அம்பேத்கர் சர்க்கிளிலிருந்து வலதுபக்கமாகத் திரும்பி சிறிது தூரம் சென்றால் சாலை அதுவாகவே இடதுபக்கம் திரும்பும். அங்கேதான் ஷெர்கான் மசூதி இருப்பதாகக் காய்கறிக் கடைக்காரர் சொன்னார். சிறிது தூரம் சென்ற உடன் அங்கே ஒரு மசூதியும் அருகில் ஒரு தகரப்பலகையில் அதன் வரலாற்றுச் சிறப்பும் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். மசூதியின் சுவரோடு ஒட்டிக் கட்டப்பட்டிருந்த வீட்டின் வெளியே ஒரு வெள்ளை நிறப் பூனையும் அதன் குட்டிகளும் விளையாடிக்கொண்டிருந்தன. பச்சை நிறத்திலான கதவு லேசாகத் திறந்திருந்தது. ஒரு முதியவர் வெளியே வந்தார். நான் தகரப்பலகையில் எழுதப்பட்டிருந்ததைப் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த முதியவர் இது எழுதப்பட்டு இருபது வருடங்கள் ஆகின்றன என்று சொன்னார்.
நான் பஷீரை பார்க்க வந்திருப்பதாகச் சொன்னேன். எந்த பஷீர் என்று கேட்டார். அவருடைய முழுமையான பெயர் முகம்மது பஷீர் என்றும் தமிழ்நாட்டில் நெய்வேலியில் வசித்தார் என்றும் சொன்னேன். இங்கே பக்கத்து வீட்டில் ஒரு தமிழ்க்காரர் வசிக்கிறார், அவர் பெயர் பஷீர்தான்; எந்த ஊர் சொன்னீர்கள் என்று கேட்டார். நெய்வேலி என்றேன். முதியவர் ஏதோ யோசிப்பதுபோல என்னை பார்த்துவிட்டு ஊர்பற்றி சரியாகத் தெரியவில்லை, ஆனால் அவர் பெயர் பஷீர்தான், இப்போது வீட்டிலில்லை என்றார். எங்கு இருப்பார் என்றேன். இங்கு அருகில் ஒரு கடிகாரக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருப்பதாக சொன்னவர் வரும் நேரம்தான் உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு மசூதிக்குள் சென்று விட்டார். திண்ணையில் உட்கார்ந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. வந்த வழியே திரும்ப சிறிது தூரம் சென்றேன். சில டீக்கடைகள் இருந்தன. டீ குடித்துவிட்டு மறுபடி வந்து அமர்ந்து கொண்டேன். சற்று நேரத்தில் மசூதிச் சுவரில் தலை சாய்த்து உறங்கிவிட்டேன். ஒரு சிறு குழந்தையை நாய் ஒன்று அதன் கன்னத்தில் கடிப்பது போன்ற கனவுகண்டு உடல் திடுக்கிட்டு எழுந்தேன். இருட்டியிருந்தது. மணி ஏழரை. முதியவர் என்னிடம் எதுவும் பேசாமல் தன் வீட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார். பச்சை நிறத்திலான கதவு. கதவைத்தான் மூடவும் திறக்கவும் முடியும். கதவு மூலமாகத்தான் உள்ளே செல்லவும் வெளியே வரவும் முடியும். சுவரில் இது சாத்தியமில்லை. மேலே மேகங்களின் ஊடாக நிலா தெரிவதும் மறைவதுமாக இருந்தது. மூன்று நட்சத்திரங்கள் நேர்கோட்டில் இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் காலருகில் ஏதோ தட்டுப்படுவதுபோல இருந்தது. வெள்ளைநிறப் பூனை. நான் பதறிப்போய் கால்களை மடக்கிக் கொண்டேன். மறுபடியும் எழுந்து டீ குடித்து வரலாமா என்று யோசித்தேன். நாம் ஏன் பஷீர் இருக்கும் கடையை விசாரித்து அங்கேயே சென்றிருக்கக் கூடாது என்று நினைத்தேன். இந்த எண்ணம் முன்னர் தோன்றவில்லையே என்று சலிப்பாக இருந்தது.
சற்றுத் தொலைவில் ஒரு முஸ்லீம் பெரியவர் எச்சிலைத் துப்பிவிட்டு சென்றுகொண்டிருந்தார். அவருடன் இரண்டு பெண்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வலது பக்கமாகத் திரும்பவும் அவர்களுக்குள்ளிருந்து வெளியே வருவதுபோல ஒரு உருவம் என்னை நோக்கி வந்தது. ஒருவன் காலைச் சற்று தத்தித் தத்தி வைத்தவாறு நடந்து வந்தான். பஷீர்தான். நான் அமர்ந்திருந்த வீட்டிற்கு முன்பே அவன் வீடு இருந்ததாலும், நான் இருந்த இடத்தில் சற்றும் வெளிச்சமின்றி இருந்ததாலும், தன்னைப் பார்க்க ஒருவன் வந்திருப்பான் என்று எதிர்பார்த்திருப்பதற்கான சாத்தியங்கள் சற்றும் இல்லை என்பதாலும் அவன் தன் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றுவிட்டான். கதவு திறந்து கதவு மூடினால் மனிதர்கள் மறைந்துவிடுகிறார்கள். எனக்கு அவனை அழைக்க வேண்டுமென்றே தோன்றவில்லை. சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டினேன். கதவு திறந்தது. பஷீர் லுங்கியும் கைவைத்த வெள்ளை நிற பனியனும் அணிந்திருந்தான். சற்று குழப்பத்துடன் வெளியிலிருக்கும் குண்டு பல்புக்கான ஸ்விட்சை போட்டான். இப்போது அவன் எனக்கு நிழல்போலத் தெரிந்தான். வெங்கடனா என்ற ஒலி கேட்டது. ஆமாம் என்றேன். அவன் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. உள்ளே வா என்றான். நான் சென்றேன். அவன் கதவைத் தாழிடவில்லை. வீட்டில் ஜன்னல்களே இல்லை. ஒரு சிறிய அறை. ஒரு பாய், தலையணை. சிவப்பு நிற பிளாஸ்டிக் குடத்தில் நீர். வேறு ஒன்றுமே இல்லை. எனக்கு மூச்சு முட்டுவதுபோல இருந்தது. பின் கதவைத் திறந்துவிட்டான். குளிர்ந்த காற்று வந்தது. நான் தலையணையை எடுத்து சுவரில் சரித்து அதில் சாய்ந்துகொண்டேன். ஒரு குவளையில் நீர் எடுத்துக் கொடுத்து, அவனும் அமர்ந்துகொண்டான்.
பஷீர் அப்படியேதான் இருந்தான். சிறுவயதில் நான் பார்த்த பஷீருக்குக் கொஞ்சம் மீசையும் இரண்டு நாட்கள் சவரம் செய்யாமல் விடப்பட்ட லேசான தாடியையும் வரைந்தால் இப்போதைய பஷீர். நான் சிரித்தேன்.இப்போது எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டான். பெங்களூரிலிருந்து என்றேன். வேலையைப் பற்றிக் கேட்டான். மருத்துவமனை ஒன்றில் கிளினிகல் பார்மஸிஸ்டாக இருப்பதாகச் சொன்னேன். நோயாளிக்கு அவர் உட்கொள்ளும் மருந்துகளை அவரின் உடல் அமைப்பின்படி சற்று மாற்றி அமைப்பதுபோன்ற வேலை என்று விளக்கினேன். அவன் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை. நானாகக் கொஞ்சம் சொன்னேன். அவன் இரவு உணவுக்கு சப்பாத்தி மாவு இருப்பதாகச் சொல்லி அடுப்பறைக்குள் சென்றான்.
சாப்பாத்திக்குகூட தக்காளியும் வெங்காயமும் போட்டு கொஜ்ஜூ போல ஏதோ செய்தான். பெங்களூரில் யாருடன் தங்கியிருக்கிறேன், சமைத்து சாப்பிடுகிறேனா, வெளியே சாப்பிடுகிறேனா, அக்காவுக்கு குழந்தை பிறந்து விட்டதா என்பதுபோன்ற சில கேள்விகளை அவன் கேட்பதும் நான் பதில் சொல்வதுமாகச் சென்றது. சப்பாத்தி சாப்பிடும்போது அவன் ஏன் இப்படி விசித்திரமாக ‘பெனுகொண்டா’ போன்ற ஊரில் வந்து தங்கியிருக்கிறான் என்று கேட்டேன். இந்த ஊர் தனக்கு பிடித்திருப்பதாகச் சொன்னான். இந்த ஊர் விஜயநகர அரசின் காலத்தில் முக்கியமான நகரம். இங்கு கோட்டை இருந்தது. இங்கு அவர்களை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. பல கோயில்கள் இருக்கின்றன. மலை மேலேகூட ஒரு சிதிலமடைந்த கோயில் இருக்கிறது. பாபையா என்னும் சூஃபி தியானம் செய்த இடமும் அவரின் தர்காவும் ஷெர் கான் மசூதியும் இங்கு இருக்கின்றன. எனக்கு ஏனோ சமயங்களில் நடந்து செல்லும்போது பல விஜயநகர காலத்துக் காவலாளிகள் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றும் என்றான். மசூதி அல்லது கோயிலுக்குச் சென்று அங்குள்ள தூண்களைத் தொடும்போது ஐநூறு வருடங்களுக்கு முன் இருந்த மனிதனைத் தொட்டுவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்பான். நான் நம்மூரிலேயே விருத்தாசலத்தில் விருத்தீஸ்வரர் போன்ற பழமையான கோயில்கள் இருக்கின்றனவே என்றேன்.
நான் ஊரை விட்டு வந்துவிடலாம் என்று நீண்ட நாட்கள் யோசித்துக்கொண்டிருந்தேன். என் அண்ணன் மனைவியின் மூத்த சகோதரர் இங்கு ஷேர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். அவர் எனது கால் சரியாவதற்காக இங்கு பாபையா தர்காவில் வந்து ஒருமுறை வேண்டிக்கொள் என்று சொல்லியிருந்தார். எனக்கும் எங்காவது சென்று வரலாம் என்று தோன்றியது. அவருடன் வந்து சில நாட்கள் தங்கினேன். அப்போது ஊர் பிடித்துவிட்டது. ஊருக்குச் சென்ற சில மாதங்களில் மறுபடி வந்துவிட்டேன். அவர்தான் இப்போது இருக்கும் வேலையில் சேர்த்துவிட்டார். இப்போது அவரும் இங்கு வருமானம் சரியில்லை என்று சொல்லி பெங்களூரு சென்று விட்டார். எனக்கு இங்கிருந்து போகப் பிடிக்கவில்லை என்று நீண்ட நேரம் பேசினான் பஷீர்.
கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் நெய்வேலியில் நடந்த சர்க்கஸ் ஒன்றிற்கு சென்றிருந்த பஷீர் படிக்கட்டுபோல கட்டப்பட்டிருந்த அமர்விடத்தி லிருந்து தவறிப்போய் கீழே விழுந்துவிட்டான். முதுகு எலும்பில் அடிபட்டது. அந்த விபத்திற்கு பின்னர் ஒரு கால் சரியாக நடக்க வரவில்லை. சற்று தத்தித் தத்தி நடப்பான். ஏனோ இன்னும் பஷீர் திருமணம் செய்துகொள்ளவில்லை. பஷீர் எனக்கு ஒரு தலையணையும் போர்வையும் கொடுத்துவிட்டுப் பாயில் படுத்துவிட்டான். அந்த வீட்டில் போர்வை தேவைப்படும் என்று தோன்றவில்லை. மின்சாரம் நின்றுவிட்டால் காற்றுக்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நான் ஏன் பஷீரைப் பார்க்க வந்தேன் என்று எனக்கே சரியாகத் தெரியவில்லை. பெரிய அளவில் நட்பு என்று சொல்ல முடியாது. நெய்வேலியில் நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை அவனுடன் பழக்கம். அதன்பின் நான் பி. பார்ம் படிக்க சிதம்பரம் சென்றுவிட்டேன். ஒரு மணிநேரத்தில் சென்றுவரலாம் என்றாலும் அங்கேயே ஹாஸ்டலில் தங்கிவிட்டேன். அதன்பின் அவ்வப்போது சாலையில் எங்காவது பார்த்தால் பேசுவோம். அப்படி ஒருமுறை ஊருக்கு வந்தபோது தான் அம்மா பஷீர் சர்க்கஸ் சென்றிருந்தபோது விழுந்துவிட்டான் என்றாள். அப்போது போய் அவனைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அவனுடைய தந்தை ஒரு கடிகாரக் கடை வைத்திருந்தார். அங்குதான் எங்கள் வீட்டுக்குச் சுவர்க் கடிகாரம் வாங்கினோம். பஷீருக்கு ஒரு அண்ணணும் ஒரு தம்பியும். இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது. அண்ணன்தான் கடிகாரக் கடையை பார்த்துக்கொண்டிருக்கிறான். தம்பிக்காரன் கல்ஃப் போய்விட்டான். பஷீருக்கு பணப் பிரச்சனை என்று சொல்ல முடியாது. அவனுடைய தந்தை சில லைன் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதுவே நல்ல வருமானம். கால் சற்று தத்தித் தத்தி நடக்கிறான். அதை ஒரு பிரச்சனையாக அவனோ அவனைச் சுற்றி இருப்பவர்களோ பார்ப்பதாக நான் உணர்ந்ததில்லை. அதெல்லாம் அவன் திருமணம் செய்து கொள்வதற்கு தடையில்லை. பன்னிரெண்டாம் வகுப்புக்கு பின் பஷீர் படிக்கவில்லை. சிறுவயதில் நான் அவனுடன் சேர்ந்து தொழுதிருக்கிறேன். ரம்ஜான் நோன்பின்போது பள்ளிவாசலிலிருந்து மிளகும் கறிவேப்பிலையும் போட்ட கஞ்சியைக் கொண்டு வந்து கொடுப்பான். நான் இன்றுவரை அத்தனை சுவையான கஞ்சியை அருந்தியதில்லை.
பஷீர் ஏன் இப்படி ஏதோ ஒரு ஊரில் வந்து அமர்ந்துகொண்டு, இப்படி ஒரு கடையில் வேலை செய்துகொண்டிருக்கிறான் என்று புரியவில்லை. மேலும் இப்போது அவனை நான் எதற்காகச் சந்திக்க வந்தேன் என்றும் எனக்குப் புலப்படவில்லை.
மறுநாள் காலை மசூதியில் பாங்கு பிடித்தபோது எழுந்து கொண்டேன். பஷீர் மசூதிக்குச் சென்றிருந்தான். சிறிது நேரம் கழித்து வந்த அவன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்த டீயை எனக்குக் கொடுத்தான். மணி ஆறுதான் ஆகியிருந்தது. குளித்துவிட்டு வா பாபையா தர்கா வரை சென்று வரலாம் என்றான். பாபையா தர்கா சென்றோம். அங்கு ஒருவர் எனக்கு மயிலிறகால் தலையில் வருடி விட்டார். ஏதோ பெருங்கருணையின் ஆசீர்வாதச் சொற்கள் போலத் தோன்றின. பஷீர் சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானம்போல ஏதோ செய்தான். அங்கிருந்தவர்களுடன் உருதுவில் பேசிக்கொண்டிருந்தான்.
பாபையாவின் சமாதியின் மீதிருந்த ஒரு ரோஜாவை எடுத்து என்னிடம் கொடுத்தான். இதை வைத்துக்கொள் என்றான். நான் வாங்கிக்கொண்டேன். பன்னீர் ரோஜா. அற்புதமான சுகந்தம். இருவரும் பைக்கில் திரும்பிச் சென்றோம். பஷீர் என்னிடம் எவ்வளவு நாட்கள் தங்கப் போகிறாய், எதற்காக பெனுகொண்டா வந்தாய் என்ற எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. ஆனால் மிகவும் உற்சாகமாக இருந்தான்.
சிறிது நேரத்தில் அவனது வீட்டின் அருகிலிருந்த பள்ளிக்கூட மைதானத்திற்கு சென்றோம். சிலர் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் பாரில் தண்டால் எடுத்துக்கொண்டிருந்தான். அங்கு இன்னும் சில மட்டைகளும் பூப்பந்தும் இருந்தன. பஷீரும் நானும் சிறிது நேரம் விளையாடினோம். அவன் நன்றாகவே விளையாடினான். வீடுசென்று மறுபடியும் குளித்து என்னை அந்த மசூதிக்குள் அழைத்துச் சென்றான். அது ஷெர்கான் மசூதி என்று அழைக்கப்படுகிறது. கட்டி கிட்டத்தட்ட முந்நூறு வருடங்கள் ஆகின்றன. நான் என் வாழ்நாளில் அதுவரை மசூதிக்குள் சென்றதில்லை. கைகால்களை அங்கிருந்த குழாயில் கழுவிக்கொண்டு உள்ளே வரச் சொன்னான். பாயும் அதன்மேல் சுத்தமான வெண்ணிற மெத்தைகளும் போடப்பட்டிருந்தன. சில வயோதிகர்கள் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து ஏதோ வாசித்துக்கொண்டிருந்தார்கள். மசூதியின் மையத்தில் இருபுறத்திலும் தூண்கள் இருந்தன. என்னிடம் அந்தத் தூண்களை சுற்றச் சொன்னான். நான் சுற்றினேன். அவை சுற்றின. பிறகு வெளியே அழைத்து வந்தான். அங்கு ஷெர் கானின் நினைவுக்கல் இருந்தது. நாங்கள் இருவரும் பின்பக்க பள்ளிக்கூட மைதானம் வழியாக மறுபடியும் வீடு வந்து சேர்ந்தோம். காலை உணவுக்கு என்ன செய்யலாம் என்று கேட்டேன். சிரித்தான். பிறகு என் பைக் சாவியை வாங்கிக்கொண்டு என்னை அமரச்சொன்னான். இரண்டு தெருக்கள் சென்ற பின் ஒரு வீட்டின் அருகில் வண்டியை நிறுத்தினான். தனி வீடு. ஒரு மாருதி ஸ்வீப்ட் வெளியே இருந்தது. உள்ளே அழைத்துச் சென்றான்.
பஷீர் வருவதற்காகக் காத்திருந்தவர்கள்போல அவர்கள் அவன் வந்ததும் அவனை வரவேற்றார்கள். மிகுந்த மரியாதையோடு நடந்து கொண்டார்கள். என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்தான். அவர்கள் என்னிடம் தெலுங்கில் பேசினார்கள். பிறகு எனக்கும் புரியட்டும் என்று அனைவரும் தெலுங்கிலேயே பேசினார்கள். சுமார் இருபத்தைந்து வயது நிரம்பிய பெண் எங்கள் இருவருக்கும் சாப்பாட்டு மேஜையில் தட்டுகளை வைத்து இட்லியும் தக்காளி சட்னியையும் வைத்தாள். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது. கூர்மையான நாசி. கறுப்பு நிறத்திலான சேலை அணிந்திருந்தாள். மாநிறம். பேரழகி. அவளின் ஒவ்வொரு செயலிலும் அத்தனை நளினம். நான் சற்று நேரத்தில் பார்வையை வலுக்கட்டாயமாக வேறு பக்கம் திருப்பினேன். அங்கிருந்த முதியவர்கள் அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் என்பதைப் புரிந்துகொண்டேன். அவளுடைய தந்தை தெலுங்கு நாளிதழ் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார். அவள் அன்னை பஷீரின் அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு வெளியே பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு பஷீருக்கும் அந்த குடும்பத்தினருக்கும் மிக அந்நியோன்னியமான உறவு இருப்பதுபோல பட்டது.
நான் அந்தப் பெண்ணையும் பஷீரையும் சிறிது நேரம் பார்த்தேன். இருவரும் காதலிக்கிறார்கள் என்று தோன்றியது. அந்தப் பெண் பஷீரிடம் சற்று வழிவதைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. பஷீர் என்னைப் பார்த்தான். நான் என் நெற்றியைச் சுருக்கிச் சிரித்தேன். பதிலுக்குப் புன்னகைத்தான். எங்களுக்கு சுக்கு டீ கொடுத்தாள் அந்தப் பெண். அவளுடைய பெயர் பானு என்றான் பஷீர். அவள் முதல்முறையாக என் கண்களைப் பார்த்து புன்னகைத்தாள். பிறகு உள்ளே சென்றுவிட்டாள். பானுவின் தந்தை என் வேலை குறித்து சிறிது நேரம் பேசினார். அவர் பெனுகொண்டாவில் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றதாகச் சொன்னார். அவரின் பெயர் ரஹ்மத்துல்லாஹ். எனக்கு அந்த பெயரைக் கேட்க அத்தனை இனிமையாக இருந்தது. ஒரு இசைத் துணுக்குபோல இருந்தது அந்தப் பெயர். நாங்கள் கொஞ்ச நேரம் கழித்து விடை பெற்று வீடு திரும்பினோம். நான் பஷீரின் தோள்களைப் பிடித்து நன்றாகக் குத்தினேன். பஷீர் வலிப்பதுபோல கத்தினான். எப்படி இதெல்லாம் என்றேன். என்ன என்று ஒன்றும் தெரியாததுபோல பல்லிளித்தான்.
சமையலறைக்குள் சென்று ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றித் கதவருகே வைத்தான். பிறகு ஏதோ விடுபட்ட உரையாடலை ஆரம்பிப்பதுபோல பேச ஆரம்பித்தான். ஒருமுறை நான் தர்காவில் இருந்தபோது பானுவின் தாய் தந்தையர் அவளைக் கைத்தாங்கலாக தர்காவுக்கு அழைத்த வந்தார்கள். அவளால் சரியாக நிற்கக்கூட முடியவில்லை. ஏதோ நரம்பியல் பிரச்சனை என்றார்கள். இரவு உறக்கம் வருவதில்லை. பிறகு நாள் முழுவதும் சோர்வாக இருக்கிறாள். அவளுடைய கால்கள் நிலைகொள்ளாமல் எப்போதும் தடுமாறுகின்றன என்றார் அவளுடைய தந்தை. நரம்பியல் மருத்துவரிடம் காட்டி மூன்று மாத காலமாகிறது. அவர் மனச்சோர்வுதான் காரணம், உடம்பில் பிரச்சனை இல்லை என்று சொல்லி மனச்சோர்வு எதிர்வு மாத்திரைகளைத் தந்தார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அவளின் தந்தை புலம்பிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு ஒரே மகள். எனக்கு அவளைப் பார்த்த உடனே மிகவும் பிடித்துவிட்டது. அவள் தாய் தந்தையரை அந்தப் பெண்ணிடமிருந்து சற்றுத் தள்ளி அமரச்சொன்னேன். அவர்களுக்கு நான் யார் என்று தெரியவில்லை. நிச்சயம் தர்காவில் இருப்பவன் அல்ல என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் எதுவும் சொல்லாமல் சற்றுத் தள்ளி அமர்ந்தார்கள். நான் பாபையா தர்காவின் மீதிருந்த ஒரு ரோஜாவை எடுத்து அந்தப் பெண்ணிடம் தந்தேன். அவள் அதை வாங்கிக்கொண்டாள். நான் அவளின் கண்களைச் சிறிது நேரம் பார்த்தேன். எனக்கு ஏனோ அவள் எதையோ நினைத்து அச்சப்படுவதாகத் தோன்றியது. அந்தக் கண்கள் வெகு தொலைவில் இருந்தன. வெகு தொலைவு என்பது பால்ய காலம் இல்லையா. அவளின் பால்ய காலம் ஏதோ ஒரு வகையில் அவளை அச்சுறுத்துகிறது என்று நினைத்தேன். அவளிடம் சொன்னேன். உன் பால்ய காலத்தின் தீவினைகள் இனி உன்னைத் தொடராது. இந்த ரோஜாவின் சுகந்தம்போல இனி நீ மகிழ்ச்சியாக இருப்பாய் என்றேன். அவள் புன்னகைத்தாள். உன் கௌரவம் பாதிக்கும் வகையில் உனக்கு எந்தத் தீமையும் நடக்காது. அல்லாவின் துணை என்றும் உன்னைக் காக்கும் என்றேன். அவள் என் கரங்களைப் பற்றி முத்தமிட்டாள். அவளது பெற்றோரும் பிறரும் அதிர்ந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு சுவரில் அசந்துபோய்த் தூங்கிவிட்டாள். அவள் எழுந்திருக்காததால் அவளுடைய தாய் தந்தையர் அவளைத் தூக்கி காரில் ஏற்றிக் கொண்டுசென்றனர்.
அடுத்த நாள் ரஹ்மத்துல்லாஹ் என் வீடு தேடி வந்தார். அவளுடைய மகள் மிக சௌந்தர்யமாக உறங்கினாள் என்றார். மேலும் அந்த ரோஜா வாடவே இல்லை என்றார். வீட்டுக்கு அழைத்தார். சென்றேன். அந்தப் பெண் என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னாள். நீண்ட நேரம் பேசினாள். நான் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கொடூர துர்கனவு போன்ற கடந்தகாலத்தை அவள் சொல்லி முடித்தபின் மகிழ்ச்சியாக அழுதாள். அவளுடைய தாய் தந்தையர் அவளின் வார்த்தைகளைக் கேட்க விரும்பாத வகையில் வெகு தொலைவில் அமர்ந்திருந்தனர். இனி எந்தச் சிக்கலும் இல்லை என்று சொன்னேன். அவள் சோபையாகச் சிரித்தாள்.
பிறகு நான் அடிக்கடி சென்றேன். பானுவின் தாய் தந்தையருக்கு என்னைப் பிடித்துவிட்டது. பானு தன் தந்தையிடம் என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொல்லியிருக்கிறாள். அவர் என்னிடம் பேசினார். நான் என் பொருளாதார நிலையை சொன்னேன். தனக்கு ஒரே மகள்தான் என்றும் என் சுய மரியாதையைச் சீண்டாத வகையில் தன் எண்ணங்களும் செயல்களும் இருக்கும் என்றார். தன்னை நம்பலாம் என்றார். எனக்கும் அவரைப் பிடித்திருந்தது. நான் சம்மதித்தேன். இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம்.
பஷீர் பேசி முடித்தபோது வீட்டிற்குள் அந்த வெள்ளை நிறப் பூனை எட்டிப் பார்த்தது. பஷீர் அதற்கென்று பாத்திரத்தில் வைத்திருந்த பாலைக் குடித்து காலிசெய்த பின் எந்த நன்றி நவிலலும் இல்லாமல் அது தன் வழியில் சென்றது. எனக்கு பஷீரைக் கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. நான் எழுந்து வெளியே திண்ணைக்கு வந்துவிட்டேன். பக்கத்திலிருந்த பள்ளிக்கு சிறுவர்களும் சிறுமிகளும் சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுமி கைகளை அகலமாக விரித்து கண்களை உருட்டி தன் தோழிகளிடம் ஏதோ கதை சொல்லிச் சென்றாள். ஒரு பூங்கொத்தை யாரோ கையில் கொடுத்ததுபோல இருந்தது அந்தக் காட்சி.
பஷீர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தான். தன் கடைக்குச் செல்லலாம் என்று கூட்டிச் சென்றான். அவன்தான் கடையைத் திறந்தான். கடை முதலாளி எங்கே என்றேன். அவர் வயதானவர். அதிகம் வருவதில்லை. நான்தான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறேன் என்றான். இன்றைய நிலையில் இந்தக் கடிகாரத் தொழில் வருங்காலத்திற்கு சரியாக வருமா என்று கேட்டேன். இன்னும் சில காலம் கழிக்கலாம். நான் கண்ணாடித் தொழிற்சாலை ஒன்றைத் துவக்கப்போகிறேன் என்றான். எங்கே என்றேன். இங்குதான் பெனுகொண்டாவில். மிகச் சிறிய அளவில். முதலீடைப்பற்றிக் கேட்டேன். தெரியவில்லை, ஆனால் வெகு விரைவில் அனைத்தும் நிகழும் என்றான். ஒரு வயோதிகர் தன் கைக்கடிகாரம் வேலை செய்யவில்லை என்று சொல்லி பஷீரிடம் கொடுத்தார். பஷீர் பூதக்கண்ணாடியை ஒரு கண்ணில் பொருத்திக்கொண்டு கடிகாரத்தின் பின்பக்கத்தைக் கழற்றிப் பார்த்தான். எனக்கு லோகிததாஸின் பூதக்கண்ணாடி திரைப்படம் ஞாபகத்திற்கு வந்தது. அதில் வரும் நாயகன் சிறு சிறு பிரச்சனைகளை பூதக்கண்ணாடி வழியாகப் பார்த்து பல்கிப்பெருக்கி பூதாகரமாக ஆக்கிக்கொள்வான். இறுதியில் மனப்பிறழ்வு அடைவான். இந்த பஷீர் மனித மனங்களின் இருட்குகைக்குள் தன் பூதக்கண்ணாடியை செலுத்தத் தெரிந்தவன் என்று நினைத்துக்கொண்டேன்.
நான் ஏன் பஷீரைப் பார்க்க வந்தேன் என்று அதுவரை உருவமற்று இருந்த எண்ணம் அப்போது வெளிப்பட்டது. நானும் பஷீரும் ஒரே வயதுக்காரர்கள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெரிய காரணங்கள் ஒன்றுமில்லை. நான் சிலகாலம் வரைக்கும் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றிருந்தேன். இப்போதும் குழப்பமாகத்தான் இருக்கிறது. மேலும் நான் என் ஆளுமைச் சிக்கலின் காரணமாகவோ என்னவோ வேலையில் பெரிய அளவுக்கு உயரவில்லை. நான் எனது சிக்கல்களை குழப்பங்களை யாரிடமாவது சொல்லலாம் என்று நினைத்தேன். பஷீருக்கு சில அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக ஊரில் ஒரு பேச்சு உண்டு. மேலும் அவன் சர்க்கஸில் விழுந்து அடிப்பட்டதால் அவன்மீது ஒரு குரூர இரக்கம் எனக்கிருந்தது. அவன் திருமணம் செய்யவில்லை, மேலும் அவன் வாழ்க்கையில் தொழில் எதுவும் செய்து முன்னேறும் துடிப்பில்லாமல் முடங்கிப் போயிருக்கிறான், அவனைப் பார்ப்பது ஒரு வகையில் எனக்கு திருப்தியாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான் அவனைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று தோன்றியது. அப்படியில்லை என்ற எண்ணம் ஒலித்தாலும் அதுதான் உண்மை என்று நான் ஏற்றுக்கொண்டேன். அந்த முதியவர் தன் கடிகாரம் நன்றாக ஓடுவதைப் பார்த்துவிட்டு அவனிடம் நூறு ரூபாய் கொடுத்தார். அவர் சென்றபின் பஷீர் என்னைச் சிறிது நேரம் பார்த்தான். எனக்கு ஏதோ குற்றவுணர்வு ஏற்பட்டது. பஷீர் வாழ்க்கையில் முன்னேறிவிட்டான். அவனுக்குத் திருமணம் நிகழப்போகிறது, தொழில் தொடங்கப்போகிறான், எனக்கு மூச்சு முட்டியது.
ஒரு டீக்கடை பையன் வந்து டீ வேண்டுமா என்று கேட்டான், இரண்டு டீ எடுத்துவரச் சொல்லி பஷீர் சொன்னான். நான் கேட்டேன், கண்ணாடித் தொழிற்சாலை லாபகரமனதாக அமையுமா. தெரியவில்லை, எப்படியும் இருக்கலாம். முழுக்க தோற்றாலும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றான். எனக்கு அதற்குமேல் அவன் முகத்தை பார்க்க வெட்கமாக இருந்தது.
நான் வெளியே ரோட்டைப் பார்த்தவாறு அமர்ந்துகொண்டேன். டீ குடித்தவாறு பஷீர், வெங்கடன் நீ ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டான். நான் மிகவும் உடைந்த குரலில் எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை என்றேன். வேலை எப்படி இருக்கிறது என்றான். பெரிய அளவில் இல்லை என்றேன். என்னிடம் எந்த அமானுஷ்ய சக்திகளும் இல்லை வெங்கடன் என்று சொன்னவாறு பஷீர் என் கைகளைப் பற்றிக்கொண்டான். பானு வைத்திருந்த ரோஜா வாடாமல் இருந்ததில் அமானுஷ்ய சக்தி ஒன்றுமில்லை. ரோஜாவை வைத்திருப்பவரின் மனதில் கருணையும் கண்ணீரும் சுரக்கும்போது ரோஜா வாடாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நம் ஊரில் வள்ளலார் ஏற்றிய எரிதழல் இன்னும் அணையவில்லை என்று சொல்கிறார்களே, உண்மையில் அணையாமல் இருப்பது நெருப்பு அல்ல, பெருங்கருணை, அதுவே எரிதழலாக மாறி அன்னமிடுகிறது. நீ என்னைப் பார்க்க வந்ததில் பெருத்த ஏமாற்றம் அடைந்திருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். அது இயல்பானதுதான். நாம் பாபையா தியானம் செய்த இடத்தைப் பார்க்கச் செல்லலாம் என்றான். கடை சாத்தினான். பைக்கில் சிறிதுநேரம் குன்றின்மீது ஏறினோம். பிறகு பைக்கை நிறுத்திவிட்டு செங்குத்தான குன்றின்மீது இருந்த சிறு குடில் போன்ற ஓரிடத்தைக் காண்பித்து அதுவரை செல்ல வேண்டும் என்றான் . நீண்டநேரம் நடந்தோம். எனக்கு பயங்கரமாக மூச்சிரைத்தது. அந்தக் குடில் போன்ற இடத்தை அடைந்ததும் நிறைய குரங்குகள் இருந்ததைப் பார்த்தோம். அவை எங்களைப் பார்த்ததும் அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பின. நான் அலறினேன். பஷீர் பதற்றமடையாமல் இருக்கச் சொன்னான். பிறகு அவன் முன்னே செல்ல நான் அவன் பின் சென்றேன். குரங்குகள் இறங்கி பாறைகளின் இடுக்குகளில் சென்று அமர்ந்துகொண்டன. அந்தக் குடிலுக்குள் சென்றால் அங்கு ஒன்றுமே இல்லை. ஒரு சின்னக் குழி இருந்தது. அதில் யாரோ பத்து ரூபாய் போட்டிருந்தார்கள். நான் தலையை மண்ணில் பதித்து வணங்கினேன். பஷீர் சிறிது நேரம் தியானம் செய்தான். பிறகு இருவரும் கீழே இறங்கி வந்தோம்.
மதியம் ஆகிவிட்டிருந்தது. பஷீர் என்னை ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றான்; சைவ உணவு தான். சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றோம். பஷீர் கதவைத் திறந்தான். உள்ளே சென்றவன் என்னைஉள்ளே வரச் சொல்லி அழைத்தான். பிறகு பஷீர் சொன்னான். கதவுகளை நாம்தான் திறக்கிறோம்; மூடுகிறோம். கதவு களின் சாவியும் பூட்டும் நம்மிடம் தானிருக்கின்றன. கதவுகளைத் திறக்கலாம், மூடலாம். சுவர்களை உடைத்துதான் உள்ளே செல்ல வேண்டும் என்றில்லை. சில கதவுகள் உள்ப்பக்கமாக, சில கதவுகள் வெளிப்பக்கமாகத் திறக்கும். சில இடங்களில் ஒற்றைக் கதவு தான் இருக்கும், சில இடங்களில் இரண்டு கதவுகள். திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும் கதவுகள் இருக்கும். திறந்த கதவு மூடுவதும் மூடிய கதவு திறப்பதும் இயல்பே என்றான்.
நான் என் சட்டைப்பையில் பார்த்தேன். நேற்று வைத்திருந்த ரோஜா வாடாமல் இருந்தது. அதை எடுத்து பஷீரிடம் கொடுத்தேன். பஷீர் சொன்னான், நானே பூங்காவனமும் பூவும். காயில்லையா என்றேன். காயும் என்றான். நான் உடைந்துபோய் அழுதேன். பஷீர் என்னை அரவணைத்துக்கொண்டான்.
No comments:
Post a Comment