க்கையில், நம் மனதில், நமக்கும் பிறருக்குமான உறவில்,நமக்கும் சமூகத்திற்குமான உறவில் என்று எல்லாவற்றிலுமே அவர் தூய்மைக்காக அவாவுகிறார்.அது சாத்தியமில்லை என்பதை அவர் அறிகிறார்.மேலே உள்ள கவிதையில் அதைத்தான் சொல்கிறார்.ஆனால் ஆழமான முறையில் அந்த அதீத தூய்மை எண்ணம் அவரை மிகவும் பாதித்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.கீழ்மையும் தீமையும் மனித இயல்புகள்தான் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.தனிப்பட்ட வாழ்க்கையின் பிறழ்வும் சிதைவும்தான் ஒருவனை எழுத வைக்கிறது.அதனூடாக அவன் ஏதோ ஒரு மெய்மையை கண்டடைகிறான்.அது அவனுக்கான மெய்மை.அதை மொழியால் கூட கடத்தி விட முடியாது.அந்த மெய்மையை கண்டுணரும் தருணத்தில் அவன் சமநிலையை அடைகிறான்.அத்தகைய மனநிலையில் அவன் உருவாக்குபவையே செவ்வியல் தண்மையை அடைகின்றன.தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் போல,பஷீரின் கதைகள்,நாவல்களை போல.

ஆத்மாநாம் அந்த சமநிலையை அடைந்திருக்கக்கூடிய ஒருவர்தான் என்று தோன்றுகிறது.ஏனேனில் பிரம்மராஜன் அவரை எடுத்த நேர்காணலையும் , அவரது கவிதைகளையும் வாசிக்கும் போது அந்தளவு தீவிரத்தோடு ஒரு விசாரணையை மேற்கொண்டவர்கள் தமிழில் குறைவே என்று எளிதில் சொல்லவிட முடியும். தனிப்பட்ட வாழ்க்கையையும் இலக்கியத்தையும் அந்தளவு குழப்பி கொண்டவர்கள் அல்லது ஒன்றாக பார்த்தவர்கள் கூட தமிழில் குறைவுதான்.


No comments: