மதமும் தேசியவாதமும்







ஒரு புரட்சிக்கான குழு தன் குழுவில் இருந்த ஒருவரையே கொலை செய்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதுதான் தஸ்தாவெய்ஸ்கியின் பீடிக்கப்பட்டவர்கள் நாவல்.அப்படி கொலை செய்யப்படும் கதாபாத்திரம்தான் ஷாடோவ்.அந்த நாவலில் ஷாடோவ் நிகோலையிடம் சொல்வதாக வரும் ஒரு கருத்து அல்லது கருதுகோள் நாம் இன்று வலதுசாரி சிந்தனை என்று பகுக்கும அதே கருதுகோள் தான்.

ஒரு தேசம் தனக்கென்று ஒரு தனிக்கடவுளை கொண்டிருக்க வேண்டும்.அந்தக் கடவுள் வேறு எந்தக் கடவுளிடமும் ஒப்பிட இயலாதவர்.அந்தக் கடவுள் அந்த தேசத்திற்கே உரியவர்.அந்த தேசமும் கடவுளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.அந்த தேசம் மீது மக்களுக்கு மிகுந்த பக்தியை உருவாக்க இந்த இணைப்பு உதவுகிறது.இது அந்த தேசம் வளர்வதற்கு பெரும் அளவில் உதவுகிறது.ஒரு தேசம் வளர வேண்டுமென்றால் இது தவிர்க்க இயலாதது.இந்த கருத்தை நிகோலய் பீட்டர்ஸ்பர்க்கில் சொன்னதாக ஷாடோவ் அவன் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் நிகோலையிடம் நினைவூட்டுவான்.

இந்தக் கருதுகோளை எந்த தேசத்தின் வலதுசாரி கட்சிகள் மீதும் இயக்கங்கள் மீதும் நாம் பொருத்திப்பார்க்கலாம்.இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியும் , அதன் தாய் இயக்கமான ராஸ்டிரிய ஸவயம்ஸேவாக் சங்கின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது.சிங்கள வலதுசாரி சிந்தனையை நாம் இதோடு பொருத்திப்பார்க்கலாம்.இஸ்ரேலின் வலதுசாரி இயக்கங்களோடு இந்தக் கருத்தை இணைத்துப்பார்க்கலாம்.ஆனால் ஆர்.எஸ்.ஸ்ஸில் இஸ்லாமியத்திற்கான கிளைகூட இருக்கிறது.இது பலரும் அறியாதது.அவர்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு இப்தார் விருந்தை பல இடங்களில் அளித்திருக்கிறார்கள்.நம் சமூகத்தில் ஒருவர் அறிவுசார் சூழலில் தன்னை ஹிந்து என்று சொல்லிக்கொள்வது பிற்போக்கானதாக கருதப்படுகிறது.ஒருவர் மதச்சார்பற்றவர் என்றால் மட்டுமே அவர் முற்போக்காளராக பார்க்கப்படுகிறார்.வேறு எந்த தேசத்திலாவது இத்தகைய நிலை இருக்கிறதா என்று தெரியவில்லை.தமிழ்நாட்டில் இடதுசாரி சிந்தனையாளர்களால் போற்றப்படும் தஸ்தாவெய்ஸ்கியை உண்மையில் ஒரு வலதுசாரி சிந்தனையாளர் என்று நிறுவுவது கடினமான விஷயம் இல்லை.அதற்கு அவரது நாவல்களிலிருந்தே நிறைய உதாரணங்களை காட்ட முடியும்.ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியை அப்படி வலதுசாரி இடதுசாரி என்று பகுக்க இயலாது.ஏன் எந்த இலக்கியவாதியையும் அப்படி சொல்ல இயலாது.அவன் அடிப்படையில் இலக்கியவாதி.ஷாடோவ் தேசியமும் கடவுளும் ஒன்றிணைவது பற்றிச் சொன்னால் இவான் கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை அல்யோஷா , ஆனால் மிகுந்த மரியாதையோடு என் பயணச்சீட்டை மட்டும் திருப்பி அளிக்கிறேன் என்கிறான்.ஒரு குரலுக்கான மாற்று குரலையும் ஒரு இலக்கியவாதியின் செவிகள் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்.அதனால்தான் இலக்கியவாதிகள் செயல்பாட்டாளர்களாகவோ , அரசியல்வாதிகளாகவோ மாறுவதில் பெரிய சிக்கல் இருக்கிறது.

ஆனால் தஸ்தாவெய்ஸ்கி வலதுசாரி சிந்தனைகளையும் அவற்றின் நியாயத்தோடே முன்வைக்கிறார்.தமிழ்நாட்டில் ஒருவர் தன் சாதி மத அடையாளங்களை அறிவுசார் சூழலில் தன்னுடைய அடையாளங்களாக சொல்ல இயலாது.அல்லது அதன் கருத்துகளை ரிசீலக்கலாம் என்ற இடத்திலும் தன்னை வைத்துக்கொள்ள இயலாது.அவர் முதல் வரியிலேயே சாதியையும் மதத்தையும் முழுமையாக நிராகரிக்க வேண்டும்.பின்னர் ஏன் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான கருதுகோள்களை முன்வைக்க வேண்டும்.அப்படி சொல்லிவிட்டால் அவர் அறிவுஜீவி.அருந்ததிராய் போல.இவர்களின் செயல்திட்டம் எளிது.சாதியும் மதமும் முழுக்க தீங்கானவை.அவற்றில் நண்மை என்ற ஒன்று எப்போதும் இல்லை.அதில் எந்த தத்துவமும் இல்லை.ஏன் விவசாயம் செய்யக்கூடிய வேட்டையாடக்கூடிய சாதிகள் ஒரே பெயரை தாங்கி நிற்கின்றன என்ற கேள்விகளை கூட கேட்டுக்கொள்ள இயலாதவர்களே நம் சூழலில் அறிவு ஜீவிகள் ஆகிறார்கள். ஏன் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கும் உயர்த்தப்பட்ட சாதி மக்களுக்கும் ஒரே குல தெய்வங்கள் இருக்கின்றன என்பதை பற்றியும் அவர்கள் எந்தக் கேள்வியையும் கேட்க  மாட்டார்கள்.பிராமணர்கள்,ஷத்திரியர்கள்,வைசியர்கள்,சூத்திரர்கள் என்று நான்கு வர்ணங்கள் பிரிக்கப்பட்டு அதற்கு கிழ் சாதிகள் உருவாக்கப்பட்டு , அவை மேலே சொன்ன நான்கு வர்ணங்களில் இணைக்கப்படவில்லை.அப்படி செய்ய இயலாது.தத்துவத்தில் Universals என்கிறார்கள்.அப்படி சாதிகளை இனக்குழுக்களை தொகுத்துக்கொண்ட முயற்சியாகத்தான் அதைப் பார்க்க முடியும்.சாதிகள் மேலே இருந்து கீழே கொடுக்கப்படவில்லை.இருந்தவை தொகுக்கப்பட்டன.

ஏன் மேற்குலகின் தத்துவ ஆசிரியர்களை பற்றி பேசும் நாம் இந்திய தத்துவத்தின் முக்கிய ஆளுமைகளான சங்கரரையும்,மாதுவாச்சாரியரையும்,ஜைமினியையும்,கபிலரையும் பேச தயங்குகிறோம்.ஒரு சமூகம் தன் முன்னோர்களையும் தன் தத்துவங்களையும் வாழ்க்கையையும் பேச இத்தனை தாழ்வு மனப்பாண்மையை கொள்வது அந்தச் சமூகத்திற்கு எப்படி நண்மை பயக்கும்.பூர்வ மீமாம்சம் என்ற தரிசனம் இந்திய தத்துவங்களில் முக்கியமானது. இந்த வேள்விக்கு இந்த பலன் என்ற எளிய லெளகீக லட்சியங்களை முன்வைப்பவை.மொழி மீது ஆழமான நம்பிக்கையை கொண்டவை.உச்சரிப்பு குறித்து கவனத்தை ஏற்படுத்தியவை.இன்று நாம் பார்க்கும் இந்து மதத்தினரின் தினசரி வாழ்க்கை இந்த பூர்வ மீமாம்ச தரிசனமும் கோயில் வழிபாடும் இணையும் புள்ளியில்தான் இருக்கிறது.மற்ற தத்துவ நோக்குகளும் அவை முன்வைத்த தரிசனங்களை மையப்படுத்திய வாழ்க்கை முறையும் சிந்தனையும் பொது வெளியில் எங்குமே இல்லை.அறிவுசார் சூழலிலும் இல்லை.சார்வாகம் முழுக்க முழுக்க பெளதிகவாத தரிசனம்.ஆனால் அதை குறித்துக்கூட யாரும் பேசுவதில்லை.இங்கே இருக்கும் பார்வை நம் மரபை முழுக்க உதாசீனப்படுத்துவதும் காறி உமிழ்வதும்தான்.ஒரு பரிசீலனைக்கு கூட யாரும் தயாராக இல்லை.

ஒரு சமூகம் பெரும் தீமையின் மேல் மட்டுமே இத்தனை நூற்றாண்டுகளாக இருக்கிறது என்பது எந்த அடிப்படையில் உண்மையாக இருக்க இயலும்.தீமையை மட்டுமே தனக்குள் கொண்ட ஒரு சமூகம் இத்தனை நூற்றாண்டுகள் எப்படி தொடர்ந்தது.இன்று சாதி மாற்று திருமணங்கள் பெருநகரங்களில் நிகழ்கின்றன.ஆனால் சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் சாதி மிகவும் இறுகி இருக்கிறது.பெரு நகரங்களில் சாதி கைவிடப்படுவதற்கு பின்னால் இருப்பது அதன் அவசியமின்மைதான்.இன்று கிராமங்களில் படித்து பெருநகரங்களில் நல்ல வேலையில் அமரும் இளைஞர்கள் தங்கள் கிராம , குலதெய்வ அடையாளங்களை முழுக்க விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்று ஆசைப்படுவதை பார்க்க முடிகிறது.இவைகளுக்கு பின்னால் இருப்பது நகரமயமாதல் நவீனமயமானது என்ற எண்ணமே , அதாவது ஐரோப்பினாதல் என்ற எண்ணமே தானே தவிர இதில் சாதியை கைவிடும் நோக்கு இல்லை.அவன் இயல்பாகவே தன் சாதியையும் குலதெய்வத்தையும் கைவிடுகிறான்.அவன் பெருநகரத்தின் சாலைகளில் வெறும் மண்ணுக்கு மேல் நிற்கிறான்.அவனுக்கு கீழ் பூமியும் இல்லை.மேலே வானமும் இல்லை.வெறும் சூன்ய வெளி.அவன் புதிதான ஒரு பண்பாட்டு வெளியை அடைவதற்கான பயிற்சியையும் பெறுவதில்லை.அதற்கான சூழலும் நம் சமூகத்தில் இல்லை.தனக்கு அளிக்கப்பட்டதில் நண்மையாக ஏதேனும் இருக்கிறதா என்றும் அவனுக்கு தெரியாது.இறுதியில் அவன் வேலை செய்து திருமணம் செய்து குழந்தைகள் பெற்று ஒரு இயந்திர வாழ்வை வாழ்ந்து முடிக்கிறான்.

இடதுசாரி சிந்தனைகளால் மற்றொரு பண்பாட்டு வெளியை உருவாக்க முடியவில்லை என்பது ஒரு உண்மை.இன்று கார்ப்ரேட் நிறுவனங்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு என்று தேசியவாதமும் மதமும் இல்லை.அமெரிக்காவை விட இந்தியாவில் குறைவான ஊதியத்திற்கு ஆட்கள் கிடைக்கும் என்கிற போது அவர்கள் இந்தியாவில் தங்கள் கிளை நிறுவனங்களை தொடங்கினார்கள்.நாளை அது சீனாவோ அல்லது வேறு எந்த நாடாகவோ இருக்கலாம்.அப்படியென்றால் வேலைக்கான உத்தரவாதம்,நிலையான ஊதியம்,ஊதிய உயர்வு போன்ற விஷயங்கள் இன்றைய உலகமயமாக்கல் சூழலில் மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது.உலக தொழிலாளர்கள் ஒன்றுபடுங்கள் என்ற கோஷம் அதன் உண்மையான அர்த்தத்தில் நிறைவேறினால் மட்டுமே வருங்கால தொழிலாளர்களுக்கு நிலையான வாழ்க்கை சாத்தியமாகும்.உண்மையில் இடதுசாரிகள் செய்ய வேண்டிய முக்கியமான செயல் அதுதான்.தேசியவாதத்தை உடைத்து , மதத்தை உடைத்து உலக தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவது மட்டும்தான் தொழிலாளர்கள் கண்ணியமான வாழ்வை வாழ்வதற்கான வாய்ப்புகளை வருங்காலத்தில் ஏற்படுத்தி தர இயலும்.

ஆனால் மனிதன் வெறும் உற்பத்தி இயந்திரம் இல்லையே.அவனுக்கு பண்பாட்டு வெளியும் தேவைப்படுகிறது.அவனுக்கு இசையும்,காதலும்,கவிதையும் தன் முன்னோர்கள் குறித்த , மரணம் குறித்த எல்லா கேள்விகளும் ஆசைகளும் எல்லா காலங்களிலும் இருக்கிறது.இந்தத் தளத்தில் நாம் வலதுசாரி சிந்தனைகளை பற்றி யோசித்தாக வேண்டும்.ஒரு மனிதனுக்கான பண்பாட்டு வெளியை அளிப்பதில் முக்கிய பங்கை அவனுடைய மதம் பெறுகிறது.பத்து தலை கொண்ட ராவணன் என்பது பத்து வெவ்வேறு எண்ணங்களால் பீடிக்கப்பட்ட மனம் என்ற படிமத்தை நாம் அடையும் போது , ஒரு குழப்பமான சூழலில் ராவணனுடன் நாம் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.பத்து கைகளுடன் நிற்கும் விஷ்ணுவை பார்க்கும் போது அது காலத்தின் உறைந்த நிலை என்பதை நம் மனம் ஏற்கிறது.இப்படி நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் வகுத்துக்கொள்வதற்கும் நமக்கு ஒரு வெளி தேவைப்படுகிறது.நாம் நமது தொன்மங்களையும்,மதத்தையம் முழுக்க கைவிட்டு அடையப்போகும் மாற்று வெளி என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை.ஆனால் வலதுசாரி சிந்தனைகளின் தீவிர தளம் அது தேசியவாதத்தையும் மதத்தையும் ஏதோ ஒரு இடத்தில் இணைக்கிறது என்பதுதான்.இடதுசாரி சிந்தனையின் தளம் தேசியவாதத்தை விட்டு வெளியேறி உலகு தழுவிய சகோதரத்துவ சிந்தனையை முன்னெடுப்பது என்றால் வலதுசாரி சிந்தனை ஒரு மனிதனுக்கு அவனுடைய பண்பாட்டு வெளியின் ஊடாக அவனுக்கான பூமியையும் வானத்தையும் அளிப்பது.இரண்டுமே நமக்கு தேவைப்படுகிறது.இரண்டுக்கான உரையாடல் தொடர்ந்து நிகழ வேண்டும்.அதற்கு நாம் முதலில் நமது மரபின் மீதான உதாசீனத்தை கைவிட வேண்டும்.மதமும் தொன்மங்களும் வேண்டாம் என்பவர்கள் முதலில் மனிதனுக்கான மாற்று பண்பாட்டு வெளியை உருவாக்கிவிட்டு இவற்றை கைவிடுங்கள் என்று சொல்லலாம்.


1 comment:

சர்வோத்தமன் சடகோபன் said...

எழுத்தாளர் அபிலாஷ் இந்தக் கட்டுரையை முன்வைத்து எழுதிய
மதமும் சாதியும் தேவையா? என்ற கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டம்.

1. சாதி மாற்று திருமணங்கள் சாதிய கருத்தியலுக்கு எதிரான விஷயமாக உருவாகி வரவில்லை , அது நகரமயமாக்கல் மூலமாக மட்டுமே வந்தது என்றே நான் நினைக்கிறேன்.சாதி மாற்று திருமணங்கள் செய்பவர்கள் சாதியை எதிர்த்து அதை செய்வதில்லை.It is not a conscious decision against caste என்றே சொல்கிறேன்.அது நிகழ்கிறது அவ்வளவுதான்.சாதிய கருத்தியல் பெருநகரமயமாதலால் மெல்ல அழியும் என்றே கருதுகிறேன்.இனி அது அவசியமற்றது.அதன் தேவைகள் பெருநகரத்தில் நிச்சயமாக இல்லை.

2. நம் பாட்டனார் காலத்தில் செய்யப்பட்ட சடங்குகள் போல நம் பெற்றோர் காலத்தில் இல்லை.நம் பெற்றோர் காலத்தில் செய்யப்பட்டது போல இன்று இல்லை.இன்று ஒரு சாதாரண மனிதன் எப்போதாவது கோயில்களுக்கு செல்பவனாகவும் சடங்குகளை முகுந்த் நாகராஜனின் கவிதைகளில் வரும் மென்புன்னகையோடு மட்டுமே செய்பவனாகவும் இருக்கிறான்.இது அடுத்த தலைமுறையில் மேலும் குறையும்.இந்த சடங்குகள்,சம்பிரதாயங்கள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்பது என் கருத்து.சிலர் அபத்தமானது என்று விட்டுவிடுகிறார்கள் , சிலர் அபத்தமானது என்று கருதியும் செய்கிறார்கள். எப்படியும் இது குறைந்து கொண்டுதான் இருக்கிறது.

3. தேவி பிரசாத் சட்டோபத்யாயா, தாமோதரன் போன்ற இடதுசாரி சிந்தனையாளர்கள்தான் நம் தத்துவங்களை அதிகம் கற்று எழுதியிருக்கிறார்கள்.வலதுசாரி சிந்தனையாளர்கள் எழுதியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.அந்த இடதுசாரி சிந்தனையாளர்களின் தொடர்ச்சி எங்கோ அறுபட்டுவிட்டது என்றுதான் தோன்றுகிறது.அதை இடதுசாரிகளும் தொடரலாம்.அதற்கு மரபின் மீதான உதாசீனம் கைவிடப்பட வேண்டும்.

4. சாதி குறித்து பேசும் போது நான் கருதும் முக்கிய விஷயம் – அதை யாரோ எங்கோ அமர்ந்துகொண்டு உருவாக்கவில்லை என்பதைத்தான்.இத்தனை ஆயிரம் சாதிகளையும் உட்பிரிவுகளையும் அப்படி உருவாக்க முடியாது.அது காலப்போக்கில் புரிந்து கொள்வதற்காக தொகுப்பட்டது என்பதைத்தான் சொல்கிறேன்.அதனால் சாதி குறித்து பேசும் போது அதீத வெறுப்பும் உதாசீனமும் தேவையில்லை.அது ஒரு முக்கியமான சமூகவியல் , மானுடவியல் ,வரலாற்று ஆய்வுக்கான களம்.அதை தீவிரமாக பரிசீலக்கலாம்.

5. மாற்று பண்பாட்டு வெளிகளை பற்றி சொல்லும் போது நீங்கள் இலக்கிய கூட்டங்கள் , பல்கலைகழகங்கள் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.நீங்கள் ஒரு எழுத்தாளர்.சிந்திக்கும் திறன் கொண்டவர்.அதற்கான பயிற்சி உங்களுக்கு இருக்கிறது.உங்களுக்கான மாற்று பண்பாட்டு வெளியை ஒரளவுக்கு உங்களால் உருவாக்கிக் கொள்ள முடிந்திருக்கிறது.ஒரு கவிதையை படித்து பரவசம் அடையும் மனதுக்கு சாதிய,மத அடையாளங்கள் முற்றிலும் தேவையற்றது.அது ஒரு நல்லூழ்.ஆனால் எவ்வித சிந்தனை பயிற்சியும் அற்ற பொது மனிதனுக்கு மாற்று பண்பாட்டுக்கான வெளியை உருவாக்கும் முயற்சி இங்கு சுத்தமாக இல்லை.அது முக்கியமான விஷயம் என்றே நான் கருதுகிறேன்.அது மதத்தின் வழியாகவோ வேறு தளத்திலோ நிகழ வேண்டும்.அது மனிதனுக்கு தேவைப்படுகிறது.